பள்ளத்தாக்கு (முடிவு)

This entry is part [part not set] of 26 in the series 20100115_Issue

ஜேம்ஸ் லாஸ்டன் (இங்கிலாந்து) தமிழில் எஸ். ஷங்கரநாராயணன்



பேச்சுக்கொடுக்க அவனுக்கு ஆர்வமே இல்லை. அந்த இடத்தில் நான் வியாபாரம் பேசியது அவனுக்குப் பிடிக்கவில்லையோ என நினைத்தேன். சூய்லரும், ஃபயியும் கிளம்பிப் போனார்கள், ஆனால் ரிக் நிதானமாய்க் குடித்தபடி அங்கேயே இருந்தான். அவன் அங்கிருந்த பெண்களை நடனமாடச் சொன்னான். அது அப்படியான பார்ட்டி அல்ல. என்றாலும் ஒண்ணு ரெண்டு பேர் ஆடினார்கள் சும்மா அவனை உற்சாகப் படுத்த.

அடுத்த ராத்திரி, காலை ரெண்டு மணிக்கு அவனது வீட்டிலிருந்து துப்பாக்கிச் சத்தம் கேட்டது. டுமீல். அடுத்தடுத்த பல ராத்திரிகளிலும் கேட்டவாறிருந்தது. என்னாச்சி? நான் அவனைத் தொலைபேசியில் கூப்பிட்டேன் ஒரு பதிவு செய்யப்பட்ட வாசகம் போல அவன் பேசினான். ”ஹலோ, இது வான்டர்பெக் தேவிடியா இல்லம், மற்றும் கருச்சிதைவு மையம்.” உடனே போன் வைக்கப் பட்டு விட்டது. சில நாட்கள் கழிந்திருக்கும். ரயில் நிலையத்திலிருந்து நான் வீடு திரும்புகிறேன், என் வாசல் புல்தரையில் ஒரு கட்டு விறகு. நான் சொல்லியிருந்தேன் என்றாலும், முதலில் விலை பேசுவேன். எப்ப கொண்டுவருவேன் என்று அவன் சொல்வான். வந்து அதை உள்ளே அடுக்கிவிட்டுப் போவான். நான் அவனைத் தொலைபேசியில் அழைத்துப் பேசினேன். அவன்பாட்டுக்கு இப்படி இறக்கிப் போட்டுவிட்டுப் போனதையிட்டு அவன் வருத்தந் தெரிவிக்கவில்லை. மட்டுமல்ல 120 டாலர் விலை சொன்னான்.

”திடீர்னு என்னப்பா எக்குத்தப்பா விலை சொல்றே?”

”அதான் விலை.”

நானே உள்ளே அடுக்கினேன். அதில் விறகு அளவும் கம்மி. முழு எடை அது இருக்கவே இருக்காது. மறுநாள் அவனுக்குப் பணந் தரப்போனபோது அதை அவனிடம் சொல்லவும் செய்தேன். வாசலில் கல்லடுப்புப் பக்கம் ஃபயியுடன் வாசலில் அவன் பேசிக் கொண்டிருந்தான் அப்போது.

”அதான் முழு எடை. நான் நிறுத்துதான் தந்தேன்…”

அர்ஷினுடன் சில நாட்கள் கழித்துப் பேசியபோதும், ரிக்கின் மச்சான் ஒருத்தன் தபால் அலுவலகத்தில் வேலை பார்க்கிறான், அவனிடமிருந்து திரட்டிய சில தகவல்கள் படியும் ஒரு மாதத்தில் விஷயத்தை நான் ஒருவாறு புரிந்துகொள்ள முடிந்தது. அந்த சூய்லர், ரிக்கின் நண்பனே அல்ல, ஃபயியின் முன்னாள் காதலன் அவன். அவர்கள் இடையேயான உறவை அவன் எங்களிடம் காட்டிக் கொள்ளவேயில்லை. எதோ போதைப் பொருள் விற்றதில் மாட்டி பதினெட்டு மாசம் ஜேயில் வாசம் முடித்து அவன் திரும்பி வந்தான், ரிக் கூடத் தங்கினான்… இவ்வளவே நாங்கள் அறிந்தது. அந்தப் பார்ட்டிக்கு அடுத்த நாள் ஃபயி அவனுடன் ஓடிப் போனாள். அந்த நாலு பிள்ளைகளையும் ரிக்குடன் விட்டுவிட்டாள். அஞ்சு இரவுகள் அவள் திரும்பி வரவேயில்லை. அந்த அஞ்சு ராத்திரிகளில்தான் அவன் வீட்டில் வேட்டுச் சத்தம் கேட்டது. அவள் திரும்பி வந்தாள், சண்டை, சமாதானம், திரும்ப அவள் ஓடிப் போனாள். ஒருதரம், ரெண்டுதரம், மூணுமாச்சி. தபார், நீ வெளிய தங்கிக்க, அதான் நல்லது, என்றான் ரிக். பிள்ளையக் கூட்டிப்போணும்னா போ, இல்ல விட்டுத் தலைமுழுகிட்டுப் போ, ஆனா இங்க நிக்காதே இனி… கிளம்புடி. ஃபயிக்கு வந்தது கோபம், வெறி. சும்மாவே ஆடும், கொட்டடிச்சா விடுமா? ஃபயி அல்ல அவள் பேயி! மேஜை நாற்காலி தட்டு கரண்டி எல்லாம் வீசி யெறிந்து அழிச்சாட்டியம் பண்ணினாள். பொறுக்க முடியாமல் பெரிய குழந்தை ஒன்று போலிசைக் கூப்பிட்டு விட்டது. ரிக் அவசரமாய் வெளியே வந்து துப்பாக்கியைப் பதுக்கி வைத்தான். இங்கே துப்பாக்கி சார்ந்த வன்முறை இல்லை, என போலிசுக்குக் காட்டிக் கொள்ள அவன் பயத்துடன் முயன்றான். (அப்படியாய் அவன் மச்சான் என்னிடம் சொன்னான்.) அவர்கள் வந்தபோது ஃபயி இ.பூ. பாலைக் கு. என்ற தினுசில் அடங்கியிருந்தாள். ரிக் அவளை, அவள் குழந்தைகளைக் கொன்றுவிட்டு தானும் உயிரை மாய்த்துக் கொள்வதாகக் கத்தினான், என்றாள். அதை அப்படியே நம்பி, ஆன்டர்சன்வில் மனநல மருத்துவமனைக்கு ரிக்கை ஒரு வண்டியில் உடனே போலிஸ் அனுப்பி வைத்தது. ஒருவாரம் அவன் நடவடிக்கையைக் கண்காணிக்க முடிவு செய்தது போலிஸ். அவன் திரும்பி வருமுன் ஃபயி காப்பு ஆணையை வாங்கியிருந்தாள். ரிக் அந்த வீட்டுக்கு ஒரு மைல் சுற்றளவுக்கு நடமாடக் கூடாது…

அடுத்த சில நாட்கள் ஒரே குழப்படி. யாருக்கும் உண்மை நிலவரம் தெரியவில்லை. தனது சொந்தக்காரி ஒருத்தியின் வீட்டில் ரிக் இருந்தான் என்பது மாத்திரம் எல்லாருக்கும் தெரிந்தது. அவள் எஸ்தர். அவனைத் தத்தெடுத்த தாய் அவள் என்று ரிக் சொல்கிறதுண்டு. அவன் அம்மா அவனது சிறு வயதிலேயே மறைந்துவிட்டாள், என்பதில் அவனை எஸ்தர் ஏற்றுக் கொண்டாள். ரிக் பாவம் ஆளே உடைந்து போனான். கடும் குடி. வேலைதேடி அலைந்து கொண்டிருந்தான். இத்தனை நெருக்கடியிலும் குடும்பத்தைப் பராமரிக்கிற கடமையை அவன் உதற நினைக்கவேயில்லை, அவள் அவனை உள்ளே அனுமதிக்கா விட்டாலும் தன் கடமையைத் தான் செய்ய வேண்டும் என்று நினைத்தான். சனிக்கிழமை ‘நன்றிக் கூட்டம்’ முடிந்த ஜோரில் யாரும் வேலை ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். அவன் ஏற்றுக் கொண்டான். ஒரு தோட்டக்காரரிடம் நகரத்தில் மர மராமத்து வேலைகள் இருந்தன. அதற்கு அடுத்தநாள் அர்ஷின் மூலம் அந்த விபத்தை நாங்கள் அறிந்தோம். ரிக் இறந்து விட்டான் தெரியுமா, என்று கேட்டார் அர்ஷின். மர உச்சியில் கயிறு ஒரு சுருக்காய் இறுகி இறந்து போனான். ஒரு மணிநேரம் கழித்து, தான் கேள்விப்பட்டது சரி, என திரும்பவும் அவர் தெரிவித்தார். ஒரு பெரும்தண்டை குறித்த திசையில் வீழ்த்துவதற்காக தரையோடு கயிற்றால் பிணைத்திருந்தது. எதிர்பாராமல் சுழன்றடித்த காற்றில் அது பிடுங்கிக்கொண்டதில் அவன் மார்பிலும் கழுத்திலும் கயிறு சுற்றிக்கொண்டு இறுகி… எழுபதடி உயரத்தில்…. தீயணைப்பு ஏணிபோட்டு எட்ட முடியவில்லை. மடிப்பு ஏணியை வரவழைத்தார்கள். உள்ளூர் கான்டிராக்டர் ஒருத்தனிடம் இருந்தது, அவனே ரிக்கை நெருங்கி ஆளைக் கீழிறக்க முடிந்தது. உடம்பே நீலம் பாரித்திருந்தது. தலைநகரம் அல்பானியில் இருந்து அவசர உதவி என்று கேட்டிருந்த ஹெலிகாப்டரை, தேவையில்லை என்று திருப்பி யனுப்பினார்கள்.

நகரத்தில் பைன்காட்டு அஞ்சலியகத்தில் இறுதிச் சடங்குகள். நாங்கள் போகுமுன்பே அந்தப் பக்கம் ஏகப்பட்ட சனம். வாலிபர் வட்டம், பெரியவர்கள், பைக்காரர்கள், படித்தவர்கள், பணக்காரர்கள்… எல்லாரிடமும் பாவனையில்லாத சோகம். பார்வையாளர் பதிவேட்டில் கையெழுத்திட்டு விட்டு உள்ளே போனோம். உரத்த ஆவேசக் குரல்கள், கோபமும் கண்ணீருமான இரைச்சல்கள். அவனது கடைசி காலம் பற்றி ஏற்கனவே வெவ்வேறு வதந்திகள். ஒருத்தருக்கு ஒருத்தர் பேசிக் கொண்டது, விசாரித்து அறிந்து கொண்டது என நிஜங்கள். ஈறைப் பேனாக்கி பேனைப் பெருமாளாக்கும் திரிபுகள். முன் பெஞ்சில் பெரிய குழந்தைகள் ரெண்டு பேர் அமர்ந்திருந்தார்கள்… முதன்முதலில் வான்டர்பெக் ஏத்தத்தில் பார்த்த அதேபோல பீதியடித்த முகங்கள். அடுத்த பக்கம் ரிக்கின் சொந்தக்காரர்கள். கையை முட்டிக்குக் கொடுத்தபடி அசையாமல் கொள்ளாமல் ரிக்கின் அப்பா. பார்க்க முதுகு மாத்திரம் தெரிந்தது. அசைவே இல்லை.

பக்கவாட்டு அறையில் இருந்து ஃபயி வந்தாள். கூட இரண்டு சிறு பிள்ளைகள். மூத்த குழந்தைகள் இடையே சேர்ந்து நின்றுகொண்டாள், சடங்குகளைப் பேணுமுகமாக. முகம் பேயறைந்தாப் போல இருந்தது. சோகத்தினாலா, குற்ற உணர்ச்சியினாலா, இனியான வாழ்க்கை பற்றிய பயத்தினாலா… சொல்ல முடியாது. நாலு குழந்தைகள் மத்தியிலேயே கூட அவள் தனியாளாய், சம்பந்தமேயில்லாதவள் போலத்தான் தெரிந்தாள்.

பாதிரியார் ஒருத்தர் உள்ளே வந்தார். எங்கள் எல்லாரையும் எழுந்துகொள்ளச் சொன்னார். அவர் பைபிள் வாசித்ததும், நாங்கள் ஒரு கீதம் பாடியதும் ஆனபின், எல்லாரும் ரிக்கைப் பற்றிப் பேச முன்வரிசைக்கு எழுந்து வர ஆரம்பித்தார்கள். அவனது பள்ளிக்கால நிகழ்ச்சிகள், மீன்பிடி பருவம், ஒருதடவை வாசல்வரை கரடி ஒன்று வந்து அவனைத் துரத்தியடித்த கதை… வெள்ளியாய் நரைத்த, நெட்டையான ஒரு பாட்டி எழுந்தாள். நான் புரிந்துகொண்டேன். அவள் எஸ்தர். ரிக் சாகுமுன் அவளுடன் நீண்ட நேரம் பேசிக் கொண்டிருந்தான்.

”என்னவோ அவனுக்குப் பேசணும்னு தோணியிருக்குது பாருங்க…” என்றாள் அவள். ”இதை அவனது கடைசி ஆசையா நாம நினைச்சிக்கலாம்…” சர்ச்சில் எல்லாரும் அவளையே கண்கொட்டாமல் பார்த்தார்கள். ”இன்னமும் தான் ஃபயியை நேசிக்கிறதாக அவன் சொல்லிக் கொண்டிருந்தான்…”

”அவளோடு இன்னொரு குழந்தை பெத்துக்க ஆசை அவனுக்கு. இந்தவாட்டி ஒரு மகன்…” அவள் கொஞ்ச நேரம் மௌனம் காத்தாள். பின் முடித்தாள். ”ஆக… ஃபயி, நீதான் ¢அவனது விதவை, அந்த கௌரவம் உனக்குத்தான். என் செல்லம் நீ…”

பளீரென்று எனக்குள் வெளிச்சம் பாய்ச்சியது அந்த வார்த்தைகள். எல்லாரையும் போலவே நானும், அவன் அவளது துர்நடத்தை காரணமாகவே தற்கொலை செய்து கொண்டிருக்கக் கூடும் என்று மனசுள் நினைத்திருப்பேன். இப்பக்கூட எனக்கு அது தற்கொலைதானோ என்கிற சம்சயம் உண்டுதான். ஆனாலும் அந்தப் பாட்டியின் மறைமுகமான பரிவும் வேண்டுகோளும் உதற முடியாதவை. கல்யாணம் ஆன நாளில் ஃபயியின் அந்த முகபாவம் இப்போது நினைவில் வருகிறது. பின்கோடையின் மலைப்பசுமையை வெறித்த அவளது பார்வை… காரியப்புலி, சுயநலப்பிசாசு அவள் என்பதையும் மீறி வேறெதாவது வக்ரம் அவள் அவனைப் போட்டுப் பந்தாடி வந்ததில் இருந்ததா தெரியாது.

சடங்குகள் முடிந்தன. நேரமாகி விட்டதாலா, இல்லை எல்லாருமே அது முடிந்துவிட்டதாக நினைத்ததாலா தெரியாது. நாங்கள் வந்ததை விட, திரும்பிப் போவதை சம்பிரதாயப் படுத்தியிருந்தது. ஒவ்வொருவராக ஒரே வரிசையில் அந்த சவப்பெட்டியைத் தாண்டிப் போவதாய் இருந்தது. பெட்டி திறந்திருந்தது. யாராலும் பார்க்காமல் தாண்டிப் போக முடியாது. வெள்ளை சாடின் துணியிட்ட மூடியில் ரிப்பனிட்ட உறைகள். அதில் ‘பிரியமான அப்பா’ என குழந்தை எழுத்துகள். ஓரடி முன்னால் வந்தேன். உரசினாப்போல எட்டிப் பார்த்தேன். ஆ, கிடந்தான் அவன். மூடிய கண்கள். அழகாகக் கத்தரித்த தாடி. கன்னமும் உதடுகளும் சரியாய் அரிதாரம் பூசாமல். வெளிறிய கரங்களில் ஒரு வான்கோழியின் இறகு. உற்றுப் பார்த்தேன். இந்த உடல், முகம் கை கால் என எல்லாம்… நான் ஐந்து வருடங்களாக அறிந்த மனிதனுடையவை. வாழ்க்கையின் ஆக சோகமான நேரத்திலும் அவனிடம் நான் ஒரு குறும்பான சிரிப்பைப் பார்த்திருக்கிறேன். தன் அதிர்ஷ்டத்தைத் தானே கேலி செய்துகொள்ளும் சிரிப்பு அது. தாக்குப் பிடித்தான் அவன், ஒரு கோணத்தில் எல்லாமே போச்சு என்றிருந்த நிலையில், எல்லாமே சரியா இருக்கிறதாக தெம்பு, நம்பிக்கை அவனிடம் இருந்தது.

அதெல்லாம் கழிந்த கதை. எனக்குத் தெரிந்தவரை, நாமெல்லாம் அறிந்தவரை… அவனது அந்த மாறாப் புன்னகை… அதில் நான் கண்டுகொண்ட அந்த பந்தம் விலகிய புளியோட்டு பாவனை, பொறுமை, எதனிலும் தலைகொடுத்து ஏற்றுக்கொள்கிற அவனது பக்குவம். கடைசியில் காற்றிடம் உயிரைக் கொடுத்துவிட்டான் அவன். அவனது புன்னகையின் அடிநாதமாய் அவன் வாழ்க்கை நிகழ்ச்சிகளை அசைபோட முடிந்தது எனக்கு இப்போது. ஃபயியின் அந்தக் கல்யாண மேடையிலான முகக் குறிப்பு. ஒரு பொதுவான துக்கம் தாண்டிய நிலை அது. கல்யாண சந்தோஷமே கூட, பழசை மறக்கவைக்க முடியாத அவளது இயல்பு, அதை எதிர்காலம் வரை மனசிலேயே வைத்துக் கெடுத்துக் கொண்டது… தன்னையே வருத்திக் கொண்டதால் அவள் திரும்பத் திரும்ப அவனை எத்தியும் எகிறியும் அவமதித்தாளா? சரியாகத் தெரியவில்லை. எல்லா உதவிகளையும் அவனிடம் வாங்கிக்கொண்டு அவனை உதாசினம் செய்தாள். சூய்லருக்கு 15 வயதாகையில் அவளுக்கு 11. ஃபயியும் அநாதைதான். அவள் வளர்ந்த இடத்தில் அவளது உடன்பிறவா அண்ணனாக எல்லார் முன்னாலும் அறியப் பட்டிருக்கிறான் அவன். (அர்ஷின்தான் விசாரித்து வந்து சொன்ன கதை.) ஆண்டர்சன்வில் சேரியில், சந்து பொந்தில், தொடர்ந்த பல வருடங்களில், அவர்கள் சேர்ந்தே வாழ்கிறதாய் ஆகிப்போகையில்…. என்ன சொல்ல, அவன் அவளைப் பயன்படுத்திக் கொண்டானா? கற்பழித்து விட்டனா? எந்த வார்த்தை சரி? தேவைகள் ஆசைகள். இழப்பின் ஏக்கத் தகிப்பு. வெறுப்பு. இதை மீறிப்பார்க்கும், ஒழுக்கத்தை உதறும் உள்மன ஆவேசம்… இது சரியில்லைதான் என்கிற சுயபயம். யார் சொல்லியும் கேட்காத, யாரையும் சொல்லவிடாத முரண்டு. பிடிவாதம். திமிர். அடுத்தாளைத் தூக்கியெறிதல். எதற்கும் யாரோடும் நெருங்கிப் பழகாமல் விலகியே இருத்தல். மனசில் கள்ளத்துடன் மூடி வைத்தல். சூய்லருக்கு இடையே ரிக், இவன் இடைஞ்சல் என்கிற கணக்கு. அவன் மீண்டும் வரும்வரை ஆதரவு நாடி அவள் ரிக்கிடம் காட்டிய இணக்கம், அவனைக் காதலில் அவளால் வீழ்த்த முடிந்த லாவகம். சாகசக்காரிதான்! அடுத்த ரெண்டு மாசம் அவள் ரிக்கின் வீட்டில்தான் இருந்தாள். நான் சட்டை பண்ணவில்லை அவளை. அர்ஷின்தான் சொன்னார். சூய்லர் ராவோடு ராவாக வந்துவிட்டு காலை விடியுமுன் கிளம்பிப் போய்விடுகிறான். வெளிய தெரியவே இல்லை அதெல்லாம். பெப்ருவரியில் நாங்கள் வெளியூர் போய்விட்டோம். திரும்பி வந்தபோது ரிக் வீட்டின் வெளியே ‘விற்பனைக்கு’ பலகை. வீட்டை அப்படியே விட்டுவிட்டுப் போய்விட்டாள் ஃபயி. அயோவா போனாள் என்று கேள்வி. அவளுக்கு அங்கே சொந்தக்காரர்கள் இருந்தார்கள். ரிக்கின் அப்பா அந்த வீட்டை விற்றுவிடத் தீர்மானித்தார். உடனே அது விற்றும் போயிற்று. ஒரு நியூ யார்க் தம்பதி, வார இறதிகளில் அவர்கள் வந்து போக வசதி என்று வாங்கிப் போட்டார்கள்.

சில நாட்கள் கழித்து தெருவில் கோரா சேஸ்டைன் குதிரையில் வந்தாள். அவளோடு நான் பேச்சுக் கொடுத்தேன். ரிக் இங்கயும் அங்கயுமா .ஒரே இரைச்சலா ஒடியாடிட்டிருப்பான் லாரில… இப்ப நம்ம பள்ளத்தாக்கே ஜிலோன்னு ஆயிட்டது… என்றேன். வெறுமையாய் என்னை அவள் பார்த்தாள். வயசானதால் எல்லாம் மறந்துட்டாளா? மெல்ல இனிமையான குரலில் அவள் சொன்னாள். ”என் ஆயுசுல ரிக்கோட வாழ்க்கையைத் தான் பிறப்பு முதல் கடைசி நிமிஷம்வரை ஒருசேரப் பார்த்தேன்… அவன் பிறந்தப்ப நான் இங்கதான் இருந்தேன். அவன் இப்ப இல்லை, நான் இன்னமும் இருக்கேன். இது ஒரு முக்கியமான விஷயம்தான் இல்லையா?”

தலையாட்டி வைத்தேன். சாட்டையைச் சொடுக்கி அவள் குதிரையைக் கிளப்பிப் போனாள்.

பின்மதியத்தில் நான் ஒரு உலா போய்வருகிறது உண்டு. தெரு மேடு கடைசிவரை ஒரு எட்டு. இம்முறை எதோ படபடப்பு. ரிக்கின் வாழ்க்கை, அந்த குதிரைக்காரி சொல்வது போல… வெந்ததைத் தின்னு விதி வந்ததும் கிளம்பிப்போற ஜாதியா அவன்… அத்தனை சாதாரணமானவனா? காட்டின் உள்ளே ஒற்றையடிப் பாதை வழியே போனேன். அந்தப் பகுதிகளிலெல்லாம் நான் நடமாடியே வருடக்கணக்கில் இருக்கும். சேறும் சகதியுமாய்க் கொளகொளத்துக் கிடந்தது பூமி. பூக்களில் பனித் துளி. மஞ்சள் நட்சத்திரங்கள் மங்கலாய். மேபிள், ஓக் மரத் தளிர்கள் பாதையை மறைத்திருந்தன, மேல்பக்கமிருந்து கசிந்து வந்த ஒளியில் விதவிதமான பசுமைச் சிதறல். மேடு உள்ப்பக்கமாக நீண்டு போனது. ஒரு துருப்பிடித்த கிராதிக் கதவு. அரசாங்க நிலம், எனப் பலகை. உள்ளே குண்டும் குழியுமாய்க் கிடந்தது. அதன் வடக்கால ஸ்புரூஸ் பள்ளத்தாக்கு.

இந்தப் பக்கம் வேறு ஜாதி மர வரிசை. ஹெம்லாக், பைன் வகைகள். இடைப்பட்டு கடும் பச்சை இலையுடன் குற்று மரங்கள். ஒல்லியான குச்சி குச்சியான கொடிகள் அந்த இலைச் சுருள்களூடே, ஸ்ட்ராவும் தம்ளரும் போல. தோளுக்கு மேல்பட்ட அளவில் அவை மிச்சமிருந்தன, வரையாடுகள் கீழ்ப்பகுதிகளை எட்டிய வரையில் மேய்ந்துவிட்டுப் போயிருந்தன. விசித்திரக் காட்சி, சலூனில் கிராப் வெட்டிக் கொண்டு வந்தாப் போல! இந்தச் செடிகொடிகளைப் பற்றியெல்லாம் ரிக் என்னுடன் கதையடித்திருக்கிறான்…. சீரற்ற அந்தப் பாதையின் முடிவில் ஒரு கருந்திட்டு கண்ணில் தட்டியது. செடிகொடிகளின் ஊடே, அது, யாரோ மனிதன் கட்டியதுதான். பாதையை விலகி அதை நோக்கிப் போனேன். அந்தப் பகுதியை சிறிது ஒதுக்கிச் சீராக்கி ஒரு மரக் குடில் கட்டியிருந்தது. அஞ்சடி உயரச் சுவர்கள். ஓரங்களை இறுக்கி அழகாக முடுக்கியிருந்தான். மேல்கூரை குச்சிகளாலும் இலைதழைகளாலும் மூடப்பட்டிருந்தது. கட்டைகளை இணைத்துச் செய்த வாசல்கதவு. அதைத் தள்ளித் திறந்தபோது ஒளிகசிகிற உள்வளாகம். ஆ இதுதான் ரிக் தனக்காகக் கட்டிக்கொண்ட குடில், எப்பவாவது வந்து போக அவனுக்கென்று ஒரு ஜாகை!

கூரையின் பின்பகுதிச் சுவரில் மேலே இடைவெளி வழியே வெளிவளாக ஸ்புரூஸ் மலர்கள் கண்ணில் பட்டன. தரைப்புழுதியில் ஒருபக்கமாக பைன் மரத்தில் செய்த ஸ்டூல். பக்கச் சுவரில் இடுப்புசர மர அலமாரி. ஒரு மோல்சன் பான டப்பி திறக்கப்படாமல் அங்கே. பக்கத்தில் ஏனோதானோவென்று களிமண்ணில் பிடித்த ஒரு சாம்பல்கிண்ணம்.

அந்த ஸ்டூலில் உட்கார்ந்தேன். வாழ்வின் இறுக்கத்தில் விடுபட்டு ஆசுவாசம் கொள்ள நினைத்தால் அது நல்ல இடம் தான். அலமாரியாக மட்டுமல்ல, ஒரு எழுதுமேஜை எனவும் அந்த மரவேலைப்பாடு பயன்படலாம்… அது… அந்தச் சாம்பல்கிண்ணம், அதுகூட சாம்பல் கொட்ட அல்ல. அதைக் கையில் எடுத்து கவனமாய்ப் பார்த்தேன். அது ஒரு காய்ந்த களிமண் கட்டி. அதில் குழிவாய் ஆ, ஒரு பெரிய மிருகத்தின் பாதப் பதிவு.

என் தலை கிறுகிறுத்தது. கட்டுக்கதைகளை நம்பக் கூடாது. வெளி வளாக ஸ்*புரூஸ் மலர்களின் மாலை தகதகப்பான ஒளிப்பீய்ச்சலில் கொஞ்சம் பிரமை தட்டத்தான் செய்தது… அதோ வாசலில் ஒரு மிருகம், யாரடா நீ, என்கிற தினுசில் என்னைப் பார்த்தபடி நிற்கிறதோ?

ஜிலீமீ பிஷீறீறீஷீஷ்
யிணீனீமீs லிணீsபீuஸீ (ணிஸீரீறீணீஸீபீ)
சிஷீuக்ஷீtமீsஹ் – றிணீக்ஷீவீs ஸிமீஸ்வீமீஷ் ஷிஜீக்ஷீவீஸீரீ 2009

நான் மொழிபெயர்த்ததிலேயே வெகு சமீபத்தில் வெளிவந்த கதை இதுதான். லாஸ்டன் மொழியைக் கத்திவீச்சாகப் பயன்படுத்துகிறார். தலித் பாத்திரத்தை அதுவும் உணர்வுபூர்வமான அலசலுடன் ஒரு மேற்கத்திய கதை என்பதே ஆச்சர்யமாய் இருந்தது. கதை, கவிதை, கட்டுரை மற்றும் திரைக்கதை எழுதுகிறார். பிறப்பு 1958ல். தற்போது நியூ யார்க்கில் பேராசிரியர். எழுத்தாள மனைவி பியா டேவிசுடன் இணைந்தும் நூல்கள் தந்திருக்கிறார். 2006ல் தேசிய சிறுகதைப்போட்டியில் முதல் பரிசு பெற்றார். நாவல்களும், நூல்களும், திரைக்கதைகளும் பல்வேறு பரிசுகளை அவ்வப்போது பெற்று வருகின்றன.

ஃபயியுடன் முதல் குழந்தை, பெண் பிறந்தவுடனேயே தோள்ப் பையில் அதைக் கட்டிக்கொண்டு ரிக் வாசலில் வேலைபார்ப்பதாக எழுதுவது சிறிது அதிதமாய் இருந்தது. (எழுத்தாள நண்பர் அமர்நாத் (அமெரிக்கவாசி) மூணு மாசக் குழந்தையை இப்படி முன்தூளி கட்டித் தொங்கவிட்டபடி நானே வேலை செய்திருக்கிறேன் என்கிறார்.) கழுத்து இறுகி நீலம் பாரித்துத் தொங்கியவன் முகத்தை அத்தனை சாந்த உருவாகச் சவப்பெட்டியில் பார்த்ததும் ஒட்டவில்லை. அவனது முதல் இரண்டு குழந்தைகளுக்கு தந்தை சூய்லர் என்றால் அவள் இல்லத்திலேயே பூகம்பம் வந்திருக்காதா? அவன் 18 மாதங்கள் ஜெயிலில் இருந்தபோது, நம்மாள் ரிக் இவளுடன் ரெண்டு குழந்தைகள் பெத்துக் கொள்கிறான்… கால வீச்சை கொஞ்சம் கவனம்கொண்டு எழுதியிருக்கலாம், என்று தோன்றுகிறது…

உயர்ந்த பண்புகள் கொண்ட பிரகிருதிகள், சாமான்யர்களிடம் சிக்கிக் கொண்டு அல்லல் படுவது பரிதாபமானதுதான். ‘அவன் வாழ்க்கையே பள்ளத்தில்,’ என்கிற பாவனையில் கதைத் தலைப்பு கவித்துவமானதுதான். கதை இறுதியில் அந்தக் குடில் வாசல் சிங்கம், அது ரிக்கேதான், என்று பிரமை தட்ட வைத்தது ஆசிரியரின் வெற்றி.

நன்றி – திசை எட்டும் காலாண்டிதழ் ஜனவரி 2010

Series Navigation