பாரதி இன்றிருந்தால்..?

This entry is part [part not set] of 42 in the series 20071213_Issue

கவியோகி வேதம்


இங்கேநம் பாரதி இன்றிருந்தால்,

..எப்படி ஆநந்தக் கூத்திசைப்பான்!

இளைஞர்கள் எல்லாம் கணினியிலே

..ஏற்றங்கள் பெற்றதைக் கண்டிருப்பான்!

வளைகுடா நாட்டில்நம் பெண்டிரெல்லாம்

..வசதியாய் வாழ்வதைப் போற்றிசெய்வான்!(இங்கேநம்)

..

விஞ்ஞானி ஆனவர் மேல்பதவி

..மேவிய சாதனை பாடிநிற்பான்!

அஞ்ஞானம் நீக்கவே ஆயிரம்பேர்

..அயல்நாடு போக மகிழ்ந்திருப்பான்!(இங்கே)

..

வானில்நம் ஏவுகணை சுற்றுவதை,

..வண்ணமாய்க் கைபேசி பேசுவதை

தானியங்கி ‘ரோபோ’ உலாவுவதை

..சந்தத்தில் ஏற்றிக் குளிர்ந்திருப்பான்!

..

பெண்டிர் சுதந்திர வாழ்வினையும்,

..பெருத்த ‘கிரிக்கெட்டு’ வெற்றியையும்,

மண்டிய காதல் புகழினையும்,

..வைத்துப்பல் கட்டுரை செய்திருப்பான்!

..

எங்குளர் அவன்போல் கவிதைநெய்ய?

..எங்குளர் அவன்போல் வரிகளிலே

கங்கு பதுக்கி வெடித்தெறிய?

..கயமையைச் சாடிப் பொடித்துறிய?

..

அறிவைக்கூர் செய்த(து) அவன்கவிதை!

..அகத்திலன்பு சேர்த்த(து) அவன்கவிதை!

முறித்த(து) அடிமையைச்,சொற்களெல்லாம்!

..மூட்டியது உண்மையை நெஞ்சிலெல்லாம்!

..

அப்படிஓர் மாகவி வரவேண்டும்!

..அக்கினி போல்வரி வீசிடவே!

தப்படிகள் யாவும் பொசுங்கிடவே

..தரணியில் ‘பாரதி’ தோன்றுகவே!

kaviyogi.vedham@gmail.com

Series Navigation