பகைத்துக் கொள்!

This entry is part [part not set] of 44 in the series 20090813_Issue

பா.சத்தியமோகன்


முதல்நாள் இரவில்

மறுநாளுக்காகத் திட்டமிட்டு

எழுதி வைத்த வேலைகளை முடிக்கும்முன்

உறக்கம் வந்தால்

கண்களோடு பகைத்துக் கொள்.

தவறி இடறும் நண்பனின் தோளிலோ

முரண்டு பிடிக்கும் தோழியின் பிடிவாதத்திலோ

கழிக்க வேண்டிய குணங்களை

அன்பாய்ச் சொல்லியும்

கேட்கவில்லையெனில்

சொற்களோடு பகைத்துக் கொள்.

இராணுவ உடையில் மிடுக்குடன் நடந்து

புதைக்கப்பட்ட வெடிகுண்டுகளைச் செயலிழக்கச் செய்ய

அந்த ஒரு கணம்

வெடிகுண்டின் திரியுடன்

டிஜிடல் பல்ஸ் எண்ணுகின்ற

வீரனின் துணிவு எண்ணாமல்

அடுத்த சேனலுக்குத் திருப்பும்போது

உன் எண்ணத்தைப் பகைத்துக் கொள்.

முதியோர் இல்லத்தில்தான் வாழ்வேன் என்பதாகவும்

புரிந்து கொண்டு சேர்ந்து வாழத் தயாரில்லை என்பதாகவும்

தனித்தே வாழ முற்படும்

சில முதியோர்கள் வாழ்வு எண்ணிப் பார்க்கையில்

விதியோடு பகைத்துக் கொள்.

மக்கள் என்னதான் சொன்னாலும்

தன் குடும்பமே பெரிதென

வாழ்வோர் தன்மைக்கு

ஓட்டுப் போடும் நேரத்தில் பகைத்துக் கொள்.

அன்புதான் பெரிதென்று சொல்லிக் கொண்டே

அணுகுண்டு தயாரிக்கும் இக்கட்டான தருணத்தில்

உலகப் போக்கினை எண்ணி

பிரபஞ்ச நெஞ்சுடன் பகைத்துக் கொள்.

சிரிப்புகளெல்லாம் தேய்ந்து

இன்பச் சிலிர்ப்புகளெல்லாம் தூர்ந்து

வெறுங்கூடாக வாழ நேர்ந்த

இயந்திர சமூகத்தில்

வயிற்றுப் பிழைப்புக்காக

பரபரக்கும் வேளை என்றாலும்

இயற்கை நேசமற்றவர்களை

உள்ளூரப் பகைத்துக் கொள்.

என்று தணியும் இந்த சுதந்திரதாகம் என்கிற காலங்களில்

இருபதாண்டு கடுங்காவல்

அன்னையோ நோயின் பிடியில்

தம்பியோ மூளை கலங்கிய நிலையில்

வந்ததோ தந்தையின் இறப்புச் செய்தி

என்றாலும்

செக்கு இழுத்த பிறகுதான் விடுதலை என்று

அந்நியர் ஆட்சியால்

கலங்கடிக்கப்பட்ட வ.உ. சிதம்பரம் பிள்ளையின்

சரித்திர நினைவுக்காற்று

சுதந்திர கொடி வீச்சிலும் புரிய மறுக்கிறதெனில்

உயிரோடு பகைத்துக் கொள்.

*******

pa_sathiyamohan@yahoo.co.in

Series Navigation