பழிக்குப் பழி – 2

This entry is part [part not set] of 54 in the series 20090915_Issue

சூர்யா லட்சுமிநாராயணன்


2 நாள் கழித்து என்ன நடந்தது என்பதை தெரிந்து கொள்வதற்காக பள்ளிக்கு வந்தேன். அங்கே துணைத் தலைமையாசிரியர், விடுமுறைக் கடிதம் கொடுக்காதவர்களை அடித்துக் கொண்டிருந்தார். அந்த நீண்ட வரிசையில் நானும் போய் நின்று கொண்டேன். எனது பார்வை எல்லாம் தலைமையாசிரியர் அறையை நோக்கித்தான் இருந்தது. அவரை அங்கு காணோம். சாக்கடைக்குள் விழுந்தமனிதர் எழுந்தாரா என்று கூட பார்க்கவில்லை. பள்ளிக்கு தலைமையாசிரியர் வரவில்லையென்றால், துணைத் தலைமையாசிரியர் தான் பொறுப்பேற்றுக் கொண்டு பிரம்படி கொடுப்பார். இந்த வேண்டாத வேலையை சலிப்பின்றி செய்ய வேறு யாராலும் முடியாது. யார் வருத்தப்படுகிறார்கள், இவர்கள் அடிக்கிறார்களென்று. சலிப்பு தட்டிவிட்டது. இதற்கு வரிசையில் வேறு நிற்க வேண்டும். அரைமணி நேரம் வீணாய் போவதைத் தவிர வேறொன்றும் நடக்கப்போவதில்லை. என்முறை வரும் போது து.த மிகவும் கலைத்து போயிருந்தார். இது தேவையா? என்பது போல் பார்த்தேன். அவர் புரிந்து கொண்டதாய் தெரியவில்லை. வறண்டு போன உதட்டை ஈரப்படுத்திக் கொண்டு இரண்டடி கொடுத்தார். அந்த நிமிடத்தில் கடவுளிடத்தில் பிரார்த்தனை செய்தேன்.

”கடவுளே அவரைக் காப்பாற்று”

சுகுனாவுக்கு என்னவாகியிருக்கும் என்கிற கேள்வி என் மனதை அறித்துக் கொண்டிருந்தது. அவள் இன்னும் பள்ளிக்கு வரவில்லை. தூரத்தில் ரமேசும், சிவாவும் வந்து கொண்டிருந்தார்கள். அவர்களிடம் விசாரித்ததில் இப்படிக் கூறினார்கள்.

சுகுனாவின் முகத்தில் யாரோ ஆசிட் அடித்து விட்டார்களாம். அதனால் அவளது முகம் முழுவதும் வெந்து விட்டதாம். மருத்துவமனையில் அவள் இன்னும் வலி தாங்காமல் கத்திக் கொண்டிருக்கிறாளாம். இரண்டு போலீஸ் காரர்கள் வந்து விசாரித்து விட்டு போனார்களாம். மருத்துவ பரிசோதனையில் அவளது முகத்தில் வீசப்பட்ட ஆசிட் ஸ்பெசலாக ஜெர்மனியில் தயாரிக்கப்பட்டதாம். அதை தீவிரவாதிகள் மட்டும் தான் பயன்படுத்துவார்களாம்.

“ஐயோ!!!!????”

“ஐயோ, நான் தீவிரவாதி இல்லை, நான் சத்தியமா???”

கடைசியாக அவர்கள் இருவரும் சேர்ந்து ஒரே குரலில் கூறினார்கள்

“அவள் உயிருக்காக போராடிக் கொண்டிருக்கிறாள்”

எனது இதயத்திலிருந்து சுமார் ஒன்றரை லிட்டர் இரக்கம் சுரந்து விட்டது. பிறகு கழிவிரக்கம், அதோடு சேர்ந்து என்னன்னமோ என் மனதை பிசைந்தெடுத்தது. இங்கிருந்து மன்னிப்பு கேட்டால் அவள் காதுகளுக்கு கேட்குமா? அப்படியே மன்னிப்பு கேட்பதால் அவளது கண்களில் வலி குறையப் போகிறதா என்ன?

ஆனால், இந்த ஜெர்மனி ஆசிட் புதுக்கதையை பற்றி யோசித்துக் கொண்டிருந்த பொது, கண்கள் லேசாக ஈரமாகியிருந்தது. அந்த கண்ணீர்த் துளிகள் நிரம்பிய பார்வையில் யாரை பார்த்தாலும் சுகுணாவை போலவே தெரிந்தது. அதோ தூரத்தில் ஒருபெண், பார்ப்பதற்கு சுகுனாவைப் போலவே தெரிகிறாள். அவள் அருகில் வரவர என்ன ஆச்சரியம், இன்னும் சுகுனாவைப் போலத்தான் தெரிகிறாள். ஒருவேளை கண்களை கசக்கி கொண்டால் வேறு ஒரு பெண்ணாக மாறலாம். ஆனால் சினிமாவில் எல்லாம் பொய் சொல்கிறார்கள். இதெல்லாம் உண்மையில்லை. அவள் சுகுனாவேதான். இது கனவு கூட இல்லை. ஏனென்றால் கில்லினால் வலிக்கிறதே. அவள் கண்கள் நன்றாகத்தான் இருந்தன. அவள் என்னை முறைத்துப் பார்த்துக் கொண்டே சென்றாளே, எனக்கு நன்றாகத் தெரியும் அந்த பார்வையைப் பற்றி.

ஆனால் எனக்கு ஏன் புரியாமல் போய் விட்டது. சிவா, ரமேஷ் இருவரும் சிறந்த கதாசிரியர்கள் என்பது. சல்லவேலை 10 நிமிடத்தில் பெல் அடித்துவிட்டது. இல்லையென்றால் என்னை பின்லேடனோடு சேர்த்தல்லவா கதை கட்டிவிட்டிருப்பார்கள். அவளது பார்வையில் என்னை அடையாளம் கண்டு கொண்ட எந்த அறிகுறியும் இல்லை. சோ என்னுடைய ஆப்பரேஷன் சக்சஸ்.

ஒருவாரம் அமைதயாக கடந்திருந்தது. ஆனால் அமைதியாக நாட்களை கழிப்பது தான் எவ்வளவு கடுமையாக இருக்கிறது. தூக்கம், மயக்கம், மந்தம், அமைதி எல்லாம் ஒன்று போலவே இருக்கிறது. இதற்கு துன்பத்திலேயே உழலாம். துன்பத்திலாவது உணர்ச்சிகளுக்கு ஏதேனும் வேலையிருக்கும். அமைதியில் ஒன்றுமேயில்லை. சிறைக் கூடங்களைப் போன்றிருக்கும் இது போன்ற பள்ளிகளில், என் போன்ற கிளர்ச்சியாளனுக்கு என்னதான் வேலை. எனது கிரியேட்டிவிட்டி சுத்தமாக செத்துவிடும் போல இருந்தது. ஆனால் என்றுமே என் உள்ளத்தை புரிந்து கொண்டவள் அந்த கடவுள்தான். அதெப்படி ஒரு வாரத்திற்கு ஒருவனை நிம்மதியாக விடலாம் என்று யோசித்தாரோ என்னவோ? ஆரம்பித்துவிட்டார் தனது குட்டி கலாட்டாவை

ஒரு வாரத்திற்குப் பின் தலைமையாசிரியர் பள்ளிக்கு வந்திருந்தார். அவரை பார்த்த பொழுது உடலில் சிறிது நிறம் ஏறியிருப்பது தெரிந்தது. கருமை நிறம் இன்னும் கருமையாக மாற முடியும் என்பதை நான் நம்ப மாட்டேன் என்று யாரும் கூறாதீர்கள். நான் சொல்கிறேன் நம்பித்தான் ஆக வேண்டும். அது உண்மைதான். மற்றபடி அவரது உடலில் எந்த விதமான அடியோ, சிராப்புகளோ இல்லை. ஆள் நன்றாகத்தான் இருந்தார். ஆசிரியர்கள் பேசிக் கொண்டதை வைத்து எனக்கு இந்த விஷயம் தெரிய வந்தது. அவர் விஷவாயுவால் தாக்கப்பட்டு ஒரு வாரமாக அரசு மருத்துவமனையில் சிறப்பு பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்தார் என்பது. சாக்கடையில் விழுந்ததை மறைத்து எவ்வளவு அழகாக சமாளித்திருக்கிறார் மனிதர்.

அது என்னவிதமான விஷவாயு என்பது எனக்குத்தான் தெரியும். தண்டனைகள் எல்லாம் திருந்துவதற்கு மட்டுமே கொடுக்கப்படுகிறது. ஆனால் திரு. தர்மராஜின் தலைக்குள் 4 மூலைகளிலும் தேடினாலும் கிடைக்காது அந்த மூளை. மூளையே இல்லாத ஒரு மனிதரை இந்த உலகின் எந்த ஒரு மூலையிலும் தேட வேண்டாம். தர்மராஜ் தனது தேடுதல் வேட்டையை துவங்கியிருந்தார். அவரை சாக்கடையில் தள்ளி விட்டவன். சிகப்பு கலர் சட்டை போட்டிருந்தானாம்.அவர் உடல் டைவ் அடித்துக் கொண்டிருக்கும் பொழுது அதைக் கவனித்தாராம். ஆனால் நான் சிவப்பு கலரில் ஜட்டி கூட போடப் போவதில்லை என்பது அவருக்கு எங்கே தெரியப் போகிறது.

தர்மராஜும், பால்பாண்டியும் இணைந்து அந்த கல்பிரிட்டை கண்டுபிடிக்கும் முயற்சியில் இறங்கியிருந்தார்கள். ஆம். எனக்கும் இனி அவன் யாரோதான். பாருங்கள் அவன் எவ்வளவு பெரிய தவறு செய்துவிட்டான். எங்கள் பள்ளி தலைமையாசிரியரையே பிடித்து சாக்கடையில் தள்ளிவிட்டான். எவ்வளவு பெரிய தவறு செய்து விட்டான். அவன் யாரோ ஒரு 3 வது மனிதன். அவனைப் பற்றி இனி எனக்கென்ன கவலை.

பால்பாண்டியும், தர்மராஜும் தங்களிடம் இல்லாத மூளையை இருப்பதாக நம்பி, அதை கசக்கி பிழிந்து, பள்ளியில் சந்தேகப்படும்படியாக 10 பேரை தேர்ந்தெடுத்தார்கள். அந்த 10 பேரில் யாரோ ஒருவன் தான் திரு. தர்மராஜை சாக்கடையில் பிடித்து தள்ளியிருக்க வேண்டும் என உறுதியாக நம்பினார்கள். துரதிஷ்டவசமாக அந்த 10 பேரில் நானும் ஒருவன். சிவாவும், ரமேசும் துணைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தார்கள். அவர்களுக்கே நன்றாக தெரிநிதிருக்கிறது. அநியாயமாக தண்டிக்கப்பட்ட ஒருவனின் மனம் சும்மா இருக்காது. அது வேதனையில் புரண்டு துடித்துக் கொண்டிருக்கும். அப்படிப்பட்ட மனது தன்னை சமாதானப்படுத்திக் கொள்ள வேண்டுமென்றால் பழி வாங்க துடிக்கும். அப்படி பழி வாங்க துடிக்கும் 10 பேரை குறிப்பாக நாங்கள் 3 பேரை பற்றி அந்த விநயம் மிகுந்தமனிதர்களுக்கு நன்றாகவே தெரிந்திருக்கிறது. சின்னஞ்சிறு வயதில் அதர்மத்தை இது போன்ற அநாகரிகமான விநயம் மிகுந்த மனிதர்களிடமின்றி வேறு யாரிடம் கற்றுக் கொள்ள முடியும்.

மனம் முதிர்ச்சியடையாத சிறுவர்கள் எங்களிடம் பழிவாங்க துடிக்கிற மனம் இருக்கிறதென்றால் அது இயல்பு. நாங்கள் மறைந்திருந்து பழி வாங்க முயற்சிக்கிறோம். ஆனால் இந்த முதிர்ச்சியடைந்த, பக்குவமடைந்த, நியாயத்தையும், நேர்மையையும், நீதியையும் கட்டிக்காத்து தூக்கி சுமக்கிற ஆசிரியர்கள் இருக்கிறார்களே, அவர்களைது பழி வாங்க துடிக்கிற மனதை எந்த கணக்கில் சேர்ப்பது. ஒரு சர்வாதிகார தலைவனைப் போல, தங்களது பழிவாங்கும் செயலை மேடையேற்றி அறங்கேற்றுவார்கள்.

ஒவ்வொரு மாணவனாக தனியறைக்கு அழைத்து சென்று விசாரித்துக் கொண்டிருந்தார்கள். நாங்கள் மூவரும் பின் வரிசையில் அமர்ந்திருந்தோம். சிறிது நேரம் கழித்து சிவா ஏதோ கெட்ட வாடை அடிப்பதாகக் கூறினான். அது வேறொன்றுமில்லை. முன்னாள் உட்கார்ந்திருந்தவன் ஒன்றுக்கு போய்விட்டான். அதோடு கண்ணீர் வேறு உடலெல்லாம் வியர்த்துவிட்டது அவனுக்கு. சைக்கிளுக்கு காற்றடிப்பது போல் மூச்சுவிட்டுக் கொண்டிருந்தான். சுருக்கமாக சொல்வதென்றால் தனது உடலிலுள்ள நீர்ச்சத்தை எல்லாம் வெளியேற்றிக் கொண்டிருந்தான். இது போன்ற மரண அவஸ்தையில் குழந்தைகளை தள்ளுவதுகொடுமையான விஷயமாகும். அதிகாரம் என்ற ஒன்று என் கையில் மட்டும் இருக்குமேயானால் குறைந்த பட்சம் 5 ஆண்டு சிறைத் தண்டனையாவது அளித்திருப்பேன். ஆனால் உலக சரித்திரத்தில் இதுவரை அவ்வாறு நிகழ்ந்ததேயில்லையே. அதிகாரம் எல்லாம் மனசாட்சி இல்லாத அடக்கி ஆள்பவர்களிடம் மட்டும் தானே கொட்டி கிடந்தது.

அவனுக்கு ஆறுதலாக இருக்குமேயென்று அருகிலுள்ள கேனிலிருந்து சிறிது தண்ணீர் பிடித்து கொடுத்தேன். அவன் அதையும் குடித்துவிட்டு உடனே…….. அதெப்படி குடித்தவுடன் வெளியேற்றுகிறான் என்பதுதான் புரியாத புதிராக இருந்தது. விசாரணைக்கு உள்ளே சென்றவன் என்னால் இதற்கு மேல் தொண்டை வெடிக்க கதற முடியாது என்பதை பறைசாற்றுவது போல கதறித் துடித்தான்.

அந்த அறைக்குள் குடுகுடுவென ஓடும் சப்தம் கேட்டது. அவனை ஓடவிட்டு துரத்தி துரத்தி அடிகெ;கிறார்கள் என்று நினைக்கிறேன். ஆண்டவன் தன் இறுதித் தீர்ப்பு நாளில் உலகின் கொடூரர்களையெல்லாம் வரிசைப்படுத்தி நிற்க வைப்பாரேயானால், ஹிட்லருக்கு பின்னே நிற்பது தர்மராஜாகாத்தான் இருக்கும். ஏனெனில் முன் இடத்தை பால்பாண்டி விட்டுக் கொடுக்க மாட்டார். அது அவருக்கு மட்டும்தான். எனக்கு மேலுலுகத்தில் ஒரு வேலை கிடைக்கும் என்றால், அந்த வேலையை நரகத்தில் போட்டுத் தருமாறு கெஞ்சிக் கேட்டுக் கொள்வேன் அந்த கடவுளிடம். ஏனெனில், ஒருவேளை மிகப்பெரிய எண்ணெய்ச் சட்டியில் கொடுங்கோலர்களைப் போட்டு வறுத்தெடுக்கும் இடத்தில் தர்மராஜீம், பால்பாண்டியும் வரலாம். எனக்கென்னவோ அந்த நிமிடத்தில் என் கடமையைச் செய்வதுதான் எனக்கு சொர்க்கமாக இருக்கும் என்று தோன்றுகிறது.

15 நிமிடங்களுக்குப் பிறகு

அறையின் உள்ளே இருந்து உயிருடன் அவன் வெளியே வந்து கொண்டிருந்தான். ஆம், அவனை உயிருடன் விட்டு விட்டார்கள். ஏனென்றால் அவன் தவறு செய்யவில்லை என்பது அவர்களது சிறு மூளைக்கு எட்டிவிட்டதாம். அதனால் அவனை விட்டு விட்டார்களாம். என்ன கொடுமை இது. இவர்களுக்கு புரிதல் என்பது இவ்வளவு மந்த வேகத்தில் நடக்கிறது. இப்பொழுது நன்றாக புரிந்துவிட்டது. இந்த 10 பேரையும் விசாரணை என்ற பெயரில் தண்டித்து விட்டால்,அதில் தவறு செய்தவன் எவனோ, அவனும் தண்டிக்கப்பட்டு விடுவான். இதன் மூலம் அவர்களது மனம் நிம்மதியடைந்துவிடும். என்ன ஒரு தந்திரம். என்ன ஒரு குள்ளநரித்தனம். ஓ….கடவுளே, குள்ளநரியிடம் வேறு நான் மன்னிப்பு கேட்க வேண்டும். குள்ளநரியுடன் இவர்களை ஒப்பிட்டு பேசி, குள்ளநரியை அசிங்கப்படுத்திவிட்டேனே. இது சத்தியமாக நியாயமே இல்லை. தவறிழைக்காத அப்பாவிகள் எல்லாம் தண்டிக்கப்படுவார்களே. என்னை ஒரு செகுவேராவாக மாற்றாமல் விட மாட்டார்கள் போல இவர்கள். இவர்களுக்கு பாடம் கற்பிக்க என் மணம் துடிக்கிறது. ஆனால், சத்ரியனாக இருப்பதைவிட சாணக்கியனாக இருப்பதே சிறந்தது என்பதை நினைத்து என்னை கட்டுப்படுத்திக் கொண்டேன்.

இரண்டாவதாக உட்கார்ந்திருந்தவனை உள்ளே அழைத்தார்கள். அதுவரை மயக்கம் போடாமல் நிமிர்ந்து உட்கார்ந்திருந்தவன் அப்பொழுதான் தலை சாய்ந்து கீழே விழுந்தான். அவன் அடித்த சிறுநீரின் மேலேயே மயங்கி விழுந்திருந்தான். இது சிரிப்பதற்காக அல்ல. தூக்கு தண்டனைக் கைதிகளுக்கும், கொலை செய்யப்படப் போகிற போர் கைதிகளுக்கும் மட்டுமே நேரக்கூடிய கொடுமை இது. அவன் மேல் எனக்கு பரிதாபம் பிறந்தது. அவன் மன்னிக்கப் பட்டான். அவனைத் தூக்கிச் சென்றார்கள்.

தூக்கிச் செல்லப்பட்ட அவனை சிவாவும், ரமேசும் குறுகுறுவென உற்று பார்த்தார்கள். அவர்களது முகத்தை உற்றுப் பார்க்கும் பொழுது மனதிற்குள்ளாக ஏதோ திட்டம் தீட்டுகிறார்கள் என்பது மட்டும் புரிந்து விட்டது. ஆனால் எனக்குப் புரியாமல் போய்விட்டது அவர்களுக்கும் யூரின் வரும் என்பது. அவர்களால் மயக்கம்போடுவது போல் நடிக்க முடியும் என்பது. ஒருவேளை அவர்களும் மன்னிக்கப்படுவார்கள் என்பது.

அந்த வெட்கங்கெட்ட மடையர்களுக்கு வீரத்தைப்பற்றி, துணிவை பற்றி எடுத்துக் கூற வேண்டியதாய் போய்விட்டது. வெள்ளையனுக்கு அஞ்சாத வீரபாண்டிய கட்டபொம்மனைப் பற்றி அவர்களுக்குக் கூறினேன். தூக்குக் கயிற்றுக்கு முத்தமிட்ட பகத்சிங்கை பற்றி எடுத்துக் கூறினேன். 10 நிமிட உபதேசத்தில் அவர்கள் கண்களில் ஏதோ ஒருவித ஒளி வீசியது. சரியாக சொல்லத் தெரியவில்லை. எனக்கு அப்படித்தான் தோன்றியது. வெள்ளையனாக இருந்தால் என்ன இந்த வௌங்காத பால்வாண்டியாக இருந்தாலா; என்ன? எல்லாம் ஒன்றுதான் என்று கூறினேன்.

அடுத்ததாக ரமேஷ் அழைக்கப்பட்டான். அவன் தோல்களை குலுக்கி கொண்டு ஒரு வீரனைப் போல் எழுந்து சென்றான். எனக்கு ஆச்சரியமாக போய்விட்டது. வார்த்தைகளுக்கு இவ்வளவு சக்தியா என்று. ஆனால் உள்ளே சென்றவன் ஏன் அபாயச் சங்கை எடுத்து ஊதினான் என்றுதான் புரியவில்லை. அந்த பள்ளியின் ஒவ்வொரு மூலையிலும் அவனது அலறல் ஒலி பட்டு எதிரொலித்தது. சென்ற தீபாவளி அன்று அவனிடம் நான் கூறினேன். நாயில் வாலில் பட்டாசை கட்டாதே, கட்டாதே என்று. எங்கே கேட்டான் அவன். அவனுக்கு என்னை போன்று நம்பிக்கையில்லை. முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும என்பதில். வாயில்லா ஜீவன்களிடம் கருணையோடு நடந்து கொள்ள வேண்டும் என்பதை இங்கில்லாமல் வேறு எங்கு கற்றுக் கொள்ளப் போகிறான் அவன்.

ரமேஷ் வெளியே வரும் பொழுது 16 வயதினிலே கமலைப் போல நடந்து வந்தான். கணுக்காலில் அடித்துவிட்டார்கள் போல. நான் சிரித்து விடக் கூடாது என்று சபதம் எடுத்துக் கொண்டது வீனாய் போய்விட்டது. ரமேஷ் இனிமேல் என் நண்பனாக இருப்பான என்று தெரியவில்லை.

அடுத்ததாக சிவா அழைக்கப்பட்டான். அவன் என்னை திரும்பி சந்தேகமாகப் பார்த்தான். அந்த கண்களில் தூரதேச கடற்பயணம் மேற்கொள்பவனின் துயரக் காட்சி தெரிந்தது. இதுவரை அடித்ததில் அந்த பிரம்பு உடைந்து போயிருந்தது. புதிதாக கொண்டுவரப்பட்ட பிரம்பில் திரு. தர்மராஜின் ஆணைப்படி விளக்கெண்ணை தடவப்பட்டுக் கொண்டிருந்தது. கறிக்கடைக்காரன் ஆட்டை வெட்டுவதற்கு முன் தனது கத்தியை கூர்தீட்டுவான். அதை அந்த ஆடு பார்த்துகொண்டிருக்கும். அதை போன்றதொரு பெரும் பேற்றை சிவா பெற்றிருந்தான். அவனது உடலெல்லாம் சில்லிட்டு போய்விட்டது. கண்களில் கண்ணீர் திரண்டு நின்றது. தர்மராஜ் என்ற கொலைவெறியனை அவன் சந்திக்க தயாரானான். சிவா தனது தந்திர திட்டத்தை மீண்டும் ஒருமுறை நியாபகப்படுத்திக் கொண்டான். அதுதான் அவனது ஒரே வழி. ஒரே தாரக மந்திரம். அது………. கத்த வேண்டும். தொண்டை கிழிய கத்த வேண்டும் எதிரிகள் மிரண்டு போகும்வரை கத்த வேண்டும். அவ்வளவுதான் நிச்சயம் உயிர் பிழைக்க வாய்ப்புண்டு.

தமிழகததின் பாரம்பரிய கலைகளுள் ஒன்றான சிலம்பத்தில் சிறப்பான வகையில் தேர்ச்சியடைந்திருந்த திரு. தர்மராஜ், தனது மிகையான தகுதியை சிவாவிடம் நிரூபித்துக் கொண்டிருந்தார் என்று சொன்னால் அது மிகையில்லை. சிவாவும் அச்சமின்றி தனது குரல் வலிமையை உலக்குக்கு நிரூபித்துக் காட்டினான். ஹிட்லரின் வதை முகாமில் எது போன்றதொரு காட்சி அறங்கேறியிருக்கும் என்கிற கற்பனைக்கு நிஜ உருவம் கொடுத்துக் கொண்டிருந்தார் திரு. தர்மராஜ். 20 நிமிட போர் ஒத்திகையை முடித்துக் கொண்டு சத்தியமாக உயிருடன் வந்து கொண்டிருந்தான். சாத்தியமில்லை தான் இருப்பினும் அது உண்மை. அவன் தர்மராஜ் எனும் கொலை வெறியனின் தாக்குதலில் இருந்து தப்பி பிழைத்து வந்து கொண்டிருந்தான்.

அடுத்ததாக சிறப்புமிக்க நான் அழைக்கப்பட்டேன். எனக்குத் தோன்றவில்லை. எனது பழிவாங்கும் படலத்தை அவர்கள் முடுக்கிவிடுவார்கள் என்று. பதிலுக்கு பதில் என்று அது போய்க்கொண்டே இருக்கும் போல.

உள்ளே சென்றபின் தான் தெரிந்தது. அவர்கள் இருவர் அல்ல மூவர் என்பது. ரவீந்திரனும் இணைந்து கொண்டு இவ்வளவு நேரம் மும்முனைத் தாக்குதல் நடத்தியிருக்கிறார்கள். அய்யோ நான் எவ்வளவு பெரிய தவறு செய்ய இருந்தேன். அந்த ரவீந்திரனை மன்னித்துவிடலாம் என்றல்லவா இருந்தேன்.

என் மேல் அவர்கள் மூவருமாக இணைந்து நட்த்திய தாக்குதல்களையும், அவர்கள் செய்த கொடுஞ்செயல்களையும் நான் சொல்லப் போவதில்லை. அது எனது தன் மானத்தை பாதிக்கக் கூடிய விஷயங்கள். சிறுவர்களை பொறுத்தவரை தன்மானமில்லாதவர்கள் என்று நினைப்பீர்களேயானால் நான் அதற்கு எதிரானவன். அவர்கள என்னை அடித்தார்கள். கேவலப்படுத்தினார்கள். இடையிடையே ஏதோ கேள்வி கேட்டார்கள். என்னிடம் மிகமிக அசிங்கமாக, மனிதத் தன்மையற்று நடந்து கொண்டார்கள். அநத ரவீந்தரனுக்குள் இவ்வளவு நாளாக ஒரு ஓல்டுமங்க் குடித்த கொரில்லா குரங்கு இருப்பது தெரியாமலே போய்விட்டது எனக்கு.

எனக்கு இப்பொழுது தெரிந்து கொள்ள வேண்டிய முக்கியமான ஒரு விஷயம உண்டு. அது, ஒரு ஹீரோகோண்டா பைக்கில் பிரேக் ஒயர் எங்கு இருக்கும் என்பதுதான். வாய்ப்பு கிடைத்தால் எல்லோரும் தங்கள் கொடூரத் தன்மையை காட்ட விரும்புகிறார்கள். அந்த ரவீந்திரன் மட்டும் என்ன மகாத்மாவை போலவா நடந்து கொள்ளப் போகிறார். பாடம் கற்பிப்பது என்று வந்துவிட்டால் யாராய் இருந்தால் தான் என்ன?. சிலர் தங்களது மோசமான பழக்க வழக்கங்களை மோசமாக பாதிக்கப்பட்ட பின்தான் கைவிடுவார்கள். 20, 22 வயதில் விட்டிருக்க வேண்டிய பழக்கம். வண்டியை ஸ்டார்ட் செய்தவுடன் ஆக்ஸிலேட்டரை முழுவதுமாக திருகிக் கொண்டு வேகமாக செல்லுவது என்பது இந்த 35 வயதில் அப்படி ஒன்றும் நல்ல பழக்கம் இல்லையே?. திரு. ரவீந்தரனுக்கு சில நல்ல பழக்க வழக்கங்களை சொல்லிக் கொடுக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது. என்று நினைக்கிறேன்.

அந்த பிரேக் ஒயர் அப்படி ஒன்றும் கடினமாக இலலை. குறைந்த பட்சம் ஒரு சாக்கடையில் விழுந்து எழுவாரேயானால், அது எனக்கு போதுமானது. இதில் எனக்கொன்றும் பெரிதாக வித்தியாசம் தெரியவில்லை. ஒரு பிரம்பால் அரைக்குள் ஓடவிட்டு அடிக்க கூடிய வாய்ப்பு எனக்கும் கிடைக்குமானால், நானும் அவ்வாறே திருப்தியடைந்து கொள்வேன். அந்த பெரிய மனிதர்களைப் போல் அல்லாமல் சற்று இரக்க சிந்தனையுடனும், மன்னிக்கும் தன்மையுடனும் நடந்து கொள்வேன். சிறிது வயது முதிர்வால் செய்யும் செயலில் ஏதேனும் புனிதம் வந்து ஒட்டிக் கொள்ளுமா? நியாயம், சரி என்பதெல்லாம் எந்த வயதினரானாலும் ஒன்றாகத்தானே இருக்க வேண்டும். இந்த விஷயங்களில் ஏதேனும் புதிய இலக்கணம் வகுக்கப்பட்டிருக்கிறதா?

ஒருவித சரவாதிகாரத் தன்மையோடு நாங்கள் செய்வதுதான் சரி என்கிற தோரணையில், தங்கள் பதவி மற்றும் அதிகாரத்தில் துணையோடு, அதுவும் எதிர்த்து தாக்க துணிவோ? சக்தியோ? இல்லாத சிறுவர்களிடம் தங்களது சொந்த பழிவாங்கும் செயலை நிறைவேற்றும் அசிங்கத்தை யார்தான் கவனிக்கிறார்கள். நாங்கள் புனித மகாத்மாக்கள், நேர்மையின் சிகரங்கள், கல்வி கற்பிக்கும் உயரிய தொழிலை மேற்கொண்டிருப்பவர்கள் போன்ற சற்றும் பொருத்தமில்லாத, போலியான முகமூடிகளை போட்டுக் கொண்டு சமுதாயத்தில் தாங்கள் மிக நல்லவர்கள் என்கிற தோரணையோடு முகத்தை வைத்துக் கொண்டு வலம் வரும் இவர்களின் உண்மையான உள் கொடூரங்களைப் பற்றி யார் புரிந்து கொள்கிறார்கள். குறைந்தபட்சம் ஒரு பாதிக்கப்பட்டவனின் புலம்பல்கள் கூட வன்மையாக கண்டிக்கத்தக்க, சமுதாயத்தால் ஏற்றுக் கொள்ள முடியாத ஒருவித அஜீரணமான விஷயமாகவே இருக்கிறது.

சிறுவர்கள் அடங்கிவாழ கற்றுக்கொள்ள வேண்டும். மரியாதை என்கிற பதத்திற்கு இவன்தான் பொருள் என்பது போல் நடந்து கொள்ள வேண்டும். சற்றும் சகிக்க முடியாத, மற்றும் புரிந்து கொள்ளவே முடியாத இந்த கொள்கையை (விரும்பாவிட்டாலும்) ஏற்றுக் கொள்பவனாக, அதாவது ஒரு ஆசிரியர் உஙகளை அடிப்பாரேயானால் அது உங்கள் நன்மைக்கே, உங்களை வாய்க்கு வந்தபடி திட்டுவாரேயானால் அதுவும் உங்கள் நன்மைக்கே, அவரின் வன்முறைகள் எல்லாம் உங்கள் நன்மைக்கே என்கிற நவீன கொள்கை இருக்கிறதே. நான் அரசியலை வேறு எங்கு போய் கற்றுக் கொள்ள வேண்டும். இது ஒரு அழகான அரசியல் சாணக்கியத்தனம். ஒரு பிற்கால அரசியல்வாதிக்கு மிகவும் உதவக்கூடிய விஷயம். உன் வன்முறைகளுக்கும், நேர்மையற்ற தன்மைக்கும் சாயம் பூசிவிடு. ஆம் மிகச் சிறந்த வார்த்தைகள். மக்கள் ஏமாந்து விடுவார்கள். அவர்கள் வேறு எதற்குத்தான் இருக்கிறார்கள். சிறிது ஏமாற்றவாவது பயன்படுகிறார்களே. அவர்கள் ஆழ் மனதுள் இதைப் பதிய வைத்து விடலாம். அதாவது “இவையெல்லாம் உங்கள் நன்மைக்கே” எனது வன்முறைகளெல்லாம் உங்களை காப்பாற்றவே. எனது வக்கிரங்கள் எல்லாம் உங்கள் நல்வாழ்க்கைக்கே. எனது தகாத செயல்கள் எல்லாம் உங்கள் வாழ்க்கையை வளப்படுத்தவே. சாயம் பூசும் கலைதான் எவ்வளவு அழகானது. நான் முட்டாளாக்கப்படுவதை, என்னையே விரும்பி ஏற்றுக் கொள்ளச்செய்யும் அருமையான கலை. என்னை பொருத்தவரை இது வன்முறையின் உச்சம். அதுவும் சிறுவர்களிடம் இது மிக அதிகம்.

இதுவும் ஒருவித ரேக்கிங்கே. கல்லூரியில் முதலாமாண்டு மாணவனை மூன்றாமாண்டு மாணவன் தனது வன்முறை செயல்கள் மூலம் ஆக்கிரமிக்க முயலும் செயலுக்கும், ஒரு உத்தம ஆசிரியரின் இது போன்ற செயலுக்கும் பெரிதாக எந்த வித்தியாசமும் இல்லை. ஆனால் கல்லூரி மாணவர்கள் மட்டும் தனியாக தண்டிக்கப்படுகிறார்கள். ஆம் நானும் இவ்வாறு ஏக்கம் கொள்ள செய்யப்படுகிறேன். நானும் ஒரு ஆசிரியரைப் போல, ஒரு தலைமையாசிரியரைப் போல, எனது விருப்பப்படி, சுதந்திரமாக, எனது ஈகோவை, பூரணமாக திருப்தி செய்துகொள்வது எப்போது. நானும் எப்பொழுது ஒரு பழிவாங்கும் செயலை சுதந்திரமாக எந்த பயமுமின்றி வௌப்படையாக, அதுவும் இந்த சமுதாயத்தின் முழு ஒப்புதலோடு செய்த கொள்வது. எனக்கு இன்னும் அது போன்றதொரு தகுதி வரவில்லையோ? நானும் அதற்கு ஒரு ஆசிரியராக வேண்டுமோ?

தெளிவாக சொல்லிக் கொள்ளப்பட வேண்டிய விஷயம் இது ஒன்றுதான். எனது பழிவாங்கும் செயலில் எனக்கு எந்தவித தாழ்வு மனப்பான்மையோ? சுய காழ்ப்புணர்ச்சியோ இல்லாமல் இருக்கிறதென்றால் அதற்குரிய உளவியல் காரணங்களை வேறு எங்கும் தேட வேண்டிய அவசியம் இல்லை. அதற்கு ஒரு ஆசிரியரே போதுமானவராக இருக்கிறார். அவர் என்னை தாழ்வு மனப்பான்மை கொள்ள விடுவதில்லை. அவர் எனது காழ்ப்புணர்ச்சிகளுக்கு பதில் சொல்லிவிடுகிறார். ஆம் அவர் என்னை பழிவாங்க தூண்டும் எல்லா நியாயமான விஷயங்களுக்கும் ஒரு முன்னுதாரணமாக இருக்கிறார்.
ljsurya@gmail.com

Series Navigation

சூர்யா லட்சுமிநாராயணன்

சூர்யா லட்சுமிநாராயணன்