பலகாரம் பல ஆகாரம் !

This entry is part [part not set] of 25 in the series 20010924_Issue

பசுபதி


தட்டில் ததும்பிடும் சாம்பார் அணைநடுவில்
கெட்டித்தேங் காயரைத்த சட்னியுடன் — வெட்டவெட்ட
வட்ட வடிப்பஞ்சாய் வந்துவிழுஞ் சூடான
இட்டலிக்கு வேறேது ஈடு. (1)

இட்டலிக்(கு) ஏற்றதுணை இவ்வுலகில் ஏதென்னும்
பட்டிமன்றம் பள்ளியிலே பார்த்ததுண்டு ; நற்சுவை
முட்டும் மிளகாய்ப் பொடிமூழ்த்தும் எண்ணையா ?
சட்டினியா ? சாம்பாரா ? சாற்று. (2)

உருளைக் கிழங்கதனை உள்ளடக்கி மேனி
முறுகலாய்ச் சாம்பாரில் முக்குளித்துச் சட்னியுடன்
வேசறவு நீக்கிநல் வெண்ணெய் மணங்கமழுந்
தோசைச் சுவைக்குண்டோ தோற்பு. (3)

வெங்காயம் வெவ்வேறு காய்களுடன் வெந்நீரில்
தங்க ரவைகிளறிச் சாறிட்டுத் தாளித்துச்
செப்பமாய் முந்திரியும் சிற்றளவு சேர்ந்திருக்கும்
உப்புமா ஒப்பில்லா ஊண். (4)

விடிகாலைக் கூதலிலே வெம்பனிசூழ் நாட்டில்
அடியேன் அலுவலகம் ஓடும் அவசரத்தில்
துய்த்திடவோர் தொன்னைதனில் வெங்காயக் கொத்ஸுடனே
நெய்யொழுகு வெண்பொங்கல் நேர். (5)

****
வேசறவு=மனச்சோர்வு; சாறு=(எலுமிச்சைப்பழச்)சாறு ;

Series Navigation

பசுபதி

பசுபதி