நூலாய்வு : கனவுச் சந்தை (உலகச் சிறுகதைகள் – எஸ்.ஷங்கரநாராயணன் மொழிபெயர்ப்பு)

This entry is part [part not set] of 52 in the series 20081120_Issue

வே.சபாநாயகம்


‘மொழிபெயர்ப்பு என்பது ஒரு அருங்கலை. அதைக் குறைவாக எண்ணாதே! நிறைவாக எண்ணி இப்பணியில் இறங்கு. அவையே உனக்குப் பெரும்புகழ் தேடித் தரும். வெவ்வேறு
ஆசிரியர்களின் கருத்தைப் புரிந்து கொண்டு, நடையைப் புரிந்து கொண்டு, அவற்றிற்கேற்பத்
தமிழ்ப்படுத்துவதில் உள்ள சிரமத்தை நான் அறிவேன். இக்காரியத்தில் நீ வெற்றி பெற்று
விட்டாயானால் நீ சொந்தமாக எழுதும்போது அவ்வாசிரியர்கள் அனைவரும் பகைப்புலனில்
நின்று கொண்டு உனக்குக் கை கொடுத்து உதவுவார்கள். உனது எழுத்தும் மெருகு ஏறிச் சோபையுறும்’ என்று ‘கல்கி’ அவர்கள் 1957ல் ரா.வீழிநாதனின் ‘குலப்பெருமை’ என்ற மொழிபெயர்ப்பு நாவலுக்கு எழுதிய முன்னுரையில் அறிவுறுத்துகிறார்.

இதை இந்நூலின் மொழிபெயர்ப்பாளர் திரு.எஸ்.ஷங்கரநாராயணன் படித்திருக்கிறாரோ என்னவோ ஆனால் அவருக்கும் கல்கி இதைச் சொன்னதாகக் கொள்ளலாம். நல்ல சிறுகதை யாசிரியரும் ரசனைமிக்க வாசகருமான அவர் இதை உணர்ந்தவராக, நூலின் ஆரம்பத்தில் இப்படி எழுதுகிறார்: ‘கொஞ்சம் மொழிபெயர்ப்பு பக்கம் கவனந்தட்டியிருக்கிறது. தமிழ் வாசக ருக்குத் தரப்பட்டதெல்லாம், அதிகமாய் war, beer என்று நமக்கு அந்நியமான விஷயங்கள்தானே என்றிருந்தது. விட்டால் முழு நவீனக்கதைகள். விஞ்ஞானக் கதையோ, மாந்திரீக நிகழ்வியல் களோ. பெரும் சுவாரஸ்யமாய் அதில் அதிகம் வாசிப்புருசி எனக்குச் சிக்கவில்லை. கதைகளை யும், மொழிபெயர்ப்பையும் சேர்த்தே சொல்கிறேன். அசலூர்த்தனம் இல்லாமல் வெளிநாட்டுப்
பாத்திரங்களை அறிமுகம் செய்ய முடியுமா?’ – இந்த ஆதங்கமே அவரை இந்த சிக்கலான
பணியில் ஈடுபடுத்தி இருக்கிறது என்பதை உணர முடிகிறது. அதில் அவர் வெற்றியும் பெற்றிருக் கிறார் என்பதை அவரது இந்த மொழிபெயர்ப்புக் கதைகள் காட்டுகின்றன.

அசலூர்த்தனம் என்பதை அவர் இன்றைய இலக்கிய இதழ்களில் வருகிற வெளிநாட்டுக் கதைகளின் மொழிபெயர்ப்பினை எண்ணிச் சொல்வதாகக் கொள்ளலாம். மொழி பெயர்ப்பின் பொற்காலமாக இருந்த 1940களில் – க.நா.சுவால் யந்திரம்போல் மொழிபெயர்த்துத் தள்ளப் பட்ட மேலைநாட்டு நாவல்களில் அவற்றின் ஆசிரியர்களையும் அவர்களது கதைகளின் சாராம்சத் தையும் மட்டுமே அறிய முடிந்ததே தவிர அவற்றின் ஜீவனை உணர முடியவில்லை. மூலஆசிரியர் களின் நடைநயத்தை அறிய முடியவில்லை. ஆனால் அதே காலகட்டத்தில் இந்திய மொழிகளான வங்காளம், இந்தி, மராத்தி, தெலுங்கு, கன்னடம், மலையாள மொழிபெயர்ப்புகளில் ஆர்.சண்முக சுந்தரமும், த.நா.குமாரசாமி சகோதரர்களும், அ.கி.கோபாலன் சகோதரர்களும், ரா.வீழிநாதனும், சௌரியும், கா.ஸ்ரீ.ஸ்ரீயும் அந்தந்த மொழிகளின் ஜீவனையும் நடைநயத்தையும் உணரவைத்தார் கள். ஆனால் மேலைநாட்டு மொழிகளின் பெயர்ப்புகளில் ‘அசலூர்த்தனம்’ மிகுந்து, வாசிப்பு சுகத்தைக் காணமுடியாதிருந்தது. சிறந்த மொழிபெயர்ப்பாளரான தொ.மு.சி.ரகுநாதன் போன்ற வர்களால் கூட ருஷ்ய மொழிபெயர்ப்புகளில் அந்நாட்டுக் கட்டுப்பெட்டித்தன மொழிபெயர்ப்பு
விதிகளின்படி தம்மிச்சையாய் செயல்பட முடியாமல் ருஷ்யமொழியின் ஜீவனை உணர்த்தமுடியாது போனது பெரிய சோகம் எனலாம். உதாரணத்துக்கு ரகுநாதனின் ‘தாய்’ நாவலில், ‘பழுப்புநிறக் கண்கள்’ என்று மொழிபெயர்த்திருக்க வேண்டியதை ‘கபிலநிறக்கண்கள்’ என்று மொழிபெயர்த்த தால் ஒரு அந்நியத்தனம் உண்டாகி நம்மால் அதில் ஒட்ட முடியாது போனது. நல்ல மொழிபெயர்ப்பு இதனிலிருந்து விலகி அந்தந்த மொழியின் மரபுச்சொற்றொடர்கள், சொலவடைகள், பழமொழிகள், வட்டார வழக்குகளுக்கு ஏற்ப – பொருத்தமாக நமது மொழியின் வழக்காறுகளை யொட்டித் தேர்ந்தெடுத்து அமைத்தால் மட்டுமே மொழிபெயர்ப்பில் ஜீவனைக் கொணர முடியும். இல்லையெனில் க.நா.சு போல எலும்புக்கூடுக¨ளையே பிரசவிக்கக்க முடியும். இதையுணர்ந்து திரு.ஷங்கரநாராயணன் மிகுந்த ஈடுபாட்டுடன் முயன்று தன் மொழிபெயர்ப்புகளில் முடிந்த அளவு மூல ஆசிரியர்களின் படைப்பின் ஜீவனை உணர்த்தி இருக்கிறார்.

நடையிலும் வித்தியாசத்தைப் பார்க்க முடிகிறது. கி.ராவின் நடை போல பேச்சுநடையே அதிகமும் காணப்படுகிறது. அதற்கேற்றபடி தக்க தமிழ் மரபுச் சொற்களையும், பழமொழிகளை யும், கொச்சைமொழிப் பிரயோகங்களையும் – சென்னை குப்பத்து பாஷை முதல் அக்கிரகாரத் துப் பிராமணபாஷை ஈராக எல்லா வகையிலும் (சில இடங்களில் கொஞ்சம் அதிகமோ என்று எண்ண வைத்தாலும்) – கையாண்டிருப்பதால் மொழிபெயர்ப்பு என்ற உணர்வை அதிகம் எழுப்பாமல் வாசிப்பு லகுவாகவும் சுகமாகவும் அமைந்திருக்கிறது. ஒவ்வொரு கதையின் முடிவிலும்
மொழிபெயர்ப்பாளர் அக்கதை தன்னைப் பாதித்த விதத்தையும் அது பற்றிய தனது ரசனையையும் குறிப்பிட்டிருப்பதும் வித்தியாசமானது. ஆயாசம் தரும் நீண்ட வாக்கியங்களாக இல்லாமல் குழந்தைகளுக்கு எழுதுவது போல் சின்னச் சின்ன வாக்கியங்களால் அமைத்திருப்பதும் மொழிபெயர்ப்பின் இறுக்கத்தை நெகிழ்த்துகிறது.

இனி கதைகளைப் பார்க்கலாம். மொத்தம் பத்தொன்பது கதைகள் – பத்து மேலை
நாட்டு மொழிகளின் பிரபல – அதிகமும் நோபல் பரிசினைப் பெற்ற – எழுத்தாளர்கள் எழுதியவை. ஷங்கரநாராயணன் தான் மிகவும் ரசித்த கதைகளை அதே ரசனையுடன் வாசகர்க்குத் தரும் உத்தேசத்துடன் மொழிபெயர்த்தவை.

முதல் கதையான ‘பின்வாசல்’ மேற்கிந்தியத் தீவைச் சேர்ந்த ‘சாமுவல் செல்வான்’ என்பவர் எழுதியது. அனாவசிய வளத்தல்வருணனை இல்லாத தொடக்கம். நமக்கும் ஓரளவு தெரிந்த கள்ளத்தோணி விவகாரம். பிழைப்புக்காக நாடுவிட்டு நாடு தேடிபோகிறவர்களின் பிரச்சினைகள் தான் கதையின் கரு. போலிச் சான்றுகள், இடைத்தரகர்களின் மோசடி, தரகர்களுக்கே தண்ணி காட்டும் அசகாய சூரர்கள் என்று கதை வெகு சுவாரஸ்யமாய் ஓடுகிறது. உரையாடல்கள்
அசலாகவும் ரசமாகவும் இருக்கின்றன. ‘செல்வானின் உற்சாகமான நடை என்னை முதலில் கவர்ந்தது. அப்புறம் எழுத்தின் சூட்சுமம். மொழிபெயர்க்க என்னைத் தூண்டிய முதல் தகுதி அது’ என்று குறிப்பிடுகிறார் ஷங்கரநாராயணன்.

அடுத்த இரண்டு கதைகளும் ருஷ்யாவின் ‘ஆன்டன் செகாவ்’ எழுதியவை. பொதுவாக செகாவ் கதைகளில் அடிநாதமாக சமூக அவலங்களை இடிக்கும், மென்னகை எழுப்பும் எள்ளல் (அவரது ‘பச்சோந்தி’ கதை போல) தென்படும். இக்கதைகளும் அவ்வாறே எள்ளல் தொனியுடன் ரசிக்க வைக்கின்றன. ‘The orator’ என்னும் கதையின் தலைப்பை ஷங்கரநாராயணன் ‘சொல்லின் செல்வன்’ என்று மாற்றியிருப்பது கதையைப் படித்த பிறகு மிகப் பொருத்தமாகத் தெரியும்.
இறந்துபோன ஒரு பேராசிரியரின் இறுதிச் சடங்கில் அவரைப் பாராட்டி நாலு வார்த்தை பேச, கல்யாணங்களிலும் பெருவிழா மேடைகளிலும், இழவு நிகழ்ச்சிகளிலும் முன்தயாரிப்பே இல்லாமல் பேசவல்ல ஒரு வாடகைப் பேச்சாளனை ஏற்பாடு செய்கிறார்கள். அவன் ஒரு சவடால் பேர்வழி. நமது அரசியல் பேச்சாளனின் சரியான நகல். இறந்தவரைப் பற்றிய அவனது அபிப்பிராயம் அவ்வளவு ரசனமாதில்லை என்றாலும் இரங்கல்கூட்டத்தில் அவரை வானளாவப் புகழ்கிறான். அனைவரையும் அவனது பேச்சு திருப்திப்படுத்துகிறது. சிலர் அழக்கூடச் செய்கிறார்கள். ஆனால் அவனது உரை பலவிதங்களில் விசித்திரமாக இருந்தது அவர்களுக்கு. முதலாவது இறந்து
போனவர் பெயரை விட்டுவிட்டு உயிரோடு அங்கே பார்வையாளராக நிற்கிற ஒருவரின் பெயரைச் சொல்லிக் கொண்டிருந்தான். அடுத்து அவர் மணமாகி குடும்பம் நடத்தியவரல்லவா, அவரைப்
பிரம்மச்சாரி என்று சொல்வது எப்படி? – என்று அவர்கள் குழம்பினார்கள். இன்னும் தாடியுடன் இருந்தவரை சவரம் எடுத்த முகம் என்றெல்லாம் பேசிக் கொண்டிருந்தான். எல்லோரும் முடியைப் பிய்த்துக் கொண்டார்கள். பேச்சில் மட்டுமல்ல, பேச்சாளனிடமும் ஏதோ கோளாறு என்று உணர்ந்தார்கள். ‘நீ சொல்கிற ஆள் அதோ உயிரோடு நிற்கிறார் பார்’ என்று ஒருவன் அவனிடம் காட்டினான். அவன் திகிலடித்துப் போய் கல்லறைப் பக்கம் திரும்பிக் கொண்டான். பாதிக்கப்பட்டவர் அவனிடம் முனகினார்’ என்று கதை முடிகிறது. அசலான நம்மூர்க் கதைதான்! இப்படி உணரச் செய்வதுதான் செகாவின் தனித்தன்மை. எள்ளலும் கேலியும் கும்மாளியிடுகின் றன. இப்போது தமிழ்த் தலைப்பும் சிரிப்பூட்டுகிறதல்லவா? ‘தலைப்புக்கான என் தமிழ் எப்படி?’ என்று கேட்கிறார் ஷங்கரநாராயணன். ‘சபாஷ்’ என்று தட்டிக் கொடுக்கத் தோன்றுகிறதுதானே!

அடுத்த கதையும் நம் கதைதான். ‘பரிசுச் சீட்டு’ – ‘The lottery ticket’. இதுவும் ஆண்டன் செகாவ் எழுதியதுதான். சற்றுத் தனித்தன்மை உடையதாக அங்கதச் சுவையுடன் உள்ளது.
நம்மூரில் லாட்டரி டிக்கட் வாங்குகிறவனின் கனவும் அதன் வீழ்ச்சியும்தான் கதை. ருஷ்யநாட்டில் வெகுகாலத்துக்கு முன்பே காணக்கிடைத்த நடுத்தர மக்களின் ஆசைகளின் அவலமான சிதை
வினைப் எள்ளலோடு படம் பிடித்துக் காட்டுகிறார். ஆனால் அதன் உள்ளார்ந்த வலி நெகிழ்ச்சியூட்டுகிறது. ஒரு நடுத்தரக் குடும்பத்தில் மனைவி வாங்கிய பரிசுச்சீட்டின் முடிவு வெளியான பத்திரிகையைப் பார்த்த கணவன், சீ£ட்டை வாங்கி எண்ணைச் சரி பார்க்கிறான். பக்கம், வரிசை, தொடர் எண்ணின் ஆரம்பம் எல்லாம் சரியாக இருப்பதைக் கண்டதுமே, முழுதும் பார்க்காமல் கற்பனையும் கனவும் இருவருக்கும் விரிகிறது. கோபதாபமான விவாதங்கள், உரிமை கோரல் என நேரம் ஓடுகிறது. முடியில் கடைசி இலக்கத்தைப் பார்க்கையில் அது மட்டும் மாறுதலாக இருந்து கனவுக்கோட்டையும் கற்பனைசுகமும் சரிகின்றன.

அடுத்தது ஜெர்மனி நாட்டவரான – நோபல்பரிசு பெற்ற எழுத்தாளர் – ‘தாமஸ்மன்’ எழுதிய ‘கல்லறைப்பாதை’. ‘ஸ்தலவிவரணை’ (topography) அழகாய் அமைந்த கதை. கல்லறைத்
தோட்டத்தைச் சுற்றிலும் உள்ள இயற்கைக் காட்சிகளை வருணித்தபடி கதை நகர்கிறது. கருப்புஆடை அணிந்து, உறவினரின் கல்லறையை நோக்கிப் போய்க்கொண்டிருக்கும் ஒருவனின் பார்வையில் அந்தப்பாதையில் அலட்சியமாய்வரும் சைக்கிள் இளைஞன் தென்படுகிறான். அவனை
நிறுத்தி கல்ல¨றைப்பாதை வழியே சைக்கிளில் போகக் கூடாது எனத் தடுக்கிறான். விவாதம் முற்றி இளைஞன் அவனத் தள்ளிவிட்டுப் பறந்து விடுகிறான். இவன் ஆவேசம் கொண்டவனாய் சாமியாடுகிறான். கூட்டம் கூடி விடுகிறது. சிரிப்பும் கேலியுமாய் அவனைச் சுற்றி வருகிறது கூட்டம். இவன் ஆடி அடங்கிப் போகிறான். தத்துவார்த்தமும் குறியீடும் நிறைந்து, படைப்பாளி
யின் மதப்பிடிப்பினைக் காட்டுகிறது கதை.

‘சமுத்திர ஆண்டவர்’ என்பது அடுத்த கதை. ‘தாசியும் தபசி’யும் என்ற புகழ்பெற்ற
நாவலின் ஆசிரியரான ‘அனதோல் பிரான்ஸ்’ என்ற பிரஞ்சுக்காரர் எழுதிய ‘Ocean Christ’
என்னும் கதை. ஆண்டவர் எளிமையையே ஏற்கிறார் என்பதைச் சொல்லும் கதை. புயலின்
சீற்றத்திற்கும் கடலின் ஆவேசத்துக்கும் ஆளான கடற்கரையோரக் கிராமம் ஒன்றில் கரை
யொதுங்கும் இயேசுபிரானின் ஆளுயர மரச்சிற்பம் ஒன்றைக் கண்ட சிறுவர்கள் அதனை புனித ஆலயத்தின் சாமியாரிடம் சேர்ப்பிக்கிறார்கள். அவர் அழகிய அச்சிற்பத்துக்கு ஏற்றதாக அழகான சிலுவை ஒன்றை உயர்ந்த நயமான ஓக் மரத்தில் செய்யச் சொல்லி அதில் ஆண்டவரைப்
பொருத்தி வாயிலின் உயரே தொங்கவிடுகிறார். அப்போது ஆண்டவரின் கண்கள் கருணையைப் பொழிவதையும் அதில் கண்ணீர்வழிவதையும் பார்த்து பரவசப்படுகிறார். மறுநாள் வந்து பார்த்தால் ஆண்டவர், சிலுவையை விட்டிறங்கிப் பீடத்தில் படுத்திருக்கிறார். யாருக்கும் காரணம் புரிய
வில்லை. உடனே முன்னிலும் அழகான சிலுவை ஒன்று பொன்னிறத் தகடுகள் வேய்ந்ததாய் செய்யப்பட்டு அதில் ஆண்டவரைப் பொருத்தித் தொங்க விடுகிறார்கள். ஆனால் அதையும் இயேசு நிராகரித்து மறுநாளும் பீடத்துக்குத் திரும்பிவிடுகிறார். இந்த அதிசயம் சுற்றுப்பட்டில் பரவி புதிய விலை உயர்ந்த சிலுவை ஒன்றை உருவாக்க பொன்னும் மணியும் குவிகிறது. கைதேர்ந்த பொற்கொல்லனைக் கொண்டு, அழகிய பொன்னும் மணியும் பதித்த தங்கச் சிலுவை ஒன்று செய்யப்பட்டு அதில் ஆண்டவரைப் பொருத்தி நிறுத்துகிறார்கள். ஆண்டவர் அதையும் ஏற்காமல் பீடத்துக்கே திரும்பி விடுகிறார். அதற்குமேல் ஆண்டவரைக் காயப்படுத்த விரும்பாமல் அப்படியே விட்டுவிடுகிறார்கள். ஒருநாள் ஊரின் அப்பிராணியான ஒருவன் வந்து ஆண்டவரின் உண்மையான சிலுவை கரையொதுங்கி இருப்பதாகச் சொல்ல சாமியார் போய்ப் பார்க்கிறார். அது உடைந்த கப்பலின் சட்டங்களாலான எளிய மரச்சிலுவை. அதை ஆலயத்துக்கு எடுத்துப் போய் அதில் ஆண்டவரைப்பொருத்தித் தொங்க விடுகிறார். ஆண்டவர் இந்தச் சிலுவையிலிருந்து பிறகு இறங்கவே இல்லை என்று முடிகிறது கதை. வசீகரமான உக்தியுடன் கதையை ரசமாகச் சொல்லியுள்ளார் ஆசிரியர். மொழிபெயர்ப்பாளர் இடையில் தென்படாத சுகமான வாசிப்பு!

அடுத்தது ஒரு போலந்துக்கதை. ‘ஹென்ரிக் சியோன்சிவிச்’ என்பவர் எழுதிய ‘உச்சி

விளக்கு’ என்ற கதை. ‘ஒருகவிதை. அதை இந்த எழுத்தாளர் வாசித்தபோது பொறி சிக்கி, கதையாக ஊதிப்பிட்டாரோ?’ என்று வியக்கிறார் மொழிபெயர்ப்பாளர். அவ்வளவு நெஞ்சைப் பரவசப்படுத்தும் கதை. பனாமா கலங்கரை விளக்கின் விளக்கேற்றுபவன் காணாமல்போக,
புது ஆள் தேடுகிறார்கள். தனிமைச்சிறை போன்ற அந்த வேலைக்கு ஆள் கிடைப்பது சிரமம். கடைசியில் ராணுவத்தில் வேலைசெய்த ஒரு 70 வயதுக் கிழவன் வந்து சேர்கிறான். தினசரி கோபுரத்துக்குப் பலதடவை ஏறி இறங்க வேண்டும், ஒரே இடத்தில் தனித்துத் தங்க வேண்டும் என்ற தொல்லைகளை எல்லாம் அவன் பொருட்படுத்தவில்லை. தனக்கு வயதாகி விட்டதால் ஓய்வு தேவை, எங்கெங்கோ அலைந்து அலுத்துப் போய்விட்டது என்பதால் இந்த வேலையை மகிழ்ச்சியோடு ஏற்கிறான். கோபுர உச்சியில் காணும் கடல் காட்சிகளும் இயற்கைச் சூழலும் புதிய உற்சாகத்தைத் தருகின்றன. கடந்தகால வாழ்வின் துன்பநிகழ்வுகளும், அமைதியற்ற
வாழ்வும் நினைவில் புரளும் அவனது சிந்தனை ஓட்டத்தில் கதை நடக்கிறது. சீக்கிரமே, முதுமை கல்லறை நினைவுகளைக் கிளர்த்துகிறது. வாழ்வு தந்த அந்த விளக்குக் கோபுரமே கல்லறை போல இருப்பதாக உணர்கிறான். தனிமை சலிப்பூட்டுகிறது. உலகத்தை விட்டே தனித்துப்
போனதாக உணர்கிறான். தான் என்கிற சுயஜீவப் பிரக்ஞை அழிகிறது. அப்போது போலந்து மொழி கவிதைப் புத்தகப் பார்சல் ஒன்று அவனுக்கு வருகிறது. அதைப் படித்துப் பரவசமாகி
அதில் ஆழ்ந்து போகிறான். தாய்நாட்டைத் துறந்து நாற்பது வருஷம் ஆன நிலையில் தாய்
மொழியைக் கேட்கத் துடித்தவனுக்கு அது வரப்பிரசாதமாய்க் கிடைத்திருக்கிறது. தன் சொந்த ஊரின் பழைய நினைவுகள் நெஞ்சில் புரள, தன் கடமையின் பிரக்ஞையற்றுப் போகிறான். கலங்கரை விளக்கை ஏற்ற மறந்து போகிறான். அதனால் கடலில் படகு ஒன்று திட்டில் மோதி விபத்துக்குள்ளாக, வேலை பறி போகிறது. நீண்ட, ஆனால் சுவாரஸ்யமான கதை.

குழந்தைக்குக் கதை சொல்லும் சங்கடத்தினை ரசமாகச் சித்தரிக்கும் ‘மந்திரவாதி அம்மாவை அடிக்கணுமா?’ என்கிற அமெரிக்கக் கதை ‘ஜான் அப்டைக்’ எழுதியது. குழந்தை
மனோதத்துவத்தை அடிப்படையாகக் கொண்ட இக்கதை வாசிப்பவரையும் கதை கேட்கும் குழந்தையாக உணரச் செய்கிறது. பழைய கதைகளை உல்டாப் பண்ணிச் சொல்லி, அதுவும்
தீர்ந்து போகிறது. கேட்கும் குழந்தையும் வளர்ந்து விட்ட நிலையில் அதற்குத் தீ£னி போட முடியாத தகப்பனின் திணறல் சுவாரஸ்யமாகச் சொல்லப் பட்டிருக்கிறது. எல்லா அப்பாக்களுக் கும் நேர்வதுதான். மந்திரவாதிக்கதையில் வருகிற குட்டி மிருகத்தின் அம்மா மீது குழந்தைக்குக் கோபம் வருகிறது. ‘நா¨ளைக்கு அம்மாவை மந்திரவாதி அடிப்பது போலக் கதை சொல்ல வேண்டும்’ என்று சொல்லி விட்டுக் குழந்தை தூங்கி விடுகிறது. ‘ஆங்கிலத்தில் இவரை வாசிக்கும் தோறும் நான் புதிதாய் எழுதும் நமச்சல் கொள்கிறேன்’ என்கிறார் மொழிபெயர்ப்பாளர். ‘ஒரு
சிறந்த எழுத்துக்கு அதுவே அழகு அல்லவா?’ என்று கேட்கிறார்.

‘வில்லியம் கார்லோஸ் வில்லியம்'(இங்கிலாந்து) என்பவர் எழுதியுள்ள ‘பலாத்காரம்’ என்னும் கதையும் குழந்தை மனோதத்துவத்தை அடிப்படடையாகக் கொண்டதுதான். நோயாளியான ஒரு பெண் குழந்தைக்குச் சிகிச்சை அளிக்க ஒரு மருத்துவரை அழைத்து வருகிறார்கள். ஊரில் பரவியிருக்கும் ‘டிப்தீரியா’வாக இருக்குமோ என்றறிய அந்தப் பெண்ணின் தொண்டையைச் சோதிக்க விரும்புகிறார் மருத்துவர். ஆனால் என்ன தாஜா செய்தும் பிடிவாதமாக வாயைத் திறக்க
மறுக்கிறது குழந்தை. வாயைப் பிளந்து பல்லிடுக்கில் சொருகப்படும் மரக் கரண்டியைக் கடித்துத் துப்புகிறது. பலாத்காரம் ஒன்றுதான் வழி என்று குழந்தயை அமுக்கிப் பிடித்து – மருத்துவர் இத்தடவை ஒரு வெள்ளிக் கரண்டியை வாய்க்குள் செலுத்தி தொண்டையில் உள்ள அழற்சியைப் பார்த்து விடுகிறார். தோல்வியைத் தழுவிய குழந்தை ஆவேசம் கொண்டு சக்திக்கு மீறிய பலத்துடன் அவர்மீது பாய்கிறது. ‘நம் ஒவ்வொருவருக்குள்ளும் வன்முறை உறங்கிக் கொண்டு
தான் இருக்கிறது. ஆனால் குழந்தைகளை அடி நச்சிவிடுகிறோம். பாவம், குழந்தைகள்’ என்று பரிதாபப்படுகிறார் ஷங்கரநாராயணன்.

அடுத்த இரு கதைகளும் சீன எழுத்தாளரான ‘யே.ஷெங்தாவ்’ எழுதியவை. சாதாரணக் கதைகள்தாம். கம்யூனிஸ்டு எழுத்து. ஆனால் எழுத்தின் அழகு, தீர்மானம், வீர்யம், முத்தாய்ப்பு
கவனிக்கத் தக்கது. காம்ரேட்களுக்கே புரிதல் சிரமம்தான். ஆனாலும் ஆங்கிலத்தில் சத்தாய்
உள்ளிறக்கம் கண்டிருப்பதை ‘தாழ்வாரத்து மழை போல’ சீன மொழியில் படிக்க ஆசையாய்
இருந்ததாகக் குறிப்பிடுகிறார் மொழிபெயர்த்தவர். ‘எருது’ என்கிற கதையில் பெரிய பூதாகார
மான கண்களையுடைய ஒரு பெரிய எருதைச் சீண்டுகிறார்கள் சிறுவர்கள். அது மிரண்டு எழுந்து அவர்களைப் பயங்கரமாய்ப் பார்ப்பதைக் கண்டு பயந்த ஒருவரிடம் அங்கு வந்த கொத்தடிமை ஒருவன் ‘எருது பயப்படுத்தும் பிராணி போலத் தோன்றினாலும் அதன் கண்களுக்கு எல்லாமே
பிரம்மாண்டமாய்த் தோன்றி அது மனிதர்க¨ளை எதிர்க்க நினைக்கிறதே இல்லை’ என்று
விளக்குகிறான். கொத்தடிமை எருதை ஏளனம் செய்கிறான். கதாசிரியரோ கொத்தடிமையை ஏளனம் செய்கிறார். ‘பிரிவும் பிரிதல் நிமித்தமும்’ எனும் அடுத்த கதையின் தலைப்பு ‘அகநானூற்’று துறைப்பிரிவை நினைவூட்டினாலும் இது காதலரின் பிரிவு அல்ல. கதை சொல்லி நண்பர்களைப் பிரிவதும், நண்பர்கள் அவரைப் பிரிவதும், எந்தப் பிரிவுமே தாபத்தை தருவதும், எல்லாப் பிரிவுமே ஒரே மாதிரியானதில்லாமல் – ஒவ்வொரு வயதிலும் ஒவ்வொரு விதமான பாதிப்பு வீர்யம்
கொண்டதாய் இருப்பதும் ஆன வேதனையைக் காட்சிப்படுத்தி இருக்கிறார்.

அடுத்த கதை, ‘கடலும் கிழவனும்’ நாவலுக்காக நோபல் பரிசு பெற்ற அமெரிக்கர்
‘ஏர்னஸ்ட் ஹெமிங்வே’ எழுதிய ‘ஜப்பானிய பூகம்பம்’ என்பது. ஜப்பான் பூகம்பத்தால் பாதிக்கப் பட்ட ஒரு குடும்பத்தைப் பேட்டி காண ஒரு பத்திரிகையாளரும், ஒரு பத்திரிகையாளினியும் நுழைகிறார்கள். பத்திரிகைப் பேட்டிகளில் மிரண்டுபோயிருக்கிற அம்மாவும் மகளும் முதலில் மறுத்துப் பிறகு சகஜமாகி, பேட்டி தருகிறார்கள். சுனாமியின் பயங்கரத்தை மீளவும் பார்க்கிற
மாதிரி இருக்கிறது அவர்கள் பூகம்பத்தின் பயங்கர பாதிப்புகளை விவரிப்பது. பரபரப்பான தகவல்களின் பதிவு. மொழிபெயர்ப்பாளரின் நடையில் சுஜாதா தெரிகிறார்.

அடுத்தது புகழ்பெற்ற இங்கிலாந்து எழுத்தாளர் ‘ஜாக்லண்டன்’ எழுதியுள்ள உருக்க
மான ‘கணப்பு’ என்கிற நீண்ட கதை. அவன் அந்தப் பகுதிக்குப் புதியவன். கடுமையான மைனஸ் ஐம்பது டிகிரி குளிரில் இனம் தெரியாமல் விறகு தேடிவந்து மாட்டிக் கொள்கிறான். எச்சில் துப்பினால் உறைந்து வெளியே விழுகிற – எங்கும் பனியே உறைந்திருக்கும் குளிரில் சட்டையின் உள்பகுதியில் வைத்திருக்கும் ரொட்டியையும் எடுத்து உண்ண முடியாமல் அவஸ்தைப்படுகிறான். கைவசம் இருக்கும் குச்சிக¨ளைக் கொளுத்தி கணப்புக்காயமுயல்வதும் தோல்வியில் முடிகிறது. அந்தக் கணப்பில் காய வழியில் சேர்ந்து கொள்ளும் நாய் ஒன்றுதான், அவன் குளிரில் விறைத்து கொஞ்சம் கொஞ்சமாய் செயலிழப்பதைப் பார்க்கும் ஒரே சாட்சி. மனிதனைச் சீக்கிரமாய்ச்
சாகவிடாமல் அணுஅணுவாய் அவன் மரணத்தின் பிடியில் சிக்கி உயிர்ப்போராட்டம் நிகழ்த்து வதை விஸ்தாரமாகப் பேசுகிறது கதை. கதையைப் படித்து விட்டு மூடினாலும் அந்தக் குளிரும் பனியும் நம்மையும் பாதித்தது போல உணரச் செய்கிற நுணுக்கமான பதிவு.

அடுத்து ஆஸ்திரேலிய நாட்டு ‘சார்லஸ் மெய்கிவி’ என்பவரின் ‘நடக்க முடியாத நிஜம்’ என்னும் கதை. பாலவனத்தில் நடந்த ஒரு வினோதமான நம்ப முடியாத நிகழ்வைக் கதையாக்கி யுள்ளார். ஒட்டகங்களே நாவறட்சியால் தவிக்கும் கடுமையான கோடையில் ஒரு குடிகாரன், தண்ணீரைத் தேடியலையும் ஒட்டகங்களுக்கு மத்தியில் மாட்டிக் கொள்கிறான். அவற்றின் மூர்க்கமான துரத்தலுக்கு அஞ்சி அடுக்கியிருந்த பீப்பாய்களுக்குள் மறைந்து கொள்ள முயல்கை யில், துருப்பிடித்து நைந்துபோன பீப்பாய் உள்வாங்கிக் கொள்கிறது. பீப்பாயை வெட்டி அவனை விடுவிக்கப் படாதபாடு படவேண்டியிருக்கிறது. ‘துரு (‘Rust’) – என்ற தலைப்பை ஒட்டுவதற்கு இந்த ஆசிரியர் வம்பாடு படுகிறார். அப்படி நிறுத்தியும் அதுரொம்ப சுவாரஸ்யமாகப் படவில்லை’ என்று கருதி தலைப்பை ‘நடக்க முடியாத நிஜம்’ என்று மாற்றியுள்ளார் ஷங்கரநாராயணன்.

‘மிகைய்ல் பிரிஷ்வின்’ என்ற ருஷ்ய எழுத்தாளரின் ‘வனாந்திர ராஜா’ (Woodland Master) என்கிற கதை ‘காட்டை அழித்துவிடக் கூடாது, மரங்களால்தான் மழை வருகிறது, மரங்கள்
மனிதனுக்கும் பிற ஜீவராசிகளுக்கும் மிகுந்த பயன்தர வல்லது’ என்பதை சுவாரஸ்யமான காட்சி
களால் எடுத்துச் சொல்கிறது. ‘தன் ஊரையும் சமுதாயத்தையும் நுணுக்கமாகப் பதிவு செய்தவர் இவரைப் போல யாரும் இல்லை’ என்று மாக்ஸிம் கார்க்கியே வியந்திருக்கிறாராம்.

‘The dignity of begging’ என்னும் தென்னாப்ரிக்கக் கதையில் வரும் பிச்சைக்காரன் ஒருவனின் சாகசங்களைக் குறிப்பிடும் வகையில், ‘திருவாளர் பிச்சை’ என்று தலைப்பிடப்பட் டிருக்கிறது. ‘மனசில்கௌரவமான வாழ்க்கை வாழ ஒரு அரிப்பு வந்தாலும், இந்தப் பிச்சைக்
காரர்கள் சுகவாசிகள்’. கதையில் வரும் பிச்சைக்காரன் ஐன்ஸ்டின் பற்றி, இசைபற்றியெல்லாம் தெரிந்தவனாக இருக்கிறான். நீதிமன்றத்தால் தட்டச்சுப் பயிற்சிக்கு அனுப்பப் படுகிறவன்,
பிச்சைக்கார்களுக்கான சங்கம் அமைத்து பெருந்தொகையைத் திரட்டிவிடத் திட்டமிடுகிறான். ‘கதை உண்மையாகவும் இருக்கலாம். ஆனால் கற்பனைபோலச் சொல்லி விட்டார்’ கதாசிரியர் ‘வில்லியம் (புளோக்) மோதிசன்.

‘எந்த ஊர் எந்த நாடானால் என்ன? அப்பாக்கள் எல்லாம் ஒரே மாதிரிதான்’ என்று
அழுத்திச் சொல்லும் ‘சென்று வா நேச மலரே’ (Go lovely Rose} என்கிற இங்கிலாந்து
கதையின் ஆசிரியர் ‘ஹெச்.ஈ.பேட்ஸ்’. மகளோடு பழகும் காதலனால் அவள் ஏமாற்றப்பட்டு
விடுவாளோ என்று அப்பா பயப்படுகிறார். ஆனால் மகள் மேல் அசாத்திய நம்பிக்கை வைத்திருக்கிற அம்மா அலட்டிக் கொள்ளவே இல்லை. கடைசியில் கதை சுபமாக முடிகிறது.

‘கசாப்புக் கடைக்காரனிடம் வாலாட்டுகிறது குறும்பாடு’ (Lamb to the slaughter) என்கிற ‘ரோல்டுதால்’ (இங்கிலாந்து) என்பவரின் கதை ரசமான எள்ளல் கதை. தனக்குத் துரோகம் செய்யும் போலீ£ஸ் கணவனை சாமர்த்தியமாய்த் தடயமற்றுக் கொன்று விட்டு துப்பறிகிறவர் களுக்கே அல்வா கொடுக்கிற ஒருத்தியின் கதை. வித்தியாசமான கற்பனை.

‘Aren’t you happy for me?’ என்கிற அசல் தலைப்பைவிட மொழிபெயர்ப்பாளரின்
‘விவாகங்கள், விகாரங்கள், விவாதங்கள்’ என்கிற தலைப்பு ‘ரிச்சர்ட்பாஷ்’ எழுதியுள்ள அமெரிக்கக் கதைக்குப் பொருத்தமாய்த் தெரிகிறது. தலைப்பே கதையின் சாரம்சத்தைச் சொல்லி விடுகிறது. வெளியூரில் பத்திரிகையில் வேலை பார்க்கிற 23 வயது மகள் தன் அப்பாவைவிட அதிக வயதுடைய 63 வயது பத்திரிகை ஆசிரியரை மணக்கப் போவதாக தொலைபேசியில் அப்பாவிடம் சொல்ல அதன் மேல் நடக்கிற விவாதங்களும், விகாரங்களும்தான் கதை. முழுதும் உரையாடல் களாலேயே கதை அமைந்திருப்பது வாசிப்பு ஓட்டத்தை அதிகப்படுத்துகிறது. கதைக்கு அழுத்தம் தருகிறது. ‘அமெரிக்கவாழ்வை தேங்காய் விடல் உடைப்பு மாதிரி உடைக்கிறது கதை’ என்கிறார் மொழிபெயர்ப்பாளர்.

கடைசிக்கதை மிக உருக்கமான, ஆப்ரிக்கப் பெண்களின் அவலமான அடிமை வாழ்வை சமூக அக்கறையுடன் சித்தரிக்கும் அருமையான கதை. ‘செம்பியன் ஔஸ்மன்’ ஆங்கிலத்தில் எழுதியுள்ள ‘Her three days’, ‘அவளது மூன்று நாட்கள்’ என்ற பொருந்தி வருகிற தலைப்புடன் கொஞ்ச நாட்களுக்கு முன் ஒரு இலக்கிய இதழில் மொழிபெயர்க்கப்பட்டு வெளியாகி இருந்தது. ஆனால் ஷங்கரநாராயணன் ‘ஒன்று இரண்டு நான்கு’ என்று தலைப்பிட்டிருக்கிறார். தலைப்பு மிக அபூர்வமாய்த்தான் சிலருக்கு சிறப்பாக அமைந்து விடுகிறது. இக்கதையில்
காட்டப்படும் ஆப்ரிக்கப் பெண்களின் பரிதாபத்திற்குரிய இல்வாழ்க்கைக்கு இங்கு நம் பெண்
களின் அடிமை வாழ்வு எவ்வளவோமேல் என்கிற அபிப்பிராயத்தை கதை ஏற்படுத்துகிறது. மூன்று மனைவிகளை உடைய ஒருவன் ஒவ்வொருத்திக்கும் மாதத்தில் முன்று நாளை ஒதுக்கி அந்நாட் களில் அங்கு செல்கிறான். அந்த மூன்று நாட்களுக்காக ஒவ்வொருத்தியும் ஏங்கும் ஏக்கமும் அம்மூன்று நாட்களில் அவனைத் தன்னிடமே இறுத்திக் கொள்ளச் செய்கிற பரிதாபமான முயற்சிகளும் மனதை நெகிழ்விப்பவை. நாம் அறியாத ஆப்பிரிக்க வாழ்வின் இருண்ட மூலைகளை இப்போதுதான் அந்நாட்டு எழுத்தாளர்கள் வெளிச்சத்துக்குக் கொண்டு வருகிறார்கள். அடிமைத் தனத்தின் உச்சங்களை அற்புதமாய்ப் பதிவு செய்திருக்கிறார் கதாசிரியர்.

‘மொழிபெயர்ப்பு’ என்பதைவிட ‘மொழியாக்கம்’ என்பதுதான் பொருத்தமானது. மொழிபெயர்ப்பு என்பது ஏதோ பெயர்ப்பு என்று ஒரு வன்முறை போல இருக்கிறது’ என்கிறார் இ.பா. திரு ஷங்கரநாராயணனின் இந்தப்பணி மொழியாக்கம் வகையில் அடங்கும். கதைகளின் தலைப்புகளும் நடையும் நம் நடைமுறைக்கு உகந்ததாய் ஆக்கம் செய்யப் பட்டிருப்பதால் அப்படிச் சொல்லலாம். அவர் கையாண்டிருக்கிற நமது மொழிப் பிரயோகங்கள் – சிலாக்கியம், பயல்கள், நிமிட்டாம்பழம், அடிப்பாதகத்தி, நம்மாளு, போயிரலாம், திண்டாடும்பொலுக்கு,
முட்டாப்பய மவனே, பிச்சிப்பிடுவேன்பிச்சு, உப்புக்கண்டம் போடணும், தடித்தாண்டவராயன்,
நெஞ்சாங்கூடு, தெக்கித்திக்காராளுக்கு, நாமார்க்கும் குடியல்லோம், உள்ளங்கை நெல்லிக்கனி – போன்றவை நம்முர்க் கதைகளைத்தான் படிக்கிறோம் என்பது போன்ற உணர்வை ஏற்படுத்து
கின்றன. இதுபோன்று வாசகரின் ரசனையைக் கருத்தில் கொண்டு மொழியாக்கம் செய்தால், மொழிபெயர்ப்பு என்றாலே முகம் சுளிப்பவர்களையும் விரும்பி ஏற்கச் செய்ய முடியும். அதில் வெற்றி பெற்றிருப்பதற்காகவும் உலகின் மிகச் சிறந்த படைப்பாளிகளின் மிகச் சிறந்த – நமக்கு இணக்கமான கதைகளை தேர்ந்தெடுத்துத் தந்திருப்பதற்காகவும் ஷங்கரநாராயணனையும், அதை ஊக்குவிக்கும் வகையில் அழகாக நூலைப்பதிப்பித்து வெளிட்டிருப்பதற்காக ‘அன்னைராஜேஸ்வரி பதிப்பகத்தாரை’யும் பாராட்டலாம்.

——– 0 ———
(‘யுகமாயினி’ ஆகஸ்ட் ’08 இதழில் வெளியானது)

Series Navigation

author

வே.சபாநாயகம்

வே.சபாநாயகம்

Similar Posts