பதிப்பகங்களா மிதிப்பகங்களா ?

This entry is part [part not set] of 61 in the series 20040318_Issue

ஞாநி


அண்மையில் ஒரு புத்தக வெளியீட்டு விழாவில் நூல் வெளியிட அழைக்கப்பட்டிருந்த நான் எழுத்தாளர்களுக்கு பதிப்பாளர்கள் ராயல்டி எனப்படும் ஊதியம் கொடுக்காமல் ஏமாற்றி வரும் சூழல் குறித்து பேசினேன்.

இது மரபுக்கு விரோதமான பேச்சு.புத்தக வெளியீட்டு விழா நிகழ்ச்சிகளில் யார் இலக்கியவாதி , யாருக்கு யார் இலக்கிய வாரிசு, யாரால் யார் புறக்கணிக்கப்படுகிறார்கள், யாரின் அங்கீகாரத்துக்கு யார் யார் ஏங்குகிறார்கள் என்று எதையும் ஆதாரத்துடனோ, அவதூறாகவோ பேசலாம். ஆனால் எழுத்தாளனுக்கு கிடைக்க வேண்டிய நியாயமான சம்பளத்தைப் பற்றி பேசுவது மட்டும் அநாகரிகமானதென்று விலக்கப்பட்டிருக்கிறது.

சென்னை புத்தக் கண்காட்சி முடிந்த உடன், விற்பனை ஐந்து கோடி ஏழு கோடி என்றெல்லாம் செய்திகள் வருகின்றன. குறைந்தபட்சம் 300 கடைகளில் சராசரி ஒரு லட்சம் ரூபாய் வீதம் விற்றிருந்தால் மொத்தம் மூன்று கோடி ரூபாய். ( என் பத்திரிகை அரங்கில் விற்பனை மொத்தம் 27 ஆயிரம் ரூபாய்கள்.)

அதில் பத்து சதவிகிதம், அதாவது மூன்று லட்சம் ரூபாய் எழுத்தாளர்களுக்கோ அவர்களுடைய வாரிசுகளுக்கோ போய்ச் சேர வேண்டிய சம்பளத் தொகை. நிச்சயம் ஒரு லட்ச ரூபாய் கூட எழுத்தாளர்களுக்குக் கிடைக்காது என்று தைரியமாகச் சொல்லலாம். ( பல பதிப்பகங்கள் நாட்டுடமையாக்கப்பட்டவர்களின் நூல்களை அடித்துத் தள்ளுவதன் ரகசியம் ராயல்டி தரவேண்டாம் என்பதுதான்.)

தமிழில் எழுத்தாளர்களின் ராயல்டியை ஒழுங்காக கொடுக்கிற பதிப்பகங்கள் மிகக் குறைவு. இத்தனைக்கும் தமிழில் எழுதப்படாத விதியாக எழுத்தாளரின் ராயல்டி என்பது புத்தக விலையில் பத்து சதவிகிதம் என்று நீண்ட காலமாக உள்ளது.

தன் தாய் மொழி மீது பற்றுடன் ஒரு எழுத்தாளனோ பத்திரிகையாளனோ அந்த மொழியில்தான் இயங்குவது என்று தீர்மானித்தால் அவன் நமது சமூகத்தில் தண்டிக்கப்படுவான். தமிழில் எழுதினால் கிடைப்பதைப் போல குறைந்தது ஐந்து முதல் எட்டு மடங்கு வரை ஆங்கிலத்தில் எழுதினால் சன்மானமாக, சம்பளமாகக் கிடைக்கும் என்ற நிலை நானறிந்து முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக இருந்து வருகிறது.

இத்தனைக்கும் புத்தகத்துக்கு விலை நிர்ணயிக்கும்போது, அதன் தயாரிப்புச் செலவைப் போல மூன்று மடங்கு நிர்ணயிப்பது தமிழ் வழக்கம். வாஸ்து, சமையல் குறிப்பு, தன் முன்னேற்றம், ஒரே மூச்சில் படித்து முடித்துவிடக்கூடிய நாவல்கள் முதலியவற்றை வெளியிடும் ‘வணிக’ பதிப்பாளர்கள் மொத்த விலையில் 30 சதவிகிதத்தை விற்பனையாளர் கமிஷனாகவும் , பத்து சதவிகிதத்தை எழுத்தாளரின் ராயல்டியாகவும் அளித்து வருகிறார்கள். ( ஒரு எழுத்தாளன் தன் புத்தகத்தை தானே பதிப்பகத்திலிருந்து வாங்கி விற்றால் அவனுக்கு 30 சதவிகிதம் வரை கமிஷன் கிடைக்கும். எழுதிப் பிழைத்தால் பத்துதான் !)

வெகுஜன வணிகர்களில் பெரும்பாலோர் ( எல்லாரும் அல்ல) எழுத்தாளருக்கு பணம் தருவதில் நேர்மையாக இருக்கிறார்கள். இல்லாவிட்டால் முழு நேர எழுத்தாளரான ஜெயகாந்தன் போன்றவர்கள் ராயல்டி வருவாயை மட்டுமே நம்பி வெற்றிகரமாக வாழ்ந்திருக்க முடியாது. இவர்களிடம் உள்ள நேர்மை கூட பல தீவிர அதி தீவிர இலக்கிய பதிப்பாளர்களிடம் ( எல்லாரும் அல்ல) இல்லை. இவர்கள் தங்கள் புத்தக விலையை அடக்க விலையைப் போல நான்கு முதல் ஆறுமடங்கு வரை நிர்ணயிக்கிறார்கள். ஆனால் எழுத்தாளனுக்கு ஒழுங்காக ராயல்டி தருவது கிடையாது. தருபவர்களின் எண்ணிக்கை என் ஒரு கை விரல்களில் அடங்கிவிடும்.

இந்த அவலமான சூழலுக்கு இரண்டு காரணங்கள் உள்ளன. தங்கள் புத்தகம் வெளியிடப்பட்டால் போதும் என்ற பிச்சைக்கார மன நிலையில்தான் , (மற்றபடி இலக்கிய செருக்கு மிகுந்த) பல எழுத்தாளர்கள் இருக்கிறார்கள். இவர்களில் முழு நேர எழுத்தாளர்களாக இல்லாத பலருக்கு உணவு, உடை, வீடு தேவைகளுக்கான வருவாய் வேறு உத்யோகங்களில் கிடைத்துவிடுகிறது. தங்கள் உபரி வருமானத்தை பதிப்பாளருக்குத் தந்து தங்கள் நூலை வெளியிடும்படி வற்புறுத்துபவர்களும் உண்டு. என்னிடம் பணம் கேட்காமல் ஒரு பதிப்பாளர் என் புத்தகத்தை வெளியிட முன்வந்திருக்கிறார் என்று பெருமையுடன் ஒரு பகுதி நேர எழுத்தாளர் என்னிடம் சொல்லிக் கொண்டார்.

இந்தச் சூழலில், ஒரு முழு நேர எழுத்தாளனின் கதி என்ன ? தன் புது நூலை வெளியிட ஒரு பதிப்பாளர் சம்மதித்திருக்கும் செய்தியை ஒரு எழுத்தாளர் மகிழ்ச்சியுடன் என்னிடம் சொல்லிவிட்டு, தான் பெங்களூர் திரும்பிச் செல்ல என்னிடம் பஸ் செலவுக்கு பணம் கேட்டார். பதிப்பாளரிடம் அட்வான்ஸ் கேட்க வேண்டியதுதானே என்றேன். எனக்கு ஒருத்தர் புத்தகம் போடுவது உங்களுக்குப் பிடிக்கவில்லையா என்றார் நண்பர்.

பதிப்பாளராகப் பார்த்து எப்போதேனும் ஏதாவது கொடுத்தால் சரி. இந்தச் சூழலில், புத்தகத்தின் நூறு பிரதிகளை ( பத்து சதவிகிதம் !) எழுத்தாளருக்குக் கொடுத்து விற்று காசு எடுத்துக் கொள்ளுங்கள் என்று சொல்லும் பதிப்பாளர்கள் தெய்வங்களாகக் கொண்டாடப்படுகிறார்கள்.

திரைப்படத் துறையில் •பெப்சி கொண்டு வந்த நடைமுறை நீண்ட காலமாகச் செயல்பட்டுவருகிறது. பட ரிலீசுக்கு முன்பு , படத்தில் பணியாற்றிய எந்த ஊழியரானாலும் சரி தனக்கு சம்பள பாக்கி உள்ளதாக பிராசசிங் லேபரட்டரிக்குக் கடிதம் கொடுத்தால்( லேப் லெட்டர் ), அந்தப் பிரச்சினை தீர்க்கப்பட்டு ஊழியரின் சம்மதக் கடிதம் பெறாமல் , படச் சுருளை லேபரட்டரி வெளிவிடாது. இது போன்ற ஒரு விதிமுறை பதிப்புத்துறையிலும் தேவைப்படுகிறது. லேபரட்டரியைப் போல அச்சகங்கள் இந்த விதியைப் பின்பற்றலாம். குறைந்தபட்சம் அரசு நூலகத்துறை ஆண்டு தோறும் புத்தகங்கலை வாங்கும்போது, எழுத்தாளரின் சம்மதக் கடிதத்தையும் நூலுடன் தரவேண்டும் என்று பதிப்பாளர்களை வலியுறுத்தலாம்.

அடுத்த முறை எந்தத் தமிழ் நூலையேனும் வாங்கிப் படிக்கும் முன்பாக, அதற்கு நீங்கள் கொடுத்த விலையில் பத்து சதவிகிதம் அதன் ஆசிரியருக்குக் கிடைத்திருக்குமா என்று ஒரு முறை யோசித்து விட்டுப் படியுங்கள்.

இந்தியா டுடே பிப்ரவரி 2004

dheemtharikida@hotmail.com

Series Navigation

ஞாநி

ஞாநி