பரிமளவல்லி – 17. ப்ரூவர் பாட்ஸ்

This entry is part [part not set] of 37 in the series 20101024_Issue

அமர்நாத்17. ப்ரூவர் பாட்ஸ்

ஆவலுடன் ஹிக்கரி காத்திருந்தான். ஐம்பதுமாடிக் கட்டடத்தின் தரைத்தளத்தில் கண்ணாடிச் சுவர்களுக்குள் நிற்காமல் வெளியிலேயே படிகளில் வந்துநின்றான். குளிர்காலமானதால் பிற்பகல் மூன்றுமணி வெயிலிலும் உடல் வேர்க்கவில்லை. ஜுன், ஜுலை வந்தால் ஹியுஸ்டனின் புழுக்கத்திற்கு பழகிக்கொள்ள வேண்டும். ஆயிஷாவுக்கு அந்தக் கவலையில்லை. அவள் பத்துவயது வரை இந்தியாவின் தென்கோடியில் வளர்ந்தவள். நூற்றுப்பத்து டிகிரி பார்த்தவளுக்கு இந்த சூடெல்லாம் எம்மாத்திரம்?
“பத்து நெடுஞ்சாலையிருந்து வெளியேறப்போகிறேன்” என்று அவள் தெரிவித்த பிறகுதான் முப்பத்திரெண்டாவது மாடியில் தன் இருப்பிடத்திலிருந்து இறங்கி வந்தான். வந்து ஐந்துநிமிடமாகப் போகிறது. அவளுடைய பச்சை ப்ரியஸ் கண்ணில் படவில்லை. அவளுக்கு ஏன் தாமதமாகிறது? மணி மூன்றுதானே, சாலைகளில் நெரிசல் இராதே. சுற்றியிருந்த தெருக்களில் ஊர்திகள் தடையின்றி நகர்ந்தன. அவற்றில் நீலத்திலும், வெள்ளியிலும் இரண்டு ப்ரியஸ்களைப் பார்த்துவிட்டான். பச்சையைத்தான் காணோம். அவனை அழைத்துப்போக அவள் ஏற்கனவே ஒருமுறை வந்திருக்கிறாள், அதனால் வழி தப்பிப்போக வாய்ப்பு இல்லை. ஒருவிதத்தில், அவள்வந்து காரில் காத்திருப்பதைவிட அவன் தெருவைப்பார்த்து நிற்பது மேல். அந்த இடத்தில் ஒருநிமிடம்கூட காரை நிற்கவைப்பதற்கில்லை. அதற்காகக் காத்திருந்ததுபோல் எங்கிருந்தோ ஓடிவந்து காவலாளி டிக்கெட் கொடுத்துவிடுவாள். ஐம்பது டாலர் பணால்!
விமானம் ஐந்துமணிக்குத்தான். நேரம் நிறைய இருந்தது. அவன் பொறுமையைச் சற்றே இழந்தது அதனாலல்ல. ஆயிஷாவிடம் நல்லசெய்தி சொல்லவேண்டிய அவசரம். முக்கால்மணிக்கு முன் அவள் பள்ளிக்கூடத்திலிருந்து கிளம்பியவுடன் அவனை அழைத்தபோதே சொல்லியிருக்கலாம். ஆனால் மகிழ்ச்சியான செய்தியை நேரில் சொன்னால்தானே அவள் முகமலர்ச்சியை ரசிக்கலாம்.
இரண்டுநாள் முன்புவரை, அறுபது வக்கீல்களும் அவர்களுக்கு உதவியாக நூற்றுக்கும் அதிகமான அலுவலர்களும் கொண்ட ப்ரூவர் பாட்ஸ் நிறுவனத்தில், யாரும் அவனை அதிகம் சீந்தவில்லை. சிலமாதங்களாக அலையும் குட்டையான கற்றுக்குட்டிக்கு என்ன மரியாதை வேண்டிக்கிடக்கிறது? மதிய உணவிற்குமுன் மிஸ்டர் தாமஸ் ப்ரூவர் அவனைப் பாராட்டிய செய்தி பிற்பகலுக்குள் எப்படியோ நிறுவனம் முழுக்க பரவியது. ஹிக்கரி என்ற வினோதப்பெயருடன் ஒருவன் இருக்கிறான் என எல்லோருக்கும் தெரிந்துவிட்டது. ‘குட் ஜாப்’ என்று புன்னகையிலேயே ஒப்புதல். சிலர் கைகூட குலுக்கினார்கள். இதற்கெல்லாம் மிசஸ் நாதன்தான் காரணம். அவளுடன் பேசியபிறகு மிஸ்டர் ப்ரூவரின் உதவியாளனுக்கு, ‘கெம்-சேஃபின் பித்தலாட்டத்திற்கு அஞ்சவேண்டாம்’ என்ற சுருக்கமான செய்தியை அனுப்பினான். அரைமணியில் மிஸ்டர் ப்ரூவருடன் நேரில்பேச ஏற்பாடு செய்யப்பட்டது. அதுவரை அவன் அவரைத் தனியாக சந்தித்ததில்லை. அவர் அவனைப் பெயர்சொல்லி அழைத்தது பெருமையாக இருந்தது. அவரிடம் மிசஸ் நாதனின் நம்பிக்கைதரும் முடிவுகளைக் குறிப்பிட்டதும் அவனுடைய விடாமுயற்சியில் அவருக்கு மதிப்பு ஏற்பட்டது. பயிற்சிக்காலம் முடிந்தபிறகும் அவன் தொடர்ந்து அங்கேயே பணிபுரியலாமென்று மனமிரங்கினார். சோதனையின் முடிவுகள் தொழிலாளர்களின் சார்பில் வாதிட உதவுவதோடு சரவணப்ரியாவின் ஆராய்ச்சிக் கட்டுரையிலும் சேர்க்கப்பட வேண்டும் என்று அவன் தெரிவித்தபோது அவர் முதலில் சற்றே தயங்கினார். பிறகு, அப்படிப்பட்ட கட்டுரை அவர்களுக்கெதிரான ‘கெம்-சேஃபி’ன் முயற்சியை முறியடிக்கும் என்று அவன் சொன்னதும் ஒப்புக்கொண்டார்.
சிந்தனையில் ஆழ்ந்த ஹிக்கரி அவன்முன் பச்சை ப்ரியஸ் வந்து நின்றதைக்கூட கவனிக்கவில்லை. ஆயிஷா இலேசாக ஒலியெழுப்பினாள்.
காரின் பின்கதவைத் திறந்து ஒருசிறு பெட்டியை வைத்துவிட்டு முன்னால்வந்து அவன் அமர்ந்தான்.
“ஹாய் ஹிக்! நான் வந்ததுகூட தெரியாமல் நின்றுகொண்டே தூங்கிவிட்டாயா?” மார்க்ஸ் வழக்கில் மூழ்கிய அவன் சிலவாரங்களாக நள்ளிரவையும் தாண்டி வேலைசெய்தது அவளுக்குத் தெரியும்.
“வேறொரு நல்ல காரணம். அதிருக்கட்டும், நீ வருவதில் ஏன் தாமதம்? எதாவது விபத்தோ என்று பயந்தேபோனேன்.”
அவன் கன்னத்தில் இலேசாகத்தட்டி, “என்னைப்பற்றி என்ன கவலை என் ராஜகுமாரனுக்கு!” என்றாள். “ஐ-நாற்பத்தைந்தில் தகராறு, நேரமாகிவிட்டது. அப்படியென்ன யோசனை?”
“நம் பெற்றோர்களிடம் நம்மைப்பற்றிச் சொல்லவேண்டிய நேரம் வந்துவிட்டது.”
“ஏரன் நிலை முன்னேறிவிட்டதா?” என்று ஆவலுடன் கேட்டபடி ப்ரியஸை நகர்த்தினாள்.
ஹிக்கரியின் பதில் உற்சாகம் தருவதாக இல்லை. “உண்மையில், என் தம்பியின் கூச்சலும், கத்தலும் கட்டுப்படுத்த முடியாத அளவுக்குப் போனதால் என் பெற்றோருக்கு மனவேதனைதான். அவனை மனநலவிடுதியின் கண்காணிப்பில் விட முடிவு செய்திருக்கிறார்கள். நான் நாஷ்வில் சென்றபோது அதைப் பார்வையிட்டேன். நாளை அவனை அங்கே அழைத்துச்செல்லப் போகிறோம்.”
“ஐ’ம் சாரி, ஹிக்!”
“அவனுடைய ஜீன்ஸில் குளறுபடி. நூம் என்ன செய்ய முடியும்?” என்றான் கைவிட்ட குரலில்.
சாலையின் திருப்பத்தில் ஆயிஷா கவனம் வைக்கட்டும் என ஹிக்கரி மௌனமானான். வடக்கே செல்லும் ஐ-நாற்பத்தைந்து நெடுஞ்சாலையில் சேருவதற்காக இடப்பக்கப் பாதையில் அவள் காத்திருந்தபோது, “ப்ரூவர் பாட்ஸ் நிறுவனத்திலேயே எனக்கு வேலைகிடைக்க நல்ல வாய்ப்பிருக்கிறது” என்ற மகிழ்ச்சியான செய்தியோடு அவள் கன்னத்தில் முத்தமிட்டான்.
முன்னால் நின்ற கார் நகரவே ஆயிஷா அவன்பக்கம் திரும்பி ஒரு மயக்கும் புன்னகையை வீசிவிட்டு பார்வையை நேரே வைத்தாள். போக்குவரவு நிலைப்பட்டபிறகு, “சென்றவாரம் கேட்டபோது சந்தேகம் என்றாயே” என்றாள்.
“மார்க்ஸ் வழக்கை எங்களுக்கு சாதகமாக மாற்றிவிட்டேன்.”
“எப்படி?”
“என் பள்ளிநண்பனின் அம்மா 1-ப்ரோமோப்ரோபேனின் உடல்பாதிப்புகளை ஆராய்ச்சி செய்கிறாள். தொழிலாளர்கள் மற்றும் அவர்கள் வீட்டில் வசிப்பவர்கள் கொடுத்த இரத்தத்தை அவளுக்கு அனுப்பினேன். அவள் தெரிவித்த முடிவு நம்பிக்கை தருவதாக இருக்கிறது. அதை பார்ட்னரிடம் சொன்னதும் அவருக்கு அமோக திருப்தி.”
“நானும் நாளை என் பெற்றோர்களைப் பார்க்கச் செல்லும்போது உன்னைப்பற்றி சொல்கிறேன். ப்ரூவர் பாட்ஸின் வக்கீல் மாப்பிள்ளையாக வருவதை மறுக்கமாட்டார்கள்” என்று அவனைப்பார்த்து சிரித்தாள். “உன் நண்பனின் அம்மாவை நம் திருமணத்திற்கு அழைக்க வேண்டும்.”
“கட்டாயம். அதற்காக மட்டுமில்லை, உன்னைப்பற்றியும், நம் முதல்சந்திப்பையும் அவளிடம் சொன்னபோது அவள்தான் எனக்கு ஊக்கம் தந்தாள்.”
எதிர்காலத்தைப் பற்றிய பேச்சில் அடுத்த அரைமணி விரைவாக ஓடிப்போனது.

ஜார்ஜ் புஷ் விமானநிலையத்தின் புறப்பாட்டுப்பகுதி. வெள்ளி பிற்பகல் என்றதால் காரை ஓரமாக நிறுத்த ஒரு நீண்டவரிசை.
“எந்த ஏர்லைன்?”
“கான்டினென்டல்.”
ஒருவழியாக சிறு இடைவெளியில் புகுந்து காரை நிறுத்திவிட்டு ஆயிஷா இறங்கி கதவருகில் நின்றாள். விளிம்பில் கையகல பார்டருடன் உடலில் பூங்கொடிகள் படர்ந்த நீலநிறக் குட்டைப்பாவாடையிலும், கையில்லாத கருநீல மெல்லிய சட்டையிலும் அவளுக்கு பதினாறுவயதுதான் சொல்லலாம். அவள் வகுப்புக் குழந்தைகள் அவளை அக்காவாக பாவித்து அன்னியோன்னியமாகப் பழகினால் வியப்பில்லை. ஹிக்கரி பெட்டியை இறக்கித் தரையில் வைத்துவிட்டு அவளருகில் வந்தான். இருவரும் இறுக்க அணைத்துக்கொண்டார்கள். ஆயிஷா கறுப்பில்லைதான், ஆனால் ஹிக்கரியின் காகித வெள்ளைக்குப் பக்கத்தில் மாநிறமாகத் தோன்றினாள். அவளுக்கு விலக மனமில்லை. “ஜுன் வரை பொறுத்தக்கொள்! அப்புறம் நான் நிரந்தரமாக இங்கே வந்துவிடுவேன்” என்று காதருகில் வந்த ஹிக்கரியின் இதமான வார்த்தைகளால் நகர்ந்தாள்.
“ஹாவ் அ சேஃப் ட்ரிப், ஹனி!”
“யூ டூ!”
விமான நிலையத்தின் போக்குவரவைக் கண்காணிக்கும் காவலரின் கடுமையான பார்வை படுவதற்குமுன் பச்சை ப்ரியஸ் ஓரத்திலிருந்து வேகமாக நகர்ந்து வெளியேறும் பாதையில் சேர்ந்தது.

ஹிக்கரி விமானத்திலிருந்து இறங்கி ‘பார்க்கிங் லாட்’டில் செவ்வாய் நிறுத்திய தன்காரைத் தேடிப்பிடித்து, நேராக சூரன் வீட்டிற்கே வந்தான்.
மற்றவர்களுடன் அமர்ந்து அவன் சாப்பிட்ட அவசரத்தைப் பார்த்த சரவணப்ரியா, “இப்போதெல்லாம் விமானத்தில் சாப்பிட ஒன்றும் தருவதில்லை. அதனால் உனக்குப் பசியா, இல்லை சாப்பிட்டதும் சோதனைகளின் முடிவுகளைத் தெரிந்துகொள்ளும் ஆவலா?” என்று கேட்டாள்.
“இரண்டும்தான்.”
சாப்பிட்டபிறகு சாமி இடத்தை சுத்தம்செய்ய எழுந்தான். பரிமளா, “நான் உனக்கு உதவி பண்ணறேன்” என்றாள்.
சரவணப்ரியா ஹிக்கரியை பக்கத்து அறைக்கு அழைத்துச்சென்றாள். இருவரும் அமர்ந்ததும் மேஜைமேல் ஒரு காகிதத்தை அவன்முன் வைத்தாள்.
“நீங்கள் விளக்கம் சொன்னால்தான் இந்த எண்களின் அர்த்தம் எனக்கு புரியும்.”
“நீ அனுப்பிய இரத்தத்திலிருந்து க்ளோபினைப் பிரித்தெடுத்து அதை துண்டுகளாக வெட்டுவதற்கு ஒருநாள். அப்படிவந்த அமினோ அசிட்களை எல்சியில் பிரித்து இயற்கையிலிருந்து மாறுபட்ட ப்ரோபில்சிஸ்டினை மாஸ் ஸ்பெக்ட்ரோமீடர் உதவியுடன் சலித்து, அதன் அளவைப் கணிப்பதற்கு இன்னொரு நாள்.”
“எனக்காக நீங்கள் இவ்வளவு செய்ததற்கு மிகமிக நன்றி!”
“நன்றியின் அளவைக் கொஞ்சம் குறைத்துக்கொள்! என்னுடைய ஆதாயமும் இதில் அடங்கியிருக்கிறது.”
“அது எது என்று எனக்குத் தெரியும். நான் அதற்கு ஏற்பாடு செய்துவிட்டேன்.”
“தாங்க்ஸ், ஹிக்கரி! முடிவை மனதில்வைத்து அளவிடக் கூடாது என்பதற்காக இரத்தம் யாரிடமிருந்து எடுக்கப்பட்டது என்பதை என்னிடமிருந்து மறைக்கச் சொன்னேன்.”
காகிதத்தில் எண்களின் வரிசையைக் காட்டினாள்.
“ப்ரோபில்சிஸ்டின் வேலையாட்களின் இரத்தத்தில்தான் மிகையாக இருக்கிறது. மற்றவர்களின் இரத்த அளவு மிகமிக குறைவு. இந்த மாறுதல் இரத்தத்தை அதிகம் பாதிப்பதில்லை. அதற்குக் காரணம் இரத்ததிலுள்ள ப்ரோடீன்கள் அடிக்கடி புதுப்பிக்கப்படுகின்றன. ஆனால் இதே மாறுபாடுகள் நரம்பில் ஏற்படும்போது அதன் செயல்பாடு பாதிக்கப்படுகிறது. தொழிலாளிகளின் மருத்துவ அறிக்கையை வைத்து அந்த எட்டுபேருடைய குறைபாட்டை குத்துமதிப்பீடு செய்தேன். அதுவும் இரத்தத்தின் ப்ரோபில்சிஸ்டினின் அளவும் ஒத்தப்போகின்றன. சிறுநீரை சோதித்துவரும் எண்களும் இந்த முடிவிற்கு ஆதரவாக இருக்கும் என்று எதிர்பார்க்கலாம்.”
ஹிக்கரி மெல்ல கைதட்டினான். சரவணப்ரியா திருப்தியுடன் புன்னகைத்தாள்.
“இவ்வளவும் செய்தபிறகு உங்களுக்கு ஒருசிறுவேலை பாக்கி.”
“என்ன?”
மிக நிதானமாக, முகத்தைப் பணிவுடன் சாய்த்து ஹிக்கரி, “மிசஸ் நாதன்! தயவுசெய்து இதை கோர்ட்டில் வந்து சொல்லமுடியுமா?” என்று கேட்டான்.
சரவணப்ரியா திடுக்கிட்டாள். “வாட்?”
“வேலையாட்களின் நரம்புக்கோளாறுகளுக்கு மின்னணுப் பொருட்களைச் சுத்தம்செய்ய பயன்படுத்தும் 1-ப்ரோமோப்ரோபேன் காரணமாக இருக்கும் என்ற நம் கட்சிக்கு ஆதாரபூர்வமான விளக்கம்தர வேண்டும்.”
“நானா? முடியாது” என்று உடனே மறுத்தாள்.
“ஏன்?”
“இதுவரை செய்தது இல்லையே.”
“எத்தனையோ மாநாடுகளிலும் கருத்தரங்குகளிலும் பேசியிருக்கிறீர்கள். உங்களுக்கு இதென்ன பிரமாதம்?”
“அதெல்லாம் மற்ற விஞ்ஞானிகள் முன்னால்.”
“அதனாலென்ன? இரசாயனத்தில் ஆரம்பபாடத்திற்குமேல் போகாத எனக்குப் புரியவைத்தமாதிரி பன்னிரண்டு பாமரர்களை நம்பவைக்க வேண்டும், அவ்வளவுதான்.”
சரவணப்ரியா திருப்தியடையவில்லை.
“இன்று பிற்பகல் உங்கள் சோதனைகளை உயர்மட்ட வழக்கறிஞர் ஒருவருடன் விவாதித்தேன். அவர் சட்டம் படிப்பதற்குமுன் பயோகெமிஸ்ட்ரியில் பி.எஸ். பட்டம் வாங்கியவர். அவர் இதுபோன்ற பல வழக்குகளைக் கையாண்டிருக்கிறார். உங்கள் போஸ்டரை முதலில் அவருக்கு காண்பித்தேன். பிறகு அதேபோல் மனிதர்களுக்கு நீங்கள் செய்ததையும் அவற்றின் முடிவுகளையும் சொன்னேன். உங்கள் அறிவையும் அனுபவத்தையும் வலைத்தளத்தில் கண்டிடறிந்த அவர் இதுபோன்ற கணிப்புகளில் நீங்கள் நிபுணர், எந்த வக்கீலும் குறுக்கு விசாரணையில் உங்களை மடக்கமுடியாது என்று அபிப்பிராயம் தெரிவித்தார்.”
சரவணப்ரியா பெருமிதம் அடைந்தாலும் அவன் கேட்டதைச் செய்ய தயங்கினாள்.
“அதற்காக இல்லை. வழக்கு என்று வரும்போது மார்க்ஸ், கெம்-சேஃப் தரப்பில் வாதிடும் வக்கீல்கள் தங்களுக்கு பக்கபலமாக சில விஞ்ஞானவேசிகளை அமர்த்திக் கொள்வார்கள். அவர்களை வேசிகளென்றது தவறு. நிஜ வேசிகளாவது எதை விற்கிறார்கள் என்று தெரியும். இவர்கள் காசுக்காக பொய்சாட்சி சொல்பவர்கள். சிகரெட்டும், அல்கஹாலும் உடல்நலத்துக்கு அவசியம் என்றே நம்மை நம்பவைப்பார்கள்.”
“அவர்கள் பொய்யர்கள் என நீங்கள் நிரூபிக்க வேண்டாமா?”
“நிச்சயமாக. அவர்களை ஆய்வுக்கூடத்தில் சந்திக்க விரும்புகிறேன். யார் சத்தமாகக் கத்துகிறார்களென்ற போட்டியில் அல்ல.”
“எப்படியிருந்தால் என்ன? அறிவுசான்ற சாட்சியாக நீங்கள் வழக்கில் ஆஜரானால் ஐம்பதாயிரம் டாலர் கிடைக்கும்” என்கிற ஆயுதத்தைக் கடைசிமுயற்சியாகப் பயன்படுத்த வேண்டும் என்பது அவனுக்குத் தரப்பட்ட அறிவுரை. முன்னாலேயே வெளிவந்து விட்டது.
சரவணப்ரியாவுக்கு அவர்கள் வெற்றி நிச்சயம் என்று மோப்பம் பிடித்துவிட்டார்கள் என்று தோன்றியது, அதனால்தான் ஐம்பதாயிரம் டாலர். தொலைக்காட்சி விளம்பரங்களில் திருட்டுமுழி முழிக்கும் வக்கீல்களின் முகங்கள் நினைவுக்கு வந்தன. அந்தப்பணம் எங்கிருந்து வருமென்று ஊகிப்பதிலும் சிரமம் இல்லை.
“நான் எட்டுமாதங்களில் சம்பாதிப்பது ஒருசில நாட்களிலேயே கிடைக்கும்” என்று நிதானமாகச் சொல்லிவிட்டு, “ம்ம், ஆனாலும் நான் செய்வதாக இல்லை” என்று விரைவாக முடித்தாள்.
“ஏன்?” என்றான் ஹிக்கரி ஏமாற்றத்துடன்.
“செய்தவேலைக்கு இவ்வளவு சம்பளம் என்று வாங்கியபிறகு அதை இரண்டாவது தடவை விற்பது சரியில்லை.”
“சாட்சி சொல்வது உங்களுடைய வான்டர்பில்ட் வேலையில் சேர்த்தியில்லையே. அதிகப்படியாகத்தானே செய்யச் சொல்கிறோம்.”
சரவணப்ரியா மசியவில்லை.
“பணத்துக்காக இல்லாவிட்டாலும், ஏழைத் தொழிலாளர்களுக்கு உதவுவது நம்கடமை இல்லையா?” என்று ஹிக்கரி வேறொரு வழியை எடுத்தான்.
“வழக்கின் பண விவரங்களை யோசித்துப்பார்! பாதிக்கப்பட்ட எட்டுபேருக்குத் தலா 600,000 டாலர் நஷ்டஈடு, சரியா?”
“கிட்டத்தட்ட. ஆனால், கேட்ட பணம் முழுவதும் ஜுரி கொடுக்கும் என்பது நிச்சயமில்லை.”
“அதில் பாதி கொடுத்தாலும் ஒவ்வொருவருக்கும் முன்னூறாயிரம் டாலர். அதில் நூறாயிரம் உங்கள் பங்கு. மீதி அவர்களுக்கு, அது அவர்களின் ஐந்தாண்டுகால சம்பளம்.”
“நரம்புணர்ச்சியை இழந்ததற்கு அது அதிகம் இல்லையே.”
“பத்தாண்டுகாலம் 1-ப்ரோமோப்ரோபேனைப் பெருமளவில் சுவாசித்த சீனப்பணியாட்கள் நரம்புணர்ச்சியை இழந்ததாகத் தெரிகிறது. இரண்டுமூன்று ஆண்டுகளாகத்தான் இந்தத் தொழிலாளர்கள் அதைப் பயன்படுத்தி யிருக்கிறார்கள். அவர்களில் ஒருவன் இறக்கும்தறுவாயில் இருக்கும் தந்தையை கவனிப்பதற்காக ஒருமாதம் வேலைக்கு வரவில்லை. அவனுடைய நரம்புகளின் பாதிப்பு குறைந்திருப்பதாக மருத்துவ அறிக்கையிலிருந்து தெரிகிறது. இரண்டு மாதங்கள் 1-ப்ரோமோப்ரோபேன் தேவைப்படாத வேலைகளைச் செய்தால் மற்றவர்களும் கணிசமான முன்னேற்றம் காணலாம்.”
“முழு நிவாரணம் கிடைக்குமா?”
“ஓரளவு பாதிப்பு இருக்கத்தான் செய்யும்.”
“அதற்கு நாம் ஏதாவது செய்யவேண்டாமா?”
சரவணப்ரியா நிதானமாக பதில்சொன்னாள். “இப்போது, சந்தேகத்திற்கு இடமில்லாமல் ஒரு அசம்பாவிதம் நடந்திருக்கிறது. நிர்வாகம் அலட்சியம் காட்டியதும் நிஜம். அரசியல்வாதிகளைப்போல இதில் எனக்கென்ன ஆதாயம் என்று கணக்கிடாமல், நிலமையை ஆராய்ந்து விஞ்ஞான உண்மைகளையும் பிரச்சினைக்கான தீர்வுகளையும் கண்டுபிடிப்பதுதான் உயர்ந்த பாதை. இனிநடக்காமல் இருக்க என்ன செய்வது என்று யோசித்தால், பாதிக்கப்பட்ட எட்டுபேர்களை ‘லாட்டோ’வில் ஜெயித்ததைப்போல் திடீர் பணக்காரர்கள் ஆக்குவதைவிட 1-ப்ரோமோப்ரோபேனைக் கையாளும் நூற்றுக்கணக்கான தொழிலாளர்களுக்கு உதவுவது சிறந்தவழி இல்லையா? மொத்த சன்மானம் இரண்டு மில்லியன். அந்தப் பணத்தில் தொழிலகங்களின் சூழல்களை உயர்த்தலாம். தொழிலாளர்களை வௌ;வேறு இடங்களுக்கு மாற்றும் பழக்கத்தை மேற்கொள்ளலாம்.”
சரவணப்ரியா சொல்வது நியாயமாகப் பட்டாலும் ஹிக்கரி, “சரி, அவர்களுக்காக நீங்கள் வாதாட வேண்டாம். எனக்காகச் செய்யமுடியாதா?” என்று கெஞ்சுவதுபோல் கேட்டான்.
“இதனால் உனக்கென்ன லாபம்?”
“என்வகுப்பில் படித்துமுடிக்கும் முன்னூறு பேருக்கும் இப்போதைய பொருளாதார சூழ்நிலையில் நிரந்தரவேலை கிடைப்பது நிச்சயமில்லை. சந்தேகம் என்றிருந்த இந்த வழக்கை சாதகமாக்கியதற்காக நிறுவனத்தின் பார்ட்னர் என்னை ப்ரூவர் பாட்ஸில் சேர்த்துக்கொள்ள சம்மதித்திருக்கிறார். அதை இன்று ஆயிஷாவிடம் சொன்னேன். அவள் பெற்றோர்கள் எங்கள் திருமணத்தை மறுக்கமாட்டார்கள் என்று நினைக்கிறாள். ஜுன்மாதம் ஹியுஸ்டனில் அவளுடன் வாழ்க்கையைத் தொடங்க ஆசை.
“நல்ல திட்டம்தான். உங்கள் வாழ்க்கை இனிதாகச் செல்ல இப்போதே என் வாழ்த்துகள்.”
“தாங்க்ஸ்! அதற்கு இந்த வழக்கில் நாங்கள் வெற்றிபெறுவது முதல்படி.”
அப்போதுதான் சரவணப்ரியா தன்நிலையை உணரத் தொடங்கினாள். “என்னைத் தர்மசங்கடத்தில் ஆழ்த்துகிறாய், ஹிக்கரி!”
“யோசியுங்கள்!”
“எப்போது திரும்பிச்செல்கிறாய்?”
“என் தம்பியை மனநோய்விடுதியில் சேர்க்கப்போகிறோம். அதற்காக இங்கே ஒருவாரம் இருப்பேன்.”
“அதற்குள் நீ அனுப்பிய சிறுநீர் சாம்பில்களையும் சோதித்துவிடுவேன். எல்லாவற்றையும் சேர்த்துவைத்து ஒரு முடிவெடுப்பேன்.”
இவ்வளவுதூரம் அவனுக்கு உதவிய அவளை இனியும் கட்டாயப்படுத்துவது சரியில்லை என உணர்ந்து ஹிக்கரி, “எல்லாவற்றுக்கும் நன்றி, மிசஸ் நாதன்! உங்கள் முடிவு எதுவானாலும் நான் ஏற்பேன். பை!” என்று எழுந்தான்.
வாசல்வரை சென்று அவனை வழியனுப்பிவிட்டு சமையலறைக்கு வந்தபோது, பரிமளா யாருடனோ செல்லில் பேசுவதைக் கவனித்த சரவணப்ரியா உடை மாற்றிக்கொள்ள மாடிக்குச் சென்றாள்.

Series Navigation

அமர்நாத்

அமர்நாத்