நே வா.

This entry is part [part not set] of 44 in the series 20030209_Issue

எம்.கே.குமார்


என் பெயர்..நே வா.

இரண்டெழுத்துபெயர் என நினைத்துவிடாதீர்கள். இந்த இரண்டெழுத்துக்குள் இருபது எழுத்து அடங்கி இருக்கிறது. அவற்றுக்குப் பின்னே எனக்கு வேண்டிய எனக்கு பிடித்த சுயநலமில்லாத இருபது பெயர்கள் அடங்கியிருக்கின்றன.அவற்றை சுருக்கித்தான் நான் இந்த பெயரை வைத்துக்கொண்டிருக்கிறேன். எனக்கு அம்மா அப்பா இருக்கிறார்கள். ஆனால் அவர்களைக் கவனித்துக்கொள்ளவேண்டிய பொறுப்பு எனக்கு அவசியமில்லை. ஏனெனில் அவர்களுக்கு இன்னும் இரண்டு புதல்வர்கள் இருக்கிறார்கள்.அவர்கள் அப்பா அம்மாவை கவனித்துக்கொண்டால் போதும்.எனக்கு அது அவசியமில்லை.எனக்கு வேறு வேலை இருக்கிறது.அந்த வேலைக்காகத்தான் இப்போது போய்க்கொண்டு இருக்கிறேன்.

மூன்று மாதமாய் நான் போட்ட திட்டம் இது. முப்பதுதடவையாவது இந்த மூன்று மாதத்திற்குள் நான் இந்த அலுவல் சம்பந்தமாக உள்ளே சென்று வந்திருப்பேன். இப்போது எல்லாம் அத்துபடி. செல்லும் வழி திரும்பும் வழி எப்படி நடத்துவது எப்படி யாரை அணுகுவது என எல்லாம் தயார்.எனக்கு என்னுடைய நடவடிக்கைகளில் யாரையும் கூட்டு சேர்த்துக்கொள்வது பிடிக்காது.ஏனெனில் மனிதர்களில் எல்லோருக்கும் எப்போதாவது ஒருமுறை தன் சுயநலம் அவர்களை ஆட்டுவிக்கும்.அந்த நேரத்தில் கொஞ்சம் சோடை போனாலும் போதும் இந்த காரியத்திற்கு அவ்ர்கள் ஒத்துவரமாட்டார்கள்.அதிலும் எத்தனையோ மனிதர்களை நான் பார்த்திருக்கிறேன்.யாரும் இந்த உலகத்தில் யோக்கியவான்கள் இல்லை.

கணவனை சந்தோசமாக அலுவலகத்திற்கு அனுப்பிவைத்திவிட்டு இன்னொரு ஆடவனோடு சரசமாடும் பெண்களில் இருந்து நல்ல தோழியாய் பழகும் நண்பனின் மனைவியை ஏதாவதொரு சந்தர்ப்பத்திலாவது உடல் ரீதியாய் அணுகும் ஆண்கள் வரை எல்லோரையும் எனக்குத்தெரியும்.கடவுள் எனக்கு இந்தமாதிரி சம்பவங்களை மட்டும் எப்படியாவது என் கண்ணில் காட்டி விடுகிறார்.அவருக்கு இந்த மாதிரி தவறுகளை எனக்கு காட்டுவதில் என்னவொரு இன்பம் என்று எனக்குத்தெரியவில்லை.ஆனால் இதையெல்லாம் பார்த்துவிட்டு நீ இன்னும் நல்லவனாக இருக்கிறாயே அதுதான் எனது வெற்றி என்றூ அவர் தன்க்குள் பெருமிதப்பட்டுக்கொள்ளலாம்.அதற்காகவாவது அவர் இதை எனக்கு தொடர்ந்து காட்டிக்கொள்ளலாம்.

ஆனால் முதலில் இதையெல்லாம் வாழ்க்கையின் விளையாட்டுகளில் ஒன்று என நினைத்திருந்தேன். அப்போது ஒரிரு சந்தர்ப்பங்களில் நானும் அப்படியெல்லாம் நடக்க எத்தனித்திருக்கிறேன்..நல்ல வேளையாக நான் சொன்ன அந்தக்கடவுள் என்னோடு இருந்து என்னை மீட்டு உங்களில் ஒருசிலரிடமிருந்தும் அந்த பாவங்களில் இருந்தும் வெளிக்கொணர்ந்து என்னை கருவியாக்கிவிட்டார். இப்போது நான் கருவி. என்னை ஆட்டுவிப்பதும் ஊக்குவிப்பதும் அவர்தான்.என்ன அவர் சொல்கிறாரோ அதை நான் செய்வேன்.இந்தக்கருவியின் உபயோகம் தீரும்போது நானும் ஒரு கடவுளாவேன்.கருவிக்கு பலம் வருவது அதை மேலும் மேலும் செம்மைப்படுத்தும்போதே…அதைத்தான் கடவுள் இப்போது என்னை செய்துகொண்டிருக்கிறார்.

எனக்கு இன்னும் ஒரு வியாதி இருக்கிறது.அது எனது எந்தப்பிறவியில் இருந்து என்னோடு வருகிறது என எனக்குத்தெரியவில்லை.அதேபோல எந்தப்பிறவியில் நான் அதை செய்தேன் என்றும் எனக்குத்தெரியவில்லை.ஆனால் அது என்னால்தான் செய்யப்பட்டது அதை இந்தக்கருவிதான் செய்தது.அதில் எனக்கு எந்த சந்தேகமும் இல்லை. எப்போதாவது நான் இங்கு சில காரியங்களை மேற்கொள்ளும்போது அது அதை எனக்கு ஙாபகப்படுத்துகிறது. அச்சுஅசலாய் அதே போன்ற ஒரு நிகழ்வை நான் இப்போது மேற்கொள்வதாய் அது எனக்கு சொல்கிறது.

ஆனால் அதில் எவ்வளவு உண்மை இருக்கிறது என்பது எனக்குத்தெரியவில்லை.

ம்ம். இப்போது எனது பயணமும் அதனைப்போன்றதுதான். அவர் எனக்கு கட்டளையிட்டார் . நான் போய்க்கொண்டு இருக்கிறேன். இந்தப்பயணத்தில் எனக்கு வெற்றிதான் என்பதில் சந்தேகமுமில்லை வெற்றியடைந்தால் ஆச்சரியமுமில்லை…ஏனெனில் இது என் பயணமில்லை. அனேகமாக இந்த எனது முதல் வெற்றி நான் காணப்போகும் இந்த மறு உலகத்தின் அஸ்திவாரமாக அச்சாரமாகக்கூட இருக்கக்கூடும். என்னைத்தொடர்ந்து உங்களில் சிலர் பலர் என்னைப் பின்தொடர்ந்து இதை ஆராய்ந்து நல்ல கருவியாக ஆகக்கூடும்.அப்படிஆகும் பொழுதில் நான் நானாவேன்.கருவி கடவுள் ஆகும்.

இப்போது அதற்கு என்ன அவசியம் வந்தது என நீங்கள் கேட்கலாம். இல்லை . இது நமக்கான நேரம். இதை இப்போதுதான் என்னால் செய்ய இயலும். பின்னால் ஒரு நாள் ஆலமரத்தின் அடியில் அமர்ந்து என்னால் இதை செய்யமுடிந்ததே என நான் நான் ஆசுவாசமாக மூச்சு விடவேண்டும்.அதைவிட்டுவிட்டு ஐயோ என்னால் அப்போது செய்ய முடியவில்லையே என ஆதங்கமாக நான் அழக்கூடாது. அதற்கான அனைத்தும் இப்போது இந்தக்கருவியின் உள்ளே இருக்கிறது.கருவியின் பலமும் அதிகமாக இருக்கிறது.எல்லாவற்றையும் விட இப்போது அதற்கான தேவையும் நிறைய இருக்கிறது. தேவை இருக்கும்போதுதானே யோசிக்கும் திறன் வருகிறது.யோசிக்கும்போதுதானே செய்யமுடிவது நமக்குத்தெரிகிறது. செய்யமுடியும்போதுதானே தேவை தீரும் நிலை வருகிறது.

ஆக நான் போய்க்கொண்டு இருக்கிறேன்…………செய்துவிட்டு திரும்பும்போது இந்த உலகம் என்னை ஒருமாதிரியாய் பார்க்கக்கூடும் .அதையெல்லாம் பற்றி நான் கவலைப்படவில்லை. அது நாகரிகமுமில்லை. அவரவர் அவரவருக்காக கவலைப்பட்டாலே போதும்.இந்த உலகத்தில் பாவங்கள் எதுவும் நடக்காது.ஆனால் பாவம் மனிதர்கள்! அதைப்பற்றியெல்லாம் கவலைப்படுவதே இல்லை.மாறாக எல்லோரைப்பற்றியும் கவலைப்படுகிறார்கள். இல்லாவிட்டால் என் அண்ணனை என் உயிர் போன்றவனை என்னைப்போன்றே இந்த உலகத்தை மாற்ற வந்தவனை அவர்கள் இப்படி ஒதுக்கிவைத்திருக்க மாட்டார்கள். இது தவறு எனத் தெரிந்து அவர்கள் திருந்தும்போது நான் சொன்னவைகள் நிகழப்போவது நிச்சயம்.சத்தியமாய் இது நடக்கும்.

என்னுடைய திட்டம் ஒரு கோடி ரூபாய். மனிதனுக்கு அடிப்படை தேவைகளில் பணமும் ஒன்று . அதை வைத்துதான் அவர்கள் நம்மை மதிக்கிறார்கள்.இப்போது என் அண்ணனை மனிதர்கள் மதிக்காமல் போனதும் அவரை பரிகாசிப்பதும் அதை வைத்துத்தான்.எனவே முதலில் நான் மேற்கொள்ளப்போவதும் அவனுக்காகத்தான். நான் முதலில் மேற்கொள்ளும் இந்த பயணத்தின் முடிவும் அவனை நோக்கித்தான்.

முதலில் அவன்ப்ரச்சனைகளை நான் முடித்து வைக்கவேண்டும். அதுவும் இந்த பணம் சம்பந்தப்பட்ட பசி சம்பந்தப்பட்ட அனைத்து ப்ரச்சனைகளையும் நான் முடித்துவைக்கவேண்டும்.

நான் இப்படியெல்லாம் யோசித்துக்கொண்டிருப்பதை என் அருகில் இருந்த ஒருவர் எனக்கும் திருமணம் ஆகி இருக்கவேண்டும் என நினைத்துக்கொண்டிருக்கிறார். அவரைப்போல உங்களில் சிலரும் என்னை ஒரு முட்டாளாக பார்த்துக்கொண்டிருக்கலாம். நன்றாக பாருங்கள்.என்னை நீங்கள் இப்படி பார்ப்பது எனக்கு ஒரு விதத்தில் பெருமைதான்.

எனது இந்த கடமை முடியும்போது நான் முட்டாள் அல்ல என்பது உங்களுக்குத்தெரியும். எனது அண்ணனின் அன்பு மகள் தங்கம்மா விற்கு நான் நல்ல மாப்பிள்ளையாக பார்த்து மணம் முடிக்கவேண்டும். எனது அண்ணனுக்கு அவன் விரும்பியவாறே சின்னதாய் காணி நிலத்தில் நிலா வந்து உலா தந்து தென்றல் வீசும் ஒரு வீடு. ம்ம்……….வேறொன்றுமில்லை.

சரி………..உங்களிடம் பிறகு பேசுகிறேன்………காரியம் முடிந்த கையோடு நான் கடையம் போகவேண்டும்.

அங்குதான் என் அண்ணன் இருக்கிறான் அண்ணி செல்லம்மாவோடு!!

***

yemkaykumar@yahoo.com

Series Navigation

எம்.கே.குமார்

எம்.கே.குமார்