நீ… உனக்கான வரம்.

This entry is part [part not set] of 30 in the series 20020512_Issue

சேவியர்.


நண்பனே…

உன்னைப் பற்றி
நீயேன்
உயர்வாய் நினைக்க
தயங்குகிறாய் ?

மாலுமிகளே
சஞ்சலப் பட்டால்
சுக்கான் பிடிப்பது
சுலபமாயிருக்குமா ?

நீ
சொல்லுமிடம் செல்ல
உன் கால்கள்,
நீ
நீட்டுமிடம் நிற்க
உன் கைகள்
பின் ஏன் தனியன் என்று
தாழிக்குள் தாழ்கிறாய் ?

பூக்களின் பெருமையை
வண்டுகள் வாசித்துச்
சொல்லும்,
ஆனால் மொட்டை விட்டு
வெளியே வருவது
பூக்களின் பணியல்லவா ?

தானியம் தின்னும் கலை
தாய்க் கோழி தரும்
ஆரம்பக் கல்வியாகலாம்,
ஆனாலும்
அலகு கொத்துதல்
குஞ்சுகளின் கடமையல்லவா ?

ஒவ்வோர் மரமும்
ஒவ்வோர் வரம்.
மூங்கில்கள் மட்டுமே
முளைக்குமென்றால்
பூமியின் தேவைகள் தீராது.

தூக்கம் வந்தாலே
சவக்குழிக்குள்
படுத்துக் கொள்ளும்
தாழ்வு எண்ணக் குழிகளை
ஏன்
தொடர்ந்து வெட்டுகிறாய் ?

கூடு கலைந்து போனதால்
தூக்கிலிட்டுக் கொண்ட
தூக்கணாங்குருவியை
நீ
தவமிருந்தாலும் பார்க்க இயலுமா ?

வலை கிழிந்து போனதால்
செத்துப் போக
சம்மதிக்கும்
சிலந்தியை
உன்னால் சந்திக்க இயலுமா ?

ஆறாவது அறிவு
ஆராய்வதற்கு.
அழிவின் வழிகளை
ஆயத்தப் படுத்த அல்ல.

விழுந்த இடத்தில்
காலொடிந்து கிடப்பதில்லை
நதி .
அருவியின் அடிவாரம் தானே
அதன்
ஆக்ரோஷத்தின் ஆரம்பம் ?

நம்பிக்கை கொள்,
சுற்றிக் கிடக்கும்
சாபங்களை விடுத்து
உனக்குள் கிடக்கும்
விருட்சங்களை வெளிக்கொணர்.

நீ
வைக்க மறுக்கும் நம்பிக்கையை
உன்மேல்
வேறு
யார் வைக்க இயலும் ?

நீ
காற்று.
இலைகள் அசையவில்லையென்று
கவலை எதற்கு.

நீ
தண்ணீர்.
ஆழம் போதாதென்ற
தாழ்வு மனம் எதற்கு ?

உன் தோளில்
நீயே கட்டிவைக்கும்
எந்திரக் கற்களை
இப்போதே எடுத்தெறி.

இல்லையேல்
நாளை
மாலையிட வரும் கைகளுக்கு
உன் தோள்கள்
புலப்படாது.

Series Navigation

ஸ்தனிஸ்லாஸ் ஆரோக்கிய சேவியர்

ஸ்தனிஸ்லாஸ் ஆரோக்கிய சேவியர்