பத்து வயதினிலே…

This entry is part [part not set] of 41 in the series 20071122_Issue

குரல்செல்வன்


“நான் ஒரு நல்ல செய்தி சொல்லப் போகிறேன், சாம்!”
“கேரன்! நீ சொல்லாதே! நான்தான் முதலிலே சொல்லுவேன்.”
“நோ சூர்! இது என்னுடைய முறை.”
“ப்ரெசிடென்ட்ஸ் ஃபிசிகல் ஃபிட்னெஸ் போட்டிகளில் நாம் இரண்டு பேருமே முதலில் வந்த செய்தியை நீதானே சொன்னாய்.”
“அது மார்ச்சில்.”
“கேரன்! சூரன்! இந்த முறை நீங்கள் இரண்டு பேருமே சேர்ந்து சொல்லுங்கள்” என்று சாமி சமரசம் செய்தான். மே மாதத்தின் கடைசி புதன் கிழமை. அன்று பள்ளிக்கும் இறுதி நாள். காலை பதினோரு மணிக்கே முடிந்து விட்டது. “தினமும் போல் பஸ்ஸில் வர வேண்டாம். நான் காரில் உங்களை அழைத்து வருவேன்” என்று சாமி அவர்களிடம் சொல்லி இருந்தான். வேலையில் நடந்த எதிர் பாராத சம்பவங்களால் அவன் கிளம்புவதில் தாமதம் ஏற்பட்டது. அவன் பள்ளிக் கூடத்தை நெருங்கும் போது அவனுக்கு முன்னால் நாலைந்து கார்கள் தாம் இருந்தன. அவன்தான் கடைசி. ‘நாங்கள் எவ்வளவு நேரம் காத்திருப்பது?’ என்று குறை சொல்வார்களோ என்று அவன் பயந்ததற்கு மாறாக அவர்கள் காட்டிய மகிழ்ச்சி அவனுக்கு ஆறுதலை அளித்தது.
இரண்டு பேரும் ஒரே சமயத்தில் பேசுவதற்குத் தயார் செய்து கொண்டார்கள். கேரன் பார்க்கர் ம்யூசிக் கண்டக்டரைப் போல் கையை உயர்த்திக் கொண்டாள். பெரிய பச்சை நிறப்பூக்கள் அழகு செய்த கௌன் இந்தியாவிலிருந்து வாங்கி வந்தது. முழங்கால் வரை தழைந்த அந்த உடையும், பரத்திவிட்டு ரிப்பனில் கட்டிய அவள் பொன்னிறக் கூந்தலும் அவளைப் பத்து வயதிற்கு அதிகமாகவே காட்டின. சூரன் ட்யூக் கூடைப்பந்து போட்ட நீல சட்டையில் இருந்தான்.
“அடுத்த ஆண்டு ஐந்தாம் வகுப்பில் நாங்கள் இருவருமே ஹானர்ஸ் பிரிவில் ஒன்றாக இருப்போம்.” சொல்லி முடித்தவுடன் தாங்களே கை தட்டிக் கொண்டார்கள். சாமியும் சிரிப்பது போல்; சிரித்து மகிழ்ச்சியைக் காண்பித்துக் கொண்டான். அவர்களுடைய உற்சாகம் எப்போதும் அவனையும் பற்றிக் கொள்ளும், ஆனால் இன்று?
“சரி! காரில் ஏறுங்கள். முதலில் சாப்பிடப் போகலாம்.”
கேரனும், சூரனும் பின் இருக்கையில் உட்கார்ந்து பெல்ட் அணிந்த பிறகு கார் நகர்ந்து, பள்ளி வாசலைக் கடந்து தெருவில் ஓடியது. சென்ற ஆண்டிற்கும் இந்த ஆண்டிற்கும் எவ்வளவு வித்தியாசம்?

அன்றும் சாமி அவர்களைக் காரில் அழைத்துப் போக வந்தான், சரியான நேரத்திற்கு. பள்ளியின் முன்னால் இருக்கும் அரை வட்டப் பாதையில் நுழையும் போது கேரனும், சூரனும் தனியாக ஒதுங்கி நிற்பதைப் பார்த்த போதே ஏதோ சரியில்லை என்று தோன்றியது. அவர்களை நெருங்கிய போது கேரன் மட்டும் காரின் பக்கத்தில் வந்து, “சூரன் அழுகிறான்” என்றாள். பள்ளியின் வாசலுக்குப் பக்கத்தில் நின்று கொண்டிருந்த சூரன் சட்டையின் நுனியால் கண்களைத் துடைத்துக் கொள்வது தெரிந்தது. பின்னால் காரில் இருந்தவர்கள் தங்கள் பொறுமை இன்மையை வெளிப்படுத்தவே சாமி கேரனிடம், “நீ போய் சூரன் பக்கத்தில் நில். நான் காரை நிறுத்தி விட்டு வருகிறேன்” என்றான். அதை அவன் செய்யும் போது ‘சூரன் சின்ன விஷயத்துக்கெல்லாம் அழுகிறவன் இல்லையே’ என்ற எண்ணம்தான் மேலோங்கியது.
சாமியைப் பார்த்தவுடன் சூரனின் அழுகை இன்னும் அதிகமாயிற்று. மற்ற குழந்தைகள் தன்னை வேடிக்கை பார்ப்பார்களோ என்று கூட அவன் கவலைப் படவில்லை. “சூரன்! அழுகையை நிறுத்திவிட்டு காரணத்தைச் சொல். காரணம் எதுவானாலும் நான் பார்த்துக் கொள்கிறேன்.”
“டாட்! நான் அடுத்த ஆண்டில் ஆங்கில சிறப்பு வகுப்பில் இல்லை” என்று நிறுத்தி நிறுத்தி சொன்ன பிறகும் அவன் அழுகை ஓயவில்லை.
சாமிக்கு அழுகையின் காரணம் சிறிது சிறிதாகப் புரியத் தொடங்கியது. கடந்த ஏப்ரலில் ஒரு வெள்ளிக் கிழமை டென்னிஸ் விளையாடுவதற்காகச் சூரனை மதிய உணவு முடிந்தவுடனேயே அழைத்துச் செல்ல பள்ளிக்குச் சாமி வந்தான். “அடுத்த ஆண்டு ஹானர்ஸ் வகுப்பில் தகுதி பெற ஒரு தேர்வு இருக்கிறதே” என்று அவன் ஆசிரியை மிஸ் ஜான்சன் சொன்னாள். அப்படி ஒரு தேர்வு இருக்கும் என்று சாமிக்குத் தெரியும். ஆனால் அந்த வெள்ளிக் கிழமைதான் அது நடக்கப் போகிறது என்று தெரியாது. முன் கூட்டியே ஒரு குறிப்பு எழுதி அனுப்பி இருந்தால் டென்னிஸ் போட்டியைத் தவிர்த்திருக்கலாம். அவள் ஆசிரியை வேலையைச் சரியாகச் செய்வதில்லை என்றும், அவளை வேறொரு பள்ளிக்கு மாற்ற முயற்சி செய்யப் படுகிறது என்றும் கேள்விப் பட்டது நினைவுக்கு வந்தது. என்ன செய்யலாம் என்று அவன் யோசிக்கையில் அவளே, “பரவாயில்லை, வரும் திங்கள் சூரன் அந்தத் தேர்வை எழுதலாம்” என்று கூறியதால் சாமி சூரனைப் பள்ளியிலிருந்து அழைத்துச் சென்றான். சூரன் மிக எளிதான அந்தத் தேர்வை அடுத்த திங்கள் கிழமை எழுதியது அவனுக்கு நிச்சயமாகத் தெரியும்.
“நான் போய் பிரின்சிபாலிடம் கேட்டு வருகிறேன்”
“சூர்! கவலைப் படாதே! உன் அப்பா உன்னையும் ஹானர்ஸ_க்கு மாற்றி விடுவார்” என்று கேரன் சூரனைச் சமாதானப் படுத்தினாள்.
சாமி பிரின்சிபாலின் அறைக்குச் சென்ற போது ஒழுங்கு படுத்தப் பட்ட மேஜை அவள் கிளம்பத் தயாராக இருக்கிறாள் என்பதைக் காட்டியது.
“ஹல்;லோ மிஸ்டர் நேதன்! உங்களுக்கு நான் என்ன செய்ய வேண்டும்?” சாமியின் குறுக்கீடு பிடிக்காமல் இருந்திருந்தாலும் அவள் அதைக் காட்டவில்லை.
எதிர் நாற்காலியில் உட்கார்ந்த சாமி நிலைமையை விளக்கினான்.
“நோ ப்ராபளம். மிஸ் ஜான்சன் ஒரு வேளை மறந்திருக்கலாம். அவள் வீட்டிற்குக் கிளம்பி இருக்க மாட்டாள். நான் அவளைக் கூப்பிடுகிறேன்.”
பிரின்சிபால் தொலைபேசியை மெதுவாக எடுத்த போது சாமி எழுந்திருந்து அறையின் கதவுக்குப் பக்கத்தில் சென்று நின்று கொண்டான். பிரின்சிபாலின் பேச்சை அவன் கேட்க விரும்பா விட்டாலும் லாஸ்ட் என்கிற வார்த்தை ஒரு முறைக்கு மேல் காதில் விழுந்து அவன் நம்பிக்கையைக் குறைத்தது.
பேசி முடித்தவுடன் அவளுடைய நடத்தை முற்றிலும் மாறிவிட்டது. முகத்தில் சுமுகம் மறைந்து அதிகார அயன்மை ஆட் கொண்டது. தன் இருக்கையிலிருந்து எழுந்து கதவு பக்கம் வந்து சாமியை வெளியே தள்ளாத குறையாக, “நான் செய்யக் கூடியது எதுவுமில்லை, மிஸ்டர் நேதன். உங்கள் மகன் சரியான நேரத்திற்குத் தேர்வை எழுதவில்லை. ஹானர்ஸ் வகுப்பில் எல்லா இடங்களும் நிரம்பி விட்டன. இன்னொரு பையனைச் சேர்த்துக் கொள்வதென்றால் அரசாங்கத்திற்கு ஐயாயிரம் டாலர் அதிகம் செலவாகும். அதற்கு மேலிடம் அனுமதி கொடுக்காது. மன்னிக்கவும். ஹாப்பி சம்மர் ப்ரேக்” என்று சற்று உரத்த குரலில் சொன்னாள்.
‘நீங்கள் முயற்சி செய்ததற்கு நன்றி. பை.” அறையை விட்டு வெளியே வந்த சாமி மிக மெதுவாக நடந்தான். சூரனின் தேர்வை மிஸ் ஜான்சன் தொலைத்திருக்கிறாள் என்பதில் சந்தேகமில்லை. தன் இனத்தைச் சேர்ந்தவளை விட்டுக் கொடுக்க பிரின்சிபாலுக்கு மனமில்லை. சூரன் ஹானர்ஸ் வகுப்பில் இடம் பெறாதது அவனைப் பொறுத்த வரை ஒரு பொருட்டல்ல. பெரும்பாலும் அவன்தான் பாடங்களைச் சொல்லிக் கொடுத்திருக்கிறான். சூரனின் மதிப்பில் குறைந்து போய் விடப் போவதுதான் மனதை நெருடியது. தன் தந்தை சூபர்மேன் இல்லை என்று அவனுக்குத் தெரியத்தானே வேண்டும். சாமியுடைய முக வாட்டத்தைக் கவனித்த கேரன் அவனை இக்கட்டிலிருந்து விடுவித்தாள்.
“சூர்! அப்படி உனக்குக் கிடைக்காவிட்டாலும், ஹானர்ஸ் வகுப்பில் எனக்குத் தரும் பாடங்களை நாம் இருவருமே சேர்ந்து செய்வோம். அப்படி செய்தால் ஐந்தாவதில் உன்னையும் ஹானர்ஸ் வகுப்பில் சேர்த்து விடுவார்கள்.”
“நல்ல ஐடியா கேரன்! உன் பாடத்தை நிச்சயம் எனக்குத் தருவாயா?” என்று அழுகையை நிறுத்திய சூரன் கேட்டான்.
“அஃப் கோர்ஸ் சூர்!”

கேரன் சொன்னபடிதான் நடந்திருக்கிறது. அடுத்த ஆண்டில் அவர்கள் இருவரும் ஒரே சிறப்பு வகுப்பில் சேர்ந்து இருக்கலாம். ஆனால் அப்படி நடக்குமா என்பதுதான் இப்போது சந்தேகமாக இருக்கிறது.
பீட்ஸா கிங் கடைக்கு முன் கார் நின்றது. மூவரும் கடைக்குள் சென்றார்கள். இன்னும் மதிய கும்பல் சேரவில்லை. பரிசாரகப் பெண் உடனே தோன்றினாள். கேரன் தனக்குப் பிடித்த மாதிரி ஒரு சிறுவர்களுக்கான பீட்ஸா வாங்கிக் கொண்டாள். சாமியும், சூரனும் நடுத்தர பீட்ஸாவைப் பகிர்ந்து கொள்ள முடிவு செய்தார்கள். காத்திருக்கும் நேரத்தில் “இந்தக் கோடை விடுமுறையில் என்ன செய்ய திட்டம்?” என்று சாமி கேட்டான்.
“இரண்டு மாதம் நீச்சலில் கடுமையாகப் பயிற்சி செய்யப் போகிறோம். இறுதிப் போட்டிகளில் இரண்டு நீல ரிப்பன்களாவது ஜெயிக்க வேண்டும். எனக்கு ஃப்ரீயிலும், ஃப்ளையிலும் வாய்ப்பு இருக்கிறது. சூர் பேக்கிலும், ப்ரெஸ்ட்டிலும் நன்றாகச் செய்வான். ரைட் சூர்?”
“ரைட்.”
“சூரன் ஜூன் மாதத்தில் இரண்டு டென்னிஸ் டோர்னமென்ட்டில் விளையாடுவான்.” அப்புறம்?
மேஜையில் வைத்திருந்த பீட்ஸா சம்பத்தப்பட்ட புதிர்களைக் கேரனும், சூரனும் விடுவிக்கத் தொடங்கினார்கள். அவர்கள் இருவரும் தலைகள் ஒட்டிக் கொள்ள, ஒன்றாகச் செயல் படுவதைப் பார்க்கும் போது சாமிக்கு என்னவோ போலிருந்தது. அந்த ஒற்றுமை பலரை வியக்க வைத்திருக்கிறது. ‘எப்படி சண்டை போடாமல் இருக்க முடியும்?’ அவர்களுக்குள் கருத்து வேற்றுமை வருவதுண்டு, ஆனால் பெரும்பாலும் அதை அவர்களே தீர்த்துக் கொள்வார்கள். எந்தக் குழந்தைகள் கூட்டத்திலும் அவர்களைச் சேர்ந்தே பார்க்கலாம். அவர்கள் குரலைத் தனியாகவே கேட்கலாம். கடந்து போன ஆண்டில் ஆங்கில சிறப்பு வகுப்பில் இல்லை என்று கேரன் சூரனை மட்டம் தட்டியதில்லை. சூரனுக்கும் அவள் மேல் பொறாமை கிடையாது. “நாங்கள் இருவரும் முதன் முதலில் எப்போது சந்தித்தோம்?” என்று அவர்கள் கேட்கும் போது அந்தக் கதையைப் பல முறை சாமி சொல்லியிருக்;கிறான்.

‘எப்போது என்றெல்லாம் நினைவில்லை. நீங்கள் இருவரும் மழலையைத் தாண்டாத வயதில் ஒரு மாலை.” சாமி, சரவணப்ரியா, சூரன் மூவரும் தங்கள் வீட்டிற்குள் போக முடியாமல் வெளியே காத்திருந்த போது புல் வெட்டிக் கொண்டிருந்த டேவிட் பார்க்கர் அதை நிறுத்திவிட்டு அவர்கள் பக்கம் வந்தான்.
“ஹாய் சாம்! ஹாய் சாரா! சாவியை வீட்டிற்குள் வைத்துக் கதவைப் பூட்டிக் கொண்டு விட்டீர்களா?”
“ஒரு விதத்தில் அப்படித்தான், டேவிட்! எங்கள் வீட்டிற்கு வந்திருக்கும் விருந்தினர் காரை எடுத்துக் கொண்டு பக்கத்தில் இருக்கும் மருந்துக் கடைக்குப் போயிருக்கிறார். அவரிடம் கொடுத்த சாவிக் கொத்தில் வீட்டு சாவியும் இருக்கிறது. அவர் திரும்பி வருவதற்குள் நாங்கள் ஐவி சர்க்கிலை ஒரு தடவை சுற்றி வந்து விடலாம் என்று நினைத்தோம். அவர் இன்னும் வரவில்லை.”
“அது வரையில் தெருவில் நிற்பதற்குப் பதில் எங்கள் வீட்டிற்குள் வந்து உட்காரலாமே!”
“உங்களுக்கு எதற்குத் தொந்தரவு?” எதிர் வீட்டில் டேவிட், லிசா பார்க்கர்கள் இருக்கிறார்கள் என்று தெரியும். அவர்கள் வீட்டிலும் குழந்தையின் அழுகுரல் கேட்டிருக்கிறது. எப்போதேனும் பார்த்தால் ஹலோ சொல்வதுண்டு. அதற்கு மேல் பரிச்சயம் கிடையாது.
“எங்களுக்கு மகிழ்ச்சிதான்” என்று டேவிட் வருந்தி அழைத்ததால் அவர்கள் பார்க்கர் வீட்டிற்குள் நுழைந்தார்கள். பியானோ வாசித்துக் கொண்டிருந்த லிசாவைப் பக்கத்தில் நின்றிருந்த ஒரு பெண் குழந்தை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தாள். அவர்களைப் பார்த்தவுடன் வாசிப்பதை நிறுத்திவிட்டு லிசா, “உள்ளே வாருங்கள்!” என்று அழைத்தாள்.
‘ஹாய் லிசா! இது சூ-ர-ன்!” என்று சரவணப்ரியா அவர்களிடம் சொன்னாள்.
‘ஹாய் சூரன்! இது கேரன். ரைமிங்காக இருக்கிறதே.”
பெரியவர்கள் எல்லோரும் சோபாவில் உட்கார்ந்து பேசிக்கொண்டிருந்தார்கள். டேவிட், “இந்த மாதிரி வீட்டிற்குள் போக முடியாமல் எங்களுக்கும் நடந்திருக்கிறது. அதனால் வெளியிலிருக்கும் மரச் சட்டத்திற்குக் கீழே ஒரு கொக்கியில் யாருக்கும் தெரியாத இடத்தில் வீட்டு சாவி ஒன்றை மாட்டி வைத்திருக்கிறேன்” என்றான்.
“அதை விட நல்ல ஐடியா. வீட்டின் ஒரு சாவியை உங்களிடம் கொடுத்துவிடுகிறேன். நாங்கள் மறந்துவிட்டால் வந்து வாங்கிக் கொள்கிறோம்” என்றான் சாமி.
“கேரனைத் தினமும் யார் பார்த்துக் கொள்கிறார்கள்?”
“நான் வேலை செய்யும் இடத்திலேயே கேரனைக் கவனித்துக் கொள்கிறார்கள்” என்று டேவிட் சொன்னான்.
“நாங்கள் தெரிந்தவர்கள் வீட்டில் சூரனை விட்டு விட்டு வேலைக்குப் போவோம்.”
“கேரனுக்கு இன்னும் இரண்டாகவில்லை. அதற்குள் முக்கால் மைலில் இருக்கும் கடைக்கு என்னோடு நடந்து வருவாள்.”
சாமி அவன் பங்குக்கு, “சூரனுக்கு எந்தக் காரைக் காட்டினாலும் அது எந்த கம்பெனி செய்தது என்று பார்த்த உடனே சொல்லிவிடுவான்” என்றான்.
ஜன்னல் வழியாகத் தன் கார் போவதைச் சாமி கவனித்தான். “எங்கள் விருந்தினர் திரும்பி விட்டார். நாங்கள் கிளம்புகிறோம். நீங்களும் எங்கள் வீட்டிற்கு வர வேண்டும்.” எல்லோரும் எழுந்திருந்தார்கள்.
“சூரன் எங்கே?”
“கேரனையும் காணோமே!”
நால்வரும் சுற்றி வந்தார்கள். சமையறை, சாப்பிடுமறை, பெரிய கூடம் எங்கும் அவர்கள் இல்லை.
டேவிட், “அவர்கள் மாடிக்குப் போயிருக்கலாம். நான் போய் பார்த்து வருகிறேன்” என்று படி ஏறினான்.
“சூரனைப் பற்றிக் கவலை இல்லை. அவனுக்குப் படி ஏறத் தெரியும். கேரன் எப்படி?”
“அவளும் தவழ்ந்து தவழ்ந்து ஏறி விடுவாள்.”
மாடிக்கு வேகமாகச் சென்ற டேவிட் மெதுவாகத் திரும்பி வந்தான். “நான் பார்த்ததை நீங்களும் போய் பார்க்க வேண்டும்.”
லிசா முன்னால் செல்ல, சரவணப்ரியாவும், சாமியும் ஓசை எழுப்பாமல் படி ஏறினார்கள். மாடிக்குச் சென்றதும் வலது பக்கம் திரும்பி அங்கேயே நின்றார்கள். பாதி திறந்த கதவு வழியாக உள்ளே பார்த்தார்கள். சிறிய படுக்கைக்குக் கீழே தரையில் கேரனும், சூரனும் உட்கார்ந்திருக்கிறார்கள். கேரன் அவளுடைய ஒவ்வொரு விளையாட்டுப் பொருளையும் காட்டி ஏதோ சொல்கிறாள். சூரன் அவள் சொல்வதை மிகக் கவனமாகக் கேட்டு விட்டு அதை வாங்கிப் பார்க்கிறான். பிறகு பக்கத்தில் வைக்கிறான். அவர்கள் விளையாட்டில் குறுக்கிட மனமில்லாமல் மூவரும் வந்த வழியே திரும்பி விட்டார்கள்.
“நீங்கள் இருவரும் வேண்டுமானால் திரும்பிப் போகலாம். அவர்கள் விளையாடி முடித்த பிறகு சூரனை நானே அழைத்து வருவேன்” என்று டேவிட் சொன்னான்.
வீட்டை நோக்கி நடக்கும் போது சரவணப்ரியா சாமியிடம், “கண்டவுடன் காதல் எந்த வயதிலும் வரலாம்” என்றாள்.
“பதினாறு வயதிலும் வரலாம், இரண்டு வயதிற்கு முன்னாலும் வரலாம்” என்று சாமி சிரித்தான்.
அதற்கு அடுத்த நாள் சாமியும் சூரனும் மட்டும் ஐவி சர்க்கிலைச் சுற்றி வரக் கிளம்பினார்கள். இருட்டுவதற்கு இன்னும் அரை மணிக்கு மேல் இருந்தது. பாதி தூரம் கூட நடந்திருக்க மாட்டார்கள். “ஹாய் சாம்! ஹாய் சூரன்!” என்ற குரல் கேட்டுத் திரும்பினார்கள். டேவிட் சைக்கிளில் அவர்களை மெதுவாகக் கடந்து சென்றான். சைக்கிளின் பின் சீட்டில் கேரன். அவள் தலையிலும் இளஞ் சிவப்பில் ஒரு ஹெல்மட். அவர்களைப் பார்த்துக் கை நீட்டி சிரித்தாள்.
“ஹாய் டேவிட்! ஹாய் கேரன்!”
சூரன் ‘கேர்’ என்;றான். “அது கேரன். டேவிட் அவளை பைக்கில் அழைத்துச் செல்கிறான். ஒரு வேளை ஐஸ் க்ரீம் சாப்பிடப் போவார்களாக இருக்கும்.” சாமி சொன்னதில் சூரனுக்கு எவ்வளவு புரிந்தது என்று தெரியாது. முதலில் மேலும் நடக்க மறுத்தான், பிறகு அந்த இடத்திலேயே உட்கார்ந்து விட்டான்.
“உனக்குக் களைப்பாக இருக்கிறதா?”
“கேர்.”
“உன்னைத் தூக்கிக் கொள்ளட்டுமா?”
“கேர்.”
வேறு வழியின்றி சாமியும் தெரு ஓரத்தில் உட்கார்ந்து கொண்டான். மரத்தின் நிழல்கள் நீண்டு அவர்களைத் தாண்டிச் சென்றன. ஐஸ் க்ரீம் சாப்பிடப் போயிருந்தால் இந்நேரம் திரும்பி இருக்க வேண்டுமே. “சூரன்! வீட்டிற்குப் போகலாம், வா! வீட்டிலிருந்து கேரனைக் கூப்பிடலாம்.” கேரன் சென்ற திசையைப் பார்த்த படி உட்கார்ந்திருந்த சூரன் நகரவில்லை.
இலேசாக இருட்டத் தொடங்கியது. ‘கேர்” என்று சூரன் கை நீட்டி எழுந்து நின்றான். அவன் காட்டிய திசையில் டேவிட் சைக்கிளைத் தள்ளிக் கொண்டு வருவதைச் சாமி பார்த்தான். அவர்கள் அருகில் வந்து, ‘ஐஸ் க்ரீம் கடையிலிருந்து கிளம்பும் போது ஒரு டயரில் காற்று இறங்கி விட்டது. அதனால் தள்ளிக் கொண்டு வருகிறேன். அது போகட்டும். நீங்கள் இருவரும் இந்த இடத்தில் என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள்?” என்று டேவிட் கேட்டான்.
‘உங்களுக்காகக் காத்துக் கொண்டிருக்கிறோம்.”
‘எங்களுக்காகவா?” என்று டேவிட் ஆச்சர்யப் பட்டான்.
‘சரியாகச் சொல்லப் போனால் கேரனுக்காக சூரன் காத்துக் கொண்டிருக்கிறான்.”
அதைக் கேட்டு டேவிட் கேரனைக் கீழே இறக்கி அவளுடைய ஹெல்மட்டை அவிழ்த்து சைக்கிளின் பிடியில் மாட்டினான். கேரனின் தலையில் இருந்த மீன் வடிவ க்ளிப்பைக் காட்டி சூரன், ‘ஃபிஷ்! ஃபிஷ்!” என்றான். இருவரும் கை கோர்த்துக் கொள்ள ஒளியும் இருளும் கலந்த ஐவி சர்க்கிலின் மீதியை நால்வரும் நடந்து முடித்தார்கள்.

பீட்ஸா தட்டுகள் வந்தன. விரைவில் காலி செய்யப்பட்டன. கடையை விட்டு வெளியே வந்தவுடன், “அடுத்து எங்கே போகலாம்?” என்று சாமி கேட்டான்.
“ரோல்லர் ஸ்கேட் சென்டர்” என்றாள் கேரன்.
அவர்கள் விருப்பப் படி நடந்து தான் சொல்லப் போகும் செய்திக்கு அவர்களைத் தயார் செய்ய வேண்டும் என்கிற எண்ணத்தில், “அப்படியே” என்றான் சாமி. எல்லோரும் காரில் ஏறிக் கொள்ள அடுத்த பயணம் தொடர்ந்தது.
“உனக்குக் கோடை விடுமுறையைப் பொறுத்த வரை என்ன பிடிக்கும்?” என்று சூரன் கேரனைக் கேட்டான்.
“பதினோரு வாரங்களில் ஒவ்வொரு நாளும் ஒரு ஞாயிறு மாதிரிதான்.”

ஒரு ஞாயிறு சாமிக்குப் பிடிக்காது. அன்றுதான் பார்க்கர் குடும்பம் ஃபாமிலி ரியூனியன் என்று ஒரு வாரம் கிளம்பிப் போய் விடுவார்கள். ஜூன் கடைசியில்தான் லிசாவின் உறவினர்கள் வழக்கமாகச் சந்தித்துக் கொள்வார்கள். ஆனால் அந்த ஆண்டு அவள் அண்ணனுக்கு அந்த சமயத்தில் அறுவைச் சிகிச்சைக்கு ஏற்பாடு. அதனால் ஜூன் முதலிலேயே குடும்ப சங்கமத்தை வைத்துக் கொண்டார்கள். காலை பத்து மணி அளவில் அவர்களுக்கு உதவி செய்யலாம் என்று சாமியும் சூரனும் அவர்கள் வீட்டை நோக்கி நடந்தார்கள். மினி வேனின் எல்லாக் கதவுகளும் திறந்திருந்தன. மேலே ஒரு படகு கட்டியிருந்தது.
‘கேரன்! உன்னால் எனக்கு எந்த உதவியும் இல்லை” என்று டேவிட் கேரனைப் பார்த்துக் கத்திக் கொண்டிருந்தான். அதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த அடுத்த வீட்டுக் கோர்ட்னியின் முகத்தில் பரம திருப்தி. அவளுக்கும் அப்போது ஏழு வயது.
“ஹாய் கேரன்! ஹாய் கோர்ட்னி!”
“ஹாய் சூரன்!” என்று கோர்ட்னி சொன்னாள். கேரன் வாயைத் திறக்கவில்லை. அவ்வளவு கோபம் போலிருக்கிறது.
“ஹாய்! டேவிட்! சென்ற கிறிஸ்மஸ் போது வாங்கிய படகுக்கு இப்போது தான் உபயோகம் போலிருக்கிறது. ஏதாவது உதவி வேண்டுமா?”
“ஹாய் சாம்!” என்று புன்னகையை வரவழைத்துக் கொண்ட டேவிட், “அவளை ஏதாவது வேலை செய்யச் சொல்!” என்றான். கேரனைச் சமாளிக்க சூரன் போதும் என்கிற எண்ணத்தில் லிசாவுக்கு உதவ சாமி வீட்டிற்குள் சென்றான்.
“ஹாய்! லிசா!”
“ஹாய் சாம்! கெல்சியைக் கொஞ்சம் எடுத்துக் கொள்கிறாயா?” என்று கேரனின் தங்கையை அவனிடம் கொடுத்தாள். “சா” என்று மழலை பேசிய குழந்தையை வாங்கிக் கொண்டு வேடிக்கை காட்ட ஜன்னல் பக்கம் வந்தான். லிசாவின் உறவினரைப் பார்ப்பதில் கேரனுக்கு துளி கூட ஆர்வம் காட்டாததில் வியப்பொன்றும் இல்லை. “கடந்த பன்னிரண்டு மாதங்களில் எப்படி வளர்ந்துவிட்டாய்?” என்று கன்னத்தை நிமிண்டும் பெரியவர்கள், “நீ எங்களைப் போல சர்ச்சுக்குப் போகிறாயா? இல்லை அப்பாவுடன் சினகாக் போகிறாயா?” என்று கேலி செய்யும் கசின்கள், இவர்களுடன் ஒரு வாரம். வெளியே பார்த்த போது, “கேரன்! உன் பொருட்களை எல்லாம் இன்னும் அரை மணியில் எடுத்து வைக்காவிட்டால்…” என்று டேவிட் அவளை மிரட்டிக் கொண்டிருந்தான்.
“எடுத்து வைக்காவிட்டல் நீ அவளுக்குத் தண்டனை கொடுக்கப் போகிறாயா?” என்று கோர்ட்னி ஆவலுடன் கேட்டாள்.
“ஆமாம், என்ன தண்டனை கொடுக்கலாம்?”
“ஒரு வாரத்திற்கு டிவி கிடையாது.”
“அது மிக அதிகம்” என்றான் சூரன்.
“ஒரு வாரத்திற்கு இனிப்பு எதுவும் கிடையாது.”
“டிவி பார்க்காதது போதாதா?”
“போதாது. அவள் சாமின் இயந்திரப் பென்சிலை உடைத்ததையும் சேர்த்துக் கொள்ள வேண்டும்.”
“சாமின் பென்சிலை உடைத்து விட்டாளா? எனக்குத் தெரியாதே!”
“நான் சென்ற வாரம் சூரன் வீட்டில் இருந்த போது நடந்தது. அதைத் திருகி திருகி விளையாடினாள். அது உடைந்து விட்டது.”
“அந்தப் பென்சில் ஏற்கனவே சரியாக வேலை செய்யாமல் இருந்தது. அதைக் கம்பெனிக்கு அனுப்பி வேறொரு புதிய பென்சில் வாங்கிவிட்டோம்” என்று சமாதானம் சொன்னான் சூரன். “டேவிட்! கேரன் சாமான்களை நான் வேண்டுமானால் எடுத்து வைக்கட்டுமா?”
அடுத்த அரை மணியில் ஒரு வழியாகப் பார்க்கர்களின் வண்டி அவர்களோடு படகையும், பல மூட்டைகளையும் சுமந்து கொண்டு நகர்ந்தது.
“பை சூர்!” ஜன்னல் வழியாகக் கேரன் கை ஆட்டினாள். ஒரு வாரம், ஏழு நாட்கள், ஒரு நாளைக்குப் பதினைந்து மணி என்று நேரம் மெல்ல நகர்ந்தது. அடுத்த ஞாயிறு அதி காலையிலேயே சூரன் எழுந்து விட்டான். கேரன் திரும்பிய பிறகு அவளுடன் என்ன விளையாட வேண்டும் என்பதற்கு ஒரு நீண்ட பட்டியல் தயார் செய்தான். ஜன்னல் வழியாக அடிக்கடி பார்த்துக் கொண்டிருந்த சூரன் பதினோரு மணி சுமாருக்கு, “டாட்! பார்க்கர்கள் வந்து விட்டார்கள்” என்று கத்தினான். “சூர்! நான் உனக்கு என்ன வாங்கி வந்திருக்கிறேன் என்று உன்னால் ஊகிக்கவே முடியாது” என்ற குரல் உரக்கக் கேட்டது. அப்பாடா! இன்னும் ஒரு வருடத்திற்குக் கவலைப் பட வேண்டாம்.

ஒரு வாரத்தைத் தள்ளுவதே பெரிய பிரயத்தனமாக இருந்திருக்கும் போது மாதங்கள், ஆண்டுகள் என்று எப்படி சமாளிக்கப் போகிறோம்?
ஸ்கேட் சென்டரில் சாமி அவர்களுக்காக இரண்டு டிக்கெட் வாங்கினான். உள்ளே நுழைந்தவுடன் அவர்கள் தாங்கள் அணிந்திருந்த காலணிகளைக் கழற்றிக் கொடுத்து விட்டு சக்கரம் வைத்த காலணிகளுக்கு மாற்றிக் கொண்டார்கள். அவர்கள் சறுக்கு வட்டத்திற்குள் செல்ல சாமி மேல் தட்டில் போய் உட்கார்ந்து கொண்டு கீழே பார்த்தான். விடுமுறை தொடங்கியதால் வந்திருந்த இளம் வயதுக் கும்பலில் கேரனும், சூரனும் கலந்து கொண்டார்கள். ஏற்கனவே பல முறை இந்த இடத்திற்கு அவர்களை அழைத்து வந்திருக்கிறான். அதனால் அடுத்த இரண்டு மணி நேர நிகழ்ச்சி அவனுக்கு அத்துப்படி. முதலில் மிக மெதுவாக அசைந்து அசைந்து நகர்ந்தார்கள். தன்னுடைய நிலைமையைப் பற்றி நிதானமாகச் சிந்தனை செய்ய அவனுக்கு அப்போதுதான் நேரம் கிடைத்தது.
அன்று காலையில் மூன்று மணி தானே வேலை என்கிற மகிழ்ச்சியில் சாமி காரிலிருந்து இறங்கி மெதுவாகத் தன் அலுவலகத்திற்கு நடந்து செல்லும் போது பேராசரியர் டாய்ல் பின்னால் வந்து தோளைத் தொட்டார். திடுக்கிட்டுத் திரும்பிய சாமியிடம், “ஹாய்! சாம்! நான் சொல்லப் போவதைக் கேட்டால் நீ உண்மையிலேயே திடுக்கிடப் போகிறாய்” என்றார். அவருடைய உவகை அவனுக்கு வியப்பை அளித்தது. கடந்த சில மாதங்களாக அவருக்கும், புதிதாகப் பாஸ்டனிலிருந்து வந்திருந்த சேர்மனுக்கும் ஒத்துப் போகவில்லை என்பது வதந்தியிலிருந்து செய்தியாக வளர்ந்திருந்தது. அவருடைய கவலை தாடியாக நீண்டு, சொற்பத் தலை மயிரையும் பறிக்கத் துவங்கியது. அவர்களின் விரோதம் அவனையும் தீண்டும் போல் தெரிந்தது. இப்போது சுத்தமாகச் சவரம் செய்த பிரகாசமான முகம். தலைமயிர் கூடப் பரவலாக வழுக்கையை மறைத்தது.
“சாம்! ஆறு மாதங்களுக்கு முன் நான் சேர்மன் பதவிக்காக வேன்டர்பில்ட் பல்கலைக் கழகத்திற்குச் சென்று வந்தேனே. அப்போது அது எனக்குக் கிடைக்காது என்று எல்லோருக்கும் ஏமாற்றமாக இருந்ததே, உனக்கு நினைவிருக்கிறதா?”
“நன்றாக நினைவிருக்கிறது.” ‘உண்மையில் ஊரை விட்டு;ப் போகப் போவதில்லை என நான் சந்தோஷந்தான் பட்டேன்’ என்பதைச் சாமி சொல்ல வில்லை.
“திடீரென்று நேற்று காலை வான்டர்பில்ட் வைஸ் சான்சலர் என்னைத் தொலை பேசியில் அழைத்தார். அந்தப் பதவியை எனக்குத் தருவதற்காக நேரிலேயே வரச் சொன்னார். நான் உடனே ஃப்ளைட் பிடித்து நாஷ்வில் சென்று நேற்று இரவே திரும்பி விட்டேன். அங்கிருந்த ஆறு மணி நேரமும் இல்லை என்கிற வார்த்தை என் காதில் ஒரு தடவை கூட விழவில்லை.”
எதிர் பாராத அந்த செய்தியைக் கேட்ட சாமி உண்மையிலேயே திடுக்கிட்டுப் போனான். “நாம் பல வருடங்களாகச் சேர்த்து வைத்திருக்கும் எல்லா சாமான்களையும் எடுத்துப் போக முடியுமா?” என்று கேட்டு வைத்தான்.
“இங்கிருப்பதை விட இரண்டு மடங்கு இடம் கிடைக்கும். இப்போது நம் குழுவில் இருக்கும் அனைவருக்குமே ஜூலை மாதத்திலிருந்து அங்கே வேலை தர அவர்களுக்குச் சம்மதம்.”
“சாராவுக்கு என்ன செய்வது?”
“அவளுடைய சிவியை நேற்று கொடுத்து விட்டு வந்தேன். இன்று காலை அவளுக்கும் ஒரு இடம் ஏற்படுத்தப் பட்டிருப்பதாக ஈ-மெயில் வந்திருக்கிறது.”
‘மே மாதம் முடியப் போகிறதே, இன்னும் ஒரு மாதத்திற்குள் மூட்டை கட்டிக் கொண்டு போக முடியுமா?” என்று சாமி கவலைப் பட்டான்.
‘சில வாரங்கள் தாமதமானாலும் பரவாயில்லை.”
போருக்குச் செல்லும் தளபதியின் உற்சாகத்துடன் எந்த ஒரு பிரச்சனைக்கும் ஒரு பதில் வைத்திருந்தார்.
கீழிருந்து வந்த ஆரவாரம் சாமியின் கவனத்தை இழுத்தது. மூன்று பேர் கை கோர்த்து மற்றவர்களைப் பிடிக்கத் தொடங்கினார்கள். அவர்கள் கை பட்ட ஒவ்வொருவரும் சேர்ந்து கொள்ள சங்கிலித் தொடர் வளர ஆரம்பித்தது. கடைசியில் அதன் பிடிகளில் அகப்படாமல் கேரனும், இன்;னொரு பெண்ணும் மிஞ்சி இருந்தார்கள். ஒரு சுற்றுக்குப் பிறகு கேரனால் வேகமாக ஓட முடியவில்லை. சங்கிலித் தொடர் அவளைச் சூழ்ந்து கொள்ள மற்றவளுக்கு வெற்றி. பத்து நிமிட இடைவேளைக்காகக் கும்பல் கலையத் தொடங்கியது. கீழே இறங்கிச் சென்று சாமி இரண்டு பனித் துகள்கள் கலந்த பானங்களை வாங்கிக் காத்திருந்தான். கேரனுக்கு ஸ்ட்ராபெர்ரி, சூரனுக்குத் திராட்சை. வழவழப்பான தரையிலிருந்து கம்பளத்திற்கு மிக ஜாக்கிரதையாகக் காலை வைத்து வெளியே வந்து அங்கிருந்த பெஞ்ச்சில் சரிந்து உட்கார்ந்த பிறகு அவர்;கள் கையில் கொடுத்தான்.
“தாங்க்யூ.”
“கேரன்! நீ வேகமாகத் திரும்பி வெளிப் புறமாகச் சென்றிருந்தால் எங்களிடமிருந்து தப்பித்திருக்கலாம்.”
“மற்றவள் என்னை விட பெரிய பெண். அதனால் அவளை விட்டு விட்டு என்னைக் குறி வைத்து பிடித்து விட்டார்கள்.”
அவர்கள் திரும்பவும் சறுக்கு வட்டத்திற்குள் நுழைந்தவுடன் சாமி தன் இருக்கைக்கு வந்தான். இடைவேளையின் போது லிம்போ விளையாட்டிற்காக ஐந்தடி உயரத்தில் வைக்கப் பட்ட கம்புக்குக் கீழே வரிசையில் நின்று ஒவ்வொருவராகச் செல்லத் தொடங்கினார்கள். அதை வீழ்த்தியவர்கள் ஆட்டத்திலிருந்து வெளியேற மிச்சம் இருந்தவர்களுக்கு அடுத்த சுற்றில் கம்பின் உயரம் குறைக்கப் பட்டது. மூன்றாவது சுற்றிலேயே ஐந்தடி உயர சூரன் வெளியேற்றப் பட்டான். பிறகு கேரனின் ஒவ்வொரு முயற்சியிலும், “கோ! கேரன்! கோ!” என்று உற்சாகப் படுத்தினான்.
டாய்லுடன் பேசிய பின் சாமி சரவணப்ரியாவைத் தொலை பேசியில் அழைத்து புதிய திருப்பத்தைச் சொன்னான்.
“அவர் போனாலும் நீ இங்கியே இருக்க முடியாதா?
“முடியும்னு தோணலை. புது சேர்மன் என்னுடைய இடத்துக்கு ஏற்கனவே ஒரு ஆள் பார்த்து வைச்சிருக்காராம்.”
“சாமார்த்திய ஆசாமிதான். சரி, வேற ஊருக்குப் போவணும்னா போய்த்தான் ஆவணும். நாம என்ன செய்ய முடியும்? என்னுடைய கிராண்ட்டும் மூணு மாசத்துக்கப்புறம் நிச்சயமில்லை.”
சாமியின் சிந்தனைகள் செக்கு மாடுகள் போல பிரச்சனையைச் சுற்றி வந்தன. புதிதாக வந்த சேர்மன் காலப் போக்கில் அதிகார மோகம் குறைந்தவுடன் டாய்லுடன் சமாதானமாகி விடுவார் என்று சாமி நம்பி இருந்தான். ஆனால் அது வரை காத்திருக்க இருவருக்கும் பொறுமை இல்லை. ஊருக்குப் பக்கத்திலே பல மருந்துக் கம்பெனிகள் இருந்தாலும் நாற்பத்தைந்தைக் கடந்த அவனை யார் சீந்தப் போகிறார்கள்? டாய்லுடன் மனக் கசப்பில்லாத பத்து ஆண்டுப் பழக்கம். அதைப் பிடித்துக் கொண்டு ஊரை விட்டுப் போவதை; தவிர வேறு தீர்வு எதுவும் புலப்படவில்லை. பெரிய விளக்குகள் அணைக்கப் பட்டன. ஒளிப் புள்ளிகள் மட்டும் மென்மையான இசைக்கு ஏற்ப அரங்கம் எங்கும் சிதறி விழுந்தன. அவற்றின் மழையில் எல்லோரும் ஜோடி ஜோடியாகக் கை கோர்த்து மெதுவாகச் சுற்றி வந்தார்கள். இணையாக ஸ்கேட் செய்யும் கேரனையும், சூரனையும் பார்த்த போது அவர்களைப் பிரித்தாக வேண்டிய நிலைமையை நினைத்து அவன் மனம் அழுதது. கண்களில் நீர் திரண்டது. எட்டு ஆண்டுகளாக அவர்கள் வயதைப் போலவே வளர்ந்து முதிர்ந்த நட்பு ஒருவரை ஒருவர் தினம் பார்க்காவிட்டாலும் அழிந்து விடாது என்கிற ஒரே நம்பிக்கை அவன் துயரத்தைச் சற்றே குறைத்தது.
விளக்குகள் எரிந்தன. கண்களைத் துடைத்துக் கொண்டு சாமி காலணிகளை மாற்றும் இடத்திற்குச் சென்று காத்திருந்தான். களைத்து, வேர்த்த ஆனால் திருப்தியை வெளிப்படுத்தும் முகங்களோடும், கசங்கிய உடைகளோடும் கேரனும், சூரனும் கடைசியில் வந்தார்கள். இருவரும் காலணிகளை மாற்றிக் கொண்ட பிறகு அந்த இடத்தில் யாரும் இல்லை. அவற்றை எடுத்துக் கொடுக்கும் நீண்ட பின்னல் போட்ட ஆள் கூட உள்;ளே சென்று விட்டான். அவர்கள் வெளியே செல்ல மனமில்லாதது போல் அங்கிருந்த பெஞ்சிலே உட்கார்ந்திருந்தார்கள்.
நல்ல காரியங்களை மட்டும் தானா, தவிர்க்க முடியாத வேலைகளையும் தள்ளிப் போடுவதில் அர்த்தமில்லை. “கேரன்! சூரன்! நீங்கள் இருவரும் நான் சொல்வதை மிகக் கவனமாகக் கேட்க வேண்டும்” என்று சாமி நிதானமாகச் சொன்னான். பெற்றோர்கள் அடிக்கடி வழங்கும் நீண்ட அறிவுரைகளில் ஒன்று வரப் போகிறது என்று நினைத்து அந்த சிறுவர்கள் முகத்தில் எந்த உணர்ச்சியும் காட்டாமல் கேட்பதற்குத் தயாராக இருந்தார்கள்.
“நானும், என்னுடைய பாஸ_ம் இப்போது இருக்கும் வேலையில் தொடர முடியாது போல் இருக்கிறது. அதனால் அவர் வேண்டர்பில்ட் யூனிவெர்சிடியில் சேர்மன் வேலையை ஏற்றுக் கொண்டிருக்கிறார். எனக்கும், சாராவுக்கும் வேலை ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறார். நானும் எவ்வளவோ யோசித்துப் பார்த்தேன். இந்த இடத்தை விட்டுப் போவதைத் தவிர வேறு வழி எதுவும் எனக்குத் தெரியவில்லை. நாங்களும் அவருடன் சேர்ந்து போகத்தான் வேண்டும். இன்னும் இரண்டு மாதங்களில் நாங்கள் வீட்டைக் காலி செய்து நாஷ்வில் போகப் போகிறோம்” என்று இடைவெளி இல்லாமல் தெளிந்த குரலில் சொல்லி முடித்தான்.
இருவரும் உடனே பதில் எதுவும் சொல்லவில்லை. செய்தியின் முழு அர்த்தமும் புரிந்த போது சூரனின் முகம் அரங்கினில் அணைக்கப் பட்ட விளக்குகள் போல் மெல்ல மெல்ல ஒளி இழந்தது.
கேரன்தான் பெரிய மனுஷி மாதிரி முதலில் பேசினாள். “இட்ஸ் ஓகே.”
அவளுக்கு நான் சொன்னது புரியவில்லையோ? நாஷ்வில் இங்கிருந்து எவ்வளவு தூரத்தில் இருக்கிறது என்று தெரியாதோ?
“நாங்கள் இங்கிருந்து போன பிறகு ஆண்டிற்கு ஓரிரு முறைதான் நாம் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்ள முடியும்.”
“அது எனக்கு தெரியும்.”
“அப்புறம்?”
“சாம்! என்ன நடக்கப் போகிறது என்று உனக்குத்தான் தெரியவில்லை.” கேரன் சாமியின் அறியாமையைப் பார்த்து பரிதாபப் பட்டாள்.
“எனக்குத் தெரியவில்லையா?”
கேரன் சொன்ன பதிலைக் கேட்ட பிறகு தனக்கும் பத்து வயது இருக்கக் கூடாதா என்று சாமி ஏங்கினான்.
“அங்கே உன் பாஸ_க்கு இங்கே இருந்ததை விட இன்னும் மிகக் கஷ்டமாக இருக்கப் போகிறது. அதைப் பார்த்த பிறகு பழைய வேலையே போதும் என்று அவர் திரும்பி விடுவார். அப்போது நீங்களெல்லாம் இப்போது இருக்கும் வீட்டிற்கே வந்து விடலாம்.”


venkataraman.amarnath@vanderbilt.edu

Series Navigation