பனிவிழும் அதிகாலையொன்றில்
ஹெச்.ஜி.ரசூல்
தெங்கேறிச் செல்லும் தழும்பேறிய
கால்களுக்கு தெரிந்ததில்லை
திளாப்புகளின் வேதனை
ஏறும்போதும்
இறங்கும்போதும்
வெற்றுடம்பை ஆரத்தழுவி
யாருக்கும் தெரியாமலேயே
நெஞ்சைமுத்தமிடுகின்றன
பனிவிழும் அதிகாலையொன்றில்
கொதும்புகள உதிர்ந்துவிழ
வெட்டிவீசப்பட்ட
பச்சை மட்டை ஒலைகள்
மண்ணில்மல்லாந்து கிடக்க
மிச்சமிருக்கும் ஓலைகளின்
அழுகையும் விம்மலும்
இரவுதோறும் கேட்டபடி
எனதுறக்கம் தீராததொரு பொழுதின்
வதை