நீர்வலை (7)

This entry is part [part not set] of 32 in the series 20070118_Issue

எஸ். ஷங்கரநாராயணன்


பள்ளிக்கூடச்சீருடை கூடக் கழற்றாமல் ஓடிவந்து அப்பாமேல் உட்கார்ந்திருந்தாள். ரெட்டைப் பின்னலை மீறி சிறு மயிர்கள் வெளிச் சிதறியிருந்தன. பின் வெளிச்சத்தில் கம்பிகளாய்த் தெரிகின்றன. உற்சாகப் பந்தாய் இருந்தாள். வந்து விழுந்தால் அடங்காமல் திரும்பத் திரும்ப கொந்தளிக்கும் பந்து. வாழ்க்கையை ஆனந்தக் கிறுகிறுப்புடன் உணரும் பருவம் குழந்தைப் பருவம். உலகில் எல்லாமே ஆச்சர்யம் அவற்றுக்கு. எல்லாமே சந்தோஷம்.
நேத்துப் பாத்தேனே அப்பா. அந்த மரத்துல பூவே இல்லப்பா. இன்னிக்கு மாத்திரம் எங்கேர்ந்து வந்தது.
அந்தா இருக்கு பாருட்டி குட்டி… அந்தப் பறவை… அது கொண்டு வந்து குடுத்தது எல்லாப் பூவையும்!
இளவயதில் துயரங்கள் துன்பங்கள் இன்றி வாழ்க்கை அமைவது, வாழ்க்கை இன்பமயமானது என்கிற நம்பிக்கையை ஊட்ட வல்லதாய் இருக்கிறது. சிவாஜி பார்த்த காட்சிகள் வேறானவை…
பிறந்தபோதே உயிர்ப் பிண்டமாய் வெளியே வந்த தக்கணமே அவன் தன் அம்மாவின் சாவு க்காக அழ நேர்ந்தது!
அழுகை கூட அல்ல. அது கூக்குரல். ஒப்பாரி!
விஷம் கொடிது. சாவு கொடிது என்பர் தம் மக்கள் அழுகைச் சொல் கேளாதவர்.
அப்பாவுக்கு அதனின் மேலே திகைப்பு. இனியென்ன என்கிற பெரிய மலையில் முட்டி நிற்கிறார் அவர். அடுத்த-கணம் புரியாத வெருட்டல்.
இரண்டாவது காலையும் இழந்தாற் போல…
இத்தனை களேபரங்களுக்கும் நடுவே அவன் பிழைத்து வந்தது, அதும் நல்ல குணங்களுடன் எழுந்து வந்ததில் கிருட்டினமணிக்கு ஆச்சர்யம்.
கல்லுக் கல்லாய்க் கோயில் எழுப்பி நடுவில் பள்ளம். செயற்கைக் குளம். நடுவில் மிதக்க விட்ட தாமரை இவன்! பொற்தாமரை அல்ல – நிஜமே நிஜமான தாமரை.
அந்தக் கண்கள்… சிவாஜியின் அந்தக் கண்கள். அதில் கனவின் எல்லைகளை அளையும் ஒரு தன்மை. ஒரு தலைவணங்காத் தன்மை. தன்னையே புதுப்பித்துக் கொள்கிற சட்டையுரித்துக் கொள்கிற புத்தெழுச்சியுடன் இழப்புகளில் இருந்து மீட்டுக் கொள்கிற, உருவி விடுவித்துக் கொள்கிற தன்மை இருக்கிறதை… அவன்… கிருட்டினமணி கண்டுகொண்டான் எப்படியோ.
லாரிடிரைவர் வேலை எளிமையானதல்ல. கூட உதவிக்கு என கிளினர் பையன் யாரையாவது, டிரைவர்கள் வைத்திருக்கிறார்கள். அவனுக்கு யாரும் இல்லை. யாரும் இல்லாப் பயணத்தில், துணை பழைய திரைப்படப் பாடல்களே. பாடல் கேட்டுக்கொண்டே வண்டி ஓட்டிப்போவதில் பயண தூரம் தெரிவதில்லை. இடை வெளிகளில் மரங்கள் இருமருங்கும் நிற்கின்றன. இரவு வெளிச்சம். வானத்தில் இருந்து யாரோ, கொசுமருந்து தெளிச்சாப் போல.
நிலா மினிஷ்டர் வருகிறார், என்று ஏற்பாடுகள்!…
லாரி விளக்குகள் போதா. சாலையின் குண்டுகுழிகள் தெரியா. திடுங் திடுங் என அதிர்ந்து லாரி, மேடேறி… பள்ளமிறங்கிச் செல்லும். நல்ல லோடு என்று பின்பாரம் இருந்தால் சரக்குகள் மோதிக்கொள்ளும் சத்தம் கேட்கும். பின்பக்கம் நம்ம சிவஜோதி கூந்தலில் ரோஜாப்பூ வைத்துக் கொண்டாற் போல கட்டியிருந்த அரைவட்டச் சங்கிலி மோதிக் கொள்ளும் ணிக் ணிக் ஒலி. இந்த மேடுபள்ளங்களில் பயணித்துச் செல்ல பாடலில் உற்சாகத் தாளக் கட்டு நல்லது.
டிங்கு சிக்கு டிங்கு ஜிங்
டிங்கு சிக்கு டிங்கு ஜிங்…
அதற்கு சில உளரல்களை இசையொலிகளாக்கிய பாடல்கள் சிலாக்கியம். அர்த்தம் கிடையாது. சொல் அடுக்குகள் – வெறும் உற்சாக எடுப்புகள்…
டிங்கிரி டிங்காலே மீனாட்சி
டிங்கிரி டிங்காலே
உலகம் போற போக்கப் பாரு
தந்தன தன்னானே…
டிங்கிரி டிங்காலேன்னா என்ன? யாருக்குத் தெரியும். உலகம் போற போக்கப் பாரு… லாரியில் இருந்து பார்த்துக்கொண்டே போறதா?
உலகம் எங்க போகுது. அவன்தான் உலகத்தில் போகிறான்!
புகைபிடித்துக் கொண்டிருந்தான். சிவஜோதிக்கு புகைபிடிப்பது பிடிக்கவில்லை. ஒரு முத்தத்துக்கு இருமினாள். என்னாச்சி? – என்றான். ஒண்ணில்ல ஒண்ணில்ல… என்றபடி,
இருமினாள்.
சிகெரெட் ஒத்துக்கலியா?
அவள் பதில் சொல்லவில்லை.
சிகெரெட் குடிப்பதையே விட்டுவிட்டான். வேறு கெட்ட பழக்கங்கள் எதும் இல்லை. முன்பிருந்தே இல்லை.
ஆச்சர்யம். லாரிடிரைவர்… மென்மையான உணர்வுகள் பிடிபடுகின்றன. வன்முறை பிடிக்கவில்லை.
சின்னக் குழந்தையாகவே வீர சிவாஜியைப் பறி கொடுத்த துக்கம் காரணமாக இருக்கலாம்.
அப்பா கொடுங்கோலர்கோலம் பூண்ட கணங்கள். சட்டென கோபம் உச்சிக்கு ஏறி, வேட்டி மேல் பெல்ட்டை உயர்த்தி ஓங்குவார்… பலமுறை அடி விளாசியிருக்கிறார். ஒருமுறை எக்குத் தப்பான ஆவேசத்தில், பெல்ட்டைக் கழற்றி, உயர்த்தினாரா…
வேட்டி அவிழ்ந்து விழுந்துவிட்டது!
கடுமையான மெக்கானிக் வேலைகள் தெரிந்தவன். லாரிஷெட் பையன்கள் இரவுகளில் தூக்கம் வராமல், உற்சாகத்தை எப்படி வடிக்க, என்று தினவெடுத்துத் திரிகிற கணங்கள்…
எங்காவது நாய் இருந்தால் விரட்டிப் போவார்கள். பால் ஆடு கிடைத்தால் பிடித்துவந்து கட்டிப் போட்டுவிட்டு, அது திமிறத் திமிற, சிரட்டை சிரட்டையாய்ப் பால்கறந்து விடுவார்கள். அத்தனைக்குப் பால் இராது அதனிடம். ஆட்டுக்காரன் கறந்திருப்பான் என்பது ஒருபுறம். தவிர இராத்திரி நேரம். என்னத்தைச் சுரந்திருக்கும் உள்ளே. அவர்கள் மடியை அமுக்க அமுக்க, வலியில் அலறும். அவர்கள் இழுத்த இழுப்பில் சில சமயம் மடியில் இரத்தமே சுரந்து வரும்… இவனுக்கு அழுகை வந்துவிடும். டேய் விடுங்கடா, பாவம் வாயில்லா ஜீவனைப் போயி… என ஆட்டை மீட்டு விரட்டி விடுவான் கிருட்டினமணி.
முதல் பார்வைக்கே அவனுக்கு சிவாஜியைப் பிடித்து விட்டது. முள்ளில் சிறகு சிக்கிக் கொண்ட வண்ணத்துப்பூச்சி இவன்!
தூங்கி வழியவில்லை அவன். தூக்கத்தில் பிரியங் காட்டுகிற சோம்பேறி இல்லை. வாழ்க்கையின் துயரங்களில் மிரண்டவனாய் இல்லை. சிரிப்பை உயிர்ப்புடன் வைத்திருக்கிறான் இன்னும்!
இந்த வயதில், பள்ளிக்கூட அறிவுகூட நிரம்பாமல் என்ன அழகாய்ப் பேசுகிறான்… சிமின்டுத் தரையில் மழை தெறித்தாப் போல…
நதியானவன். பாறையில் முட்டி நிற்காமல் திகைக்காமல், வளைந்து ஒதுங்கி புதுவழி தேடிப் பயணப்படும் நதி…
பின்னிரவின் அந்த அலுப்பு காணாதவன். உடம்பு நல்ல சொல்கேட்புடன்… மனசின் ஆணையின் ஒழுங்கு தவறாமல் இருக்கிறது. நிதானமானவன். சரியாகப் பேணினால் இவன்… நன்றாகத் தலையெடுத்து விடுவான்.
நாற்றங்கால். பிடுங்கி இவனைச் சரியான இடத்தில் ஊன்ற வேண்டும்.
ஊன்றுவேன்… என அவன் முடிவெடுத்தான்.
கமலா. ரெட்டைச் சடை என பாகம் பிரித்து, ரப்பர் பேண்டினால் கீழ்ப்பகுதி முடிச்சிடப் பட்டிருந்தது. தோட்டப் பூவாளியில் இருந்து செடிகளுக்குத் தண்ணீர் ஊற்றினால் நீர் இப்படித்தான் பூவிரிகிறாப் போல இதழ் திறக்கும்… மூக்கில் சிறு வியர்வை முத்து. அப்பாவின் மார் மேல் உட்கார்ந்து எழுப்பினாள். அப்பா வீடு திரும்பிய உற்சாகம் அவளுக்கு.
வீட்டில் இருக்க நேர்ந்தால் அப்பா அவளைப் பள்ளிக்கூடம்வரை தூக்கிப் போகிறார். அல்லது அவளது பைச்சுமை அவர் எடுத்துக்கொள்ள, அப்பாவின் கையைப் பிடித்துக் கொண்டே நடக்கையில் சப்பரமாய் உடம்பு ஆடும். தலையே ஆடும்… உற்சாகக் கும்மாளம். நடுப்பல் இடைவெளி சீர்ப்படவே இல்லை! அழகான வளர்ந்த கெட்டிப் பல். வெள்ளைப் பல். பல் அல்ல அது நடுப் பகல்!
‘ஐய அப்பா தூங்கறாகட்டீ…’ என அம்மா எச்சரிக்கை அவள் காதில் விழுந்தால்தானே?
அப்பா… எனப் பாய்ந்துவந்து முகத்தைத் தட்டி எழுப்பினாள். திடுக்கென அந்த உற்சாகம் விக்கியது. கூட யாரோ படுத்திருக்கிறார்கள். புது விருந்தாளி. புதுச்சட்டை. புது டவுசர். யார் அது?
அசைப்பில் விழித்துக் கொண்டான் கிருட்டினமணி. அவள் வருவதற்குள் அவன் தூங்கிவிட வேண்டியதாய் இருந்தது. ‘யாருப்பா இது?’ என்று முதல் கேள்வியாய்க் கேட்டாள் கமலா.
‘ஏய் இந்த அண்ணன் நம்ம கூடவே இருக்கப் போகுது…’
அண்ணன்!…
‘சரியா?’ என்றபடி அவள் முகத்தை ஆர்வத்துடன் பார்த்தான் கிருட்டினமணி. அதற்கு பதில் சொல்லத் தெரியவில்லை.
‘பச்சப் பிள்ளை அதுக்கு என்ன தெரியும்?’ என்கிறாள் சிவஜோதி உள்ளே யிருந்து. ‘நல்லா தூங்கிட்டிருந்தீங்க… அதான் எழுப்பல… சாப்பிட வரலாமா?’
அலை தளும்பினாப்போல சிலிர்த்து சிவாஜி விழித்துக் கொண்டான். அண்ணனின் மார் மேல் குழந்தை. அவன் புகைப்படத்தில் பார்த்த குழந்தை. தற்போது வளர்ந்திருந்தாள். மெலிதாய்ப் புன்னகை செய்தான். வீடு… ‘அ வ ர் க ள்’ வீடு… இப்படி அங்கே தான் சுவாதீனமாய்ப் படுத்துக் கிடந்தது கூச்சமாய் இருந்தது. தலைக்குமேல் மின்விசிறி. அவன் தூக்கத்தை பாதிக்காவண்ணம் யாரோ – அண்ணியாய்த்தான் இருக்கும்… அண்ணன், எங்க அவர் அவனுக்கு முன்னமே உருண்டாச்சி! – தலையணை வைத்திருந்தார்கள்…
அவர்களின் அன்பின் பரிபூரணத்தில், உண்மையில் மனசு நெகிழ்கிறது. மனம்விட்டு அழ ஆசைஆசையாய் இருந்தது. அழுவதற்குக் கூட இந்த உலகத்தில் தகுதி வேண்டியிருக்கிறது. யாரும் பொருட்படுத்தா விட்டால் அழுகையால் மனம் ஆறுதல் அடையுமா?… இதற்கெல்லாம் நான் தகுதியானவனா… என்கிற கூச்சம் வந்தது.
எழுந்து உட்கார்ந்து கொண்டான். ‘உன் பேர் எனக்குத் தெரியும்…’
கமலா அவனையே பார்த்தாள். எப்படித் தெரியும்… என்று கேட்பாள் என எதிர்பார்த்தான். அவள் வேறு கேள்வி கேட்டாள். ஒரு சவால்போல அவள் அவனைப்பார்த்து, கேள்வியை வலை எறிதல் செய்தாள்….
‘நான் எத்தனாங் கிளாஸ் சொல்லு பாப்பம்?’
அந்த சவாலை அவன் ஏற்றுக் கொண்டான். நாலாம் வகுப்பு என அவனுக்குத் தெரியாதா என்ன…
‘மூணு!’ என்கிறான்.
‘தப்பு! நான் நாலு!’ என்று கை கொட்டிச் சிரிக்கிறாள். அட முட்டாளே என்கிற ஆரவாரம் அதற்கு. பிரியமானவர்களிடம் தோற்றுப்போவது எத்தனை நல்ல விஷயம். அதுவும் அறிந்தே தோற்றுப் போவது.
ஒருவேளை அவன் சரியான பதில் சொல்லியிருந்தால் அவள் மனதின் இந்த அண்மை அவனுக்குக் கிடைத்திருக்குமா!… காது!
‘இந்த அண்ணன் உனக்கு புதூ டிரஸ்லாம் வாங்கியாந்திருக்குட்டி…’ என்றபடி எழுந்து கொள்கிறான் கிருட்டினமணி. லுங்கி நெகிழ்ந்திருக்கிறது. மீண்டும் இறுக்கிக் கட்டிக் கொள்கிறான்…. அவனுக்கு வாங்கும் போதே குழந்தைக்கும் ஒரு செட் பார்த்து வாங்கிய அவனைப் பார்க்க பயமாய் இருந்தது சிவாஜிக்கு. ஐயோ இவனுக்கு இந்த ஒரு பயணத்தில் என்னால் எத்தனை செலவு… என் று திரும்ப வருத்தமாய் இருந்தது.
எங்காவது வேலை என்று சேர்ந்து கொண்டு முதல் சம்பளப் பணத்தில் எல்லாருக்கும் நான் செலவழிக்க வேண்டும், என ஆசைப் பட்டான் அப்போது.
‘அண்ணே…. ஒரு உதவி… கேட்டேனே?’
‘என்னாடா புதிர் போடறே…’
‘ஆமாண்ணே’
‘சொல்லு…’
‘உங்க மெக்கானிக் கடை…’
‘அதுக்கு என்ன?’
‘அதுல என்னியும் சேத்து விட்ருங்க’ என்றான் ராஜா.
(தொ ட ர் கி ற து)


storysankar@gmail.com

Series Navigation