நீலக்கடல் (தொடர்) – அத்தியாயம் -56 (முடிவு)

This entry is part [part not set] of 48 in the series 20050127_Issue

நாகரத்தினம் கிருஷ்ணா


2002ம் ஆண்டு, ஜனவரிமாதம் 21ந்தேதி..பின்னிரவு..

மொரீஷியஸ் நாட்டின் வக்கோஸ் பகுதியிலுள்ள வானிலை ஆராய்ச்சி மையத்தின் தலைமை அலுவலகம். வழக்கம்போல அன்றைய இரவும், நவம்பர்மாதம்முதல் மார்ச்மாதம்வரையிலான நாட்களில் காட்டும் கூடுதல் அக்கறை. அலுவலகமெங்கும் வெப்பமண்டலப்புயல்பற்றிய வரைபடங்கள், தகவல்கள். அவற்றின் பல்வேறு கட்டங்கள், நிலைகள். வெளிச்சமிட்டுக்கொண்டிருக்கும் கணிணித் திரைகள். ஐசோபார்கள் காட்டும் ஏற்ற இறக்கங்களில், எந்த நேரமும் எதுவும் நடக்காலாமென, இரண்டு நாட்களாக உறக்கமின்றி, வரிசையாக ஒன்று, இரண்டு, மூன்று என எச்சரிக்கை எண்களை ஏற்றிவிட்டு, வானிலை ஆராய்ச்சி மையத்தின் இயக்குனர் நெஞ்சைப் பிடித்துக்கொண்டு பயத்துடன் காத்திருக்க, அது நடந்தேவிட்டது.

வாயுபகவானின் வாரிசாக அதீத ரெளத்திரத்துடன் அந்தக் குழந்தை. குழந்தையின் கொடூர உறுமலில், இந்தியப் பெருங்கடலே அழுது ஆர்ப்பரிக்கிறது. மொரீசியஸ் தீவிற்கு வடக்கே உருப்பெற்று, 22ந்தேதி அதிகாலையில், ஆவேசத்துடன் – தீவிலிருந்து 62 கி.மீ. எல்லைக்குள் நுழைந்து – காலை ஆறுமணிக்கு 19.5 டிகிரி தெற்கு அட்சரேகைக்கும், 56.8 டிகிரி கிழக்குத் தீர்க்கரேகைக்கும் இடையிலே மையம்கொண்டு – கர்ஜித்த அந்தப் புயல் குழந்தைக்கு, ‘எச்சரிக்கை எண் நான்கை ‘ ஏற்றிவிட்டு மொரிசியஸ் நாட்டு வானிலை ஆராய்ச்சி மையம் சூட்டிய பெயர் ‘தினா ‘ (Dina).. ப(பு)யல் ‘தினா ‘ தவழ்ந்த வேகம் மணிக்கு 206கி.மீ…

ஐக்கிய நாடுகள் சபையின் மனிதநல ஒருங்கிணைப்பு அலுவலகத்தின் 2002ம் ஆண்டு ஜனவரி 24ந்தேதியிட்ட அறிக்கை மொரீசியஸ் தீவில் அதற்கு இரண்டு நாட்களுக்கு முன்னர் ஏற்பட்ட புயற் சேதங்களைக் கீழ்க்கண்டவாறு விவரிக்கிறது:

மின்சாரம்: மொரீிஷியஸின் வடபகுதி குறிப்பாகத் தலைநகரம் போர் லூயி (Port Louis), பாம்ப்ளிமூஸ் (Pamplemouse), வல்தோன் (Valtone), மொகா(Moka) பகுதிகள் பலத்தசேதங்களை அடைந்துள்ளன. மொரிஷீயஸ் மத்திய மின்சாரவாரியம் 20 சதவீத மக்களின் மின் இணைப்பு, துண்டிக்கப் பட்டுள்ளதாக அறிவித்துள்ளது.

குடிநீர்: நாடெங்கும் குடிநீர் விநியோகம் வெகுவாக பாதித்துள்ளது. கிட்டத்தட்ட 70 சதவீத மக்கள் முறையான குடிநீரின்றி அவதிப்படுகின்றனர்.

தொலைபேசி: 400 000 இணைப்புகள் துண்டிக்கப்பட்டுள்ளன. ஐரோப்பிய நாடுகளுடன் குறிப்பாக பிரான்சுடன் தொடர்பு கொள்வதென்பது முற்றிலும் இயலாது. இதனைச் சரிசெய்ய பதினைந்து நாட்கள் ஆகலாம் என மொரீஷியஸ் தொலைபேசித்துறை அறிவிக்கிறது.

கல்விக் கூடங்கள்: பெரும்பாலான கல்விக்கூடங்கள் சேதமடைந்துள்ளன. மறுதேதி அறிவிக்கப்படும்வரை அனைத்துக் கல்வி நிறுவனங்களும் மூடபட்டுள்ளன. எனினும் அவை எதிர்வரும் ஜனவரி 29ந்தேதி மீண்டும் திறக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

குடியிருப்பு: புயலால் வீடிழந்த மக்கள் சுமார் 1000பேர் சமூகக் கூடங்களிற் தற்காலிகமாகத் தங்கவைக்கப்பட்டிருக்கின்றனர். அவர்களில் 360 குடும்பங்களுக்கு முதற்கட்டமாக அரசு மறுவாழ்வுத் திட்டத்தின் மூலம் குடியிருப்புகளுக்கு ஏற்பாடு செய்துள்ளது.

விவசாயம்: கரும்பு விளைச்சல் மிகவும் மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளது. நாட்டின் மொத்த உற்பத்தியில் 15 லிருந்து 20சதவீதம் சேதமாகியுள்ளது இது சுமார் 650 000டன் ஆகும். தேசிய வருவாயில் 1.2லிருந்து 1.4 பில்லியன் மொரீஷியஸ் ரூபாயாக இருக்கும் என அஞ்சப்படுகிறது. நாட்டின் உடனடிக் காய்கற்ித் தேவையைச் சமாளிக்க அடுத்த இரண்டு மாதங்களுக்கு அவற்றை இறக்குமதி செய்ய அரசு உத்தேசித்துள்ளது.

தொழில்கள்: நாட்டின் 80 சதவீதத் தொழில்கள் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ ‘தினா ‘ புயலினால் முடங்கியுள்ளன. இதனால் ஏற்பட்டுள்ள ஒரு மணிநேர உற்பத்தி இழப்பு சுமார் 15 மில்லியன் மொரீஷியஸ் ரூபாய்.

உயிர்ச்சேதம்: மொரீஷீஸியஸ் வடக்குப் பகுதியில் ஏற்பட்டுள்ள இப்புயலுக்கு இதுவரை இருவர் பலியாகியுள்ளதாக அரசின் அதிகாரபூர்வமான தகவல் தெரிவிக்கின்றது. உயிரிழந்தவர்களில் ஒருவர் பிரான்சு நாட்டின் லியோன் நகரைச் சார்ந்த சுற்றுலாப் பயணியான டானியல் ( 30வயது) என்றும், புயலுக்குப் பலியான மற்றொரு உயிர் மொரீஷியஸ் பாம்ப்ளிமூஸ் பகுதியைச் சேர்ந்த சின்னத்தம்பு மொதிலி (முதலி) மகள் சின்னத்தம்பு தெவானை(23 வயது) எனவும் அரசின் முதற் தகவல் அறிக்கை தெரிவித்துள்ளது..

‘காலம் ‘ மூப்பற்றது, ஜனனமும் மரணமும் அறியாதது. ஏழு பிறப்புகளிலும் நம்மீது உழவலன்பு செலுத்துகிற ஒரே ஜீவன். உங்களை, உங்கள் பாட்டனை, உங்கள் கொள்ளுப் பாட்டனை, எள்ளுப்பாட்டனை, எனது பாட்டனை, எனது கொள்ளு அல்லது எள்ளுப்பாட்டனை, நமக்குப் பொதுவான பாட்டன்களை பாட்டிகளை, நமக்குத் தெரிந்த தெரியாத புள்ளினங்களை, தாவரங்களை, விலங்கினங்களை நீர் வாழ்வன, நிலம் வாழ்வன அனைத்தையும், புள்ளியாய் ஜனித்து – கோடாய் வளர்ந்து – புள்ளியாய் மரணிக்கும் வரை உயிர்களின் உயர்வு தாழ்வுகளை, சுக துக்கங்களை, உறவுகள் பகைகளை, பொறுமைகளை ஆற்றாமைகளை, தோல்விகளை வெற்றிகளைக் கண்களில் அயற்சியின்றி, யயாதியோ, மார்க்கண்டேயனோ அல்லது யயாதி மார்க்கண்டேயனோ, ஆத்திகன் நம்புகிற கடவுளோ, ஏதோவொன்றாய் என்றும் இளமையாய் வேடிக்கைபார்க்கிறது, சாட்சியாய் நிற்கிறது. நிகழ்வுகள் அதன் வயிற்றில் சுலபமாய்ச் செரித்துப்போகின்றன. நாம் அதனெச்சத்தில் தப்பி, வேரூன்றி, கிளை பரப்பி, தழைத்து, பழுத்து இன்றோ நாளையோ மீண்டும் மீண்டும் முனை மழுங்காத கோடரியின் வரவுகளை எதிர்பார்த்துக் காத்திருக்கிறோம்.

பிறப்பென்று ஒன்றிருந்தால் இறப்பு இல்லாமலா ? பார்த்திபேந்திரனோ, தேவயானியோ, பெர்னார் குளோதனோ, தெய்வானையோ, நீங்களோ நானோ சந்தித்தே ஆகவேண்டியிருக்கிறது.

‘முட்டையை உடைத்துப் பறந்த பறவையும், சட்டையை உரித்துவிட்டுப்போனபாம்பும் எப்படித் திரும்பவும் முட்டையிலும் சட்டையிலும் நுழையாவோ அதுபோல ஸ்தூலத்தை விட்டுப்பிரிந்த சூக்கும உடலும் திரும்ப ஸ்தூலத்தில் பிரவேசிக்காது. நனவு மாறிக் கனவு நிலை அடைவதைப்போல ஸ்தூல உடல்விட்டு சூட்ஷம உடலானது வானினூடு செல்கின்றது. அவ்வாறு சென்றவை புண்ணிய பாவங்களுக்குத் தக்கபடி இன்ப துன்பங்களை நுகர்ந்த பின்னர் ஐசுவரியம் நிரம்பிய மனையிலோ, தரித்திரமிக்கதோர் மனையிலோ வந்து பிறக்கும் ‘ என இந்து மதம் நம்புகிறது.

பிறக்கின்ற இடம் மாத்திரம் உயிர்களின் சுக துக்கங்கங்களைத் தீர்மானிக்க முடியுமா என்ன ?

இப்படியான கேள்விகளுக்கென்றே இயற்கை தனது பதிலை வைத்திருக்கிறது. உயிர்களின் உற்பத்திக்கும், ஜீவிதத்திற்கும் காரணமாயிருக்கும் புவனமும், ஆகாயமும், காற்றும், மழையும், நதியும், கடலும் அவ்வுயிர்களின் அடங்கலுக்கும் பொறுப்பேற்கிறது. நீங்களோ நானோ உறவு பாராட்டுவது எதற்காகவென்று அறிவோம். உறவையும் நட்பையும் நாம் கொண்டாடுவது, பரஸ்பர சுயநலங்களின் தேவைக்காக. எதிர்பார்ப்புகளற்று இயங்கும் பஞ்சபூதங்களுக்கு மானுடத்தின் நேர்த்திகடன் என்ன ? நமது ஆரம்பமும் முடிவும் அதன் தயவிலே உள்ளது என்பதை பெரும்பாலும் மறந்துவிடுகிறோம்.. மெலிந்தவன் புலம்புகிறான், வலிந்தவன், அகங்காரத்தில் மிதக்கிறான், ஆயுதத்தை ஏந்துகிறான், பலமற்ற தேசமென்றால் ராணுவம், பலமிருந்தால் சமாதானம். இயற்கையின் நீதி இப்படியானதல்ல, அதற்கு அமெரிக்காவும் ஒன்றுதான், ஆப்ரிக்காவும் இன்றுதான். இவற்றின் சீற்றங்களுக்கு ஏதோ ஒருவகையிம் மானுடமும் பொறுப்பு. இயற்கையினுடைய கோபத்தின் அளவு சிறியதென்றால் பெயர் சொக்கேசன், பலியாகும் உயிர்கள் பார்த்திபேந்திரன், தெய்வானை. அளவிற்பெரியதென்றால் தினா, சுனாமி. பலியாகின்ற உயிர்கள் ?….

‘நன்றும் தீதும் பிறர் தர வாரா ‘, சத்தியமான வாக்கு.

முற்றும்


நன்றி.

இத்தொடரின் வெற்றிக்கு, மூவர் முக்கியப்பங்கினை ஆற்றியிருக்கிறார்கள்.

1. திண்ணை இதழும், ஆசிரியர் குழுவும்: இத்தொடரைத் திண்ணையில் எழுதுவதற்கு நான் விருப்பம் தெரிவித்தபோது, மனமுவந்து ஏற்றார்கள், முழுச்சுதந்திரத்தோடு என் எழுத்தைப் பதிவுசெய்ய இறுதி அத்தியாயம்வரை அனுமதித்தார்கள். நீலக்கடல் பேசப்படுமானால், திண்ணை இணைய இதழின் அணைப்பும் ஆதரவும் பேசப்படவேண்டும், பேசப்படும்.

2. இடைக்கிடை எனக்கு உற்சாகமளித்த மின் அஞ்சல்கள், அவைகளில் என் மரியாதைக்குரிய எழுத்தாளர்களும் உள்ளனர்.

3. என் படைப்புகளின் முதல்வாசகரும், எழுத்துப்பிழையைக் கூடியவரைப் குறைக்க உதவும் எனதருமை இலங்கை நண்பர் மரியதாஸ். பிறகு எப்போதும் போல எனது அலுவற்பணிகளை குறைத்து எழுத்தில் அக்கரைகொள்ள வைக்கிற என் துணைவியார்.

இம்மூவர் அணிக்கு என் மனமார்ந்த நன்றிகள்.

நீலக்கடல் புதின மாலையில் பூக்கள், இலை, நார், எல்லாம் உண்டு. இங்கே எவர் பூ, எவர் நார் ? என்பதான விவாதங்கள் இல்லை. பார்த்திபேந்திரன், தெய்வானை மாத்திரமல்ல, காத்தமுத்துவும் வேம்புலி நாயக்கருங்கூட கதையின் பங்குதாரர்களே. சொல்லப்போனால் நாரில்லையேல் மாலை ஏது ? பூக்களுக்கல்ல, நாருக்கு என் நன்றி.

கூடியவிரைவில் நீலக்கடல் புத்தக வடிவம்பெறவிருக்கிறது, திருத்தங்களுடன்.

நீலக்கடல் புதினத்திற்கு உதவிய நூல்கள்:

1. Les Tamouls a L ‘Ile Maurice , Ramoo Sooriamoorthy (PortLouis -1977)

2. La Bourdonnais Marin et aventurier, Philippe Haudrere (Paris -1992)

3. Pondichery – 1674 – 1761 -L ‘echec d ‘un reve empire – Dirige par Rose Vincent (editions Autrement Paris -1993)

4. Slaves, Freedmen, And Indentured Laborers in Colonial Mauritus, Richard B. Allen (Cambridge university press-1999)

5. History of the Nayaks of Madura, R. Satyanatha Aiyar, Asian Education Services (Madras-1924)

6. A history of South India, K.A. Nilakanda Sastri, Oxford University press (Newdelhi-1955)

7. Histoire de l ‘Inde -Rev.Pere Vath de la societe de Jesus (Payot, Paris -1937)

8. Histoire de l ‘Inde Moderne 1480 -1950 sous la direction de Claude Markovits, editions Fayard, 1994

9. Les grands reves de l ‘Histoire, Helene Renard et Isabelle Garnier, editions Michel Lafon,(Neuilly-sur-Seine -2002)

10. La Reincarnation J.H. Brennan Edition Grancieere (Paris -1981)

11. L ‘Apprenti sorciere- Au coeur de l ‘Inde mysterieuse -Tahir Shah Editions de Fallois pour la traduction francaise (1998)

12. Une Vie Paria, pays Tamoul, Inde du Sud -Viramma, Josiane et Jean-Luc Racine editions France Loisir (Paris 1995)

13. Lumiere sur la voie Tantrique, Michel Manor -editions Guy Tredaniel (Paris-1996)

14. The Intrepretation of dreams, Sigmund Freud -Avon books (Newyork -1965)

15. Les pirates de Madagascar aux xvii et xviii eme siecle, Hubert jules Deschamps- editions Berger-Levrault (Paris-1972)

16. இந்துமத இணைப்பு விளக்கம், கே. ஆறுமுக நாவலர், நாகர்கோவில்(1963)

17. ஆனந்தரங்கபிள்ளை நாட்குறிப்பு, கலைபண்பாட்டுதுறை, புதுவை அரசு 1988.

18. நகரமும் வீடும் வாழுமிடத்தின் உணர்வுகள், ரொபேர் துய்லோ, பாண்டிச்சேரி பிரெஞ்ச் இன்ஸ்டிடியூட் (1993)

19. கச்சியப்ப சிவாச்சாரியார் அருளிய கந்தபுராணம் மூலமும் தெளிவுரையும், வர்த்தமானன் பதிப்பகம் (1990)

20. கந்தபுராணம் ஒரு பண்பாட்டுக் களஞ்சியம், கலாநிதி நா. சுப்பிரமணியன், கலைஞன் பதிப்பகம் (2002)

21. காஞ்சிபுரம் ஸ்தல புராணமும் முக்கிய பாசுரங்களும், க. ஸ்ரீதரன், நர்மதா பதிப்பகம்

22. சித்தர் தத்துவம், டாக்டர்.க. நாராயணன், மாரிபதிப்பகம் (புதுச்சேரி -1998)

23. சித்தர்களின் சிருஷ்டிரகசியம், ஸ்ரீ செண்பகா பதிப்பகம்

24. பதினெட்டு சித்தர்களின் வாழ்வும் வாக்கும், ஸ்ரீ தேவநாதசுவாமிகள்

25. தமிழகம் புதுவை வரலாறும் பண்பாடும் -முனைவர் சு. தில்லைவனம்.

26. சித்தர்களின் சாகாக்கலை – சி.எஸ் முருகேசன்

27. மரணத்தின் பின் மனிதர்நிலை -மறைமலை அடிகள்

இவற்றைத் தவிர, Bibliotheque National Francois Mitterand -Paris (France), Archives Nationales, Centre des Archives d ‘Outre-Mer, Aix-en-Provence (France), Archives de Maurice, Port -Louis (Ile-Maurice), French Institut- Pondicherry(Inde), எண்ணற்ற இணைய தளங்கள், காஞ்சிபுரம் குமரக்கோட்ட இந்து அறநிலையத் துறை அதிகாரிகள்: திருவாளர்கள் சீனுவாசன், தேவராயன், வைத்தீஸ்வரன்கோவில் நாடி சோதிடர் திரு.கோவிந்தசாமி, நண்பர்கள் புதுச்சேரி ராஜசேகரன், பாரீஸ் முத்துக்குமரன், மொரீஷியஸ் பாவாடைப்பிள்ளை அனைவருக்கும் மனமார்ந்த நன்றி.

பணிவுடன்

நாகரத்தினம் கிருஷ்ணா


Series Navigation

நாகரத்தினம் கிருஷ்ணா

நாகரத்தினம் கிருஷ்ணா

நீலக்கடல் -(தொடர்) – அத்தியாயம்-51

This entry is part [part not set] of 59 in the series 20041223_Issue

நாகரத்தினம் கிருஷ்ணா


வாழும் படியொன்றும் கண்டிலம் வாழிஇம் மாம்பொழில்தேன்

சூழும் முகச்சுற்றும் பற்றின வால்தொண்டை யங்கனிவாய்

யாழின் மொழிமங்கை பங்கன்சிற் றம்பலம் ஆதரியாக்

கூழின் மலிமனம் போன்(று)இருளா நின்ற கோகிலமே.

-(திருக்கோவையார்)- மாணிக்கவாசகர்

கச்சியப்பர் சிவாச்சாரியார் இல்லத்தோடு இணைந்து கிடந்த கொல்லைப்புறம்.

மா,பலா,வாழை முக்கனிமரங்களுக்கிடையே பன்னீர், மரமல்லி, செம்பருத்தியெனக் கொத்துகொத்தாய்ப் பூத்திருக்கும் வாசமலர்கள். அவற்றின் கலவை மணம் காற்றில்கலந்து அப்பிரதேசத்தின் கற்பனை சரீரத்திற்கு வாசத்தைத் தெளித்துக்கொண்டிருக்கிறது. பூசணிக்கொடியும், சுரைக்கொடியும் சடைபோட்டுப் படர்ந்திருக்க, பச்சையும் மஞ்சளுமாய் அவற்றின் பலாபலன்கள். செடி கொடிகளில் மாத்திரமல்ல மரங்களின் கிளைகளிலும் இளந்தளிர்கள் மென்காற்றில் அசைந்தாடுவது அழகு. முற்றத்துக் கூரையிலும், கிணற்றினையொட்டியிருந்த புல்வெளியிலும் மயில்களும், புறாக்களும் அங்குமிங்குமாய் பறப்பதும், அமர்வதும், மெல்ல நடை பழுகுவதுமாயிருக்கின்றன. பார்த்திபேந்திரன் பழனிவேலன் என்கிற பெயருடன் கச்சியப்பர் சீடனாக அவதாரமெடுத்து, வேனிற்காலமும் பிறந்துவிட்டது.

பார்த்திபேந்திரனைச் சிவாச்சாரியார் ‘ஏகாந்தக்கிராஹி ‘யென வருவோர் போவோரிடம் சிலாகிக்கிறார். எந்த விஷயத்தையும் குரு ஒருமுறை உச்சரித்தால் போதும், சட்டெனப் பத்திக்கொள்ளும் கற்பூரஞானம், என்பதாய்ச் சீடனின் புத்தி குறித்து மெச்சுகிறார். பார்த்திபேந்திரன் உற்சவ காலங்களிலும், விசேட நாட்களிலும் கச்சியப்பருக்குத் துணையாகக் குமரக்கோட்ட முருகனுக்கு அபிஷேக ஆராதனைகள் செய்கிறான். குரு, நித்திய கருமங்களை முடித்துக்கொண்டு குமரகோட்டம் சென்று வடிவேலனை வழிபட்டபின் புராணம் பாடத்தொடங்க உடனிருக்கிறான். நாளொன்றிற்கு நூறு செய்யுட்களென்று சங்கற்பம் செய்துகொண்ட கச்சியப்பர் பாடல்களைச் சொல்லச்சொல்ல எழுத்தாணிகொண்டு எழுதி முடிக்கிறான். அர்த்த ஜாம பூசைக்குப் பிறகு கந்தன் திருவடிகளில் வைக்கப்பட்டு பிழைதிருத்தப்படும் பாடல்களை மறுதினம் படியெடுத்து உதவுகிறான். ஆலயப் பூங்காவனத்திலிருந்து கண்ணி, கடம்பம்,காந்தள், குறிஞ்சி, செவ்வலரி ஆகிய முருகனுக்குகந்த மலர்களைக் குடலையிலிட்டு பூஜைக்கும்; முல்லை, மல்லிகை, திரு ஆத்தி முதலியவற்றை மாலைகள் கட்டுவதற்காக அர்ச்சகரின் அழகுமகள் தேவயானியிடமும் வழங்க, இவனது கனவு நனவாகிறது. தேவயானி பார்த்திபேந்திரனை நெஞ்சில் வைத்துப் போற்ற ஆரம்பித்துவிட்டாள். தான் பழனிவேலனல்ல பார்த்திபேந்திரன் என்று சொல்லும் காலம் நெருங்கிக் கொண்டிருக்கிறதென உள்மனம் சொல்கிறது.

சமய தீட்சைகொடுப்பதற்காகவென்று சிறிய காஞ்சிபுரம்வரை, கச்சியப்பர் சென்றிருந்தார். இடையூறற்ற சந்தோஷத்தில், காமாட்சி அம்மன் பொற்றாமரைக்குளக்கரையில் வழக்கமாகத் தாங்கள் சந்திக்கின்ற புன்னை மரத்தடியில் பார்த்திபேந்திர பல்லவரையனும், தேவயானியும் அமர்ந்திருக்கின்றார்கள். காற்றுக்குத் தன் பணிநேரம் முடிந்திருக்கவேண்டும் ஓய்ந்திருக்கிறது, இதழ்விரித்திருந்த பூக்களில் அக்கடாவென்று மதுவுண்டிருந்த வண்டுகள், எழ முடியாமல் மயக்கத்திற் கிடக்கின்றன. சில நாழிகைகளுக்கு முன்புவரை குளத்திலிருந்த வெண்நாரைகள், சற்று முன்புதான் கூட்டமாய் பறந்து போயிருந்தன. இருவர் மனதிலும் வீம்பு. இருவருக்கிடையிலும் நிலவிய மெளனத்தை அர்த்தப்படுத்துவதைப்போன்று நிசப்தம் நீண்டுகொண்டிருக்கிறது. குமரக்கோட்டத்திலிருந்து எழுந்த காண்டாமணியின் ஓசை, தடாகத்தில் அலைகளாய் கரைகிறது. அவ்வோசைக்குத் துணை சேர்ப்பதுபோல ‘உஸ் ‘ஸென்ற சத்தம். இருவரும் திடுக்கிட்டுத் திரும்புகின்றார்கள், ஆறடி நீளமுள்ள நாகம். பார்த்திபேந்திரன் சற்றும் தாமதிக்காமல் சர்ப்பத்தின் வாலைப் பிடித்து சுழற்றிப் பூமியில் அடித்துப் பின்பு தூக்கி எறிறான். தேவயானி அதிர்ச்சியில் உறைந்திருந்தாள். மீண்டும், இருவருக்கிடையிலும் மெளனம். பார்த்திபேந்திரனுக்குப் பொறுக்கவில்லை,

‘தேவயானி.. நீ நடத்தும் ஊடலுக்கு காரணமென்னவென்று அறியலாமா ? ஏன் வாய் திறக்கமாட்டேனென்கிறாய் ? என்மீது உனக்கேன் கோபம். சில தினங்களாக உன்போக்கு எனக்கு வீணான மனக்கவலையை அளிக்கிறது. நீ நடத்தும் நாடகத்தினை என்னால் புரிந்து கொள்ளமுடியவில்லை. என்னைக் காணுங்கால் சிவக்கும் விழிகளும், உணவிடும் போது தட்டத்தையும், குவளையையும் வைக்கும் பாங்கும், நீ வளர்க்கும் மாடப்புறாக்களிடமும் மயில்களிடமும், காரணங்களேதுமின்றி அனல் கக்கும் வார்த்தைகளைப் பிரயோகிப்பதும் எதற்காகவென்று இன்றைக்குத் தெரிந்தாகவேண்டும். வாய் திறப்பாயா ? மாட்டாயா ? ‘

‘என் கோபம் இயற்கையானதென்று தங்கள் மனதிற்குத் தெரியாதா ? அல்லது தெரிந்திருந்தும் கேட்பதென்றால் உங்கள் வழக்கமான நாடகத்தில் இதுவுமொன்றோ என்கிற ஐயப்பாடு எழுகிறது. ? ‘

‘தேவயானி!..நான் கேட்ட கேள்விகளுக்குப் பதிலளிக்காமல், என்னைக் குற்றவாளியாக்குவது எந்த விதத்தில் நியாயம் ? நானிழைத்த குற்றமென்ன ? அதைச் சொல்லிவிட்டுக் கோபித்துக்கொள். இப்படி விசாரிக்காமல் தண்டனை வழங்குவதுதான் பெண்கள் நீதியா. ‘

‘அன்பரே, எதற்காக கோபப்படுகிறேனென்று உங்கள் உள்ளம் உண்மையாய் அறியாதா ? சமீப தினங்களில் என்ன நடந்ததென்று நினைத்துப் பாருங்கள் ‘

‘கடந்த திங்களன்று, உன் கூந்தலிலிருந்து விழுந்திருந்த செம்பருத்தியொன்றை கூடத்திற் கண்டெடுத்து, நான் கண்களில் ஒற்றிக்கொண்டிருக்க, நீ வேகமாய்த் திரும்பியவள், பொய்க்கோபத்துடன் என்னிடமிருந்து அபகரித்துச் சென்றதாய் நினைவு..

செவ்வாய்கிழமை, நந்தவனத்தில் பூஜைக்கென்று மலர்களைக் கொய்துக் கொண்டிருக்கிறேன், ‘ஆ ‘ வென்று சத்தம். நான் குடலையை அங்கேயே தவறவிட்டு ஓடிவருகிறேன். நீர் சேந்தும் குடமும் கயிறும் கிணற்றில் விழுந்திருக்கிறது என்பது புரிந்தது. உன் ஆடையிலும், ஆடையின் கவனத்திலிருந்து விடுபட்டிருந்த சிவந்த பாதங்களிலும், மாருதாணி இட்டதுபோல பாசிமெழுகியிருக்கிறது. உன் தந்தை அருகிலில்லை என்கிற தைரியத்தில் உரிமையாய் தொட்டுத் தூக்க முயற்சிக்கிறேன், நீ வேண்டாமென்று தடுத்துவிட்டு வார்த்தையேதுமின்றி எழுந்தவள், என்னைத் திரும்பிப் பார்க்கவேண்டாமென்று தீர்மானித்தவளாக விடுவிடுவென்று நடந்து குடிலுக்குள் மறைந்ததாய் நினைவு.

புதனன்று வியாழனன்று நைவேத்தியப் பொங்கலென்று, தாமரை இலையில் வைத்து உன் தந்தைக்கும் எனக்குமாகக் கொடுக்கிறாய். பொங்கலில் உன் கரிய கேசமொன்று விழுந்திருப்பதைக் கண்டவுடன், உன் தந்தை அறியாவண்ணம் அவசரமாகவெடுத்து என் உத்தரீயத்தில் முடிந்துகொள்கிறேன். இலையில் நீர் முத்தொன்று விழுந்து உடையாமல் உருண்டோடுகிறது. நிமிர்ந்து பார்க்கிறேன், விழிகளில் நீர் கோர்த்திருக்கிறது. அன்றைக்கு அஞ்சனம் தீட்டவும், நீ மறந்திருந்ததாய் ஞாபகம். ‘

அனுமதித்தால், தன்னை எங்கே இன்ப சாகரத்தில் அமிழ்த்திவிடுவானோ என்கிற அச்சம், அர்ச்சகர் பெண்ணுக்கு ஏற்பட்டது. தேவயானி பற்களை நறநறவென்று கடித்து பொய்க்கோபம் காட்டினாள்.

அவள் மனம், மகுடிக்கு மயங்கிய நாகத்தின் நிலைக்கு வந்திருக்கிறது; என்பதைப் பார்த்திபேந்திரன் உணர்ந்திருந்தான் தன்னுடைய காதற்செப்பேடு வாசிப்பினை நிறுத்தும் பட்சத்தில், அவள் ‘சீறும் ‘ அபாயம் இருக்கிறது என்பதை உணர்ந்தவன், தொடர்ந்தான்.

‘கடந்த வியாழனன்று…. ‘

‘போதும்! புருஷர்களின் கபட நாடகத்தை ஸ்த்ரீகள் அறிவோம். வார்த்தை ஜாலம் செய்து, உத்தம புருஷனென்று என் மனதிற் தீட்டியுள்ள தங்கள் ஓவியத்தை மாசுபடுத்தப் பிரயத்தனம் வேண்டாம். உண்மையில் தங்களுக்கு வேறு நினைவுகள் இல்லையா ? சென்ற கிழமையில் நடந்தேறிய பங்குனி உத்திரவிழாவோ – ஊரெல்லாம் கூடி இழுத்த தேரோ- விழாக்காலங்களில் நடந்த ஒயிலாட்டமோ, வேலனாட்டமோ, நினைவில் இல்லையா ? என் தந்தை இரண்டு நாட்கள் காய்ச்சலென்று வீட்டிற் கிடந்தாரே, அதற்காக வைத்தியர் குடிலுக்கு வந்திருந்தாரே, ஞாபகத்தில் இல்லையா ? கடந்த பெளர்ணமியன்று உங்கள் தோழர் பேசும்பெருமாள் சூரியன் அஸ்தமித்த நான்கு நாழிகைக்குப் பிறகு வந்திருந்து நந்தவனத்தில் உங்களிடம் வெகுநேரம் உரையாடிச் சென்றதேனும் ஞாபகத்தில் இருக்கிறதா ? இல்லையா ? ‘

‘தெய்வானையின் இரு கைகளையும் ஒருசேரப் பற்றினான், ‘பெண்ணே! எதற்காக இப்பல்லவி ? உன் மன வருத்தத்திற்கான காரணத்தைச் சொல் ? நான்தான் காரணமென்றால், அதனைப் போக்க முயற்சி செய்கிறேன். ‘

‘சற்றுமுன், ஆறடி நீளமுள்ள சர்ப்பமொன்றை வாலைப் பிடித்து தூக்கி எறிந்ததும் எனது சந்தேகம் தீர்ந்தது. ‘

‘என்ன சந்தேகம் ? ‘

‘பெளர்ணமி தினத்தில் தங்களுக்கும், தங்கள் சினேகிதருக்கும் நடந்த உரையாடலில் சிலவற்றை நானும் கேட்க நேர்ந்தது. அப்படிக் கேட்டது தவறென்றால் என்னை நீங்கள் மன்னியுங்கள். ஆனால் அதனைக் கேட்க என உரிமையுண்டு என்று நம்பினேன். தங்கள் சிநேகிதர் பேசும்பெருமாள், உங்கள் தாயாரிடமிருந்து சேதிகளை மாத்திரம் கொண்டுவருபவரல்லர், அரசாங்க சேதிகளும் கொண்டு வருபவர் என்று அறிந்தேன். கேட்ட வசனங்களை வைத்துப் பார்க்கின்ற பொழுது, நீங்கள் ஏதோ அரசாங்க சம்பந்தமான ரகசியங்களை பறிமாறிக்கொள்கிறீர்களென்றும், சாதாரணக் குடும்பத்தைச் சார்ந்தவரல்லரென்பதும் தெளிவாயிற்று. ‘

‘தேவயானி..! இனியும் உன்னிடம் சிலஉண்மைகளை மறைப்பதில் நியாயமில்லை. அவ்வுண்மைகளை மறைத்ததும் உனக்கோ, உன் தந்தைக்கோ இன்னல்கள் ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கினாலும் அல்ல. நான் அரச வம்சத்தைச் சேர்ந்தவன் என்பது உண்மை. அப்பின்புலம் நம் காதலுக்குத் தடையாகிவிடுமோ என்று அஞ்சினேன். ‘

‘உங்கள் உரையாடலில், தொண்டைமண்டலம், படையெடுப்பு என்று பேச்சு வந்ததே ? ‘

‘சொல்கிறேன் கண்ணே!. ஆனால் எனக்கொரு உறுதிமொழி தரல்வேண்டும், நான் சொல்கின்ற உண்மைகளை சிலதினங்களுக்காகினும் வேறொருவர் செவிக்கு எட்டாமல் நீ பார்த்துக்கொள்ளவேண்டும். நீ நினைப்பதுபோல நான் உத்திரமேரூர் பெருநிலக்கிழார் ஆரூரார் மைந்தன் பழனிவேலன் அல்லன். பல்லவகுலத்தைச் சேர்ந்தவன், வானவன் பல்லவரையன் திருக்குமாரன், பார்த்திபேந்திர பல்லவரையன் என் நாமம் சூடியவன். மகேந்திரர், நரசிம்மர் காலத்து பல்லவராச்சியத்தை மீண்டும் கட்டி எழுப்பவேண்டும் என்பதான என் மனோராச்சியம் நிறைவேறப்போகிறது. சங்கமச் சகோதர்கள் உருவாக்கிய விஜயநகர சாம்ராச்சியம் வடக்கே வளர்ந்து வருகின்றது. விஜய நகர சாம்ராச்சிய ஸ்தாபகர்களில் ஒருவரான புக்கர், தம்மைந்தர் ‘குமாரகம்பண்ணன் தலைமையில் அனுப்பியுள்ள பெரும்படையொன்று மதுரைக்குச் செல்லும் வழியில் எந்த நேரத்திலும் தொண்டைமண்டலத்தில் நுழையலாம் என்பதாகச் சேதிவந்துள்ளது. விஜயநகரப்படைகள் தொண்டைமண்டலத்தை இராசநாராயணச் சம்புவரையனிடமிருந்து மீட்டு என்னிடம் கைய்யளிப்பதாக வார்த்தைபாடு கொடுத்துள்ளார்கள். வருகின்ற விஜயநகர சைன்யத்துக்கு ஆதரவாக மிக ரகசியமாக, ஒரு பெரும்படையைக் காஞ்சியில் திரட்டியிருக்கிறோம். அண்டர்கள் புகழும் தொண்டை நன்னாட்டில் மீண்டும் நந்திக்கொடி பறப்பதற்கான வேளை நெருங்கிவிட்டது. நகரேஷுக் காஞ்சி மீண்டும் எனது குடைக்கீழ் தொன்னகரமாகிய நன்னகரமாக அவதாரமெடுக்கவிருக்கிறது. பார்த்திபேந்திரன் பல்லவரையன், மகாராஜனென்றும், தேவயானியை மகாராணியென்றும் இவ்வுலகம் அழைக்கப்போகிறது. குரு கச்சியப்பரின் ஆசியுடன் உன்னைத் திருமணம் செய்துக்கொள்ளப்போகிறேன். ஈரேழு புவனங்களும் எதிர்த்து நின்றாலும், என் கனவுகள் நனவாவது உறுதி; சத்தியம். ‘

ஆவேசத்துடன் பார்த்திபேந்திரன் வார்த்தைகளைப் பிணைத்துப் பேசுகிறான். சற்றுமுன்புவரை குரலில் இழைந்த குழைவும், மென்மையும், விலகிக்கொள்ள தொனியில் கம்பீரம் கலந்திருக்கிறது. திடாரென்று மஹா புருஷனாக, பரவெளிகடந்து நிற்பதைப்போல உணர்வு, தேவயானிக்கு உடல் சிலிர்க்கிறது. கருவிழிமடல்கள் படவென்று படவென்று அடித்து ஓய்ந்து இமைக்க மறந்து நிற்கின்றன. பிரம்மிப்புடன் பார்க்கிறாள். அவனது ராட்ஷஸ வாலிபம், இதற்கெனவே காத்திருந்ததுபோல தாழிடமறந்த பார்வைக்குள், மனைக்கு உரிமையாளனைப்போல அதிகாரமாய் நுழைந்து இவள் சரீரத்தினைக் கையகப்படுத்திக்கொள்கிறது. சம்பந்தர் பாடிய, ‘பிரம்மாபுரமேவிய பெம்மாவனின்றே ‘ தேவாரத்து வரி இவளுக்கு நினைவுக்கு வருகிறது. பூமியில் விழுகின்ற மழைத்துளியின் அவசரத்துடன் தேவயானி என்கிற பெண்கொடி பார்த்திபேந்திரன் என்கிற கொழுகொம்பில் சுற்றிப்படர்ந்தது.

‘தேவயானி!.. ‘ அப்பிரதேசமே நடுங்கும்படியானக் கர்ச்சனைக் குரல்.

குரலினைக்கேட்டுப் பார்த்திபேந்திரனும், தேவயானியும் தங்களை விலக்கிக்கொண்டு பதறி எழுந்தனர். குரல்வந்த திக்கில் அர்ச்சகர் கச்சியப்ப சிவாச்சாரியார்: புருவங்களை நெரித்துக்கொண்டார். கண்களிரண்டும் கோவைப்பழங்கள் போல சிவந்திருக்கின்றன. பற்களை நறநறவென்று கடித்தவண்ணம், கிடைத்தஇடைவெளிகளில் பேசத்துடிக்கிறார். அவரருகே இளம்வயது பிராமணன் ஒருவன்: ஒடிசலான தேகம்,பெண்மை முகம். வேட்டியைப் பின்புறம் வாங்கி, இடுப்பிற் சொருகி இருந்தான். தலையை முன்புறம் சிரைத்து, பின்புறமிருந்த அடர்த்தியான முடியைக் குடுமியாக்கியிருந்தான். நெற்றியிலும், ரோமமற்று வெறுமையாய்க் கிடந்த மேலுடல் முழுவதிலும் விபூதிப் பூச்சு. அடர்த்தியான புருவத்திலிருந்து வெளிப்பட்டிருந்த பெரிய கண்கள், விஷப்பார்வை.

‘பாதகி என்ன காரியம் செய்கிறாய். குலத்தைக் கெடுக்க வந்த கோடரிக்காம்பே. உன் நாசச் செயல்களுக்கான பலா பலன்களை யோசித்துப் பார்த்தாயா ? நீ திருமணம் ஆனவள் என்பதை மறந்துவிட்டயா ? குமரகோட்டத்துக் கடவுள், இப்பாவியின் பிரார்த்தனைக்குச் செவிசாய்க்காமற் போய்விடுவான் என்று நம்பினாயா ? இங்கே பார்! பால்ய வயதில் உன்னை விவாகம் செய்துகொண்டு தேசாந்திரம் போயிருந்த உன் புருஷன் சொக்கேசன் தேடி வந்திருக்கிறான். ‘

‘சுவாமி! ‘- நடந்தனைத்தும் அறிவேன். தேவயானி என்னிடம் விபரமாகச் சொல்லியிருக்கின்றாள். அவளது பால்யவிவாகம், அறியாவயதிற் கட்டிய மணல் வீடென்றே சொல்லவேணும். அதற்கான ஆயுள் நாழிகைக் கணக்கில் எழுதப்பட்டதென்பதை ஞானவான் உங்களுக்கு விளக்கவும் வேண்டுமா ? ‘

‘துன்மார்க்கா! பேசாதே. பழனிவேலன் என்று பொய்பகர்ந்து என் வீட்டிற்குள் நுழைந்த கருநாகமே, நீ பேசியதனைத்தும் நான் கேட்டேன், சம்புவரையர்களுக்கு மாத்திரம் சேதியனுப்பும் பட்ஷத்தில், கோட்டைவாயிலில் உன்னை, இந்தச் ஷணமே கழுவேற்றிவிடுவார்கள். போகட்டும், அதற்கென் மனம் ஒப்பவில்லை. கண் முன் நிற்காதே! தயவுசெய்! போய்விடு. ‘

‘தேவயானி! இனி நானிங்கிருப்பதால் பிரயோசனம் இல்லை. உன் தந்தை நாம் சொல்வதைக் கேட்கின்ற மனநிலையில் இல்லை. நீ அச்சமொழிந்து தைரியமாக இரு. உன்னை அவசியம் சந்திப்பேன். உனக்கு நானென்றும் எனக்கு நீயென்றும் பிரம்மாவால் எழுதபட்டிருக்கிறது. அதனை அப்பிரம்ம பிரயத்தனத்தினாற் கூட மாற்றி எழுதவதென்பது இயலாது என்கிறபோது, உன் தகப்பனாரா மாற்றி எழுதப்போகிறார் ? மீண்டும் வருவேன். அவர் ஆசியோடே உன்னைக் கைப்பிடிப்பேன். ‘ பார்த்திபேந்திரன் வேகமாகச் சென்று மறைந்தான்.

தேவயானிக்கு நடந்ததனைத்தும் கனவாக இருக்கக்கூடாதா என்றிருந்தது. தந்தை கச்சியப்பரை நோக்கினாள். விலா எலும்புகள் புடைத்துக்கொள்ளச் சிறிது நேரம் இறுமினார், சோர்ந்தார், எதையோ சொல்லவந்து மூர்ச்சையாகி விழ இருந்தவரைச் சொக்கேசன் தாங்கிப் பிடித்தான். தேவயானியிடம், இனம் புரியாத கலவரம், அண்ணத்தில் ஒட்டிய கேசத்தினைப்போன்று அருவ ஆரம்பித்து, ஒன்றோடொன்றெனப்பின்னி, சிக்கலுண்டு பந்தாய்த் திரண்டு நெஞ்சினை அடைக்கிறது.

‘தேவயானி! அருகில் வா!.. கை கொடு. உன் தந்தையைக் குடிலுக்கு அழைத்துச் சென்று ஆசுவாசப்படுத்துவோம். தேவையென்றால் வைத்தியர் ஒருவரை அழைத்துப் பார்க்கலாம். ‘ இவளைப்பார்த்துச் சொல்லியவண்னம், சொக்கேசன் கச்சியப்பரைக் கைத்தாங்கலில் மெல்ல அழைத்துச் சென்றான்.

இவள் நிலைமையைப் புரிந்துகொண்டு சொக்கேசனுக்கு உதவியாக, மறுபுறம் தன் கரத்தினைக் கொடுத்தாள். கச்சியப்பரைத் தாங்கிப் பிடித்திருந்த சொக்கேசன், இவளது கையுடன் உரிமையாக இணத்துக் கொள்ள, பதட்டத்துடன் அவன் கரத்தினைத் தட்டிவிட்டாள்.

‘ஏன் என் தீண்டலுக்கும், பார்த்திபேந்திரன் தீண்டலுக்குமிடையே வித்தியாசங்கள் ஏதேனும் இருக்கின்றனவா ? ‘ நிதானமாகக் கேட்ட சொக்கேசன் வார்த்தைகள் நஞ்சில் தோய்ந்திருக்கின்றன. இரைகண்ட வல்லூறுவைபோல நெருங்குகிறான். பூமி மெல்ல மெல்ல நழுவுகிறது. தேவயானிக்குத் தலை சுற்றுகிறது.

/தொடரும்/

—-

Na.Krishna@wanadoo.fr

Series Navigation

நாகரத்தினம் கிருஷ்ணா

நாகரத்தினம் கிருஷ்ணா

நீலக்கடல் -(தொடர்) – அத்தியாயம்- 33

This entry is part [part not set] of 42 in the series 20040819_Issue

நாகரத்தினம் கிருஷ்ணா


மொய்ப்பால் நரம்பு கயிறாக மூளை என்பு தோல் போர்த்த

குப்பாயம்புக் கிருக்க கில்லேன் கூவிக்கொள்ளாய் கோவேயோ

எப்பா லவர்க்கும் அப்பாலாம் என்னாரமுதேயோ

அப்பா காண ஆசைப்பட்டேன் கண்டாய் அம்மானே.

-மாணிக்கவாசகர்

அதிர்ச்சிக்கும் ஆச்சரியத்திற்கும் இடைவெளி குறைவு என்பதனை மாறன் மறுபடியும் கிட்டங்கியில் கண்டான். கடந்த மூன்றுநாட்களாக அடுத்தடுத்து ஏற்பட்ட நிகழ்வுகளை, இந்த இரண்டுக்கும் இடையிலேதான் கவனமாகக் கூறுபோடவேணும்.

தொண்டைமாநத்தம் போனதிலிருந்தே ஆச்சரியமும் அதிர்ச்சியும் அடுத்தடுத்து நிகழ்ந்தன. பொய்யாய்த் தன்னைக் காமாட்சி அம்மாள் என்று சொல்லித்திரிகின்ற பெண்மணி தேவராசன் அத்தையென அறியவந்தது ஆச்சரியம் என்றால், தேடிப்போன இடத்தில் வாணியைக் காண நேர்ந்தது இன்ப அதிர்ச்சி. தேவராசனைத் தொடர்ந்து குதிரையை அரியாங்குப்பம் ஆற்றுவரை விரட்டிச் சென்றது, ஆற்றங்கரை வளவு, அங்கு கூடிய மனிதர்களால் எழுகின்ற சந்தேகங்கள், அனைத்துமே ஆச்சரியப்படுத்துபவை, ஆனாலங்கே வேலாயுதமுதலியாரை வேவுபார்க்க துபாஷ் பலராம்பிள்ளையால் அமர்த்தப்பட்டிருந்த ஒற்றன் சன்னாசியைச் சந்திக்கநேர்ந்தது அனுகூல அதிர்ச்சி. அவனுடன் அர்த்த ராத்திரியில் கள்ளுக்கடைக்குப் போக நேர்ந்ததற்கும், கிட்டங்கியில் சிறைப்பட்டிருப்பதற்கும் காரணம் எதுவாயினும், அவை ஆச்சரியமான சங்கதிகள்தான். ஆனாலிங்கே, துபாஷ் பலராம்பிள்ளையும் பரிதாபமாக அடைபட்டுக் கிடப்பதைப் காண நேர்ந்தது எதிர்பாராத அதிர்ச்சி.

‘இங்கிருந்து தப்பியாகவேண்டும் ‘, இவன் காதருகே முணுமுணுக்கின்ற துபாஷின் வார்த்தைகளில், ஏதோ தீங்கொன்று நடக்கவிருக்கின்றது என்பதற்கான எச்சரிக்கை இருக்கின்றது. துபாஷ் பலராம்பிள்ளை, மாறன், சன்னாசி ஆகிய மூவரும் பெர்னார்குளோதனோடு சம்பந்தப்பட்டவர்கள் என்கின்றவகையில், எதிரிக்குக் காரணங்கள் இருக்கின்றன. ஆனால் மற்ற மனிதர்கள், பத்துப் பதினைந்துபேர்களை அடைத்து வைத்திருக்கும் முகாந்திரமென்ன ?

பெரும்பாலோர் மொட்டை அடிக்கபட்டிருக்கிறார்கள். காலில் இரும்பு வளையமிருக்கிறது. கூட்டத்திலிருந்த சிலர் சோர்ந்துகிடக்கிறார்கள், சிலர் தூங்குகிறார்கள். விழித்தவர்களில் சிலர் இவர்களை அதிசயமாய்ப் பார்த்துக்கொண்டு எழுந்து உட்காருகிறார்கள். சிலர் இடையில் கட்டியிருந்த நாலுமுழத் துண்டைத் தரையில் விரித்து கோமணத்துடன் முழங்கையைத் தலைக்குக் கொடுத்து எதுவும் நடவாததுபோல நித்திரைகொண்டிருக்கிறார்கள். சிலர் துக்கித்திருக்கிறார்கள் சிலர் சந்தோஷமாகக் கதைக்கிறார்கள். இருவர் ஆடு புலி ஆட்டம் ஆடுகின்றார்கள். ஒருவன் வெற்றிலை குதப்பிக்கொண்டிருக்கிறான். மனிதர்களோடு சம்பந்தமில்லாத எலிகள், செத்த எலிகள், அவற்றின் கழிவுகள். எலிகளைக் குறுக்கும் நெடுக்குமாகத் துரத்தியோடும் பூனை, அதன் கழிவுகள் -ராட்ஷத பல்லிகள், அவற்றின் எச்சம்- இவற்றால் குமட்டும் வகையில் நாற்றம்.

‘துபாஷ்! நீங்கள் இங்கு வந்த விதமென்ன ? இம்மனிதர்கள் யாவர் ? இவர்களை அடைத்து வைத்திருக்கும் காரணமென்ன ? ‘

பலராம் பிள்ளை, மாறனருகில் நெருங்கி உட்கார்ந்தார். துபாஷ்த்தனம் குடியானவனிடம் நெருங்கி உட்காருகிறது. மாறனுக்குக் கூச்சமாயிருந்தது. வறுமையும், ஆபத்தும் சுலபமாய் மனிதர்களைச் சமன்படுத்திவிடுகின்றது.

‘இவர்கள் பிரெஞ்சுத் தீவுக்கு முறையற்ற வழிகளில் கடத்திச் செல்லப்படவுள்ள மனிதர்கள். கடந்த சில வருடங்களாகவே புதுச்சேரியிலிருந்து ஆட்களைக் கடத்துவது தொழிலாக நடக்கின்றது. ஆப்ரிக்கர் நாடுகளிலிருந்து கறுப்பின மக்களைக் கடத்துவதும், அவர்களை அடிமைகளாகப் பறங்கியர்களிடத்தில் விற்கப்படுவதும் மத்தலோக்கள் மூலமாக நான் ஏற்கனவே அறிந்திருந்திருக்கிறேன். ஆனால் புதுச்சேரி ஆட்களை கடத்துவதை, சன்னாசி சொல்லத்தான் எனக்குத் தெரியவந்தது. இப்போது அதனைக் கண்கூடாகப் பார்க்கலாச்சுது. ஒப்பந்தக் கூலிகள் வேண்டுமென்று, பிரெஞ்சுத்தீவுக் கும்பெனி அரசாங்கம், புதுச்சேரி கும்பெனிக்கு அவ்வப்போது எழுதுவதும், புதுச்சேரி கும்பெனி ஆலோசனை சபையைக்கூட்டி, சம்மதமெனில் அவர்களை அனுப்பிவைப்பதும் கிரமப்படி நடக்கின்றது. நமது சனங்களும் வயிற்றுப்பிழைப்புக்காகக் கும்பெனியுடன் சமரசம் செய்துகொண்டு கப்பலேறுகின்றார்கள். ஆனால் அங்கே அவர்களின் கதியென்னவென்று ஆர் அறிவார் ? ‘

‘அவர்கள் கஷ்டசீீவனத்தில் இருப்பார்களோ ? ‘

‘தெரியாது. உறவினர்களேயானாலும் ஒருவர் வீட்டில் உட்கார்ந்து அண்டிப் பிழைக்கும்போது அந்தஸ்தை எதிர்பார்க்கமுடியுமோ ? கடவுள்களிடத்திலே கூடப் பாகுபாடு இருக்கச்சே, அவனாற் படைக்கபட்ட மனிதர்களும் அந்தப்படிக்குத்தானே வாழக்கடமைப் பட்டுள்ளார்கள். பறங்கியர்கள் மகா புத்திசாலிகள். இங்கே என்ன நடந்திருக்கிறது என்று யோசித்துப்பார். நமது தேசத்தில் தங்கி வியாபாரம்பண்ண வேணுமாய் விண்ணப்பம் தாக்கீது செய்தார்கள். கும்பெனிக்கு நிதி நிலைமை சரியில்லையென்றுபோட்டு, கடன் கேட்டார்கள். காசு அடிப்பதற்கு தங்கசாலை அமைத்துகொள்ள உத்தரவு கேட்டார்கள். ஆற்காட்டு நவாபுகள், கடவுள்கள் வரம் கொடுப்பதுபோல கேட்டதெல்லாம் அட்டியின்றி கொடுத்தார்கள். காலம் மாறிப்போச்சுது. காற்று பறங்கியர் திசைக்கு வீசுகிறது. இன்றைக்குப் பீவிகளையும் பேகம்களையும் வெகுமானத்துடன் அனுப்பிவைத்து, நவாபுகள் தங்கள் பதவிகளைக் காப்பாற்றிகொள்ள கும்பெனி தயவுபண்னவேணுமென, காத்துகிடக்கலாச்சுது.

‘பெர்னார்குளோதன் போன்ற நல்ல பறங்கியர்களும் இருக்கலாமில்லியா ? ‘

‘இதுபோன்ற கற்பிதங்கள் வேண்டாமே. நமது ஊழியத்திற்கேற்ற விசுவாசத்தினை வைத்திருப்போம் தவறில்லை. பறங்கியர்களிடம் அதிகப்படியான விசுவாசம் வேண்டாம். நீ வாலிபன். உணர்ச்சியின் அடிப்படையில் விஷயங்களைப் பார்க்கிறாய். நான் அனுபவங்கள் ஊடாகப் பார்க்கிறேன். பாம்புகளில் வித்தியாசம் விஷ அளவில்தானுள்ளது. துப்ளெக்ஸ், லாபூர்தொனே, பிரான்சுவா ரெமி, பெர்னார்குளோதன் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொருவிதமான பேரு. நாகப்பாம்பு, கட்டுவிறியன், சாரைப்பாம்பு, கொம்பேரி மூக்கன் என்பதுபோல. நாமெல்லாம் தவளைகள் என்று தெரிந்துகொண்டிருக்கிறார்கள். எப்போதுவேண்டுமானாலும் நம்மை விழுங்கலாம். புசித்துப் பசியாறலாம். ‘

‘துபாஷ் வார்த்தைகளைக் காதில் வாங்கிக்கொண்டே, தனது மடியிலிருந்து வைத்திருந்த ஓலை நறுக்கொன்றையும், எழுத்தாணியையும் எடுத்தான். ‘

‘இவையென்ன ? ‘

‘ஓலை நறுக்குகள், எழுத்தாணி ‘

‘அவை என்னவென்று புரிகிறது; அவற்றை வைத்துக்கொண்டு நீ என்ன செய்யப்போகிறாய் என்று கேட்கிறேன் ‘.

‘நீங்கள் சொல்வதைப் பதிவு செய்யவேணும், எனக்கேற்பட்ட நேற்றைய அனுபவங்களை எழுதிவைக்கவேணும். ‘

‘ஆனந்தரங்கப்பிள்ளையிடமிருந்துத் தொற்றிக்கொண்ட பழக்கமா ? ‘

‘ஆமாம். அப்படித்தான் சொல்லவேணும். அவரது பாக்கு மண்டியில் புதுப்பாக்கத்தைச் சேர்ந்த எனது உறவினன் ஒருவன் வேலைசெய்கிறான். அவனிடம் ஒருமுறை பேசிக்கொண்டிருந்தபோது, கேட்டது. அவர் புதுச்சேரியில் நடக்கின்ற சங்கதிகளை நாள் தவறாமல் எழுதி வைக்கின்ற பழக்கமாம். அதைக் கேள்விப்பட்டதிலிருந்து எனக்கும் அவ்வாறு எழுதிவைத்தாலென்ன என்று தோன்றியது. அவர் அளவுக்கு எழுதவேணுமுண்ணு நினைத்ததில்லை. எனக்கேற்பட்ட அனுபவங்களைச் சொல்லவேணும். ‘

‘அப்படியா ? ‘

‘எழுதியவற்றைப் படித்துப் பார்க்கின்றபொழுது சுவாரஸ்யமாக உள்ளது. ‘

‘பத்திரப்படுத்திவை. வருங்காலத்தில் யாரேனும் படித்து ஆச்சரியப்படலாம்.

‘ஆனந்தரங்கப்பிள்ளை குறித்து என்ன நினைக்கின்றீர்கள் ? ‘

‘நினைப்பதற்கு என்ன இருக்கிறது. ஆனந்தரங்கபிள்ளையோ, கனகராயமுதலியாரோ, காட்டுகின்ற விசுவாசம் காளான்கள் விசுவாசம். இடம்பார்த்து முளைத்து, பெருகவேணும். கும்பெனிகளால் இவர்களுக்கு வரும்படி இருக்கின்றது. வேறென்ன வேணும் ? தமிழ்க்குடிகளிடத்தில் எஜமானர்களாகவும், பறங்கியர்களிடத்தில் அடிமைகளாகவும் இருக்கப் பழகியவர்கள். ஒரு ஷத்திரியனுக்குத்தேவை கும்பகர்ணனும், கர்ணனுமேயன்றி, செயிக்கிறவர்கள் பக்கம் சாயும் விபூடணனும் விதுரனும் அல்ல. புராணங்களையும், இதிகாசங்களையும் தவறாகப் புரிந்துகொண்டு, இவர்களையெல்லாம் தலையிற் தூக்கிவைத்துக் கொண்டாடுகிறோம்.. ‘

‘ஏதேதோ, நாம் பேசும்படி ஆகிவிட்டது. நீங்கள் இங்கு வந்துசேர்ந்த வயணத்தைச் சொல்லுங்கள். ‘

‘நீயெப்படி இங்கு வந்து சேர்ந்தாயோ, அந்த வழியிற்றான் நானும் வந்திருப்பேன். ‘

‘நாங்கள் எப்படி வந்து சேர்ந்தோமென்பதை, எனது சிநேகிதன் நொண்டிக் கிராமணிதான் சொல்லவேணும். சம்பவம் நடந்தபோது கள்ளைக் குடித்துவிட்டு மயங்கிக் கிடந்தோம். அவன் மாத்திரமே போதையின்றி நித்திரை கொண்டவன். எழுந்தவுடன் விசாரித்தால், நடந்தது என்னவென்று தெரியும். நீங்களெவ்விதம் இவ்விடம் வந்து சேர்ந்தீர்கள் ? ‘

‘இரண்டு நாளைக்கு முன்னர் நீ தொண்டைமாநத்தம் புறப்பட்டுப் போக, நான் தெய்வானைப் பெண்ணைக் குறித்ததான தெலுங்கிலிருந்தத் தகவலின் அர்த்தமென்னவென்று தெரிந்துகொள்ள, பெர்னார் குளோதனிடம் உத்தரவு வாங்கிக்கொண்டுப் புறப்பட்டுப் போயிருந்தேன்.

புதுச்சேரியிலிருக்கின்ற ஒரு சில தெலுங்குமக்கள் மொழியைப் பேசமாத்திரமே அறிந்திருந்தார்கள். எல்லப்பிள்ளை எனப்பேர்கொண்ட எனது தாயாதியொருவர் முருங்கப்பாக்கத்திலே இருக்கிறார். அவரிடம் கேட்டதிலே, முருங்கப்பாக்கத்திலே இருக்கின்ற வீராநாயக்கன் என்பவனுக்கு, தெலுங்கு மொழி வாசிக்க வருமென்று சொன்னார்கள். அந்தப்படிக்கு மத்தியான போசனம் முடித்து, கொஞ்சம் நித்திரை கொண்டு, வெக்கை தணிந்தபிறகு நாலுமணிக்குமேலே புறப்பட்டுப் போனேன். இரண்டு கல் நடந்திருப்பேன். அங்கிருந்த நாவல் மரத்தடியில் சற்று இளைப்பாறிபோகலாமே என உட்கார்ந்தேன். அப்போது ஒரு குடியானவன் என்னருகில் உட்கார்ந்து வெற்றிலை போட்டான்.

‘ஐயா புதுச்சேரியிலிருந்து வருகிறீர்களா ? ‘ என்று கேட்டான்.

‘ஆமாமடா. உனக்குத் முருங்கப்பாக்கத்தில் வீரா நாய்க்கர் என்பவனைத் தெரியுமோவென கேட்டதற்கு, அவன் தம்முடைய குடிசைக்கு எதிரேதான் அவரது வளவு என்றும், உடன் வருவதாக இருந்தால் தானே அழைத்துபோவதாகவும் கூறினான். எனக்கு மகிழ்ச்சி ஆச்சுது. ‘உமக்குக் கோடிபுண்ணியமாகட்டும், அவர் வளவில் என்னைச் சேர்த்துப்போடு ‘, என்றேன். வெற்றிலையை வைத்துக்கொண்டு ‘ போடுகிறீர்களா, சாமி ‘, என்றான். நான் ‘ஓம் ‘ என்று சொல்ல அவனே வெற்றிலையும் சுண்ணாம்பும் கொடுத்தான். அதைபோட்டுக்கொண்டதுதான் தாமதம் என்னமோ மயக்கமாயிருந்தது. விழித்துப்பார்த்தால் இங்கிருக்கிறேன். ‘

‘…. ‘

அந்தக் குடியானவன் பெயர் பரமானந்தன் என்பதாக, இங்கே வைத்துத் தெரிந்துகொள்ள முடிந்தது. உன்னையும் என்னையும் இங்கே கொண்டுவந்து சேர்த்திருப்பது, பிரெஞ்சுத் தீவுக்குக் கள்ளத்தனமாக அனுப்புவதுமட்டும் காரணமாக இருக்கமுடியாது. அநேகமாக, அவர்களின் வேறு ஏதோ திட்டங்களுக்கு நாம் இடைஞ்சலாகவிருக்கலாம். ஒருவேளை அது பெர்னார்ட் குளோதன் -தெய்வானை சம்பந்தப்பட்டதாகவும் இருக்கலாம். ‘

‘எப்படிச் சொல்லலாச்சுது ? ‘

‘அந்தச் சம்பவத்தில் என்னிடமிருந்த ஓலை நறுக்குப் பறிபோயிருக்கிறது ‘

‘அய்யய்யோ, பெர்னார் குளோதன் கேட்டால் என்ன பதில் சொல்வீர்கள் ‘

‘மூலத்தை என் வீட்டில் பத்திரப்படுத்திவிட்டு, அதனைப் பிரதி எடுக்கச்செய்து, மடியில் கொண்டுபோனேன். ‘

‘இக்கிட்டங்கியைக் குறித்து வேறு தகவல்கள் உண்டா ? ‘

‘இருக்கின்றன. அங்கே உட்கார்ந்திருக்கின்றானே வைணவன், அவனைச் சாதாரணமாக எடைபோட்டுவிடாதே. அவனிடம் ஒரு பாரதம் எழுதுவதற்கான சேதிகள் உண்டு. பெயர் வரதாச்சாரி, .சொந்த ஊர் திருவந்திபுரம், புதுச்சேரிப் பறங்கியர்களிடம் உத்தியோகம் பார்க்கலாம் என்று வந்தவன், இவர்களிடம் சிக்கிக்கொண்டிருக்கிறான். அபிஷேகபாக்கத்தைச் சேர்ந்த ரெட்டியாருடைய ஆறுவயதுமகன் ஒருவனை பாவிகள் இங்கே கொண்டுவந்திருக்கிறார்கள். அந்தப் பாலகனைப் பிடித்துக்கொண்டுவந்தவன் இவர்களிடம் விற்றதை அந்த வழியாக வந்த மோர் விற்கும் பெண்மணி பார்த்துப்போட, அவளைக் கர்ப்பிணியென்றுகூட பாராமல் இங்கே கொண்டுவந்து சேர்த்திருக்கிறார்கள் ‘

‘இவர்களுக்கெல்லாம் சூத்திரதாரி ஆர் ? ‘

‘வரதாச்சாரி சொல்வதை வைத்து பார்ப்போமென்றால், பிரெஞ்சுத் தீவுவரை போகவேணும். இக்கட்டிடத்திற்கு இப்போதையச் சொந்தக்காரன் முத்தியால்பேட்டை வேலாயுதமுதலி. ஆனால் முதலி இவ்வீட்டை கிரையம் பெற்றிருப்பது யாரிடம் தெரியுமோ ? ஒரு சில ஆண்டுகளுக்குமுன்னால் லாபூர்தொனேயிடம் வாங்கியிருக்கிறான். வீடென்னவோ பிரான்சுவாரெமியின் ஆட்கள் பொறுப்பில் இருக்கிறது. ஆக எந்தப் புற்றில் எந்தப் பாம்பு இருக்குமோவென அச்சமாயிருக்கின்றது. இங்கே அடிக்கடி வந்துபோகின்றவன் சூதே (Soude) என்கின்ற பறங்கியன். திருவந்திபுரம் வரதாச்சாரி சொல்கின்ற அங்க அடையாளங்களைப் கேட்கின்றபொழுது, லியோத்தனான் பிரான்சுவாரெமியும் வந்துபோவதாய்த் அறிகிறோம். உண்மையில் சூதே என்பவன், பிரான்சுவா ரெமியின் கீழ் உத்தியோகம் பார்க்கிறவன். இவர்களது பேச்சுப்படி ஆனி 25ந்தேதி சீமையிலிருந்து ஒரு கப்பல் வருகிறது. அக்கப்பலில் உன்னையும் என்னையும், இங்கேயுள்ள மற்றவர்கைளையும் சேர்த்து அனுப்ப உள்ளார்கள். ஆகக் கப்பற்பயனத்திற்கு நாம் தயாராயிருக்கவேணும். ‘

‘எனக்கும் கப்பலேறி போகவேணும் என்கின்ற ஆசையுள்ளது. பிரெஞ்சுத் தீவீல் பாறைகளுக்கீழே தங்கக்காசு கிடப்பதாக ஒரு தொப்பாஸ்(Topas)* என்னிடம் சொல்லியிருக்கிறான். ‘ விழித்திருந்த நொண்டி கிராமணி, துபாஷ் பலராம்பிள்ளைக்கும் மாறனுக்கும் இடையில் நடந்த உரையாடலைக் கேட்டவன் சொன்னான்.

‘ஆகா அதற்கென்ன, அத்துடன் விரியன் பாம்பு முட்டைகளும் இருக்கின்றதாம். தாராளமாகப் புறப்படு. உன்னுடைய தொல்லை தாங்கமுடியாமல், என் தங்கை அதாவது உன் பெண்ஜாதி மூக்குசிந்துவதைக் கேட்க எனக்கும் அலுப்பாக இருக்கின்றது. ‘ என மாறன் பகடியைக் கேட்க, கிராமணியும் சூழ்நிலை மறந்து சிரித்தான். துபாஷ் பலராம்பிள்ளைக்கு எரிச்சலூட்டியது.

‘மாறன். நாம் நடக்க வேண்டியதைப் பார்ப்போம். இங்கே எப்போதாவது வந்து போகின்றவர்கள் என எடுத்துக்கொண்டால் சூதே என்பவனும், தேவராசனுமே. வெளியே இரண்டு காவலர்கள் உள்ளனர். உள்ளே இருப்பவர்களில் வலுக்கட்டாயமாகக் கொண்டுவரப்பட்ட ஆண்கள்மாத்திரம், ஒன்பது பேர் இருக்கிறார்கள். மற்றுமுள்ள பேர்வழிகளிடமும் நிலைமைகளை விளங்கவைத்தால் நம்மோடு சேர்ந்துகொள்ளுவார்கள். எனவே தேவராசனையும் சூதேவையும் சாமாளிப்பது சுலபம். பிறகு இக்கூட்டத்தினர், ஆட்கடத்தலைக் கள்ளத்தனமாக செய்வதால், நிச்சயம் கும்பெனிக்குப் பயந்துதான் ஆகவேணும். நமக்கு அதிக சிரமங்கள் கொடுக்கமாட்டார்கள். ‘

‘முதலில் என் கட்டுகளை அவிழ்த்துவிடுங்கள் ‘, மற்றதைப் பிறகு ஆலோசிப்போம்.

சன்னாசி மாறனது கட்டுகளை அவிழ்க்கவும், வீட்டின் கதவுகளை உடைத்துக்கொண்டு சிப்பாய்கள் நுழையவும் சரியாக இருந்தது.

/தொடரும்/

Na.Krishna@wanadoo.fr

Series Navigation

நாகரத்தினம் கிருஷ்ணா

நாகரத்தினம் கிருஷ்ணா

நீலக்கடல் -(தொடர்) – அத்தியாயம் – 29

This entry is part [part not set] of 54 in the series 20040722_Issue

நாகரத்தினம் கிருஷ்ணா


L ‘ETANG MYSTERIEUX, SUAIRE AUX BLANCHES MOIRES,

FRISSONNE; AU FOND DU BOIS LA CLAIRIERE APPARRAIT;

LES ARBRES SONT PROFONDS ET LES BRANCHES SONT NOIRES;

AVEZ-VOUS VU VENUS A TRAVERS LA FORET ?

– (Crepuscule) Victor HUGO

போர் லூயி – ஹோட்டல் தெ வீல் – குவர்னர் அலுவலகம். காவலுக்கென இருந்த சிப்பாய், குவர்னரை பார்க்கவென்று வந்த காமாட்சி அம்மாளையும் சீனுவாச நாயக்கரையும் தடையின்றி அனுமதித்தான். கபினே பணிகளில் கவனம் செலுத்தியிருந்த குவர்னர், அருகில் நின்று அறிவித்த உதவியாளரின் இரகசியக்குரல் கேட்டுத் தலை நிமிர்ந்தார். வந்திருப்பவர்களைக் கண்டார். இருமலபாரிகளும் இடுப்புவரை குனிந்து இருகைகளையும், மார்பில் குவித்து நிமிர்ந்தார்கள். அவர்களது செய்கையை அங்கீகரிக்கின்ற வகையிலே குவர்னர்முகம் மெல்லப் புன்முறுவல் செய்தது.

‘வாருங்கோ காமாட்சி அம்மாள், வாருங்கோ நாயக்கர், உட்காருங்கள் என்று சொல்லி முடிக்கவும், குவர்னரிடம் சேவகம் செய்பவன் இரண்டு விருந்தினர் இருக்கைகளை ஒழுங்கு செய்துவிட்டு ஒதுங்கி நின்றான். குவர்னரின் சமிக்ஞையைப் புரிந்துகொண்ட மாத்திரத்தில் அவ்விடத்திலிருந்து நீங்கிச் சென்றான்.

மலபாரிகளைக் குவர்னர் காரியாலயத்தில் காண்பதென்பது அபூர்வம். பிறகு அவர்களுக்கு இருக்கைகள் கொடுத்து உட்காரச் செய்து உரையாடுவதென்பது முயற்கொம்பு சங்கதி. காமாட்சி அம்மாளையும், சீனுவாச நாயக்கரையும் அப்படியான மனிதர்களல்லர். இவ்விருமலபாரிகளிடத்திலும் குவர்னர் காண்பிக்கின்ற அக்கறையும், வைத்திருக்கின்ற நெருக்கமும் குவர்னரின் காரியாலயம் மாத்திரமல்ல தீவு முழுக்கப் பரவியிருந்தது. அதற்கான காரணங்களைத்தேடி அலுத்துப்போனார்கள். குடியேற்றவாசிகளில் சிலபறங்கியர்கள் நேரடியாகவே தங்கள் அதிருப்தியைக் குவர்னரிடம் முறையிட்டார்கள். ஒருசிலர் பூர்வீகக்குடிகள் சார்பாகவும், மலபாரிகள் சார்பாகாவும் குவர்னருக்குப் பிராது கொடுத்தார்கள். வழக்கம்போல குவர்னர் லாபூர்தொனே, தான் நினைப்பதைச் செயல்படுத்தியும் மற்றவற்றை உதாசீனப்படுத்தியும் வந்தார்.

‘சொல்லுங்கோ நாயக்கர், காவடிப்பூஜை நல்லபடியாக நடந்து முடிந்ததா ? கும்பெனி செய்திருந்த ஏற்பாடுகள் திருப்திகரமாக இருந்ததா. ‘

‘ஆகா.. தீவில் இவ்வளவு பணிகளை வைத்துக்கொண்டு விழாக் காரியங்களைச் செய்ய ஒத்தாசையாக, எங்கள் மனிதர்களை அனுப்பிவச்சதும், விழாப்பந்தலுக்கு வேண்டிய கம்பங்கள், கீற்றுகள், வெள்ளைத் துணிகள் முதலியவற்றைக் கொடுத்துவிட்டதும், பதுகாப்புக்கெனச் சில கும்பெனி வீரர்களை அனுப்பிவச்சதும், கடேசியாக சாட்சாத் பழனி முருகனே பிரசன்னமானதுபோல குவர்னர் பிரபு வந்திருந்து எங்களைக் கெளருதைபடுத்தியதும் சுலபத்தில் மறக்கக் கூடியதா, என்ன! ‘ – சீனுவாச நாயக்கர்.

‘எங்கள்மக்கள் சார்பில் உங்களுக்கு நன்றி சொல்லவேணும். குவர்னர் பிரபு மதாமுடன் வந்திருந்து விழாவினை நடத்தியது, சொல்லப்போனால் திருப்பரங்குன்றம் வேலவன் தெய்வானையுடன் வந்திருந்ததுபோல என்று சொல்வது மிகவும் பொருத்தம். ‘ – காமாட்சி அம்மாள்.

‘பேஷ்.. பேஷ். நன்றாகச் சொன்னீர்கள். இதற்குத்தான் காமாட்சி அம்மாள் இருக்கவேணும் என்கிறது. குவர்னர்சீமானைப் பழனி முருகனுக்குச் ஒப்பிட்டுச் சொல்வது, பொருத்தமல்லவென்று, எம்புத்திக்கு விளங்காமற் போய்விட்டது. ‘- நாயக்கர்

‘அதனாலென்ன. உங்கள் இருவர் வார்த்தைகளும், என்னைச் சந்தோஷத்தில் ஆழ்த்தலாச்சுது. எங்கள் தேசத்தை மேம்படுத்துவதற்கான எமது முயற்சிகளுக்கு, உம்மைப் போன்ற மனிதர்களின் உற்சாகமூட்டும் வார்த்தைகளும், பக்கபலமுமே காரணம். அவ்வாறே புத்திகூர்மையிலும் விசுவாசத்திலும் உமது மக்கள் பிரகாசிப்பதை ஏற்கனவே புதுச்சேரியில் நான் கண்டவனென்றாலும், அந்த நம்பிக்கையானது இந்தத்தீவில் கடந்த எட்டு ஆண்டுகளாக மேம்பட்டிருக்கிறது என்பதை ஒப்புக்கொள்ளத்தான் வேணும். இங்குள்ள துறைமுகம், அரச மாளிகை, பலசரக்கு மற்றும் வெடிமருந்துக் கிடங்குகள், மருத்துவ மனைகள், சாலைகள், சர்ச்சுகள், பண்ணைகள், போர் லூயி, பாம்ப்ளுமூஸ், ஏன் இந்த மோரீஸ் தீவே உங்கள் உழைப்பினாலல்லவோ வளர்ந்திருக்கிறது. எங்கள் தேசத்து மனிதர்களின் அறிவும், தீவின் பூர்வீகக் குடிகளின் உழைப்பும் இணைந்து ஆற்றிய காரியங்களைவிட உங்கள் தேசத்துத் தச்சர்களும், கருமார்களும், கொல்லத்துக்காரர்களும் செய்கின்ற காரியங்கள் பெரிது. பிரெஞ்சுக் கிழக்கிந்திய கும்பெனியின் ஷேமம், இந்தத் தீவினை நம்பியே இருக்கமுடியும் என்பதனை எங்கள் தேசம், உணரும் காலம் வந்துவிட்டது.

‘…. ‘

‘ஆக, இந்த அபரிதமான கீர்த்திக்குக் காரணமான சனங்கைளைக் கவுரவிப்பது என்னுடைய கடமை அல்லவோ ? ‘

‘உங்கள் வார்த்தைகளைக் கேழ்க்க எங்களுக்கு மெத்தவும் சந்தோஷமாச்சுது. பெரிய மனிதர்களின் அன்பும் ஆதரவுமிருந்தால் உண்மையான விசுவாசத்துடன் நடப்போமென்பது எங்கள் மக்களின் குணம். ஆனால், சமீபகாலமாகக் குவர்னர் பிரபு எங்கள் மக்கள் மீது காட்டும் பிரியத்தையும், கொடுக்கின்ற சலுகைகளையும், ஆப்ரிக்க இனத்தவர் அசூயையோடு பார்க்கின்றார்கள். அவர்கள் வாழ்விற்கு இடையூறு செய்யவந்தவர்களென எங்களை நினைக்கவும் செய்கின்றார்கள். எங்கள் மக்கள் மீது அவர்கள் தாக்குதல் நடத்தலாம் என்கின்ற அச்சங்கூட இருக்கிறது. அவர்கள் வாழ்க்கையைப் பங்குபோடும் என்ணமேதும் எங்களுக்கில்லையென்றும், ஒப்பந்தக் காலம்முடிந்து சொந்த நாட்டிற்குத் திரும்புவதே பெரும்பாலான மக்களின் விருப்பமென்றும், கும்பெனி அவர்களிடத்திற் தெளிவாய்ச் சொல்லவேணும். ‘ – சீனுவாச நாயக்கர்.

‘பயப்படாதேயுங்கள். என்னை மீறி எதுவும் நடந்துவிடாது. உங்கள் ஆட்களின் அறிவையும் உழைப்பையும் நான் அங்கீகரித்துத்தானே ஆகவேணும். ‘

‘ஆகா.. உண்மை.. உண்மை. தங்களுக்குப் பெரிய மனசு என்பதாலல்லவோ இப்படிக் கொண்டாடுகிறீர்கள். ‘ காமாட்சி அம்மாள்.

‘நமது உரையாடலில், உங்களுக்குச் செய்யவேண்டிய உபசாரங்களை மறந்துவிட்டேன். நீங்களிருவரும் மதுபானம் பண்ணுகிறதில்லை என்பதை அறிவேன். இருந்தாலும், நீங்கள் இருவரும் எனக்குச் சமதையானவர்கள். உங்களை உபசரிக்கவேண்டுமென்பது சம்பிரதாயம். என்ன கொண்டுவரச்சொல்லட்டும் ? ‘

‘எங்களுக்கு விருப்பமான பானமென்றால் சுக்குநீர் என்றுதான் சொல்லவேணும். அதனைப் பிரபுவின் சமூகத்தில் எதிர்பார்க்க முடியுமா ? புறப்படுவதற்கு முன்னதாகத் தாகசாந்தி பண்ணிக்கொண்டுதான் கிளம்பினோம். ‘

‘சுக்கு நீர் இல்லை. இள நீர் உங்களுக்கு விருப்பமானதாயிற்றே. இவ்வெயிலுக்கு ஏற்றதென உங்கள் மக்கள் சொல்லவும் கேட்டிறுக்கிறேன். நீங்கள் சம்மதிப்பீர்களெனில் ஏற்பாடு செய்கிறேன். ‘

வந்திருந்தவர்களது பதிலுக்காக காத்திராது, குவர்னர் தனது மேசையின் மீதிருந்த சிறிய மணியை ஆட்டினார். அடுத்த ஒரு நாழிகையில் ஒரு உதவியாளன், சலாம் செய்துவிட்டு நின்றான்.

‘இரண்டு கிளாசில் இளநீரும் எனக்கு ஒரு கிளாஸில் பியரும் கொண்டுவா.. ‘

உதவியாளன் மீண்டும் வணங்கிவிட்டு வெளியேறினான்.

‘பிறகென்ன வர்த்தமானங்கள் எம்மிடம் சம்பாஷிக்கவுள்ளன ? காமாட்சி அம்மாள் சற்றுமுன்னர், திருப்பரங்குன்றம் வேலவன், தெய்வானை என்று ஜாடையாகப் பேசியதன் சூட்ஷமத்தைப் புரிந்ததால் கேழ்க்கின்றேன். ‘

‘பிரபு ஷமிக்கவேணும். காவடிப் பண்டிகையின்போது நடந்தது என்னவென்று தங்கள் திருவுள்ளமும் அறியுமே. எட்டியானுடைய பாரியாள் ஆவேசங்கண்டு தேவயானி என்ற பெயரை உச்சரித்ததும், சொக்கேசனை அழித்துவிடுகிறேன் என்பதாகச் சொன்னதும் நாராசம் ஏத்தினாப்போலெ இருந்தது. மெத்தவும் விசாரங்கொண்டோம்.. தெய்வானையின் உண்மைப் பெயர் தேவயானியென்பது நம்மூவரைத் தவிர வேறொருவரும் அறியமாட்டார்கள். அவ்வாறெனில், ஆவேசங்கொண்டப் பெண்மணி அப்பெயரை உச்சரித்த முகாந்திரமென்ன. சொக்கேசனென்பவன் ஆர் ? தேவயானிக்கும் அவனுக்கும் உள்ள உறவென்ன ? இதுகளெல்லாத்தையும் குறிச்சு எங்களுக்குச் சொல்லி முடியாத கஸ்தி உண்டாயிருந்தது. ‘. -நாயக்கர்.

‘நாமுங்கூட அன்றைக்கு நடந்ததைக் கேட்டோம். ஆவேசங்கொண்ட பெண்மணியின் வார்த்தைகள் உங்கள் தேவயானிக்கானவை என எப்படி நம்பப்போச்சுது ? வீணானக் கவலைகைளை நீங்கள் மனத்திலிருந்து ஒழிக்க வேணும். ‘ -குவர்னர்.

‘எங்கள் மனதுக்கு நம்பிக்கையாயிருக்கவில்லை ஆனபடியினாலே தங்களிடத்திலே வந்தோம்.. தேவயானிக்கு இந்த அவ்ரில் மாதம் 9ந்தேதியிலிருந்து பதினாறு வயது. இவள் பிறந்தபோது, பாட்டி இராணி மங்கம்மாளே மறு பிறவி எடுத்திருப்பதாகவெண்ணி, தன்னுடைய பூர்வ ஜென்ம புண்ணியபலனென என் கணவர் பூரித்துப் போனார். என் மூத்தாளுக்கு வாரிசு இல்லையென்றாகிப்போனதும், தேவயானிதான் தனது வாரிசெனவும் அறிவித்தார். ஆனால் விதி வேறாகிப்போனது. என் கணவரது அகால மரணம், இவளைப் பற்றிய உண்மைகைளை ராணி மீனாட்சியிடம் உரியகாலத்தில் சேர்ப்பிக்கத் தவறிவிட்டது. ஐந்துவயதுப் பெண்குழந்தையையும், முத்திரை மோதிரத்தையும் அரசியாரிடம் சேர்ப்பித்துவிட்டு ஒதுங்கிக் கொள்ளலாம் என்கின்ற முயற்சியும், உறவுகளின் சதியால் பலிக்காமற் போயிற்று. திருமலைநாயக்கர் தம்பி பங்காரு நாயக்கன் மகனை தனது வாரிசாக, எனது மூத்தாள் ராணிமீனாட்சி அறிவிக்க, பொறுக்காத பங்காரு நாயக்கர், தான் அரியாசனத்தில் அமர்வதற்காக ஆற்காட்டு நவாபிடம் உதவிக்கேட்டார். நிலைமையின் சாதகத்தை உணர்ந்த ஆற்காடு நவாப்பின் மருமகன் சந்தாசாகிப் ராணி மீனாட்சியை சிறையிட்டதும், அவள் விஷமருந்தி உயிரை மாய்த்துக் கொண்டதும் நீங்கள் ஏற்கனவே அறிந்ததுதானே. அந்நியர்கைளை ஆட்சிக் கட்டிலில் அமரவைத்த உறவினர் கூட்டம் எங்களைக் கொல்லத் தீர்மானித்து செய்த தொந்தரைகள் சொல்லிமாளாது. ஆனால் எந்த அரசுக் கட்டில் என் மகளுக்கு ஆகாதென்று நினைத்தேனோ அதில் ஒருநாளேனும் அவளை உட்கார்த்திப் பார்க்கவேணுமென்கிற அபிலாஷையிருக்கிறது. ‘

குவர்னரின் உதவியாளன் இரு கண்ணாடித் தம்ளர்களில் இளநீரும், ஒன்றில் பியரும் மேசையின் மீது வைத்தான்.

குவர்னர் நாயக்கரிடமும், காமாட்சி அம்மாளிடமும் ஆளுக்கொன்றாக இளநீரிருந்த கிளாஸ்களைக் கொடுக்க, நாயக்கர் மனம் ரொம்பவே குளிர்ந்து போனது. குவர்னர் பியர் கிளாசை, உயர்த்திப் பிடித்து வாழ்த்துத் தெரிவித்துவிட்டு வாயில்வைத்து உறிஞ்சினார். மேலுதட்டில் ஒட்டியிருந்த நுரைகளை நாசூக்காக கைகுட்டையிற் துடைத்துக் கொண்டு எதிரே இருப்பவர்களைப் பார்த்தார். அவரது பார்வையில் ‘விட்ட இடத்திலிருந்து தொடருங்கள் ‘, என்பதாக அர்த்தமிருந்தது.

‘தேவயானியையும் கைலாசத்தையும் தீவுக்கு அழைத்துவந்து விளையாட்டைப்போல ஏழாண்டுகள் ஓடிவிட்டன. இந்த ஏழாண்டுகளில் என்னென்னவோ நடந்துவிட்டது. அங்கே இருந்தால் ஆபத்தென்றுதான் இங்கு வந்தோம். இங்கும் கடந்த சில மாதங்களாக அடுத்தடுத்துப் பிரச்சினைகள். எங்கள் கபானில் அத்துமீறி நுழைந்து என்ன அடித்துப்போட்டு உடமை உப்பந்தி, தட்டு முட்டுகள் சகலமும், நிர்த் தூளிபண்ணிப் போட்டார்கள். அவளது பிறப்புக்கு ஆதாரமாகவிருந்த கள்ளிப்பெட்டியும் புதைத்திருந்த இடத்திலிருந்து களவு போயுள்ளது. ‘

-காமாட்சி அம்மாள்.

‘கைலாசத்துடன் கள்ளிப்பெட்டி களவுபோனதுக் குறித்துப் பேசினீர்களா, ?.. ‘- குவர்னர்.

‘ஏன் ? ‘ – காமாட்சி அம்மாள்.

‘எனக்கென்னவோ, தற்சமயம் கள்ளிப்பெட்டியைக் கைலாசம் பெர்னார் குளோதனிடம், கொடுத்திருப்பானோ என்கின்ற சந்தேகம். ‘ – குவர்னர்.

‘எதனால் அந்தச் சந்தேகம். ? ‘ – காமாட்சி அம்மாள்

‘உங்களையும் என்னையும் தவிர, தீவில் இந்த விடயத்தில் உங்கள் குமாரத்தி மீது அக்கறைகொண்டவனல்லவா பெர்னார்குளோதன். இந்தமுறை அவனாகவே முன்வந்து புதுச்சேரி போகவேண்டுமென அனுமதி கேட்டான். அப்படிக் கேட்பதற்குச் சில நாட்களுக்கு முன்னர், ஓர் இரவு கைலாசம் அவனைச் சந்தித்துச் சென்றதைக் கும்பெனிக் காவலர்கள் கண்டிருக்கிறார்கள். ‘ – குவர்னர்.

‘பிரபு, பெர்னார்குளோதன்- தேவயானி திருமணத்தைத் தடை செய்வதும், அவளை திரிச்ச்சிராப்பள்ளிக்கு ராணியாக்குவதும் உங்களிடத்திலேதானிருக்கிறது. நாங்கள் உங்களிடம் செய்துகொண்ட ஒப்பந்தப்படி நடப்போம். ஆட்சிமாறியதும் ஐந்து லட்சம் பவுண், தங்களுக்கு வேண்டியவர்கள் மூலம் சேர்த்துவிடுவோம். ஆனால் எங்கள் பூமியில் நிலைமைச் சாதகமாக இல்லை. ‘ – சீனுவாச நாயக்கர்.

‘எதனால் அப்படி சொல்லலாச்சுது ? ‘

‘இன்றைக்குத் திருச்சிராப்பள்ளி அரசுக்கு ஆற்காட்டு நவாப், மராத்தியர்கள் என்பது போக மூன்றாவதாக ஒரு கூட்டம் முயல்வதாக அறிகிறோம். புதுச்சேரியிலிருக்கும் உங்கள் கும்பெனியோ எப்போதும்போல ஆற்காட்டு நவாப்பிற்கு ஆதரவாக இருப்பார்கள். அவர்களுக்கு செய்யும் ஒத்தாசை அரசியல் ரீதியாகவும், வேறுவகையிலும் உங்கள் கும்பெனிக்கு லாபமானது. இதுவும் தவிர, திருச்சிராப்பள்ளி அரசுக் கட்டிலில் உட்கார்ந்திருக்கும் முராரிராயனென்பவன், பணத்திற்காக அலையும் பூதமென்றும் அறிகிறோம். இனிமேல் என்ன நடக்குமோ தெரியாது ? பிரபுதான் தெய்வம்போல இருந்து எங்கள் ஆசைகளை நிறைவேற்றவேணும். கொடுத்த வாக்கைக் காப்பாற்ற வேணும் ‘. – சீனுவாச நாயக்கர்

‘இந்தக் காரிய நிமித்தம் உங்கள் மகன் கைலாசத்திடங்கூட வார்த்தைப்பாடு வேணாம். எப்படி, எவ்விதம். முடிக்க வேணுமென நாமறிவோம். எல்லாம் ஜெயமாய் முடியும். நீங்கள்மாத்திரம் திருச்சிராப்பள்ளிக் கோட்டையை ஒப்புவித்ததும், பேசித் தீர்த்துக்கொண்ட உடன்படிக்கை படிக்கு நடந்துகொள்ளவேணும் ‘

‘நன்றி மறக்கமாட்டோம். வேதபுரிஈஸ்வரர் அருள் பூரணமாய் உங்கள் பக்கமிருக்கும். தாங்கள் செய்யும் காரியங்கள்யாவும் சித்தியாகும். உம்முடைய மனதுபோல் ஆகட்டும் ‘ -காமாட்சி அம்மாள்.

இருவரும் குவர்னரை குனிந்து வணங்கி விடைபெற்றார்கள். அவர்கள் சென்ற சில நாழிகைகளில் உதவியாளர் அவசரமாக ஓடிவந்தார்.

‘போல் பிரபுவிடமிருந்து கடிதம் வந்துள்ளது. ‘. உதவியாளர் பவ்யமாகக் குவர்னரிடம் கடிதத்தை நீட்டினார்.

கடிதத்தை வாசித்தக் குவர்னரின் முகம் சுருங்கியது.

/தொடரும்/

Series Navigation

நாகரத்தினம் கிருஷ்ணா

நாகரத்தினம் கிருஷ்ணா

நீலக்கடல் -(தொடர்) – அத்தியாயம் – 23

This entry is part [part not set] of 48 in the series 20040610_Issue

நாகரத்தினம் கிருஷ்ணா


நஞ்சுடைமை தானறிந்து நாகங் கரந்துறையும்

அஞ்சாப் புறங்கிடக்கும் நீர்ப்பாம்பு – நெஞ்சில்

கரவுடையார் தம்மைக் கரப்பர் கரவார்

கரவிலா நெஞ்சத் தவர்

– (மூதுரை) – ஒளவையார்

மாறன் நம்பிக்கை வீண்போகவில்லை. சற்றுமுன்னாலே தொண்டைமாநத்தத்தில் வைத்துப் பார்த்த குதிரையே இவனது திசைக்காய் வந்துகொண்டிருக்கிறது. தொண்டைமாநத்தம் போகும்வழியில் ஏற்றமிறைத்தவர்கள் கூற்றை நினவுபடுத்திப் பார்த்தான். அவர்கள் இவன் தேடிப்போன காமாட்சி அம்மாளைத் தேவராசனுடைய அத்தைக்காரி என்றார்கள். ஆகக் குதிரையில் வருபவன் யாராக இருக்குமென பலவாறாக யோசித்தமாத்திரத்தில் உண்டான மறுமொழி தேவராசன் என்பதாகும்.

பெர்னார் குளோதன் நம்புவதைப்போலே, வாணியானவள் பிரெஞ்சுத்தீவிலுள்ள தெய்வானை வடிவில் இருப்பதும், வாணியைப் பார்க்கவரும் பெண்மணி தெய்வானையின் தாயார் காமாட்சி அம்மாள் பேரிலே பொய்யாய் வலம் வருவதும், ஒன்றுக்கொன்று தொடர்பு உடையவை

என்பதில் மாறனுக்குச் சந்தேகமில்லை. தொண்டைமாநத்தத்தில் தேவராசன்வீட்டில் நடந்த சம்பாஷனைகளை கேட்டவரையில், காமாட்சி அம்மாள் என்ற இப்பெண்மணியும் ஓரளவு நல்லவளாகவே இருக்கவேணுமெனத் தீர்மானித்தான். அவளை அச்சுறுத்தி கபடவேடம் போடவைத்திருக்கும் உபாயத்தின் காரணமென்ன ? இந்தச் சதியில் தேவராசனுக்குப் பங்குண்டு என்பதும் புரிகிறது. இந்தக் கூட்டுச் சதியில் இயங்கும் மற்றவர்கள் யார் ? எதற்காக ? அதன் முழு விபரந்தான் என்ன ?

மாறன் இதுநாள்வரை தேவராசனைக் காணநேர்ந்ததில்லை. துபாஷி பலராம் பிள்ளை அவைனைக் குறித்துச் சில தகவல்களைத் தெரிவித்திருந்தார். அதன்படி, கும்பெனிப் பீரங்கிப் படையின் லியோத்தனான்*பிரான்சுவா ரெமிக்கு அவன் வேண்டப்பட்டவனென்று தெரிகிறது. பிரான்சுவா ரெமியன்றி, ஜாதி இந்துக்களில் தேவராசனுக்கு வேண்டிய மனுஷர்கள் யார் ? வேலாயுத முதலியாரும் இந்தச் சதிக் கூட்டத்தில் ஒருவரோ ?

தேவராசனது குதிரை தான் பதுங்கியிருந்த இடத்தைக் கடந்துபோகட்டுமென்று காத்திருந்தான். புதுச்சேரிக்குச் அல்லாமல், வலமெடுத்துத் தென்திசைக்கு, தேவராசன் குதிரைப் பாய்ந்தோடுவதைக் கண்டு, தனது குதிரையையும் அத்திசைக்காய் விரட்டினான்.

சூரியன் மேற்காலே மறையத் தொடங்க, காத்திருந்த இருட்டு தன் புத்தியைக் காட்டியிருந்தது.

இருட்டுக்கெனவே காத்திருந்த காரியங்கள் நடந்தன: தாசிகள் சுகத்திற்கு ஆசைப்படும் தனவந்தர்கள், கள்ளர் பயத்தை ஒதுக்கிவிட்டுப் பணத்தை மடியில் கட்டிக்கொண்டு வில்வண்டியில் முக்காடுபோட்டுக்கொண்டு புறப்பட்டிருந்தார்கள். மேய்ச்சலுக்குப் போன சினைமாடு தொழுவத்திற்குத் திரும்பாததால் லாந்தரை எடுத்துகொண்டு குடியானவர் இருவர் தேடிக்கொண்டிருந்தார்கள். சம்பாதிச்சப் பணத்தில் சாராயத்தை இருட்டும்வரை குடித்துக்கிடந்து, போதையும் புத்தியும் தெளிந்தபின் வளவுக்கு சிலர் திரும்பிக்கொண்டிருந்தார்கள். அந்தி சாயும்வரை வேலை செய்து, வருகின்ற வழியில் செட்டிக் கடையில், ‘புளிமிளகா ‘ வாங்கிவந்து குழம்பு கூட்டிவிட்டு, ஏழைப்பெண்டுகள் உலைவைத்திருந்தார்கள். அவர்களது பிள்ளைகள் அருகில் சிறுதட்டுகளோடு காத்திருந்தார்கள். வழக்கம்போல உள்ளூர் சிப்பாய்கள் சாயந்திரமே விரால்மீன்குழம்பும் வரகரிசிச் சோறும் சாப்பிட்டதில் கொட்டாவி விட்டுக்கொண்டு பாரா போனார்கள்.

அரியாங்குப்பம் ஆற்றினையொட்டிய வடகரையில் சிற்றோடுவேய்ந்த வடக்கேபார்த்த வளவு. எதிரே இருந்த தென்னந்தோப்பும், மாமரங்களும், மூங்கிற்புதரும் இருட்டைப் போர்த்திக்கொண்டு உறங்கிக் கிடக்க, அவ்வளவில்மாத்திரம் ஆள் நடமாட்டம். ஏற்றப்பட்டிருந்த ஆமணக்கு எண்ணெய் விளக்குகள், இருட்டினின்று அவ்வீட்டை காப்பாற்றியிருந்தது

தென்னைமரங்களும் செடிகொடிகளுமாய் அடர்ந்திருந்த பகுதியிலிருந்து சாராயம் காய்ச்சும் நெடி காற்றில் அடர்த்தியாய் இருந்தது. கும்பெனி தமுக்கடித்து அறிவித்திருந்த சுதந்திரத்தால் இருட்டிய பின்னரும் அடுப்பைப்பற்ற வைத்திருந்தார்கள்.

வளவுக்கெதிரே ஆற்றங்கரையை ஒட்டியிருந்த ஆழமான துறையில் படகொன்று வந்து நின்றது. படகினை ஓட்டியவன் நீண்ட கயிறொன்றை எறிய, அங்கே தென்னை மரத்தின் அருகே நின்றிருந்தவன் இலாவகமாகப் பிடித்து மரத்தில் இறுகக்கட்டினான். ஒருவர் பின் ஒருவராக அந்த வீட்டில் சந்தடியின்றிப் பின்கட்டுவழியாக நுழைந்து கொண்டிருந்தார்கள். ஒருசிலர் பல்லக்கில் வந்திருந்ததன் அடையாளமாக வளவெதிரே பல்லக்குகள் நின்றிருந்தன. தங்கள் எசமானர்கள் அவ்வளவு சீக்கிரத்தில் திரும்பமாட்டார்கள் என்று எண்ணியோ என்னவோ பல்லக்குத் தூக்கிகள் தென்னைமரத்தின் கீழேயே துண்டைவிரித்துப் படுக்கத் தொடங்கிவிட்டார்கள்

பின்வாசற் கதவருகில் நின்றிருந்தவன், வருகின்றவர்களின் தரத்திற்கேற்ப குனிந்தும் நிமிர்ந்தும், வணங்கி உள்ளே அனுப்பிக் கொண்டிருந்தான்.

பஞ்சமுகக் குத்துவிளக்குகள் சுடரெடுத்துப் பிரகாசிக்கின்றன. நெற்பொரியும் எள்ளும் கலந்து நொறுக்குத்தீனிமுஸ்தீபாக வறுத்துவைத்திருந்தார்கள். எல்லோருக்கும் தம்ளரில் சுக்குநீர் விநியோகம் நடந்தது. போதாதற்கு வில்வநல்லூர் பச்சைவெற்றிலை, சீவல் பாக்கு, பன்னீர்புகையிலை, வாசனைச் சுண்ணாம்புடன் பெரிய தட்டுகள். வந்தவர்கள் இருக்கையைத் தேடிப் பிடித்து உட்கார்ந்தார்கள். இராச்சிய பரிபாலனத்தில் நடக்கின்ற குளறுபடிகள், சேரிச்சனங்கைளை வேதத்தில் சேர்க்க மதகுருமார்கள் செய்யும் காரியங்கள், மழையில்லாமல் பயிர்பச்சைக் காய்ந்து கிடப்பது, ஊரில் நடக்கும், களவு கொள்ளையென எல்லாவற்றையும் பேசி தீர்த்தார்கள்.

‘அடியேன் முருகப்பிள்ளை. துறவிச்சாமி சார்பாக, மகாஜனங்களுக்கு வந்தனம். சொன்னபடிக்கு எல்லோரும் தட்டாமல் வந்து சேர்ந்ததில் சந்தோஷம். வார்த்தையாடிக் கொண்டிருங்கள். துறவிச்சாமி தியானத்தினை முடிக்கும்நேரம், வந்து விடுவார். ‘

‘திருச்சிற்றம்பலம்.. ‘ திரையை விலக்கிக்கொண்டு கரகரத்தவொருகுரல்.

‘திருச்சிற்றம்பலம் ‘. ஒருமித்த குரலில் வழிமொழிந்தவர்கள், எழுந்து நின்றார்கள். முதன்முறையாக அவரைப் பார்த்தார்கள். சிரைக்கபட்ட தலை. வயிற்றின்பாதிவரைக் கட்டியிருந்த காவிவேட்டி, கழுத்தில் உருத்திராட்சம், கையில் தண்டம் தோளில் அதற்கிணையாக ஒர் உருமாலை, உடலை அலங்கரிக்கும் திருநீர்க் கீற்றுகள், கனத்த சரீரம், கழுத்தில் புதைந்திருந்த தலை.

அவர் கையசைக்க, வந்திருந்தவர்கள் தங்கள் தங்கள் நாற்காலிகளில் அமர்ந்தார்கள். அனைவரும் ஊமையாகவிருக்க முருகப்பிள்ளையே மறுபடியும் வாய் திறந்தார்.

‘மகாஜனங்களுக்கு மீண்டும் கோடிவந்தனம். நாம் இங்கே எதற்காகக் கூடியிருக்கிறோம் என்பதை உங்களுக்குச் சொல்லவேணும்.

விஜயநகர சாம்ராச்சிய வீழ்ச்சிக்குப் பிறகு கர்நாடகம் யுத்தகளமாச்சுது. தில்லி மொகலாயர்களுக்கு இங்குள்ள துலுக்கர்களை அடக்கிவைக்கும் திராணிபோய்விட்டது. தில்லியையே காத்துக்கொள்வதென்பது பிரச்சினையாகிப்போனது. மொகலாய மன்னராகவிருக்கும் முகம்மதுஷா (Muhammad Sha)பிரக்யாதியை இந்தத் தேசம் அறியும். மராட்டியர்களைக்கேட்டால் கதைகதையாகச் சொல்கிறார்கள். பாரசீகத்திலிருந்து வந்த நாதிர் ஷா (Nadir Shah) மயிலாசனத்தையும், கோஹினூர் வைரம்பதித்த கிரீடத்தையும், அரண்மனைப் பொக்கிஷங்களையும் கொள்ளையடித்துப்போக, இவர் விரலைச் சூப்பிக்கொண்டிருந்தார். அவுரங்கசீப்பின் பேர்த்தியைக் கவர்ந்து நாதிர்ஷா தன்மகனுக்கு மணமுடித்ததும், இவரை முன்வைத்துக்கொண்டு, தில்லி தர்பாரிலேயே அவன் இந்திய தேசத்தின் சக்கரவ்ர்த்தியென முடிசூடிக்கொண்டதும் ஊரறிந்த சேதி. ‘

‘…. ‘

இந்த லட்சணத்தில் இங்கே துரைத்தனம் பண்ணவந்த முன்னாள் குவர்னர் துய்மாவும் (Dumas) சரி இப்போதைக்குத் துரைத்தனம் பண்ணவந்திருக்கும் துய்ப்ளே( Duplex)வும் சரி, இவர்களை புதுச்சேரிமண்ணில் அனுமதித்தற்கும், அற்பமாய்க் கிடைத்த நவாப் பட்டத்திற்கும், இவர்களது பாரியாள்களுக்குக் கிடைத்த பேகம் அந்தஸ்திற்கும் துலுக்கர்களுக்கு விசுவாசமாக இருந்துவருகின்றார்கள். தில்லி மொகலாயர்களிடம் அஞ்சிக் கிடந்த கர்நாடகத் துலுக்கர்களுக்கு வக்காலத்து வாங்குகிறார்கள். மொகலாயர்களின் ஆதிக்கத்தை உதறிவிட்டு, கருநாடக துலுக்க இராச்சியங்களான ஆற்காடு, வேலூர், ஹைதராபாத்தில் நடக்கும் அரியாசனப் போட்டிகளில் தொடர்ந்து சண்டைகள். சண்டைகள் முடிந்த நேரம்போக ஊதியமற்றுக்கிடக்கும் அவர்களின் படைவீரர்கள் கொள்ளையடிக்க ஆரம்பித்துவிடுகிறார்கள். விஜயநகர சாம்ராச்சியத்தின் வீழ்ச்சிக்குப்பிறகு, மராத்தியர்கள் வடநாட்டில் மாத்திரமின்றி இங்கே தென்னாட்டிலும் சமீபகாலமாக ஆற்காட்டு நவாப்புகளுக்கும், ஹைதராபாத் நிஜாம்களுக்கும் சிம்மசொப்பனமாகத்தானே இருந்துவருகின்றார்கள். அங்கே நம்முடைய மராத்தியர்கள் அவர்களைத் தாக்கும்வேளை, இந்தப் பறங்கியர்களிடம் வெகுமான மூட்டைகளுடன், துலுக்கர்ககளது பெண்டுபிள்ளைகளும் குஞ்சுகுளுவான்களும் தஞ்சம் கேட்டுவருவதும், புதுச்சேரி துரைமார்கள் தங்கள் துபாஷிகளோடு, பத்துபன்னிரண்டு குதிரைகளுடனே, மேளதாளம், கொம்பு, தமுக்கு, தாசிகளாட்டமென சகலசம்பிரமத்துடனே புறப்பட்டு, எதிர்கொண்டுபோய் வெகுமானத்தைப் பல்லக்கில் வைத்துக்கொண்டு, கெவுணியில் பீரங்கிபோட்டு அழைத்துவருவதுமான காட்சிகளைப் புதுச்சேரியில் அன்றாடம் பார்க்கிறோம். அதுவுமன்றி சேசுசபையினர் சமீப காலமாக புதிதாக வந்திருக்கும் துரைசாணியுடன் சேர்ந்து நம்முடைய மக்களுக்கெதிரான காரியங்களில் ஈடுபடுவதாக அறிகிறோம். இதற்கு ஏதேனும் பரிகாரம் நாம் தேடியாக வேண்டும். ‘

‘உள்ளது, உள்ளது. ஏதேனும் உடனடியாகச்செய்தாகவேணும் ‘

‘அதன்நிமித்தமாகவே சொக்கேசன் சுவாமி உங்களைச் சந்திக்க ரகசியமாக இந்த ஏற்பாட்டினைத் திட்டம் செய்தார். இன்றைக்குப் புதுச்சேரியைச் சுற்றிலுமுள்ள முருங்கப்பாக்கம், வில்லியனூர், முத்தியால்பேட்டை, உழவர்கரையிலிருந்து முக்கியஸ்தர்கள் வந்திருக்கிறீர்கள். உங்களுக்கு எங்கள் கூட்டத்தை அறிமுகப் படுத்தவேணும். முன்னாலே உட்கார்ந்திருப்பவர் மராட்டிய இராஜா போன்ஸ்லேயின் காரியஸ்தர், அடுத்து நீங்கள் அறிந்திருக்கக் கூடிய வைத்தியர் சபாபதிப் படையாட்சி, தரகர் வேலாயுத முதலியார், கும்பெனி படையில் உத்தியோகம் பார்க்கும் நம்முடைய தேவராசன். ‘

முருகப்பிள்ைளை விபரமாகச் சொல்லிக்கொண்டுபோக, வந்திருந்தவர்கள் ஒருவர் மற்றவரைப் புன்முறுவல் மூலம், அங்கீகரித்துக் கொண்டார்கள். முதல் வரிசையில் உட்கார்ந்திருந்த வேலாயுத முதலியார் ஒவ்வொருவராகப் பார்த்துக் கொண்டுவந்தபோது கடைசியாக உட்கார்ந்திருந்வனை, நேற்றுத் தனது வீட்டில் வைத்தும், பெருமாள் கோவிலில் வைத்தும், குவர்னர் மாளிகையண்டை கிட்டங்கியில் வைத்தும் கண்டுவிட்டு, மீண்டும் இங்கே காண்பது அவரது மனத்தை அரிக்கத் தொடங்கியது. தேவராசனை இதுகுறித்து விசாரிக்க வேண்டுமெனத் தீர்மானித்திருந்தார்.

சொக்கேசன் தொண்டையைக் கனைத்துக் கொண்டு மீண்டும் தொடர்ந்தார்.

‘புதுச்சேரி குவர்னர் புதிய திட்டம் செய்திருக்கிறார். அதன்படி பட்டணத்திலே இருக்கப்பட்ட வெள்ளைக்காரர், சட்டைக்காரர், சேவகமில்லாமல் இருக்கப்பட்டவர்கலெல்லாரையும் உத்தியோகத்துத்துக்குவரச்செய்து வெள்ளைக்காரத் தெருவிலே தெருவுக்குத் தெருவுக்கு தம்பூரடித்துக்கொண்டு கடுதாசி படித்திருக்கிறார்கள். பின்னர் நேற்று மத்தியானம் மூன்று மணிக்கு கோட்டையிலே சொல்தாக்களாக சேவகம் எழுதிக் கொண்டு துப்பாக்கி கொடுத்திருக்கிறார்கள். கோட்டை கொத்தளங்கள் சகலமும் முஸ்தீபு பண்ணி அங்கங்கே பீரங்கியின் குண்டுகள், மருந்துகள் எல்லாம் கொண்டுபோய்சேர்க்கிறார்கள். இதனால், கூடிய சீக்கிரம் இங்கிலீஷ்காரர்களுக்கும், பிரெஞ்சுக்காரர்களுக்கும் இடையிலே யுத்தத்திற்கான முஸ்தீபுகள் தெரிகின்றன. நாம் இந்த நேரத்திலே மராத்தியர்களுக்கும், அவர்களுக்குக் கீழே இராச்சிய பரிபாலணம் பண்ணவிழையும் நமது கனவான்களுக்கும் உதவ வேண்டும். திருச்சிராப்பள்ளியில் மீண்டும் நாயக்கர் நிருவாகத்தினைக் கொண்டுவர திட்டம் செய்திருக்கிறோம். தெற்கே படிப்படியாக நாம் வளர்ந்து வடக்கே ஆற்காடும், ஹைதராபாத்தும் மராத்தியர்களின் ஆளுகைக்குக் கீழ் வரவேண்டும். நம் மக்களை கும்பெனி நிருவாகத்திற்கு எதிராக திரட்ட வேண்டும். ‘

‘வாஸ்தவம். இது குறித்து நாம் யோசிக்கத்தான் வேணும். தற்சமயம் பறங்கியர்களுக்கும், துலுக்கருக்கும் நடுவே நமக்குத் திரிசங்கு நிலைமதான். ‘ உழவர்கரை தனக்கோடி செட்டியார்.

‘சாமி..! தங்கள் உத்தாரபடிக்கு நடப்போம். தாங்கள் நமது தேசத்தின்மீது கொண்டுள்ள விசுவாசத்தாலன்றோ தேவரீர் இவ்விஷயத்தில் இவ்வளவு கவலைப் படுகிறீர். ‘ வேலாயுதமுதலியார்.

‘நாம் நமது பலத்தை உணர்ந்து முயற்சிபண்ன வேணும். சரியான சமயத்தில் பிரயோக்கிக்கவேணும். ‘ தேவராசன்.

சொக்கேசன் சாமி சற்று நேரம் அமைதியாகயிருந்து கேட்டுக்கொண்டார்.

‘ஆகா !.நமக்கு மனம் வெகு சந்தோஷமாச்சுது. உங்கள் வார்த்தைகளில் பழுது இருக்காது. தேசத்தின் மீதும் நமது சனங்கள் மீதும் உங்களுக்குள்ள பக்தியும் அன்பும் வெளிப்படையாக அறியலாச்சுது. உங்கள் மனதை அறிவதற்காகத்தான், திடாரென்று இக்கூட்டத்தை ஏற்பாடு செய்திருந்தோம்.. உங்கள் விருப்பமும் எமது விருப்பமும் ஒன்றாய் இருக்கிறது. உங்களது ஒத்துழைப்பு வேணுமென்கிறபோது தகவல்வந்துசேரும். அதுவரை பொறுமைக் காக்கவேணும். திருச்சிற்றம்பலம்..! ‘

‘திருச்சிற்றம்பலம் ‘

ஒவ்வொருவராகத் துறவி சொக்கேசைனைச் சேவித்துக்கொண்டுப் புறப்பபட்டார்கள்.

வேலாயுத முதலியார் மீண்டும் அவனைப் பார்த்தார். இம்முறை அவனது காதுகளில் கடுக்கனில்லை. சந்தேகமில்லை. இவர் சந்தேகப்படும் நபர்தான். இக்கூட்டத்திற்கு அழைக்கப்பட்டிருக்கிறானெனில், தேவராசனுக்கோ அல்லது சொக்கேசன் சுவாமிக்கோ வேண்டப்பட்டவனாக இருக்கவேண்டுமென நினைத்துக்கொண்டார்.

எல்லோரும் கிளம்பிபோனபின் எஞ்சியிருந்தவர்கள் இராஜா போன்ஸ்லேயின் காரியஸ்தர், வைத்தியர் சபாபதிப் படையாட்சி, தரகர் வேலாயுத முதலியார், கும்பெனி படையில் உத்தியோகம் பார்க்கும் தேவராசன், அவனருகில் வேலாயுதமுதலியாரின் சந்தேகிக்கும் ஆசாமி.

துறவி சொக்கேசன் தேவராசனை அருகில் அழைத்தார்.

‘பிரெஞ்சுத் தீவிலிருந்து ஏதேனும் சேதி வந்ததா ? ‘

‘சுவாமி மஸ்கரேஜ்னிலிருந்து** துறைபிடித்துள்ள ‘லெ போந்திஷெரி என்கின்ற கப்பல்மூலம் பிரெஞ்சுதீவிலிருந்து நமக்கொரு கடுதாசி வந்துள்ளது. ‘

துறவி சொக்கேசன் தேவராசன் கொடுத்த உறையைக் கையில்வாங்கிப் பாதுகாப்பிற்காக வைத்திருந்த முத்திரையை அகற்றிவிட்டுப் பிரித்து வாசிக்கலானார்.:

‘தேவரீர் சொக்கேசன் சாமிக்கு அனந்தகோடி நமஸ்காரங்கள். இந்தக் கடுதாசி எழுதும் வயணமென்னவென்றால், இவ்விடம் நீங்கள் சொல்லியிருந்தபடிக்கு அப்பெண்ணையும், அவளது தாயார் காமாட்சி அம்மாள், சகோதரன் கைலாசம் ஆகியோரை நெருக்கமாக அவதானித்து வருகிறோம். அவர்களது ராஜவம்சத்தை அடையாளப்படுத்தக்கூடிய சான்றுகளான முத்திரை மோதிரமும் ஓலை நறுக்குமிருந்த பெட்டியுடனே தற்சமயம் பெர்னார்குளோதன் என்கிற பறங்கியன் புதுச்சேரிவந்துள்ளான் என்பதாக யூகிக்கிறோம். அதைத்தொட்டு தங்கள் சமூகம் தெரிவிக்கவேணுமென்றே, இக்கடுதாசியை எழுதினோம். உண்மையானத் தங்கள் ஊழியன் அருணாசலத் தம்பிரான். ‘

கடிதத்தைப் படித்து முடித்த துறவி சொக்கேசன் சுவாமி முகத்தில் ஒருவித திருப்தி நிலவியது.

‘தேவராசன் கிடைத்திருக்கும் சேதி நல்ல சேதியே. நாம் எதிர்பார்த்தபடி எல்லாம் நடக்கின்றது. ‘

வைத்தியர் சபாபதிப் படையாட்சி துறவியை நெருங்கி சாஷ்டாங்கமாக விழுந்து வனங்கினார்.

‘சுவாமி எனது மகன்குறித்து ஏதேனும் தகவல்கள் கடிதாசியிலுள்ளதா. அவனது ஷேமத்திற்கு எந்தக் குறைவுமில்லையென தங்களது திருவாயால் கேழ்க்கவேண்டும். ‘

‘வைத்தியரே! நான் ஆரம்பத்தில் சொன்னதுதான். உம் வாையை நீர் அடைத்துவந்திருந்தால் உன் புத்ரனுக்கு எந்த விக்கினமும் நேராது. ‘

‘…. ‘

‘தேவராசன் நான் உன்னோடு சிறிது வார்த்தையாடவேண்டும். நீ கொஞ்சம் தங்கி போ.. அது சரி இவர் யார். இதற்கு முன்னர் சந்தித்ததாக நினைவில்லையே ‘

‘எனக்கு வேண்டியவரில்லை. ஒருவேளை இங்கிருக்கும் மற்றவர்களில் எவருக்கேனும் வேண்டியவராக இருக்கலாம் ‘

வேலாயுத முதலியாருக்கு விளங்கிவிட்டது. இந்த நபர் நம்மை நேற்றுமுதல் பின்தொடர்ந்துவந்திருக்கிறான் என்பதனை அறிந்த மாத்திரத்தில், வியர்த்துக் கொட்டியது. தன் அனுபவங்களைச் சொல்ல நினைத்தார். நாக்கு மேலண்ணத்தில் ஒட்டிக்கொண்டது. நடக்கவிருப்பதை அக்கூட்டத்திலிருந்த வேண்டாத நபரும் ஷணத்தில் உணர்ந்துகொண்டான். தேவராசன் கத்தியை உருவிய நேரம் வளவின் வாசலில் மூச்சுவாங்கிக் கொண்டிருந்தான். எதிர்பட்ட நோஞ்சான் மனுஷர்கள் வலப்புறமும் இடப்புறமுமாக வீழ, இருட்டில் நின்றிருந்த மாமரத்தினை நோக்கி ஓடினான். இவனுக்கெனவே காத்திருந்ததுபோல தனது குதிரையில் ஆரோகனித்து மாறன் தயாராகவிருந்தான். அடுத்த சில நாழிகைகளில் மாறனது குதிரை இருவரையும் சுமந்துகொண்டு இருட்டிற் பாய்ந்தது.

/தொடரும்/

* மாற்றுப் படைத்தளபதி

**Ile Mascareignes ( Ile de France (மொரீஷியஸ்),Ile Bourbon (ரெயூனியோன்), Ile Rodrigues.

—-

Na.Krishna@wanadoo.fr

Series Navigation

நாகரத்தினம் கிருஷ்ணா

நாகரத்தினம் கிருஷ்ணா

நீலக்கடல் (தொடர்) – அத்தியாயம் 6

This entry is part [part not set] of 49 in the series 20040212_Issue

நாகரத்தினம் கிருஷ்ணா


‘Akabya ben Mahalel said; Ponder on three things and you will not come under the power of error: Know where you came from, where you are going, and before Whom you are destined to make an accounting. Where do you come from ? From a stinking drop (of semen). Where are you going ? To a place of dust and worms (the grave). Before Whom are you destined to make an accounting ? Before the Supreme Potentate over all of the earth ‘s rulers, the Holy Blessed One ‘

– Talmud, Pirke Abot 3:1.

இருபதாம் நூற்றாண்டு…

‘பெண்ணே நில் ‘ இவனது குரல் அவளுக்குக் கேட்கின்றதா ? கேட்டிருக்கவேண்டும். இல்லையென்றால், இவன் திசையில், பார்வையைச் செலுத்தியிருப்பாளா ? அவள் கால்கள் தயங்குகின்றன. ஒன்றையொன்று இடறுகின்றன. அவள் மனதிற்குள் அத்தயக்கம் இருந்திருக்குமா ? இருந்திருந்தால் இவனது குரலை அல்லது அவனது வேண்டுதலை இப்படி அலட்சியம் செய்துவிட்டு, உடலைச் செலுத்த முனைவாளா ? தன் எண்ணத்தை நிறைவேற்றுவதிலொரு முடிவான தீர்மானமிருக்க வேண்டும். அவளைத் தொடர்ந்து இதுவரை ஓடிவந்ததில் இதயத்தின் இயக்கம் இருமடங்காகியிருந்தது. இயல்புக்கு மாறாக நூரையீரல் விரிந்து சுருங்கியதில் சோர்ந்திருந்தான். நின்றான். மூச்சுவாங்கினான். நிமிர்ந்தான். பார்த்தான். தொட்டுவிடும் தூ……ரத்தில் அவள். நடையை எட்….டிவைத்தால் தொட்டுவிடலாம், அவைளை பிடித்துவிடலாம்… அப்படித்தான் நினைத்து நினைத்து, நடந்து நடந்து, ஓடிஓடி… இல்லை, தொடமுடியவில்லை. அவனுக்கும் அவளுக்குமான அந்தத் ‘தொட்டுவிடும் தூரம் ‘ நெருங்க நெருங்கக் குறையாமல், போக்குக்காட்டும் வானவில்லாக ஆனால் வண்ணங்களை இழந்த வானவில்லாக, விலகி விலகி இவனை மட்டும் பாலைமணலில் நிறுத்தி, மணற் புயலிற் தவிக்கச் செய்து, இறுதியில் மறைந்தும் போகிறாள்.

…மீண்டும் இவன் முன்னே முளைத்து, அவளிருப்பை இவன் அங்கீகரிப்பதற்கு முன்பாக, கண்முன்னே-பிரமாண்டமான கோபுரத்தில் ஒவ்வொரு மாடத்திலும் ஏறி நின்று, கீழ் நோக்கி ஒரு திடமான வெறித்தப் பார்வை. அடுத்தகணம், அம்பு தைத்த புறாவாக, தலை கீழாக, காற்றைக் கிழித்துக்கொண்டு நீரில்.. தொபீர்…

‘ ஐயா… ஆரேனும் ஒடி வாருங்களேன்.. இவளைக் காப்பாற்றுங்களேன் ‘

இவனது கதறல் யாருக்கேனும் கேட்டிருக்குமா ? இவனையே எட்டவில்லையே.! மற்றவர்களுக்கெப்படி ?

கைகளையும் கால்களையும் இங்கே இவன் உதறிக்கொள்ள,… அவளது உயிர் குமிழ்களாக நீர்ப்பரப்பில் உடைந்து கொண்டிருக்கின்றன..

‘ஆரேனும்.. ஐயா….!ஆரேனும்…இவளைக் காப்பாற்றக்கூடாதா ?.. ‘

‘சார்.. சார்…! என்னாச்சு ? கதவைத் திறங்க ‘ தொடர்ந்து கதவு இடிபடுகின்றது. பெர்னார் விழித்துக் கொண்டான்.

எதிரே சுவரொட்டி நிறுத்தப்பட்டிருந்த பிரான்சின் லியோன் நகரத்துக் கடிகாரத்தில் அதிகாலை மணி மூன்றரையென அறிவித்தது. கனவின் தொடர்ச்சியாக வியர்த்திருந்தான். எழுந்து மின்சார விளக்கை எரியவிடுவதற்காக, அதற்கான ஸ்விட்சைப் போட்டான். அவ்வறையில் காற்றின்றி ஒருவித இறுக்கம். தலையை உயர்த்திப்பார்க்க, மின்சார விசிறியும் சுழாலாமிருக்க, மின்சாரத் தடையெனக் காரணம் புரிந்தது. இதுபோன்ற நேரங்களிற்தான் இந்தியாவின் மீது எரிச்சலும், சொந்த நாட்டு ஏக்கமும் தவறாமல் ஏற்படும். எழுந்து ஸ்லிப்பரை அணிந்துகொண்டு, அறையையொட்டிய கூடத்து மேசையிலிருந்து சிகரெட்டொன்றைப் பற்றவைத்தான். பதட்டம் தணிந்தது.

‘சார்!.. என்ன ஆச்சு சார் ? ஏதாவது பிரச்சினைங்களா ? ‘ மீண்டும் வெளியேயிருந்து கரகரத்த – உடைந்த குரல். உதவிக்காக இவனுடனேயே வைத்துக் கொண்டிருக்கும் பையன் மணியின் குரல்.

‘ஒண்ணுமில்லை மணி.. நீ போய்ப் படு ‘ பெர்னார்.

இவனது பதில் பையனுக்குத் திருப்தி அளித்திருக்கவேண்டும். அவனிடமிருந்து வேறுவகையானக் கேள்விகள் வரவில்லை.

இனித்தூங்கவியலுமா ? முடியாது. கடந்த சிலவாரங்களாக, அவனுக்கேற்பட்டிருக்கும் அனுபவமிது.

‘எழுந்து சென்று, மனதுக்கு இதந்தருகின்ற நூல்களை வாசிக்கலாமா ? அல்லது விடிகின்றவரை கனவுகள் விட்டுச்சென்றிருக்கும் நினைவுகளை மீள்வாசிப்புச் செய்து களைத்து போகலாமா ? ‘கருமாறிப் பாய்தல் ‘ என்ற சொல் என்னிடம் ஏற்படுத்துகின்ற அனுபவங்களின் மூலமென்ன ? இதற்கேனும் பொருளுண்டா ? எல்லாமே, கற்பனையா ? இவனது நித்திரைக்காகக் காத்திருந்து நடத்தப்படும் தாண்டவங்களனைத்துமே பொய்யா ? மாயையா ? நேற்று நடந்த ஓர் விவாதத்தில் வேலு சொன்னதுபோன்று அபத்தமா ? மேற்கே பிறந்தும், இனம்புரியாது அழும் குழைந்தையாகிப் போனேனா ? ஒவ்வொருமுறையும் கனவில் அந்தப் பெண்ணைக் கண்டபிறகு, என்னில் அர்த்தமேதுமில்லாமல் போய்விடுகிறதே ? மீண்டும் மீண்டும் கனவுக்காகவும் அது தந்துகொண்டிருக்கிற சுவைக்காகவும் மனம் பரபரத்து, அவளைத் துரத்திக் கொண்டு, எத்தனை நாட்களுக்கு ? எத்தனை ஆண்டுகளுக்கு ? எத்தனை யுகங்களுக்கு ? இப்படி அலுப்பில்லாமல் தொடரப்போகிறேன். ‘

கேள்விகள், அவனுக்குள் பதிலுக்குக் காத்திராமல், மின்மினிப்பூச்சிகளாய் எந்த வெளிச்சத்ததையும் தந்துவிடாமல் கவனமாய், இருட்டில் நிறுத்திவிட்டு மறைந்துபோகின்றன.

—————————————————————————————————————————–

‘ தூக்கமா வேண்டும் ? உறங்கி விழித்தெழும்போது உன்னிடமுள்ள தேடலை அறிந்திருக்கிறாயா ? உன்னுடைய கனவனுபங்களை மீண்டும் பெறமுடியாதபோது, நினைவிற் திரும்பவும் கொண்டுவர இயலாதகணங்களில் நீ சுற்றிவருவது யாரையென்று நினைத்துக் கொண்டிருக்கிறாய் ? என்னையே. நம்மிருவரில் எவர் மலர், எவர் தேனி என்பது இப்போதாவது புரிந்ததா ? உன்னை அமைதிபடுத்துகின்றவகையில் நடந்துமுடிந்ததை காட்சிகளாக மறுபடியும் வரிசைபடுத்துகின்றேனே, அந்தக் கணத்திலாவது ‘ இந்த ‘நான் ‘ யாரென ‘நீ ‘ அறிந்திருக்கவேண்டும், தவறிவிட்டாய். அருமை நண்பனே! ‘நீ ‘ சேர்ந்து வைத்தவன் ‘நான் ‘. கடைசிவரை யாரோ இல்லை ? ‘நான் ‘. பிறவிகள்தோறும் தொடர்பவன். பிறந்து இறந்து பிறந்து இறந்து…. புல்லாகி, பூடாகிப் பொய்க்கதியை அடைவதுதானா வாழ்வின் நோக்கம் ?. அதுதானா ஜனன-மரண, சம்சார சாகர தொடர்கதை ? சன்னலை, ஒழுங்காகத் திறந்துவை. எதிர்பார்த்துக் காத்திரு. விதிகளை மீறாதே. ‘என் ஆயுளைக் கூட்டிவிடாதே. ‘

————————————————————————————————————————–

மாலை புதுச்சேரி, வல்லபாய் பட்டேல் சாலையில் கிளினிக் வைத்திருந்த டாக்டர் கோவிந்தராஜனைச் சந்தித்துவிட்டு வரலாமென்றிருந்தான். பெர்னாருக்கு ஏற்படும் கனவுகளுக்கு ஏதேனும் பதிலிறுக்கலாமென ‘பிரெஞ்சு மொழி ஸ்தாபனத்தின் நண்பர்கள் வற்புறுத்தி டாக்டரைப் பார்க்கச் சொன்னார்கள். இயக்குனர் டாக்டர் கிரிமால், ‘முதலில் உன்னை கவனிச்சுக்க, பிறகு ஸ்தாபனத்திற்கு உழைக்கலாம் ‘ எனக் கட்டளையிட்டபோது இவனால் பதில் சொல்லமுடியவில்லை.

தன் நண்பன் வேலுவை அழைத்துக்கொண்டு மாலை ஆறுமணிக்கெல்லாம் கிளினிக்கிற்கு வந்தாயிற்று. டாக்டர் கோவிந்தராஜன் வாசலிலேயே போர்டு வைத்திருந்தார். அதில் பார்வைநேரம் மாலை ஆறுமணியிலிருந்து எட்டுவரையென எழுதப்பட்டிருப்பதை வாசித்துக் கொண்டிருந்த போது, ஓர் அம்மாள் இவர்களை ஒதுங்கச் சொல்லி வாசலில் தண்ணீர் தெளித்தாள். ஈரப்புழுதியின் மணத்தை வாங்கியவாறு உள்ளே நுழைந்து இருவரும் காத்திருந்தார்கள். ‘டாக்டர் வர்ற நேரந்தான், உட்காருங்க ‘ என்று சொன்ன அந்தப் பெண்மணியின் உத்தரவாதத்தை நம்பி இரண்டு மணி நேரம் காத்திருக்க வேண்டியதாயிற்று – மேசையில் கிடந்த ஆங்கிலத் தினசரியை இரண்டாவது முறையாக படித்துவிட்டு, பக்கத்திற் கிடந்தத் தமிழ் தினசரியில் நடிகையின் வயிற்றில் கவனம் திரும்பியபோது டாக்டர் ஏப்பமிட்டுக்கொண்டே உள்ளே வந்தார். இவனுக்கு முன்னே இரண்டு பேர் காத்திருந்தும், முதாலவதாக அழைக்கப்பட்டான். வெள்ளைத் தோலுக்கு இந்தியர்கள் எப்போதும் அடிமைகள்.

டாக்டர் கோவிந்தராஜன் முகத்தைத் தவிர உடல்முழுக்க ரோமதாரியாகயிருந்தார். காது மடல்களிற் கூட அக்கறையெடுத்து முடி வளர்த்திருந்தார். இருக்கை கொடுத்து, காதைக் குடைந்துகொண்டே இவனுக்கு நேர்ந்த கனவுகளைப் பொறுமையாகக் கேட்டார்.

‘மிஸியே….. என்ன பேரு சொன்னீங்க ? ‘

‘பெர்னார். பெர்னார் ஃபோந்த்தேன்.. நீங்க ‘பெர்னார் ‘ ன்னே அழைக்கலாம் ‘

‘மிஸியே பெர்னார். நீங்க புதுச்சேரிக்கு வந்து எத்தனை வருஷமாகுது ? மார்க்கெட் பக்கமெல்லாம் போயிருக்கீங்களா ? ‘

‘ம்… ‘

‘போயிருக்கீங்க… அங்க தொடை தெரியப் புடவையை வழித்துக் கொண்டு, குலை குலையா மார்புகளைச் சுமந்துகொண்டு மிளகாய்த் தூள் விற்கும் பொம்பிளையைப் பார்க்கறீங்க. அட வேணாங்க, எங்க ஊரு சினிமாவுக்குப் போறீங்க.. பெருசான பிருஷ்டத்துடன் பலான உபாதைகளோடு ஆடும் பெண்களை பார்க்கரீங்க ‘

‘….. ‘

‘ என்ன ஆகும் ? கனவு வரும். உங்களை உச்சத்துக்கு கையப் பிடிச்சு கூட்டிப் போகும். விடிஞ்சு பார்த்தா… ‘

இப்படித்தான் ஒவ்வொருமுறையும் கேள்வியைச் சொடுக்கி அநியாயத்துக்குக் கொக்கோகம் வாசித்த கோவிந்தராஜனிடம் பெர்னாருக்கு எரிச்சல் வந்தது. ‘வேலுவைத் திரும்பிப் பார்த்தான். அவனும் இவனைப் போலவே முகத்தை இறுக்கிக்கொண்டு உட்கார்ந்திருந்தான்.

‘நீங்க என்ன சொல்ல வர்றீீங்க ? ‘

‘ ….கனவுங்கிறது என்னண்ணு நினைக்கிறீங்க. சமூகத்தில சில காரியங்களை வெளிப்படையாச் செய்ய நம்மால முடியறதில்லை. அது தப்போ சரியோ, அடிப்படையிலே நம்மால நிறைவேற்றிக்கொள்ள முடியாத ஆசைகளென்ற வகையில மூளையில பதியம் போட்டுண்டு, முளைவிட காத்திண்டிருக்கும். என்றைக்காவது உடம்புல உழைப்போ, உள்ளத்துல பாரமோ கூடிப்போயிட்டா அன்றைக்கு நீங்க படுக்க மாட்டிகளாண்ணு காத்திண்டிருந்து, தளிர், இலைன்னு நாடகம் நடத்திட்டு ஒருபாட்டம் ஆடி முடிச்சிடும். கனவு காண்பவன் ஒரு பார்வையாளனா, தேமேண்ணு முடிஞ்சசப்போல்லாம் அழவோ அல்லது சிரிக்கவோ செய்யணும் ‘

‘………. ‘

‘பழைய ஏற்பாட்டுல ‘சில சம்பங்கள் கனவுகள்மூலமாலவே நமக்கு வெளிப்படுத்தப்படுகின்றன ‘ என்று பைபிள் சொல்லலியா ? கனவுகள் என்பது அன்றைய நாள்ல உங்களுக்கு ஏற்படுற அனுபங்கள் மட்டுமல்ல, சில நேரங்கள்ல எச்சரிக்கைகளையும் கொண்டுவருது. அது நினைவுக்கும் மறதிக்கும், ஆத்மாவுக்கும் உடலுக்கும், நிறைவேற்றமுடிந்த அல்லது முடியாத விருப்பங்களுக்குமிடையிலும் ஓரிணைப்பாசெயல்படுது. அது கண்ணாடி. பொய்சொல்வதில்லை. இப்போதைக்கு முதலுதவியா உங்களுக்கு நான் சிபாரிசு செய்வது என்னன்னா…..

‘…… ‘

‘ மனசைக் கட்டுப்பாடா வச்சிக்கணும். பக்கத்துல கடற்கரை இருக்கு. படுக்கப் போவதற்கு முன்னர் நல்லா நடங்க. வெந்நீர்வைத்து குளியுங்க இரவுல வாசிக்கிற புத்தகங்கள் நல்லதாக இருக்கட்டும். திரும்பவும் கனவுகள் வந்துதுண்ணா என்னை மறுபடியும் வந்து பாருங்க ‘

கோவிந்தராஜன் கேட்ட ஐம்பது ரூபாயைக் கொடுத்துவிட்டு விடைபெற்றபோது. குழப்பங்கள் கூடியிருந்தனவே தவிரக் குறையவில்லை. அவரது பதில் அவன் எதிர்பார்ப்புகளுக்குப் பொருந்தவில்லை.

பெர்னாரும் வேலுவும் சைக்கிளிலேயே வல்லபாய் பட்டேல் சாலையைத் தொடர்ந்து சென்று கிழக்குக் கடற்கரையை அடைந்தார்கள். வழக்கம்போல கரியமிலவாயுவைப் பண்டமாற்றுச் செய்துக்கொண்டு சுவாசிக்கும் மக்கள். எங்கே ஒதுங்கினாலும் சினிமாவும் அரசியலும் பேசும் தமிழர்கள். கையேந்திபவன்கள். அதனைச் சுற்றித் பிறவியெடுத்ததே தின்பதற்காக என்றலையும் மனிதர்கள். அவசரகதியிற் தொப்பையைக் குறைக்க முயற்சிக்கும் நாற்பது வயதுகளெனப் பார்த்துக்கொண்டு காந்தி சிலையை அடைந்தார்கள். பிறகு, சைக்கிள்களை நிறுத்திவிட்டு, கிழக்கு திசையில் கற் சுவரில், இரு சுண்டற் பொட்டலங்களை வாங்கி, பிரித்துக்கொண்டு உட்கார்ந்தார்கள்.

‘ ராசா! குறி சொல்லட்டுங்களா ? ‘ திரும்பிப் பார்த்தார்கள். கோடாலி முடிச்சுக் கொண்டை, முகம் முழுக்க மஞ்சள், நெற்றி நிறையக் குங்குமம், தோள்வரை இறங்கி – தங்கட்டி சுமக்கும் காதுமடல்கள்,. கையில் முழங்கை நீளத்திற்கு ஒரு பிரம்பும், கண்டாங்கிச் சேலயுமாய் நடுத்தர வயதுப் பெண்மணி.

‘ ஏம்மா போ போ. இந்த நேரத்தில எந்தக் கையைப் பார்த்து என்ன சொல்லமுடியும் ‘ – வேலு.

‘ உனக்கு இல்லை ஐயா, இந்தத் தொரைக்கு, முன் ஜென்ம வினையால, விபரீத ராசயோகம். கிரக நிலை சரியில்லே. அஞ்சு ரூவா கொடுங்க. காலமேர்ந்து வயித்துக்கொண்ணுமில்லை; கை பார்த்து சொல்லுறன். ‘

‘ இந்தா அஞ்சு ரூபா. நீ இடத்தைக் காலி பண்ணு ‘ வேலுவே தன்னிடமிருந்த ஐந்து ரூபாயை நீட்டினான்.

கொடுத்த ஐந்து ரூபாயை சங்கடத்துடன் வாங்கிக் கொண்டவள்,

‘ கை பார்க்காமல் காசு வாங்கறதில்லை. இருந்தாலும் தொரையைக் கொஞ்சம் ஜாக்கிரதையாக இருக்கச் சொல்லு. முன் ஜென்ம கன்னியால தொந்தரவு இருக்குது ‘

எச்சரித்துவிட்டு நடந்து சென்றாள்.

/தொடரும்/

Series Navigation

நாகரத்தினம் கிருஷ்ணா

நாகரத்தினம் கிருஷ்ணா