(பாகிஸ்தானிலிருந்து ஒரு கடிதம்) மக்கள் விருப்பத்தை எதிர்த்து…

This entry is part [part not set] of 18 in the series 20010204_Issue

இர்ஃபான் ஹுசேன்


கராச்சியிலிருந்து வெளிவரும் ஹெரால்ட் மாத இதழின் ஜனவரி இதழில் இரண்டு முக்கியமான பேட்டிகள் இருக்கின்றன. முதலாவது முன்னாள் பிரதமரான பெனசீர் புட்டோ அவர்களின் பேட்டி. இரண்டாவது, ஐஎஸ்ஐ என்று அழைக்கப்படும் பாகிஸ்தானிய உளவு நிறுவனத்தின் முன்னாள் தலைவராக இருந்த ஓய்வு பெற்ற ஜெனரல் ஹமீத் குல் அவர்களின் பேட்டி. இவர் இப்போது ஆஃப்கானிஸ்தானிலும் காஷ்மீரிலும் நடக்கும் தீவிரவாத ஜிஹாத் என்ற மதப்போருக்கு, பாகிஸ்தானில் இருக்கும் தீவிர ஆதரவாளர்களில் முக்கியமானவர்.

புட்டோ தானும் தன்னுடைய கணவரான (இப்போது சிறையில் இருக்கும்) ஆஸிஃப் ஜர்தாரி அவர்கள் மீதும் பொய் வழக்குகள் போடப்பட்டு இருப்பதாக கதை விட்டிருக்கிறார், என்றாலும் பாகிஸ்தானிய ராணுவமும், உளவுஸ்தாபனங்களும் ஒரு புறமும், தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதமரும் மக்கள் சமூகமும் இன்னொரு புறமும் இருந்து ஒன்றோடொன்று கொள்கின்ற உறவுகளைப் பற்றிய சரியான கவனிப்புகளைத் தெரிவித்திருக்கிறார்.

அடிப்படையில், முன்னாள் பிரதமர், ராணுவமும் உளவு நிறுவனங்களும் இடைவிடாமல் தொந்தரவு செய்வதாலும், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்தைக் கீழிறக்க தொடர்ந்து வேலை செய்வதாலும், அரசியல் வாதிகளால் சிறப்பாக வேலை செய்ய முடியவில்லை என்று கருத்து தெரிவித்திருக்கிறார். இந்த குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரமாக, அவர் இரண்டுமுறை பிரதமர் பதவியிலிருந்து இறக்கப்பட்ட போது அவருக்கு நேர்ந்த துரோகங்களைப் பற்றியும், நடந்த ஏராளமானச் சதிவேலைகளைப் பற்றியும் வெளிப்படையாகத் தெரிவித்திருக்கிறார்.

ஆப்பரேஷன் மிட்நைட் ஜாக்கால் என்ற நள்ளிரவு நரிவேலைகளைப் பற்றி நமக்கு நன்றாகவே தெரியும். உளவு நிறுவனங்களில் வேலை செய்யும் ராணுவத்தினர், பிரதமரின் மீது வந்த நம்பிக்கையில்லாத் தீர்மானத்தின் போது, எவ்வாறு ஆளும் கட்சி எம்பிக்களுக்கே லஞ்சம் கொடுத்தார்கள் என்பது வீடியோப் படம் எடுத்து காண்பிக்கப்பட்டது. உளவு நிறுவனங்கள் உள்நாட்டு அரசியலில் இடையூறு செய்த ஏராளமான நிகழ்ச்சிகளில் ஒன்றுதான் இது. பெனசீர் புட்டோ சொல்வதுபடி பார்த்தால், ஏறத்தாழ சுமார் 7 ராணுவ நிறுவனங்கள் கிராமந் தோறும் பரவி உள்நாட்டு அரசியலில் பங்கு பெறுகின்றன.

1990இல் நடந்த தேர்தல்தான், மக்கள் விருப்பத்தை எதிர்த்து அவர்கள் ஓட்டளித்த அரசாங்கத்தை கவிழ்க்க நடந்த அப்பட்டமான முயற்சி. அப்போது ராணுவத்தளபதியாக இருந்த ஜெனரல் அஸ்லாம் பெக், அன்று இருந்த (இப்போது காலாவதியாகிவிட்ட) மெஹ்ரான் வங்கியிலிருந்து 14 கோடி ரூபாய் பெற்று, அதை புட்டோ எதிர்ப்பு அரசியல்வாதிகளுக்கு வினியோகித்ததை பகிரங்கமாக அறிவித்திருந்தார். இன்றைய தேதி வரை அவ்வாறு பெற்ற பணத்துக்குக் கணக்குக் காட்டவில்லை. பகிரங்கமாகக் கணக்குக் காட்டவில்லை – அரசாங்கத்திடம் ரகசியமாய்த் தெரிவித்தாரா என்று தெரியாது. ஜெனரல் அஸாத் துரானி (அன்று ஐஎஸ்ஐ என்ற உளவுஸ்தாபனத்தின் தலைவராக இருந்தவர்) இந்தப் பணம் எந்த முஸ்லீம் லீக் அரசியல்வாதிகளுக்கு எவ்வளவு போனது என்று சொல்லியிருக்கிறார். இந்த ஜனநாயகக் காவலர்கள் இன்றுவரை அவ்வாறு பணம் பெற்றதை மறுக்கவும் இல்லை. துர்ராணி இன்று சவூதி அராபியாவுக்கு பாகிஸ்தானிய தூதுவராக இருக்கிறார். முன்பு பெனாசீர் புட்டோ அவரை ஜெர்மனிக்கு பாகிஸ்தானிய தூதுவராக அனுப்பியிருந்தார்.

இன்னொரு ஐ எஸ் ஐ முன்னாள் இயக்குனரையும் ஹெரால்ட் இதழில் பேட்டி கண்டிருக்கிறார்கள். எதிர்கால பாகிஸ்தானிய ஜனநாயகத்துக்கு இன்றே சாவுமணி அடிப்பது போன்று இருக்கிறது இவரது பேச்சு. ‘மக்கள் விருப்பம் அவர்கள் தேர்ந்தெடுக்கும் அரசியல் வாதிகள் மூலமாக வெளிப்படுகிறது என்று சொல்லமுடியுமா ? ‘ என்று கேட்டதற்கு, குல் பதில் சொல்கிறார் – ‘இல்லை. அரசியல்வாதிகள் தேசத்தின் போக்கை மாற்ற விரும்பினால், அதை அரசியல் மாநாட்டுப் பேச்சுகளில் ஏன் சொல்லமாட்டேன் என்கிறார்கள் ? ‘ இந்த ஜெனரல் சொல்வதன் தாத்பரியம் என்னவென்றால், தேசத்தின் பதுகாப்பு நடவடிக்கையை விட்டுக்கொடுக்க முடியாதது. எது ‘பாதுகாப்பு நடவடிக்கை ‘ என்பதை ராணுவமே தீர்மானிக்க சக்தி வாய்ந்தது. செயல்படும் எந்த ஜனநாயகத்திலும் அரசியல்வாதிகள் தங்கள் ஆட்சிக்காலத்தில், தேசப்பாதுகாப்புக்காக தாங்கள் எடுக்கப்போகும் ஒவ்வொரு நடவடிக்கையையும் முன்னமேயே சொல்வதில்லை.

1998 தேர்தலின் போது இந்த ஜெனரல் ஹமீத் குல், முஸ்லீம் லீக் இன்னும் பல பாகிஸ்தான் மக்கள் கட்சி எதிர்ப்பாளர்களை சேர்த்து ஒரு ஜம்பூரி இத்தேஹாத் என்ற கூட்டணியை அமைத்தபோது தேர்தல் களவாடப்பட்டதா என்று கேட்கப்பட்டது இந்த பேட்டியில். அதற்கு இந்த ஐஎஸ்ஐ முன்னாள் தலைவர் சொன்னார், ‘இல்லை. தேர்தல் திருடப்படவில்லை. ஆனால் முஸ்லீம் லீக் ஜெயிக்க சில சூழ்நிலைகள் உருவாக்கப்பட்டன. இதிலெல்லாம் பரிசுத்தமாக இருக்க முடியாது… ‘. இந்த வேலைகள் எல்லாம் ஒரு சில உளவுநிறுவனங்கள் தானாகச் செய்த வேலையா என்று கேட்டதற்கு தீவிரமாக பதிலளித்தார். ‘இது உளவு நிறுவனங்கள் தானாகச் செய்யும் வேலைகள் அல்ல. அவை தனிக்காட்டுராஜா அமைப்புகள் அல்ல. அவை எல்லாமும் பாதுகாப்பு அமைப்பின் (ராணுவத்தின்) உள் சிந்தனையின் வெளிப்பாடுகள் ‘

மிகச்சமீபத்தில். சவூதி அரேபியாவுக்கு நாடு கடத்தப்பட்ட நவாஜ் ஷெரீப்பால் முஸ்லீம் லீகுக்கு தலைவராக நியமிக்கப்பட்ட ஜாவேத் ஹாஷ்மி, ஐ எஸ் ஐ என்ற இந்த உளவு நிறுவனம் முஸ்லீம் லீகை உடைக்க முயற்சிக்கிறது என்று குற்றம் சாட்டியிருக்கிறார்.அரசாங்கத்தில் கிடைக்கும் வசதிகளுக்காக முஸ்லீம்லீகில் ஒட்டிக்கொண்டிருக்கும் சுத்தமான சந்தர்ப்பவாதிகளால் நிரம்பியது இந்த முஸ்லீம் லீக் கட்சி என்பது எல்லோருக்கும் தெரியும். ஆனால், இந்த முஸ்லீம் லீக், எம்குயுஎம் போன்ற ராணுவத்தால் வளர்த்துவிடப்பட்ட கட்சிகளே பின்னால் ராணுவத்தலையீட்டைப் பற்றி புலம்புகின்ற செய்தி முக்கியமான ஒரு விஷயம்.

இந்த தேசம் முன்னேற வேண்டுமென்றால், இந்த தேசத்தில் நிலையான மக்கள் நம்பிக்கை வைக்கக் கூடிய நிறுவனங்கள் வேரூன்ற வேண்டுமென்றால், இந்த முரண்பாட்டைத் தீர்க்க வேண்டும். ஒரு பக்கம் ராணுவம் தனக்கு வேண்டிய கோட்பாடுகளையும் தனக்கு வேண்டிய பாதுகாப்பு குறிக்கோள்களையும் தானே வைத்துக்கொள்கிறது. இது யாருக்கும் பதில் சொல்ல வேண்டிய அவசியமில்லாத அமைப்பு. இன்னொரு பக்கம் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசியல் வாதிகள், தேசத்தின் பாதுகாப்பையும், தேசத்திற்குத் தேவையான வளர்ச்சி சாதனங்களையும், கல்வித் திட்டங்களையும் மக்களுக்குக் கொடுத்த வாக்குறுதிகளையும் காப்பாற்றவேண்டிய கட்டாயத்தில் இருப்பவர்கள். இந்த அரசியல்வாதிகள் பாராளுமன்றத்துக்கும் மக்களுக்கும் பதில் சொல்லவேண்டிய கட்டாயத்தில் இருப்பவர்கள்.

எப்போதாவது, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு அரசியல் வாதி, இந்த பூகோளப் பகுதியில் இருக்கும் போர்ப்பிரச்னைகளை தீர்க்க முயல்வாரெனில், உடனே ராணுவம் இந்த அரசியல்வாதியை தேசத்தின் எதிரி என்று மக்களிடம் பிரச்சாரம் பண்ணவும், அந்த ஆளைக் கீழே இறக்கவும், அரசாங்கத்தை நிலையில்லாததாக ஆக்கவும் தீவிரமாக இறங்கி விடுகிறது.

ஆனால் கஷ்டமான உண்மை என்னவென்றால், இந்தியாவுடன் நல்ல உறவு கொள்வதும், தாலிபனைவிட்டு விலகுவதும், ராணுவ பட்ஜெட்டைக் குறைப்பதும் செய்தால்தான், இந்த பாகிஸ்தானில் புதிய முதலீடுகளும், பொருளாதார வளர்ச்சியும் வரும்.

ஆக இங்கிருந்து எங்கே போவது ? பாகிஸ்தானில் இன்னும் ஒரு வருடத்தில் நாடு முழுவதும் தேர்தல் நடத்தியாக வேண்டும் (சுப்ரீம் கோர்ட் தீர்ப்பை ராணுவம் மதித்தால்). மறுபடியும் நவாஸ் ஷெரீப்பின் முஸ்லீம் லீகும், பெனசீர் புட்டோவின் பாகிஸ்தான் மக்கள் கட்சியுமே இரண்டு பெரும் கட்சிகளாக மோதப்போகின்றன. நவாஸ் ஷெரீப்பின் கட்சி நவாஸ் ஷெரீப் சவூதி அரேபியாவுக்கு ஓடிப்போனதால் கோழையாக மக்கள் பார்க்கிறார்கள். எனவே பாகிஸ்தான் மக்கள் கட்சி தலைவரான பெனசீர் வருவதற்கே அதிக வாய்ப்பு. முஸ்லீம் தீவிரவாதக் கட்சிகளுக்கு வழக்கம் போல ஓட்டுகள் விழாது. ஆகவே பெனசீர் மீண்டும் ஆட்சிக்கு வருவதை ராணுவம் எப்படி அணுகும் ?

ராணுவத்தைப் பொறுத்த வரை பெனசீருக்கு மூன்று குறைபாடுகள் இருக்கின்றன. ஒன்று அவர் பெண். இரண்டாவது அவர் ஒரு சிந்தி. மூன்றாவது அவர் சுல்பிகார் அலி புட்டோவின் மகள். 1971இல் இந்திய ராணுவத்தின் கையில் பாகிஸ்தான் ராணுவம் சந்தித்த மகத்தான, கேவலமான தோல்விக்கு புட்டோ பாகிஸ்தான் ராணுவத்தைக் குற்றம் சாட்டினார். அதனால் ராணுவத்தைப் பொறுத்த வரை பெனசீரின் பெரிய பாவம், அவர் புட்டோவின் மகளாக இருப்பது. பெனசீரின் புருஷனான (உலகமகா ஊழல்வாதியான) ஆசிப் ஜர்தாரியைக்கூட ராணுவத்தினர் ஒப்புக்கொள்வார்கள், அவர் பெனசீரின் புட்டோவின் புருஷனாக இல்லாமலிருக்கும் பட்சத்தில்.

ஆகவே, ராணுவ தலைமையகம் ஜனநாயகத்தை பாகிஸ்தானுக்கு கொண்டுவரவேண்டும் என்பதைப் புரிந்து கொள்கிறது. ஆனால் வலிமையற்ற, ராணுவம் சொன்னால் ஆடக்கூடிய பிரதமராகவும் வர வேண்டும். இது ராணுவத்தைப் பொறுத்த வரை எட்டாக்கனியாகவே இருக்கிறது. ஆட்சிக்கு வருவதற்கு முன்னால் என்னதான் ஒரு அரசியல்வாதி ராணுவம் சொல்வதைக் கேட்பதற்குத் தயாராக இருந்தாலும், ஆட்சிக்கு வந்ததும், உள்கட்சிப் பிரச்னைகளாலும், மக்கள் கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்கு விரும்புவதாலும், ராணுவத் தலைமையகத்தின் சிந்தனையிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக விலகிக்கொள்ளவேண்டிய நிர்பந்தம் வந்துவிடும்.

ராணுவத்தின் குறிக்கோள்கள் ஒரு திசையிலும், தேசத்தின், மக்களின் பொருளாதார முன்னேற்றத் தேவைகள் இன்னொரு திசையிலும் செல்லும் இந்த சிக்கல் நம்மை ஒரு முக்கியச் சந்தியில் நிறுத்தியிருக்கின்றது. நாம் முன்னேற வேண்டுமென்றால், ராணுவத் தலைமையகம் மக்களின் பொது விருப்பத்துக்கும் மக்கள் பிரதிநிதிகளுக்கும் கீழ்ப்படிந்து அதற்கு உகந்தவாறு தன் நடவடிக்கைகளை அமைத்துக் கொள்ள வேண்டும். வேறு வழியில்லை.

**

(இர்ஃபான் ஹுசேன், டான் என்ற பாகிஸ்தானிய பத்திரிக்கையில் தொடர்ந்து எழுதிவருபவர். ராணுவ ஆட்சி வந்தால்தான் இந்தியா உருப்படும் என்று பேசும் சில புரியாதவர்களுக்காக இந்த கட்டுரை வெளியிடப்படுகிறது)

Series Navigation