நூலகத்தில் பூனை

This entry is part [part not set] of 30 in the series 20091218_Issue

ஹெச்.ஜி.ரசூல்


நூலகத்தில் படித்துக் கொண்டிருந்தது பூனை

பூனையின் மொழியைவிட

தமிழ் எளிதாக இருப்பதாக சொல்லிக் கொண்டு

மொழிபெயர்ப்புகதைகளை வாசிக்க துவங்கியது.

விடுமுறைநாளென்பதால்

நூலகத்தில் யாரும் இல்லாதது வசதியாகிவிட்டது.

பரபரப்பு செய்திகளை தாங்கியிருந்த

அன்றாட செய்தித் தாள்களும்

அங்கங்கே அடுக்கியும் வைக்கப்பட்டிருந்தன.

பூனை அவற்றையும்

கலைத்துப்போட்டு படித்தது

பெரிய பெரிய ரேக்குகளில்

அடுக்கி வைக்கப்பட்டிருந்த புத்தகங்களின்மீது

அது மெய்மறந்தகாதலை

வெளிப்படுத்த தவறவில்லை.

பகல்நேரம் இருட்டாக இருந்ததால்

ஏற்கெனவே அது விளக்கை போட்டிருந்தது.

பேன்சுற்றிக் கொண்டிருந்தாலும் வியர்த்தது.

காலியாக கிடந்த நாற்காலிகள்

ஒவ்வொன்றிலும் உட்கார்ந்து பார்த்தபூனைக்கு

உட்கார்ந்து படிப்பது பிடிக்கவில்லை.

சன்னல்களும்

அறைக்கதவுகளும் தாளிடப்பட்ட நூலகத்தில்

எப்படி நுழைந்தேன் என்பதை

பூனை திரும்ப திரும்ப யோசித்துப் பார்த்தது.

நாளைகாலையில்

நூலகத்தை திறந்துபார்க்கும் பணியாளன்

அடையாள அட்டை இல்லாத தன்னை

இங்கிருந்து வெளியேற்றிவிடுவானென்ற

பீதியும் பயமும் கண்களில்

தொற்றிக் கொள்ளாமல் இல்லை.

என்றாலும் குட்டிரேவதியும்

நவீன தமிழ்கவிகளும் தன் இனம்பற்றி

இவ்வளவு எழுதிகுவித்திருக்கிறார்களா

என்பது குறித்தான ஆச்சர்யத்தால்

பூனை மிரட்சியுற்றிருந்தது

நன்றி

குமுதம் தீராநதி

Series Navigation

ஹெச்.ஜி.ரசூல்

ஹெச்.ஜி.ரசூல்