பழைய முடிவும் புதிய முடிவும் (ஆர்.சூடாமணியின் ‘ரயில் ‘ – எனக்குப் பிடித்த கதைகள் – 65 )

This entry is part [part not set] of 37 in the series 20030619_Issue

பாவண்ணன்


ஹோஸ்பெட் என்னும் ஊரில் நான் வேலை செய்துகொண்டிருந்த போது பத்தாண்டுகளாவது என்னைவிட வயதில் மூத்த நண்பரொருவர் இருந்தார். விடுதிகளில் கிடைக்கிற உணவைச் சாப்பிட்டுக் காலத்தை ஓட்டிக்கொண்டிருந்த சமயங்களில் எப்போதாவது விசேஷ நாள்களில் அவர் தன் வீட்டுக்கு அழைத்து விருந்தளிப்பார். சில நாட்களுக்குள்ளேயே எங்களிடையே நல்ல உறவு உருவானது. படிப்படியாக அவரை நான் அண்ணன் என்றும் அவரது துணைவியாரை அண்ணியென்றும் அழைக்கத்தொடங்கினேன்.

திடாரென அவரது வீட்டில் ஒரு குழப்பம் உண்டானது. நண்பருடைய தாயாருக்குத் தன் மருமகள் தன்னைச் சரியாக நடத்தவில்லை என்ற எண்ணம். ஏதேதோ இல்லாத குற்றங்களையெல்லாம் கண்டுபிடித்து அடுக்கிக்கொண்டே இருந்திருக்கிறார். ஒருநாள் அவை பெருகி வாய்வார்த்தைகள் தடித்து அடித்துவிடுகிற அளவுக்குப் போய்விட்டது. மனக்கசப்பு மோதலில் முடிந்ததும் பஞ்சாயத்து வைத்து இருவரும் விலகிவிடுவது என்கிற முடிவுக்கும் வந்தாகிவிட்டது. ஒன்றிரண்டு நாள்களிலேயே இந்த அளவுக்கு நிலைமை முற்றிவிட்டது. நான் ஊரில் இல்லாத சமயம் அது. நண்பரைச் சந்திக்க வாய்ப்பில்லாத காரணத்தால் எனக்கு எந்த விஷயமும் தெரியாது. தெரியாத நிலையிலேயே ஊரிலிருந்து திரும்பியதும் சாதாரணமாக செல்வதைப்போல அவர்களுடைய வீட்டுக்குச் சென்றேன். பஞ்சாயத்து நடந்துகொண்டிருந்தது. நண்பர் பஞ்சாயத்து செய்ய வந்தவர்களிடம் வேகவேகமாக முறையிட்டுக்கொண்டிருந்தார். நிலைமை என்னவென்று புரிந்துகொள்ள கால்மணிநேரமானது. ‘கணக்கு தீத்துடுங்கய்யா கணக்கு தீத்துடுங்கய்யா ‘ என்று மீண்டும் மீண்டும் முறையிட்டபடி இருந்தார் நண்பர். நான் அவரது மனைவியைப் பார்த்தேன். அடிபட்ட பறவையாக ஏதோ ஒரு சுவர் மூலையை வெறித்தபடி உட்கார்ந்திருந்தார் அவர். பேசுவதற்குச் சக்தியிழந்த தோற்றத்திலிருந்தார்.

ஒருவிதமான முரட்டுத் தைரியத்துடன் பஞ்சாயத்துக்காரர்களிடம் நான் பேசத்தொடங்கினேன். பிரச்சனையில் அவர்கள் அணுகாத கோணங்களைச் சுட்டிக்காட்டினேன். ‘இன்னும் இரண்டு நாட்கள் போகட்டும், பார்க்கலாம் ‘ என்று அவர்களே சொல்லிவிட்டுப் போகுமாறு செய்தேன். யோசிக்கக்கூட நேரம் தராமல் நண்பரைத் தள்ளிக்கொண்டு வெளியே வந்தேன். வந்த வேகத்தில் அவரை வண்டியில் உட்கார வைத்து ஓட்டுநரிடம் பக்கத்திலிருந்த அணைக்கட்டுக்குச் செல்லுமாறு சொன்னேன்.

அணைக்கட்டு செல்லும்வரை அவர் ஏதேதோ பழைய கதைகளையெல்லாம் சொல்லிச்சொல்லிப் புலம்பினார். அன்னைக்கும் மனைவிக்கும் நடுவில் நசுங்கி நிம்மதியிழந்துகொண்டிருக்கிற உயிராகத் தன்னைப் பாவித்து ஏதேதோ சொன்னார். எல்லாவற்றையும் கேட்டபடி வந்தேன். நான் எதுவும் குறுக்கில் பேசவில்லை. அதே சமயத்தில் அவர் சொல்வதையெல்லாம் சிரத்தையுடன் காதுகொடுத்துக் கேட்டபடியே வந்தேன்.

அணைக்கட்டு வந்தது. குமுறிக்குமுறிச் சுவர்களுக்குள்ளேயே வளையவளைய வருகிற துங்கபத்ரா நதியின் பெருக்கையும் வேகத்தையும் ஆவேசத்தையும் நளினமான அலைகளாகக் கரையைத் தொட்டுச் செல்கிற மென்மையையும் பார்த்தபடி நின்றோம். பிறகு மெதுவாகத் திரும்பி தேநீர்க்கடைக்குள் நுழைந்து தேநீர் அருந்தினோம். வெளியே வந்து அணைக்கட்டின் கரையில் ஒருமணி நேரம் நடந்து திரும்பினோம். எல்லா நேரங்களிலும் அவரையே பேச அனுமதித்தேன். அந்த இரண்டு மணிநேரங்களில் நான் ஒரே ஒரு வார்த்தையை மட்டுமே சொன்னேன். உணர்ச்சிமயமான நேரங்கள் முடிவெடுப்பதற்கு உகந்தவையல்ல என்றும் இன்னும் ஒன்றிரண்டு நாள்கள் என்னோடேயே கழிக்குமாறும் அதற்குப் பிறகு யோசித்து ஒரு முடிவை எடுக்குமாறும் மட்டும் சொன்னேன். எந்த நேரத்தில் எடுத்தாலும் தன் முடிவு மாறாது என்று சொன்னார் அவர். ஆனாலும் என் வேண்டுகோளை ஏற்றுக்கொண்டார்.

அவர் என்னுடன் தங்கியிருப்பதை மட்டும் அவரது வீட்டுக்குத் தொலைபேசியில் தகவல் சொல்லிவிட்டு அவரை என்னோடு தங்கவைத்துக்கொண்டேன். அன்றிரவு நாங்கள் இருவரும் ஒரு திரைப்படம் சென்றோம். பிறகு விடுதியில் உணவருந்திவிட்டு நிலா வெளிச்சத்தில் பேசியபடி வெகுதொலைவு நடந்து திரும்பினோம். மறுநாள் காலையில் குளித்துவிட்டு அருகிலிருந்த சிதைவுற்ற ஹம்பி நகருக்குள் சென்று பகல் முழுக்கத் திரிந்தோம். நண்பருக்குப் பழைய உற்சாகம் மெல்ல மெல்லத் திரும்பிக்கொண்டிருந்தது. மாலைப்பொழுது நெருங்க நெருங்கத் தன் மனைவியைப் பற்றியும் பிள்ளைகளைப் பற்றியும் கொஞ்சம் கொஞ்சமாகப் பேச்சைத் தொடங்கினார். இவ்வளவு அருகில் இருந்தும் இந்த இடங்களுக்கு அவர்களை அழைத்துக்கொண்டு வந்து காட்டாததைச் சொல்லிச்சொல்லி வருத்தப்பட்டார். அடுத்தநாள் சற்றே தொலைவிலிருந்த நாரிஹள்ளா என்றொரு அணைக்கட்டுக்குச் சென்று திரும்பினோம். அதன் அழகில் சொக்கிவிட்டார் அவர். அவர் கவனமும் கவலையும் முழுக்கவே அவரது குடும்பத்தின் பக்கம் திரும்பிவிட்டது.

அன்று மாலை அவரை வீட்டில் விட்டுவிட்டுத் திரும்பினேன். பஞ்சாயத்து முடிவை அவர் முழுக்க முழுக்க மாற்றிக்கொண்டுவிட்டார். மறுவாரம் நான் சென்றபோது அப்படி ஒரு சம்பவம் நடந்ததையே வெட்ககரமான விஷயமாக நினைப்பதாகக் குறிப்பிட்டார். மிகப்பெரிய தவறொன்று செய்யவிருந்த சமயத்தில் தடுத்ததற்காக நன்றிகளைச் சொன்னார். அப்போது அவர் நா தழுதழுத்தது. கண்கள் கலங்கின. ஒரு முடிவை எடுப்பதற்கு முன்னர் அவர் எடுத்துக்கொண்ட கால அவகாசமும் மனத்தில் நிகழ் த்திய ஆலோசனைகளும் பயணங்களும்தாம் அவர் மனமாற்றத்துக்குக் காரணமென்றும் இடையில் புகுந்து தடுத்தது மட்டுமே என் பங்குக்கான வேலையென்றும் சொன்னேன். அவர் சிரித்துக்கொண்டார். இருபதாண்டு இடைவெளியில் நான் ஏதேதோ ஊர்களுக்கு மாறிமாறித் தொடர்ந்து பயணித்து வந்தபோதும் அவருடைய தொடர்பு தொடர்ந்தப்யே இருந்தது. சமீபத்தில் அவர் தன் மகளுடைய திருமண அழைப்பை அனுப்பியிருந்தார். அதைப் பார்த்ததும் இந்தப் பழைய சம்பவம்தான் மனத்தில் முதலில் நிழலாடியது. கால அவகாசமும் பயணங்களும் மனத்தின் முடிவுகளை மிக இயல்பாக இடம் மாற்றி வைத்துவிடுவதை ஆச்சரியத்துடன் ஒருமுறை நினைத்துக்கொண்டேன். ஆர்.சூடாமணி எழுதிய கதையொன்றும் அப்போது ஞாபகத்தில் தோன்றியது.

அக்கதையில் ஒரு ரயில்பயணம் இடம்பெறுகிறது. சென்னையிலிருந்து கிளம்பி பெங்க்ளுரை நோக்கிச் செல்கிறது ரயில். முதலில் ரயில்நிலையச் சித்தரிப்பு சுருக்கமாக இடம்பெறுகிறது. அங்குமிங்கும் அலையும் போர்ட்டர்கள். பெட்டியின் அடையாளத்தைத் தேடும் பிரயாணிகள். வழியனுப்ப வந்தவர்கள். பிரயாணக்களைப்பில் வண்டியிலிருந்து இறங்கிச்செல்லும் மனிதர்கள். விற்பனையாளர்கள். மாறிமாறி அலையும் அக்காட்சிகளை ஆர்வத்துடன் வேடிக்கை பார்த்தபடி தான் பயணப்படவேண்டிய இரண்டாம் வகுப்புப்பெட்டியின் அருகே நிற்கிறாள் ஒருத்தி. அவள் ஓர் ஓவியரும்கூட. மனத்தில் பதியும் முகங்களை உடனுக்குடன் ஓவியங்களாக மாற்றிக்கொண்டிருக்கிறாள். வரைந்த முகங்களில் வெளிப்படும் உணர்ச்சிகளை ஒருமுறை பார்த்து நிறைவடைகிறாள். அவள் வெகுகாலமாக எதிர்பார்த்தபடியிருக்கும் அரிச்சந்திரனுடைய முகபாவத்தை மட்டும் அவளால் எந்த முகத்திலும் காணமுடியவில்லை. உடலளவிலும் மன அளவிலும் ஏராளமான சிரமங்களை அனுபவித்தாலும் தானொரு சத்தியசீலன் என்கிற பெருமிதத்தை வெளிப்படுத்தும் முகபாவம் அரிச்சந்திரனுடையது. எவ்வளவோ தேடியும் அத்தகு முகபாவத்தைக் காணமுடியவில்லை. ஏமாற்றத்துடன் ஓவியச்சுவடியை மூடி எடுத்துக்கொண்டு பெட்டிக்குள் ஏறுகிறாள்.

பெட்டிக்குள் ஓர் இளம்பெண் உட்கார்ந்திருக்கிறாள். அவள் பெயர் மீனா. சற்றே பதற்றத்துடன் ஜன்னலைச் சாத்தி வைத்திருக்கிறாள். தாமதமாகக் கிளம்பி வந்து தன்னோடு சேர்ந்துகொள்ள வேண்டிய காதலன் வரதனைக் காணாமல் அவள் அச்சம் கூடிக்கொண்டே செல்கிறது. அருகில் ஐம்பது வயது மதிக்கத்தக்க மற்றொரு பெண்மணியும் உட்கார்ந்திருக்கிறாள். சிறிது நேரம் கழித்து ஜாதகக்கட்டுகளோடு ஒருவர் அதே பெட்டிக்குள் வந்தமர்கிறார். கண்ணில் படுபவர்களில் யாராவது ஒருவரைத் தன் பெண்ணுக்கு வளைத்துப்போட அவர் மனம் சதாகாலமும் கணக்குப்போட்டபடியே உள்ளது. அதே கணத்தில் மற்றொரு தம்பதியினரும் பெட்டிக்குள் ஏறி இடம்பிடிக்கிறார்கள். வண்டி புறப்பட சிறிது நேரமே இருக்கும் தருணத்தில் வந்து சேர்கிறான் மீனாவின் காதலன். கடைசியாக ஒரு பெரியவரும் உள்ளே வருகிறார். கசப்பும் உறுதியும் ஒருசேர வெளிப்படும் அவர் முகத்தைப் பார்த்ததுமே ஓவியப்பெண்ணுக்கு வெகுகாலமாகத் தேடிக்கொண்டிருந்த முகபாவத்தைப் பார்த்த நிறைவும் பரவசமும் உண்டாகின்றன. ஆனால் அனுமதிக்காக அணுகியதும் தன்னைப் படமாக எழுதுவதில் தனக்கு விருப்பமில்லை என்பதைத் தெரியப்படுத்திவிடுகிறார். இதையொட்டிச் சற்றே ஏமாற்றமிருந்தாலும் வெளிக்காட்டாமல் சுவடியைப் பைக்குள் வைக்கிறாள் ஓவியப்பெண்.

ரயில் கிளம்புகிறது. யாருக்கும் உறக்கமில்லை. ஒருவருக்கொருவர் பேசிக்கொள்ளும்படி சூழல் அமைந்துவிடுகிறது. பெற்றவர்கள் சம்மதிக்காததால் பெங்க்ளுருக்குச் சென்று திருமணம் செய்துகொள்ளத் திட்டமிட்டிருந்த மினாவும் வரதனும் பெட்டிக்குள் அறிமுகமற்றவர்களைப்போல உட்கார்ந்திருந்தாலும் அடிக்கடி கண்களாலும் சாடைகளாலும் பேசிக்கொள்கிறார்கள். நடுவயதுப் பெண்மணி சதாகாலமும் வார்த்தைகளால் ஒருவரையொருவர் புண்படுத்திக்கொண்டு வாழ்கிற பிள்ளையைப்பற்றியும் மருமகளைப்பற்றியும் சொல்லிக் கவலைப்படுகிறாள். பிறந்திருக்கிற குழந்தையின் காரணமாவது இருவருக்கிடையேயும் ஒற்றுமை வளர்ந்தால் நல்லது என்று ஆசைப்படுகிறாள். அபற்றெடுத்த குழந்தை ஐந்து மாதங்களில் இறந்துவிட்ட துக்கத்தால் மனம் உடைந்து உடல்நலிந்த மனைவியின் கவலையைப்போக்க வெளியூர்களில் பயணம் செய்யும் நோக்கத்துடன் வந்திருக்கிறார்கள் தம்பதியினர். தாயில்லாத குறை தெரியாமல் வளர்த்த மகன் தன்னிடம் சொல்லிக்கொள்ளாமல் தனக்குப் பிடிக்காத ஒரு பெண்ணைத் தானே தேடி மணந்துகொண்டதால் மனம் உடைந்து வெளியூருக்குச் சென்று தற்கொலை செய்துகொள்ளும் வைராக்கியத்துடன் வருகிறார் முதியவர்.

பயணத்தில் ஏதாவது ஒரு விஷயத்தையொட்டி எல்லாருமே தமக்குள் பேசிக்கொள்கிறார்கள். ஒவ்வொன்றைப்பற்றியும் பலவிதமான பார்வைகள் இருக்கமுடியும் என்கிற எண்ணம் முதன்முதலாகப் புரிவதைப்போல எல்லாருக்கும் புரிகிறது. பல துக்கங்களும் மனச்சுமைகளும் ஒரே இடத்தில் அலசப்படும்பொழுது ஒவ்வொருவருக்கும் தம் துக்கத்தின் அளவு எவ்வளவு மிகச்சிறியது என்கிற எண்ணமும் அடுத்தவர்களுடன் ஒப்பிடும்போது தம் நிலை எவ்வளவு மேலானது என்கிற எண்ணமும் எழுகின்றன. ஏதோ ஒரு விதத்தில் ஒவ்வொருவரின் பார்வையும் விரிவடைகிறது. தம் பிரச்சனையின் மறுபரிமாணம் புரிகிறது.

முடிவில் ஒவ்வொருவரின் மனத்திலும் சிறுசிறு மாற்றம் ஏற்படுகிறது. கள்ளத்திருமணம் செய்துகொள்ள வந்த காதலர்கள் பெற்றவர்களின் சம்மதத்துக்கு முயற்சிசெய்யலாம் என்று தோன்றுகிறது. சொல்லாமல் கொள்ளாமல் திருமணம் செய்துகொண்ட பிள்ளைமீது பொங்கிவந்த கோபம் திசைதெரியாமல் கலைந்துவிட அவர்களுக்கு ஆசிவழங்க எண்ணுகிறது பெரியவர்ின் மனம். மரணம் உருவாக்கிய அதிர்ச்சியை மறந்து புதிய இடங்கள், புதிய மனிதர்களைப் பார்த்துப் புத்துணர்வை அடைய எல்லா நிலைகளிலும் தயாராகிறர்கள் தம்பதியினர். என்றாவது ஒரு வரன் எதிர்பாராத சந்தர்ப்பத்தில் அமைந்துவிடும் என்கிற நம்பிக்கையின் தைரியம் கொள்கிறார் நடுவயதுத் தந்தை. தம்மைப் படமாக எழுதிக்கொள்ள அனுமதியைக் கொடுத்த பெரியவரை நொடிநேரத்தில் வரைந்து நிறைவடைகிறாள் ஓவியப்பெண். யாரும் தம் முடிவுகளை எங்கும் அறிவிக்கவில்லை. ஆனால் மனத்துக்குள்ளேயே நிச்சயித்துக்கொண்டபடி விடைபெற்றுக்கொண்டு கலைந்து செல்கிறார்கள்.

மனம் எடுக்கிற முடிவுகள் எந்த தருக்கமுறைகளுக்கும் உட்பட்டதல்ல. ஒவ்வொரு மனமும் அதற்கேயான ஆயிரம் காரணங்களையும் நியாயங்களையும் தன் முடிவுகளையொட்டிக் கற்பித்து வைத்திருக்கும். மனத்தின் எண்ண ஓட்டங்களும் ஒருவகைப் பயணத்தைப்போன்றதே. புறப்பயணம் நம்மை ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்துக்கு அழைத்துச் செல்வதைப்போல மனப்பயணம் ஒரு சிந்தனையிலிருந்து அல்லது ஒரு முடிவிலிருந்து மற்றொரு சிந்தனைக்கு அல்லது முடிவுக்குப் பயணமாகிறது. பழைய முடிவிலிருந்து புதிய முடிவை நோக்கிய பயணம் மிக நுட்பமானது. இந்த நுட்பத்தின் அழகு சிறிதும் குறையாமல் இக்கதையில் சித்திரிக்கப்பட்டிருக்கிறது. இதுவே இக்கதையின் மிகப்பெரிய பலம். புறப்பயணத்துடன் மனப்பயணத்தையும் இணைத்துக்காட்டுவதும் குறிப்பிட்டுச் சொல்லவேண்டிய ஒரு விஷயமாகும்.

*

கடந்த அரைநுாற்றாண்டுக் காலமாகத் தொடர்ந்து சிறுகதைகள் எழுதிவரும் படைப்பாளி ஆர்.சூடாமணி. எழுதத் தொடங்கிய காலத்தில் சுதேசமித்திரன், கலைமகள் ஆகிய இதழ்களில் நிறைய எழுதியுள்ளார். இன்றும் கல்கி, தினமணிக்கதிர் ஆகிய இதழ்களில் எழுதிவருகிறார். ‘ஒளியின் முன் ‘ என்னும் இவருடைய முதல் சிறுகதைத்தொகுப்பு பாரி நிலையத்தாரின் வெளியீடாக 1959 ஆம் ஆண்டில் வெளிவந்தது. ‘ரயில் ‘ என்னும் சிறுகதை இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ளது.

***

paavannan@hotmail.com

Series Navigation

பாவண்ணன்

பாவண்ணன்