படித்ததும் புரிந்ததும்..(12) வன்முறை – உதிரிப்பூக்கள் – மீடியர்

This entry is part [part not set] of 36 in the series 20071129_Issue

விஜயன்12) நவம்பர் 24; லக்னோ, வாரனாசி, பைசாபத்தில் ஒரே நேரத்தில் கோர்ட்டில் குண்டு வெடித்து 15 பேர் பலி. வக்கீல்களை பழிவாங்க தீவிரவாதிகள் கைவரிசை.
நவம்பர் 26; சட்டநாள் உரையில் என் சிந்தனைகள். வன்முறை எந்த ரூபத்திலிருந்தாலும், தவிர்க்கப்பட வேண்டியது; ஒன்றுபட்டு ஒடுக்கப்பட வேண்டியது. சட்டத்தின் ஆட்சியில் சட்டத்தைப் பாதுகாக்கும் நீதிமன்ற பரிவர்த்தனையில், வக்கீல்களின் பங்கு மிகமுக்கியமானது. சட்டத்தின் ஆட்சியின் நீதிமன்ற தூதுவர்களே வக்கீல்கள். ஆனால் சமீபத்தில் நடந்த இந்த சம்பவத்தை ஆராயும் போதும், பொதுவாக நீதிமன்ற வளாகத்தில் வக்கீல்களின் போக்கை பார்க்கும் போதும், தூதுவர்களே துரோகம் செய்கிறார்களோ? என்று நினைக்கத் தோன்றுகிறது.
மேற்சொன்ன இந்த வன்முறை செய்தியின் சாரம் இதுதான் காங்கிரஸ் தலைவர் “ராகுல் காந்தியை” பணயக் கைதியாக கடத்த திட்டமிட்ட, தீவிரவாதிகள் கைது, கோர்ட்டில் நீதிமன்ற காவலில் வைக்க கொண்டு வந்த போது, வக்கீல்கள் கைதிகள் மேல் தாக்குதல் பதிலுக்கு தீவிரவாதிகள் கோர்ட்டில் குண்டு வைத்து 15 பேர் பலி.
நம் அரசியல் சட்டப்படி கைது செய்யப்பட்ட எந்த குற்றவாளியையும், 24 மணி நேரத்திற்குள் கோர்ட்டில் ஆஜர் படுத்தி நீதிமன்ற காவலில் வைக்க, நீதிமன்றத்திற்கு அழைத்து சென்று மாஜிஸ்ட்ரேட் உத்தரவு பெற வேண்டும். உத்திரபிரதேசத்தில், வக்கீல்கள் ஒட்டு மொத்தமாக குற்றவாளிக்கு ஆஜராக மாட்டோம் என்று உறுதி எடுப்பது என்பது வேறு, அந்த குற்றவாளியை நீதிமன்ற வளாகத்தில் தாங்கள் நம்பும் தலைவரின் மேல் உள்ள ஈடுபாட்டினால் வன்முறை காட்டுவது (உதைப்பது) என்பது தவறு. டாக்டரைப் போல பேதமின்றி நோயாளியை குணப்படுத்துவதுபோல, வக்கீல்கள் கூட விருப்பு வெறுப்பின்றி குற்றம் சாட்டப்பட்டவரின் அடிப்படை மனித உரிமையான, வக்கீல் மூலம் வாதாடும் உரிமையை மறுக்கக்கூடாது. தனிப்பட்ட முறையில் வாதாட மறுத்தாலும், கோர்ட்டுக்கு கொண்டு வரப்படும் கைதியை கண்டிப்பாக அடிக்கக்கூடாது. அது மன்னிக்க முடியாத தவறு.

சார்லி சாப்லினின் “மான்ஸர் வர்டே” என்ற பேசும் திரைப்படத்தில் (நம்மூர் நான் அவனில்லை படத்தின்மூலம்) சாப்ளின், ஒரு ப+னையின் வாலைப் பிடித்து இழுக்கும் குழந்தையிடம் ஒரு அறிவுரை சொல்வார் “வயலன்ஸ் பிகெட்ஸ் வயலன்ஸ்” வன்முறை, வன்முறையை பிரசவிக்கும், என்று. பொறுப்புடன் செயல்பட வேண்டிய வக்கீல்கள் நீதிமன்ற வளாகத்தில் தங்கள் தனிப்பட்ட போக்கினால், தீவிரவாதத்தை தூண்டுவதற்கு வித்திட்டு விட்டார்கள். இந்த பழிக்குப் பழி ஒரு தொடர் கதையானால் நாட்டின் அமைதி என்னவாகும்?
உண்மையில் தீவிர வாதம் என்பது, பொது மக்களிடமிருந்து, ஒதுக்கப்பட வேண்டிய ஒன்று. நாம் ஒன்று பட்டு தீவிர வாத சக்திகளை பிரிக்க வேண்டும். தீவிர வாதத்தை எதிர்க்கும் முகமாய் நாம் குழுக்களாக பிளவு பட்டு நின்றால் அது தீவிரவாதிக்கு வெற்றி. பத்து அல்லது இருபது தீவிரவாதிகள் ஒட்டுமொத்த ஜனத் தொகையை மத நீதியாய், சாதி ரீதியாய் பிரித்து, தனித்து செயல்பட வேண்டிய தீவிர வாதத்தை, வெகுஜன குழுக்களின் பிரிவினை வாதமாக்க, நாம் முயற்சிக்கக் கூடாது.
சமீபத்தில் குஜராத்தில் நடந்த தீவிரவாதத்தை மையமாக வைத்து “பர்ஜனா” என்னும் திரைப்படத்தில் (நஸ்ரூதின் ஷா, ஸாரிகா நடத்தது) எப்படி ஒரு பார்ஸி குடும்பத்தின் குழந்தை அரசியல் வாதிகளால் தூண்டப்பட்டு, போலிசால் பாராமுகமாய், அனுமதிக்கப்பட்ட வன்முறையில் இறக்கிறது என்பதாகும். ஆதில் ஒரு பாத்திரம் இந்துக்களிடம் ஒற்றுமையாக இறந்த ஒரு இஸ்லாமிய வயோதிகர் இறந்தபின் அவர் மகன் இஸ்லாமிய தீவிரவாதத்தில் சேர்ந்து பழிவாங்க நினைத்தபோது, அவன் தங்கை தீவிர வாதத்தை எதிர்க்க சம்பந்தப்பட்ட தீவிரவாதியின் மேல் கோபப்படுவதை விட்டு, ஒன்றுமறியாத பிற மதத்தைச் சார்ந்தவரின் மேல் வன்முறை செலுத்தினால் குறைந்த அளவில் உள்ள தீவிரவாதம், பெரிய அளவில் பிரிவினை வாதமாக மாற்றும் என்று சொல்வதாக அமையும். அது முற்றிலும் உண்மை. இன்று இந்தியாவில் தீவிரவாதத்தை ஒற்றுமையாய் ஒடுக்குவதை விட்டு விட்டு, நாம் அந்த பிரிவினை சக்திக்கு உதவ முற்படுகிறோம், அரசியலுக்கு அது உதவுவதால்! மகேந்திரனின் உதிரிப் ப+க்கள் படத்தில் குடூரமான குணமுடைய ஒரு பாத்திரத்தை மக்கள் அடிக்காமல் எப்படி அவன் மனதில் உறையவைத்து ஏரிக்குள் அவனாகவே மூழ்கச் செய்து மரணமடையச் செய்வார்கள், என்று கடைசி காட்சியில் காட்டுவார்கள். தீவிரவாதத்தை, உதிரிப் ப+க்களாக்க வேண்டும்! மாலையாக்கி கழுத்தில் அணிந்து அதை அடிப்படைவாதமாக்கக் கூடாது.
என்னிடம் 8 பேர் கொண்ட அடுக்கு மாடி குடியிருப்பில் வசிக்கும் 7 பேர் ஒரு வழக்கு விஷயமாய் வந்தனர் அதில் ஒரே ஒருவர் மட்டும் எப்படி மீதமுள்ள எட்டுபேருடன் பொது விஷயங்களில் முரண்படுகிறார், என்று சொல்லி வழக்கு போடச் சொன்னார்கள். நான் அவர்களைக் கேட்ட முதல் கேள்வி, எட்டுபேர் கொண்ட அமைப்பில், ஏழு பேர் ஒரே பிரச்சினையை சொன்னாலும், ஒரே ஒரு வரை எதிர்த்து வழிக்குக் கொண்டு வர முடியாதற்கு காரணம், முதலில் நீங்கள் ஏழு பேரும் ஒற்றுமையாய் இல்லை, எனவே தான் அந்த ஒரு நபர் உங்களை எதிர்கிறார் என்றேன். அவர்களுக்கு கேஸ் போடுவதற்கு பதில் ஒற்றுமையாய் அந்த ஒருவரை தனிமைப்படுத்த சில உத்திகளை சொல்லி, அதனால் கேஸ் இல்லாமலே அந்த தனி நபர் அந்த அடுக்கு வீட்டைகாலி செய்து சென்றுவிட்டார் என்று கேள்விப்பட்டேன். தீவிர வாதத்தை நாம் அப்படித்தான் ஒற்றுமையாய் தனிமைப்படுத்தி வெளியேற்ற வேண்டும்.
பாகிஸ்தானில் முஷரப்பின் சர்வாதிகாரத்தை, குறிப்பாக நீதிமன்றத்தை முடக்கும் சட்டத்தின் ஆட்;சியை ஒடுக்குவதில் வக்கீல்களின் பணி பாராட்டத்தக்கது. சட்ட நாளில் சடங்குக்காக உறுதிமொழி எடுப்பதற்கு பதில் நீதிமன்றத்தின் கௌரவத்தையும், சட்டத்தின் ஆட்சியின் மேண்மையையும் காப்பாற்ற கடமையுள்ள, வக்கீல்களே! வன்முறை வளர்வதற்கு, வழிவிடாதீர்கள்!
தீவிர வாதத்திற்கு நாம் தரும் பதிலடி, பிரிவினை வாதத்தை உருவாக்குவது அல்ல!.
மீடியர் இந்தச் சம்பவம் நடந்த அதே நேரத்தில் மற்றொரு செய்தி கிழக்கு வங்க பெண் எழுத்தாளர் தஸ்லிமா நஸ்ரீனுக்கு எதிராக, இஸ்லாமிய அடிப்படை வாதக் குழு, தீவிர தண்டனை நடவடிக்கை அறிவித்து, அவர் கொல்கத்தாவில், பாதுகாப்பிற்காக தங்கி அவர் விசா நீடிக்கும் தருணத்தில். மீண்டும் கொல்கத்தாவிலிருந்து ஜெய்ப+ருக்கு மாற்றி, போலீஸ் பாதுகாவலுடன் டெல்லி ராஜஸ்தான் இல்லத்திற்கு மாற்றப்பட்ட செய்தி டிவி, பேப்பர் இவையனைத்திலும் முதல் பக்க செய்தியாக வந்தது. தீவிரவாதியால் கண்கானிக்கப்பட்டு ஆபத்திலிருப்பவர் இடத்தையும், அவர் செல்லும் வழியையும், இப்படி வெளிப்படையாகவா? சொல்வது. அரசு மற்றும் மீடியாவின், செய்தி தொடர்பாளரின், இந்த முட்டாள்தனமான போக்கு எனக்கு புரியவில்லை. நம் மீடியாக்கள் எதை வெளியிட வேண்டும், எதை மிகைப் படுத்தக்கூடாது போன்ற அளவுகோளை வைத்துக் கொள்வதே இல்லை. வதந்தியோ, உண்மையோ பரபரப்புச் செய்தியை பகிரங்கப்படுத்துவதே மீடியா தர்மம்!


kmvijayan@gmail.com

Series Navigation

விஜயன்

விஜயன்