பல்லாங்குழி

This entry is part [part not set] of 43 in the series 20030918_Issue

காஞ்சனா தாமோதரன்


எங்கள் குடும்பம் வசிப்பது அட்லாண்ட்டிக் கடற்கரையோரத்தில். அடுத்த இருபத்தியெட்டு மணி நேரத்துக்குள், கடலில் மையமிட்டிருக்கும் ‘இஸபெல் ‘ சூறாவளி 105 மைல் வேகக் காற்றுடன் 12 அடி உயரும் கடலுடன் பெருமழையுடன் எங்களூரையும் கடக்கப் போகிறதாம். பல இடங்களிலும் ஊரை விட்டு வெளியேறும்படி ஆணை பிறப்பித்திருக்கிறார்கள். அத்தியாவசியப் பொருள்களை மட்டுமே கையோடு எடுத்துச் செல்ல வேண்டும்; மிகச் சிறிய பெட்டிக்குள் எல்லாம் அடக்கம்.

கணினி உள்பட எல்லா மின்சாதன இணைப்புகளையும் துண்டிப்பதற்கு முன் இந்தச் சிறுகுறிப்பை எழுத நேரமிருக்கிறது. புயல் பற்றி அல்ல. பல்லாங்குழி பற்றி.

‘ஏழு மயில் ஏழு

இருபுறமும் கல்பதித்த தங்க மயில் ஏழு

வாதாடிச் சூதாடி வந்த மயில் ஏழு

வரிசையுள்ள அத்தை மக்கள்

வந்து விளையாடையிலே….

அது என்ன ? ‘

பல்லாங்குழி பற்றி நினைவிலிருக்கும் விடுகதை இது. கல்பதித்த தங்கப் பல்லாங்குழிப் பலகைகளை நான் பார்த்ததில்லை. மயில் வடிவத்தில் ஆனவற்றையும் கண்டதில்லை; தோகைக் கண்கள் போல் குழிகள் அமைந்திருக்கக் கூடுமோ ? மீன் வடிவிலும் நீள்சதுர வடிவிலும் உள்ள தட்டுகளைப் பாத்திருக்கிறேன். வழுவழுவென்று (தேக்கு ? கருங்காலி ?) மரத்தில் கடைந்தெடுத்த தட்டுகள். புளி போட்டுத் தேய்த்து மின்னும் பித்தளைத் தட்டுகள்.

‘வாதாடிச் சூதாடி வந்த மயில் ஏழு….. ‘ அரிசிப்பானைக்குள் புழுங்கும் மாம்பழமும் விட்டத்தில் தொங்கும் வாழைத்தாரும் மரத்தில் வெடிக்கும் சீதாப்பழமும் வெக்கைக் காற்றில் கலந்து மணத்துத் திகட்டி, ஈக்கள் சோம்பலாய் ரீங்கரிக்கும் கிராமத்துக் கோடை விடுமுறை மதியங்களில், வானம் பார்த்த உள்முற்றத்தில் உட்கார்ந்து பல்லாங்குழியைத் தொடர்ந்து ஆடுவது வழக்கம். பித்தளைப் பலகையில் புளியமுத்துக்கள் கலகலத்து வீட்டுப் பெண்களின் மதிய உறக்கத்தைக் கலைக்கும். எந்நேரமும் சூதாட்டந்தானா பிள்ளைகளா என்று கண் திறவாமலேயே முனகின பின் மீண்டும் தூங்கிப் போவார்கள். இது ஏன் சூதாட்டம் என்று இன்னும் புரியவில்லை. எதையும் பணயம் வைத்து ஆடுவதில்லையே. ராஜா-ராணிக் காலத்தில் சூதாட்டமாய் இருந்திருக்குமோ ? பாண்டியாடிப் பாண்டியாடிப் பஞ்சம் பறத்தாதே என்று பாட்டியின் வகையான முணுமுணுப்பு வேறு. குழிகளைத் தடவியும் முற்றுமாய்த் துடைத்தும் ஆடும் பல்லாங்குழிப் பாண்டியினால் வீடு விருத்தி கெட்டுப் போகுமென்ற நம்பிக்கை.

வீட்டுக்குள் பல்லாங்குழி கூடாது என்று பெரியவர்கள் விரட்டும் (பல) நாள்களில் தோட்டத்தில் மறைந்திருந்து விளையாடலாம். மண்ணில் சிறு சிறு குழிகளைத் தோண்டிக் கொண்டால் ஆடுகளம் தயார். புளியமுத்து, கழற்சிக்காய், குன்றிமுத்து, சிறு கூழாங்கல், சோழி……எவை கையிலுண்டோ அவை போதும். ஆட்டம் நடப்பதுதானே முக்கியம்.

‘மானே பல்லாங்குழி ஆட வா–அடி

தேனே பல்லாங்குழி ஆட வா

வனத்திலே மான் வயிற்றில் வந்து பிறந்தவளே

…. ?……

…. ?……

…. ?…..

…. ?…..

எல்லா விதத்திலும் தேர்ந்தோம் நாமே

சில்லாகப் பல்லாங்குழி ஆடலாமே (மானே)

முத்துகள் நிரப்பினேனே உத்தமி நானே

தங்க முத்துகள் நிரப்பினேனே

கட்டை பிடித்தாடினேனே தந்தனே தானே

….. ?…….

….. ?…… ‘

பாட்டின் பல வரிகள் இப்போது மறந்து விட்டன. வாழ்வின் பல மாற்றங்களினூடே பல்லாங்குழியுமே மறந்துதான் போயிற்று.

மீண்டும் நான் பல்லாங்குழியைப் பார்த்தது பல வருடங்களுக்குப் பின்: இந்த மண்ணில், தைவான் உற்பத்தியின் உபயமாய், எங்கள் சிறுமகளின் கைகளில், ‘மன்கேலா ‘ என்கிற ஆஃப்ரிக்க அவதாரத்தில். மேல்பூச்சற்ற மரப்பலகைக் குழிகளில் கிலுங்கும் பலவண்ணக் கண்ணாடிக் குண்டுகள்–தட்டையான கோலிக்குண்டுகள் போல். மகளுக்கும் அவள் சினேகிதிகளுக்கும் விளையாட்டு புதுமையாய்த் தெரிந்தது. என் பிறந்த மண்ணின் பாரம்பரிய விளையாட்டென்று நான் குறுகலாய் நினைத்திருந்தது, பலகாலமாய் ஆஃப்ரிக்கா, (அநேகமாய் ஆஃப்ரிக்கர் மூலமாய்த்) தென்னமெரிக்கா, அரேபியா, தென்கிழக்கு ஆசியா முதலிய பல பகுதிகளிலும் ஆடப்படுவது என்பது எனக்குப் புதிய செய்தி. ஆட்டத்தின் முழு வரலாறு எனக்கு இன்னும் தெரியவில்லை.

அடுத்த முறை தாயகத்துக்குப் போன போது பூர்வீக வீட்டில் (வீடு இருந்த இடத்தில்) பல்லாங்குழித் தட்டுகளைத் தேடியலைந்தது பல முகங்களில் புன்னகைகளை வரவழைத்தது. அன்பான கிண்டல்களையும். மரத்தாலான மீன்வடிவப் பலகையைக் காணவில்லை. பாதியாய் மடக்கி மூடும் நீள்சதுர மரப்பலகையையும் காணோம். நூலாம்படை அப்பிக் கிடந்தவொரு மூலையில் எங்கள் பித்தளைப் பல்லாங்குழி. ஆண்டுகளின் தூசிச் சருமத்தின் கீழ்ப் பலகை மங்கித் தெரிகிறது. எங்கோ புளியமுத்துகள் கலகலக்கின்றன. கூடவே சுவரில் மோதிச் சிதறி உருளும் சிரிப்புகளும். பல்லாங்குழி உலகத்துக் குழந்தைச் சிரிப்புகள்………..

மின்சாரம் அணைந்து அணைந்து மீள்கிறது.

சன்னல் கண்ணாடிகள் நலுங்கி அதிர்கின்றன.

வெளியே பின்னிரவை எழுபது மைல் வேகத்தில் கிழித்துச் செல்லுகிறது காற்று. கனத்து இருளும் வானத்தின் கீழே சீறிக் கொந்தளிக்கிறது கடல். இனம் புரியாத எழுச்சியில் துள்ளுகிறது மனம். மெல்லிய பிரமிப்பும் பயமுமாய்ச் சிலிர்க்கிறது உடல்.

எண்பதுகளிலும் தொண்ணூறுகளிலும் பார்த்த ‘ஹ்யூகோ ‘, ‘ஆண்ட்ரூ ‘ புயல்களை வைத்துச் சொல்வதானால், ‘இஸபெல் ‘ பலத்த பொருள்சேதம் விளைவிப்பதற்கான சாத்தியப்பாடு அதிகம். பெரிய அளவில் உயிர்ச்சேதம் இல்லாதிருக்க வேண்டும்.

மின்னிணைப்பைத் துண்டிக்கும் நேரம் வந்தாயிற்று.

கணினியருகே சிரிக்கும் பல்லாங்குழிப் பலகையையும் எடுத்துப் போக வேண்டும்.

செப்டெம்பர் 17, 2003

Kanchanat@aol.com

Series Navigation

காஞ்சனா தாமோதரன்

காஞ்சனா தாமோதரன்