நூல் மதிப்புரை- ‘ரமணசரிதம் ‘- கவி மதுரபாரதி

This entry is part [part not set] of 32 in the series 20050623_Issue

கவியோகி வேதம்


-நூல் கிடைக்குமிடம்-கிழக்கு பதிப்பகம்,16,கற்பகாம்பாள்

நகர்,மயிலாப்பூர்,சென்னை-600004-விலை-ரூ80/-பக்கம்-200

…மனிதனின் வாழ்க்கைப் பயணத்தின் முக்கிய நோக்கமே ‘இறைவனைக்கண்டறிதல்,அவனுடன் ஒன்று சேர்தல் ‘.அப்படியானால்தான் பயணம் ஒரு முடிவுக்கு வரும். இதைச்சொன்ன மகானுள் முக்கியமானவர்ஸ்ரீ ரமண மகரிஷி. அதையும் ஒரு வித்யாசமாய்ச் சொன்னார். ‘முதலில் நீ யார் என்பதை உன் உள்ளே உள்ளே போய்க் கண்டறி;உணர்ந்துகொள். ‘நீ ஒரு பெயர் அல்ல,

அது பிறர் உன்னை அடையாளம் கண்டறிய ஒரு குறியீடே. நீ உடலும் அல்ல,உன் ஆத்மா பயணம் மேற்கொள்ள, இறைவனைக்கண்டறிய,அணிந்துகொண்ட ஒரு சாதனமே! அதனால் உள்முகத் த்யானம் செய்து பயிற்சி செய்து படிப்படியாய் நீ யார் யார் ? என்று கண்டறிவாய்.

அனைவராலும் இது எளிதில் கடைப்பிடிக்கக் கூடிய சாதனமே.இந்தப் பிறப்பில் இதன் பலன் மிகச் சிலர்க்குக் கிட்டாமல் போனாலும் அடுத்ததிலாவது இந்த ஆய்வு தொடரத்தான் போகிறது. எனவே அப்போதைக்கிப்போதே இம்முயற்சி ஒவ்வொருவராலும் மேற்கொள்ளப் படத்தான் வேண்டும். ‘ எனத் தெள்ளத் தெளிவாக உபதேசித்தவர் ஸ்ரீரமண மகரிஷி.சொன்னது போலவே அதைக் கடும் தவத்தின் மூலம் செய்து, பிறவிப்பயனை அனுபவித்து, ‘தான் யார் ‘ என்று உணர்ந்துகொண்டவர் அவர்.அத்தகைய,- ‘திருவண்ணாமலையையே ‘ தன் குடிலாகக் கொண்ட திவ்விய மகானின் சரிதத்தை எளிய பாமரனும் படித்து, உணர்ந்து, அதிசயித்துப்போகும் வண்ணம் மிக அழகிய தமிழில் ஆசிரியர் கொணர்ந்துள்ளார்.

…முதலில் நாத்திகராகத் தன் வாழ்க்கையைத் தொடங்கிப், பின்பு ஸ்ரீரமணரில் மயங்கித், தற்போது அவரையே தன் குருவாகக் கொண்டு தீவிரத் த்யானமும்,சொற்பொழிவு களும் செய்து வருவதால் இது ஒரு சாதகரின் அனுபவ நூலாகக் கொள்ளலாம்.அந்த அளவுக்கு நூலில் ஸ்ரீரமணரின் வாழ்க்கைச்சரிதம் ருசிகரமாக, பலவகை ஆன்மிகப் படிகளாகப் பிரிக்கப்பட்டு இறுதியில் அவரால் நன்மையும், ஆன்மிகப் பயணத்தில் வெற்றியும் புனிதமாய் எளிதில் அடைந்த பலவகை மக்களது அகச்சான்றும் இணைத்துக் கூறப்பட்டுள்ளது.

அதிசய அனுபவங்கள் ஏராளமாக ஆங்காங்கே விவரிக்கப் பட்டுள்ளன.

… ‘.திருச்சுழியில் அருணோதயம் ‘ எனக் கவர்ச்சியாக ஆரம்பிக்கப்பட்ட இந்நூல் மகானது பிறந்த ஊர், வளர்ப்பு, சூழ்நிலையை விட்டு அவர் எப்படி முன் ஜன்மப் பாக்கியத்தால் திருவண்ணா மலை இறைவனால் ஆட்கொள்ளப்பட்டார், பிறகு படிப்படியாக மிகப் பெரிய தவச் சீலராகமாறினார் என்று தெள்ளிய ஓடை போன்ற நடையுடன் நூலைக் கீழே வைக்க முடியாதபடி விறுவிறுப்பாகச் செல்கிறது.மகானின் சரிதத்தின் ஊடே வந்துபோகின்ற மற்ற மகான்களின் கதையோ எப்போதும் நெஞ்சில் நிற்கும்படிச்செய்துவிடுகிறது.அவரை உலகம் முழுதுமே அறியும்படி ஆங்கிலத்தில் எழுதிப் பிரபலப்படுத்திய அயல்நாட்டு அறிஞர் பால்ப்ரண்டனின் ஆன்மிகத்தேடலும்,மகானையே குருவாக ஏற்கும்படிச் செய்துவிட்ட அற்புதக்கேள்வி-பதில்களும் கண்-தேஜசும், ஸ்ரீகணபதிமுனி,வள்ளிமலை வொமிகள், போன்ற பெரியவர்கள் மட்டும் அல்லாது சாதாரண நிலையில் இருந்த எச்சம்மா பாட்டி, மகானின் தாயார் போன்றவர்கள்கூட ஸ்ரீரமணரால் எவ்வாறு ஆட்கொள்ளப்பட்டனர் என்பதையும் ஆசிரியர் சுலபமாக வர்ணித்துக்கொண்டுபோகிறார்.

அம்மட்டோ!அவரது ஆசிரமத்தில் அவரிடமிருந்தே உணவைக்கையால் உண்டு வளர்ந்த குரங்கு,லட்சுமி என்ற பசு,புறா, செடிகொடிகள் கூட மகானின் கருணைப்பார்வைபட்டு எப்படி உய்ந்தன என்று சுவாரசியமாகச் சொல்கிறார்.சுருக்கமாகச் சொல்லவேண்டுமெனில் ரமணரை நேசிக்கும் அனைவரிடமும் இது கட்டாயம் பொக்கிஷமாய் வைத்துப் பாதுகாக்கப் படவேண்டிய நூல்.

கவியோகி வேதம்

Series Navigation

கவியோகி வேதம்

கவியோகி வேதம்