நீராகிப் போன கடிதங்கள்

This entry is part [part not set] of 35 in the series 20030518_Issue

ராபின்


மேகங்கள் பெற்ற வெண்மை
கொண்டு புலர்ந்த காலை;

முடித்தாக வேண்டிய வேலை,
படித்தாக வேண்டிய புத்தகம்,
கேட்டாக வேண்டிய சங்கீதம்,
எழத்தான் வேண்டிய திருக்கிறது;

அகத்தின் கனவுகளை புறத்தின் நீர்கழுவி
வேஷங்கள் தரித்து கிளம்பியாயிற்று;

நவீனங்களின் மேன்மை சொல்லும்
சீட்டுக்கட்டு கோபுரங்களாய் கட்டிடங்கள்;

நுழைவு அட்டை சரிபார்த்து
கதவு திறந்து வரவேற்கும் குரல்பெட்டி;

காலனிகளின் உராய்வொலிகளை
மெளனமாய் உள்வாங்கும் தரைவிரிப்புகள்;

வரவேற்பு நங்கையின் சிரிப்பிலும்
இயந்திரத்தனம் தேடும் என்தர்க்கம்;

பலமாடிகள் கடத்திச் சென்று
வெளியேற்றி, கதவுமூடிச் செல்லும்
மின்தூக்கியின் இயந்திர அலட்சியம்;

வந்துமோதும் பதனிட்ட காற்றின்
குறைவெப்பத்தில் சில்லிட்ட சுவாசம்;

நிச்சலன கண்ணாடிகளுக்கு அப்பால்
சீரான சலனங்களாய் வாகனவரிசை;

ஜடங்களின் தானியக்க ஒழுங்குகளின்
ஆதிக்கத்தில் சிதறிய மனத்துளிகளை,
மெதுவாய் அணைத்துக் கொள்ளும்
கணிணித் திரையின் சட்டங்கள்;

நண்பர்களின் மின்னஞ்சல் பார்த்தபின்,
வீட்டிற்குக்கடிதம் எழுதாத மற்றுமொரு முன்னிரவு…

இயந்திர நுட்பமேதும் அறியாது என்
மனநுட்பம் குறித்த சிரத்தை கொண்டு
குழிவிழுந்த கன்னமாய், தூரமாய் அம்மா;
வார்த்தைகளின் நம்பிக்கை எதிர்பார்த்து அப்பா;

சுழலும் நாற்காலி பின் நகர்த்தி
முதுகு சாய்த்து விட்டம் வெறித்த பின்னும்
நெஞ்சின் ஓரத்தில் மிஞ்சியிருக்கும் வலி
கண்களில் நீராய் துளிர்த்து நிறைக்க,
உணர்ந்த இமைகள் மெல்ல மூடும்.

— ராபின்

amvrobin@yahoo.com

Series Navigation

ராபின்

ராபின்