பரிமளவல்லி – 8. வேரில்லாத காளான்கள்

This entry is part [part not set] of 33 in the series 20100822_Issue

அமர்நாத்


ஒருவாரத்திற்குள் சரவணப்ரியா முடிக்கவேண்டிய வேலைகள் ஏராளம். திங்கள்காலை ஆராய்ச்சிஅறையில் அவள் மேஜையின்முன் உட்கார்ந்ததும் எந்த வரிசையில் அவற்றைச் செய்வதென்றுதான் பலத்த யோசனை. ஜேசனும், ஐரீனும் சென்னைக்குச் சென்று சேகரித்துவந்த நாற்பத்திநான்கு பேருடைய இரத்தத்திலிருந்து க்ளோபின் தனிப்படுத்தப்பட்டது. ஒவ்வொன்றையும் தனித்தனியாகப் பரிசோதித்து, மாறுபட்ட அமினோஅசிடை எல்சியில் (லிக்விட் க்ரோமடோக்ராஃப்) பிரித்து அளந்தாகிவிட்டது. சிறுநீரில் வெளியேறிய அசீடில்-ப்ரோபில்-சிஸ்டீனை ஜிசியில் (காஸ் க்ரோமடோக்ராஃப்) வேறுவிதமாக நிர்ணயித்தாள். ஜேசனும், ஐரீனும் ஒவ்வொருவருடைய கைகால் விரல்களின் உணர்வுவீரியத்தை வினாடிக்கணக்கில் அளந்திருந்தார்கள். அந்த பாதிப்புகள் இரத்தத்திலும் சிறுநீரிலும் ஏற்பட்டிருந்த மாறுதல்களைப் பொறுத்து வேறுபட்டன என்று அறிந்தபோது சிகரத்தை எட்டியமாதிரி இருந்தது. எல்லா முடிவுகளையும் ஒரு விஞ்ஞானக் கட்டுரையில் அடக்கி, அதை ஆராய்ச்சியில் பங்குபெற்ற மற்றவர்களுக்கு சென்றவாரம் அனுப்பியிருந்தாள். அதைப் படித்துவிட்டு அவர்கள் விரும்பும் திருத்தங்களையும், மாறுதல்களையும் சேர்த்தால் கட்டுரை இறுதிவடிவம் பெற்றுவிடும். ஆனால், ஆராய்ச்சியை மேலும் தொடர அரசாங்கத்தின் ஆதரவு தேவை.
அடுத்த திங்கள் ஆறு விண்ணப்பங்கள் சேர்ந்த ஒரு கூட்டுப்ராஜெக்ட்டிற்கு நிதிவழங்குவதா வேண்டாமா என்று முடிவுசெய்ய ஒரு பரிசீலனைக்குழு வருகை தரும். அப்போது, ஆராய்ச்சியின் விவரங்களைப் பார்ப்பவர்கள் பிரமிக்கும்படி ‘பவர்-பாய்ன்ட்’டில் அவள் வரிசைப்படுத்த வேண்டும். அவளுக்கு ஒதுக்கப்பட்ட நேரம் இருபத்தைந்து நிமிடங்கள் மட்டுமே. அதிலும் கடைசி ஐந்துநிமிடம் கேள்விநேரம். இருபது நிமிடங்களில் கடந்த மூன்றுமாதங்கள் செய்த வேலைகளைக் குறுக்கி அடுத்த ஐந்தாண்டுகால திட்டத்திற்கு அஸ்திவாரமாக அமைக்க வேண்டும். அரசின் அங்கமான என்.ஐ.ஈ.எச்.எஸ்.ஸிடமிருந்து ஒன்றேகால் மில்லியன் டாலர் பெறுவதற்குத்தான் இத்தனை பாடு. விண்ணப்பம் அங்கீகரிக்கப்பட்டால் அவளுக்கும், ப்ராஜெக்ட்டில் பங்குகொள்ளப் போகும் மற்ற ஐந்துபேருக்கும் ஐந்தாண்டுகளுக்கு நிம்மதி.
ஏற்கனவே இருநூறுபக்கத் தொகுப்பில் செலவினங்கள், செய்யப்போகிற ஆராய்ச்சியின் அவசியம், செயல்படுத்தும் திட்டம் எல்லாவற்றையும் விவரித்து, ஒன்பதுபேர் கொண்ட கமிட்டியின் ஒவ்வொரு உறுப்பினருக்கும் ஒருபிரதி அனுப்பியாகிவிட்டது. இந்நேரம் அதைப் படித்துமுடித்து, மாமியாரைப்போல் அதில் என்ன குற்றம்குறை காணலாமென்று அலசிக்கொண்டிருப்பார்கள்.
மேஜையின் இழுப்பறையில் ஒளிந்திருந்த கைப்பையில் அலைபேசி பாடியது. யார் இந்தக்காலை நேரத்தில் அலுவலக எண்ணைப் பயன்படுத்தாமல் அவள் சொந்த எண்ணில் கூப்பிடுவது? எடுத்துப்பார்த்தாள். இல்லினாயிலிருந்து வந்த அழைப்பு. அவளுக்குத் தெரியாத யாரோஒருவர்.
“ஹலோ!”
“ஹலோ, டாக்டர் சாரா நாதன்?”
“பேசுகிறேன்.”
“குட் மார்னிங்! என் பெயர் சோமசுந்தரம். எப்படி இருக்கிறீர்கள்?” குரலில் கேட்பவரிடம் மரியாதையை உண்டாக்கும் ஒருகனம்.
“ஒரு மானியத்திற்கான வேலை நிறைய பாக்கிநிற்கிறது, மற்றபடி பரவாயில்லை. நீங்கள்?”
“ஷிகாகோவின் பிப்ரவரி குளிர் தந்த மூக்கடைப்பு” என்று கரகரப்பான குரலில் சொன்னார்.
“சிலநாட்களாக இங்கும் குளிர் அதிகம்தான்” என்று அவர் மேலேதொடரக் காத்திருந்தாள்.
“என்னுடைய அழைப்பைக் குறுக்கீடாகக் கருதமாட்டீர்களென நம்புகிறேன். நான் இங்கிருக்கும் ஜெனிவா பல்கலைக்கழத்தில் பொதுமக்கள் நலத்துறையின் தலைவன். உங்கள் ப்ராஜெக்ட்டைப் பரிசீலிக்கும் கமிட்டியில் ஒருவன்.”
“அப்படியா?” என்றாள் சரவணப்ரியா மாமனாருக்குத் தரும் பயபக்தியுடன். ‘அறிக்கையைப் படித்தீர்களா? எப்படி இருக்கிறது?’ என்ற கேள்விகள் மனத்தளவிலே நின்றுவிட்டன.
“ஆராய்ச்சிக்குழுவின் விவரங்களில் உங்கள் வாழ்க்கைக்குறிப்பைக் கண்டேன். செங்கல்பட்டில் பிறந்து, சென்னை கிறித்தவக் கல்லூரியில் பி.எஸ்ஸி.யும் சென்னை பல்கலைக்கழகத்தில் எம்.எஸ்ஸி.யும் படித்ததாகத் தெரிந்தது. அந்தக் காலக்கட்டத்தை வைத்து, நீங்கள் நாற்பது ஆண்டுகளுக்குமுன் செங்கல்பட்டு ஆண்கள் உயர்நிலைப்பள்ளியில் தமிழாசிரியராகப் பணியாற்றிய கண்ணப்பனாரின் இரண்டாவது மகளாக இருக்கலாமோ என்று ஒரு எண்ணம்” என்று தயங்கித்தயங்கிச் சொன்னார்.
ஒருகணம் சரவணப்ரியாவுக்கு பாவாடைசட்டையில் இரட்டைப்பின்னலுடன், புத்தகங்களைச் சுமந்து பள்ளிக்குச் செல்வதுபோன்ற பிரமை தட்டியது. “சந்தேகமே வேண்டாம். அது நான்தான்.”
அதைக்கேட்டதும் அவர் குரலில் நட்பின் குழைவு. “நானும் செங்கல்பட்டுதான். உங்கள் வீட்டிற்குக்கூட வந்திருக்கிறேன், உங்களையும் பார்த்திருக்கிறேன். முதல்முறை வந்தபோது உங்களுக்கு பதின்மூன்று வயதிருக்கலாம், சரவணப்ரியா!” என்றார் அவர். அவள் தந்தை ஒருவர்தான் அவளை முழுப்பெயரிட்டு அழைப்பது வழக்கம். இப்போது அவரை நினைவூட்டும் இன்னொருவர்.
“அப்படியா? எனக்கு நினைவில்லையே” என்றாள் சரவணப்ரியா வருத்தத்துடன்.
அதற்காக சோமசுந்தரம் ஏமாற்றம் அடைந்ததாகத் தெரியவில்லை.
“கண்ணப்பனார் இறந்தபோதும் வந்துபார்த்தேன். அவர் என்னை மிகவும் கவர்ந்த தமிழாசிரியர். ஒன்பதாவதும் பத்தாவதும் படித்தபோது ஒவ்வொரு நாளும் அவருடைய வகுப்பு எப்போதுவரும் என்று காத்திருப்பேன். |பெரிய புராணத|;தின் பாடல்களுக்கு அவர்தந்த விளக்கம் இப்போதும் நினைவிருக்கிறது. தமிழ் மட்டுமல்ல, வாழ்க்கைப்பாடமும் எனக்கு அவர் கற்றுத்தந்தார்.”
சரவணப்ரியா மனம் நெகிழ்ந்தாள். “அவருடைய இறந்தநாள் நெருங்கும் இந்த சமயத்தில் நீங்களாகவே அழைத்து இதைச் சொன்னது அவருக்குச் செலுத்தும் அஞ்சலியாகவே எனக்குத் தோன்றுகிறது. அவரும் உங்களைப்போன்ற ஒரு மாணவருக்குப் பாடம் சொல்லித்தருவதைப் பெருமையாக நினைத்திருப்பார்” என்றாள்.
சிலநொடிகள் உணர்ச்சிகளை உள்ளடக்கி அமைதியாக ஊர்ந்தன. பிறகு, உரையாடல் பல ஆண்டுகளைத் தாவி நிகழ்காலத்தில் வந்துநின்றது.
“நான் அழைத்ததற்கு இன்னொரு காரணம், மானியத்திற்கான உங்கள் விண்ணப்பம் நன்றாக எழுதப்பட்டிருக்கிறது என்று பாராட்ட. காரணகாரியங்கள் கச்சிதமாக இருக்கின்றன. நீங்கள் குறிப்பிட்ட இரசாயனப் பொருட்களின் பாதிப்புகளைப் பலவிதங்களில் அளவிடுதல் அவசியமென்பது என் சொந்தக்கருத்து. எல்லாவற்றுக்கும் முன்னோடியாக நீங்கள் செய்த 1-ப்ரோமோப்ரோபேன் பற்றிய ஆராய்ச்சி மிகச்சிறப்பாக அமைந்திருக்கிறது. அந்தவழியைப் பின்னொற்றி மற்ற பொருட்களையும் ஆராய்வீர்களெனத் தெரிகிறது. தரமான விஞ்ஞானம்…” என்று நிறுத்தினார்.
“தாங்க்ஸ்” என்று சொல்லிவிட்டு, இதுபோன்ற புகழ்ச்சிக்குப்பின் வழக்கமாக வரும் ‘ஆனால்’ என்கிற வார்த்தைக்குக் காத்திருந்தாள். அவள் ஏமாற்றம் அடையவில்லை.
“ஒரேஒரு குறைதான். இந்த ஆராய்ச்சிகளில் ஏகப்பட்ட எண்கள் வெளிவரப் போகின்றன. அவற்றைப் பரிசீலிக்க சிறப்பாக யாரும் அமர்த்தப்படவில்லையே” என்று வருத்தம்தொனிக்கச் சொன்னார்.
“எங்களில் பலருக்கு எண்களைக் கையாளத் தெரியும்.”
“இருந்தாலும், அதற்கென்றே ஒரு புள்ளிவிவர நிபுணர் இருந்தால் இன்னும் சிறப்பு. கமிட்டியில் மற்றவர்களுடைய எண்ணமும் அதுதான். நாங்கள் வருகை தருவதற்குமுன் அந்தக் குறைபாட்டை நிவர்த்திப்பது உசிதம் என நினைக்கிறேன்.”
“அறிவுரைக்கு மிக்க நன்றி, டாக்டர் சோமசுந்தரம்! கட்டாயம் ஒருவரை ஏற்பாடு செய்கிறோம்.”
“குட்லக், சரவணப்ரியா! அடுத்த வாரம் பார்க்கலாம்.”
“உங்கள் சந்திப்பை எதிர்நோக்குகிறேன்.”
சோமசுந்தரத்தின் மதிப்புரை சரவணப்ரியாவுக்கு மகிழ்ச்சியைத் தந்தது. அவர் சொற்படி புதிதாக ஒருவரை வேலையில் அமர்த்த அரசிடம் மேலும் பணம் கேட்பதற்கில்லை. அதனால், சரவணப்ரியா அலமாரியின் மேல்தட்டிலிருந்து மானியத்தின் திட்டத்தை எடுத்துப் பார்த்தாள். ஆராய்ச்சிக் குழுவினரின் சம்பளத்திற்கு ஒதுக்கப்பட்ட நிதிநிலையை அலசினாள். பெயர் குறிப்பிடாத ஓர் உதவியாளனுக்குத் தரவிருக்கும் இருபதாயிரம் மட்டும் அகப்பட்டது.
பல்கலைக்கழகத்தின் புள்ளியியல் துறையை அழைத்து, செயலாளரிடம் தன் தேவையைக் குறிப்பிட்டாள். கொலஸ்ட்ராலைக் குறைக்கும் மருந்துகளை ஒப்பிடும், பலமில்லியன் டாலர் மதிப்புள்ள, ஒரு பெரியஆராய்ச்சியில் பலர் ஈடுபட்டிருப்பது தெரிந்தது. இந்த சில்லறைவேலை முக்கியமில்லை என அவர் அலட்சியம் காட்டியதாகப் பட்டது. உரையாடலை முடித்துவிட்டு யோசித்தபோது, மின்யுகத்தில் தான் தேடும் ஆள் அருகிலேயே இருக்க வேண்டிய அவசியமில்லை என சரவணப்ரியாவுக்குத் தோன்றியது. எண்களை மின்வழியில் அனுப்பினால் அவர் அவற்றை சீர்ப்படுத்தி, அவற்றின் முடிபுகளைக் கண்டெடுத்து அதேவழியில் திருப்பி அனுப்பிவிடுகிறார். அந்த எண்ணம் வந்தவுடன், பின்வரும் விளம்பரத்தை ‘பயோ-ஸ்டாட்’ வலைத்தளத்தில் பதிவுசெய்தாள்.
வான்டர்பில்ட் பல்கலைக்கழகம் மேற்கொள்ள இருக்கும் ஒரு கூட்டு ஆராய்ச்சிக்கு புள்ளிநிபுணர் தேவை. அளவிடப்படும் எண்களைப் பகுத்து ஒழுங்குபடுத்த வேண்டும். ஆண்டு முழுவதிலும் அதிகபட்சம் ஐநூறு மணி செலவிட நேரிடும். சன்மானமாக இருபதாயிரம் டாலரும், கணினியின் நேரத்திற்கு நாலாயிரம் டாலரும் மானியத்தில் ஒதுக்கப்பட்டிருக்கின்றன. அது அங்கீகரிக்கப்பட்டால் ஐந்தாண்டுகளுக்கு ஒப்புதல் தரப்படும். ஆர்வமுள்ளவர்கள் தொழில் அனுபவத்தைக் குறிப்பிட்டு மின்-தபாலிலோ, தொலைபேசியிலோ டாக்டர் சாரா நாதனை உடனே தொடர்பு கொள்ளவும்! விவரம்…..

அன்றுமாலை வீடு திரும்பியபோது சரவணப்ரியா, “இன்னைக்கி காலைலே ‘பயோ-ஸ்டாட்’லே ஆள் வேணும்னு விளம்பரம் தந்தேனே ஞாபகமிருக்கா? நீகூட இருபதாயிரத்துக்கு பெங்களுர் கத்துக்குட்டி ஆசாமிதான் கிடைப்பான்னு கேலிசெஞ்சியே. மத்தியானமே ஒருத்தர் கிடைச்சாச்சு, இங்கியே பலவருஷ அனுபவத்தோட. நாங்க விரும்பற வேலையைச்செய்ய அந்த ஆளுக்கு முழுத்தகுதியும் இருக்கு” என்று பெருமையாகச் சொன்னாள். “விளம்பரத்தை உடனே எடுக்கச் சொல்லிட்டேன்.”
பல்கலைக்கழகத்தை ஒட்டிய குறுகிய சாலைகளில் போக்குவரத்தை அனுசரித்து கார் மெல்லச்சென்றது. “வெரிகுட்! அதிருஷ்டம்தான்” என்றான் சாமி.
“முதல்லே டல்லஸ்லேர்ந்து ஒருத்தன். க்ரான்ட் நிச்சயமா கிடைக்குமான்னு அதட்டிக் கேட்டான். டாக்டர் சோமசுந்தரம் சொன்னதிலேர்ந்து அப்ளிகேஷனுக்கு நல்ல ஸ்கோர் தருவாங்கன்னுதான் தோணுது. இருந்தாலும் எதுவும் கைக்கு வந்தப்புறம்தான் நிச்சயம். அதனாலே, ‘சான்ஸ் இருக்கு. நல்ல முடிவுன்னா ஒருமாசத்திலே தெரியும், கிடைக்காட்டா உடனே தெரிஞ்சுடும்’னு சொன்னேன். அவனுக்குத் திருப்தி இல்லை. யோசிக்கறதா சொல்லி Nஃபானை வச்சுட்டான். மதியம் மூணுமணிக்கு மேலே கலிNஃபார்னியாலே ஒரு ஆளோட பேசினேன். எல்லாவிதத்திலேயும் ஒத்துப்போயிட்டுது. அது யாருன்னு சொல் பாக்கலாம்!”
“எனக்கு எப்படித் தெரியும்?”
“கெஸ் பண்ணு!”
“ஒருபெண். அவதான் குறைச்சல் சம்பளத்துக்கு வருவோ. சாரி! பெண்களை அவமதிக்கலை, சமுதாயத்தோட நிலமை அப்படி.”
“ரொம்ப சரி. அவளுக்கு நம்ம வயதுதான். நமக்கு அவளை ரொம்பநாளைக்கு முன்னாலேயே தெரியும்.”
நெடுஞ்சாலைக்குள் நுழையுமிடத்தில் சிவப்பு விளக்கிற்குமுன் சாமி காத்திருந்தான். புள்ளிவிவரம் தெரிந்த பெண், அறுபதை எட்டுகிறாள், ஆண்டிற்கு இருபதாயிரம் டாலர் தந்தால் போதும்…
“நம்மோட அவ காலேஜ்லே படிச்சா.”
பாவாடை தாவணிகள், புடவைகள், ஒன்றிரண்டு சல்வார் கமீஸ்கள், என்று அவன் மனக்கண்ணில் நகர்ந்த இளம்பெண்களின் ஊர்வலம் ஒருத்தியைக் கண்டதும் நின்றது. பி.எஸ்ஸி. ஸ்டாடிஸ்டிக்ஸ் வகுப்பிலிருந்தது ஒரேஒரு பெண். போக்குவரத்து விளக்கில் பச்சை அம்புகுறி தோன்ற, சாமி வளைந்த பாதையில் திரும்பி நெடுஞ்சாலையில் விரைந்த ஊர்திகளோடு சேர்ந்தான்.
“பி.கே.சி. பரிமளவல்லியா?” குரலில் வியப்பு, ஆவல் எல்லாம் அடக்கம்.
“உடனே கண்டுபிடிச்சுட்டியே. சபாஷ்! அவ இனிஷியல்கூட உனக்கு நினைவிருக்கு, ம்ம்!” குரலில் கேலியின் தொனி. அது சாமியை மேலும் உற்சாகப்படுத்தியது.
“இனிஷியலென்ன, அவளோட முழுப்பேரே சொல்வேன். புத்தாடை கோலப்பன் சக்கரவர்த்தி பரிமளவல்லி. காலேஜ்லே படிக்கறதுக்கு முன்னாடியே எனக்கு அவளை நன்னாத் தெரியும்.”
“முன்னாடின்னா…?”
“அப்போ தாம்பரம் ‘ஏர்Nஃபார்ஸ் காம்ப்’புக்குள்ளே குடியிருந்தோம். அவ வீடு எங்களுக்கு எதிர்வரிசையிலே இருந்தது. அங்கே தழிழ் பேசற குடும்பங்கள் நாலைந்துதான், அதனாலே எங்களுக்குள்ளே பழக்கம் ஆரம்பிச்சுது. முதல்தடவை அவளைப் பாத்தப்போ நான் செக்கர்ஸ் நன்னா ஆடுவேனேன்னு பெருமையடிச்சிண்டது தப்பாப் போயிடுத்து. செஸ்ஸே விளையாடத்தெரிஞ்ச அவளுக்கு செக்கர்ஸ் என்ன பிரமாதம்? என்னை நிமிஷமா ஜெயிச்சுட்டா.”
“ஒரு அழகான பெண்கிட்ட தோத்தது உனக்கு அவமானமா பட்டிருக்காதே” என்றாள் கிண்டலாக.
சரவணப்ரியாவின் குறுக்கீட்டைப் பொருட்படுத்தாமல் சாமி தொடர்ந்தான். “அவ சென்ட்ரல் ஸ்கூல்லே படிச்சா, நான் வெளிலே போய் தமிழ் மீடியத்திலே படிச்சேன். ஒருதடவை ஏர்Nஃபார்ஸ்லே வேலைசெஞ்ச தமிழ்க்காரங்க எல்லாரும் சேர்ந்து ‘துணையைத் தேடினான்’னு ஒருநாடகம் போட்டாங்க. அதைப்பார்க்க ஜெமினி கணேசனும், சாவித்ரியும்கூட வந்திருந்தாங்க. நாடகம் முடிஞ்சதும் ஜெமினி எல்லாரையும் பாராட்டிப் பேசினார். அப்பத்தான் அவர் ஏர்Nஃபார்ஸ் ஆஃபீசரா நடிச்ச ‘பனித்திரை’ சினிமா வந்திருந்தது.”
“அந்தப்படத்திலே, ‘வருக வருக என்று சொல்லியழைப்பார்’னு ஒருத்தி திருமண நாளை நினைச்சுப் பாடறமாதிரி ஒருபாட்டு, வார்த்தைகள் ரொம்ப நல்லா இருக்கும்.”
“எனக்கும் அந்தப்பாட்டு பிடிக்கும். சின்னவயசில் ரயில்லே போகும்போது ஒருவன், கையில் வெள்ளிகூஜா வைத்திருக்கும் ஒரு அழகான பெண்ணைப் பார்த்துவிட்டு, அவள் நினைவாகவே இருக்கான். பிறகு, கல்யாணவயசு வரும்போது, மயிலும் கிளிகளும் படம்போட்ட அந்த கூஜாவை வச்சு, அவளைத் தேடிக்கண்டுபிடிக்கிற ரொமான்டிக் கதை. நாடகத்திலே சின்னவயசுப் பெண்ணா பரிமளா நடிச்சா. முதல்காட்சிலே, ‘ரயில் ஊஞ்சலாட்டம் ஆடறதே’ன்னு ராகத்தோட சொல்லணும். அதுக்கப்புறம் நான் அவளைப் பார்க்கும்போதெல்லாம் அந்த வசனத்தை அவமாதிரியே சொல்லிக் கேலிபண்ணுவேன்.”
“அவளோட அவ்வளவு நெருக்கமா? இதுவரைக்கும் நீ என்கிட்டே சொல்லவே இல்லையே” என்று குற்றம்சாட்டுவதுபோல் சொன்னாள்.
“அப்படிப்பாத்தா, வேதவல்லியைப் பத்திக்கூட நான் சொன்னதில்லை.”
“அது யார் வேதவல்லி?”
“பள்ளிக்கூடத்திலே என்னோட படிச்சா. என்னோட புத்தகங்களையும், பாடநோட்டுகளையும் அடிக்கடி கடன் வாங்கிப்போ. பாடம் நடக்கும்போது திருட்டுத்தனமா என்பக்கம் திரும்பி அர்த்தமில்லாம சிரிப்போ. பாவம்! மேலேபடிக்க வசதியில்லாம ஏதோவொரு கம்பெனிலே வேலைக்குப் போயிட்டா. அப்புறம் சின்னவயசிலேயே கல்யாணமும் ஆயிடுத்து” என்று வருத்தத்தோடு சொன்னான்.
“இப்பத்தான் ஒண்ணொண்ணா வெளியே வருது. அவ்வளவுதானா, இல்லை இன்னுமிருக்கா?”
சாமி யோசித்துவிட்டுச் சொன்னான். “அந்தவயசில் கொஞ்சநாள் பழக்கத்திலேயே எனக்கு ஒருபெண்மேலே ஆசைவரும். மழைபெய்தவுடனே புல்தரைலே ஒரேநாளிலே வளர்ற நாய்க்குடைகள் மாதிரி அது முளைக்கும். வேரில்லாத காளான்களைப்போல வந்தவேகத்திலே அது மறைஞ்சும் போயிடும்.”
சரவணப்ரியா சிந்தனையில் ஆழ்ந்தாள். “அடடா! என்ன அழகான உவமை! இதை அப்பா கேட்டிருந்தா மிகவும் ரசிச்சிருப்பார்” என்றபோது அவள் கண்களில் நீர் திரண்டது. அவர் நினைவில் வீட்டிற்கு வரும்வரை அவள் பேசவில்லை.

சரவணப்ரியாவுக்கு அன்று வேலையின் பளு அதிகமென அவளைச் சாப்பிடுமிடத்தில் உட்காரவைத்து சாமி சமையல் செய்தான். அரிசி, பருப்புடன் உருளைக்கிழங்கு வேகும்போது, இரண்டு தக்காளிப்பழங்களையும், கொத்தமல்லியையும் துண்டுதுண்டாக நறுக்கினான்.
“1-ப்ரோமோப்ரோபேன் பேப்பர் நன்னா வந்திருக்கு. என்னுடைய ‘கமென்ட்ஸை’ உனக்கு அனுப்பிட்டேன்” என்றான் சாமி.
“வந்தது. ஐரீன் நிறைய மாற்றங்கள் செய்யணும்னு சொல்லியிருக்கா. இந்த வாரத்துக்குள்ளே திருத்தி எழுதிடுவேன். கஜமுகன் கிட்டேர்ந்து இன்னும் பதிலைக் காணம். வந்ததும் அதையும் சேர்த்து டாக்சிகாலஜி ஜர்னலுக்கு அனுப்பலாம்னு இருக்கேன்.”
“அவனுக்குப் படிக்க நேரம் கிடைக்கலையோ என்னவோ.”
நுண்ணலை அடுப்பில் அப்பளம் சுட்டதும் சமையல் முடிந்தது.
ரசம் சாப்பிடும்போது, “பையன்களுக்கு எப்படியோ தெரியாது. பெண்கள் யாருக்கும் பரிமளாவைப் பிடிச்சதில்லை” என்று சரவணப்ரியா ஆரம்பித்தாள்.
“பையன்களுக்கும் அப்படித்தான். அவ அழகுலே ஒருகண். ‘ஃபிசிக்ஸ் மேஜர்’ சுந்தரேசன் அவ பின்னாடியே வேலைக்காரன் மாதிரி சுத்தினான். ஆனா அவ யாரையும் லட்சியம் பண்ணலை.”
“அவளுக்கு கர்வம் ஜாஸ்தி. தான் ரொம்ப ஒழுங்குமாதிரி பேசுவா. செங்கல்பட்டுலேர்ந்து என்னோட இந்திரான்னு ஒருத்தி ஹிஸ்டரி படிச்சா. அவளோட அப்பா ரயில்வேலே பார்சல் க்ளார்க். கம்பன் வீட்டுக் கட்டுத்தறியும் கவிபாடும்னு சொல்றமாதிரி, அவங்க வீட்டு ஜன்னல்கம்பியும் லஞ்சம் வாங்கும்னு சொல்வாங்க. ஒருநாள் இந்திரா, ‘வேலை சீக்கிரமா நடக்கணும்னா லஞ்சம் கொடுத்துத்தான் ஆகணும்’ன்னு சாதிச்சா. அதுக்கு பரிமளா அவளை உலுக்கி எடுத்துட்டா.”
“ஒருவேளை, அப்பாவோட தப்புனால அந்த குணம் வந்திருக்கலாம்.”
“பரிமளாவோட அப்பா என்ன தப்பு செஞ்சார்?”
“என் அப்பாவோட சம்பளத்திலேர்ந்து கதையை ஆரம்பிக்கணும். ஏர்Nஃபார்ஸிலே அவருக்கு சம்பளம் முதல்தேதி வரும். மாசம் கிட்டத்தட்ட ஆயிரத்திஇருநூறு ரூபா. எல்லாம் புத்தம்புது சலவை நோட்டு.”
“அவ்வளவா? என் அப்பாவுக்கு நானூறு வந்தா அதிகம். எல்லாம் பழைய பத்துரூபா நோட்டுகள். நூறு ரூபா நோட்டை நான் பாத்ததுகூட கிடையாது. ஆங்கிலம், கணக்கு வாத்தியாரா இருந்தா ட்யுஷன்லே பணம் சம்பாதிக்கலாம். தமிழாசிரியருக்கு அந்த வசதியும் இல்லை.”
“ஆயிரம் ரூபாய்க்கு பத்து நீலநூறுரூபா நோட்டு, இல்லாட்டா பத்துரூபா கட்டு ஒண்ணு பிரிக்காம வரும். பின்கூட புதுசா பளபளன்னு இருக்கும். ஒரு ஒத்தைரூபா கட்டு. பிரிச்சு மோந்துபாத்தா அதுக்குன்னு தனிவாசனை. ஐந்து, ரெண்டு, ஒண்ணுன்னு மீதிச்சில்லறை. ஆனா எல்லாம் புதுசுதான், எண் தப்பாத வரிசைலே இருக்கும். நாங்க பால்காரனுக்குக் குடுக்கும்போது, கடைலே சாமான் வாங்கும்போது, நோட்டுகளை ஒண்ணொண்ணா எண்ணமாட்டோம். முதல்நோட்டு நம்பரையும், கடைசிநோட்டு நம்பரையும் பாத்து கத்தையா தருவோம். அது மத்தவங்களுக்கு ஆச்சரியமா இருக்கும். எப்படி இவ்வளவு புதுசா இருக்குன்னு அப்பாவை ஒருதடவை கேட்டேன். ‘சர்க்கார் நாசிக்லே அச்சடிச்சு அப்படியே நமக்கு அனுப்பிடறது’ன்னு சொன்னார்.”
“நீ செய்த உருளைக்கிழங்கு கறி பிரமாதம். அதுக்காகவே தயிர்சாதம் சாப்பிடப்போறேன்.”
“பரிமளா நாடகத்திலே நடிச்ச சமயத்திலேதான் நான் சொல்லப்போறதும் நடந்தது. முதல்லே சம்பளத்தின் சில்லறை நோட்டிலே சிலது பழசா வர ஆரம்பிச்சுது. அக்கௌன்ட்ஸ் ஆஃபீஸ்லே யாராவது தன்னோட சொந்தப்பணத்தைப் போட்டு அதுக்குப் பதிலா புதுநோட்டுகளை எடுத்திருப்பான்னு அப்பா சொன்னார். ஒருதடவை சில்லறை எல்லாமே பழசா இருந்தது. ஆறுமாசம் கழிச்சு பத்துரூபா கட்டு முழுசுமே பழசு. மத்தவங்களைக் கேட்டப்போ எல்லாருக்குமே பழைய நோட்டுதான்னு தெரிஞ்சிது. அடுத்தமாசம் மறுபடி சில்லறைமட்டும் பழசு. இருந்தாலும் அப்பாவுக்கு அக்கௌன்ட்ஸ் ஆஃபீஸ்லே ஏதோ தில்லுமுல்லு நடக்கறதோன்னு சந்தேகம். எல்லாருக்கும் சம்பளம் முதல்தேதி குடுத்தாலும் மொத்த பணம் ரிசர்வ் பாங்க்லேர்ந்து ரெண்டுநாளைக்கு முன்னடியே வந்துடும். கமான்டிங் ஆஃபீசரும், அக்கௌன்ட்ஸ் ஆஃபீசரும் அதை வாங்கி சேஃப்லே பூட்டி வைப்பாங்க. ஒவ்வொரு மாசமும் பணம் வந்த அன்னிக்கி இருட்டினப்புறம் வெளிஆசாமி ஒருத்தன் வர்றதை அப்பா பாத்திருக்கார். அந்த ஆளுக்கு சம்பளப்பணத்திலே ஒருபங்கை ரெண்டுநாளைக்கு கடனுக்கு விடறாங்கன்னு அவருக்கு சந்தேகம். திரும்பிவர்ற பணம் பழசாத்தானே இருக்கும். ஆரம்பத்திலே அந்த பங்கு கொஞ்சமா இருந்தது. ஆசை பேராசையாபோய் ஒருதடவை பாதிக்குமேலே கடன் கொடுத்திருக்காங்கன்னு கண்டுபிடிச்சார். கோர்ட்-மார்ஷல் நடந்தது. சம்பந்தப்பட்ட பெரிய ராங்க்லே இருந்தவனை ஒருபடி இறக்கி விட்டுட்டாங்க. ஆனா, அக்கௌன்ட்ஸ் ஆஃபீசரா இருந்த பரிமளாவோட அப்பாவை எந்த ‘பெனிஃபிட்’டும் இல்லாம துரத்திட்டாங்க. அவமானத்தோட, யார்கிட்டேயும் சொல்லிக்காம க்ரோம்பேட்டைலே வீடு பாத்துண்டு போயிட்டார். ஒருவருஷம் வரைக்கும் அவருக்கு வேறவேலை கிடைக்கலை. வீட்டிலே பெண்டாட்டி கொடுத்த தொந்தரவு பொறுக்கமுடியாம சுட்டுண்டு தற்கொலை பண்ணினுட்டார்னு ‘தினத்தந்தி’லே போட்டிருந்தது. காலேஜ் வந்தப்புறம்தான் மறுபடி பரிமளாவைப் பார்த்தேன். அவ என்னைத் தெரிஞ்சதா காட்டிக்கவே இல்லை. என்னோட அப்பா கிளப்பிவிட்டுத்தான் அவ அப்பாவோட தப்பு வெளிலேவந்ததுன்னு என்மேலே கோபமா இருக்கலாம்.”
“அந்த கோபம் இல்லாட்டா என்னோட இடத்திலே அவ இருந்திருப்பா, இல்லையா?” என்று சரவணப்ரியா கதையை வேறொரு கோணத்தில் திருப்பினாள்.
“நிச்சயமா எப்படிச் சொல்லமுடியும்?”
“ஒரு பேச்சுக்குத்தான். நினைச்சுப்பார்! உன் அம்மாவுக்கு என்னைவிட அவளைப் பிடிச்சிருக்கும். அவ என்னைவிட ஒருவயசு சின்னவ வேற.”
“அவ ஐயங்காராச்சே…”
“அது ஒருபெரிய வித்தியாசமா?”
“ஆமா! நீ இப்ப பண்ணறது ஐயங்கார் யோகா. ஐயர் யோகா இல்லியே” என்று சம்பந்தமில்லாத ஒன்றைச் சொல்லி சாமி சமாளித்தான்.
சாப்பிட்டு முடித்தாகிவிட்டது. “நீ இன்னைக்கு சமைச்சிருக்கே. நான் பாத்திரமெல்லாம் கழுவிவைக்கிறேன்” என்று எழுந்தாள் சரவணப்ரியா.
“பரிமளாவோட ரெசுமே பாத்தியே. பி.எஸ்ஸி. முடிச்சப்புறம் அவ என்ன பண்ணினா?” அவளைப்பற்றித் தெரிந்துகொள்ளும் ஆவல் அவனுக்கு.
சரவணப்ரியா மீந்திருந்த ரசத்தை பாத்திரத்தோடு ‘ஃப்ரிஜ்’ஜில் வைத்தாள். உருளைக்கிழங்கை ஒரு சிறிய டப்பாவில் சேமித்து, வாணலியைக் குழாயடியில் போட்டாள்.
“இன்டியன் பாங்க்லே வேலைக்குப் போயிருக்கா. அப்படியே பார்ட்டைமா எம்.எஸ்ஸி. செய்திருக்கா. எண்பத்திநாலுலே வேலையை விட்டுட்டு கோர்னேலுக்கு வந்து பிஎச்.டி. சேந்திருக்கா. கடைசி பதினைஞ்சு வருஷமா சான்டா க்ளாராலே பள்ளி ஆசிரியை. அதுக்கு முன்னாலே சென்ட்ரல் ஜியார்ஜியாலே டீசிங் ப்ரோஃபசர்.”
“கல்யாணம் ஆயிடுத்தா?”
“ரெசுமேலே அதைப்பத்தி ஒருகுறிப்பும் இல்லை. பேர் பரிமளா கோலப்பன்னு போட்டிருந்தது.”
“எப்படிப் பேசினா?”
பாத்திரங்களைத் தேய்த்துக்கொண்டே சரவணப்ரியா பதில்சொன்னாள். “அவ பேசினது ரொம்ப பணிவா இருந்தது. முதல் தடவை, எந்த பரிமளான்னு எனக்குத் தெரியாது, சாரா நாதன் என்கிற பெயர்லே இருக்கிறது நான்தான்னு அவளுக்கும் தெரியலை. வேலை நிச்சயமில்லை, க்ரான்ட் கிடைக்கிறதைப் பொறுத்துத்தான் இருக்குன்னேன். ‘பரவாயில்லை, அதிகப்படி வருமானத்துக்குத்தான் இந்த வேலை. வீட்டிலேர்ந்தே நீங்க கேக்கறதை உடனுக்குடன் என்னாலே செய்யமுடியும்’னு சொன்னா. அவ ஃபாக்ஸ் செஞ்ச ரெசுமே பிடிச்சிருந்தது. அதிலேர்ந்து அவ நம்மோட படிச்ச பரிமளவல்லிதான்னு தெரிஞ்சுது. அவளை உடனே கூப்பிட்டேன். சரவணப்ரியான்னு சொன்னதும் சந்தோஷமா பேசத்தொடங்கிட்டா. அடுத்த திங்கள் இங்கே வரமுடியுமான்னு கேட்டேன். அடுத்தவாரம் முழுக்க வின்டர்-ப்ரேக்னு பள்ளிக்கூடம் கிடையாது, தாராளமா வரேன்னு சொன்னா. கூட ரெண்டுநாள் இருந்துட்டுப்போன்னு சொல்லியிருக்கேன். இங்கே வந்துட்டுப்போக சௌத்வெஸ்ட்லே டிக்கெட் வாங்கி அந்த விவரங்களை அவளுக்கு அனுப்பிட்டேன். அடுத்த திங்கள் ஒருமணிக்கு நீ ஏர்போர்ட்லேர்ந்து அவளை லாபுக்கு அழைச்சிட்டு வரணும்.”
“அவளுக்கு நான் யார்னு தெரியுமா?’
“உன்னைப் பாத்தா தெரிஞ்சிக்கறா. கமிட்டி ஆளுங்க இடத்தைச் சுத்திப்பாக்க மூணுமணிக்கு வருவாங்க. அவங்ககிட்ட ‘ஸ்டாட்’ செய்யறதுக்குன்னே ஒரு எக்ஸ்பெர்ட்னு அவளைக் காட்டிடலாம்.”
வேலைமுடிந்ததும் சரவணப்ரியா சாமியின்முன் வந்து அமர்ந்தாள்.
“அப்புறம் வேறென்ன சொன்னா?”
“இங்கே மாதவி ரங்கனாதன்னு ஒருத்தியைத் தெரியுமாம், அவளையும் பாத்துட்டு வியாழன் காலைலே திரும்பிப்போறா. அந்தப்பேர் நான் கேள்விப்பட்டமாதிரி இல்லை, நீ கேட்டிருக்கியா?”
“தமாஷைக் கேளு! நேத்திக்கிதான் அப்படி ஒருத்தி இருக்கான்னு எனக்கு தெரிஞ்சிது.”
“எங்கே பாத்தே அவளை?”
“கோவில்லே.”
“நான் ஏன் பாக்கலை?”

Series Navigation