பனி தூவும் பொழுதுகள்…!

This entry is part [part not set] of 29 in the series 20021215_Issue

புகாரி – கனடா


அடடா
இது என்ன அழகு… ?

ஆகாயம் பூமி
இடைவெளி நிறைத்து
இனிப்பாய் அசையும்
இந்த மல்லிகைப் பூப்பந்தல்
எவரின் உபயம்… ?

வெள்ளிக் காசுகளை
அள்ளி இறைத்து
ஒருவரையும் விடாமல்
உயர்த்திப் பாராட்டும்
இது என்ன விழா… ?

பூமிக்கு இது
கீழ்நோக்கிப் பொங்கும்
பனிப் பொங்கலா… ?

நிறங்களில் அழகு
வெண்மையே என்று
தீர்மானம் நிறைவேற்றும்
கலை மேடையா… ?

O

மரக்கிளைகள் எங்கிலும்
பல்லாயிரம் கொக்குகள்
குட்டித்தூக்கம் போட்டுக்
கொண்டாடுவது போல்
ஓர் அழகு…!

மத்து எங்கோ தெரியவில்லை…!
ஆனால் மோர் கடைந்து
இங்கு எவரோ
ஒரு யுகத்துக்கே
வெண்ணை திரட்டுகிறார்…!

வாசலில் மட்டுமின்றி
கண்களிலும்…

கண்களில் மட்டுமின்றி
மனங்களிலும்…

மனங்களில் மட்டுமின்றி
உயிர்களிலும்…

அந்தப்
பனிப் பெண்ணின்
பல கோடி விரல்கள்
எழிற் கோலமிடுகின்றன…!

O

அனைத்தையும்
அணைக்கும்
கருணைப் பனியே…!

வெள்ளிக்கிண்ண பூமியில்
பனிப் பால் வார்க்கும்
அன்புத் தாயா நீ…!

மொத்தமாய்
நீ என்ன
முத்து வியாபாரம் செய்கிறாயா… ?

வெள்ளை இதழ்கள் விரித்து
நீ சிந்தும்
மாபெரும் புன்னகையா இது… ?

மனிதர்கள் யாவரும்
ஓர் நிறமே என்று
சமத்துவம் பேச வந்தாயா… ?

எழுத்தாணியும் தெரியவில்லை
எழுதும்
கவிஞனையும் காணவில்லை….

ஆனால்…
பரிசுத்தமான
வெள்ளைத் தாள்கள்
எங்கெங்கிலும்
வந்து வந்து விழுகின்றன…

உற்றுப் பார்த்தால்
உள்ளே கவிதை வரிகள்…!

O

உன்னை
அள்ளி விளையாட
ஆயுள் போதவில்லை…!

உன் பூப் பந்துகளை எறிய
உள்ளங்களில் எரியும்
உணர்வுகளுக்கு அளவில்லை…!

உன்னைக் கண்டு
என் அலுவல் மறந்தேன்…
காதல் மறந்தேன்…
கவிதை மறந்தேன்…

ஏன்…
என்னையே மறந்து போனேன்…!

கைகளை விரித்துக் கொண்டு
சுற்றி சுற்றித் திரிகிறேன்…!

எனினும்…
போதுமென்ற மனம் மட்டும்
வரக் கண்டிலேன்…!

நீயோர் அற்புத ஓவியன்…!

ஒற்றை வர்ணம் குழைத்து
நீ தீட்டுவது ஒரு வினோதம்…!

வெள்ளை வயலில்
வைரமணிப் பயிர் செய்து
உள்ளத்துக்கு உணவளிக்கும்
மகோன்னதமே நீ வாழ்க…!

O-O-O

புகாரி – கனடா

buhari2000@hotmail.com

Series Navigation

புகாரி

புகாரி