பத்துப்பாட்டுணர்த்தும் மலர்ப்பண்பாடு

This entry is part [part not set] of 38 in the series 20100523_Issue

முனைவர் சி.சேதுராமன்


முனைவர் சி.சேதுராமன், இணைப் பேராசிரியர், மா.மன்னர் கல்லூரி, புதுக்கோட்டை.
E.Mail: Malar.sethu@gmail.com
மனிதன் தோன்றிய காலம் முதல் தன்னியல்பாக இயற்கையுடன் இணைந்து வாழ்ந்து கொண்டிருக்கிறான். இயற்கையைவிடுத்து மனிதனால் இப்பூமியில் வாழஇலயலாது. இயற்கையில் உள்ள ஓரறிவு உயிர், ஈரறிவுயிர், மூவறிவுயிர், நாலறிவுயிர், ஐயறிவுயிர் ஆகிய ஏனைய உயிர்களிடத்தும் தன்னை இணைத்துக் கொண்டு, அவற்றுடன் ஒருவகையான ஆன்மநேயப் பண்பாட்டினை உருவாக்கியுள்ளான். இந்நிலையில் ஓரறிவுயிர்களாகிய தாவரங்களிடமும் அன்பு கொள்ளுதல் அவனது உணர்விலும், உள்ளத்திலும் உயிரிலும் பதியலாயிற்று. அதன் அடையாளமே அவன் கொண்டிருந்த “மலர்ப் பண்பாடு“ ஆகும். மனித வாழ்க்கையின் தொடக்கத்திலும், முடிவிலும் தொடர்புடையதாக மலர்கள் விளங்குகின்றன எனலாம்.
பத்துப்பாட்டு இதனை நன்கு எடுத்துரைப்பது நோக்கத்தக்கது.
நிலமும் மலரும்
நமது முன்னோர்கள் வாழ்வில் மலரகள் இரண்டறக் கலந்துவிட்டது. நிலங்களை குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என மலர்களின் பெயர்களிலேயே குறிப்பிட்டனர். இதனை,
‘‘குறிஞ்சி முல்லை மருதம் நெய்தல்எனச்
சொல்லிய முறையால் சொல்லவும் படுமே“ (தொல். அகத்.)
என்ற தொல்காப்பிய நூற்பா உணர்த்துகிறது. பத்துப்பாட்டு நூல்கள் அனைத்திலும் ஐந்நிலச் சிறப்புக் கூறப்படுவது நோக்கத்தக்கது.
மலர்த்தொகுதியும், நாட்டுவளமும்
ஒரு நாட்டில் அதிகமாக மலர்கள் காணப்படுவதனை வைத்தே அந்த நாட்டின் நீர்வளம், நில வளம், மக்களின் மனவளம், ஆகியவற்றை நன்கு உணரலாம். இதனைப் பழங்காலந்தொட்டு தமிழ்ப் புலவர்கள் தம் இலக்கியங்கள் வாயிலாகப் பிறர்க்கு உணர்த்தி வந்துள்ளனர். சங்க காலத்தில் புலவர்கள் தாம் குறித்திடும் திணைகளை உணர்த்தக் கருப்பொருள்கள் வாயிலாக நிலவளத்தினைச் சுட்ட வருணனைக்கு சிறிதளவே இடம் தந்து வந்தனர். காலப்போக்கில் இவை மாறியது எனலாம்.
சங்க காலப் புலவர்கள் பலர் மலர்த் தொகுதிகளைச் சுவைபடக் கூறுவதற்கு முன்னோடிகளாக இருந்துள்ளனர். குறிப்பாக கபிலர் பாடிய குறிஞ்சிப் பாட்டில் முப்பத்தைந்து அடிகளில் தொண்ணூற்றொன்பது வகை மலர்கள் தொகுத்துக் கூறப்பட்டுள்ளன. அம்மலர்கள் எவ்வாறு இருக்கும் என்ற குறிப்பும் இவ்வரிகளில் இடம்பெற்றுள்ளது. 99 மலர்கள் பற்றிய செய்தியை,

‘‘உள்ளகஞ் சிவந்த கண்ணேம் வள்ளிதழ்
ஒண்செங் காந்தள் ஆம்பல் அனிச்சம்
புண்கயக் குவளை குறிஞ்சி வெட்சி
செங்கோட்டு வேரி தேமா மணிச்சிகை
உரிதுநா றவிழ்தொத் துந்தூழ் கூவிளம்
எரிபுரை எறுழம் சுள்ளி கூவிரம்
வடவனம் வாகை வான்பூங் குடசம்
எருவை செருவிளை மணிப்பூங் கருவிளை
பயினி வானி பல்லிணர்க் குரவம்
பசும்பிடி வகுளம் பல்லிணர்க் காயா
விரிமலர் ஆவிரை வேரல் சூரல்
குரீஇப் பூளை குறுநறுங் கண்ணி
குருகிலை மருதம் விரிபூங் கோங்கம்
போங்கந் திலகந் தேங்கமழ் பாதிரி
செருந்தி அதிரல் பெருந்தண் சண்பகம்
கரந்தை குளவி கடிகமழ் கலிமாத்
தில்லை பாலை கல்லிவர் முல்லை
குல்லை பிடவஞ் சிறுமா ரோடம்
வாழை வள்ளி நீணறு நெய்தல்
தாழை தவளம் முட்டாட் டாமரை
ஞாழல் மௌவல் நறுந்தண் கொகுடி
சேடல் செம்மல் சிறுசெங் குரலி
கோடல் கைதை கொங்குமுதிர் நறுவழை
காஞ்சி மணிக்குலைக் கட்கமழ் நெய்தல்
பாங்கர் மாரஅம் பல்பூந் தணக்கம்
ஈங்கை இலம் தூங்கிணர்க் கொன்றை
அடும்பமர் ஆத்தி நெடுங்கொடி அவரை
பகன்றை பலாசம் பல்பூம் பிண்டி
வஞ்சி பித்திகம் சிந்து வாரம்
தும்பை துழாஅய் சுடர்ப்பூந் தோன்றி
ந்ந்தி நறவம் நறும்பன் னாகம்
பாரம் பீரம் பைங்குருக் கத்தி
ஆரம் காழ்வை கடியிரும் புன்னை
நரந்தம் நாகம் நள்ளிருள் நாறி
மாயிருங் குருந்தும் வேங்கையும் பிறவும்
அரக்கு வரித்தன்ன பரேரம் புழகுடன்“
(குறிஞ்சிப் பாட்டு, 61-96-வது வரிகள்)
எனக் குறிஞ்சிப்பாட்டு எடுத்துரைக்கிறது. இதில் பூவின் நிறம், தன்மை, அது எப்போது மலரும், அதன் மணம் ஆகிய பல்வேறு செய்திகள் குறிப்பிடப்படுவது நோக்கத்தக்கது. நமது பழந்தமிழகத்தின் வளத்தினை இவ்வரிகள் நன்கு எடுத்துக்காட்டுகின்றன.
முல்லை மலர்களின் சிறப்பு
தாமரை மலர் போல முல்லை மலரும் தமிழர்களின் வாழ்வில் பாங்குகொள்ளும் சிறப்பான நறுமலராகும். முல்லையில் வெண்முல்லை, செம்முல்லை முதலிய வகைகள் உண்டு. எனினும் வெண்முல்லைக்கே சிறப்பு அதிமாகும். இம்முல்லையை தளவம் என்றும் அழைப்பர். தமிழகத்தில் திணை நோக்கில் முல்லை மலர் காரணமாகவே காடும் காடு சார்ந்த பகுதியும் ‘முல்லை‘ எனப் பெயர் பெற்றது.
முல்லை மலரானது இளம்மகளிரின் பற்களைப் போலிருத்தலால் அம்மலரைக் கொண்டு அவர்களின் புன்னகையையும் புலவர்கள் சுட்டுவர். பொதுவாக பெண்கள் எந்தப் பருவத்தினராக இருந்தாலும் எந்தக் குலத்தவராக இருந்தாலும் அவர்கள் முல்லை மலர்களை அணிந்து மகிழ்வர். குலமகளிர் தம் கற்பொழுக்கத்திற்கு அடையாளமாக முல்லை மலர்களைச் சூடுதல் தமிழ் மரபாகும். இதனை,
‘‘முல்லை சான்ற கற்பின்‘‘ (சிறுபாண்., 30-வது வரி)
என்று சிறுபாணாற்றுப்படை குறிப்பிடுகின்றது. இதனை,
‘‘வாணத லரிவை முல்லை மலைய‘‘
(ஐங்குறுநூறு,408-வது பாடல்)
‘‘முல்லை சான்ற கற்பின் மெல்லியல் குறுமகள்‘‘
(நற்றிணை,142-பாடல்)
என பிற எட்டுத்தொகை நூல்கள் குறிப்பிடுவது நோக்கத்தக்கது.
தாமரை மலரின் சிறப்பு
வளமான நீர்ச் சூழலில் மலரும் தாமரைமலரை தமிழ், வடமொழி ஆகிய இருமொழிகளில் பல்வேறு பெயர்களிட்டு வழங்குகின்றனர். தாமரை பங்கம் ஆகிய சேற்றில் தோன்றுவதால் பங்கஜம்(பங்கம்+ஜம்) என வடமொழியில் வழங்குவர். இதனைத் தமிழில் பங்கயம் என்பர். வனம், அப்பு, ஜலம் ஆகியவை நீரைக் குறிப்பன. தாமரையானது நீரில் தோன்றி வளர்வதால் வனஜம்(வனம்+ஜம்), அம்புஜம் (அப்பு+ஜம்), நீரஜம் (நீர்+ஜம்), ஜலஜம் (ஜலம்+ஜம்) என்றும் வடமொழியில் வழங்குகின்றனர். தமிழில் வனசம், அம்புயம்,என்று வழங்கப்படுகிறது. தாமரைக் காம்பில் மொட்டையான முள்போன்ற அமைப்பு இருப்பதால் அதனை முளரி என்றும் தமிழில் வழங்குவர்.
இத்தகைய வளமான நீர்ச் சூழலில் வளரும் தாமரையானது பரமார்த்திகத்(இறைத்) தத்துவங்கள் பலவற்றிற்கும் அடையாளப் பொருளாகவும் மதிக்கப்பட்டுப் போற்றப்படுகின்றது. இத்தகைய தெய்வநலச் சிறப்பினை உணர்ந்த இடைகழிநாட்டு நல்லூர்நத்த்த்தனார்,
‘‘வருமுலை அன்ன வண்முகை உடைந்து
திருமுகம் அவிழ்ந்து தெய்வத் தாமரை‘‘
(சிறுபாண், 72-73வது வரிகள்)
எனச் சிறுபாணாற்றுப்படையில் குறிப்பாகக் குறிப்பிடப்படுவது சிந்தனைக்குரியதாகும்.
பொற்றாமரை மலர்ப் பரிசு
கலைஞர்களுக்குச் சிறப்புச் செய்யும்போது பொன்னாலகிய தாமரை மலர்களைப் பரிசளித்துச் சிறப்பிப்பர். சங்க காலத்தில் தமிழ்ப் புலவர்களையும் கலையில் சிறந்தவர்களையும் சிறப்பிப்பதற்குப் பொன்னாலாகிய தாமரைப் பூக்களைப் புரவலர்கள் வழிங்கியுள்ளமை நோக்கத்தக்கது. பொன்னால் தாமரை வடிவில் மலர்களைச் செய்து அவற்றை வெள்ளிநாரால் தொடுத்துப் ‘பொன்னரி மாலை‘ என்ற பெயருடன் அதனைக் கலைஞர்களுக்கு கரிகாற்சோழன் வழங்கியதை,
‘‘எரியகைந் தன்ன வேடில் தாமரை
சுரியிரும் பித்தை பொலியச் சூட்டி
நூலின் வலவா நுணங்கரின் மாலை
வாலொளி முத்தமொடு பாடினி யணிய‘‘
(பொருநர்., 159-162-வது வரிகள்)
எனப் பொருநராற்றுப்படை நவில்கிறது. இதனை,
‘‘ஒள்ளழல் புரிந்த தாமரை
வெள்ளி நாராற் பூப்பெற் றிசினே“ (புறம், பாடல், 11)
“அழல் புரிந்த வடர்தாமரை
ஐதடர்ந்த நூற்பெய்து
புனைவினைப் பொலிந்த பொலிநறுந் தெரியல்
பாறுமயி ரிருந்தலை பொலியச் சூடிப்
பாண்முற் றுகநின் நாண்மகி ழிருக்கை“ (புறம்., பாடல், 29)
என்று புறநானூறு எடுத்துரைக்கிறது.
மல்லிகை
தமிழகத்தில் மக்கள் அணியும் மலர்களுள் முல்லைக்கு அடுத்துச் சிறப்பிடம் பெறுவது மல்லிகை மலராகும். மல்லிகையை, “மாலதி, அதங்கம், பூருண்டி, என்றும் காட்டு மல்லிகை மௌவல்என்றும், கொடி மல்லிகையை விசலிகையென்றும் சூடாமணி நிகண்டு (9-வது மரப்பெயர் வகை, 295, 296, 301 நூற்பாக்கள்)குறிப்பிடுகின்றது. சங்க இலக்கியங்களில் மல்லிகை பற்றிய குறிப்புகள் இடம்பெற்றிருப்பது நோக்கத்தக்கது.
பத்துப் பாட்டு நூல்களுள் ஒன்றான மதுரைக்காஞ்சியில் இறுதியில் காணப்படும் பிற்காலத்து வெண்பாவில்
‘‘சொல்லென்னும் பூம்போது தோற்றிப் பொருளென்னும்
நல்லிருந் தீந்தாது நாறுதலால் – மல்லிகையின்
வண்தார் கமழ்தாம்ம் அன்றே மலையாத
தண்தாரான் கூடல் தமிழ்“ (மதுரைக்காஞ்சி இறுதி வெண்பா)
என மல்லிகை மலரின் சிறப்புக் குறிப்பிடப்படுகின்றது.
சொல் என்ற பொலிவான மலர் முகிழ்த்துப் பொருள் என்னும் நல்ல நறுமண மகரந்தம் கமழ்வது காரணமாக்க் குளுமையான மலர்மாலை அணியும் பாண்டியனின் மதுரைத் தமிழ்ச் சங்கத்துச் செந்தமிழென்பது வளவிய நறுமணமிக்க மல்லிகை மலர்மாலையே எனலாம் என இப்பாடல் மல்லிகையே சங்கத்தமிழ் என்று ஏற்றமுடன் எடுத்துரைக்கின்றது.
இறைவனை வழிபடும்போது மலர்களைத் தூவி மக்கள் வழிபட்டதை திருமுருகாற்றுப்படையும், பிற பத்துப்பாட்டு நூல்களும் தெளிவுற எடுத்துரைக்கின்றன. தலைவன் மலர்களைப் பறித்து தலைவிக்குக் கொடுத்து தன்னுடைய காதலை வெளிப்படுத்தினான் என்பதையும், தலைவியும், தலைவனும் மனங்கலப்பதற்கு பூத்தரு புணர்ச்சி பயன்பட்டது என்பதையும், தலைவியும், அவளது தோழியும் மலர்களைப் பறித்துக் குவித்து வைத்து அதில் ஆடைசெய்து உடுத்தி மகிழ்ந்தனர் என்பதையும் விரிவாக குறிஞ்சிப்பாட்டு நவில்கின்றது. இங்ஙனம் மலர்ப் பண்பாடு என்பது தமிழர்களின் வாழ்வுடன் இரண்டறக் கலந்துவிட்ட குறிப்புகளை பத்துப்பாட்டு தெளிவுற விளக்கி உரைக்கிறது.

Series Navigationயாழ்ப்பாணத்துத்தமிழ் -மொழி- இலக்கியம்- பண்பாடு >>

முனைவர்,சி,சேதுராமன் , இணைப் பேராசி¡¢யர்,மா, மன்னர் கல்லூ¡¢, புதுக்கோட்டை.

முனைவர்,சி,சேதுராமன் , இணைப் பேராசி¡¢யர்,மா, மன்னர் கல்லூ¡¢, புதுக்கோட்டை.