பாடங்கள்

This entry is part [part not set] of 24 in the series 20050520_Issue

கவியோகி வேதம்


16-05-05

நல்லகவித் தலைப்புவந்து நம்மனமே அழைத்துவிட்டால்,

சொல்லெல்லாம் குயில்போலத் துள்ளிநடம் புரிகிறதே!

..

காட்டினிலே இலைதுளைத்து கதிரவனே கொஞ்சவந்தால்,

நாட்டியத்தைக் காண்பதுபோல் தரைநனைந்து மகிழ்கிறதே!

..

பாடங்கள் என்றால் ?! படித்துபின்னர் நிறுத்துவதா ?

பாடங்கள் என்றாலே, பிறவற்றில் படிப்பதுவா ?

..

இயற்கையிடம் இருந்தாநாம் எல்லாமும் படிக்கின்றோம் ?

செயற்கையாய் இல்லையாநாம் இப்படிச் செப்புவது ?

..

பருக்கைகண்டு கரைந்துநின்றால் காக்கையிடம் கற்கணுமா ?

சுறுசுறுப்பை எறும்புகள்தாம் சொல்லியே தரணுமா ?

..

பிறந்தவுடன் ‘மடி ‘தேட கன்றுக்குச் சொல்வதுயார் ?

திறந்தமொட்டில் தேன்குடிக்கத் தேனீக்கோர் பாடமா ?

..

யோசனைதான் செய்யுங்கள் உத்தமக் கவிஞர்களே!

வாசமில்லாக் கள்ளுக்கும் விளம்பரம் தேவையில்லை.

..

எவனுக்கு ‘லபி ‘க்கிறதோ அவன் ‘அதைச் சென்றடைவன்!

எவன்தலையில் எது ‘லிபி ‘யோ அவன்- அதை அனுபவிப்பன்!

..

யோகி-யான் புதிதாக யாதொன்றும் உரைக்கவில்லை;

பாகுபதக் கதைகளுடன் புராணம்மற்றும் கீதைசொல்லும்!

..

மனிதனுக்குப் பாடங்கள் அவன்-அவன் அனுபவமே!

இனிப்புதின்றால் என்னவரும் ?எழில்-உரையால் கேட்பானா ?

..

லாரி ‘தனை நிறுத்திவிட்டு ‘சுகம் ‘ஏற்றால் பாடமென்ன ?

கோரிவிடும் விளம்பரத்தால் ‘சாத்தான்கள் கேட்டிடுமா ?

..

மரணபயம் வந்தால்தான் ‘பாடமே ‘ புரிகிறது!

‘சரணமடை ‘அறம் ‘தன்னை ‘ என்றாலே சலிக்கிறதே!

..

இறைவனொளி ‘ உன்னுள்ளே இருக்குதென்றால் நம்புவனா ?

கறைபடிந்து தெரு-அலைந்தால் கட்டாயம் ‘அது ‘ தெரியும்;

..

ஜேகேயும் இதுசொன்னார்; ‘பிறபடிப்பால் ஒளிவராது; ‘-

வாக்கேயக் காரர்களோ வசந்தம்போல் பாடிவைத்தார்!

..

நம்புங்கள் நண்பர்களே! பிறர்தரல் பாடமில்லை!

நம்புத்தி,நம்-உடம்பு,நம்வயது,நமதுகஷ்டம் எல்லாம்தான்

..

நமக்குள்ளே மயங்கிவந்து நற்பாடம் சொல்லிநின்று

நம்பிறப்பின் ‘ரகசியத்தை ‘ நாசுக்காய்ப் புரியவைக்கும்;

..

தம்பிறப்பின் குறிக்கோளே ‘தலைவனுள்ளே ‘ கலப்பதுதான்!

‘தம் ‘பிடித்தால் ‘ஞானம் ‘வரும்! ‘த்யான ‘மெல்லாம் பாடம்தான்!

..

நான்படித்த,நான்துய்த்த பாடங்கள் இன்றுசொன்னேன்!

தேன் ‘துளியை நக்கிடுவீர்; அனுபவம்தான் தேன்-ஆகும்!

..

சரிதானா தோழர்களே ?சபைமெளனம் கலைந்ததுவா ?

‘கரி ‘தான்நான்! ஒளிச்சிகரம் கட்டாயம்! ‘அவன் ‘ அறிவான்!

நன்றி!வணக்கம்!(புதுவேதம்)16-05-05

kaviyogi_vedham@yahoo.com

Series Navigation

கவியோகி வேதம்

கவியோகி வேதம்