நீ… ? ? ? ?

This entry is part [part not set] of 45 in the series 20030302_Issue

புதியமாதவி, மும்பை.


உன் –
முகவரி தெரிந்தது
முகம் தெரியவில்லை
நீ ..யார் ?

எழுதிய கவிதைகள்
உன் தாலாட்டு
எழுதாதக் கவிதைகள்
என் பிரசவவேதனை
நீ.. யார் ?

நீ..-
அருள் ஜோதியாகி
என்னை எரித்த
ஆன்மிக நெருப்பா ?

வெண்மணியில்
என்னைத் தீண்டிய
சாதிய நெருப்பா ?

தாமிரபரணியில்
என்னைத் தள்ளிய
கூலிப் படையா ?
நீ.. யார் ?

எங்கள் அடையாளம்
தொலைந்து போனதால்
அடையாளம் அறியாது
அன்புகூட
அச்சப்படுகிறது.
நீ..யார் ?

முகம் காட்டாத
உன் முகவரிக்கு எழுதிய
அஞ்சல்
அஞ்சல்தலை ஒட்டாத
அனாதையாய்க் கிடக்கிறது.

புதியமாதவி, மும்பை.

puthiyamaadhavi@hotmail.com

Series Navigation