நிழல் ஐந்தாம் ஆண்டு சிறப்பிதழ் – சிறு குறிப்புகள்

This entry is part [part not set] of 28 in the series 20050729_Issue

பி.கே. சிவகுமார்


நவீன சினிமாவுக்கான களம் என்ற முழக்கத்துடன் வெளிவருகிற நிழல் மாதமிருமுறையின் ஐந்தாம் ஆண்டுச் சிறப்பிதழைப் படித்தேன். 104 பக்கங்கள். தமிழ்ச் சூழலில் ஒரு சிறுபத்திரிகை 5 ஆண்டுகள் வெளிவருவது நிச்சயம் ஒரு சாதனை. அதிலும் மாற்றுச் சினிமா, கலைப்படங்கள், குறும்படங்கள், திரைநுட்பம் சார்ந்த கட்டுரைகள், திரைக்கதை மொழியாக்கங்கள் என்று பல சீரியஸான விஷயங்களைத் தாங்கி வருகிற நிழல் போன்ற சிறுபத்திரிகைகள் ஐந்தாம் ஆண்டுச் சிறப்பிதழை வெளியிடுவது தமிழ்ச் சூழல் குறித்து கணநேரமாவது உற்சாகம் கொள்ள வைக்கிறது.

2004-ல் சிந்தனை வட்டம், நியூ ஜெர்ஸி நடத்திய குறும்பட விழாவையொட்டிச் சிறப்பிதழ் வெளியிட்டது, குறும்படப் பயிற்சிப் பட்டறைகள் நடத்துவது, சிறுகதைகளுக்குத் திரைக்கதை வடிவம் தருவது, திரைக்கலைஞர்கள் மற்றும் இயக்குநர்களைப் பற்றிய கட்டுரைகளை வெளியிடுவது, நேர்காணல்கள் மற்றும் விமர்சனங்களைத் தொடர்ந்து செய்து வருவது, திரைப்பட விழாக்கள் பற்றிய அறிவிப்புகள், கட்டுரைகள் வெளியிடுவது, குறும்படங்கள் மற்றும் ஆவணப்படங்களை மக்களிடம் எடுத்துச் செல்வது, திரைப்பட வரலாற்றைப் பதிவு செய்கிற கட்டுரைகளை உற்சாகப்படுத்துவது, திரைப்படம் சார்ந்த விவாதங்கள், நூல் அறிமுகங்கள் மற்றும் நாடக விமர்சனங்களுக்கு இடம் தருவது என்று கடந்த ஐந்து ஆண்டுகளாக நிழல் தொடர்ந்து சிறப்பாகச் செயலாற்றி வருவது பாராட்டத்தக்கதாகும்.

சிறு பத்திரிகை நடத்துவதில் இருக்கிற பொருளாதார மற்றும் நடைமுறைச் சிக்கல்களை எல்லாம் தாங்கிக் கொண்டு நிழலின் ஆசிரியராகப் பணியாற்றி வருபவர் ப. திருநாவுக்கரசு. இவர் சோழநாடன் என்ற பெயரில் புத்தகங்களும் எழுதியிருக்கிறார். நிழல் என்ற பெயரில் ஒரு பதிப்பகமும் செயல்படுகிறது. இதுவரை 110 புத்தகங்கள் இவரால் வெளியிடப்பட்டிருக்கின்றன. விட்டல் ராவ் எழுதி நிழல் வெளியிட்ட தமிழ் சினிமாவின் பரிமாணங்கள் என்ற நூலுக்குத் தமிழக அரசின் பரிசும் கிடைத்திருக்கிறது. தமிழக அரசின் விருது அல்லாமல் பிற விருதுகளையும் இப்புத்தகங்கள் பெற்றிருக்கின்றன. இந்தியாவின் முற்போக்கு மாநிலங்கள் என்றும் உலக அரங்கில் இந்தியச் சினிமாவைப் பிரதிநிதித்துவப்படுத்துவதில் முன்னணியில் நிற்கிற மாநிலங்கள் என்றும் சொல்லப்படும் மேற்கு வங்கம், கேரளா போன்ற மாநிலங்களில்கூட வெளிவராத பல நூல்களை முதன்முதலில் தமிழில் நிழல் வெளியிட்டிருக்கிறது. உதாரணமாக, ஆப்ரிக்க சினிமா, ஈரானிய சினிமா, சொல்லப்படாத சினிமா ஆகிய நூல்களைச் சொல்லலாம். தமிழில் முதன்முதலில் வெளியான லத்தீன் அமெரிக்க நாவலான நிழல்களின் உரையாடலை வெளியிட்டதும் நிழலே.

ஐந்தாம் ஆண்டுச் சிறப்பிதழில் ரோகாந்த் மணிசித்ரமுகி 100வது நாள் சந்திப்பு என்ற தலைப்பில் ஒரு கட்டுரை எழுதியிருக்கிறார். சந்திரமுகியும் நாகவள்ளியும் சந்தித்துக் கொண்டால் என்ன பேசுவார்கள் என்பதாக இந்தக் கட்டுரை அமைந்திருக்கிறது.

அந்நியன் மற்றும் கனாக் கண்டேன் ஆகிய படங்களுக்கான விமர்சனத்தை க்ருஷ்ணா எழுதியிருக்கிறார். அந்நியனைப் பற்றி ‘அந்நியன் கண்ட அவசியமற்ற கனவு ‘ என்றும், கனா கண்டேனைப் பற்றி ‘அந்நியமாகிப் போன அவசியமான கனவு ‘ என்றும் தொடங்குகிற இக்கட்டுரை இவ்விரு படங்களையும் விரிவாக அலசுகிறது.

ஒளிப்பதிவின் கதை – சினிமாவின் மொழி என்ற தலைப்பில் பா.கலைச்செல்வனின் தொடர் ஆரம்பித்திருக்கிறது. சினிமாவின் ஒளிப்பதிவு, ஒளியமைக்கும் விதம், காமிராக்களின் செயல்முறைகள் ஆகியவற்றைப் பற்றி எளியமுறையில் சொல்கிற இந்தத் தொடர் இளம் கலைஞர்களுக்கு மிகவும் பிரயோசனமாக இருக்கும் என்ற முன்னுரையுடன் தொடங்குகிறது. சினிமா ஒரு விஷூவல் மீடியம் என்பதால் வசனத்தைவிட ஒளிப்பதிவுக்கு அங்கே நிறைய முக்கியத்துவம் இருக்கிறது. சினிமாவின் மொழி வசனம் அல்ல. காட்சிகளே. இது தெரியாமல் திராவிட இயக்கத்தாரின் அடுக்குமொழி வசனங்களில் அகப்பட்டுக் கொண்டிருந்த தமிழ்சினிமாவை இடதுசாரிகளே விஷூவல் மீடியமாக முதலில் பயன்படுத்த ஆரம்பித்தனர். இந்தக் கட்டுரையில் ஒளிப்பதிவு, காட்சியமைப்பு குறித்த பல தொழில்நுட்ப விவரங்கள் எளிமையாக உள்ளன. கலைச்சொற்களின் தமிழ்ப்படுத்தல், தமிழைப் படுத்தாமலும் இருப்பது குறிப்பிடத்தக்கது. கோடுகள் (lines), பொருண்மை (tones), இடம் (space) என்று எளிமையான பதங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. அப்படியே, வெகுதொலைவுக் காட்சி (extreme long shot), இடைநிலை தூரக் காட்சி (midlong shot), தூரக்காட்சி அல்லது முழுமைக் காட்சி (longshot) என்று கட்டுரையாசிரியர் சுலபமாகத் தமிழ்ப்படுத்திக் கொண்டும், புரியும்படியும் எழுதிக் கொண்டு போகிறார்.

சாதக் ஹஸன் மண்ட்டோ எழுதி ராமாநுஜம் மொழிபெயர்த்த ‘நூர்ஜஹான் லட்சத்தில் ஒருத்தி ‘ என்ற நீளமான கட்டுரை நூர்ஜஹானுக்குச் சிறப்பான அஞ்சலி செலுத்துகிறது. அவரைப் பற்றிய விரிவான அறிமுகத்தையும் ஆய்வையும் வாசகர்களுக்குத் தருகிறது. லதா மங்கேஷ்வர், எம்.எஸ் ஆகியோருக்கு இணையான அருமையான பாடகர் நூர்ஜஹான் என்கிறார் கட்டுரையாசிரியர். அவரை இதுவரை கேட்காமல் போனோமே என்று எனக்கு வருத்தமாக இருக்கிறது.

குறும்படங்கள் பற்றிய பருந்துப்பார்வை என்ற பகுதி குறும்படக் கலைஞர்களுக்கு மகிழ்ச்சியளிக்கிற பகுதியாகும். இங்கு பல குறும்படங்களைப் பற்றிய அறிமுகங்களும் குறிப்புகளும் வாசகர்களுக்குக் கிடைக்கின்றன.

ஜெயகாந்தனின் திரைப்படங்கள் என்ற தலைப்பில் அறிவன் ஒரு நல்ல கட்டுரை எழுதியிருக்கிறார். அரசியல் மற்றும் சமூகக் கருத்துகளுக்காக கலைஞர்களை அவமதிக்கிற காரியத்தையும் அவர்களை மொழிக்கு வில்லனாகச் சித்தரிக்கிற பாமரத்தனத்தைப் புத்திசாலித்தனமான ஆயுதமாகப் பயன்படுத்துகிற உத்தியையும் ஒரு வெகுஜனப் போக்காகக் கொண்டிருக்கிற இச்சூழலில் தமிழ்ச் சினிமாவுக்கு ஜெயகாந்தனின் பங்களிப்பை ஏற்றம் இறக்கமின்றிப் பதிவு செய்திருக்கிறார் அறிவன்.

பி.ஏ. கிருஷ்ணனிடம் ரேவைப் பற்றியும், சாருலதாவைப் பற்றியும் சிலாகித்துப் பேசிக் கொண்டிருந்தபோது அவர் சொன்னது நினைவுக்கு வருகிறது. ‘Pather Panchali is a masterpiece for artmanship. Charulata is a masterpiece for craftmanship ‘ என்றார். சாருலதாவின் திரைக்கதையைத் தமிழில் பெயர்த்துக் கொடுத்திருக்கிறார் இமயவர்மன். எனக்கு மிகவும் பிடித்தமான சாருலதாவின் திரைக்கதையைத் தமிழில் படிப்பது எனக்கு மிகவும் உவப்பான காரியமாக இருந்தது. புதிய கலைஞர்களை இத்தகு திரைக்கதைகளின் மொழியாக்கம் நிறைய மேம்படுத்தும்.

வீடியோ ஆக்டிவிஸம் பற்றி எம்.ஏ. ரஹ்மான் எழுதிய கட்டுரையை உமர் தமிழாக்கியிருக்கிறார். ஒரு மாற்று ஊடகமாக வீடியோ ஆக்டிவிஸம் வளர்ந்திருப்பதையும், சி.என்.என். போன்ற முதலாளித்துவ ஊடகங்களுக்கு அது சவாலாக இருப்பதையும், ஒரு போராட்ட மற்றும் சாட்சியம் சொல்கிற தோழனாகவும் வீடியோ ஆக்டிவிஸம் வளர்ந்திருப்பதையும் இக்கட்டுரை சொல்கிறது. இந்தியா போன்ற வளர்கிற நாடுகளில் மக்களின் பிரச்னைகள் ஏராளமிருக்கிற நாடுகளில் வீடியோ ஆக்டிவிஸம் சிறப்பான சமூகப் பங்களிப்பைச் செய்ய முடியும். இதை முன்னெடுத்து வளர்க்கிற அமைப்புகள் தோன்ற வேண்டும். வெளிநாடுகளில் அத்தகைய அமைப்புகள் உள்ளன.

தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகர்களின் பங்களிப்பு வரிசையில் டி.ஆர். ராமச்சந்திரனைப் பற்றி, திருநின்றவூர் T. சந்தான கிருஷ்ணன் கருத்துகளை மாலதி நந்தகுமார் கட்டுரையாக்கம் செய்திருக்கிறார். புகழ்பெற்ற நகைச்சுவை நடிகரான பின் – ஈகோவைத் தூண்டும் கேள்விகளுக்கும் கண்ணியத்துடனும் ஜாக்கிரதையாகவும் பதில் அளித்த டி.ஆர் ராமச்சந்திரனை ‘உனக்கும் நடிப்புக்கும் வெகுதூரம் போ தம்பி ‘ என்று சினிமா உலகம் ஆரம்பத்தில் நிறையவே வாட்டியிருக்கிறது.

தமிழ் சினிமாவில் சில சிறப்பான பாடல் காட்சிகள் என்ற தலைப்பில் வெளி ரங்கராஜன் எழுதியிருக்கிறார். அவருடைய இடிபாடுகளுக்கிடையில் கட்டுரைத் தொகுப்பின் மூலம் என்னை மிகவும் ஈர்த்தவர் இவர். பாதாள பைரவி, மலைக்கள்ளன், விடிவெள்ளி, சிவகங்கைச் சீமை, இரும்புத்திரை உள்ளிட்ட பல படங்களிலிருந்து தான் ரசித்த பல பாடல் காட்சிகளையும் அவை பிடித்திருந்ததற்கான காரணங்களையும் பகிர்ந்து கொள்கிறார்.

கன்னட சினிமாவும் நானும் என்ற தலைப்பில் விட்டல் ராவ் எழுதியிருக்கிறார். இவரும் நாவலாசிரியர் விட்டல் ராவும் ஒரே நபர்தானா என்ற கேள்வி ஓடுகிறது.

இரண்டு நாடக நிகழ்வுகளைப் பற்றிய குறிப்புகள், நூல் அறிமுகம், கடந்த ஐந்து ஆண்டுகளாக நிழலில் வெளிவந்த கட்டுரைகளின் பட்டியல் (பல்வேறு பிரிவுகளின் கீழ் வந்தவை முறையாகப் பிரிக்கப்பட்டுத் தொகுக்கப்பட்டுள்ளன) என்று நிழல் ஐந்தாம் ஆண்டு சிறப்பிதழ் நிறைய உழைப்பையும், உள்ளடக்கத்தையும் தாங்கி நம் வாசிப்புக்குக் கனம் சேர்க்கிறது.

(சந்தா செலுத்த விரும்புவோர் தொடர்புக்கு: ப. திருநாவுக்கரசு, ஆசிரியர் (நிழல் மாதமிருமுறை) 31/48, இராணி அண்ணா நகர், சென்னை – 78, தொலபேசி: 9444 484868, மின்னஞ்சல்: nizhal_2001@yahoo.co.in, anyindian.com மூலமாக ஆன்லைனிலும் சந்தா செலுத்தலாம்.)

pksivakumar@yahoo.com

படிக்க: http://360.yahoo.com/pksivakumar

Series Navigation