நீரலைப்பு

This entry is part [part not set] of 48 in the series 20040311_Issue

இராம.கி.


ஓரடிக் கலங்கல் ஒட்டிய கிணற்றில்;
வாரிய வழங்கலோ(1) நின்றுபல் வாரம்;
புரைநீர்(2) தூர்ந்ததோ போந்த மாதமே;
கண்ணிமை ஆழ்வரி; கருத்தெலாம் தேடல்;
விண்ணிலே எங்கும் வெள்ளையாய்ப் பஞ்சுகள்;
வாய்நகை யோடு வறட்சியை அறிதரும்,
ஆயிழைப் பெண்ணாள் தொலைக்காட் சிக்குள்;
வெம்மையின் ஏற்றம் செம்மியே தெறிக்க,
அண்மையில் தேர்தல் அழகுசெய் தெருக்கள்;
எள்ளும் கொள்ளும் ஏசி வெடித்தே,
துள்ளுறும் முகத்துடன் துரக்கும்(3) மும்முரம்;

‘நாளைத் தாங்கலை(4) எங்கு பிடிப்பது ? ‘
‘ஆயிரம் லிட்டர், நூற்று யிருபதா ?(5) ‘
‘என்ன இழவோ ? கொடுத்துத் தொலையேன்;
இந்த வாரம் இன்னும் போகணும்; ‘

அலுவம்(6) நுழைந்து ஆழ்பணிக் கிடையில்,
புழுங்கிய பொதின அட்டை(7)யைப் பார்க்கின்,
உப்புச் செறிவை(8)க் குறைத்தே நீரை
ஒப்பவே மாற்றிடும் நுட்பியல் வல்லுநர்;

யாரோ இசுரயேல் நுட்பப் பொதினமாம்;
வாரண நீரின்(9) ஆரளச் செறிவை(10)
ஊடுகை எதிரில் (11) உழைந்து பிரித்து
நாடிக் கசக்கி, நன்னீர் ஆக்குமாம்;

திணைக்களம்(12) முழுக்கப் பரிசலில்(13) அடக்கி
முனைக்கவும் நிறுத்தவும் முடியுமாம்; இப்படி
ஆயிரம் லிட்டர் திணைக்களம் ஒன்றை
வேயவே(14) எழுபத் தாயிரம் போதுமாம்;

விளைத்த நீரின் விலையோ மலிவுதான்;
ஆயிரம் லிட்டர், நாற்பதே உரூபா;
மூப்பத் திரண்டு கோடிலிட் டரினால்(15),
நாவறழ் நகரின் தேவையைப் பூர்த்திட

இருபத் தோரே பில்லியன் உரூபா! (16)
செருகிய இமையாய், செருமிய கமறலில்,
கனவுகள் விரிந்தன; கணக்கும் பரந்தது;
இத்துணை சுளுவாய் இந்நகர்த் தேவையை
முத்திட ஒல்லுமேல், மூதிய தெதனால் ?

ஊழல் வழக்கு, உருசியக் கும்பணி,
தெலுங்கு கங்கை; தேடும் வீராணம்;
ஆண்டாண்டு தோறும் அடிக்கும் கூத்துகள்;
அடைமழை வந்தால் இதையெலாம் மறந்து,
எத்தனை நாள்தான் எம்மைஏ மாற்றுவர் ?
இன்னுமோர் முறைக்கு எத்தனை கதைகள்
எடுத்து ரைப்பார்கள் இந்நிலக் கட்சியர் ?

மறதி என்பதே தமிழனின் சொத்தோ ?;
மன்னிப் பென்பதே தமிழனின் பண்போ ?
எப்படிப் பார்த்தும் இக்கதை மட்டும்
தப்பிலும் தவறிலும் தப்பா நிற்குதே!

தாக வறட்சியில் ஏகமாய் மக்கள்
ஆறலைப் பது(17)போல் ஆகி,
நீரலைப் படுவதே(18) எங்களின் விதியாம்.

அன்புடன்,
இராம.கி.

1. வாரிய வழங்கல் = water supply by metro water board
2. புரை நீர் = borewell water
3. துரப்பு = traffic
4. தாங்கல் = tanker
5. நூற்று இருபது உருபாய்கள்
6. அலுவம் = அலுவலகம்
7. பொதின அட்டை = business card
8. செறிவு = concentration
9. வாரண நீர் = marine water, கடல் நீர்
10. ஆரளச் செறிவு = ஆர்ந்த உப்புச் செறிவு
11. எதிர் ஊடுகை = எதிர்த்துச் செல்லும் ஊடுகை = reverse osmosis; ஊடகம் என்ற சொல்லை
medium என்பதற்குச் சொல்லாமல் மிடையம் என்றே பயன்படுத்துவது நல்லது; இல்லையேல் ஊடுதல் = osmosis
என்ற நல்ல சொல்லைத் தவிர்க்க வேண்டியிருக்கும்.
12. திணைக்களம் = plant
13. பரிசல் = barge; முழுத் திணைக்களத்தையும் ஒரு பரிசலில் நிறுவி கடற்கரை அருகே எங்கு
வேண்டுமானாலும் நிறுத்த முடியுமாம்.
14. வேய்தல் = to build; ஒரு நாளைக்கு ஆயிரம் லிட்டர் நீரை விளைவிக்க, ரூ.70000 தான்
முதலீடு தேவைப்படுமாம். வெறும் நாலே மாதங்களில் திணைக்களம் அணியமாய் (ready) இருக்குமாம்;
கேட்பதற்கு வியப்பாய் இருக்கிறது.
15. முப்பத்திரண்டு கோடி லிட்டர் = சென்னையின் ஒரு நாள் நீர்த் தேவை.
16. மேலே உள்ள நீர்த்தேவையைக் கொண்டுதர ஆகும் எதிர் ஊடுகை திணைக்களத்தில் முதலீடு வெறும் 21
பில்லியன் உருபாய்கள்; அதாவது 2100 கோடி உரூபாய்கள்.
17. ஆறலைப்பு = வழிப்பறிக் கொள்ளை
18. நீரலைப்பு = நீரால் நடக்கும் கொள்ளை.
—-
poo@giasmd01.vsnl.net.in

Series Navigation

இராம.கி.

இராம.கி.