பரிணாமத் தத்துவம் சொல்லிக்கொடுக்காத இங்கிலாந்து பள்ளிக்கூடத்துக்கு ரிச்சர்ட் டாக்கின்ஸ் எதிர்ப்பு

This entry is part [part not set] of 23 in the series 20020317_Issue


கடவுள் உலகத்தை பைபிளில் எழுதியுள்ளது போலவே உருவாக்கினார் என்று சொல்லித்தரும் அடிப்படைவாத கிரிஸ்தவ பள்ளிக்கூடத்தை ரிச்சர்ட் டாக்கின்ஸ் போன்ற அறிவியலாளர்கள் எதிர்க்கிறார்கள்.

கேட்ஸ்ஹெட் நகரில் உள்ள எம்மானுவல் காலேஜ் என்னும் பள்ளியில் சிறுவர்களுக்கு ‘சிரிப்புவரவைக்கும் பொய்களை ‘ சொல்லித்தருவதாக பேராசிரியர் டாக்கின்ஸ் குற்றம் சாட்டுகிறார்.

பிரதம மந்திரி டோனி பிளேர் எம்மானுவல் கல்லூரிக்கு ஆதரவாகப் பேசியிருக்கிறார். அறிவியலாளர்களின் விமர்சனம் ‘கொஞ்சம் மிகைப்படுத்தப்பட்டது ‘ என்று டோனி பிளேர் கூறியிருக்கிறார்.

இந்தக்கல்லூரி தனியார் பணத்தில்கட்டப்பட்டது. இது தேசீய பாடத்திட்டத்தைப் பின்பற்ற வேண்டாம். இது கிரிஸ்தவ மதத்தை முன்னிறுத்திய பள்ளிக்கூடம்.

இந்தப்பள்ளிக்கு சென்ற பள்ளிக்கூட ஆய்வாளர்கள் (இன்ஸ்பெக்டர்கள்), எம்மானுவல் கல்லூரிக்குக் கொடுத்த அட்டகாசமான அறிக்கை, இந்தப் பள்ளி அறிவியலை எப்படி அணுகுகிறது என்பதை குறிப்பிடவில்லை என்றும், இது மறு பரிசீலனைச் செய்யப்பட வேண்டும் என்றும் கோரியிருக்கிறார் பேராசிரியர் டாக்கின்ஸ்.

பேராசிரியர் ஸ்டாவ் ஜோன்ஸ் என்ற பல்கலைக்கழகக்கல்லூரி பேராசிரியர், பேராசிரியர் டேவிட் கோல்குஹோன் ஆகியோரும் பேராசிரியர் டாக்கின்ஸ் அவர்களுக்கு ஆதரவாக குரலெழுப்பி இருக்கிறார்கள்.

எம்மானுவல் கல்லூரி தன்னுடைய பள்ளிக்கூட ஆசிரியர்களிடம், உலகம் பல கோடிக்கணக்கான வருடங்கள் பழையது என்பதைக் கேள்விக்குள்ளாக்கவும், அகிலம் பைபிளில் கூறியுள்ளது போல சில ஆயிரம் வருடங்களே பழமையானது என்று கூறும்படியும் கற்பிக்கிறது என்பதற்குத் தன்னிடம் தகுந்த ஆதாரங்கள் இருப்பதாக பிபிஸி ரேடியோவில் பேசிய டாக்கின்ஸ் குறிப்பிட்டுள்ளார்.

‘எந்த ஒரு அறிவியல் கருத்தும் உலகம் வெறும் 5000 வருடப்பழையது என்று குறிப்பிடுவதில்லை. ஏன் ஒரு பிஷப் கூட அது மாதிரி கோரியதில்லை ‘ என்று கூறியிருக்கிறார்.

Series Navigation