பசிபிக் கடல் தீவுகளில் செய்த பயங்கர அணு ஆயுதச் சோதனைகள்!

This entry is part [part not set] of 35 in the series 20030215_Issue

சி. ஜெயபாரதன், கனடா


ஹைடிரஜன் குண்டு அணு ஆயுதச் சோதனைகள் ஆரம்பமாகி விட்டால் இனி பூமியில் வாழும் உயிரினங்கள் அழிவுக்கும், சூழ் மண்டலத்தில் கதிரியக்க நச்சுப் பொழிவுக்கும் விஞ்ஞான யந்திரம் பாதை விரித்து விட்டது என்று அர்த்தம்!

– ஆல்பர்ட் ஐன்ஸ்டைன்

சோதனைக்கு முன்பு கடத்தப் பட்ட குடிமக்கள்

‘நீங்கள் செய்யும் சோதனைகள் எதுவும் மெய்யாக எங்களுக்குப் புரிய வில்லை! ஆனால் எங்கள் பூர்வீகத் தீவின் பூமியில் நஞ்சைக் கலந்து, அதை நாசமாக்கி விட்டார்கள் என்பது மட்டும் எங்களுக்குத் தெளிவாகத் தெரிகிறது ‘ என்று மன வேதனைப் பட்டார், கிலான் பெளனோ [Kilon Bauno] என்னும் தீவு வாசி! ‘உங்கள் தீவு அமெரிக்கா புரியும் சோதனைத் திட்டத்துக்கு மிகவும் தேவைப் படுகிறது! அந்தச் சோதனைகள் மனித இனத்துக்கு மாபெரும் பயனளிப்பவை ‘ என்று ராணுவ அதிகாரி பென் வயட் [Ben Wyatt] கூறியதை, அங்கு வாழ்ந்த மீனவர்கள் நம்பித் தமது வீடுகளையும் நிலங்களையும் விட்டு விட்டு வெளியேறினர்! என்ன சோதனைகள் நிகழப் போகின்றன, அதனால் என்ன விளைவுகள் தொடரப் போகின்றன என்று, தீவு வாசிகளுக்கு அவர் எந்த விபரமும் முதலில் கூற வில்லை!

161 நபர்கள் கொண்ட 11 குடும்பங்கள் வேறோர் தீவில் தற்காலீகமாகக் குடியேற கப்பலில் ஏற்றிச் செல்லப் பட்டனர்! அமெரிக்கா 66 அணு ஆயுதச் சோதனைகளைத் தீவுகளில் நடத்திக் கதிரியக்கப் பொழிவுகள் நீர், நிலம், புல், பூண்டு, மரங்கள், வீடுகள் யாவற்றையும் நாசமாக்கிப் பூமி மண் நிரந்தரக் கதிர்த் தீண்டலில் கலந்து, மயான கண்டம் போல் மாறி விட்டது! 50 ஆண்டுகள் ஓடிவிட்ட பிறகும், 500 மைலுக்கு அப்பால் தனித்து ஒதுக்கப்பட்ட ஓர் தீவில் நெருக்கடியில் வாழும் பிகினி மீனவர்கள், வெகுண்டு இன்னும் காத்துக் கொண்டுதான் உள்ளனர்!

அணுகுண்டு வெடிப்பில் இரண்டாம் உலகப் போர் நின்ற தறுவாயில், ஆயுதத்தை உருவாக்கிய விஞ்ஞானிகளுக்கும் 1946 ஆண்டில், பல வித விளைவுகள் புரியாமல் புதிராகவே இருந்தன! அவற்றை அறிந்து கொள்ள அமெரிக்க ராணுவம் யாரும் நாடாத, மக்கள் தொகை குறைந்த பசிபிக் கடல் தீவான பிகினி அடோலைத் தேர்ந்தெடுத்துச் சோதனைகளைத் தொடர முடிவு செய்தது! 1946 ஜூலை முதல் தேதி காலை 9 மணிக்கு, B-29 வெடி விமானம் ‘ஏபிள் ‘ அணுகுண்டை 500 அடி உயரத்தில் வெடித்த போது, தீவில் கடத்தப் பட்ட பாமர மக்கள் முதல் முதலாக எழுந்த செயற்கைச் சூரியனைக் கண்டனர்! வெளியே உதித்த விந்தையைக் கண்டு, சூரியன் இரண்டாம் தடவை எழுந்து விட்டதோ என்று வியப்புற்றார்கள்! அடுத்து 12 ஆண்டுகளாக 23 அணுகுண்டு வெடிப்புச் சோதனைகளை பிகினியிலும், பெரும்பான்மையான குண்டுகளை [43] எனிவெடோக் தீவிலும் அமெரிக்க ராணுவம் சோதித்தது!

பேரழிவுப் போராயுதக் குண்டுகளின் தொடர்ச் சோதனைகள்

ஜப்பானில் முதல் இரண்டு மூர்க்க அணுகுண்டுகள் பெரும் உயிர்ச் சேதத்தையும், பொருட் சேதத்தையும் உண்டாக்கிய பிறகு, 1946 ஜூலையில் உலக ‘ஐக்கிய நாடுகளின் பேரவை ‘ அணு ஆயுதக் கட்டுப்பாடு விதிகளையும் உளவு முறைகளையும் [Control & Inspections] உருவாக்கி அறிவிக்கும் போது, அமெரிக்கா தனது படையாட்கள், தனி நபர்கள் கொண்ட 42,000 பேரைத் திரட்டிப் ‘பிகினி அடோல் ‘ [Bikini Atoll] பசிபிக் கடல் தீவில் ‘வினையாக்கம் எதிர்வீதிகள் ‘ [Operation Crossroads] என்பதை ஆரம்பித்து, ‘ஏபிள் ‘ [Able] என்று குறிமொழி [Code Name] கொண்ட முதல் சோதனை அணுகுண்டைப் போட்டது! அக்குண்டு ஹிரோஷிமா, நாகசாக்கியின் ‘போலி விளைவைப் ‘ [Simulation] பிரதிபலிக்க ஏற்பாடு செய்யப் பட்டது! தீவிர விளைவுகளைக் கடற் படையினர் ஆய்ந்த போது, மாதிரிக்கு வைத்திருந்த மிதப்புப் படகுகளின் 1.5 அடித் தடிமன் இரும்புக் கவசத் தட்டைக் கூட காமாக் கதிர்வீச்சுகள் [Gamma Radiations] ஊடுறுவியதை அறிந்தனர்! 1948 மே மாதம் முதல் அமெரிக்கா புதிய அணு ஆயுதச் சோதனையைப் பசிபிக் கடலில் அண்டைத் தீவுகளான ‘எனிவெடாக் அடோலில் ‘ [Eniwetok] செய்யப் போவதாக, அந்நாள் ஜனாதிபதி ட்ரூமன் அறிவித்தார்! அங்கே ‘வினையாக்கம் நிலைமனை ‘ [Operation Standhouse] என்னும் சோதனையில் மூன்று அணுகுண்டுகள் வெடிக்கப் பட்டன!

1952 நவம்பர் முதல் பூத அணு ஆயுதங்கள் [Super Bombs] எனப்படும் ஹைடிரஜன் குண்டுகள் பசிபிக் தீவுகளில் சோதனை செய்யப்பட்டன! பிகினியில் சோதித்த 23 அணுகுண்டுகளில் ஒன்றான ‘பிராவோ ‘ [Bravo] என்னும் உலகிலே மிகப் பெரும் 15 மெகாடன் ராட்சத வெப்ப அணுக்கரு ஆயுதம் முதன் முதல் ஆராயப் பட்டது!

மார்ஸல் தீவுகளில் அமெரிக்க செய்த சோதனைகள்

அநேக அணுகுண்டுகளைச் சோதனை செய்த பிகினி, எனிவெடாக் தீவுகள், பசிபிக் கடலில் பூமத்திய ரேகைக்கு 300 மைல் வடக்கே, ஹவாயி தீவிலிருந்து தென்மேற்கே 2400 மைல் தூரத்தில் உள்ளன. மத்திய பசிபிக் கடலில் உள்ள 34 அடோல்களில் [Atolls] ஒன்று பிகினி அடோல். அண்டையில் இருக்கும் ஐந்து தனித் தீவுகளும், 34 அடோல்களும் ‘மார்ஸல் தீவுகள் குடியரசைச் ‘ [Republic of Marshall Islands] சேர்ந்தவை. ஜப்பானியர் ஆதிக்கத்தில் இருந்த மார்ஸல் தீவுகளை, 1944 பிப்ரவரியில் இரண்டாம் உலகப் போர் முடிவில் அமெரிக்கப் கடற்படை கைப்பற்றியது! ‘அடோல் ‘ என்றால் லகூன் ஒன்றைச் சூழ்ந்து வளைந்துள்ள ஒரு பவழ மணற்கரை [Coral Reef]. லகூன் [Lagoon] என்பது கடல் மையத்தில் பவழக் கரை சூழ்ந்த, ஓர் ஆழமில்லாத குட்டைக் குளம் அல்லது ஏரி [Shallow Lake]. எனிவெடாக் அடோல் 20 மைல் விட்டமுள்ள பவழக் கரையும், 64 மைல் சுற்றளவும், கடல் மட்டத்திலிருந்து 15 அடி உயரத்தில் உள்ளது. 5000 அடி ஆழமுள்ள கடல் நடுவே உள்ள, எனிவெடாக் லகூனின் ஆழம் 150 அடி! எனிவெடாக் தீவு மட்டும் 2 மைல் நீளமும், அரை மைல் அகலமும் கொண்டது!

1946 முதல் 1958 வரை அமெரிக்கா பிகினி அடோல் தீவில் 23 மேல் மண்டல அணுகுண்டுச் சோதனைகளைச் செய்திருக்கிறது! உலகிலே மிகப் பெரிய ‘பிராவோ ‘ [Bravo] என்னும் 15 மெகாடன் பேரழிவு அணு ஆயுத ஹைடிரஜன் குண்டை, 1954 பிப்ரவரியில் அங்கே வெடித்து ஆராய்ந்தது! அந்த ராட்சத வெடிப்பு மூன்று அண்டைத் தீவுகளைத் தகர்த்துத் தூசியாய் வீசியது! மேலும் பிகினி லகூனின் 242 சதுர மைல் கடல் தளத்தைக் குழி பறித்து, அதிர்ச்சி அலைக் கடலைச் செங்குத்தாய்த் தூக்கி நிறுத்தியது! பூமியில் கிடந்த பவழக் கற்கள், மணல் கதிரியக்கத் தூசியாகி, மற்ற தரைப் பொருள்களுடன் சேர்ந்து 50,000 சதுர மைல் பரப்புக்கு எறியப் பட்டன!

எனிவோடாத் தீவில் அமெரிக்கா செய்த சோதனைகள்

ஹைடிரஜன் குண்டுகளைத் தூண்டி வெடிக்க வைக்கும் 11 அணுகுண்டு எரித்தூண்டிகள் [A Bomb Igniters] 1950 இல் எனிவெடோக் தீவில் சோதிக்கப் பட்டன! அவை யாவும் ‘சுத்தச் சூழ்மண்டலச் சோதனை ‘ [Operation Greenhouse] என்னும் குறிமொழியில் ஆராயப் பட்டன! 1950 ஜூன் மாதம் அந்த ஆய்வுகளைக் காண, ‘ஹைடிரஜன் குண்டின் தந்தை ‘ எனப்படும் எட்வெர்டு டெல்லர் [Edward Teller] எனிவெடாக் சோதனைத் தளத்திற்கு வந்திருந்தார்!

எனிவெடாக் தீவில் 1952 நவம்பர் முதல் தேதி அமெரிக்கா முதல் ஹைடிரஜன் குண்டை [Code Name Mike] வெடித்து, வெப்ப அணுக்கரு யுகத்தை [Thermonuclear Age] ஆரம்பித்து வைத்தது! அச்சோதனையில் 11,650 பேர் [9350 ராணுவத்தினர், 2300 பொதுநபர்] கொண்ட 132 வினைக் குழுக்கள் ஒன்றாய் [Joint Task Force] உழைத்தன! அவர்களில் 6600 ராணுவத்தினர், 2300 பொதுநபர் எனிவெடாக் தீவிலும், எஞ்சியோர் 326 மைலுக்கு அப்பாலிருந்த குவாஜலைன் [Kwajalein] தீவிலிருந்தும் கண்காணித்தனர். 10.4 மெகாடன் ‘மைக் ‘ என்னும் முதல் ஹைடிரஜன் குண்டு பயங்கர ஓசையுடன் வெடித்து 90 விநாடிக்குள் தீபந்து, 3 மைல் விட்டம் உப்பி 57,000 அடி உயரத்தில் பூதமாய் எழும்பியது! ஐந்து நிமிடத்தில் 8 மைல் விட்டமும், 27 மைல் உயரமும் உள்ள முகில் குடை விரித்து எழுந்தது! முடிவாக முகில் 1000 மைல் தூரம் பரவி, முகில் குடையின் தூண் 30 மைல் குறுக்களவில் பெருத்தது! அது வீசிய வெப்பக் கனல் அலை 30 மைலுக்கு அப்பால் உணரப் பட்டது! அது ஜப்பான் ஹிரோஷிமாவில் விழுந்த அணுகுண்டை விட ஆயிரம் மடங்கு அழிவுச்சக்தி உடையது! வெடிப்பில் 80 மில்லியன் டன் பூமியின் மண்ணும் பவழமும் காற்றில் எழுந்து தூள் தூளாயின! கடல் நீருக்குக் கீழ் ஏற்பட்ட பெருங்குழி ஒரு மைல் அகலத்தில், 200 அடி ஆழமோடு காணப் பட்டது!

அணு ஆயுதக் கதிர்ப் பொழிவில் 11,240 பேர் தாக்கப் பட்டனர்! காற்று மண்டலத்தின் கதிரியக்கத்தை உளவு செய்த விமானம் ஒன்று பழுதேற்பட்டு கடலில் மூழ்கியது! அதைக் காப்பாற்றப் போன அடுத்த விமானத்தில் இருந்த ஏழு பேர் கதிர்ப் பொழிவில் நனைந்து, 10 முதல் 17 ராஞ்சன் கதிரடி [Radiation Dose] பெற்றனர்! விமானப் படங்கள் எடுக்கச் சென்ற வேறோர் விமானத்தில் பணி புரிந்த 12 பேரும் அதிகக் கதிரடி வாங்கினர்!

சோதனைகளால் பாதிக்கப் பட்ட தீவின் ஏழைப் பாமர மக்கள்

பிகினி தீவும் அதை அண்டிய மற்ற 22 தீவுகளும் பெரும் கதிரியக்கப் பொழிவுகளால் [Radioactive Fallouts] நனைக்கப் பட்டு புல் பூண்டு, மரம், செடி, கொடிகள், பூமித் தளங்கள் யாவும் தீவிரக் கதிர்த் தீண்டலால் [Severe Radioactive Contamination] பாதிக்கப் பட்டன! முன்னமே கடத்தப் பட்ட பிகினி அடோல் தீவுகளின் மீனவர்கள், கதிரியக்க பொழிவுகளின் தீவிர விளைவுகளைப் பற்றி முதலில் எச்சரிக்கப் படவில்லை! அவர்கள் யாவரும் 500 மைலுக்கு அப்பால் கடல் லகூன் இல்லாத, 230 ஏக்கர் நிலமுடைய கிலி [Kili] என்னும் தீவில் தங்கள் அன்றாட வாழ்க்கை இழந்து, தொழில் இழந்து முடமாக அடைபட்டுக் கிடந்தனர்!

கடல் மட்டத்துக்குக் கீழ் ஏறக்குறைய மூழ்கிய எரிமலைச் சரிவுகளில் எழும்பிய, பவழக் கரைமணல் [Coral Reefs] மேடுகள் மேவியவை, மார்ஸல் தீவு அடோல்கள்! அனுதினமும் விட்டு விட்டு அங்கே மழை பெய்யும்! புயலும், அலையும் அடித்து, அடித்துச் செதுக்கி விட்டுச் சிதைந்த போன தீவுகள்! பிகினி மாந்தர் யாவரும் வல்லமை மிக்க படகோட்டிகள்! கத்திப் படகுகளில் [Canoes] அஞ்சாது பல மைல் தூரம் கடலில் சென்று மற்ற அடோல்களையும், தீவுகளையும் அண்டி மீன் பிடிப்பதும், ஆமை முட்டைகளைச் சேகரிப்பதும், பறவைகளைப் பற்றுவதும் மீனவரின் நிரந்தரத் தொழில்! அவர்களின் மற்ற உணவு தேங்காய், வேர்க் கிழங்குகள் [Arrow Roots] ஆகியவை!

மார்ஸல் தீவிகளில் அணு ஆயுதச் சோதனைகள் பல நிகழ்ந்து, தீவுகளைக் கதிர்த் தீண்டிய பின்பு, அங்குள்ள மாந்தர்களின் படகோட்டங்கள் தடைப் பட்டன! மீனவர்கள் மீன்பிடிக்கும் திறனை இழந்து, படகோட்டும் ஆற்றலையும் துறந்தனர்! கடல் மீன்கள் கதிரியக்கத் துணுக்குகளை விழுங்கி நச்சு மீன்களாய் மாறின! தின்பதற்குத் தேங்காய்கள் இல்லாமல் குன்றிப் போயின! இரண்டு வருடங்களுக்குப் பின் அவர்கள் பட்டினி கிடக்க வேண்டிய தாயிற்று! அதன்பின் அவர்கள் யாவரும் அமெரிக்கா கொடையாக அளிக்கும் ‘உணவுப் பொட்டலம் ‘ [Food Packets] வருகைக்குக் காத்துக் கிடக்க வேண்டியதாயிற்று! மீனவர்கள் மீண்டும் தமது பழைய தீவுகளுக்கு போகலாம் என்று அமெரிக்க அதிகாரிகள் அளித்த வாக்குறுதிகள் எல்லாம் காற்றோடு போயின! தீவு மாந்தருக்கு உணவும், பணமும் தேவைப் பட்டன! எப்போ தெல்லாம் விமானம், கப்பல் தீவுகளில் வந்திறங்கும் போது, குடி மக்கள் உணர்ச்சி வசப்பட்டு, ஈக்கள் போல் பாய்ந்து வந்து மொய்த்தனர்! ‘அமெரிக்க அரசின் உணவுக் கப்பல் வரத் தாமத மானால், நாங்கள் தினமும் தின்ன இருப்பவை நான்கு நண்டுகள், வெந்த ஒரு கைப்பிடி அரிசிச் சோறு ‘ என்று கூறினார் கிலித் தீவின் மேயர், டோமாகி ஜூடா [Tomaki Juda]!

கதிரியக்கப் பொழிவுகள் விளைவித்த தீவிர நோய்கள்

1954 இல் ‘பிராவோ ‘ குண்டு வெடித்த போது, நிரம்ப கதிரியக்கச் சாம்பலை ரொங்கேலாப் அடோல் [Rongelap Atoll] தீவில் கொட்டித் தெளித்து விட்டது! விபரம் அறியாத சிறுவர், சிறுமியர், வாலிபர், முதியவர் அந்த சாம்பலில் விளையாடி, அதைச் சிலர் நாக்கில் சுவைத்தும் இன்புற்றார்கள்! இறுதியில் அவர்கள் யாவரது மேனியிலும் ‘பிகினி வெள்ளை ‘ [Bikini Snow] எனப்படும் ‘கதிர் வீச்சுத் தேமல் ‘, உண்டாகி எரிய ஆரம்பித்தது! பத்து வயதுக்குக் குறைந்த, நான்கில் மூன்று சிறுவர்கள் சாம்பலில் உள்ள கதிர் ஐயோடினைச் [Radioiodine131] சுவாசித்து உடம்பினுள் சென்றதால், பின்னால் தைராய்டு புற்று நோயுற்று [Thyroid Cancer] மரணம் அடைந்தனர்! சிலர் கதிரிக்கம் தூண்டி விட்ட ரத்த நோயில் [Leukemia] செத்தனர்! ஒரு மீனவர் 117 ரெம் கதிரடி [117 Rem, 200 times maximum allowable Annual Dose] வாங்கி, அமெரிக்க அரசின் நஷ்ட ஈடைக் கோரினார்! மார்ஸல் தீவுகளில் குழந்தைகள் மரண எண்ணிக்கை மூன்று மடங்காகப் பெருகி விட்டது! மரண மடையும் மாந்தரில் 50% மரணங்கள், ஐந்து வயதுக்கும் கீழ்ப்பட்ட குழந்தைகள்! பிகினி தீவு ‘பிணித் தீவாய் ‘ மாறி, மாந்தர் மரண எண்ணிக்கை பெருகிக் கொண்டே போனது!

தீவு மாந்தர் தமது நில, புல, வீடுகளில் மீண்டும் புக முடியாதபடித் தடுத்தது, கதிரியக்கப் பொழிவுகளில் வீழ்ந்து ஒட்டிக் கொண்ட தீவிர நஞ்சு மூலகம், சீஸியம்137 [Cesium137]. அது ஓர் பீட்டாக் கதிர் வீசி [Beta Emitter]! கதிர்த் தேய்வில் அது பாதி யாகும் அரை ஆயுட் காலம் [Half Life] 30 ஆண்டுகள்! பூதள மண்ணில் இரண்டறக் கலந்த பின், சீஸியம் கீழ்த்தள நீரையும் [Ground Water], விளையும் உணவுப் பயிர்களையும் தீண்டுகிறது! அந்த நீரை அருந்துபவர், அந்த தானியத்தைச் சமைத்து உண்பவர் தீவிர நோயில் வாதனை அடைவர்!

1968 இல் ஜனாதிபதி ஜான்ஸன் பிகினி தீவு பாதுகாப்பானது என்று அறிவித்த பின், மக்கள் 1971 இல் ஆங்கு மீண்டும் குடியேறினர்! 1978 இல் தீவு மாந்தர்களைச் சோதித்ததில், சீஸியம்137 உட்கொள்ளப் பட்டு, பாதுகாப்பு அளவுக்கு மீறி இருப்பதாக நிபுணர்கள் அறிந்தனர்! மறுபடியும் குடிமக்கள் அகற்றப் பட்டு, வேறு தீவுகளுக்குக் கொண்டு செல்லப் பட்டனர்! சீஸியம்137 இன் அரை ஆயுள் 30 ஆக இருப்பதால், பாதுகாப்பு அளவுக்கு அது தேய்ந்து குறைய, 90 வருடங்கள் கூட ஆகலாம் [1958 +90 =2048] என்று அனுமானிக்கப் படுகிறது! அதாவது 2048 ஆண்டுக்குப் பிறகுதான் அவர் மீண்டும் அவரது பழைய வீடுகளில் கால் வைக்கலாம்!

தீவுகளில் நிபுணர்கள் செய்த கதிரியக்கச் சுத்திகரிப்பு

காலிஃபோர்னியா லாரென்ஸ் லிவர்மோர் தேசிய ஆய்வகத்தைச் [Lawrence Livermore National Laboratory] சேர்ந்த டாக்டர் வில்லியம் ராபின்ஸன், பிகினி தீவுகளில் ஒட்டிக் கொண்டுள்ள கதிரியக்க விளைவுகளை நீக்குவதற்கு 1977 இல் அனுப்பப் பட்டார்! அங்கே அவர் நிறைவேற்றிய தீர்வு முறைகள் பின் வருமாறு:

பொட்டாஸியம் கலந்த ரசாயன உரங்களைப் பூமியில் தெளித்து, தாவரங்கள் முதலில் உரத்தை உறிஞ்சி சீஸியம்137 உட்கொள்வதைத் தடுப்பது!

பூமியின் மேலாகக் கதிர்த் தீண்டப் பட்டுள்ள ஓரடி மண்ணை வெட்டி எடுத்து அகற்றுவது! பிகினியின் 560 ஏக்கர் நிலத்தை 12 அங்குலம் தோண்டி, 25,000 மரங்களை வெட்டி அப்புறப் படுத்த வேண்டும். அதற்கு மட்டும் 80 மில்லியன் டாலர் [1980 டாலர்] செலவாகும்!

இறுதியில் கதிரியக்கக் குப்பைகளைச் சிமென்ட் குழிகளில் புதைத்து நிரந்தரமாய் மூட வேண்டும்.

ராபின்ஸன் அங்கே ஒரு தோட்டத்தை அமைத்துத் தீவுகளில் விளையும் காய்கறிகளையும், தானியப் பயிர்களையும் விதையிட்டு முளைக்கச் செய்து, அவற்றின் கதிரியக்கத்தைச் சோதித்தார். சில இடங்களில் மண்தரை வெட்டி எடுக்கப் பட்டு அகற்றப் பட்டது! சில இடங்களில் ரசாயன உரமிட்டு, மண்வளம் சுத்த மாக்கப் பட்டது! சில இடங்களில் கடல் நீர் வெள்ளத்தைப் பயன் படுத்தி, மண்தரைகள் கழுவப் பட்டன! தீவெங்கும் மண் மாதிரிகள் எடுக்கப் பட்டு, சீஸியம்137 உள்ளதா என்று அறியப் பட்டது! விளைந்த காய் கறிகளில் மிக்க அளவு சீஸியம்137 இருப்பதை ராலின்ஸன் கண்டார்!

எனிவெடாக்கில் சேர்ந்த டன் கணக்கான 111,000 குயூபிக் யார்டு [cubic yard] கதிரியக்கக் குப்பைகள், மண் திட்டுகளை எடுத்துக் கொண்டு போய், ரூனிட் தீவில் [Runit Island] கொட்டி, அவற்றை 1.5 அடித் தடிமன் கொண்ட சிமென்ட் கல்லறையுள் புதைக்கப் பட்டன! ஆயினும் அங்கே குடிமக்கள் அனைவரையும் கொன்று விடும் விஷப் பண்டமான 160 கிராம் புளுடோனியம் ஆக்ஸைடு, இன்னும் உதிரியாகப் பரவிக் கிடக்கிறது! அவற்றைப் பூமியிலிருந்து நீக்குவது மிகக் கடினம்!

உலக வல்லரசுகள் சோதித்த அணு ஆயுதங்கள்

கடந்த ஐம்பது ஆண்டுகளாக அமெரிக்கா மட்டும் 1030 அணு ஆயுதச் சோதனைகளை நிகழ்த்தி யிருக்கிறது! அமெரிக்கா வெடித்த கடைசி அணு ஆயுதச் சோதிப்பு 1993 செப்டம்பர் 23 இல் முடிந்தது! 1990 அக்டோபர் 25 இல் தனது இறுதிச் சோதனையை முடித்த ரஷ்யா 715 அணு வெடிப்புகளை இதுவரை நடத்தி யுள்ளது! பிரான்ஸ் செய்தது 210 சோதனைகள் [கடைசி 1996 ஜனவரி 27]. பிரிட்டன் 45 சோதனைகள் [கடைசி 1991 நவம்பர் 26]. சைனா 47 சோதனைகள் [கடைசி 1997]. இந்தியா 6 சோதனைகள் [கடைசி 1998 மே 13]. பாகிஸ்தான் 6 சோதனைகள் [கடைசி 1998 மே 30]. உலக நாடுகள் புரிந்த 2059 வெடிப்புகளில் சில பூமிக்கு மேல் தளத்தில், சில பூமிக்குக் கீழ்த் தளத்தில், சில கடலுக்கு அடித் தளத்தில் செய்யப் பட்டவை!

உலகில் அணு ஆயுதச் சோதனைகள் செய்த தளங்கள்: (அமெரிக்கா) நெவேடா, நியூ மெக்ஸிகோ, பசிபிக் தீவுகள், பிகினி, எனிவெடோக், அலாஸ்கா; (ரஷ்யா) ஆர்டிக் தீவுகள், காஸக்ஸ்தான், யுக்ரேய்ன், உஸ்பெகிஸ்தான்; (பிரிட்டன் /அமெரிக்கா) கிரிஸ்ட்மஸ் தீவுகள்; (பிரான்ஸ்) அல்ஜீரியா, ஸஹாரா பாலை; (சைனா) சிங்கியாங்; (இந்தியா) பொக்ரான், ராஜஸ்தான்; (பாகிஸ்தான்) சகாய் மலைகள்.

1945 முதல் 2002 வரை ஆக மொத்தம் 2059 அணு ஆயுதச் சோதனைகள் நடத்தப் பட்டு 57 ஆண்டுகளாக பூமண்டலத்தில் கதிரியக்கப் பொழிவுகளை மனித இனமும், மற்ற உயிரினமும் சுவாசித்தோ, உணவுப் பண்டமாய் உண்டோ, அல்லது உடல் தோலில் தீண்டப் பட்டோ பாதிக்கப் பட்டுள்ளன! 1986 இல் சோவியத் ரஷ்யாவில் எதிர்பாராது வெடித்த செர்நோபிள் அணு உலை விபத்தின் விளைவுகளையும் இத்துடன் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

கதிரியக்கப் பொழிவுகளால் உலக மாந்தர் படும் பாடு!

1957 மே மாதம் நோபெல் பரிசு விஞ்ஞானி லினஸ் பாலிங் [Linus Pauling] மற்றும் 2000 அமெரிக்க விஞ்ஞானிகள் சேர்ந்து கையெழுத்திட்டு ஓர் விண்ணப்பத்தை ஜனாதிபதி ஐஸன்ஹோவருக்கு அனுப்பினார்கள்! ‘ஒவ்வொரு அணு ஆயுதச் சோதனையும் உலகின் எல்லா மூலை முடுக்கிலும் கதிரியக்கப் பொழிவுகளை மென்மேலும் அடுக்கிக் கொண்டே போகிறது! அதிமாகும் ஒவ்வோர் அளவு கதிர்வீச்சும் மனித இனத்திற்கு ஆரோக்கியக் கேடுகளை உண்டாக்கிக் கொண்டே போகிறது! முடிவில் அங்க ஈனமான குழந்தைகள் எதிர்காலத்தில் பிறந்து அவர்களின் எண்ணிக்கையும் பெருகப் போகிறது! ‘

1996 ஆண்டு வரை பூமிக்கு மேல் தளத்தில் சோதித்த அணு ஆயுதங்களின் கூட்டு வெடிப்புச் சக்தி 438 மெகாடன் டியென்டி [438 Megatons TNT] என்று ‘கிரீன்பீஸ் பேரவை ‘ [Greenpeace Organization] மதிப்பிட்டிருக்கிறது! ஜப்பானில் போட்ட ஓர் அணுகுண்டின் கதிர்வீச்சுக்கு ஒப்பிட்டு நோக்கினால், அவற்றின் கதிர்ப் பொழிவுகள் 29,200 ஹிரோஷிமா அணுகுண்டுகளை உலகின் பல தளங்களில் போட்டதற்குச் சமமாகும்! சராசரியாக இதை விளக்கிச் சொன்னால், ஒரு தினத்திற்கு இரண்டு ஹிரோஷிமா அணுகுண்டை [12.5 Kiloton TNT] உலகின் வாயு மண்டலத்தில் வெடிப்பதற்கு இணையாகும்!

ஒவ்வொர் அணு ஆயுதமும் சோதிக்கப்படும் போது, கதிரியக்க தூசிகள் சேர்ந்து பூமியின் வாயு மண்டலம் நாச மடைகிறது! அடித்தள வெடிப்பிலும் கதிரியக்கம் கசிந்து, அடித்தள நீரூற்றை மாசு படுத்தி, நிலத்தைக் கதிர்த் தீண்டி, சில சமயம் கீழிருந்து பூமிக்கு மேலாகவும் பரவி, வளரும் பயிரினத்தையும், உயிரினத்தையும் பாதிக்கிறது! முக்கியமாக பச்சிளம் பிள்ளைகளும், சிறுவர், சிறுமிகளும் தீவிரக் கதிர் ஐயோடின்131 [Radioiodine131] நஞ்சைச் சுவாசித்து, தைராய்டு புற்று நோயில் மரண மடையலாம்! அல்லது இரத்த நோயில் [Leukemia] துன்புற்றுப் பின்னால் இறந்து போகலாம்!

கடந்த ஐம்பது ஆண்டுகளாக உலகெங்கும் புற்று நோய்களில் மாண்டு போன மாந்தரின் எண்ணிக்கை பெருகிக் கொண்டே வருவது, யாரும் மறுக்க முடியாத ஓர் உண்மையாகும்! அப்புற்று நோய்களின் பெருக்கத்திற்கு மூலமான காரணங்களில் எவை முக்கியமானவை என்று மனிதர் அறிய வேண்டும்! உலக நாடுகள் ஐம்பது ஆண்டுகளாகச் செய்து வந்த 29,200 ஹிரோஷிமா வடிவு அணு ஆயுதச் சோதனைகளின் கதிர்வீச்சுப் பொழிவுகளால், பெரும்பான்மை மனிதர்களுக்குப் புற்று நோய் உண்டாகி யிருக்கலாம் என்று உறுதியாகக் கூறலாம்!

தகவல்:

The National Geographic Magazine, [June 1986]

Greenpeace Reports, ‘The History of Weapons Testing ‘ [April 1996]

*************************

jayabar@bmts.com

Series Navigation

author

சி. ஜெயபாரதன், கனடா

சி. ஜெயபாரதன், கனடா

Similar Posts