பரிமளவல்லி 26. வெற்றிலைக்கொடி (இறுதி அத்தியாயம்)

This entry is part [part not set] of 48 in the series 20101227_Issue


26. வெற்றிலைக்கொடி

சனிக்கிழமைகாலை. ஏழுமணிக்கு இன்னும்சில நிமிடங்கள். விமானநிலையத்தில் அதிக கும்பலில்லை. சரவணப்ரியா சாமியையும், பரிமளாவையும் நுழைவிடத்திற்கு அருகே இறக்கினாள். சாமி பெட்டிகளை இறக்கி அவற்றை இழுத்துக்கொண்டு பரிமளாவுடன் விமானநிலையத்தில் நுழைந்தான். அவள் ‘செக்-இன்’ செய்யவும் பெட்டிகளைத் தூக்கி சௌத்வெஸ்டில் ஒப்படைக்கவும் உதவினான்.
“சான்ஹொசே போனதும், பத்தூ பெட்டிகளைப் பாத்துப்பான். நீ தூக்கக்கூடாது!” என்று எச்சரித்தான்.
காரை நிறுத்திவிட்டு வந்த சரவணப்ரியா அவர்களுடன் சேர்ந்துகொண்டாள். சான்ஹொசே செல்லும் விமானம் நேரத்திற்குக் கிளம்பும் என்று மின்-அறிவிப்புப் பலகையில் படித்து, “நல்லபடியா, ‘புத்தாடை பரிமளவல்லியின் நாஷ்வில் விஜயம்’ ஒருமுடிவுக்கு வரப்போகிறது” என்றாள்.
“இன்னும் வரலை. ப்ளேன் மேலே போனப்புறம்தான் நிச்சயம். ரெண்டுதடவை கிளம்பறேன் கிளம்பறேன்னு சொல்லிட்டு உங்களை நன்னா ஏமாத்திட்டேன். இது மூணாவது தடவை” என்றாள் பரிமளா.
“தேர்ட் டைம் ஈஸ் அ சார்ம்” என்ற சாமி பிரியப்போகிற பரிமளாவை உற்றுப்பார்த்தான். நாஷ்வில்லுக்கு வந்தபோது அணிந்த அதே ஆடை, ஆனால் இப்போது அவள் உடலிலிருந்து பிரிந்துநின்றது. முகத்தில் வந்தபோது இருந்த நிச்சயமற்ற உணர்ச்சிக்கு பதிலாக திருப்தியும், நிம்மதியும். ‘ரயில் ஊஞ்சலாட்டம் ஆடறதே’ என்று ராகத்தோடு சொன்ன இளைய முகத்தின் சாயல் அதில் தெரிந்தது.
“சான்ஹொசேலே ப்ளேன்லேர்ந்து நீ இறங்கினப்புறம் புதுவாழ்க்கை காத்திருக்குது” என்று வாழ்த்துவதுபோல் சரவணப்ரியா சொன்னாள்.
பரிமளாவின் திருப்தியான புன்னகையில் ஒரு பதில். சாமி, சரவணப்ரியா இருவரையும் தனித்தனியாகக் கட்டிக்கொண்டு விடைபெற்றாள். “இனிமே நீங்களும் கவலையில்லாத பழைய தினப்படி வாழ்க்கைக்கு திரும்பிப் போகலாம்.”
“நீ இன்னும் முழுக்க குணமாகலை, ஞாபகம் வச்சுக்கோ! நாலைஞ்சு நாள் ரெஸ்ட் எடுத்துண்டு நிதானமா வேலைக்குப்போனா போரும். திங்கள் உன்னுடைய ரெகுலர் டாக்டர்கிட்டே அபான்ட்மென்ட் இருக்கு. மறக்காதே!” என்றான் சாமி ஞாபகமாக.
விமானநிலையத்தின் பாதுகாப்பு சோதனைக்காக ஒற்றைச் சங்கிலியை கழுத்திலிருந்து எடுத்து, காலணிகளைக் கழற்றி பரிமளா தன்னைத் தயார்செய்தாள். அதைக் கடந்துசெல்ல அவளுக்கு அதிக நேரமாகவில்லை. திரும்பி சாமிக்கும் சரவணப்ரியாவுக்கும் கையசைத்துவிட்டு நெடுக நடந்தாள். கோடியில் இருபத்திநான்கு எண்போட்ட நுழைவாயில். காத்திருக்கும் இடத்தில் இன்னும் கும்பல் சேரவில்லை. கிழக்குநோக்கிய ஜன்னலின் அருகில் அமர்ந்தாள். அவளுடைய வாழ்வின் முக்கியமான நாளைத் தொடங்க சூரியன் முயற்சித்துக் கொண்டிருந்தான். பயணிகளை அழைக்க முக்கால்மணிக்கு மேல் இருந்தது. கிளம்பும் அவசரத்தில் பசியில்லை என்று பரிமளா சொன்னதும் சரவணப்ரியா சாப்பாட்டு டப்பாவை ஒருபையில் வைத்துக் கொடுத்திருந்தாள். பரிமளா அதை எடுத்துத் திறந்தாள். இவ்வளவு உப்புமாவா? சான்ஹொசே செல்லும்வரை தாங்குமென்று அதை சாப்பிட ஆரம்பித்தாள். மூன்றுநாள் வருகை இருபதுநாட்களுக்கு நீடித்த வினோதத்தை நினைத்தாள். அவள் எதிர்பாராத எவ்வளவோ சம்பவங்கள், மாற்றங்கள்.

எப்போதும்போல் சாமிக்கும், சரவணப்ரியாவுக்கும் யாரையாவது வழியனுப்பிய பிறகு வரும் வெறுமை. வீடுதிரும்பும் வரை பேசவில்லை.
கலகலப்பாக இருந்த வீடு இப்போது காலியாகக் காட்சிதந்தது.
“சூரனைத் தவிர வேறயார் இவ்வளவுநாள் நம்மோடு இருந்திருக்காங்க?”
உண்மைதான். ஓரிரவு மட்டும் தங்கும் தூரத்து சொந்தம். மெமோரியல்டே, லேபர்டே என்று மூன்றுநாள் விடுமுறைக்கு வருகைதரும் நண்பர்கள். ஒருதடவை சரவணப்ரியாவின் உறவுக்கார பையன் ஒருவன் படிப்பில் ஏதோ தகராறு என்று மனதைத் தேற்றிக்கொள்ள ஆறுநாட்கள் தங்கியிருந்தான். மற்றபடி, அந்தப்பெரிய வீட்டில் அவர்கள் இருவர் மட்டும்தான்.
வருத்தத்திற்கு உணவு ஒரு மருந்து. பரிமளாவுக்குத் தந்ததுபோக மிச்சமிருந்த உப்புமாவை ஒருவழியாக சாப்பிட்டு முடித்தார்கள்.
தொலைபேசியின் அழைப்பைக் கேட்டு முன்னறைக்கு ஓடிச்சென்று சாமி எடுத்தான். எதிர்பார்த்தபடி பரிமளாதான்.
“ரெண்டுபேருக்கும் பொதுவா இருக்கட்டும்னு வீட்டு நம்பர்லே கூப்பிட்டேன். ப்ளேனுக்குள்ளே போகப்போறேன். கிளம்பிடும்னு நம்பிக்கை இருக்கு. அதனாலே, என் கதைக்கு முற்றும், சுபம், சமாப்தம், தி-என்ட், ஃபினி எல்லாம் போட்டுடலாம்.”
“போட்டா போறது. சான்டா க்ளாரா போனதும் கூப்பிடு!”
“வீட்டுக்குப் போனதும் முதல்காரியமா கூப்பிடறேன். எப்போ முடியறதோ அப்போ நீங்க ரெண்டுபேரும் ஒருவாரமாவது என்வீட்டுக்கு வரணும்!”
“கட்டாயம்.”
ஒலிவாங்கியை அதனிடத்தில் வைத்தபோது தொலைபேசியில் பதிவான செய்தி இருப்பதை சாமி கவனித்தான். நாற்காலியில் அமர்ந்து கேட்டான். ஒன்றல்ல, இரண்டு. அரைமணிக்குமுன் வந்தவை. இரண்டிலும் ஒரே பெண்ணின் குரல். சமாசாரமும் ஒன்றுதான்.
“ஒரு மிகமிக முக்கியமான காரணத்திற்காகக் கூப்பிடுகிறேன். உங்களுடன் பேச மறுபடி முயற்சிப்பேன்.”
முக்கியமான என்கிற வார்த்தைக்கு இரண்டு அடைகள் எதற்கு? எழுந்திருக்க மனமில்லாமல் சாமி சிந்தனையில் ஆழ்ந்தான்.

விமானம் உயரத்திற்குச் சென்றபிறகு அதிர்ச்சி குறைந்தது. அதிகாலையிலேயே எழுந்ததால் பரிமளாவுக்கு அசதி. மூடிய ஜன்னலில் சாய்ந்து சற்று தூங்கினால் சான்டா க்ளாரா சென்றதும் ஆகவேண்டிய காரியங்களை கவனிக்கலாம். ஆனால் பரிமளாவுக்கு தூக்கம் வரவில்லை. இந்தியாவுக்குச் சென்றபோதுகூட அவள் இவ்வளவு பரபரப்பாக இருந்ததாக நினைவில்லை, இப்போது ஏன்? வாழ்க்கையின் அடுத்த கட்டத்திற்கு ஏற்பாடா?
பத்தூ எப்படி இருப்பான்? நிச்சயம் மாறியிருப்பான். அவர்கள் பழகிய மூன்று வருஷங்களிலேயே பிரமிக்கத்தக்க வளர்ச்சி. மாற்றம் வாழ்க்கையின் அடையாளம். அவள் எவ்வளவு மாறினாள் என யோசித்தாள். கடந்துபோன ஒருமாதத்தில் அவள் அடைந்த மாற்றம் அதற்கு முந்தைய இருபது ஆண்டுகள் மாறியதைவிட கணிசமாகத் தோன்றியது. இனி அவள் கூட்டுக்குள் அடைந்துகிடக்கப் போவதில்லை. மிச்சமிருக்கும் வாழ்க்கைக்கு ஒருபழைய சினேகமும் புதுஅர்த்தமும் கிடைத்திருக்கின்றன.
பத்தூவைப் பார்த்தவுடன் என்ன சொல்ல வேண்டும்? அடையாளமே தெரியவில்லையே என்று சொல்லலாமா? குண்டுபோட்டதால் தவறாக நினைப்பானோ? திடீரென ஒரு சந்தேகம். ஒரேவீட்டில் எவ்வளவுநாள் வாழமுடியும்? அவசரத்தில் சரியென்று சொல்லிவிட்டாள். அவன் விட்னியைப்போல் காலிசெய்து போய்விட்டால்? நட்பும் உறவும் ஒட்டுதலிலா இருக்கிறது? எத்தனையோ ஆண்டுகளுக்குப் பிறகு பார்த்தாலும் சாமியுடன் மனம் இணையவில்லையா?
அடுத்த புத்தகத்திற்கு என்ன பெயர் தரலாம்? ‘சந்தேகம் ஒரு வியாபாரம்’ ‘சந்தேகம், விற்பனைக்கு’ ‘சந்தேகமெனும் மாயை’ எதுவும் திருப்தியாக இல்லை. பத்தூவைக் கேட்டால் போகிறது. அவன் விற்பனைப்பிரிவில் இருப்பதாகச் சொன்ன ஞாபகம். மக்களைக் கவருகிறமாதிரி ஒருதலைப்பை யோசித்துச் சொல்வான்.
பத்தூவின் சர்ப்ரைஸ் என்னவாக இருக்கும்? அவளுக்கு ‘ஸ்போர்ட்ஸ்’ பிடிக்குமென்று அவனுக்குத் தெரியும். அதனால், இருபது வருஷத்துக்குமுன் ‘டிஜிடாலிஸ்’ஸின் நேர்காணலிலிருந்து திரும்பியபோது ‘பாஸ்டன் செல்டிக்ஸ்’ சட்டை தந்ததுபோல், இப்போது டைகர் வுட்ஸ் கையெழுத்திட்ட ‘கால்ஃப்’ பந்து? ராஜர் nஃபடரரும், பீடர் சாம்ப்ராஸ{ம் விம்ப்ல்டனில் சேர்ந்து எடுத்துக்கொண்ட படம்?
நான்குமணிநேரம் மிக நீண்டது. பாதிதூரம் தாண்டியபோது சான்ஹொசேயில் நல்லமழை என்று விமானி அறிவித்தார். கடைசி அரைமணி முடியாதா என்றிருந்தது. ஒருவழியாக மேகக் கூட்டங்களுக்குள் புகுந்து விமானம் கீழே இறங்கியது. வெளியே எங்கும் சாம்பல்நிறம். குலுக்கலுடன் ஈரமான தரையைத் தொட்டு, இறக்கைகளின் தடுப்புகளை விரித்து, காதைத் துளைக்கும் இரைச்சலில் வேகத்தைக் குறைத்து, மெதுவாகஓடி, பிறகு ஊர்ந்து கடைசியில் நின்றது. அதற்காகக் காத்திருந்ததுபோல் பலர் பொறுமையற்று எழுந்து நின்றார்கள். அவளுக்குத்தான் புதுப்பிக்கப்பட்ட பழையநட்பை சந்திக்க அவசரம், மற்றவர்களுக்கு என்னவோ?
தனியாகப் பயணம் செய்ததால் எல்லோரும் ஏறியபிறகு நுழைந்த அவளுக்கு விமானத்தின் பின்கோடியில்தான் உட்கார இடம் கிடைத்தது. அதனால் விமானம் நின்று பத்துநிமிடங்கள் கழிந்தபிறகே கைப்பையைத் தோளில் மாட்டிக்கொண்டு அவளால் வெளியேவர முடிந்தது. பத்தூ அவளுக்காகக் காத்திருக்க வேண்டியதுதான். பழகிய நடைவழி, தெரிந்த விளம்பரங்கள். மனம் பரபரத்தாலும் பிரயாணக் களைப்பால் நிதானமாக நடந்தாள். இவ்வளவுநேரம் காத்திருந்தோம், இப்போது என்ன அவசரம்? சோதனை பகுதியைத் தாண்டியாகி விட்டது. புத்தகக்கடையின் முன்னால் நின்று இதயம் படபடக்க உள்ளே கவனித்தாள். மொத்தம் பதினைந்துபேர் இருந்தால் அதிகம். சிலர் செய்தித்தாள் வாங்கினார்கள். இன்னம் சிலர் கடையின் நடுவில் புதிதாக வெளிவந்த புத்தகங்களை மேய்ந்தார்கள். பெரும்பாலோர் வெள்ளை நிறத்தவர்கள். வெள்ளையில்லாமல் பழுப்புத் தோலென்றால் தெற்குநாட்டினரின் சிறிதுசெம்மை கலந்த பழுப்பு. இந்தியர்களிலும் கோர்னேல் சட்டையணிந்து யாரும் காத்திருக்கவில்லை. சாக்ரமென்ட்டோவில் இருந்து வருவதில் பத்தூவுக்கு நேரமாகி யிருக்கும். கலிNஃபார்னியா சாலைகளில் எந்த வேளையிலும் நெரிசல். மழைவேறு பெய்திருக்கிறது. நெடுஞ்சாலையில், தண்ணீர் தேங்கியிருந்தாலும் வேகத்தைக் குறைக்கத் தெரியாத அவசரக் குடுக்கைகளால் விபத்து நடந்திருக்கலாம். மணி பதினொன்றுதானே, நாளில் இன்னும் நிறையநேரம் மிச்சமிருக்கிறது என்கிற சமாதானத்துடன் காத்துநின்றாள்.

சாமியை அதிகநேரம் காத்திருக்க வைக்காமல் தொலைபேசி ஒலித்தது.
“ஹலோ!”
“ஹாய்! இந்த எண்ணில் இருக்கும் சாமி நாதன் நீங்களா?” செய்திகளைப் பதித்த அதேபெண்ணின் அதிகாரக்குரல்.
“முதலில், நீங்கள் யார்?”
மற்றவள் தன் தவறை உணர்ந்திருக்க வேண்டும். குரலை தணித்துக்கொண்டு, “மன்னிக்கவும்! என்பெயர் ராகினி. சாக்ரமென்ட்டோவிலிருந்து கூப்பிடுகிறேன். கடந்த ஒருவாரமாக என் கணவர் பத்மநாபன் தன் செல்லிருந்து இந்த எண்ணைப் பலமுறை அழைத்துப் பலநிமிடங்கள் பேசியிருக்கிறார். யாருடன் என்று தெரிய விருப்பம்” என்றாள். இப்போது கலிNஃபார்னியாவில் ஆறுமணிகூட இல்லையே. அதிகாலையில் எதற்கு இந்த விசாரம்?
பத்தூ பரிமளாவை அழைத்துப் பேசியதை வெளியிடுமுன் ராகினியின் உள்நோக்கத்தை அறிய, “இந்த எண்ணுக்குரிய சாமி நாதன் நான்” என்றான்.
“உங்களுக்கும் பத்மநாபனுக்கும் வியாபார உறவு ஏதாவது இருக்கிறதா?”
பரிமளாவின் பெயரைச் சொல்வதா என்று சாமி யோசித்தான். ரகசியம் என்ன? பத்தூ பரிமளாவுடன் வாழப் போகிறான் என்று அவளுக்கு ஏற்கனவே தெரிந்திராவிட்டால் விரைவில் தெரியப்போகிறது.
“பத்மநாபன் எங்கள்வீட்டில் தங்கியிருந்த பரிமளாவுடன் பேசினான். என்னுடன் அல்ல” என்றான்.
“அந்தப் பரிமளா இன்னும் அங்கே இருக்கிறாளா?”
“இல்லை, அவள் இப்போது சான்ஹொசே செல்லும் விமானத்தில் திரும்பிச் செல்கிறாள்.”
“அங்கே என்ன செய்கிறாள்?”
“சான்டா க்ளாராவில் உயர்நிலைப்பள்ளி ஆசிரியை.”
“அவள் டென்னெஸ்ஸி எதற்கு வந்தாள்?”
“வியாபார விஷயமாக.”
“எவ்வளவு நாள்?”
“மூன்று நாட்களுக்கு என்று பெயர். ஆனால் எதிர்பாராத காரணங்களால் இரண்டு வாரங்களுக்குமேல் நீண்டுவிட்டது.”
“பரிமளாவுக்கும் உங்களுக்கும் என்ன உறவு?”
“சிறுவயதுப் பழக்கம்.”
“அப்படியென்றால் உங்களுக்கு இந்த விவரங்கள் தெரிந்திருக்கும். எங்கள் மண வாழ்க்கையை நீங்கள்தான் காப்பாற்ற வேண்டும்” என்று திடீரென்று இறங்கிவந்தாள். “பத்மநாபனை அவளுக்கு எப்படித் தெரியும்?”
“கோர்னேலின் கணக்குப்பிரிவில் கிட்டத்தட்ட ஒரே சமயத்தில் இருவரும் பிஎச்.டி. செய்திருக்கிறார்கள். இரண்டு வாரங்களுக்கு முன்வரை இருவருக்கும் நடுவில் எந்தவிதத் தொடர்பும் கிடையாது.”
அதை அவள் நம்பினாளா இல்லையா என்று தெரியவில்லை.
“பத்மநாபன் பரிமளாவைப் பற்றி இதுவரை உங்களிடம் சொன்னது இல்லையா?” என்று சாமி திருப்பிக் கேட்டான்.
“இல்லை. இந்த ஜனவரியில் அவர் வேலைமாற்றி சன்னிவேல் போனபோது நாங்கள் சாக்ரமென்ட்டோவிலேயே தங்கிவிட்டோம். வீட்டை உடனே விற்கமுடியுமென்று தோன்றவில்லை. பையனுக்கு மேமாதம்தான் படிப்பு முடியும். எனக்கும் இங்கே வேலை சிலமாதங்களுக்கு இருக்கிறது.. அதுவரை அவர் அங்கே தனியாக ஒரு அபார்ட்மென்ட்டில் தங்க ஏற்பாடு. திங்கள் காலை சன்னிவேல் போனாரென்றால் வெள்ளிக்கிழமை வேலைமுடிந்ததும் கிளம்பி இங்கே ஏழெட்டுமணிக்குள் வந்துவிடுவார். இந்த மாமூல் ஒருமாதத்திற்குமேல் நடக்கிறது” என்று நிறுத்தினாள்.
“மேலே சொல்லுங்கள்!”
“இரண்டு வாரங்களுக்குமுன் ஒரு வெள்ளிக்கிழமை. ஆறுமணிக்குமேல் கூப்பிட்டு, ‘வேலை முடியவில்லை மறுநாள்தான் வருவேன்’ என்றார். சனிக்கிழமை பிற்பகல் நான் வேலையில் அவரை அழைத்தபோது அவர் அங்கே இல்லை. அன்று பையனின் பிறந்தநாள் விருந்து. அதற்கு தாமதமாக வந்தார். வந்ததும் ஒரு பெரிய பூச்செண்டை என்கையில் தந்தார். பிறந்தநாள் அவனுக்குத்தானே, எனக்கு எதற்கு தரவேண்டும்? விருந்தின்போது வாசற்பக்கம் நழுவி யாருடனோ பேசினார். புதிதாக ஒரு பெண்ணைப் பிடித்தால் இப்படித்தான் அடிக்கடி தோட்டத்தில் நடந்துகொண்டே பேசுவார். நேற்று வீட்டிற்கு சீக்கிரமாகவே வந்து, ‘எனக்கு அபார்ட்மென்ட் பிடிக்கவில்லை, வேறொரு வீட்டில் ஒரு அறைமட்டும் வாடகைக்கு எடுக்கப்போகிறேன். அதைப் பார்க்க நாளைகாலை சான்டா க்ளாரா போகவேண்டும்’ என்றார். நானும் வருகிறேனே என்றதற்கு வேண்டாமென்று மறுத்துவிட்டார். சௌகரியமான தனி அபார்ட்மென்ட்டை விட்டு இன்னொருவர் வீட்டில் எதற்கு ஒண்டுக்குடியாகப் போகவேண்டும்? கையில் பணமா இல்லை? அப்போதே எனக்கு சந்தேகம். இன்றுகாலை அவர் செல்லின் கணக்கைக் குடைந்ததில் சான்ஹொசேயைச் சேர்ந்த இரண்டு எண்களும், உங்களுடைய இந்த எண்ணும் கிடைத்தன. இதில் போனவாரம் ஒவ்வொரு நாளும் பேசியிருக்கிறார். வியாபார விஷயமாக இல்லாவிட்டால் அப்படிப்பேச என்ன இருக்கிறது?”
ராகினி தன் துப்பறியும் திறமையை வீணடிப்பதாக சாமிக்குப் பட்டது.
“பரிமளாவிடம் நான் சொல்வதைவிட நீங்கள் சொல்வது நல்லது. என் வார்த்தைகளை நம்பமாட்டாள்.”
“என்ன சொல்ல வேண்டும்?”
“நிரந்தரமான உறவைப் பத்மநாபனிடம் எதிர்பார்த்தால் அவளுக்கு ஏமாற்றம்தான் மிஞ்சும்.”
சாமி மௌனம் சாதித்தான்.
“நான் சொல்வதை நீங்கள் நம்பவில்லை போலிருக்கிறது.”
“நீங்கள் சொன்னதை யோசிக்கிறேன்” என்றான் பட்டும்படாமல்.
அவன் மனதைமாற்ற தீர்மானித்ததுபோல், “திருமணமான முதல் ஐந்தாண்டுகள் பாஸ்டனில். அவருக்கு உட்கார்ந்த இடத்தில் வேலை. திருப்தியான வாழ்க்கை, குறையே இல்லை என்றுதான் இருவரும் நினைத்தோம். சீனியர் மார்கெட்டிங் ஆஃபீசர் என்று அவரை உயர்த்தியதும் சாக்ரமென்ட்டோ வந்தோம். அதிலிருந்து நிம்மதியே இல்லை. வேலைவிஷயமாக அடிக்கடி ஒருவாரம் மயாமி, நியு ஆர்லியன்ஸ், ஷார்டெட் என்று போகவேண்டும். ஒவ்வொரு இடத்திலும் ஒருத்தி வீட்டில் தங்கியிருக்கிறார். ஏழேட்டு வருஷத்திற்கு முன் அதைக் கண்டுபிடித்து அவரை ஒப்புக்கொள்ள வைத்தேன்” என்றாள் அவள். “அவரைக் குழந்தைகள் மதிக்கவேண்டும் என்பதற்காக, அவருடைய நடத்தையை அவர்களிடமிருந்து மறைக்க நான் பட்டபாடு! இரண்டு வருஷமாக அர்ஜென்ட்டினா கிளையிலிருந்து இங்கே வந்த ஒருத்தியைப் பிடித்திருக்கிறார். அது இந்த டிசம்பரில் வெளிப்பட்டு விட்டது. கசமுசா அடங்க அவளை அர்ஜென்டினாவுக்குத் திருப்பியனுப்பி, இவரை சன்னிவேல் கிளைக்கு மாற்றிவிட்டார்கள்.”
“பரிமளாவிடம் பத்மநாபனின் தொடர்பை வெட்டச் சொல்கிறேன்.”
“தாங்க்ஸ், மிஸ்டர் சாமி நாதன்! அப்படிச் செய்தால் எல்லோருக்கும் நல்லது. பை!”
சாமி பேசிமுடிக்கும் வரை காத்திருந்த சரவணப்ரியா முன்னறைக்குள் நுழைந்து அவன்முன் நின்றாள். அவளைக் கண்டதும், “பரிமளாவின் கதை இன்னும் முடியலை” என்றான்.
“இப்போ கூப்பிட்டது பத்தூவோட மனைவின்னு நினைக்கிறேன்.”
“அவதான்.”
“என்ன சொன்னா?”
“பெண்கள் விஷயத்திலே, பத்தூ யு.எஸ். செனடர்கள் மாதிரியாம்.”
“விவரமா சொல்லேன்!”
முழுவதும் கேட்டபோது பத்தூவைப் பற்றிய சாமியின் சந்தேகம் நிச்சயமானதில் அவளுக்குக் கொஞ்சம் ஏமாற்றம்தான். அதை ஒதுக்கிவிட்டு, “பரிமளாவை ராகினிகிட்டேர்ந்து மறைச்சுவைக்கப் பாத்திருக்கார். விஷயம் தெரிஞ்சிட்டுது. அதுவும் நல்லதுக்குத்தான். இன்னும் சிலநாள் கழிச்சு தெரிஞ்சிருந்தா ரசாபாசமா போயிருக்கும்” என்றாள்.
“பத்தூவை நம்பறதா? ராகினி சொல்றது சரியா?”
“பரிமளாவைப் பொறுத்தவரை இரண்டுமே முக்கியமில்லை. மனைவியைப் பகைச்சுகிட்டு பத்தூ நகரமாட்டார்.”
“ஏன் அப்படிச் சொல்றே?
“ஒவ்வொரு தடவை தப்பு வெளியே வந்தப்பவும் அவளே கதின்னு இருந்திருக்கார். இப்போமட்டும் என்ன வித்தியாசம்?”
“அவ அவனை வீட்டைவிட்டு வெளிலே துரத்தலாம்.”
“இதுவரைக்கும் செய்யலை. இப்பவும் செய்யப்போறேன்னு உன்கிட்டே அவ சொல்லலை.”
“அப்போ?”
“அவர் கண்போற இடத்திலே மனசை அலையவிடுவார். ராகினி அவருடைய நடவடிக்கைகளைத் துருவித்துருவி பாத்திட்டிருப்பா. ரெண்டுபேருக்கும் இந்த ஆடுபுலிஆட்டம் மிகவும் பிடிச்சிருக்கணும்னு தோணுது. இனியும் தொடர்ந்து செய்வாங்கன்னு எதிர்பாக்கலாம்.”
“பரிமளாவை என்ன பண்ணறது?” என்று சாமிக்கு ரொம்பவுமே அக்கறை.
“அவ சான்ஹொசே போறதுக்கு எவ்வளவு நேரமிருக்கு?”
“ப்ளேன் கிளம்பி ஒருமணிக்குமேலே ஆயிடுத்து. இன்னும் மூணுமணிலே அங்கேபோய்ச் சேர்ந்திடும்.”
சரவணப்ரியா தள்ளியிருந்த நாற்காலியை இழுத்து சாமியினருகில் அமர்ந்தாள். நீண்ட சிந்தனையில் பரிமளா ஜுரவேகத்தில் பேசியதும், மறுநாள் அதைப்பற்றி ஐரீனுடன் விவாதித்ததும், சோமசுந்தரத்தின் வருகையும் இடம்பெற்றன. தீர்மானத்திற்கு வந்ததும் சாமியின் தோளில் கைவைத்தாள். “பரிமளாவைப் பத்திக் கவலைப்படாதே! முதல்லே அவளுக்கு ஒருவழி செய்துடுவோம். அப்புறம், சோமசுந்தரத்தை சாப்பிடக் கூப்பிடணும். அவர் இப்போ நாஷ்வில்லேதான் இருக்கார்.”

சோமசுந்தரம் தயக்கத்துடன் வீட்டினுள் நுழைந்தார். விருந்துக்கு வந்தவர்போல் தோன்றவில்லை. நேர்காணலுக்குச் செல்வதுபோல் விறைப்பான நடையுடை.
“வாங்க சோமசுந்தரம்! இவர்தான் என் கணவர் சாமி நாதன்” என்று வரவேற்ற சரவணப்ரியாவை ஒருகணம் பார்த்தார். பழங்கால அரக்குநிற பட்டுச்சேலையின் உடலெங்கும் மஞ்சள் நூல்களும் ஜரிகையும் விளையாடின. திருமணத்தின்போது அணிந்த புடவையாக இருக்கும் என்று தோன்றியது.
சாமியின் பக்கம் திரும்பி, “ஹலோ!” சொன்னபோதுதான் அவருக்கு உறைத்தது. அதுவரையில் சரவணப்ரியாவை நினைத்தபோதெல்லாம் அவனை ஏன் கணக்கில் சேர்க்கவில்லை. ஆசை கண்களை மறைத்துவிட்டதா? இப்போது அவனைப் பார்த்ததும் அவருக்கு வெட்கமாக இருந்தது. பேசாமல் திரும்பி ஓடிச்சென்று தெருவோரத்தில் நிறுத்திய வாடகைக்காரில் ஏறி ஷிகாகோவிற்குப் போகும் அடுத்த ஃப்ளைட்டில் பறந்துவிடலாமா என்றொரு உந்துதல். அதை அறிந்ததுபோல் சரவணப்ரியா அவருக்குப் பின்னால் கதவை சாத்தினாள்.
“என்ன குடிக்கறீங்க?”
“தண்ணீர் போதும்.”
வரவேற்பறையின் ஒற்றை சோஃபாவில் பின்னால் சாயாமல் சோமசுந்தரம் அமர்ந்தார். அதை ஒட்டிய இரட்டை சோஃபாவில் சரவணப்ரியா. குளிர்ந்த தண்ணீர் புட்டி எடுத்துவந்து அவரிடம் கொடுத்துவிட்டு சாமி தன் மனைவிடமிருந்து சற்று தள்ளி உட்கார்ந்தான்.
மனக்குழப்பத்தில் சம்பிரதாய “தாங்க்ஸ்” சொல்லக்கூட அவருக்கு மறந்துவிட்டது.
“சோமசுந்தரம்! கஷ்டமான விஷயங்களை தள்ளிப்போடாம முதலிலேயே பேசித்தீர்த்துடலாம்” என்று சரவணப்ரியா தொடங்கியபோது அவருக்கு பல்டாக்டரின் நாற்காலியில் அமர்ந்ததுபோல் ஒரு அச்சம். தண்ணீர் புட்டியைத் திறக்காமல் அதையே பார்த்தார். கையின் நடுக்கத்தில் பல அளவுகளில் நீர்க்குமிழிகள் அலைந்தன.
“பாலது ஆணையினால் நாங்களொரு பூம்பொழிலிடை சந்திக்கவில்லை. வேண்டிய தகுதியிருந்தபோதும் அவருக்கு மெடிகல் காலேஜ்லே இடம்கிடைக்காததாலும், என் அக்கா பாரிஜாதம், ‘ஆம்பிளைங்க கடிச்சு சாப்பிட்டிறமாட்டாங்க’ன்னு என்னைக் கட்டாயப்படுத்தி கிறிஸ்டியன் காலேஜுக்கு போகவச்சதாலும் தமிழ்வகுப்பிலேதான் சந்திச்சோம். சாமியைப் பார்த்தப்பதான்
‘யாயும் ஞாயும் யாரா கியரோ
எந்தையும் நுந்தையும் எம்முறைக் கேளிர்
யானும் நீயும் எவ்வழி அறிதும்
செம்புலப் பெயல்நீர் போல
அன்புடை நெஞ்சம் தாம்கலந் தனவே’
என்கிற குறுந்தொகைப் பாடலின் அர்த்தம் எனக்கு முழுக்க புரிஞ்சிது. குறிஞ்சிப்பாட்டிலே வர்றமாதிரி ‘அன்றையன்ன விருப்போடு’ நாங்க இன்றுவரைக்கும் ஒருமனதா வாழறது எங்க அதிருஷ்டம்.”
அதைக் கேட்கும்போதே சோமசுந்தரத்தின் கண்களில் நீர் கொட்டத் தொடங்கியது. விரைவாக எழுந்தார். “சரவணப்ரியா! என்னை மன்னிச்சுடுங்க! ஏதோவொரு ஆசை வேகத்திலே மனசு குழம்பிட்டுது. உங்க வாழ்க்கைலே நான் குறுக்கிட்டது பெரிய தவறு. நான் கிளம்பறேன். மிஸ்டர் சாமிநாதன்! நீங்களும் இதையெல்லாம் மறந்துடணும்!”
சரவணப்ரியா எழுந்து அவர் தோள்களில் கைவைத்தாள். “உக்காருங்க! வீட்டுக்குள்ள வந்துட்டு சாப்பிடாம போனா தமிழர் பண்பாடு எப்படி? நீங்க இன்னும் தண்ணியே குடிச்சபாடு இல்லை.”
சோஃபாவின் நுனியில் அமர்ந்து அவள் சொன்னதற்காக புட்டியைத் திறந்து ஒருமிடறு குடித்தார். ஆனாலும் வாய் வறண்டுதான் இருந்தது.
“எங்க காதலை என் அப்பாகிட்ட சொல்றதுக்கு சரியான நேரம்வரட்டும்னு காத்திருந்தேன். என் தூரதிருஷ்டம், முன்னமே அவர் போயிட்டார். அதனாலே, உங்ககிட்டே சொன்னதிலே எனக்கொரு திருப்தி.”
சாமியை ஒருமுறை ஓரக்கண்ணால் பார்த்துவிட்டு சரவணப்ரியா தொடர்ந்தாள். “நேத்து நீங்க கேட்டகேள்விக்கு என்கணவர் முன்னிலையிலேயே பதிலை சொல்லிடறேன். நீங்க என்கிட்டே என்ன எதிர்பார்க்கறீங்கன்னு எனக்குத் தெரியாது. உங்களுடைய அறிவுத் தேவைகளை பூர்த்தி செய்யறதிலே மட்டும்தான் என்னாலே உதவிசெய்ய முடியும்.”
கடைசி வாக்கியத்தின் ஒவ்வொரு வார்த்தையையும் பிரித்துச் சொன்னாள். அதைத் தொடர்ந்து அறையில் நிசப்தம்.
வார்த்தைகளின் பொருள் புரிந்ததும் சோமசுந்தரம் எழுந்து அவள்கையைப் பற்றினார். “ரொம்ப நன்றி சரவணப்ரியா! இந்த வரம் கொடுத்தீங்களே, அதுவே உங்க பரந்த மனசைக் காட்டுது. இது போதும். இதுக்குமேலே நான் எதிர்பார்ப்பது பண்பாடு இல்லை.” சாமி அங்கிருப்பது நினைவுக்கு வந்தவராக அவன் பக்கம் திரும்பி, “சாமிநாதன் ஒண்ணும் சொல்லக்காணோமே!” என்றார்.
அதுவரை அவர்களை வேடிக்கை பார்த்த அவன், “ஆணுக்கும் பெண்ணுக்கும் இந்த வயசிலே வர்ற உறவு பூவும் காயும் இல்லாம வெறும் இலைமட்டும் இருக்கும் வெற்றிலைக்கொடி மாதிரி” என்று சிரித்தான்.
“கண்ணப்பனார் இதைக் கேட்டிருந்தா, ‘ஆகா! என் மருமகப்பிள்ளை என்ன அழகா உவமை சொல்றார்’னு பெருமைப்பட்டிருப்பார்” என்று அவர் சொன்னதைக்கேட்டு சரவணப்ரியாவுக்கு புன்னகையுடன் கண்ணீரும் வந்தது.

புத்தகக்கடையின் வாசலில் நின்று பரிமளா பத்தூவைத் தேடியபோது, இந்தியனின் தோற்றத்தில் ஒருவன் ஓரக்கண்ணால் பார்த்துக்கொண்டே அவளைக் கடந்துசென்றான். பிறகு திரும்பி நிதானமாக நடந்து சற்றுதள்ளி அவள்பார்வை படுமிடத்தில் நின்றான். பரிமளா அவனை முதலில் கவனிக்கவில்லை. பத்தூவைக் காணாததால் கடையின் முன்புறத்தை அளப்பதுபோல் நாலைந்து தடவை நடந்தபிறகுதான் அவன் பரிமளாவின் கண்ணில்பட்டான். அவனுக்கு நடுவயது இல்லை, இளமையின் உச்சத்தில் இருந்தான். நல்ல உயரம், கருநீல முழுக்கை சட்டை. ‘கால்’ என்ற எழுத்துகளுக்குக் கீழே மஞ்சள்நிறப் பந்துகள் சிறகுவிரித்துப் பறந்தன. களையான கறுப்புமுகம். அந்த முகத்தில் முன்பே பழகியதுபோல் ஒரு நட்புணர்ச்சி. பரிமளா நின்று அவன்மேல் பார்வையைப் பதித்து அவனை எங்கே பார்த்தோம் என்று மனதில் தேடினாள். அவள் தன்னை கவனிப்பதை அவனும் பார்த்துவிட்டான். உடனே நெருங்கிவந்து புன்னகையுடன் கைநீட்டினான்.
“நீங்கள்தான் மிஸ் பரிமளாவாக இருக்க வேண்டும்.”
அவன் கையை இறுகப்பற்றி, “ஆமாம், உனக்கு எப்படித் தெரிந்தது?” என்றாள்.
மற்றொரு கையிலிருந்த ‘ரான்டம் அன்ட் சான்ஸி’ன் பின்அட்டையைக் காட்டினான். “நான் இந்த செமிஸ்டர் ‘ஸ்டாடிஸ்டிகல் மெகானிக்ஸ்’ படிக்கிறேன். அதை அறிந்த என் தோழி பாஸ்டனுக்குத் திரும்பிச் செல்வதற்கு முன் இதை எனக்குப் பரிசளித்தாள். எத்தனை விஷயங்கள்! புத்தகம் படிப்பவர்களைப் புதுவழிகளில் சிந்திக்க வைக்கிறது. மிக நல்ல முயற்சி!”
“தாங்க்ஸ்.” புத்தக ஆசிரியருக்கு இதைவிட வேறு என்ன சன்மானம் வேண்டும்?
பரிமளா பார்வையைச் சுற்றிலும் ஓடவிட்டாள். சிந்தூர சிவப்பில் நாலைந்து சட்டைகள் கண்ணில் தென்பட்டன. ஆனால் அவற்றிலெல்லாம் ‘ஸ்டான்Nஃபார்ட்’ எழுத்துக்கள். கோர்னேல் எதிலுமில்லை. பத்தூவுக்குக் காத்திருக்கும் நேரத்தில் அந்த இளைஞனுடன் பேச்சு கொடுத்தால் போகிறது.
“நீ எங்கே இருக்கிறாய்?”
“பெர்க்கிலியில்.”
பரிமளாவுக்கு அவன்முகம் பரிச்சயமாகத் தோன்றியதன் காரணம் உடனே தெரிந்தது. “நீ சரவணப்ரியாவின் பையன் சூரனோ? அவள் சாயல் தெரிகிறதே!” என்றாள். அவர்கள் வீட்டில் மாட்டியிருந்த அவனுடைய சிறுவயதுப் படம் மனதில் தோன்றியது. ‘அவன் எல்லோரிடமும் நல்லவிதமாகப் பழகுவான்’ என்று சாமி சொன்னதும் நினைவுக்கு வந்தது.
“ஆமாம்.”
“எப்படி இங்கே வந்தாய்? உன்னிடம் கார் கிடையாதே.”
“ஒரு ‘ப்ரியஸை’ வாடகைக்கு எடுத்திருக்கிறேன்.”
“இந்தப்பக்கம் நல்லமழை என்று சொன்னார்களே.”
“காலையில் மழை கொட்டிற்று. இப்போது வெறும் தூறல்தான். என் வீட்டிலிருந்து வருவற்கு ஒருமணிகூட ஆகவில்லை.”
பரிமளா திரும்பி, விமான நிலையத்தின் முன்வாசல் வழியாக நுழைந்துவந்த மனிதர்களை நோட்டம் விட்டாள். கோர்னேல் சட்டையைக் காணோம். சிறிதுநேரத்தில் பெட்டிகள் விமானத்திலிருந்து அவற்றைக் கோருமிடத்திற்கு வந்துவிடும். சுpல நிமிஷங்கள் பொறுத்து அங்கே செல்லலாம். பெட்டிகளைத் தூக்கிவைக்கவும், அவற்றை வீட்டிற்குள் எடுத்துச்செல்லவும் அவளுக்கு உதவி அவசியம். பத்தூவை அழைத்து நேராக ‘பாகேஜ் க்ளெய்மி’ற்கே வரச்சொன்னால் போகிறது. அலைபேசியைப் பையிலிருந்து எடுத்து அதில் அவன் பெயரை இழுத்து அழுத்தினாள். தொடர்பு ஏற்பட்டவுடனேயே ஒருபெண்ணின் இயந்திரக்குரல் அவன் எண்களைத் திரும்பவும் சொல்லி பெயரையும் செய்தியையும் பதிவுசெய்ய கட்டளையிட்டது. ஏதோவொரு மனயெழுச்சியில் அப்படிச் செய்யாமல் அதை மூடி பையில் செருகினாள்.
அவள் செய்ததை சூரன் ஆர்வத்துடன் பார்த்துக்கொண்டிருந்தான். அவனை இன்னுமென்ன கேட்கலாம்?
“உன் தோழியை வழியனுப்ப வந்தாயோ?” பெர்க்கிலிக்கு ஓக்லன்ட் ஏர்போர்ட்தான் பக்கம். ஒருவேளை, இங்கிருந்து பாஸ்டனுக்கு மலிவான டிக்கெட் கிடைத்திருக்கலாம்.
“அவள் நேற்றே பாஸ்டன் சென்றுவிட்டாள். உங்களை வரவேற்கத்தான் நான் இங்கே வந்தேன்” என்று அவன் இனிதாகச் சொன்னான்.
‘நான் வருவது உனக்கு எப்படித் தெரியும்?’ என்று அவள் கேட்குமுன் அவனே, “நீங்கள் வரப்போவதை சற்றுமுன் என் அம்மா தெரிவித்தாள்” என்றான்.
பரிமளா எதிர்பார்த்த பதில்தான்.
“விமானநிலையத்திலிருந்து அழைத்துச்சென்று உங்களை வீட்டில் விட்டபிறகு, உங்களுடன் நான் சிலமணி நேரம் செலவிட வேண்டும் என்பது அவள் விருப்பம்.” அந்த வார்த்தைகளின் முழு அர்த்தத்தையும் பரிமளா புரிந்துகொள்ள அவகாசம் தந்துவிட்டு சூரன் தொடர்ந்தான். “உங்கள் புத்தகத்தில், மனிதர்கள் பரிச்சயமான, தினப்படி காரியங்களில் கவனம் செலுத்தாமல் சாத்தியக்குறைவான நிகழ்ச்சியில் அதிகப்படியான நம்பிக்கையோ, தேவையற்ற அச்சமோ வைப்பது பற்றி ஒரு அத்தியாயம் இருக்கிறது. நான் உயிரியல் படித்தவன். மனிதர்களின் இந்த சூதாட்ட மனப்பான்மைக்கு பரிணாமத்தின் அடிப்படையில் நான் காரணம் சொல்லமுடியும். அதை விவாதிப்பதில் உங்களுக்கு ஆட்சேபம் இல்லையே?”
அதைக்கேட்டு பரிமளாவுக்கு புதுஉற்சாகம் பிறந்தது. “கொஞ்சமும் இல்லை. சொல்லப் போனால், உன்னுடன் கருத்துகளைப் பரிமாறிக் கொள்ள ஆவலாக இருக்கிறது. ஆனால், அதற்குமுன் உன்னைக் கட்டிக்கொள்ள ஆசை. அதில் உனக்கு ஆட்சேபம் இல்லையே? சூரன்!” என்று பாசத்துடன் கேட்டாள்.
“டீன்-ஏஜில் பலருக்கு முன்னால் என் அம்மா என்னைக் கட்டிக்கொள்வது எனக்குப் பிடிக்காது. இப்போது நான் அப்படி இல்லை” என்று சூரன் தன் இரண்டு கைகளையும் விரித்தான்.

முற்றும்

நன்றி

டாக்டர் காகு இஷிஹாரா: 1-ப்ரோமோப்ரோபேன் ஆராய்ச்சியில் எங்களை ஈடுபடுத்தியதற்காக. [Holly Valentine, Kalyani Amarnath, V. Amarnath, W. Li, X. Ding, W. M. Valentine, G. Ishihara: Globin S-propylcysteine and urinary N-acetyl-S-propylcysteine as internal biomarkers of 1-bromopropane exposure. Toxicological Sciences, 98(2), 427-435 (2007)]

திருமதி அமிர்தா சேஷாத்ரி: ஒரு ஆசிரியையின் வாழ்க்கையை உணர்த்தியதற்காக.

டாக்டர் ஹாலி வேலன்டைன்: நிமோனியாவைப்பற்றிய எல்லா விவரங்களுக்கும்.

எப்போதும் போல என்னை ஊக்குவித்து, ஆலோசனைகள் வழங்கிய திரு எஸ். சங்கரநாராயணன் அவர்களுக்கு.

திண்ணை ஆசிரியர் குறிப்பு

இந்த அருமையான தொடரை திண்ணைக்கு அனுப்பி திண்ணை வாசகர்களையும் திண்ணையையும் மகிழ்ச்சிக்குள்ளாக்கிய அமர்நாத் அவர்களுக்கு நன்றி

உங்கள் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.

அமர்நாத் அவர்களது மின்னஞ்சல் முகவரி amarnakal@gmail.com

Series Navigation