“படிப்பதும் எழுதுவதும் – ஒரு சுய விவரிப்பு”

This entry is part [part not set] of 29 in the series 20070201_Issue

வி(த்யாதர்) சூ(ரஜ்பிரசாத்) நைபால் – தமிழில் சேதுபதி அருணாசலம்


V.S.நைபால் (V.S.Naipaul) என்ற இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஆங்கில எழுத்தாளர் மேல் எனக்குப் பெரிதாக அபிமானம் எதுவும் இருந்திருக்கவில்லை. இவர் மேற்கிந்தியத்தீவுகளின் ட்ர்னிடாட் (Trinidad) தீவில் பிறந்தவர். இவருடைய தாத்தா காலத்திலேயே இவருடைய குடும்பம் அங்கே இடம் பெயர்ந்து விட்டது. ஆங்கிலத்தில் எழுதும் பெரும்பாலான இந்திய எழுத்தாளர்களைப் போல் வெறும் வார்த்தை ஜாலத்திலும், மேலெழுந்த வாரியான கதையமைப்பிலும் காலத்தை ஓட்டுபவர் என்றுதான் நினைத்திருந்தேன். இத்தனைக்கும் அவருடைய புத்தகம் ஒன்றைக்கூட நான் படித்தது கிடையாது. என்னவோ மனதில் அப்படி ஒரு எண்ணம். அன்று நான் பயணிக்க வேண்டிய விமானம் கிளம்புவதற்குக் கால தாமதமாகவே, விமான நிலையத்தில் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டியதாகப் போயிற்று. விமான நிலையத்திலிருந்த புத்தகக் கடையில், இருப்பதிலேயே கொஞ்சம் சிறியதாகவும், கண்ணைக்கவரும் அட்டையுடனும் இருந்த ஓமாய விதைகள்ஔ (Magic seeds) என்ற V.S.நைபாலின் புதினம் ஒன்றை வாங்கிப் படித்தேன். அதைப் படித்தவுடன் அவரைப் பற்றிய என் எண்ணம் மாறி, V.S.நைபால் மேல் எனக்குத் தனி மரியாதையும், கவனமும் ஏற்பட்டது. அதன்பின் அவருடைய பயண நூல்கள் பலவற்றைத் தேடிப்படித்தேன். இவருடைய புதினங்களைவிடப் பயணநூல்கள் ஒரு படி மேலானவை என்பது என் இன்றைய கருத்து.

2005-இல் வெளியான V.S.நைபாலின் ஓஇலக்கிய நடப்புகள்ஔ (Literary Occasions) என்ற கட்டுரை நூலையும் நான் படிக்க நேரிட்டது. அதிலிருந்த ஓபடிப்பதும் எழுதுவதும் – ஒரு சுயக் குறிப்புஔ என்ற கட்டுரை நம் கவனம் பெற வேண்டிய ஒன்று. தான் ஒரு எழுத்தாளராக மாறிய நடப்பை அதில் சிறப்பாக எழுதியிருக்கிறார். அக்கட்டுரையின் இரண்டு பகுதிகள் (பகுதி 5 மற்றும் 6) அவர் எப்படி ஒரு தேர்ந்த பயண நூல் எழுத்தாளரானார் என்பதைப் பற்றியவை.

பொதுவாகவே பயண நூல்கள் மேல் நம்மில் பலருக்கு அவ்வளவாக கவனம் இருப்பதில்லை. [எனக்கும் கூட, பிகோ ஐயரின் (Pico Iyer) பயண நூல் ஒன்றைப் படிக்கும் வரை!] ஆனால் பயண நூல் எழுதும் அனுபவம் ஒரு எழுத்தாளருக்கு எந்த விதமான சமூகப் பார்வையைத் தரக்கூடும், அந்தப் பாதையில் செல்வதால் அவருடைய மற்ற இலக்கிய வடிவங்களின் (புதினம், கவிதை, இன்னபிற) சமூகப் பிரக்ஞை எவ்விதம் மாற்றமடையக் கூடும் என்பவற்றை நாம் இவ்விரண்டு பகுதிகளில் தெரிந்து கொள்ளலாம் என்பதால் அவ்விரண்டு பகுதிகளையும் இங்கே மொழி பெயர்த்துள்ளேன். இப்பகுதிகளில் நைபால் சுட்டியிருக்கும் பிற விஷயங்கள் இவை- காலனிப் பகுதிகளின் அழிந்துபோன பூர்வகுடி மக்களும் அவர்களின் பதிவு செய்யப்படாத வரலாறும் எப்படித் தேடி அடையப்பட்டு, அதிகார பூர்வமாக நிலவும் வரலாற்றுக்குச் செய்யப்பட வேண்டிய அவசியமான பிழைத் திருத்தங்கள் என்பதும்; பல நேரம் இந்நாளைய சுதந்திரப் பிரஜைகளுக்குக் கூடத் தாம் முந்தைய காலனிய ஆட்சியாளர்களின் அதிகாரத்திலிருந்து விடுபட்டது மாத்திரம் போதாது, அவர்களால் எழுதப்பட்ட தம்முடைய வரலாற்றிலிருந்து தம் வாழ்வும், அறிவும், சுயப் புரிதலும், பண்பாடும், விடுபடுவது அவசியம் என்பது தெரியாத நிலை நிலவுவது 20 ஆம் நூற்றாண்டின் ஒரு முக்கியமான அவலம் என்பதும், அதை முன்னாள் காலனி நாட்டுப் பிரஜையாக இருந்த தான் உணர்ந்தபோது தன் உலகப் பார்வை எப்படி மாறியது என்பதும்.
சற்றே சிந்தித்தால்- நம் நாடும் 800 வருடங்களுக்கு மேலாகக் காலனியாக இருந்த ஒரு நாடு. இந்த நெடிய இருண்ட காலத்தில் எத்தனை சமூகங்கள் அழிந்தனவோ, எத்தனை பூர்வகுடியினரின் வரலாறு இன்னும் பதிவு செய்யப்படாமல் இருக்கின்றதோ?! நம் பண்டை நாகரிகம் பற்றி எத்தனை எத்தனை மோசடி விவரங்களும், இழிப்பிரச்சாரக் கருத்துகளும் வரலாறு என்று நம்மீது சுமத்தப்பட்டனவோ, நமக்கு இன்று கூட அந்த விவரங்கள் சரிவரத் தெரியுமா என்ன?

“படிப்பதும் எழுதுவதும் – ஒரு சுய விவரிப்பு”
வி(த்யாதர்) சூ(ரஜ்பிரசாத்) நைபால்
[இலக்கிய நடப்புகள் என்ற நூலில் இருந்து ஒரு கட்டுரை]
(Reading and Writing – a personal account
An essay from V.S.Naipaul’s book – Literary occasions)

நான் ஒரு எழுத்தாளன் என்று என்னைப்பற்றி நானே கொண்டிருந்த கனவில், ஒரு புத்தகத்தை எப்படி எழுதுவது என்ற யூகம் துளிக் கூட இருந்ததில்லை. ஆனால் என் கனவில், ஒரு புத்தகத்தை எழுதிவிட்டால் அடுத்தடுத்த புத்தகங்கள் தன்னைப் போல வந்துவிடும் என்று நான் நம்பிக்கொண்டிருந்ததாக நினைக்கிறேன்.

ஆனால் அது அவ்வளவு எளிதில்லை என்று எனக்குப் பின்புதான் தெரிய வந்தது. எழுதுவதற்கான பொருள் (material) அதை அனுமதிக்கவில்லை. அந்த ஆரம்ப நாட்களில் ஒவ்வொரு புதிய புத்தகமும் என்னை என்ன எழுதுவதென்று தெரியாததொரு வெறுமையை நோக்கி இழுத்துச் சென்றது. முதல் புத்தகத்தைத் தொடர்ந்த புத்தகங்களும் என்னுடைய முதல் புத்தகத்தைப் போலவேதான் எழுதப்பட்டன. ஒரு புத்தகத்தை எழுத வேண்டும் என்ற உந்துதலால், ஒரு உள்ளுணர்வாலோ, அறியாமையாலோ அல்லது உத்வேகத்தாலோ பற்றிக்கொள்ளப்பட்ட கருத்துக்களாலும், மூலங்களாலும் அவை எங்கே என்னை இழுத்துச் சொல்லப்போகின்றன என்று முழுமையாகப் புரிந்து கொள்ளாமல் எழுதப்பட்டவை. எழுத எழுதத்தான் எனக்கு எழுதுவது குறித்த அறிவு வந்தது. ஒவ்வொரு புத்தகமும் என்னை மேலும் மேலும் ஆழ்ந்த புரிதலுக்கும், ஆழ்ந்த உணர்வுகளுக்கும் இழுத்துச் சென்றது. அப்படிப்பட்ட புரிதல் என்னை முற்றிலும் வேறு மாதிரியான எழுத்து முறைக்கு இட்டுச் சென்றது. ஒவ்வொரு புத்தகமும் தேடுதல் என்னும் வழிமுறையில் ஒரு கடப்பு நிலையாக(stage) இருந்தது. என்னுடைய கடந்தகாலம்தான் என்னுடைய எழுதுவதற்கான கருப்பொருளாக இருந்தது. ஏற்கனவே காலத்தால் பிரிக்கப்பட்டுவிட்ட அது, நான் இங்கிலாந்திற்கு இடம் பெயர்ந்துவிட்டதால் நான் அந்த என் கருப்பொருளுக்கான இடத்திலிருந்தும் விலகியிருந்தேன். என்னுடைய குழந்தைப்பருவத்தைப் போலவே அது முழுமையானதாகவும், நிலையானதாகவும் இருந்தது. அதில் வேறெந்த விஷயத்தையும் என்னால் சேர்க்க முடியவில்லை. என்னுடைய எழுது முறை என்னுடைய கடந்த காலமாகிய கருப்பொருளை முழுமையாக சாப்பிட்டு விட்டது. ஐந்து வருடங்களில் நான் ஒரு பாதை முடிவுக்கு வந்திருந்தேன். என்னுடைய கற்பனைவளம் சாக்கட்டிகளால் கிறுக்கப்பட்ட கரும்பலகை போல ஒவ்வொரு நிலையாக அழிக்கப்பட்டு முடிவில் ஒன்றுமே இல்லாத வெற்றுப்பலகையாகியிருந்தது.

புனைகதை(Fiction) அதன் சக்திக்குத் தகுந்த தூரம் என்னை இழுத்துச் சென்றது. ஆனால் புனைகதையால் அணுக முடியாத சில விஷயங்களும் இருந்தன. உதாரணமாக, புனைகதை மூலம் என்னுடைய இங்கிலாந்து வாழ்வின் வருடங்களை அணுக முடியவில்லை; அதற்கான சமுதாயச் செறிவு(Social depth) என்னிடம் இல்லை. எனவே என் இங்கிலாந்து வாழ்க்கையைச் சுயசரிதைக்கான கருப்பொருளாகவே என்னால் அணுக முடிந்தது. புனைகதை மூலம் என்னுடைய வளர்ந்து கொண்டிருந்த உலக அறிவை முழுதும் அணுகமுடியவில்லை. சில சமுதாய எல்லைகளுக்குட்பட்டு இயங்கும் புனைகதை வடிவம் என்னை நான் இயங்குவதைவிடச் சிறிய தீவு போன்ற ஒரு உலகுக்கோ அல்லது என் குழந்தைப் பருவத்துக்கோ தள்ளுவது போன்று எனக்குத் தோன்றியது. ஒரு காலத்தில் என்னைச் சுதந்திரப்படுத்தி, மகிழ்ச்சிப்படுத்திய புனைகதை வடிவம், என்னை என் தன்மைக்கு மீறி எளியவனாக மாற்ற முயற்சிப்பது போன்று எனக்குப் பட்டது. மூன்று அல்லது நான்கு வருடங்களுக்கு என்ன செய்வது என்றே எனக்குப் புரியவில்லை. நான் கிட்டத்தட்ட வழிதவறித் தொலைந்துவிட்டிருந்தேன்.

என் விடலைப் பருவத்தை பெரும்பாலும் எனக்கு முற்றிலும் அந்நியமான நாடுகளிலேயே நான் கழித்திருந்தேன். ஒரு எழுத்தாளனாக என்னால் அந்த அனுபவத்தை மீறிச் செல்ல முடியவில்லை. அந்த அனுபவத்திற்கு உண்மையானவனாக இருக்க நினைத்ததால் அந்த நிலையிலிருக்கும் மனிதர்களைப் பற்றியே என்னால் எழுத முடிந்தது. அதற்கான வழிமுறைகளையும் நான் கண்டுபிடித்துவிட்டிருந்தேன்; ஆனால் அவ்வாறு ஒரே மாதிரியான விஷயங்களையே எழுதுவதால் என்னை நானே குறைத்துக் கொள்கிறேன் என்ற உணர்விலிருந்தும் என்னால் விடுபட முடியவில்லை. உரைநடை எழுதுவதில் முறையான பயிற்சி எடுத்தவனாக இருந்திருந்தாலும்1, உலகத்தையும், மக்களையும் அறிந்து கொள்வது குறித்துப் பெரிதும் ஆர்வம் கொண்டவனாக இருந்திருந்தாலும் ஒருவேளை நான் புதினம் (novel) என்ற ஒரு வடிவத்தையே நம்பி இருந்திருந்தால் ஒரு அளவுக்கு மேல் முன்னேறும் வழி தெரியாமல் நின்றிருந்திருப்பேன்.

ஆனால் வேறு சில வகை எழுத்துப் பிரசுரங்களுக்கு என் அளிப்பு தேவையாக இருந்தது. ஒரு விபத்தாக மேற்கிந்திய மற்றும் பழைய ஸ்பெயினின் முன்னாள் தென்னமெரிக்கக் காலனிகளுக்குப் பயணம் செய்து பயணக்கட்டுரைகள் எழுதுவதற்காக நியமிக்கப்பட்டேன். பயணம் செய்வதில் இருந்த ஆர்வத்தின் காரணமாக அந்த ஒப்பந்தத்தை ஏற்றுக்கொண்டேன். பயணக் கட்டுரையின் எழுத்து வடிவத்தைப் பற்றியெல்லாம் அவ்வளவாக யோசித்துப் பார்க்கவில்லை.

பயணப் பத்தகம் (Travel book) ஒரு தீவிர எழுத்தாளனின் வாழ்வில் ஒரு இனிமையான இடைவேளை என்ற எண்ணம் எனக்கு இருந்தது. ஆனால் என் மனதில் இருந்திருந்த ஹக்ஸ்லி(Huxley), லாரன்ஸ்(Lawrence), வா(Waugh) ஆகிய பயண எழுத்தாளர்கள் (வேறு யாரும் இருந்திருக்கவும் முடியாது) அனைவரும் பெருநகரங்களைச் சேர்ந்தவர்கள். நான் அவர்களைப் போன்றவனில்லை. அவர்களனைவரும் ஏகாதிபத்திய ஆட்சிக் காலத்தில் எழுதினார்கள். தங்கள் சொந்த நாட்டில் அவர்கள் குணாம்சங்கள் அல்லது நடவடிக்கைகள் எதுவாக இருந்தாலும் பயணங்களில் அவர்களே பாதி ஏகாதிபத்திய ஆட்சியாளர்கள் போல் மேட்டுக் குடியினராக மாறினார்கள். பயணங்களில் விபத்தாக நேரிடும் அனுபவங்களைக் கொண்டு ஒரு அன்னியப் பின்னணியில் தங்கள் பெருநகர குணாதிசயங்களைச் சித்திரமாகத் தீட்டினார்கள்.

என்னுடைய பயணம் அப்படிப்பட்டதல்ல. நான் ஒரு காலனிப் பிரஜை. நான் வளர்ந்த காலனியைப் போன்ற ஒரு புதிய தோட்டப்பண்ணைக் குடியேற்ற நிலத்துக்குப் (plantation) பயணம் செய்ய வேண்டியதாக இருந்தது. கொள்ளையடிக்கப்பட்ட ஒரு நாட்டின் சிதைந்து கிடக்கும், அபலை சமுதாயத்தை ஒரு பார்வையாளராகப் பார்க்க நேரிடுவது, என்னுடைய நாட்டையே சற்றுத் தள்ளி நின்று, என்னுடைய சமுதாயம் எப்படி இருக்கிறது என்று பார்ப்பதற்குச் சமமானதொரு விஷயம். தன்னுடைய சமூகம் என்ற உணர்வைத் தள்ளி வைத்துவிட்டு, தனக்கு நெருக்கமான புனைகதைகளுக்குத் தேவையான விஷயங்களையும் விலக்கிவிட்டு, அந்த சமூகத்தின் கடந்த காலம் மற்றும் வரலாற்று நிகழ்வுகளைப் பதிவு செய்வது தேவையாக இருந்தது.

எனக்கு அந்த இலக்கிய வடிவம் பிரச்சினை அளிப்பதாக இருந்தது. ஒரு புத்தகம் எழுதும் நோக்கில் எப்படிப் பயணம் செய்வது என்று எனக்குத் தெரிந்திருக்கவில்லை. நான் ஏதோ விடுமுறையில் சுற்றுலா செல்வது போலப் பயணித்தேன். பின்னர் எழுதுவதற்கான விஷயம் வேண்டி மிகவும் சிரமப்பட்டேன். எனக்கு பயண எழுத்தாளரின் ஓநான்ஔ என்பதோடு பிரச்சினை இருந்தது. ஒரு பயணி மற்றும் வர்ணிப்பாளராக எதிர்ப்பில்லாத அதிகாரம் கொண்டவராகவும், பெரும் முடிவுகள் எடுப்பவராகவும் ஒரு பயண எழுத்தாளார் இருப்பார் என்று நான் நினைத்திருந்தேன்.

என்னுடைய அத்தனை தவறுகள் காரணமாகவும், அந்தப் புத்தகம், என்னுடைய புனைகதைகள் போலவே என்னுடைய அறிவின் ஒரு தொடர்ச்சியாகவே இருந்தது. நான் கற்றுக்கொண்ட விஷயங்களைக் கழற்றி விடுவது கண்டிப்பாக எனக்கு முடிந்திருக்காது. புனைகதை ஒரு எழுத்தாளனுக்கு மிக நெருங்கிய சூழ்நிலையைப் பற்றிய ஆய்வு. அது என்னை அதே பாதையில் வெகு தூரம் அழைத்துச் சென்றிருந்தது. நான் எழுதிய அந்தப் பயண நூல் அந்த இடத்திலிருந்து இன்னும் சற்று தூரம் இழுத்திருந்தது. அவ்வளவே.

***

இரண்டாம் முறையும் ஒரு விபத்தாகத்தான் நான் ஒரு புனைவிலி உரை (non-fiction) எழுத நேரிட்டது. ஒரு அமெரிக்கப் பதிப்பாளர் பயணிகளுக்கானப் புத்தகங்களை ஒரு தொடராக வெளியிட்டு வந்தார். அவர் என்னை நான் வளர்கையில் வாழ்ந்திருந்த காலனிப் பகுதிகளைப் பற்றி எழுதுமாறு கேட்டுக் கொண்டார். நான் அது மிக எளிதான வேலையாக இருக்கும் என்று நினைத்திருந்தேன். கொஞ்சம் உள்ளூர் வரலாறு, கொஞ்சம் சொந்த நினைவுகள், கொஞ்சம் வார்த்தை ஜாலம் இருந்தால் போதும் என்று நினைத்திருந்தேன்.

மேலும் இந்த உலகில் எல்லா அறிவுத்திரட்டுகளும் இருக்கின்றன; எல்லா வரலாற்றுத் தகவல்களும் சேகரித்து வைக்கப்பட்டு இருக்கின்றன, நம் தேவைக்கு ஏற்ப அவற்றை எடுத்துக் கொள்ளலாம் என்றெல்லாம் அப்பாவித்தனமாக நினைத்திருந்தேன். ஆனால் காலனிகளுக்கான உள்ளூர் வரலாறு அதுவரை குறித்துவைக்கப்படவில்லை என்று பின்னர்தான் தெரிய வந்தது. திரும்பத் திரும்பச் சொல்லப்பட்டுவந்த கதைகளைக் கொண்ட ஒரு சில வழிகாட்டிப் புத்தகங்களே (guide books) ஆவணங்களாகக் கிடைத்தன. காலனி அவ்வளவு முக்கியமான ஒன்றாகக் கருதப்படவில்லை; அதன் கடந்த காலம் மறைந்துவிட்டிருந்தது. இன்னும் சில வழிகாட்டிப் புத்தகங்களில் 1595-இல் சர் வால்டர் ராலேயின் (Sir Walter Raleigh) வருகை வரை காலனிப் பகுதிகளில் சொல்லிக்கொள்ளும் படியான முக்கிய விஷயம் எதுவும் நடைபெற்றிருக்கவில்லை என்ற நகைப்பிற்குரிய விஷயமும் எழுதப்பட்டிருந்தது.

நான் அரசாங்க ஆவணங்களைப் படிக்க வேண்டியிருந்தது. பயணிகளின் குறிப்புகள் கிடைத்தன. பிரிட்டிஷ் அரசாங்க ஆவணங்கள் இருந்தன. பிரிட்டிஷ் கியானா (British Guiana)-நாட்டுக்கும்-வெனசுவேய்லா(Venezuela) நாட்டுக்குமிடையேயான எல்லைப் பிரச்சினையின் போது பிரிட்டிஷ் அரசாங்கம் 1890-இல் தோண்டிப்போட்ட ஸ்பானியக் குறிப்புகள் பைண்டு செய்யப்பட்ட பெரிய பெரிய புத்தகங்களாகப் பிரிட்டிஷ் அருங்காட்சியகத்தில் கிடைத்தன. நான் பொதுமக்களையும் அவர்கள் கதைகளையும் அக்குறிப்புகளில் தேடினேன். எனக்குத் தெரிந்த ஒரே சிறந்த வழி அதுவாகத்தான் இருந்தது. ஆனால் அது மிகவும் கடினமான வழியாக இருந்தது, காகிதங்களில் தேடி, ஐந்தாறு ஆவணங்களைப் படித்து ஒரே ஒரு பத்தி அளவுக்குத்தான் குறிப்புகள் எழுத முடிந்தது. நான் சில மாதங்களில் முடித்துவிடலாம் என்று நினைத்திருந்த விஷயத்தைக் கடுமையாக இரண்டு வருடங்கள் உழைத்த பின்புதான் முடிக்க முடிந்தது.

அரசாங்கக் குறிப்புகள் என்னைக் கிட்டத்தட்ட அக்காலனிப்பகுதியின் கண்டுபிடிப்பு (discovery) நடந்த நாட்கள் வரை இழுத்துச் சென்றன. அக்குறிப்புகள் எனக்கு காலனிப்பகுதியின் ஆதி மக்களைப் பற்றிக் கூறின. அவர்கள் கடல் மற்றும் ஆறுகளின் தலைவர்களாக யார் விஷயத்திலும் தலையிடாமல் தங்கள் பாட்டுக்குத் தங்கள் வேலையில் கவனம் செலுத்தி வந்திருக்கிறார்கள். அவர்களிடம் அந்தக் காலத்திற்குத் தேவையான அத்தனைத் திறமைகளும் இருந்திருக்கின்றன. ஆனால் புதிய ஆட்களின் முன் அவர்களால் சமாளித்து நிற்க இயலவில்லை. அடுத்த இரண்டு நூற்றாண்டுகளில் குடிபோதைக்கு அடிமைகளாகவும், கிருத்துவ மிஷனரிகளின் கைப்பாவைகளாகவும் மாறி ஒட்டுமொத்தமாக மறைந்தே போனார்கள். இவ்வாறு மனிதனால் காடுகளாக மாற்றப்பட்ட இடத்தில்தான் 18-ஆம் நூற்றாண்டின் இறுதியில் அடிமைப் பண்ணைகளும், ஒரு நேர்க்கோட்டிலமைந்த ஸ்பானிய நகரங்களும் நிறுவப்பட்டன.

பள்ளியின் வரலாற்று வகுப்பில் அடிமைமுறை (Slavery) என்பது வெறும் வார்த்தையாகத்தான் இருந்தது. ஒரு நாள், கனவான் வொ(ர்)ம் (Mr.Worm) அவர்களின் வகுப்பில் அந்த வார்த்தைக்கு நான் அர்த்தம் கொடுக்க முயன்றது நினைவிருக்கிறது. அப்போது நகரத்தின் வட புறத்திலிருக்கும் மலைகளைப் பார்த்து, அந்த மலைகளை ஒரு காலத்தில் அடிமைகளாக இருந்த மக்களும் பார்த்திருப்பார்கள் என்று நினைத்துக் கொண்டேன். அந்த எண்ணமே மிகவும் வலித்தது.

இப்போது எனக்குக் கிடைத்திருக்கும் குறிப்புகள், அந்தப் பள்ளி நாட்களுக்குப் பல வருடங்களுக்குப் பிறகு அந்த அடிமை முறைக் காலத்தை மீண்டும் நிஜமாக என் முன் நிறுத்தின. அக்குறிப்புகள் குடியேற்றப் பண்ணை வாழ்க்கையின் சில பக்கங்களை எனக்குக் காட்டின. ஒரு பண்ணைத்தோட்டம் என் பள்ளிக்கு வெகு அருகில் இருந்திருக்கலாம். அருகாமையிலிருந்த ஒரு தெருவின் பெயர் இன்றும் 18-ஆம் நூற்றாண்டு (அடிமைகளின்) எஜமானரின் ஆங்கிலப்படுத்தப்பட்ட ப்ரெஞ்சுப் பெயராக இருக்கிறது. அந்தக் குறிப்புகள் என்னை அடிக்கடி நகர சிறைச்சாலைக்கு இழுத்துச் சென்றன. அந்த சிறைச்சாலையின் ஜெயிலருக்கும் அவருடைய அடிமைத் துணைவனுக்கும் பிற அடிமைகளைத் தண்டிப்பதுதான் முதன்மைத் தொழிலாக இருந்தது. (தண்டனையின் அளவு அடிமைகளின் எஜமான் கொடுக்கும் சம்பளத்தைப் பொறுத்தது). இந்த சிறைச்சாலையில் கூரைக்கு மிக அருகே அமைக்கப்பட்ட கடும் சூடான அறைகளும் இருந்தன. சூனியவேலை செய்பவர்களாகக் கருதப்பட்ட அடிமைகள் அங்கே அடைக்கப்பட்டார்கள்.

ஒரு வித்தியாசமான கொலையின் விசாரணைக்குறிப்புகளிலிருந்து, ஒரு அடிமை ஒரு கறுப்பினப் பெண்ணிற்காக மற்றொரு அடிமையைக் கொலை செய்தது தெரியவருகிறது. அதிலிருந்து 1790களின் தெரு வாழ்க்கை எவ்வாறு இருந்திருக்கும் என்று என்னால் யூகிக்க முடிந்தது. அது, நான் வளர்ந்து வந்த, நான் தள்ளி நின்று பார்த்து எழுத்து வடிவமாக்கிய தெரு வாழ்க்கையுடன் மிகவும் ஒத்துப் போனது. ஒரு நகரத்தெருவின் வரலாறு என்று ஒன்று இருக்கக்கூடும் என்பதன் சாத்தியம் எனக்கு மிகவும் புதிதான ஒன்று. நான் அறிந்த அந்த நகரத்தெரு மிகவும் சாதாரணமானதாக, திட்டமிடப்படாத ஒன்றாக, கடந்த காலம் என்று எதுவும் இல்லாததாகத்தான் அதுவரை எனக்குத் தோன்றி வந்தது. ஆனால் அதற்கும் கடந்த காலம் என்ற ஒன்று இருந்திருக்கிறது. பள்ளி முற்றத்திலோ, வொர்ம் அவர்களின் வகுப்பிலோ, மழை மரத்தின் (saman tree or rain tree) கீழோ நான் ஒரு வேளை டொமினிக் டெர்ட்-ன்(Dominique Dert) அழகிய காற்று (Bell-Air) என்ற பண்ணையினுள் நிற்க நேரிட்டிருக்கலாம். அங்குதான் 1803-இல் அடிமைகளின் தலைவனோ, பண்ணை ஊழியனோ, தன் முதலாளியின் மேல் இருந்த பிரியம் காரணமாக மற்ற அத்தனை அடிமைகளையும் விஷம் வைத்துக் கொல்ல முயற்சித்தான்.

இதை விடத் துன்புறுத்தும் எண்ணமாக இருப்பது, மறைந்துவிட்ட பூர்வ குடியினரின் நிலத்தில், அவர்கள் ஆன்மாக்களுடன் நாங்கள் வாழ்ந்து வந்தோம் என்பதே. நான் பிறந்து வளர்ந்து, கரும்புத்தோட்டத்தின் நடுவே இருந்த காலி நிலப்பரப்பில் ஑ராம்லீலாஒ2 கண்டுகளித்த சிறு நகரத்திற்கு ஒரு பூர்வாங்கப் பெயர் இருந்திருக்கிறது. அந்தப் பெயர் அக்காலத்தில் ஸ்பானியர்களுக்கு மிகவும் தொல்லை அளித்து வந்த சுமார் ஒரு ஆயிரம் மக்களைக் கொண்ட ஒரு பழங்குடியினரின் பெயர். இதை நான் பிரிட்டிஷ் அருங்காட்சியகத்தில் 1625-ஆம் ஆண்டில் ஸ்பெயின் மன்னன், உள்ளூர் ஆளுநருக்கு எழுதிய கடிதத்திலிருந்து கண்டுபிடித்தேன். இப்பழங்குடியினர் 1617-இல் ஆங்கில வணிகர்களுக்கு ஆறுகளைக் கடக்க உதவும் வழிகாட்டிகளாக இருந்திருக்கிறார்கள். அதை மறக்காமல் ஞாபகம் வைத்திருந்தனர் ஸ்பானியர்கள். எட்டு வருடங்களுக்குப் பிறகு ஸ்பெயின் ஆளுநர் போதுமான ஆட்களைச் சேர்த்துக் கொண்டு, அந்தப் பழங்குடியினர் மேல் மொத்தமாக இன்னதென்று குறிப்பிடப்படாத ஒரு தண்டனையை விதித்துள்ளார். அதன்பின் அந்தப் பழங்குடியினர்களின் பெயர்கள் குறிப்புகளிலிருந்து மாயமாய் மறைந்து விட்டன.

இந்த உண்மை என்னுடைய கடந்த காலத்தைப் பற்றிய என்னுடைய கருத்தை ஓரளவிற்கு மாற்றிவிட்டது. இந்த உண்மையைத் தெரிந்து கொண்ட பிறகு நான் ராம்லீலா நாடகத்தைப் பார்த்து மகிழ்ந்ததை என்னுடைய கடந்த காலத்தின் அத்தனை விஷயங்களுக்கும் ஆரம்பமாக என்னால் நினைத்துக் கொள்ள முடியவில்லை. வேறு வகையான மனிதர்களுக்கும் அதே ராம்லீலா நடந்த நிலப்பரப்பில் இடம் ஒதுக்க வேண்டியிருந்தது. புனைகதை மட்டுமே என்னை இத்தனை பெரிய புரிதலை நோக்கி இழுத்துச் சென்றிருக்காது.

அந்தப் புத்தகத்திற்குப் பிறகு வெறுமனே குறிப்புகள் மற்றும் ஆவணங்களைக் கொண்டு நான் வேறு எந்தப் புத்தகமும் எழுதவில்லை. ஆனால் பல்வேறு வகையான அனுபவப்பதிவுகளினூடே ஒரு பொதுவான மனிதத் தொடர்கதையைப் பார்க்க நான் கற்றுக் கொண்டேன். நான் கற்றுக் கொண்ட இந்த நுட்பத்தை அடுத்த முப்பது வருடங்களில் நான் எழுதிய பயணப் புத்தகங்களில் பயன்படுத்தினேன். எனவே, புனைகதைகளுக்கு அடிப்படையான, எனக்கு மிக அருகாமையிலிருந்த தனிமனிதச் சூழ்நிலைகளைத் தாண்டி, என்னுடைய உலகம் விரிவடைந்தபோது, என்னுடைய புரிதல் ஆழமானபோது, நான் பயன்படுத்திய இலக்கிய வடிவங்கள் சீராகவும், ஒன்றுக்கொன்று உதவி புரியும் வகையிலும் வெளிவரத் தொடங்கின. நான் எழுத எடுத்துக் கொள்ளும் இலக்கிய வடிவம்(form), எழுத எடுத்துக் கொண்ட கருப்பொருளைப்(material) பொறுத்து அமைவதாக இருந்தது. எழுதப்பட்ட புத்தகம் ஒவ்வொன்றும் புரிதல் என்னும் தொடர்நிகழ்வின் ஒரு கூறாக விளங்கியது. ஆரம்பத்தில் ஒரு சிறுவனின் கனவாகவும், பின் கதைகள் எழுத வேண்டும் என்ற தீவிர உந்துதலும் உருவாக்கித் தந்த எழுத்துப்பணி என்னைச் செய்யப்பணித்தது இதைத்தான்.

குறிப்புகள்:

1. V.S.நைபால் பள்ளிப்படிப்புக்குப் பின் மூன்று வருடங்கள் ஆங்கில இலக்கியத்தை ஆக்ஸ்ஃபோர்ட் (Oxford) பல்கலைக்கழகத்தில் பயின்றவர்.
2. ராம்லீலா: மேற்கிந்தியத் தீவுகளுக்கு இடம் பெயர்ந்த இந்தியர்கள், அங்கே இராமாயணத்தை ராம்லீலா என்ற பெயரில், நாடகமாக கரும்புத்தோட்டத்தின் நடுவே இருந்த காலி இடத்தில் நடத்தியிருக்கிறார்கள்.

Series Navigation