நூல் அறிமுகம்: புற்றுநோயை வெல்லுங்கள். ஆசிரியர்: மா.செ.மதிவாணன்

This entry is part [part not set] of 61 in the series 20040318_Issue

புதியமாதவி, மும்பை.


மருத்துவ விழிப்புணர்ச்சி நூலை மருத்துவத்துறையைச் சாராத ஒருவர் எழுதியிருப்பதே இந்நூலின் மிகப்பெரிய சிறப்பு.

புற்றுநோயைப் பற்றிய அனைத்து விவரங்களையும் ஒரு மருத்துவர் பார்வையில் வைக்கப்பட்டிருந்தால் அந்நூல் இந்தளவுக்கு எளிமையாக, எழுதப் படிக்கத் தெரிந்த சாதாரணமானவனும் புரிந்து கொள்ளும் வகையில் தரப்பட்டிருக்குமா என்பது மில்லியன் டாலர் கேள்வி.

சில மருத்துவக் கட்டுரைகளைப் படித்தவுடனேயே அதில் சொல்லப்பட்டிருக்கும் அனைத்து நோய்க்கான அறிகுறிகளும் நமக்கும் இருப்பதாக எண்ணம் ஏற்படும். அவ்வளவு பயமுறுத்தல் இருக்கும். அப்படி எல்லாம் இல்லாமல் இருப்பதும் எது தேவையோ அது மட்டுமே சொல்லப் பட்டிருப்பதும் மட்டுமே இந்நூலின் மிகச் சிறந்தச் சிறப்பம்சம்.

அடையாறு புற்றுநோய் ஆராய்ச்சி நிறுவனத்தின் உதவியாலும் ஒத்துழைப்பாலும் தகவல்களைத் திரட்டி மருத்துவப் பாதையிலிருந்து சற்றும் விலகாமல் தகவல்களைத் தொகுத்திருக்கின்றார்.

நிறைய ஆங்கிலப் புத்தகங்களைப் படித்தவர்களுக்கும் இதில் சிலத் தகவல்கள் புதிதாகக் கிடைக்கும்.

சிலச் செய்திகளைக் கொடுக்கும்போது மிகவும் கவனமாக இதற்கு இது காரணமல்ல ஆனால் புள்ளிவிவரங்கள் இந்த தகவலைத் தருகின்றன என்று குறிப்பிடவும் தவறுவதில்லை.

‘சுன்னத் செய்யப்பட்ட (circumcision) ஆண்களைக் கணவராகப் பெற்ற பெண்களுக்கு கருப்பைவாய் புற்றுநோய் வருவதற்கான வாய்ப்புக் குறைவு என்பதும் கண்டறியப்பட்டிருக்கிறது. இதனால்தான் இஸ்லாமிய,யூத இனப் பெண்களுக்கு இவ்வகையான புற்றுநோய் காணப்படுவதில்லை.: ‘

‘மார்பக புற்று நோய்க்கு மார்பகத்தை அகற்றியபின், புதிதாக மார்பகத்தை வடிவமைக்கும் (breast reconstrcutive surgery) அறுவைச் சிகிச்சையான tram flap என்று சொல்லக் கூடிய அறுவைச் சிகிக்கைச்கு வயிற்றின் அடிப்பாகத்திலிருந்து தோல், கொழுப்பு, திசு மற்றும் தசை எடுக்கப்பட்டு மார்பகத்தை வடிவமைக்கின்றனர். ஆனால் இவ்வித அறுவைச் சிகிச்சையை மேற்கொள்ளும்போது வயிற்றுப் பகுதியில் எந்தவித அறுவைச் சிகிச்சையும் செய்திருக்க கூடாது ‘

எல்லோருமே அரசு மருத்துவமனைகளின் தவறுகளையும் இருண்ட பக்கங்களையுமே வெளிச்சம் போட்டுக் காட்டி விளம்பரம் தேடிக்கொள்ளும் காலத்தில் அங்கு நம் காலத்திலேயே நடந்த மிகப்பெரிய சேவையைப் பற்றி எழுதியிருக்கின்றார். அதுதான் இந்தியாவிலேயே முதல் முதலில் டாக்டர் மயில்வாகனன் அவர்கள் செய்த எலும்பு மூட்டு உறுப்பு மாற்று அறுவைச் சிகிச்சையைப் பற்றிய முழுக்குறிப்பு, அதுவும் அரசு மருத்துவ மனையில் நடந்த வெற்றிகரமான அறுவைச் சிகிச்சை.. மக்களுக்கு அரசு மருத்துவனையின் மீது நம்பிக்கையை வளர்க்கின்றது.

புற்றுநோய் வெட்கித் தலைகுனிகிறது.. என்ற தலைப்பில் தினத்தந்தி வெளியிட்ட ஜேன் டாம்லின்ஸனின் உண்மைக் கதையைக் கொடுத்து நம்பிக்கையை, நோயை எதிர்க்கொள்ள வேண்டிய துணிச்சலைப் படம் பிடித்துக் காட்டி இருக்கின்றார்.

ஒவ்வொரு புற்றுநோயைப் பற்றிய விளக்கம் தரும்போது இப்படி ஓர் உண்மைக்கதை இணைக்கப்ட்டிருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும்.

‘என்ன ? புற்றுநோயா ? சரி கொடுத்து வைத்தது அவ்வளவுதான் ‘ என்ற விசாரிப்பிலேயே நோயாளியையும் நோயாளியின் உறவுகளையும் தெரிந்தும் தெரியாமலும் காயப்படுத்துவதை விட்டுவிட்டு இனிமேல் இந்த மாதிரிப் பயனுள்ள புத்தகங்களைப் பரிசாக வாங்கிச் சென்று கொடுக்கலாம். கொடுக்க வேண்டும்.

மதிவாணன் அவர்களின் தொகுப்பு மிகுந்த நம்பிக்கையைத் தருகின்றது. இன்னும் நிறைய இது போன்ற மருத்துவ விழிப்புணர்ச்சி தகவல்கள் தொகுக்கப்படவேண்டும். எய்ட்ஸ் பற்றிய விழிப்புணர்வு, மனநிலைக் குன்றிய குழந்தைகள்.. அவர்களின் வளர்ச்சிக்கான நீண்ட நெடியப் பயணத்திற்கான பாதை… இப்படி நிறைய நிறைய ..இருக்கின்றது எடுக்கவும் எடுத்து தொகுக்கவும்.

வெளியீடு: ஓவியா பதிப்பகம்,

44 அம்மையப்பன் தெரு,

இராயப்பேட்டை,

சென்னை 600 014.

விலை: ரூபாய்.70/ 176 பக்

***

puthiyamaadhavi@hotmail.com

Series Navigation

புதியமாதவி, மும்பை

புதியமாதவி, மும்பை