பரிவும் பதற்றமும் (ந.பிச்சமூர்த்தியின் சிறுகதைகள் )

This entry is part [part not set] of 19 in the series 20020113_Issue

பாவண்ணன்


படிப்பவர்கள் மனத்தில் பெரும் வீச்சுடன் அனுபவம் விரிவு கொள்ள வாய்ப்பளிப்பவையாக உள்ளவை சிறுகதைகள். சிறுகதைகள் வழியாக வாசகன் மனத்தில் தாவி விழுவது ஒரே ஒரு பொறிதான். அப்பொறியின் ஒளியையெற்று அவனுடைய மனஉலகம் தகதகக்கத் தொடங்குகிறது. பளிச்சிடும் சுடரில் மனத்தின் பாதாளத்தில் ஒடுங்கிக் கிடக்கும் சொந்த அனுபவங்கள் துலக்கம் பெறுகின்றன. சிறகு முளைத்த பறவைகள் போல மேலெழும்புகின்றன. திசைதோறும் திரியத் தொடங்குகின்றன. ஆழ்மனத்துச் சம்பவங்களை அசைபோடுதல் ஒருவகையில் அவனது இருப்பை உறுதிப்படுத்திக் கொள்வதற்கு இணையாகும். மொத்த உலகத்தை ஒரு விளிம்பில் நிறுத்தி எதிர்விளிம்பில் தன்னை நிறுத்தி ஒப்பிடத் துாண்டுகிறது இந்த அசைபோடுதல். இதன் வழியாகவே உலகுக்கும் தனக்குமாக உறவு எடைபோடப் படுகிறது. இந்த உறவின் வலிமையாக ஒரே ஒரு பொறியின் வழியாக மனம்தாண்டி மனம் இடம் மாற்ற ஒரு சிறுகதையாசிரியனுக்கு மனித உறவு சார்ந்த அக்கறையும் பார்வையும் எழுத்து சார்ந்த தேர்ந்த பயிற்சேயும் அவசியமாகும். மனித உறவின் நுட்பங்களுக்கெல்லாம் சாட்சியாக இன்று விளங்குபவை சிறுகதைகளே. இக்கதைகள் என்னும் ஊடகத்தின் துணையோடு மனம் என்னும் கண்காணாத் தீவின் சித்திரத்தைப் பார்த்துக் கொண்டிருக்கிறோம். மனித உறவு சார்ந்த ஆழமான ஈடுபாடுகளே எளிய படைப்பாளிகளையும் பெரிய படைப்பாளியையும் பிரித்துக் காட்டும் அம்சமாகும். மனித உறவின் மேன்மையையும் கீழ்மைகளையும் இருளையும் ஒளியையும் துக்கத்தையும் பரவசத்தையும் மிகைபடாத வகையில் கதைகளில் முன்வைப்பது கடுமையான உழைப்பைக் கோரும் பணியாகும். உலகின் மீதும் மனிதர்கள் மீதும் பரிவு சுரக்காமல் இப்பணியைச் செய்வது இயலாத செயலாகும்.

பரிவாலும் பதற்றத்தாலும் நிறைந்திருப்பது பிச்சமூர்த்தியின் கதையுலகம். வாழ்வின் சகல தளங்களிலும் புழங்கும் மனிதர்களையும் நிலவும் வாழ்வின் மேடுபள்ளங்களையும் சார்ந்து கவனித்ததன் பயனாக ஒரு பார்வையைச் சொந்தமானதாக மாற்றிக் கொண்டிருக்கிறது அவர் மனம். மனிதர்கள் வாழ்க்கை முறைகளைக் கவனித்து அறிந்து கொண்ட அறிவின் வீச்சினால் உருவானவை அல்ல அவர் கதைகள். மாறாக வாழ்வின் மேடுபள்ளங்களைக் கவனித்துக் கசிந்துருகிப் பரிவுற்றுப் பதறியதால் அவரைக் கரைத்துக் கொண்டு உருவானவை அவர் கதைகள். பாரதியின் பார்வையால் பாதிக்கப்பட்டு உருவான மணிக்கொடி எழுத்தாளர்களில் முக்கியமானவர் அவர்.

பிச்சமூர்த்தியின் முதல் சிறுகதைத் தொகுப்பு நாற்பதுகளில் வந்தது. அறுபதுகளில் ஆறாவது தொகுப்பு வெளியானது. 127 கதைகள் வந்துள்ளதாகத் தெரிகிறது. அவருடைய நுாற்றாண்டையொட்டி அவருடைய எல்லாக் கதைகளும் அடங்கிய பெருந்தொகுப்பு இரு பகுதிகளாக வந்துள்ளன. பதினெட்டாம் பெருக்கு, தாய், வானம்பாடி, மோகினி, கபோதி, கரும்பாயிரத்தின் கதை, அடகு, மாங்காய்த்தலை, வெள்ளம், பதினாறுகால் மண்டபம் ஆகியவற்றை முக்கியமான கதைகளாகக் குறிப்பிடலாம்.

அவர் கதைகளில் மனிதர்களின் துன்பத்தைக் கண்டு கரையாதவர்களே இல்லை. தம்மால் செய்ய ஏதுமில்லை என்ற நிலையில் உள்ளவர்கள் கூட கணநேரம் நின்று அரைப் பார்வையை வீசிவிட்டுச் செல்லவும் இரக்கத்துடன் மனம் துக்கமுறவும் செய்கிறார்கள். இந்தப் பரஸ்பரப் பரிவை வாழ்வின் சுதந்தரத்துக்கு ஒரு தீர்வாக முன்வைக்கிறார் பிச்ச்முர்த்தி. சகல துன்பங்களும் நிராசைகளும் ஏக்கங்களும் வன்மங்களும் ஒரே தராசின் ஒரு தட்டை அழுத்திக் கொண்டிருக்கும் போது பரிவு என்னும் மயிலிறகை மறுதட்டில் நம்பிக்கையோடும் மனவலிவோடும் வைக்கிறார். எந்தக் காரணத்தைக் கொண்டும் இலக்கியத் தர்மத்தை மறக்கலாகாது என்று அவர் தம் நேர்காணலில் அழுத்தம் திருத்தமாகச் சொல்லும் அளவுக்கு அவர் நம்பிக்கை அவரைச் செயல்படத் துாண்டுகிறது. பரிவுணர்வை இலக்கியத் தர்மமாக எண்ணியிருக்கிறது அவர் மனம். ‘போகிற பதை தெரியும் , போகிற இடம்தான் தெரியவில்லை ‘ என்று வெளிப்படும் வரிகளில் கூட(பாம்பின் கோபம்) தன் பாதையின் தேர்வின் நியாயம் தன்னுடைய பயணம் எதைநோக்கி என்று தனக்கே தெரியாவிட்டாலும் கூட தன்னைச் சரியான இடத்துக்கே பாதை கொண்டு செலுத்தும் என்று ஆழமாக என்னும் அளவுக்கு அவரிடம் செயல்படுகிறது.

இயலாமையும் இல்லாமையும் தினசரி வாழ்வில் உருவாக்கும் சங்கடங்கள் ஏராளம். பாலுக்குத் தவிக்கிற குழந்தைகளுக்கும் பசிக்குத் தவிக்கிற மனிதர்களுக்கும் நிரந்தரத் தீர்வுகளை வழங்கி ஆதரவுடன் அரவணைக்கும் நிலையில் ச்முகம் இல்லை. ச்முகத்தின் மீது கோபம் எழத்தான் செய்கிறது. அக்கோபத்தின் உச்சத்தில் பதற்றமெழவும் செய்கிறது. அதே தருணத்தில் மொத்தச் ச்முகமும் ஒதுக்கி விட்டுப் போகிற மனிதக்கூட்டமாக இல்லை. சங்கடங்களுக்குக் காரணங்களைக் கண்டு மனமுருகி ஆதரவுக் கரம் நீட்டும் பரிவுள்ள உயிர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். உலகம் மொத்தமும் வறண்டு விடாதபடி இந்தப் பரிவு உயிர்ப்பாற்றலைக் கொடுக்கிறது. கோபத்தைக் கொட்டுவதா அல்லது பரிவைக் காட்டுவதா என்கிற தீர்மானங்களில் இரண்டாம் நிலையைத் தேர்ந்தெடுக்கிறார் பிச்சமூர்த்தி. இப்பரிவைப் பரிமாறிக் கொள்கிற கணத்தில் மனிதர்களுக்கு இடையே எந்தவிதமான ஏற்றத்தாழ்வும் இல்லை. ஒரே ஒரு கணம் மனிதகுலம் அதன் உச்சநிலையான பேரன்பு நிலையில் வீற்றிருந்து விட்டுச் சரிகிறது. பரிவென்பது ஒரு பனி ஏணி. ஏறி நின்ற கணத்துக்குப் பிறகு இன்னொரு பனி ஏணி கிட்டுகிற வரை பனிவெளியில் காத்து நிற்க வேண்டியதாக இருக்கிறது. ‘அறிவினான் ஆகுவதுண்டோ பிறிதின்நோய் தன்நோய்போல் போற்றாக் கடை ‘ என்று குறள் எழுதிய வள்ளுவர் காலம் முதல் அமுதசுரபியின் மூலம் அன்னதானம் செய்த மணிமேகலைக் காலம் வரையில் வலியுறுத்தப்படும் பரிவுக் கருத்தாக்கத்தை மனம் நிறையச் சுமந்திருக்கிறார் பிச்சமூர்த்தி.

பிச்சமூர்த்தியின் முக்கியமான கதைகளில் முதலிடம் வகிப்பது ‘தாய் ‘ சிறுகதை. கதையில் பசியில் அழும் கைக்குழந்தையை மடியில் வைத்தபடி பிரயாணம் செய்கிறாள் தாய் ஒருத்தி. மார்பில் பால் சுரக்கவில்லை. மேற்கொண்டு உறிஞ்சினால் ரத்தம் வந்துவிடும் அளவுக்கு வறண்ட மார்புகள். அதே ரயிலில் கக்குவான் இருமலால் அழுகிற இன்னொரு குழந்தைக்குப் பிராந்தியைப் புகட்டும் தந்தையை அதட்டி அந்தக் குழந்தையை வாங்கி ரத்தம் மட்டுமே சுரக்க வாய்ப்புள்ள மார்பில் புதைத்துக் கொள்கிறாள். ‘கபோதி ‘ என்னும் இன்னொரு கதையில் பார்வையற்ற அனாதைப் பெண்ணை வளர்த்து வரும் சர்மா, அவளை சேட்ஜியோடு ஆசிரமத்துக்கு அனுப்ப முயற்சி எடுத்துவிட்டுப் பிறகு இறுதிக்கணத்தில் மனம்வராமல் பின்வாங்கி விடுகிறார். பல கதைகளில் இத்தகு பரிவு சுரக்கும் தருணங்களைப் பதிவு செய்கிறார் பிச்சமூர்த்தி. வெவ்வேறு பாத்திரங்களை அறிமுகப்படுத்துகிறார். சூழல்கள் மாறிமாறி அமைகின்றன. எதிர்கொள்ளும் தருணங்களும் வேறுவேறாக இருக்கின்றன. ஆனால் பொங்கி வழியும் இயலாமையையும் துக்கத்தையும் மீறிக் கொண்டு பரிவுணர்ச்சி பீறிட்டு விடுகிறது. உணர்வுகளின் வழியாக ஒரு மாயக்கரம் நீண்டு உயிர்களை அரவணைத்துக் கொள்கிற நுட்பமான சித்திரமாகக் காட்டுகிறார். பரிவு என்னும் உணர்ச்சி ஆயிரம் கைகள் கொண்ட அன்னை என்றும் அவள் கரங்களே உயிர்களைத் தக்க தருணத்தில் ஏந்திக் காப்பாற்றி விடுகின்றன என்றும் உருவகித்துக் கொள்ளலாம். உச்சத் தருணத்தில் நாடகத்தன்மையின் சிறுநிழல் கூடப் படாமல் காப்பாற்றி விடுவதில் பிச்சமூர்த்தியின் கலைவெற்றி முக்கியமானது. நம்பகத் தன்மையில் ஒரே ஒரு விழுக்காடு அளவு கூட குறைபடாத வகையில் கதைகளைப் பின்னி வைத்திருக்கிறார்.

பரிவின் சித்திரங்கள் காலம் காலமாக இலக்கிய வரலாற்றில் இடம்பெற்றபடியே வந்துள்ளன. தாகத்தால் நாவறண்டு தவிக்கும் இரண்டு மான்களின் சித்திரம் சங்கக் கவிதையில் இடம்பெற்றுள்ளது. கலங்கிப் போன தண்ணீர் சிறதளவே பள்ளத்தில் தேங்கியுள்ள காட்சியைக் குறிப்பிடுகிறது ஒரு கவிதை. பெண்மான் குடித்து வேட்கை தணியட்டும் என்று நினைக்கிறது ஆண்மான். அதே சமயத்தில் தான் அருந்தாமல் தனியாக அருந்த அம்மான் சம்மதிக்காது என்றும் தெரிந்து வைத்திருக்கிறது. இதனால் கலங்கிய நீரிடையே வாயை வைத்துப் பருகுவது போலப் பாவனை செய்யத் தொடங்குகிறது. அந்த மானின் பரிவை யாரால் மறக்க முடியும் ? இந்த இலக்கிய மரபின் தொடர்ச்சியாகவே பிச்சமூர்த்தியின் கதைகள் பரிவுணர்ச்சி பொலிகின்றது.

பிச்சமூர்த்தியின் இன்னொரு முகம் பதற்றம். பதற்றத்தின் பல தருணங்களை அவர் கதைகளில் காண நேர்கின்றன. நம்ப முடியாத சூழ்ச்சிகளாலும் தந்திரங்களாலும் சகஜ நிலையில் மனிதர்கள் ஈடுபடும் போது பதற்றம் உருவாகிறது. ‘பதினெட்டாம் பெருக்கு ‘ என்னும் கதையில் ஒரு பெண்ணிடம் உறவு கொள்ள விழைந்து, விழைவின்படி நடந்து கொள்ளவும் இயலாமல் உதறவும் முடியாமல் தடுமாறும் போது பதற்றம் உருவாகிறது. ‘காவல் ‘ என்னும் மற்றொரு கதையில் உணவு விடுதியில் வேலை செய்ய நேர்ந்த விதவைத் தாய் சூழ்ந்திருப்பவர்களால் சூறையாடப்பட்டு விடுவாளோ என்கிற பதற்றம் தொடக்கம் முதல் இறுதி வரை நீடிக்கிறது. காவல் இல்லாத குளத்தில் கண்டவர்கள் துாண்டில் போட்டுவிடுவார்கள் என்கிற உருவகக் காட்சி பதற்றத்தைப் பலமடங்காகப் பெருக வைத்துவிடுகிறது.

எந்த வகையிலான கதையாக இருந்தாலும் அவற்றில் குறுக்கிழையாகப் பதற்றம் ஓடிக் கொண்டே இருக்கிறது. ஒழுக்கம் சார்ந்த பிரக்ஞை ஒரு கிளறுகோலாக அவரது பதற்றத்தைத் துாண்டி அதிகரித்தபடி உள்ளது. ஒழுக்கம் சார்ந்த நம்பிக்கை அவருக்குள் ஏராளமாக இருந்திருக்கிறது. ஒழுக்கம் உயர்வானது. கண்ணைப் போன்றது. உயிரைவிட மேலானது. ஆதாயக் கணக்காகவோ இழப்புக் கணக்காகவோ மாறக் கூடாதது. அப்படிப்பட்ட வாழ்வில் மனிதர்கள் ஈடுபட்டு அறம் செழிக்க வாழ வேண்டும் என்கிற கனவு அவருக்குள் இருந்திருக்கலாம். அனால் எதார்த்தம் அப்படி இல்லை. தடம் புரள வைத்துவிடுகிறது. தவறுகள் செய்யத் தோதாக எல்லாமும் எல்லா இடத்திலும் வாய்த்தே இருக்கின்றன. பட்டினி கிடக்க முடிவதில்லை. வயிற்றைக் கழுவ வேலை வேண்டும். நாலு பேர் முன்னிலையில் நாலு விதமான பேச்சுக்கும் அழைப்புக் குரலுக்கும் செவிகொடுக்க வேண்டித்தான் இருக்கிறது. வேளைகெட்ட வேளையில் உடல்பசி பதினெட்டாம் பெருக்குப் போலப் பொங்கி எழுகிறது. ஒழுக்கம் உயர்வானது என்கிற எண்ணம் எல்லாருடைய உள்ளங்களிலும் இருக்கத்தான் செய்கிறது. ஆனால் சுற்றிலும் பாசிபடர்ந்த வழுக்குப் பாறைகளே கிடக்கும் போது விழாமலும் பிசகாமலும் நடப்பதும் சிரமமாக இருக்கிறது. இந்தப் பதற்றத்தில் தவியாய்த் தவிக்கிறார்கள் பாத்திரங்கள். பெரும்பாலான தருணங்களில் பாத்திரங்களால் பாசிப் பாறை மீது கால்வைக்க முடிவதில்லை. பதற்றத்தில் கல்லை உதைத்துவிட்டு கால் வலிக்க நின்று விடுகிறார்கள். அபூர்வமாக ஒருசிலர் இடம்பார்த்து நடந்து தப்பித்து நழுவி விடுகிறார்கள்.

பிச்சமூர்த்தியின் இன்னொரு முக்கியமான கதை ‘பெரியநாயகியின் உலா ‘. கருவறையில் உள்ள பெரியநாயகி தோழிகள் புடைசூழ உலா வந்து உலகை அறிய நேர்வதுதான் கதை. அவளுக்கு இந்த உலகைப் பற்றிய பல ஆச்சரியங்கள் காத்திருக்கின்றன. தெய்வங்களால் உருவாக்கப்பட்ட ஆரம்ப நிலையில் உலகம் இல்லை. நிறைய மாற்றங்கள். எல்லாமே ஏமாற்றம் தருபவை. நிலைகுலைந்து போகும் பெரியநாயகி மறுசிருஷ்டியில் சரிசெய்து கொள்ளலாம் என்று சொன்னபடி கருவறைக்குள் சென்று விடுகிறாள். இந்தப் பெரியநாயகி உண்மையில் பெரியநாயகியின் உருவில் உலாவரும் பிச்சமூர்த்திதான். அவர்தான் இங்கு நிலவும் மோசடிகளையும் சில்லறைத்தனங்களையும் ஏற்றத்தாழ்வுகளையும் கண்டு நொந்து போகிறார். அப்போதும் பரிவுணர்ச்சி பொங்கி வர உலகைச் சரிசெய்துவிட முடியும் என்று சொல்லிச் சிரிக்கிறார். இந்த நம்பிக்கையும் புன்னகையும் பிச்சமூர்த்தியின் ஆதாரக் குணங்கள்.

அவருடைய பதற்றங்களை அவருடைய பலவீனங்கள் என்கிற முடிவுக்கு நாம் அவசரப்பட்டு வந்துவிடக்கூடாது. வாழ்வில் தடுமாற்றத்தில் தலைகுப்புற விழ வைக்கும் தருணங்கள் இருக்கும் என்கிற ஞானம் இல்லாத கலைஞரல்ல அவர். அவை சகஜமே என்கிற அளவுக்கு வாழ்வனுபவமும் தேர்ச்சியும் இருக்கும் கலைஞர்தான் அவர். மனித வாழ்வில் தடுமாறும் கணங்களை எதிர்கொள்ள உலகியல் வாழ்வில் ஒரு சாதாரணனுக்கு இருக்கும் வாய்ப்புகளை விட நீதித்துறை சார்ந்து தனது பணியைத் தேர்நதெடுத்துக் கொண்டவருக்கு அதிக அளவில் இருந்திருக்கக் கூடும் என்பதை நாம் மறந்துவிடக் கூடாது. கலைப்படைப்பு என்பது நீதிமன்றமல்ல. கலைஞன் என்பவன் வழக்காடும் வழக்குரைஞனுமல்ல என்கிற நிச்சயம் அவர் மனத்தில் பதிந்திருக்கும். அதனால்தான் ஒழுக்கத்தைப் பற்றிய பதற்றம் அவர் நெஞ்சைத் துடிக்க வைத்தாலும் அதை உரத்த குரலில் முன்வைப்பதில் தயக்கம் காட்டுகிறார். அடங்கிய முனகலாகக் காட்டி விட்டுச் சங்கடத்துடன் மறைந்து விடுகிறார். இந்த முனகலைக் குறை கூறிப் பயனில்லை. இதை வைத்து அவரைத் தோல்வியுற்றவராகக் கருதக் கூடாது. அவர் எழுதத் தொடங்கிய காலகட்டத்தையும் கணக்கிலெடுத்துக் கொள்ள வேண்டும் நாம். ஒழுக்கத்துக்கும் வாழ்க்கைக்குமான உறவின் மேன்மை வலியுறுத்தபட்டுக் கொண்டிருந்த ஒரு காலத்தில் கணநேரப் பிசகுகளைச் சொல்வது மட்டுமே அவருக்குச் சாத்தியமாகியிருக்கிறது என்று சொல்லலாம்.

Series Navigation

author

பாவண்ணன்

பாவண்ணன்

Similar Posts