பரத நாட்டியம் – சில குறிப்புகள் – 1

This entry is part [part not set] of 45 in the series 20030302_Issue

வைஷாலி


இந்தியாவின் ஆடற்கலைகள் பல. அதில் தமிழ்நாட்டின் நடனம் பரதநாட்டியம். இந்தபரத நாட்டியம் எவ்வாறு தோன்றியது ? யாரால் தோற்றுவிக்கப்பட்டது. பரதம் என்ற சொல் எதைக் குறிக்கிறது என்பதைப் பார்க்கலாம்.

பரதம் என்ற வார்த்தை

ப –பாவம்

ர — ராகம்

த — தாளம்

ம் — ஸ்ருதி இவை நான்கும் சேர்ந்ததே பரதம் எனப்படும். பாரத தேசத்தில் முதன்முதலாக தோன்றியதால் பரதநாட்டியம் என்றும் அழைக்கப்படுகிறது. மேலும் பரத முனிவரால் முதன் முதலாக உலகிற்கு அறிமுகப்படுத்தப்பட்டதால் இது பரத நாட்டியம் என்று அழைக்கப்படுகிறது.

சுமார் ஐம்பது அறுபது ஆண்டுகளுக்கு முன்பு சதீர் என்றும் சதீர்கச்சேரி என்றும் அழைக்கப்பட்ட நடனம் மறுமலர்ச்சி அடைந்து பரதநாட்டியமாக விளங்கி வருகிறது. பல்வேறு கலை அம்சங்களை முழுமையாக விளக்கும் ஒரு நூல் தான் பரதர் எழுதிய நாட்டிய சாஸ்திரமாகும்.

நாயன்மார்களில் நால்வர் என்ற புகழ் பெற்ற அப்பர், சுந்தரர், சம்பந்தர், மாணிக்கவாசகர் ஆகிய நான்கு அருஞ்செல்வர்களைப் போல இசை நடனமேதைகளான சின்னய்யா, பொன்னய்யா, சிவானந்தம், வடிவேலு என்ற இந்த நால்வரும் கலை உலகம் நமக்கு வழங்கிய நான்கு முத்துக்கள் எனலாம்.

பொன்னய்யா(1804) :-

தஞ்சை நால்வருள் ஒருவரான இவர் பரதநாட்டியத்தை கச்சேரி பாணியில் எந்த இடத்திலும் எப்பொழுதும் நடத்தக் கூடிய முறைகளை வகுத்தார். அதற்காக ஆழ்ந்த ஆராய்ச்சிகளையும் செய்தார். இன்றைக்கு ஆரம்பபாடமாக சரளி, ஜண்டை வரிசைகளை வகுத்த சிறப்புடன் நாட்டியத்திற்கும் ஆரம்பபாடமாக அடவுகள் பத்து என்று வகுத்த பெருமை பொன்னய்யாவிற்கு உரியது.

தட்டடவு முடிவு அடவு என்று பத்து வகை அடவுகளை அவர் வகுத்தார். இந்த பத்து வகைகளை ஒவ்வொன்றிலும் 12 உட்பிரிவுகள் கொண்டு மொத்தம் 120 அடவுகளாக விரிவுப் படுத்தினார். பின்னர் அலாரிப்பு, ஜதீஸ்வரம், சப்தம், பதவர்ணம், பதம், ராகமாளிகை அல்லது ஸ்லோகம், தில்லானா என்ற அட்டவணையையும் முறைப்படுத்தினார். பதவர்ணம், ஸ்வரஜதி ஆகியவைகளை தமிழிலும், தெலுங்கிலும் நாயக, நாயகி பாவத்தோடு ஏற்றினார். இவ்வாறு வகுத்த முறையை தன் குருநாதர் முன்னிலையிலும், அரசவையிலும் அரங்கேற்றினார். இதைக் கண்டு வியந்த தீட்சிதர் சங்கீதத்திற்கு என் மாணவர்கள் வழிகாட்டிகள் என்று பாராட்டி நால்வருக்கும் சங்கீத சாகித்தியர் பரத ஸ்ரேஷர் என்ற சிறப்புப் பட்டத்தை மன்னரைக் கொண்டு வழங்கச் செய்தார். இன்னும் இவர்கள் வகுத்த பாணியில்தான் நடக்கட்டு சாரிகள் நடைபெறுகின்றன. குலதெய்வத்தின் பெயரிலும், துலேஜா, சரபோஜி, சிவாஜி ஆகிய மராட்டிய மன்னர்கள் பெயரிலும் நாயக, நாயகி பாவத்திலும் நாட்டியத்திற்கு ஏற்ப இசை பாடங்களை பொன்னய்யா ஏற்றினார்.

பொன்னய்யா, சிவானந்தம் ஆகியோருக்கு சரபோஜி மன்னர் பல்லாக்கு மற்றும் பல பரிசுகள் அளித்து, தம்முடனேயே அந்த இசை மேதைகள் இருக்கவேண்டும் என்று பணித்தார். பொன்னய்யா விரும்பியபடியே தஞ்சை பெரிய கோவில் தண்ணீர் பந்தலும், சக்கர விநாயக கோவிலிலும் அமைத்தார். இது நட்டுவன சாவடி என்று அழைக்கப்படுகிறது. தமது தம்பி நோய்வாய்ப்பட்டு இருந்த சமயம் பொன்னய்யா பெரிய நாயகி பெயரில் பிராதாம்மா என்ற பாடலை சங்கராபரண ராகத்தில் இயற்றிப் பாடியதாகாவும் உடனே தம்பியின் நோய் குணமானதாகவும் கூறப்படுகின்றது. கோவில் திருப்பணியில் தமக்கு கிடைத்த ஊதியத்தை தேர்திருவிழா, தண்ணீர் பந்தல் உணவிடல் முதலியவற்றுக்கு கொடையளித்து பொன்னய்யா தொடங்கிய பணி இன்றும் நடைபெறுகின்றது. தஞ்சையில் இந்நால்வரும் வாழ்ந்த இல்லத்திலேயே நாட்டியக் கல்லூரியாக மாணவமாணவியர்க்கு நடனப் பயிற்சி அளிக்கப்பட்டு கோவில்களில் நாட்டிய பணியாற்ற ஏற்பாடு செய்தார். அலாரிப்பு முதல் தில்லானா வரை ராக, தாள, உருப்படிகளை ஏற்றி வெளிப்படுத்தினார். இவற்றில் சங்கராபரண ராகத்தில் ‘அதிமோகமாளே ‘ என்ற பதவர்ணமும், ஆனந்த பைரவி ராகத்தில் ‘சகியே இந்த வேலையில் ‘ என்ற வர்ணமும் குறிப்பிடத்தக்கன. சப்ததாளமாளிகை, நவரத்தினமாளிகை, நட்டரச்சிய மாளிகை முதலியன இவரது அறிவாற்றலுக்கும் கற்பனை வளத்திற்கும், கலை ஞானத்திற்கும் சான்றுகளாகும்.

சின்னைய்யா :- 1802

தஞ்சை நால்வரில் மூத்தவரான சின்னைய்யா மைசூர் அரசரின் அரசவை கலைஞராக இருந்து சாமுண்டேஸ்வரி பெயரில் சிறப்பான பதவர்ணம், தில்லானாக்கள் முதலியவற்றை இயற்றி புகழ் பெற்றார்.

சிவானந்தம்:-

கோவில்களில் நடனகலையை பக்தி வழிபாடாக உருவாக்கி அதற்கென முறை வகுத்த பெருமை தஞ்சை நால்வரில் ஒருவரான சிவானந்தம் அவர்களைச் சாரும். இவர் சோடச உபசாரம் தாள ஜதி நிருத்தியம் முதலியவைகளுக்கு நிருத்ய நியதிகளையும் முறைகளையும் வகுத்தார். கொடி ஏற்றம், கொடி இறக்கம் போன்ற திருவிழாக்களின் போது நடக்கும் நலசந்தி நிருத்தியத்தையும் நடராஜர் புறப்பாட்டின் போது தாளம் தட்டவேண்டிய முறைகளையும் இவர் வகுத்தார். பின் பொன்னய்யாவின் மாப்பிள்ளை சூரிய மூர்த்தியின் மூலமாக நாட்டியப் பணியை ஊக்குவித்தார். இவர் தஞ்சை அரசரின் ஆருயிர் தோழனாகவும் ஆலோசகராகவும் விளங்கினார். சிவநெறியில் மிகுந்த ஈடுபாடு கொண்ட சிவானந்தம் அவர்கள் தஞ்சை பெரிய கோவில் மகா சிவராத்திரி விழாவின்போது தன் விலையுயர்ந்த நவரத்ன மாலையை பரிசாக வழங்கினார். இவ்விழாவை முழுமையாக கொண்டாட மற்றவர்களுக்கு வழிகாட்டினார். இந்த ஏழு நாட்களும் கலை நடன நிகழ்ச்சிகள் கதாகாலட்சேப சிறப்புரைகள் முதலியவற்றை நடத்தி கண்களுக்கும் காதுகளுக்கும் விருந்தளித்தார். ஆண்களும் நடன கலையை பயில மிகவும் ஊக்குவித்தார்.

வடிவேலு:- 1810

தஞ்சை நால்வரில் கடைகுட்டியான வடிவேலு இசை நடனத் துரையில் தனிபெறும் சாதனைகளை செய்தார். ஒரு தடவை கேட்ட இசையை மறக்காமல் அதே பாணியில் பாடிக்காட்டும் இவரது திறமையை பாராட்டி இவரது குரு தீட்சிதர் இவரை ‘ஏக சன்ந் கிரகி ‘ என்று புகழ்வதுண்டு. தமது 14 வயதிலேயே அரவை முக்கி வித்வானாக உயர்த்தப்பட்டு பெறும் செல்வாக்குடன் விளங்கியவர்.

தஞ்சை அரண்மனையில் இந்திய இசைவாணர்கள் மட்டுமன்றி மேல்நாட்டு கலைஞர்களும் இசை விருந்து தருவதுண்டு. அரசனின் ஆதரவை பெற்ற பலகலைக்கழக வயலின்வித்வானாக விளங்கிய கிறிஸ்துவ துறவியார் எட்வர்ட் அவர்கள் வடிவேலுவுக்கு மேல்நாட்டு முறையில் குறியிடிகை (notes) வாசிக்கும் முறையை கற்றுக் கொடுத்தார். வடிவேலு அவர்கள் வயலின் கருவியில் அத்துறவியாரை வியக்கும் வண்ணம் கர்நாடக இசையை பயிற்சி செய்து அரசவையில் அற்புதமாக வாசித்து அரங்கேற்றினார். வயலின் கருவியை கர்நாடக இசை உலகில் முதல்முதலாக அறிமுகப்படுத்திய பெருமை வடிவேலு அவர்களையே சாரும்.

தஞ்சை சரபோஜி மன்னர் உடன் ஏற்பட்ட ஒரு மனஸ்தாபத்தினால் வடிவேலு தன் சகோதரர் மூவருடனும் தஞ்சையை விட்டு வெளியேறி ஒரத்தநாடு என்ற கிராமத்தில் குடிவந்தார். இதை சாதகமாக்கிக் கொண்ட திருவாங்கூர் மன்னர் நால்வரையும் தம் அரண்மனைக்கு வரவழைத்து சங்கர விலாசம் என்னும் மாளிகை கட்டிக்கொடுத்து குடும்பத்தோடு அவர்களை வசிக்கச் செய்தார். அவையில் வடிவேலுவின் இசை வெள்ளத்தில் ஆழ்ந்த மன்னர் யானை தந்தத்தால் ஆன அற்புதமான வயலின் ஒன்று செய்து அதை தங்க பெட்டியில் வைத்து நவரத்தின ஆபரணங்களுடன் அளித்து பெருமைபடுத்தினார். அதுமட்டுமில்லாமல் சுவாதி திருநாள் அன்று அரசர், வடிவேலுவுக்கு தனி பெருமை அளித்து அந்தரங்க ஆலோசகராக நிர்ணயித்துக் கொண்டார்.

தமிழில் புகழ் பெற்ற குறவஞ்சி நாட்டிய நாடகங்களில் பந்து ஆடும் காட்சி சிறப்பான அம்சமாகும். இதனை ஆதாரம் ஆக்கி உருவாகிய மோகினி ஆட்டத்தின் வளர்ச்சிக்கும் வடிவேலு காரணமாக இருந்தார். மலையாள கலைஞர்களும் இவர்க்கு கடன்பட்டுள்ளனர். திருவாங்கூர் வட்டத்தில் பயணம் செய்து கொண்டு இருந்த போது தன்னைத் தாக்கி பொன்னையும் பொருளையும் திருடிய கொள்ளை கூட்டத்தினரை தமது இசையால் மயங்கவைத்து அவர்களே தாம் எடுத்த பொருள்களை திருப்பித் தருமாறு செய்த இசைபுலமை பெற்றவர் இவர். இந்நிகழ்ச்சி இவரது மேதாவிசாலத்திற்கு சிறந்த எடுத்துக்காட்டு.

இவ்வாறு பலரால் உருவாக்கப்பட்ட நாட்டியக் கலையில் என்ன கற்றுத் தரப்படுகின்றன. அதில் உள்ள அம்சங்கள் என்ன ?

தொடரும்……

Series Navigation