நோயுற்ற ஆசிரியர் (கதை — 02)

This entry is part [part not set] of 54 in the series 20040401_Issue

தமிழில் : நாகூர் ரூமி


ஒரு பள்ளியில் ஓதிக்கொண்டிருந்த மாணவர்கள் சிரியரின் கண்டிப்பினால் மிகவும் கஷ்டப்பட்டுக் கொண்டிருந்தார்கள். கடின உழைப்பும் அதன் விளைவான களைப்பும் அவர்களை விடுதலையை நோக்கிச் சிந்திக்க வைத்தது. தங்கள் ஆசிரியருக்கு தற்காலிக ஓய்வு கொடுப்பது எப்படி என்று யோசித்தனர்.

‘ஆசிரியருக்கு எந்த வியாதியும் வரவில்லையே…, வந்தாலாவது சில நாட்களுக்கு ஓய்வெடுப்பார். அப்படி எடுத்தால் அந்த சில நாட்களுக்காவது இந்தப்பள்ளி விடுமுறை பெறலாம். பாறையைப் போலல்லவா ஆசிரியர் அசையாது உள்ளார்! ‘ என்று தங்களுக்குள் பேசிக்கொண்டனர்.

‘ஹஜ்ரத், ஏன் ஒரு மாதிரியாக இருக்கிறீர்கள் ? உங்கள் நிறம்கூட வெளுத்துள்ளதே! உடம்பு சரியில்லையா ? காய்ச்சல் மாதிரி உள்ளதே! ‘ என்று கேட்க வேண்டும். தனக்கு உடம்பு சரியில்லை என்ற எண்ணம் ஆசிரியருக்கு லேசாகத் தோன்றும். நீங்கள் ஒவ்வொருவரும் அவரைத் தனித்தனியாகச் சந்தித்து இதேபோல் கேட்கவேண்டும். அப்போதுதான் நோய் பற்றிய அவருடைய கற்பனை வலுவடையும். கற்பனையானது எத்தனைக்கூட பித்தனாக்கிவிடும். நீங்கள் இப்படிச் செய்தால் விடுமுறை கிடைக்கலாம். உதவுங்கள் ‘ என்று ஒரு மாணவன் சக மாணவர்களிடம் தன் திட்டத்தை எடுத்துரைத்தான். ஆட்டைக் கழுதையாக்கும் அந்தத் திட்டத்திற்கு தாங்களும் தங்கள் பங்களிப்பைச் செய்வதாக அவர்களும் வாக்களித்தனர்.

மறுநாள் மாணவர்கள் தங்கள் திட்டப்படி பள்ளிக்கு வந்தனர். தங்கள் தலைவன் முதலில் உள்ளே போகட்டும் என்று காத்திருந்தனர். தலைதானே காலுக்கு இமாம் ?

தலைவன் உள்ளே சென்றான்.

‘அஸ்ஸலாமு அலைக்கும் ஹஜ்ரத். உங்கள் முகம் மஞ்சளாக உள்ளதே ? உடம்புக்கு ஏதாவது ? ‘ என்று இழுத்தான்.

‘என் உடம்புக்கு ஒன்றுமில்லை. உளறாமல் போய் உன்னிடத்தில் உட்கார் ‘ என்றார் ஆசிரியர்.

அடுத்தவன் வந்தான். அதேபோல் விசாரித்தான். சிரியருக்கு லேசான சந்தேகம் வந்தது. ஒவ்வொருவராக வந்து விசாரிக்க ஆரம்பித்ததும் அவரது சந்தேகம் பழுத்தது.

ஃபிர்அவ்ன்கூட இப்படிப்பட்ட கற்பனையால்தான் மன ரோக்கியத்தை இழந்தான். ஆண்களும் பெண்களும் குழந்தைகளுமாய் அவன் காலில் விழுந்து, ‘அரசனே! எங்களை ரட்சிப்பவனே! ‘ என்றெல்லாம் சொன்னதும் தன்னை உண்மையிலேயே ஆண்டவன் என்று எண்ணிக்கொண்டான். இப்படிப்பட்ட கற்பனையின் பிறப்பிடம் இருளாகும்.

அரையடிதான் அகலமுள்ளது என்றாலும் பாதை தரையில் இருந்தால் அதில் நீங்கள் நடந்துபோக தயங்கமாட்டார்கள். ஆனால் அதே பாதை உயரமான ஒரு சுவற்றின் மேலே ஆறடிக்கு அமைந்திருந்தாலும் விழுந்து விடுவோமோ என்ற பயத்தில் உங்கள் கால்கள் தடுமாறும். பயம் என்பது கற்பனையின் குழந்தை.

கற்பனையாலும் அதன் குழந்தையாலும் ஆசிரியர் கலக்கமுற்றார். வீட்டுக்கு வந்து மனைவியைத் திட்டினார்.

‘பள்ளியைவிட்டு இவ்வளவு சீக்கிரம் வந்துவிட்டார்களே ? ‘ என்றாள் மனைவி.

‘உனக்கென்ன கண் பொட்டையா ? என் நிறம் மாறியிருப்பதுகூடத் தெரியவில்லையா ? ஆமாம், அன்பும் அக்கறையும் இருந்தால்தானே தெரியும் ? ‘

‘உங்கள் உடம்புக்கு ஒன்றுமில்லை. நன்றாகத்தான் இருக்கிறீர்கள். வீணாக எதையும் கற்பனை செய்துகொள்ள வேண்டாம் ‘

‘என்னோடு வாதம் பண்ணுகிறாயா ? என் நிலை உனக்குத் தெரியவில்லயா ? நீ குருடாகவும் செவிடாகவும் ஆகிவிட்டாய், நான் என்ன செய்ய ? ‘

‘நான் வேண்டுமானால் கண்ணாடி கொண்டு வருகிறேன். நான் பொய்சொல்லவில்லை என்பது அதைப்பார்த்தால் புரியும் ‘ என்றாள்.

‘இங்கிருந்து தொலைந்து போ. நீயும் உன் கண்ணாடியும். படுக்கையைப்போடு. தலைவலிக்கிறது. கொஞ்சம் சாய வேண்டும் ‘ என்று உத்தரவிட்டார் சிரியர்.

தயக்கத்தோடு, திட்டு வாங்கிக்கொண்டே, அவர் சொன்னதைச் செய்தாள் மனைவி. ஆசிரியரைப் பின்தொடர்ந்து வந்த மாணவர்கள் அங்கேயே அமர்ந்து தங்கள் பாடங்களை உரத்த குரலில் படிக்களாயினர். அவர்களுடைய சப்தம் தனது தலைவலியை அதிகமாக்கி விட்டதாகக் கூறி அவர்களை வீட்டுக்குப் போகச்சொனார் ஆசிரியர். தங்கள் திட்டம் வெற்றியடைந்த மகிழ்ச்சியில் பறந்தனர் மாணவர்.

தங்கள் பிள்ளைகள் சொன்னதை நம்பாத தாய்மார்கள் தாங்களே ஆசிரியர் வீட்டுக்குச் சென்று விசாரித்தனர்.

‘மாம் நானே கவனிக்கவில்லை. சொல்லித் தருவதிலேயே என் முழு கவனமும் இருந்ததால் எனக்கே தெரியவில்லை. மாணவர்கள்தான் கவனித்துச் சொன்னார்கள் ‘ என்றார் சிரியர்.

ஒரு மனிதனின் மனசு முழுவதும் ஒரு விஷயத்தில் ஈடுபட்டிருக்கும்போது தன் உடம்பில் ஏற்படும் வலியை அவன் உணர்வதில்லை. அதனால்தான் யூசுஃப் நபியின் அழகைக் கண்டு மயங்கிய பெண்கள் தங்கள் விரல்களை வெட்டிக்கொண்டபோது வலியை உடனே உணரவில்லை.

உடம்பு என்பது ஆடையைப் போன்றது. டையை விட்டுவிட்டு அதை அணிந்ததிருப்பவனைத் தேடு. இதற்காகத்தான் இந்த கதையைச் சொன்னேன்.

? தொடரும்.

அருஞ்சொற்பொருள்

1. இமாம் — தலைவர், தொழுகையை முன்னின்று நடத்துபவர்.

2. ஃப்ர் அவ்ன் – மூஸா (மோஸஸ்) நபி காலத்து எகிப்திய அரசன்

***

ruminagore@yahoo.com

Series Navigation