பக்தன்

This entry is part [part not set] of 34 in the series 20070517_Issue

பாஷா


கடவுள்கள்
என்னை தேர்ந்தெடுக்கவில்லை
எப்பொழுதும் நானே
அவர்களை தேர்வு செய்கிறேன்
திரும்ப திரும்ப
கிழித்து கிழித்து
அழித்து அழித்து
அந்த படைப்பாளனை
நானே படைக்கிறேன்!

என் தட்டு உணவில்
ஒரு பகுதி
தரப்பட்டிருக்கும்.
சில பகுதிகள்
பறிக்கப்பட்டிருக்கும்
தரப்படுபவைகளும்,பறிக்கப்படுபவைகளும்
பசியாறுதலின் நீட்சியில் முடியுமென்றால்
எதன் பொருட்டு
என் கடவுளிடம் நான்
என்னவென்று முறையிடுவது!

ஐந்து வயதில் வியாதியின்
வெட்கையில் வெதும்பி
செய்யாத பாவத்திற்கு
பரிகாரம் அறியாமல்
வாழும் தாகத்தின் கைப்பிடியிலிருந்து
கதற கதற இழுத்து செல்லப்பட்டிருக்ககிறேன்.
எண்பது வயதில் சுகமாக
பாவ மூட்டைகளின் மெத்தையில்
சுகமாய் இருந்து இருக்கிறேன்.
என் பாவ,புண்ணியங்கள்
எதன் பொருட்டு
தலைகீழாய் எழுதப்பட்டிருக்கும்.
கணிதம் அறியாத கடவுளிடம்
எதை நான் கேட்பது?

ஆயினும்
என் கடவுள்களை
நான் படைத்துகொண்டுதானிருப்பேன்
காப்பதற்காக அவர் அல்ல என்ற
உண்மை உணர்ந்ததனால்
கலகம் செய்வதற்காக!


Sikkandar.Nawabjan@ustri.com

Series Navigation