நிழல் (ஒரு நாடகம்)

This entry is part [part not set] of 23 in the series 20021102_Issue

சின்னக் கண்ணன்


(மேடை அமைப்பு: அரங்கில் மூன்று வீடுகளின் கதவுகள்; நடு வீடு கொஞ்சம் உயரமாக வைத்துக் கொள்ளலாம். வலது மூலை வீட்டுக்கும் நடு வீட்டுக்கும் கொஞ்சம் காம்பெளண்ட் போல அமைத்துக் கொள்ள வேண்டும்.)

காட்சி 1

(ஒளி வரும் போது இடது மூலை வீட்டின் கதவை மட்டும் காட்டுகிறது. ஒரு பெண் கைக்குழந்தையுடன் வருகிறாள்..வலது கையில் சாதக் கிண்ணம்.)

பெண்: சமர்த்தோல்லியோ.. வாய் காமிம்மா… ஆ.. அம்..

குழந்தை: தோ..தோ..

பெண்: தோ.. தோ.. தானே.. அதோ எதிர் வீட்டு வாசல்ல நின்னுக்கிட்டிருக்கே… ஏய்..ச்சூ.. வா..இங்கே.. சே.. இதான், சமயத்தில கால வாரி விட்டுடறது. எப்பவும் இங்க தானே நிக்கும்.. இன்னிக்கு என்ன எதிர் வீட்டில… ஆமா.. வாலை ஆட்டறதுக்கொண்ணும் குறைச்சல் இல்லை..பா..பா.. நீ வாயத் தொற கண்ணம்மா.. த்தோ..த்தோ..இதோ வந்துடும்

குழந்தை: ம்மா… த்தோத்தோ..

பெண்: உயிரை வாங்காதடா..உங்க அப்பா மாதிரியே நீயும் இருக்கியே..பாரு..மணி எட்டாகப் போறது.. ஆளைக் காணோம்.. எங்க போனாரோ..மறுபடியும் பார்ட்டியா என்னன்னு தெரியலை..வாயைத் திற..ஆ…

(வள் என்று குலைக்கும் சப்தம்..)

பெண்: பாரு பாரு.. த்தோதோ குலைக்கறது.. கடிச்சுடும்..

குழந்தை: த்தோத்தோ..பா..பா..

பெண்: அது வராதுடா…யாரோ ரோட்டில போறவாளைப் பார்த்துக் குலைக்கறது.. இடியட்.. குழந்தை சாப்பிடறதே.. பக்கத்தில வந்து நிக்க வேணாம்னு தெரிலை பாரேன் அதுக்கு..ஆ..

குழந்தை:ம்மா..ம்மா..கக்கா…

பெண்: தலையெழுத்து.. பிரார்த்த கர்மம்.. நாலு வாய் உள்ள போலை.. அதுக்குள்ள வெளிய போணுமா..வா..

(குழந்தையை இழுத்துக் கொண்டு அவள் உள்ளே செல்ல ஒளி மங்குகிறது..நடுவீட்டின் கதவைத் திறந்து கொண்டு சுந்தர்ராஜன் வருகிறான். ஒளி இல்லை.. சிகரெட் பற்ற வைக்கிறான்.. கதவைத் திறந்து கொண்டு சுகந்தி வர..ஒளி கூடுகிறது…)

சுகந்தி: இந்த எழவை சாப்பிட்ட உடனே குடிக்கணுமா என்ன ?

சுந்தர்ராஜன்: ஏன் ? எப்பவும் நான் செய்யறது தானே… ஆமா..மாடசாமிக்குத் தயார் பண்ணிட்டயா.. பாரேன் என்னைப் பார்த்து வாலாட்டறதை..

சுகந்தி: எல்லாம் சாதம் இருக்கு..இன்னும் பால் விடணும் அவ்வளவு தான்.. பேச்சை மாத்தாதீங்க.. எப்போ சிகரெட் ட விடப் போறீங்க..

சுந்தர்ராஜன்: என்ன இன்னிக்கு திடார்னு..

சுகந்தி: ஹிந்துல்ல ஒரு ஆர்டிகிள் படிச்சேன்.. அதான் எனக்கு ரொம்ப கவலையா இருக்குன்னா..

சுந்தர்ராஜன்: அசடே.. பேஜ் ஃபில்லிங்க் காக ஏதாவது எழுதியிருப்பான்.. ஒனக்கு ஒண்ணு தெரியுமோ.. அதை எழுதறவனே சிகரெட் குடிச்சுக்கிட்டே எழுதியிருப்பான்..

சுகந்தி: (அவன் கையிலிருக்கும் பாக்கெட்டைப் பிடுங்கி) சிகரெட் ஸ்மோக்கிங் இஸ் இன்ஜிரியஸ் டூ ஹெல்த்.. இதைப் படிச்சுக்கிட்டே நீங்கள்ளாம் இப்படி செய்யறது கொஞ்சம் கூட நல்லால்லை..

சுந்தர்ராஜன்:(சற்றே கோபத்துடன்) உங்க அப்பா நம்ம கல்யாண இன்விடேஷன்ல ஒரு தப்புப் பண்ணிட்டார் உனக்குத் தெரியுமா ?

சுகந்தி: அது ஆகி ஆறு வருஷம் ஆச்சே..அதுக்கென்ன இப்போ..

சுந்தர்ராஜன்: இன்விடேஷன் பின்னால ஒண்ணு ப்ரிண்ட் பண்ணியிருக்கணும் ‘Getting married is injurious to mind ‘ (கொஞ்சம் யோசித்துவிட்டு) some times to health also..

சுகந்தி: யோவ் (கிள்ளுகிறாள்)

குரல்: என்ன இன் ஜீரியஸ் டு ஹெல்த்லாம் பேசிக்கிட்டிருக்கீங்க…

(வலது பக்க மூலையில் ஒளி வர, காம்பெளண்டின் அந்தப் பக்கம் சுவாமிநாதன் நின்று கொண்டிருக்கிறார்)

சுகந்தி: வந்துடுச்சு பக்கத்து வீட்டுக் கிழம்..உடம்பு அங்க இருந்தாலும் காதெல்லாம் இங்க தான் இருக்கும் இதுல ஒரே ஜொள் வேற..

சுவாமி: உனக்குத் தெரியுமா தெரியாதான்னு தெரியலை சுகந்தி.. விஷயம் தெரியுமோ..

சுகந்தி:(எரிச்சலுடன்) என்ன விஷயம் மாமா.. விசு மாதிரி படுத்தறேள்..

சுவாமி: எனக்கு வயசு 59தான் ஆறது.. இப்பல்லாம் எண்பது வயசு வரைக்கும் மனுஷாள்ளாம் உயிரோட இருக்கா.. அப்பத் தான் கிழம்னு நீ சொல்லணும் அதுவும் இன்னும் இருபது வருஷத்துக்கப்புறம் தான் ஜொள் வரும்..உடம்பு கழண்டு போறச்சே…

சுகந்தி: (தனக்குள்) கிழத்துக்கு காது மட்டும் கூர்மை..(வெளியே) ரொம்ப ஸாரி மாமா.. நான் சும்மா..

சுவாமி: சரி சரி..சொன்னது சொல்லியாச்சு..இனி என்ன பண்ண முடியும்.. சும்மாவா சொன்னான் கண்ணதாசன்..சொல்லாத சொல்லுக்கு விலையேதுமில்லை.. அப்புறம் இன்னொண்ணும் சொன்னே..ஜொள்.. உனக்கு என்னோட டாட்டர் இன் லா வயசும்மா..அப்படின்னா என்ன அர்த்தம்.. நீ நான் சைட் அடிக்க வேண்டிய பொண் இல்லை ..என் டாக்டர் பையன் சைட்டடிக்கவேண்டிய பொண்..

சுகந்தி: (தனக்குள்) குடும்பமே ஜொள்ளுக் குடும்பம் போல இருக்கு (வெளியில்)- டாக்டரப் பத்தி அப்படிஎல்லாம் சொல்லாதீங்க மாமா…

(வள்ள்.. என்று பின்னணியில் சத்தம் இடைவிடாது கேட்கிறது..)

குரல்: என்ன சார் இந்த நாய் ரோட்டில நடக்க விடமாட்டேங்குது…

சுந்தர்ராஜன்: நீ பாட்டுக்குப் போப்பா..அது ஒண்ணும் பண்ணாது.. சுகந்தி..மாடசாமி ரெஸ்ட்லஸ் ஆகிட்டான். போய் சாதம் எடுத்துக்கிட்டு வா..போட்டுடலாம்..

(சுகந்தி உள் சென்று ஒரு பொட்டலம் போல ஒன்றை எடுத்து வர, சுந்தர்ராஜன் அதை வாங்கிக் கொண்டு இடது மூலையில் மறைகிறான்.. சுகந்தி வீட்டினுள் செல்கிறாள்..சுவாமிநாதன் நின்றுகொண்டிருக்கிறார். சுந்தர்ராஜன் திரும்பி வருகிறான்)

சுவாமி: என்ன சார்.. நாய்க்கு டின்னர் வெச்சுட்டாங்களா..ஏதோ உங்களை மாதிரி ஆட்கள் இப்படி நல்ல காரியம் பண்றதுனால தான் நாட்டில மழை அப்பப்ப பெய்யறது..

சுந்தர்ராஜன்: நா என்ன சார் நல்லது செஞ்சுட்டேன்.. ஏதோ நம்மால ஆனது..கொஞ்சூண்டு சாதம்.. பாவம்..வாயில்லா ஜீவன்..

சுவாமி: வாயில்லா ஜீவன்லாம் சொல்லாதீங்க.. சமயத்தில நாலு பேரை ரோட்டில போக விடமாட்டேங்குது…ஒரே வள்ளுன்ன்னு கொலைக்கறது..very irritating..

சுந்தர்ராஜன்: பாவம் சார் அது.. அது என்ன பண்ணும்..வெளிமனுஷான்னா பயந்துக்குதோ என்னவோ..

சுவாமி: நீங்க அப்படிச் சொல்றீங்க.. இந்த மாதிரி நாய்களுக்கெல்லாம் ஜெனரலாவே டிரெய்னிங் கொடுக்கணும் சார்.. நான் யு.எஸ் ல இருந்தப்ப காக்கர் ஸ்பானியல்னு ஒரு கருப்பு நாய் வெச்சுருந்தேன்..வெரி பிரில்லியண்ட் தெரியுமா.. நான் வீட்டுக்கு வெளில நின்னுக்கிட்டிருந்தேன்னா..உள்ள ஃபோன் சத்தம் கேக்கறதுன்னு வெச்சுக்கோங்கோ.என்ன செய்யும் தெரியுமா..

சுந்தர்ராஜன்: ஃபோனை எடுத்து கேன் ஐ டேக் த மெஸேஜ் னு சொல்லுமாக்கும்..

சுவாமி: கிண்டல் பண்ணாதப்பா..வந்து என்னைப் பிடிச்சு இழுக்கும்..அப்புறம் என்னன்னா..

சுந்தர்ராஜன்: (கொஞ்சம் அவசரமாக) சார்.. கொஞ்சம் வேலை இருக்கு.. வரட்டா..குட் நைட்..

(உள்ளே செல்கிறான்.. நடு வீட்டின் ஒளி மங்கி இருள்..)

சுவாமி: இவனும் என் பையன் மாதிரி தான்.. நான் சொல்றதை இவனும் காதுல வாங்கிக்க மாட்டேங்கறான்..ம்ம்.. காலம்..

(அவரும் உள் செல்ல அவர் வீட்டிலும் இருள்.. இடது பக்க மூலை வீட்டில் ஒளி வர.. அந்தப் பெண்ணும் குழந்தையும் வருகிறார்கள்)

பெண்: கடங்காரி…பாத்ரூம்ல என்ன பாபா படமா காட்டறா.. ஒக்காந்துக்கிட்டு ஒரே அழிச்சாட்டியம் பண்றயே..வா.. வாயைத் திற.. திறம்மா.. ஒரே வாய் தாண்டா..

குழந்தை: ம்மா.. த்தோத்தோ…

பெண்: ஆமா..தோத்தோ தான்.. யார் இல்லேன்னா..பாரு..அது எவ்ளோ சமத்தா சாப்பிட்டுட்டு படுத்துண்டிருக்கு.. வாயைத் திற..ம்ம்..(குழந்தை துப்ப) இடியட்..பேசாம அதையே பெத்துருக்கலாம்..(சோகமாக) ஏய்.. நீயும் ஏண்டா என்னப் படுத்தறே..பாரு உன் அப்பாவை வேற இன்னும் காணோம்..

(பைக்கின் சப்தம் கொஞ்சம் சத்தமாகக் கேட்டு அடங்குகிறது..கூடவே கொஞ்சம் வள் என்று சத்தம்..அரங்கினுள் அந்தப் பெண்ணின் கணவன் நாராயணன் நுழைகிறான்)

நாரா: என்ன சாவித்திரி.. ஏன் இவ்ளோ லேட்டா குழந்தைக்கு ஊட்டறே..

சாவித்திரி: ஆமா..உங்க அருமந்தப் பொண்ணு சாதம்ன வுடனே வாயத் தொறந்துடுவா பாருங்கோ..ஏன் இவ்வளவு லேட்.. மறுபடியும் பார்ட்டியா..

நாரா: (பேச்சை மாற்றி) மொதல்ல இந்த நாயை எங்கயாவது கொடுத்துடணும். பைக்கை நிறுத்தி இறங்கவே முடியலை..ஒரே கொஞ்சல், வள்..க்கீ..ல்லாம் கத்துது..இறங்கின உடனே தாவுது வேற..என்ன பண்ணலாங்கறே..

சாவி: நாய்க்கெல்லாம் மனுஷா எப்போ மிருகமா இருக்கான்னு தெரிஞ்சுடுமாக்கும்..அதான் கண்ணைப் பார்த்தாலே தெரியறதே..

நாரா: வாசல்லயே எல்லாத்தயும் வெச்சுக்கணுமா என்ன..ஆபீஸ்ல ஒரு பார்ட்டி.. ஒருத்தனுக்கு ப்ரமோஷன்.. ஆக்சுவலா எனக்குத் தான் வந்துருக்கணும் அது.. நானே ஏற்கெனவே நொந்து வந்துருக்கேன்.. எதுவும் பேசாத.. உள்ள வா…

சாவி: ஆமா.. ஏதாவது ஒரு சாக்கு..உங்களுக்கெல்லாம்.. சந்தோஷத்திலயும் செய்வீங்க..வருத்தமா இருக்குதுன்னு செஞ்சேன்னும் சொல்வீங்க… போங்கப்பா..

நாரா:(கெஞ்சலுடன்) உள்ள வா சாவித்திரி..

(உள்ளே செல்கிறான்.. சாவித்திரியும் குழந்தையுடன் செல்ல ஒளிமங்கி இருள்)

*************

காட்சி 2

(அரங்கம் முழுவதும் ஒளி படர்ந்திருக்கிறது பகல் அல்லது மாலைப் பொழுது எனக் காட்டுவதற்காக..நடுவீட்டிலிருந்து சுந்தர்ராஜன் சற்றே கோபத்துடன் வெளியே வருகிறான்.. ஒரு சிகரெட் பற்ற வைக்கிறான்..பின்னாலேயே சுகந்தி..)

சுகந்தி: இப்ப என்ன ஆச்சுன்னு கோபிச்சுக்கறீங்க..ஏன் டென்ஷன் படறீங்க..

சுந்தர்ராஜன்: டென்ஷன் படாம என்ன செய்யறதாம்..சனிக்கிழமை மாப்பிள்ளை வீட்டில இருப்பார்னு உங்கம்மா..உன்னோட ஒண்ணுவிட்ட மாமாக்கிட்ட ஃபோன் நம்பர் கொடுத்துட்டா.. அந்த ஆள் பண்ணி கழுத்தை அறுக்கறார்..

சுகந்தி: மாமா என்ன அறுத்தார்ங்கறேள்..

சுந்தர்ராஜன்: என்னவா.. போடா போ.. நீங்க ஒண்ணும் கவலைப் படாதீங்க சார்.. இந்தக் கோயில் போங்க அந்தக் கோயில் போங்கன்னு ஒரே அட்வைஸ். புரசை வாக்கத்தில அவருக்குத் தெரிஞ்ச டாக்டர் வேற இருக்காராம்.. அந்த அட் ரஸ்ம் தர்றேன்னு சொல்லியிருக்கார்.. போதுமா..

சுகந்தி: மாமாக்கு என் மேல எப்பவும் ப்ரியம் ஜாஸ்தி..

சுந்தர்ராஜன்: மண்ணாங்கட்டி.. எனக்கு இந்த மாதிரி ஆட்களப் பாத்தாலே கோபம் கோபமா வர்றது. என்னோட ப்ரைவஸில்ல இவர் எப்படித் தலையிடலாம்..

சுகந்தி: வயசில பெரியவர்..விடுங்கோ

சுந்தர்ராஜன்: எப்படி விட முடியும் சுகந்தி, நான் என்ன நம்ம டாக்டர் சொன்னத அவரோட சர்டிஃபிகேட்டோட இவர்கிட்ட காமிக்கணுமா என்ன.. நீ வேற..விடாது கோயில்னு விடாம எல்லா நாளும் கோவில் கோவிலா போயிக்கிட்டிருக்க..ஞாயித்துக் கிழமையைத் தவிர. அதுவும் ஒரு நாளைக்கு ரெண்டு கோவில் வேற..கின்னஸ் ரெகார்டுக்குப் பண்றாப்பல.. சரி.. நாம சந்தோஷமாத் தானே இருக்கோம்.. ஏன் தான் இப்படியெல்லாம் பேசி மூட் அவுட் பண்றாளோ தெரியலை..

சுகந்தி: விடுங்கோ, அம்மாக்கிட்ட பேசறச்சே நான் சொல்லிடறேன்..

(சுகந்தி உள்ளே செல்கிறாள். வள்ள்.. என்று குரைப்புச் சத்தம் கேட்க, ஒரு ஆள் ஓடி வருகிறான்..நடு வீட்டில் நின்று..)

வந்தவன்: இது உங்க நாயா சார்.. இப்படிக் கொலைக்குது..

சுந்தர்ராஜன்: நாய்னா கொலைக்கத் தான் செய்யும்..குயில்னா கூவும்..மயில்னா அகவும்.. இது தெரு நாய்ப்பா..

வந்தவன்: தமாஷா பேசறீங்க சார்.. நீங்க வீட்டில அக்வா வாட்டர் ப்யூரிஃபையர் வைச்சுருக்கீங்களா..

சுந்தர்ராஜன்: அதெல்லாம் வேண்டாம்ப்பா..

வந்தவன்: சார்… ஸ்பெஷல் ஆஃபர் சார்.. இந்த அக்வா வாட்டர் ப்யூரிஃபையர் வாங்கினீங்கனாக்க கூடவே ஒரு க்ளோஸப் டூத்பேஸ்ட் 200 கிராம் ஃப்ரீ சார்.. முதல்ல நான் ஜஸ்ட் டெமோ மட்டும் பண்ணிக் காண்பிக்கறேன்..

சுந்தர்ராஜன்: வேண்டாம்ப்பா.. ரொம்ப கேட்டேன்னாக்க அந்த ஃப்ரீ க்ளோஸப் பேஸ்ட் மட்டும் கொடுத்துட்டுப் போய்க்கிட்டே இரு..

வந்தவன்: (சிரித்து) அதெப்படி சார் முடியும்..ஒரே ஒரு தடவை டெமோ மட்டும் பண்ணிக் காண்பிக்கறேன் சார்..

சுந்தர்ராஜன்: கொஞ்சம் இரு… ச்சூ..ச்சூ..(நாயைக் கூப்பிடுகிறான்) மாடசாமி…இந்த ஆளைக் கவனி..

(வள்ள்..என்று உறுமல் கேட்கிறது)

வந்தவன்: (பயந்து) நான் அப்புறமா வர்றேன் சார்..

சுந்தர்ராஜன்: வராதே போ.. (உள்ளே செல்கிறான்)

(மேடை சில நொடிகள் காலியாக இருக்க,க்ரீச்சென மூன்று சக்கர சைக்கிள் நிற்கும் ஓசை.. கூடவே வள்..என்று சத்தம்..ஒரு ஆள் கேஸ் சிலிண்டரைத் தள்ளியபடியே வந்து நடுவீட்டு காலிங் பெல்லை அழுத்த சுந்தர்ராஜன் வருகிறான்)

கேஸ் ஆள்: சார் உங்க நாய் ரொம்பப் படுத்தறது..

சுந்தர்ராஜன்: ( சிலிண்டரைக் கவனிக்காமல்) இப்ப தான் ஒரு ஆளை அனுப்பிச்சேன்.. அதுக்குள்ள இன்னொன்னா.. அந்த நாய விட்டு உங்களை எல்லாம் கடிக்கச் சொல்லணும்..

கேஸ் ஆள்: என்ன சார்..இப்படிச் சொல்றீங்க… இது 21/2 தானே.. பாரத் கேஸ்.. உங்களுக்கு சிலிண்டர் வேணுமா இல்லையா..

சுந்தர்ராஜன்: ஓ ஸாரிங்க.. சேல்ஸ் ரெப்போன்னு நினைச்சுட்டேன்.. வாங்க..(கேஸ் ஆள் உள்ளே போய்விட்டு வெளியில் வருகிறான்)

கேஸ் ஆள்: கொஞ்சம் அந்த நாயப் பாத்துக்குங்க… நான் போறேன்..கடிக்காதுல்ல்ல….

சுந்தர்ராஜன்: நீங்க தைரியமாப் போங்க… அது நல்ல நாய்.. சனிக்கிழமைல்லாம் கடிக்காது!

(கே.ஆ.. இடது மூலை சென்று மறைய மறுபடி க்ரீச் சத்தம்..வள் ஒலி…)

(சுவாமிநாதன் சலித்தபடியே வெளியே வருகிறார்)

சுவாமி: என்ன ஜென்மமோ தெரியலை.. எவ்வளவு போட்டுப் போட்டு வளர்த்தேன்.. கொஞ்சம் கூட நன்றியில்லாத ஜன்மம்..

சுந்தர்ராஜன்: என்ன சார்.. மாடசாமிக்கு நீங்க எங்க போட்டாங்க..அது என்ன பண்ணிச்சு உங்களை..

சுவாமி: நீ வேற சுந்தரா.. நான் நாயச் சொல்லலை…என்னோட மருமகளைச் சொன்னேன்.. ரொம்ப தொந்தரவு பண்றேனாம் அவங்களை.. என் பையன் வேற வாய மூடிக்கிட்டுக் கேட்டுக்கிட்டு இருக்கான்..சே.. ஒரே வெறுத்து வருதுப்பா..

சுந்தர்ராஜன்: குடும்பம்னா அப்படித் தான் சார் இருக்கும்…

சுவாமி: போப்பா.. எனக்கு ஒண்ணுமே பிடிக்கலை..பேசாம ரெண்டு நாள் ஆரணி போய் பொண்ணு வீட்டில இருந்துட்டு வரலாம்னு இருக்கேன்..

(வள்ள்.. என்று இடை விடாத சத்தம்..பிறகு மெல்ல மெல்ல தேய்கிறது)

சுவாமி: இதாம்ப்பா இந்த நாயால.. யாராவது புதுசா வந்தா கொலைச்சுத் தள்றது..

சுந்தர்ராஜன்: நல்லது தானே சார்.. ஆனா ரொம்ப இண்டெலிஜண்டாக்கும்..யாராவது டாஸண்டா டிரஸ் பண்ணிக்கிட்டு வந்தா சும்மா இருக்கு..

(இடது பக்க மூலை வீட்டிலிருந்து நாராயணன் வருகிறான் கூடவே சாவித்ரி,குழந்தை.. சுந்தர்ராஜன் வீட்டிலிருந்து சுகந்தி வருகிறாள்)

நாராயணன்: மாடசாமியப் பத்தித் தானே பேசறீங்க.. ஆமாங்க.. spcaக்கு ஃபோன் பண்ணி சொல்லணும்.. நேத்து பாருங்க..என்னோட ஃப்ரெண்ட்ஸ் ரெண்டு பேர் வந்திருக்காங்க.. கொலைச்சு தீர்த்துடுத்து.. முதல்ல அந்த நாயை எங்கயாவது அனுப்பு..அப்புறம் உன் வீட்டுக்கு வர்றேன்ங்கறாங்க…

சாவித்ரி: ஒண்ணும் அனுப்ப வேண்டாம்.. அது உங்களை என்ன பண்ணிச்சு.. அது பாட்டுக்கு சுத்திக்கிட்டு கிடக்கட்டுமே.. தவிர உங்க ஃப்ரெண்ட்டஸ ஃப்ரெண்ட்ஸா அவங்க.. என்னோட எனிமீஸ்.. உங்களைக் கெடுக்கறதே அவங்க தான்.. ஆக்சுவலா அது கடிச்சுருக்கணும்.. கொலச்சதோட விட்டுடுத்து…

சுகந்தி: இல்ல சாவித்ரி.. சில சமயங்கள்ல கஷ்டமாத் தான் இருக்கு.. காலங்கார்த்தால walk நானும் மாடிவீட்டு உஷாவும் போறமா..பின்னாலேயே முக்காவாசி தூரம் வருது.. அதுவும் எப்படி..குறுக்கும் நெடுக்குமா..பக்னு இருக்கு தெரியுமா..

சுந்தர்ராஜன்: அந்தக் கால நாய்னால இப்படித் தான்.. பொறுப்பு ஜாஸ்தியா இருக்கும்..

நாராயணன்: இல்லையே.. ரொம்ப வயசான நாய்லாம் இல்லை.. ஒரு ஒண்ணரை வயசு இருக்கும்னு நினைக்கறேன்.. அந்தக்கால நாய்னு எப்படிச் சொல்றீங்க..

சுந்தர்ராஜன்: ஹி.. ஹி.. ப்ளாக் அண்ட் ஒயிட் dog தானே…(சுகந்தி கிள்ள) ஸ்..ஆ..

சுவாமி: சரிப்பா.. நான் போய் பேக் பண்ற வழியைப் பார்க்கிறேன்..

(உள்ளே செல்ல ஒவ்வொருவராக அவரவர் வீட்டிற்குள் செல்ல..திரை)

************

காட்சி – 3

(அரங்கில் எல்லா இடத்திலும் ஒளி இருக்கிறது. நடுவீட்டின் வாசலில் சுகந்தி நின்று கொண்டிருக்கிறாள்- சற்றே கவலையாக..சுந்தர்ராஜன் இடது பக்க மூலையில் இருந்து வருகிறான்.. அவன் முகமும் வாடியிருக்கிறது)

சுகந்தி: நல்லாப் பார்த்தீங்களா.. எங்கயாவது கண்ல பட்டதா..

சுந்தர்ராஜன்: அந்தக் கடைசி வரைக்கும் போய்ப் பார்த்துட்டு வந்தேன்.. காணோம் சுகந்தி..

சுகந்தி: சே.. நேத்து ராத்திரி எங்கூட ஈஸ்வரி ஸ்டோர்ஸ் வரைக்கும் வந்துதுன்னா.. நான் உள்ள போய்ட்டு திரும்பி வந்தா காணோம்..அப்போ பாத்தது தான்.. எங்க போயிருக்கும்..(கவலையுடன்) யாராவது ஏதாவது பண்ணியிருப்பாளா ?

சுந்தர்ராஜன்: தெரியலையே.. டான்னு ராத்திரி எட்டரை ஒன்பதுக்கெல்லாம் நிக்குமே…

சுகந்தி: அதுக்குன்னு எடுத்து வெச்ச சாதத்த காலைல தான் வெளியே கொட்டினேன்.. காலைல walk போறச்சயும் காணோங்க.

(சுவாமிநாதன் வீட்டிலிருந்து வருகிறார்..கூடவே அந்தப் பக்கம் நாராயணன்,சாவித்ரி, குழந்தை. சாவித்ரியின் கையில் கிண்ணம்..)

சுவாமி: என்ன சுந்தரா..என்னத்தக் காணோம்..

சுந்தர்ராஜன்: நம்ம மாடசாமி சார். நேத்து ராத்திரிலருந்து காணோம்.. பாருங்க.. நீங்களும் நேத்து ராத்திரி ஆரணி போறேன்னு போனீங்க..இப்ப வந்துட்டாங்க.. இதப் பாருங்களேன்… வரலையே..

சுவாமி: ஆமாம்ப்பா போனேன்..ஆனா பொண்ணு ஊர்ல இல்லையேப்பா..அதான் திரும்பி வந்துட்டேன்.. மாடசாமி தானே.. எங்கயாவது போயிருக்கும்.. வந்துடும்ப்பா..

சாவித்ரி: என்னங்க..அது எங்க போயிருக்கும்.. கஷ்டமா இருக்கே..

நாராயணன்: எங்கயாவது சுத்திக்கிட்டு இருக்கும்..வந்துடும் சாவித்ரி..

சுந்தர்ராஜன்: யாராவது அதை ஏதாவது பண்ணியிருப்பாங்களா.. நினைச்சாலே ரொம்பக் கஷ்டமா இருக்கு சார்..

சுகந்தி: (குரல் தழுதழுக்க) அதோட குரல் கேக்காம என்னமோ மாதிரி இருக்கு..

நாராயணன்: ஆமா.. என்ன கம்பீரமான குரல்..

சாவித்திரி: அது வாலாட்டற அழகே போதுமே.. இவளைப் (குழந்தையைக் காட்டி) பாத்துப் பாத்து வாலாட்டும்..சுத்திச் சுத்தி வருமே..

சுந்தர்ராஜன்: கைலி கட்டிக்கிட்டோ, புதுசாவோ யாரும் இந்தத் தெருல்ல நுழைய முடியாதே..கொலைச்சு யாரையாவது வெளிய வர வச்சுடுமே…

சுவாமி நாதன்: ஒரு வேளை இப்படி இருக்குமோ.. (தலை ஆட்டிக்கொண்டு) சே..சே.. அப்படி எல்லாம் இருக்காது..

சுந்தர்ராஜன்; நாராயணன்; சாவித்ரி; சுகந்தி: எப்படி இருக்குமோ மாமா.. என்ன சொல்ல வர்றீங்க.. சொல்லுங்களேன்..

சுவாமிநாதன்: சில சமயத்தில நமக்கு நெருங்கிய உறவினர்களோட ஆத்மா இறந்து போயும் நமக்கு ஏதாவது செய்யணும்னு நினைக்குமாம்..அப்போ இந்த மாதிரி நாயா வந்து அவாளோட சில நாள் இருந்துட்டு மறைஞ்சு போயிடுமாம்.. என்னோட தாத்தா சொல்லியிருக்கார்..அது போல இந்த மாடசாமியும் ஏதாவது ஆத்மாவோ என்னவோ..

சுகந்தி: அப்படித்தான் இருக்கும்னு நினைக்கறேன்..ஒரு வேளை என்னோட அப்பாவோ என்னவோ..அதெப்படான்னா..ஈஸ்வரி ஸ்டோர்ஸில அஞ்சு நிமிஷம் தான் இருந்தேன்.. இது வாசல்ல இருந்தது..அப்புறம் காணோம்.. மாயமா மறைஞ்சுடுத்தா என்ன..யாராவது கூட்டிக்கிட்டுப் போனாலும் கொரல் கொடுக்குமே.. நான் வெளிய வந்திருப்பேனே..(அழுகிறாள்)

சுந்தர்ராஜன்: ச்ச் சுகந்தி.. கண்ட் ரோல் யுவர்செல்ஃப்…

நாராயணன்: வருத்தப்படாதீங்க.. எப்படியும் வரும்.. யாராவது திருடன் இது தொந்தரவா இருக்குதுன்னு வெஷம் வெச்சுருப்பானோ ?

சாவித்திரி: ச்சே.. வாயக் கழுவுங்கோ..அப்படியெல்லாம் இருக்காது.. இப்பல்லாம் திருடறவாள்ளாம் வெளியில் இருந்து வர்றதில்லை..

(நாராயணன் முறைத்தபடி வீட்டினுள் செல்கிறான்)

சாவித்திரி: நீங்க கவலைப் படாதீங்க சுகந்தி.. வந்துடும்னு தான் என் மனசுக்குப் படுது..

சுவாமி: ஆமாங்க சுந்தர்ராஜன்.. கொஞ்சம் மனசைத் தேத்திக்குங்கோ.. இதுக்குத் தான் ஜேகே அன்னிக்கே சொல்லியிருக்கார்..attachmentல detachment வேணும்னு…

சுந்தர்ராஜன்: ஆமா..சார்..அது கண்டிப்பா வரும்.. அப்படியே எங்கயாவது இருந்தாலும் நல்லா இருக்கணும்..நீ வா சுகந்தி

(சுகந்தியை அணைத்தவாறு உள்ளே செல்கிறான்..சுவாமி நாதனும் உள்ளே செல்கிறார்..)

சாவித்திரி(குழந்தையிடம்): வாயைத் திறம்மா..ஆ..அம்ம்.

குழந்தை: ம்மா ம்மா.. த்தோத்தோ…தோத்தோ..ஆ..போச்சு…

சாவித்திரி:(கண்ணைத் துடைத்துக் கொண்டு) இல்லைம்மா..அது டாட்டா போயிருக்கு..வரும் கண்டிப்பா வரும்..

(ஒளி மங்கி திரை விழுகிறது)

*****************************************

E-mail: kanlak@sify.com

Series Navigation

சின்னக் கண்ணன்

சின்னக் கண்ணன்