பாப்லோ நெரூதாவின் ‘மாச்சு பிச்சுவின் சிகரங்கள் ‘

This entry is part [part not set] of 57 in the series 20041209_Issue

தமிழில் : சுகுமாரன்


—-
ஒன்று
@

காற்றிலிருந்து காற்றுக்கு இழுபடும் வெற்றுவலைபோல
குளிர்காலத்தின் உச்சத்தில்
நாணயத்தாள்களாக இலைகள் உதிரும்போது
கட்டற்ற நேசம் கையுறையிலிருந்து கழன்று
நிலவின் நீண்ட விரல்களாக நம்மைத் தொடுகையில்
வசந்தத்துக்கும் கோதுமைக்கதிர்களுக்கும் இடையில்
இசைவான சூழ்நிலையில்
தெருக்களில் இழுபட்டு வந்தேன் நான்.

(ஒத்திசைவு இல்லாத பொருட்களில் உயிர்ப்பு ஒளிரும் நாட்கள்;
மெளனத்தின் அமிலத்தில் கரையும் இரும்பு
கடைசித் துகள்களாகக் கலையும் இரவுகள்
காதல் பிரதேசத்தில் குலைந்த மகரந்தகேசரங்கள்)

வயலின்களுக்கு இடையில் எனக்காக் காத்திருந்த எவரோ,
இறுகிய கந்தக இலைகளுக்கடியில் தன்னைச் சுழற்றித் துளைத்துப்
புதைத்துக்கொண்ட கோபுரம்போன்ற ஓர் உலகைக் கண்டடைந்தார்.
வால் நட்சத்திரங்களின் உறையில் பாய்ச்சிய
விசையுள்ள வாளைப்போல
பூமியின் பொன் நாளங்களுக்குள்
அதன் மர்ம உறுப்புகளுக்குள்
எனது மென்மையான கையை நுழைத்தேன்.

ஆழம் காணமுடியாத அலைகளுக்குள் தலைசாய்த்து
கந்தகத்தின் உறக்கத்தில் ஒரு துளியாகச் சுருங்கினேன்.
ஒரு குருடனைப்போல
நமது களைத்துப்போன மனித வசந்தத்தின்
மல்லிகை மணத்தை மறுபடியும் கண்டடைந்தேன்.

—-

இரண்டு

மலர் மலருக்காகத்
தனது விதைகளைப் பரப்புகிறது.
பாறை, தனது மலர்ச்சியை
வைரம், மணலின் கசங்கிய ஆடையில் தூவிப் பராமரிக்கிறது.
எனினும், மனிதன்
கடலின் நிச்சயிக்கப்படாத ஆழத்திலிருந்து
தானே கடைந்தெடுத்த ஒளியின் இதழைக்
கசக்கியெறிகிறான்.
தனது கைகளில் துடிக்கும்
உலோகத்தைத் துளையிடுகிறான்.
துணிகளுக்கும் புகைப்படலத்துக்குமிடையில்
சீக்கிரமே அகப்பட்டு
கசங்கிய மூட்டைபோல ஆன்மா சிறுத்து
மூழ்கிப்போன தரைமீது கிடக்கிறான்.
படிகமாக, உறக்கமின்மையாக, கடலின் கண்ணீராக,
குளிர்ந்த தடாகங்களாக ஆகிறான்.
எனினும் இது போதவில்லை:
கொல்கிறான், அதை
வெறுப்புடன் தாளில் ஒப்புக்கொள்கிறான்,
பழக்கத்தின் போர்வையில் மூடிமறைக்கிறான்,
துவேஷமுள்ளாடையால் அதைக்
கிழித்துத் துண்டாடுகிறான்.

இல்லை:
தாழ்வாரங்களிலும், காற்றிலும், கடலிலும், நிலத்திலும்
சிவந்த பாப்பி மலர்கள்போலப் பாதுகாப்பில்லாமலிருக்கும்
அவனது இரத்தநாளங்களைக்
காப்பாற்றுவது யார் ?
உயிர்களை விற்பவனின் இருண்ட சரக்குகளிலிருந்து
சீற்றம் இப்போது
இரத்தமாகப் பீறிடும்போது,
பிளம் மரத்தின் உச்சியில் காத்திருக்கும் சிறுகிளையில்
பனித்துளி
நூற்றாண்டுகளாக மறையாதிருக்கும்
தனது நிலப்படத்தைப் பதித்துப் போகிறது.
இதயமே,
இலையுதிர்காலத்தின் பள்ளங்களுக்கிடையில்
நசுங்கிச் சிறிதான முகமே!

எத்தனைமுறை
குளிர்கால நகரத்தெருக்களில்
அல்லது பேருந்தில்
அந்தியில் ஒரு படகில்
அல்லது நிழல்களிலும் மணியோசையிலும் மூழ்கிய
விழாக்கால இரவுகளின் இறுக்கமான தனிமையில் தயங்கி
மனித மகிழ்வின் உறைவிடத்தில்
தங்கியிருக்க விரும்பினேன்.
முன்பு,
ஒரு கல்லிலிருந்தோ
அல்லது
ஒரு முத்தத்தின் மின்வெட்டிலிருந்தோ
நான் தொட்டுணர்ந்த
நித்தியமானதும் அளந்தறிய முடியாததுமான
உண்மையின் இழையைத் தேடினேன்.

(அது
சிறிய திரண்ட முலைகளின் மஞ்சள் வரலாறுபோல
முடிவற்று வளர்ந்து பெருகும் கோதுமையில்
என்றும் மென்மையாகத் தொடரும் காலக்கணக்கு.
என்றும் ஒரேபோல தந்த நிறமாகமாற உமியைக் களைகிறது.
என்றும் ஒளி ஊடுருவும் நீரில் தென்படும் வீட்டின் நிழல்.
தனித்திருக்கும் பனிப்படலம்முதல்
இந்த இரத்த அலைகள்வரை என்றும் தனித்திருக்கும் மணியோசை.)

திருஷ்டிப்பொம்மையின் உடைகள்போன்ற முகக்குவியல்களையும்
அல்லது
உள்ளீடற்ற பொன்வளையங்கள்போன்ற அவிழ்த்தெறியப்பட்ட முகமூடிகளையும்
திகைப்படைந்து நின்ற இனங்களின்
பட்டமரங்களை உலுக்கும் இலையுதிர்காலத்தின் புதல்வியரையும்தான்
என்னால் வசப்படுத்த முடிந்தது.

எனது கைகளுக்கு இளைப்பாற இடமில்லை.
தடுக்கப்பட்ட நீர்போலப் பாயவோ
நிலக்கரிபோல வெம்மையாகவோ
ஸ்படிகம்போல குளிர்ச்சியாகவோ
எனது திறந்த கைகளுக்கு எதிர்வினையில்லை.

என்னவாக இருந்தான் மனிதன் ?
அவனது உரத்த உரையாடலின் அடுக்குகளில் எங்கே
கடைகளுக்கும் சங்கொலிக்குமிடையில்
அவனது உலோக அசைவுகளில் எதில்
அழிவற்று வாழ்கிறது உயிரின் இயல்பு ?
—-

மூன்று

நிரப்ப முடியாத களஞ்சியத்துக்குள் விழும்
சோள மணிகள்போல
கடந்துபோன செயல்களுக்குள்ளும்
அலுப்பூட்டும் நிகழ்வுகளுக்குள்ளும்
ஒன்பது முதல் ஐந்துமணிவரை விழும் மனித வாழ்வு.
ஒவ்வொருவர்க்கும் மரணம் ஒருமுறையல்ல, பலமுறை.
ஒவ்வொரு நாளும் ஒரு மரணம்.
புழுதி, புழு, நகரவிளிம்புகளின் சகதியில் அலையும் வெளிச்சம்.
பருமனான சிறகுகளுடன் ஒரு குறுகிய மரணம்
ஒரு குறுவாள்போல
ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் நுழைகிறது.

மேய்ப்பர்கள்மீதும்
துறைமுக மைந்தர்கள்மீதும்
கறுத்த ஏர் ஓட்டிகள்மீதும்
இடுங்கிய தெருக்களில் எலிகளாக அலைபவர்கள்மீதும்
ரொட்டியாலும் கத்திகளாலும் ஆக்கிரமிக்கிறது.

எல்லோரும் அவரவரது
சுருக்கமான அன்றாடச் சாவுக்காகக் காத்திருந்து
வலுவிழந்துபோனார்கள்.
ஒவ்வொரு நாளும்
அவர்களது சகிக்கமுடியாத் துயரம்
நடுங்கும் கைகளால் அவர்கள் காலிசெய்த
கறுப்புக்குவளை போலிருந்தது.

—-
மாச்சுபிச்சுவின் சிகரங்கள்

நான்கு
@

தவிர்க்க முடியாத மரணம் என்னை அழைத்திருக்கிறது பலமுறை:
அலைகளில் கரைந்திருக்கும் உப்பைப்போன்றது அது.
அதன் அரூப வாசனை,
சிதிலங்களையும் உயரங்களையும்
அல்லது
காற்றின் பரந்த வடிவங்களையும் பனிப்பொழிவையும் உணர்த்தியது.

கத்தியின் விளிம்பை
காற்றின் இடுங்கிய வழியை
வயலும் கல்லுமான சவப்போர்வையை
இறுதிப்படிகளின் நட்சத்திரவெறுமையை
அச்சந்தரும் சுழல்வழியை
வந்தடைந்தேன் நான்.
எனினும்
மரணத்தின் பெருங்கடலே,
அலையலையாக அல்ல…
அந்திவெளிச்சத்தின் பாய்ச்சலாக
இருளின் முழுமையானகணக்காக
எங்களை வந்தடைகிறாய்.

எங்கள் பைகளைத்துளாவ ஒருபோதும் நீ வந்ததில்லை,
சிவந்த ஆடையில்லாமலோ,
மெளனத்தில் பொதிந்த கம்பளத்தை ரகசியமாக்காமலோ
இங்கே புதைக்கப்பட்ட அல்லது நிர்மாணிக்கப்பட்ட
கண்ணீரின் மரபு இல்லாமலோ
எங்களை ஒருபோதும் நீ சந்திததில்லை.

ஒவ்வொரு மனிதனுக்குள்ளும்
தனது மிஞ்சிய இலையுதிர்காலங்களை முதுகில்சுமந்து நிற்கும்
ஒரு மரத்தை (ஆயிரக்கணக்கில் உதிர்ந்துகொண்டிருக்கின்றன
இலைகள்) என்னால் நேசிக்கமுடியாது.
மண்ணில்லாத இந்தப் போலிமரணங்களை,
ஆழமில்லாத புத்துயிர்ப்புகளை
என்னால் நேசிக்கமுடியாது.
மிகச் செழிப்பான வாழ்நிலங்களில்
பரந்த கழிமுகங்களில் நீந்த விரும்பினேன்.

தனது காயம்பட்ட வாழ்வை
எனது உயிர்ப்புள்ள விரல்களால் தொடமுடியாமல்
தனது வாசல்களையும் வழிகளையும் அடைத்து
மனிதன் என்னை நிராகரித்துக்கொண்டிருந்தபோது,
வேறு வழிகளில்
தெருக்களினூடே
நதியிலிருந்து நதிக்கு
நகரத்திலிருந்து நகரத்துக்கு
ஒரு படுக்கையிலிருந்து இன்னொரு படுக்கைக்கு வந்தேன் நான்.
கானகத்தினூடே
என் உப்புச்சாயலை இழுத்துக்கொண்டு
கடைசிக் குடிசைகளுக்கு வந்தேன்.
வெளிச்சமும் நெருப்புமில்லாமல்
உணவில்லாமல்,
கல்லும் மெளனமுமில்லாமல்
எனது சொந்த மரணத்தை இறந்தபடி
தனியே நடந்தேன் கடைசியில்.

—-
sukumaran@sunnetwork.org

(உயிர்மை பதிப்பகம் வெளியிடவிருக்கும் :பாப்லோ நெரூதாவின் நூறு கவிதைகள் தொகுப்பிலிருந்து)

Series Navigation