பரி-மலம்

This entry is part [part not set] of 39 in the series 20031016_Issue

பரிமளம்


பாரீசில் கழித்த இரண்டு வாரங்களில் இரண்டு வெவ்வேறு நண்பர்களுடன் இரண்டு முறை, நாங்கள் தனியே ஒரு முறை என மும்முறை சென்றிருந்தாலும் விளக்கொளியில் பார்க்க வேண்டும் என்பதற்காக நான்காவது இறுதி முறை நானும் என் மனைவியும் ஒரு நாள் இரவில் ஐபெல் கோபுரத்துக்குச் சென்றோம். நாங்கள் பிரான்சுக்குச் சென்றிருந்தது இருள் மிகத் தாமதமாகவே வரும் ஒரு காலமாதலால் சற்று நேரங்கடந்தே (தனியாகச் செல்வதால் சற்றுப் பயமாகவும் இருந்தது) கிளம்பினோம். போய்ச்சேர்வதற்குள் இருள் சூழ்ந்து விட்டது; ஆனால் கோபுரத்தில் விளக்கு எரியவில்லை. சற்று எரிச்சல் தோன்றுவதற்குள் ஒரு கண நேரம் கோபுரம் ஒளிர்ந்து மறைந்தது. மணி பத்தோ பதினொன்றோ நினைவில்லை. அந்த நேரத்துக்கு விளக்கைப் போட்டு நிறுத்துவார்கள் போலும் என்று நினைத்துக் கொண்டோம். ஏதோ வந்ததற்கு இதையாவது பார்த்தோமே என்று மகிழ்ச்சியடைவதற்குள் எனக்குச் சிறுநீர் கழிக்கவேண்டும் என்னும் உணர்வு வந்துவிட்டது. கட்டணக் கழிப்பிடம் (பகற்கொள்ளை) இருக்கும் இடம் தெரியுமாதலால் தயங்காமல் கோபுரத்தின் அருகில் இருக்கும் படிகளில் இறங்கும்போதுதான் கழிப்பிடம் பூட்டப்பட்டிருந்தது தெரிந்தது. என்ன செய்ய ? எனக்கோ அடக்கிக்கொள்ளும் பழக்கமில்லை. கோபுரத்தின் அருகில் ஓரிரண்டு பேரே நடமாடிக்கொண்டிருந்தனர்; விளக்கொளியும் அவ்வளவாக இல்லை; ‘பரிமளம், வேண்டாம்’ என்ற என் மனைவியின் பயத்தையும் பொருட்படுத்தாமல் பக்கத்திலிருந்த புல்வெளியில் இறங்கி நிம்மதியாகச் சிறுநீர் கழித்தேன். ஐபெல் கோபுரத்தின் அருகில் இப்படிச் சிறுநீர் கழிக்கும் சந்தர்ப்பம் அடிக்கடியா வாய்க்கும் ?

நகரத்தையொட்டிய ஒரு கிராமத்தில் கழிப்பிட வசதியில்லாத ஒரு வீட்டில்தான் நான் நீண்ட காலம் வாழ்ந்தேன். கழிப்பிடம் இல்லாதது அப்போதெல்லாம் ஒரு பிரச்சினையாகத் தெரிந்ததில்லை. காலை, மாலை, இரவுகளில் பெரியவர்களும் சிறுவர்களும் கூட்டம் கூட்டமாக ஊருக்கு வெளியே இருக்கும் வெட்ட வெளியையும், காய்ப்பில்லா நேரங்களில் முந்தரித்தோப்பையும் சரணடைவோம். ஆண்களுக்கும் பெண்களுக்கும் தனித்தனிப் பீக்காடுகள் இருந்தன. ஊரின் தெற்கில் வயல்களும் தென்னந்தோப்புகளும் குட்டைகளும் (குட்டைகளின் அருகில் செல்லும்போது கண்ணிவெடி புதைக்கப்பட்ட இடங்களில் நடப்பதைப் போன்ற கவனத்துடன் நடக்க வேண்டும்) இருந்ததால் அவசரத்துக்கு ஒதுங்குவதுகூட பிரச்சினையாக இருந்ததில்லை.

அடைமழை பெய்தால் பீக்காடு பளிச்சென்று சுத்தமாகிவிடும். இரவில் அப்படி மழைபெய்த மறுநாள் காலையில் தோப்புக்குச் செல்வது ஆனந்தமாயிருக்கும். ஓரளவு தூறல் என்றால் வேதனைதான். மலம் கரைந்து வழியும்; நடப்பதற்கும் இடமிருக்காது.

பள்ளியில் ஐந்தடிக்கு ஐந்தடி அளவு கொண்ட கணக்கில் ஒரு கழிப்பறை. சுவரிலும் தரையிலும் சிமெண்ட் பூச்சுகள் பெயர்ந்து பொக்கை பொக்கையாக இருக்கும். சிறுநீர் பாய்ந்து ஓடும் இடம் மஞ்சக்கறை படிந்து கிடக்க, சிறுநீர் வாடை நிரந்தரமாக வீசிக்கொண்டிருக்கும். பாடம் நடந்துகொண்டிருக்கும்போது போகவேண்டும் என்றால் மட்டுமே நாங்கள் அங்குப் போவோம். மற்ற நேரங்களில் பள்ளியையொட்டிய புதர் நிறைந்த வெளியையே நாடுவோம். ஒரு மாத எல்லை வகுத்து நாலைந்து பேர் சேர்ந்து நீர் பாய்ச்சிய பிறகும் அவ்விடத்தில் நாங்கள் குறிபார்த்த ஒரு தென்னை மரம் பட்டுப்போகாமல் நின்றுகொண்டிருந்தது எங்களுக்கு உலக அதிசயமாக இருந்தது. அங்கே காலில் பீயை அப்பிக்கொண்ட சம்பவம் எங்கள் எல்லாருக்குமே நேர்ந்திருக்கிறது. மணல், செடிகொடிகள், தென்னைமரம் எல்லாவற்றிலும் காலைத்தேய்க்க வேண்டும். பிறகே குழாயைத்தேடி ஓடுவோம். (எங்கள் ஊரில் தண்ணீர்ப்பஞ்சம் எந்தக்காலத்திலும் இல்லை) ஒட்டிக்கொண்டவன் எதிரணியைச் சேர்ந்தவன் என்றால் வகுப்பில் ‘நாறுது’ என்று ஆசிரியரிடம் காட்டிக் கொடுப்பதும் நடக்கும்.

ஒரு இருபதடி அளவுக்கு நீளமான பெண்கள் கழிப்பிடத்தின் உட்புறம் ஆண்களின் கழிப்பிடம் போலவா அல்லது வேறுமாதிரி இருக்குமா என்பது ஆர்வத்தைத் தூண்டும் சிறந்த உரையாடல் தலைப்பாக எங்களுக்குப் பல காலம் இருந்தது. பள்ளியில் சேர்ந்து எத்தனையோ ஆண்டுகளுக்குப் பிறகு ஒரு ஞாயிற்றுக்கிழமை இந்தக் கழிப்பறையை ஒட்டிய தோப்பில் பப்பாளிப் பழம் திருட என் நண்பனுடன் புகுந்து மரத்தில் ஏறியபோது, ஆகா! அந்தக் கழிப்பறையை காணும் பேறு கிடைத்தது. புதையலை அப்படியே விட்டுவிடக் கூடாது என்பதற்காக இருவரும் மதிலேறி அதன் உள்ளேயும் இறங்கிப் பல்லிலித்துக்கொண்டே உலவினோம். மறுநாள் பள்ளியில் பெருமையடித்துக்கொள்ள அடிச்சது நல்ல சான்ஸ்! இந்தக் கழிப்பறையில் ஒரு புதுமையும் இல்லையென்பது எங்கள் மண்டையில் உரைக்கவில்லை. (நாங்கள் இல்லாது போனால் பள்ளிக்கூடம் இவ்வளவு அமைதியாகவா இருக்கும் என்னும் மற்றோர் உண்மையையும் அன்று அறிந்தோம்.)

இரண்டாவது ஆட்டத்தில் ‘மூன்று எம்.ஜி.ஆர் வீரர்கள் ‘ போன்ற ஆங்கிலப் படங்களைப் பார்க்க நகரத்துக்குப் போக ஆரம்பித்த கால கட்டங்களில் யாரோ ஒரு தோழன் நகரத்தின் ஓரத்தில் இருந்த குடிசைப் பகுதிகள் வழியாகச் செல்லும் குறுக்கு வழியில் ஒருநாள் எங்களை அழைத்துச் சென்றான். ‘நகராட்சிக் கக்கூஸ்’ எப்படி இருக்கும் என்பது அப்படி நடந்துபோகும் போது தெரிந்தது. சாலை ஓரத்தில் கட்டப்பட்டிருந்த அக்கழிப்பிடத்தின் பத்துப் பதினைந்து அறைகளில் ஓரிரண்டில் மட்டுமே கதவுகள் இருந்தன. கதவில்லாமையால், உள்ளே உடைந்திருந்த பீங்கான்களில் மலம் நிரம்பிக் கிடந்ததை விளக்கு வெளிச்சத்தில் பார்க்க முடிந்தது. வெளியிலிருந்த தரையடித் தொட்டியிலிருந்து நீர் வழிந்தோடிச் சாலையில் தேங்கியிருக்கக் கழிப்பிடத்தின் இருபுறங்களிலும் சிறு பிள்ளைகள் சாலையில் உட்கார்ந்து கழித்துக்கொண்டிருந்தனர். ஏற்கனவே கழித்தவர்களின் சிறு சிறு மலக் குவியல்கள் எங்கும் நீக்கமற நிறைந்திருந்தன. பல இடங்களில் தாண்டிக் குதித்தே நடந்தோம். குறுகிய சாலையின் மறு ஓரத்தில் ஒரு குடிகாரன் வெறுந்தரையில் உருண்டுகிடக்கச் சற்றுத் தொலைவில் பாய் விரித்துப் பலர் படுத்துக்கொண்டும் ரேடியோவில் பாட்டுக் கேட்டுக் கொண்டும் இருந்தனர். வெளிக்கி இருக்க எங்களைப் போலக் ‘காட்டுமோடு’ இல்லாத அவர்களை நினைத்து வருத்தப்பட்டுக் கொண்டே நடந்தோம். ஏனெனில் இப்படிப்பட்ட பொதுக்கக்கூசைப் பயன்படுத்தும் ஒரு நிலை இழிவிலும் இழிவானதாக எங்களுக்குத் தோன்றியது. (எங்கள் கதி என்ன ஆகப் போகிறது என்பது அப்போது தெரியாது) எங்கள் தியேட்டரை அடைவதற்குள் வசதிகளில் ஒன்றுக்கொன்று சளைத்ததில்லை என்று போட்டி போட்டுக்கொள்ளும் இப்படிப்பட்ட மூன்று கழிப்பிடங்களைத் தாண்டிச் சென்றோம். நடந்துபோன காலம் போய் சைக்கிளில் நண்பர்களுடனும் தனியாகவும் நகரத்தைச் சுற்றித் திரிந்தபோது பலவிடங்களில் இது போன்ற கழிப்பிடங்கள் கண்ணில் படும்போதெல்லாம் ஒரு அச்ச உணர்வே என் மனதில் எழும்.

டூரிங் டாக்கீசில் ஒரு மூலையில் கீற்றுத் தடுப்புக்கப்பால் கழிப்பிடம் இருக்கும். அதன் உள்ளே சென்று ஒரு முறையாவது ஒன்றுக்கிருந்ததாக எனக்கு நினைவில் இல்லை. மந்தை மந்தையாக எல்லாரும் வெளியில்தான் உட்காருவோம். ஒருநாள், உட்கார்ந்துகொண்டு ஒன்றுக்கிருந்த ஒரு மனிதரின் அருகில் வேறொரு ஆள் நின்றுகொண்டே கறக்க பெரிய சண்டையே (மேல தெறிக்கிதில்ல ?) ஏற்பட்டுவிட்டது. நகரத்துத் தியேட்டர்கள் அவ்வளவு மோசமில்லையென்றாலும் பல நேரங்களில் ஒன்றுக்கிருக்கும் இடங்களில் எல்லாம் பீ கிடப்பதும், வளர்ந்த ஆண்கள் அங்கே பல பேர் முன்னிலையில் கொஞ்சம்கூட வெட்கமில்லாமல் புகை விட்டுக்கொண்டே பீ பேளுவதைப் பார்ப்பதும் எரிச்சலாக இருக்கும். ஒரு முறை அவசரமாக ஒன்றுக்கு வருகிறது என்பதற்காக இடைவேளை விட்டதும் முதல் ஆளாகக் கழிவறையின் உள்ளே ஓடிப் பேய்ந்துவிட்டுத் திரும்பினால், வெளியே வரமுடியவில்லை. மனிதர்கள் வழியெங்கும் அடைத்துக்கொண்டு கண்டபடிக் கறந்து கொண்டிருந்தார்கள். இதுவா சமாச்சாரம் என்று நினைத்துக்கொண்டு அன்றிலிருந்து முதல் ஆளாக வந்தாலும் உள்ளே போகாமல் வெளியிலே ஒன்றுக்கிருக்க ஆரம்பித்தேன். இங்லீஷ் படம் பார்க்கும் தியேட்டர் கொஞ்சம் சுத்தமாக இருக்கும் என்பதைச் சொல்லியே ஆக வேண்டும். இரண்டுக்குப் போகும் இடங்கூடச் சுத்தமாக இருக்கும் அளவுக்கு அது சுத்தமானது.

காலம் செல்லச் செல்ல நகரம் மெதுவாக விரிவடைந்து கொண்டே வந்து எங்கள் கிராமத்தையும் தாண்டிச் சென்றது. எங்கும் வீடுகள் எழுந்தன. ஒன்றன் பின் ஒன்றாக இரண்டு முந்திரித் தோப்புகளும் வெட்டப்பட்டன. காடுகள் வெட்டப்படுவதால் விலங்குகளின் வாழ்வு நாசமாவதுபோல ஒதுங்கும் இடம் இல்லாமல் நாங்கள் பெரிதும் துன்பப்பட்டோம். பெண்களின் நிலை இன்னும் மோசமாகிவிட்டது. இப்போதெல்லாம் பகலில் யாரும் போவதில்லை. கருக்கலும் இரவும் தரும் பாதுகாப்பு தேவைப்பட்டது. விடலைப் பையன்கள் நீண்ட தூரம் நடந்தோம். நிலைமை இப்படி மோசமாகி வரும்போது வீடுகளில் கழிப்பிடம் கட்டிக்கொள்ள மானியம் தருவதாகக் கொம்யூன் பஞ்சாயத்திலிருந்து வந்த ஆங்கிலக் கடிதத்தில் என்ன எழுதியிருக்கிறது என்பதை யூகித்துச் சொல்லக் கூடிய ஒருத்தரைக் கண்டுபிடிப்பதற்கே எங்களுக்குப் போதும் போதும் என்றாகிவிட்டது. இதுவும் புறம்போக்கு நிலத்தில் இருந்தவர்களுக்குக் கிடையாது. சற்று வசதியானவர்கள் கட்டிக்கொண்டார்கள். மற்றவர்களுக்குப் புதிதாக எழும்பிய குடியிருப்புக் கட்டடங்களும் சுடுகாடும் சிறிதுகாலம் புகலிடம் அளித்தன. அடுத்து அருகிலிருந்த அரசாங்கக் கல்வி நிறுவனக் கட்டடங்களில் பலர் ஒதுங்க ஆரம்பித்தனர். எங்களது படையெடுப்பிலிருந்து பாதுகாத்துக்கொள்ள அவர்கள் மதில் எழுப்பலாம் என்று திட்டம் தீட்டினார்கள் போலும். நம் அரசின் செயல்வேகம்தான் நமக்குத் தெரிந்த கதையாயிற்றே. எனவே மதில் எழுவதற்குள் எவ்வளவோ நடந்துவிட்டது.

நீண்ட காலத்துக்குப் பிறகு ‘பொதுக் கக்கூஸ்’ கட்டப்பட்டது. நல்ல வேளையாக அதற்குள்ளாகவே எனக்கு ஒரு வேலை கிடைத்து வீட்டை மாற்றிக்கொண்டதால் பொதுக் கக்கூசைத் தேடிப்போக வேண்டிய பயங்கர இழி நிலை (இதைப் பயன்படுத்துவதை விடச் செத்துப்போவது மேல் என்றே நான் கருதினேன்) எனக்கோ என் வீட்டாருக்கோ ஏற்படவில்லை என்பதை நினைத்தால் பெருமிதமாகத்தான் இருக்கிறது. (ஆனால் கிடைப்பதற்கு முன்பு என்னை நெருங்கி வந்த ‘உலகின் ஒரே அழகிய வாயாடிப் பெண்’ணிடமிருந்து விலகி நிற்க இதுவும் ஒரு காரணமாக இருந்ததை நினைத்தால் இப்போதும் வலிக்கிறது.) அந்தக் கக்கூசும் எல்லாக் கக்கூஸ்களையும் போலவே விரைவில் நாசமாகிப்போயிற்று. அருகிலிருந்த அரசு குடியிருப்புகளைச் சுற்றிச் சமூகக்காடு வளர்ப்புத் திட்டத்தின் கீழ் யூகப்லிப்ஸ்….. அது என்ன இழவோ…. மரங்களை நட, புதர்போல் வளர்ந்த செடிகள் ஊர் மக்களுக்கு நன்கு பயன்பட்டன. (குடியிருப்புகளில் வசித்தவர்கள் யாரை நொந்துகொண்டார்களோ தெரியவில்லை.)

இப்போது ஊரில் திறந்தவெளிக் கழிப்பிடங்கள் இல்லை. (ஆனால் கொசு மண்டிவிட்டது.) எல்லா இடத்திலும் நெருக்கமாக வீடுகள் நிறைந்துவிட்டன. சற்றே சுத்தமானது போல் தோற்றமளிக்கும் ஒரு புதிய கட்டணக் கழிப்பிடம் இருக்கிறது.

***

ஆண், பெண் படம் போட்ட கக்கூஸ்களைச் சிறுவயதில் நகரத்துப் பேருந்து நிலையத்தில்தான் முதன் முதலில் பார்த்தேன். கல்லூரிப் படிப்பை முடிக்கும் வரை அதிக வெளியூர்ப் பயணங்களை நான் மேற்கொண்டதில்லை. எனவே வாலிபனான பிறகே வெளியூர்க் கக்கூஸ்களின் அறிமுகம் கிடைத்தது. சென்னைக்குச் செல்லும்போது பேருந்தை வழியில் நிறுத்துவார்கள். கழிப்பிடச்சுவர்களைச் சுற்றி ஈரத்தில் நனைந்து கனத்துக் கிடக்கும் குப்பை மேடுகளின் ஓரத்தில் நின்றுகொண்டு ஒன்றுக்கிருக்க வேண்டும். இப்படி ஒன்றிருக்கிருப்பதற்கே சில இடங்களில் காசு கொடுக்க வேண்டியிருக்கும். சில நேரங்களில் கடை கண்ணி இல்லாத வெற்றிடங்களின் அருகில் பேருந்தை நிறுத்துவார்கள். அப்போது ஆண்கள் மட்டும் இறங்கிப் பரவி சிறுநீர் கழிப்பார்கள். பெண்கள் பாவம் பேருந்திலேயே உடகார்ந்திருக்க வேண்டியதுதான்.

***

தமிழ்நாடு எக்ஸ்பிரசில் ஒரு முறை டெல்லிக்குப் போகும் போது இரண்டு இரவுகள் தூங்கிவிட்டாலும் ஒரு பகலிலும் மறுநாள் காலை டில்லியின் புறநகர்ப் பகுதியிலும் காண்ட காட்சிகள் மனதை அழுத்தின. ஆனால் இவை ‘ஆமதாபாத்’துக்குப் போய்வந்த ஒரு ஒரு நண்பனுடைய காலைக் கடன் அனுவங்களின் கால்தூசுக்கு ஆகா என்று தோன்றியது. பின்னொருநாளில் City of Joy நாவலைப் படித்தபோது அவனுடைய வருணனைகளையே அதில் காண்பது போலிருந்தது.

***

கழிப்பிடம் என்றால் சிங்கப்பூரைக் குறிப்பிடாமல் இருக்க முடியாது. பேதி மருந்தைக் குடித்தவர்கள்கூட அங்கே நிம்மதியாகச் சுற்றலாம். அவசரமென்றால் அதிகபட்சம் ஐந்து நிமிட நடைக்குள் பெரும்பாலும் சுத்தமான, அழகான, முற்றிலும் இலவசமான கழிப்பிடங்களை அடைந்துவிடலாம். கட்டடங்கள், கடைத்தொகுதிகள், ரயில் நிலையங்கள் என்று எல்லாவிடங்களிலும் கழிப்பிடங்கள் இருக்கின்றன. அவை எங்கே இருக்கின்றன என்பதைக் காட்டும் வழிகாட்டிப் பலகைகளும் எல்லார் கண்களிலும் படும்படி ஆங்காங்கே இருக்கும்.

***

இந்தியாவின் கோயில் பெருமைகளையும், சிற்பப் பெருமைகளையும், கட்டடப் பெருமைகளையும் பற்றிப் படிக்கும்போதும் கேட்கும்போதும் ராஜா, ராணிகள் வெளிக்கி வந்தால் என்ன செய்வார்கள் என்னும் சந்தேகமே எனக்கு எழும். அவ்வளவு பெரிய அரண்மனைகளில் கழிப்பிடம் எங்கே இருக்கிறது என்று தெரியவில்லை.

மேலும்

ஒரு நொடி தாமதித்தாலும் உலகம் அழிந்துபோகும் சூழ்நிலையில் ஓடும் ரயிலின் மேலே ஊர்ந்து கொண்டிருக்கும் ஜேம்ஸ் பாண்டுக்குத் திடாரென வயிறு வலித்தால் அல்லது ஒன்றுக்கு முட்டிக் கொண்டால் என்னவாகும் ?

வரலாற்றின் எங்காவது ஒரு சின்னஞ்சிறு மூலையில் (அல்லது புனைகதைகளில்) இந்தப் பாழாப்போன இயற்கை உபாதையால் நிகழ்ச்சிகள் திசைமாறிப் போனதாகக் குறிப்புகள் உள்ளனவா ?

போன்ற ஐயங்களும் என்னிடம் உள்ளன.

***

என் தராசின் ஒரு தட்டில் ஐயாயிரம் பத்தாயிரம் அல்லது அதற்கும் மேற்பட்ட ஆண்டுகள் பழமையான இந்தியச் சிந்தனைச் செல்வங்களையும், வேதங்களையும் உபநிடதங்களையும், தத்துவங்களையும், மற்ற எல்லா லொட்டு லொசுக்குகளையும் வைத்து மறு தட்டில் மலத்தை அழகாக வெளியேற்றும் கழிப்பிடத்தைக் கண்டுபிடித்தவனின் மூளையையும் வைத்தால், எந்தத் தட்டு தரையைத் தொட்டுக் கொண்டிருக்கும் என்பதைச் சொல்லத் தேவையில்லையென்று நினைக்கிறேன்.

இந்திய மக்கள் அனைவரும் மானத்தோடு வயிற்றை நிரப்புவதோடல்லாது மானத்தோடு வயிற்றைக் காலி செய்வதற்கும் ஏற்ற சூழல் அமையாதவரை வல்லரசாவது மண்ணாங்கட்டியாவது.

***

ஐந்தாம் வகுப்பு படிக்கும்போது என் பள்ளிக்கு வந்த ஒரு பயிற்சி வாத்தி என் பெயரைக் கேட்டுவிட்டு (எல்லாரையும் போலவே ‘இது பொம்பள பேரு இல்ல ?’ என்று வியந்து தொலைக்காமல்) ‘பரி- குதிரை, மலம்- சாணம் பரிமளம்- குதிரைச்சாணி’ என்று வகுப்பில் விளக்கம் கொடுக்க (என் பெயரில் உள்ள ‘ள’ வேற ‘ள’ என்ற என் எதிர்ப்பு அந்தத் தே.மகன் காதில் விழவில்லை) இதுவே என் பட்டப் பெயராக நிலைத்துவிட்டது. ‘பரிமள சீக்காய்’ இன்னொரு பட்டப்பெயர்.

***

பிரெஞ்சு மொழியில் பாரீஸ் ‘பரி’ என்று அழைக்கப்படுகிறது.

***

பாரீசின் மாபெரும் தரையடி ரயில் நிலையங்களைக் கண்டு மலைத்துப் போனதால் ஐபெல் கோபுரத்தில் ஏறிப்பார்க்கவேண்டும் என்னும் ஆசை எங்கள் இருவருக்குமே ஏற்படவில்லை.

janaparimalam@yahoo.com

Series Navigation

பரிமளம்

பரிமளம்