நிழல் சண்டை

This entry is part [part not set] of 31 in the series 20060929_Issue

ஹெச்.ஜி.ரசூல்


எனது தெளகீது பிராமணர்களின் கூர்மழுங்கிய வாள்களும் – வெட்டுப்பட்ட சில பண்பாட்டுத் தலைகளும் கட்டுரை தொடர்பாக (வஹ்) ஹாபியின் பரிதாபத்துக்குரிய கடிதம் வாசித்தேன்.
முதலில் ஹாபியின் குளறுபடிகள் குறித்து திண்ணை வாசகர்கள் தெளிவு பெறுதலுக்காக சில குறிப்புகள்.
1. ஹெச்.ஜி.ரசூல் என்று என்னால் எழுதப்பட்ட பிரதிக்கு (திண்ணைக் கட்டுரை) அவர் தன் பதிலில் ”குலாம்” என்ற யாரோ ஒருவருக்காக பதில்சொல்ல முயன்றிருப்பது மோசடித்தனமான ஒன்று. எத்தனையோ குலாம்கள் இருக்கலாம் \ குலாம் ரசூல்கள் இருக்கலாம். ஆனால் எழுத்தின் மூலம் அறியப்பட்ட ஹெச்.ஜி.ரசூல் ஒருவர் மட்டுமே உண்டு. இந்த சின்ன அடிப்படையைக் கூட ஹாபியால் புரிந்து கொள்ள முடியாதது பரிதாபத்துக்குரியதுதான். இது ஹெச்.ஜி.ரசூல் என்ற பெயரையே எதிர்கொள்ள முடியாததன் கைலாயலாகதத்தனமாகும். எனது கட்டுரையின் விவாதங்களுக்கு நேரடியாக பதில்சொல்ல முடியாத இவர் திண்ணை வாசகர்களையும் இவ்வாறான குழப்பத்திற்குள் ஆழ்த்தி வருவதை தொழிலாக கொண்டிருக்கிறார். இந்த வகை பெயர் மாறாட்ட மோசடி, ஆழமாக நிகழும் விவாதத்தை திசை திருப்பும் முயற்சிகளில் ஒன்றே.
2. வஹாபி என்ற பெயர் – ”ஒரு நபர் தன் முகத்தை உள்ளே ஒளித்து வைத்துக் கொண்டு முகமூடியாக அணிந்து கொண்ட பெயர்”.
ஹெச்.ஜி.ரசூலை எதிர்ப்பதற்கு ஒரு முகமூடிப் பெயரால்தான் (இன்னும் பல முகமூடிப் பெயர்களும் இவர்களுக்கு உண்டு) முடிகிறதே தவிர நேரடிப் பெயரால் முடியவில்லை. பெயர் மாறாட்டம் மட்டுமல்ல இத்தகைய ஆள்மாறாட்டத்தையும் வஹாபி தொடர்ந்து செய்து வருகிறார். (ஏற்கனவே இவர் அல்லாவின் பெயர்களில் ஒன்றாக கருதப்படும் வகாபையும், வகாபிசத்தை தோற்றுவித்த வகாபையும் ஒன்றென்று கூறி கருத்தியல் மோசடி செய்து வருவதையும் இத்தருணத்தில் சுட்டிக்காட்ட விரும்புகிறேன்)
3. முன்பொரு விவாதத்தில் பூச்சாண்டி காட்டிய இவரை அம்பலப்படுத்தியபோது இவர் ”எனது வலைப்பூவில் சென்று பாருங்கள் நான் யார் என்பது தெரியும் என்றார். நான் திண்ணையில் எழுதிய பெருவாரியான இஸ்லாம் பற்றிய கட்டுரைகளை இருட்டடிப்பு செய்துவிட்டு அதற்கு அவர் எழுதிய பதில்களை மட்டும் தொகுதது நேர்மையும் நடுநிலையற்ற முறையில் ‘வகாபி’ என்றொரு வலைத்தளத்தில் வெளியிட்டு வருகிறார். அந்த வலைப்பூவில் சென்று பார்த்தால் இவரது ‘உண்மைமுகம்’ குறித்து அதில் எந்த தகவலும் இல்லை என்பதுதான் அப்பட்டமான உண்மை. வெறும் நிழல்களிடைகளையே போடவிரும்பும் முதலில் தன் முகமூடியை கிழித்தெறிந்து விட்டு ‘தான் யார்’ என்பதை முதலில் திண்ணை வாசகாகளுக்கு தெரிவிக்க வேண்டும். இதுவே நேர்மையான செயல்பாடாக இருக்கும். அதுவரைக்கும் நானும் அவரது வஹ்ஹாபி என்ற முகமூடிப் -பயரின் பிற்பகுதியான ‘ஹாபி’யை மட்டும் பயன்படுத்துவேன்.
4. தெளகீது பிராமணீயம், தெளகீது பிராமணர்கள் என்பதான சொல்லாடலை, கருத்தாக்கத்தை நான் காப்பியடித்திருப்பதாக குற்றம்சாட்டும் ஹாபியின் வார்த்தைகள் அவர் எத்தகைய அறியாமையில் இருக்கிறார் என்பதை தெளிவுபடுத்திவிடுகிறது. தமிழ்ச்சூழலில் அச்சு ஊடக வடிவில் வெளிவரும் இதழ்களையோ, திண்ணை இணைய இதழில் வெளிவந்து கொண்டிருக்கும் இஸ்லாமிய விவாதங்களையோ இவர் ஆழ்ந்து வாசிக்கவில்லை என்பதையே இது காட்டுகிறது.
அ. ஜனவரி 13 2006-ல் திண்ணையில் வெளிவந்த எனது ”வகாபிசமும் நவீன முதலாளியமும்” கட்டுரைக்கு எதிர்வினை ஆற்றிய அருளடியான், பாபுஜி ஆகியோருக்கு 27-1-2006ல் நான் எழுதிய பதிலின் தலைப்பு ”தெளகீது பிராமணீயத்தின் நுனிப்புல் மேய்ந்த வார்த்தைகள்” என்பதே ஆகும்.
ஆ. மதுரையில் இருந்து வெளிவரும் ‘சிந்தனைச் சரம்’ மாத இதழில் ஏறத்தாழ மூன்று ஆண்டுகளுக்கு முன்பு ”தெளகீது பிராமணர்கள்” தொடர்பான எனது கட்டுரை வெளிவந்து மிகுந்த கவனிப்பிற்கு உள்ளானது. முதன்முதலில் அப்போதுதான் ”தெளகீது பிராமணீயம்” கருத்தாக்கம் முன்வைக்கப்பட்டது. ஜாக் குழுவின் அல்ஜன்னத் 2004 பிப்ரவரி இதழில் இதற்கொரு பதிலைக் கூட சொல்ல முயன்றார்கள் என்பதுதான் வரலாறு. இதைத்தவிர இச்சொல்லாக்கத்திற்கு வேறு வரலாறு இருந்தால் ‘ஹாபி’ தோண்டிப்பார்த்து சொல்லட்டும்.
இ. அடுத்து ஒருவர் சொன்ன இந்த தெளகீது பிராமணீய கருத்தாக்கத்திற்கு உடன்பட்டு இன்னொரு சிந்தனையாளர் அதனை வேறொரு பரிமாணத்திற்கு எடுத்துச் சென்று விளக்கக் கூடாது என்று தடைச்சட்டம் எதுவும் உள்ளதா.. இது காப்பியடித்தல் ஆகுமா…? அப்படி என்றால்
திருக்குர்ஆனின் அல்பாத்திகா (1) அல்ஜில்ஜால் (99) அல்ஆதியாத் (100) அல்அஸ்ர் (103) அத்யாயங்கள், நபிகள் நாயகத்தின் காலத்திற்கு முன்பு வாழ்ந்த இம்ருல்கயஸ், அம்ருஇபின் குல்சாம் உள்ளிட்ட கவிஞர்கள் குழுவால் எழுதப்பட்டு கஅபாவில் பொறிக்கப்பட்டிருந்த ‘முஅல்லகாத்’ கவிதைகளின் சாயல் இருப்பதாக ஆய்வாளர்களால் ஒப்பீடு செயப்பட்டுள்ளதே… அல்லாவின் இந்த வார்த்தைகள் மக்கத்து கவிஞர்களிடமிருந்து காப்பியடிக்கப்பட்ட வார்த்தைகள்தான் என ஹாபி கூறுவாரா?
5. நபிகள் நாயகம் பிறந்த தேதி, நேரம், குறித்து குர்ஆன் ஹதீஸ் ஆதாரம் எதற்கு என பூஞ்சைத்தனமான கேள்வியைக் கேட்கிறார் ஹாபி.
குர்ஆன், ஹதீஸில் ஆதாரம் இல்லை எனில் எதையும் ஏற்கமாட்டோம், நிராகரிப்போம் என்று முழங்கி வருகிறீர்களே…
நபிகள் நாயகத்தின் பிறப்பு விவரங்கள் குறித்து எதுவும் குர்ஆனில் இல்லை. உங்கள் தர்க்கவாத அடிப்படையில் குர்ஆன் ஹதீஸ் படி பிறக்காத ஒருவரை எப்படி இறுதிநபியாக பின்பற்றுவீர்கள்? அவர் மூலம் அறிவிக்கப்பட்ட திருக்குர்ஆனை அல்லாவின் வேதமாக எப்படி நம்புவீர்கள்….
எனது வகாபிய புரோகிதர்களுக்கு ஆகஸ்ட் 12, 2006 விவாதத்திற்கு பிறகு 21-9-2006 முடிய காணாமல் போன ‘ஹாபி’ திடீரென வந்து நான் அவரது கேள்விகளுக்கு பதில் சொல்லவில்லை என ஜோக் அடிக்கிறார்.
முந்தைய திண்ணை கட்டுரைகளை வாசித்தவர்களுக்கு உண்மை புரியும். ஏறத்தாழ நாற்பதுக்கும் மேற்பட்ட வரையாடல் கூறுகள் (வஹாபி குழுமத்தால் தந்த பதில் சொல்ல முடியாமல் மிச்சம் இருக்கிறது.) உதாரணத்திற்கு வேண்டுமானால் 27-1-2006ல் வெளியான எனது முதல் விவாதத்தில் உள்ளடங்கியிருந்த ஐந்து கேள்விகளை மட்டும் எடுத்துக் கொள்வோம்.
அ. நவீன முதலாளியத்தின் பகுத்தறிவு வகைப்பட்ட அணுகுமுறையை, தர்கா பண்பாட்டில் முன்வைக்கும் வகாபியர்கள், இஸ்லாத்தின் பெருங்கதையாடல்களான அல்லாஹ், வஹீமூலம் இறக்கப்பட்ட திருக்குர்ஆன், ஹஜ்ஜின் சடங்குகள், தொழுகை உள்ளிட்ட நிகழ்வுகளில் பகுத்தறிவு வகைப்பட்ட அணுகுமுறையை ஏன் முன்வைப்பதில்லை…? வகாபிசம், நவீன முதலாளியக் கோட்பாடில்லை என்பதை நிரூபிக்கமுடியுமா….?
ஆ. நவீன முதலாளிய கோட்பாடான வகாபிசத்தை தமிழகச் சூழலில் அரபு பண்பாட்டின் காலனீய ஆதிக்க முறைமையாகவும், மேல் கீழென மனோபாவரீதியாகவும், கலாச்சார ரீதியாகவும், பிளவுபடுத்தப்பட்ட தெளகீது பிராமணீய கோட்பாடாகவும் நிறுவமுற்படுவதேன்?
இ. மதீனாவில் பயின்று பட்டம் பெற்ற வகாபிய புரோகிதர்களுக்கும், பிற இயக்கங்களுக்கும் வந்து குவியும் சவுதி பணமும், அதிகார செல்வாக்கும் இங்கு எதற்கு பயன்படுத்தப்படுகிறது.
(ஈ) சூபிசம் அத்வைத கோட்பாடென்றால் இஸ்லாத்தின் பெயரால் சொல்லப்படும் வகாபிசம் துவைத கோட்பாடா?
(உ) தர்கா சியாரத்தையும் சாமி கும்பிடுவதையும் ஒன்றெனக் கூறும் வகாபியர்கள், கிராமப்புறங்களில் பத்திர காளி அம்மனுக்கும், கருப்பண்ண சாமிக்கும் ஆட்டை, மாட்டை பலி கொடுப்பதற்கும், முஸ்லிம்கள் ஹஜ்ஜூப் பெருநாளன்று ஆடுகளையோ, மாடுகளையோ, ராஜஸ்தானிலிருந்து வரவழைத்த ஒட்டகங்களையோ பலி கொடுப்பதற்கும் என்ன வித்தியாசம்?
இது எனது முதல் விவாதத்தில் உட்புதைந்து இடம் பெற்றிருந்த கேள்விகள்… இதுபோன்ற அடிப்படை கேள்விகளுக்கான பதில்கள் ‘ஹாபி’யிடமிருந்து இன்றுவரை பெறப்படவில்லை. இப்படி எத்தனை எத்தனை கேள்விகள்… விவாதங்கள்… நிதானமாகக் வஹாபி பழைய பிரதிகளை வாசித்துப் பார்த்து விட்டு விவாதத்தில் மூக்கை நுழைக்கவேண்டும்.
6. இஸ்லாமிய பண்பாட்டு சொல்லாடல்களின் புனைவு மொழி குறித்து எந்தவிதமான உணர்தலும் இல்லாமல், வறட்டுத்தனமாக மவ்லிதுகள் ஹிக்காயத்துகளை சிறப்பு செய்திகளாக வாசித்து விமர்சிக்க முற்படும் ஹாபிக்கு ஒரு வேண்டுகோள்.
இவர் முதலில் தான் ஏற்று நம்பிக்கை கொண்டிருக்கும் திருக்குர்ஆன் மற்றும் ஹதீஸ்களின் புனைவு மொழி கதையாடல்களிலிருந்து இந்த சிறப்புச் செய்திகளை ஆரம்பிப்பதே சரியானதாகும்.
திருக்குர்ஆனும், ஹதீஸ¥க்கு பிறகுதானே எல்லாமும், சாதாரண நிலையில் உள்ள இஸ்லாமியர்களும், இஸ்லாம் அல்லாத பிற சிந்தனையாளர்களுக்கும் இது மிகவும் உதவி கரமானதாக இருக்கும்.
உ.ம். மர்யம் – அத்தியாயம் 19 – வசனங்கள் 16-24
”தம்முடைய குடும்பத்தாரை விட்டு விலகி கிழக்குப் பக்கமாக ஒதுங்கி இருந்த நேரத்தில் அவா ஒரு திரையிட்டு அவர்களிடமிருந்து மறைந்திருந்தார்.
நாம் அவரிடம் நம்முடைய ரூஹை அனுப்பினோம். மனித வடிவம் வெற்று வானவர் மரியம்முன் தோன்றி கூறினார்.
நாம் உம் இறைவனின் தூதராவேன், தூய்மையான ஓர் ஆண் குழந்தையை உமக்கு வழங்குவதற்காக அனுப்பப்பட்டுள்ளேன்.
மரியம் கூறினார் எனக்கு எவ்வாறு ஆண் குழந்தை பிறக்கும்… என்னை எந்த மனிதனும் தீண்டவில்லையே… நான் தீய நடத்தை உடையவளும் இல்லையே உடன் வானவர் கூறினார்.
எந்த மனிதரும் உம்மைத் தொடாவிட்டாலும் உமக்கு குழந்தை பிறக்கும். பின்னர் மரியம் அக்குழந்தையை கர்ப்பம் தரித்தார். கர்ப்பத்தோடு அவர் தொலைவான ஓர் இடத்திற்கு ஒதுங்கிச் சென்றார்.
இஸ்லாத்தின் புனிதமிகு திருக்குர்ஆனிலிருந்து இந்த மேற்கண்ட சிறப்புச் செய்திக்கான விளக்கங்களை வஹாபி துவங்குவார் என எதிர்பார்க்கலாம்.


mylanchirazool@yahoo.co.in

Series Navigation