நிழல்களைத் தேடி..

This entry is part [part not set] of 25 in the series 20050429_Issue

புதியமாதவி


இலையுதிர்க்காலம்
நிழலில்லாத நாட்கள்
மொட்டைமரங்களின் உடைந்த நிழல்கள்
ஒட்டுப்போட்ட ஆகாயப்புடவை
காற்றில் அசைகிறது
கிழிசலை மறைத்து.
இழுத்துப்போர்த்தினால்
இத்துப்போய்க் கிழிந்திடுமோ ?
இழுக்காமல் மூடிக்கொண்டால்
இழுக்காகி முடிந்திடுமோ ?
அரைநிர்வாணத்தில்
அனாதையாய்
அலைகிறது நிழல்.

காதல் அணைப்பில்
கண்மூடியப் புணர்ச்சியில்
காணாமல் போய்விடுகிறது
காதலர்களின் நிழல்.
காதலை நிஜமாக்க
நிழல்தேடி அலைகிறது
வானம்.

கோடிக்கணக்கில் உயிர்த்துளிகள்
நிழல்முட்டைக்காக
தவமிருக்கின்றன.
நிழல் தன் உயிர்த்துளியைத் தேடி..
இரத்தவெள்ளத்தில்…
குறிதவறிய வேலின்
ஆறாதக் காயங்களுடன்
மீண்டும் மீண்டும்
போர்க்களத்தில்
இரத்த வெள்ளத்தில்.

மழையில் இடியில்
மடியில் விழலாம்.
நிழல்தேடிய உயிர்த்துளி..
அந்த ஒற்றைத்துளியின்
ஓரணுவிற்காக
எத்தனைமுறை ரத்தம் சிந்துகிறது
நிழலின் நாட்கள்.

இப்போதோ எப்போதோ
எப்போதாவது-
நிழல்தேடிய உயிர்த்துளி
மண்ணில் விழலாம்.
அப்போது பிறக்கும்
நிழல்களின் புணர்ச்சியில்
மெய்யெழுத்துகள் பிரசவித்த
உயிரெழுத்தின் கதை.
அதுவரை-
ஆயுத எழுத்தின்
அசையாதப் புள்ளிகளில்
கோடுகளும் தீண்ட மறுக்கும்
குடிசைகளில்
நிழல்தேடி அலைகிறது
எங்கள் நிஜங்களின் பயணம்.

—-
puthiyamaadhavi@hotmail.com

Series Navigation

நிழல்களைத் தேடி….

This entry is part [part not set] of 59 in the series 20050318_Issue

புதியமாதவி


—-
நிழல்களின் ஊர்வலம்.
கைதட்டுகின்றன நிஜங்கள்
ஒலிபெருக்கிகளின் குரல்வலை நெறித்து
வாக்குறுதிகள் வலம் வருகின்றன.

ஆட்டுமந்தைகளை அடைத்துவைத்து
வெற்றி விழா நடத்துகிறது மக்களாட்சி.
கைதட்டலில் கூத்தாடுகிறது உங்கள் கொடிகள்.

உங்களுக்குத் தேவை எங்கள் நிஜங்கள் அல்ல.
எங்கள் நிழல்கள்.
உங்கள் காலடியில் எப்போதும் காத்திருக்கும் எங்கள் நிழல்கள்.
எங்கள் நிழல்களுக்கு மாலையிட்டு
எங்கள் நிஜங்களைர்த் தூக்கிலிடுகிறீர்கள்.
உதிர்ந்துவிழும் உங்கள் மாலைகளுக்காய்
உங்கள் மேடைகளின் பொன்னாடைகளுக்காய்
நிஜங்களின் இரத்தமேடையில்
நிழல்கள் நடனம்.

எரிமலையாய் வெடிக்கிறது
உங்கள் காலடியின் பூமி
திசைமாறிப் போகிறது நதியின் ஓட்டம்.
உங்கள் அணைகளை உடைத்து
எங்கள் வறண்ட மணலை ஈரப்படுத்துகிறது வெள்ளம்.

உங்கள் பூமிரேகையைக் கடந்து
பயணம் செய்கிறது ஜீவநதி.
உங்கள் காலடியில் கிடக்க மறுக்கின்றன
எங்கள் மலர்கள்.
கிளைகளை வெட்டிவிடலாம் என்று கனவு காணாதீர்கள்
எங்கள் வேர்கள் உங்கள் எல்லைகளைக் கடந்துவிட்டன.
இந்த நாட்களுக்காகத்தான் காத்திருந்தன எங்கள் இரவுகள்.
இனி..
வெளிச்சத்திற்கு வரும் எங்கள் நிழல்கள்.
எங்கள் நிஜங்களின் உருவத்துடன்-
எங்கள் நிஜங்களின் வாழ்க்கையுடன்-
எங்கள் நிஜங்களைப் பதிவுசெய்ய.

அப்போது எழுதுவோம்
நிழல்களின் விதிகளை
நிஜங்களின் அகராதியில்.
உங்கள் பொய்முகத்தின்
கண்ணாடிக்கண்களை
உங்கள் பொன்னாடைகளால் துடைத்துக்கொள்ளுங்கள்.
உங்கள் விருதுகளைத் துறந்துவிட்டோம்
உங்கள் அரங்கின் கைதட்டல்களை மறந்துவிட்டோம்.
எங்கள் நிழல்களின் விடுதலை
உங்கள் காலடியில் கிடந்த எங்கள் நிழல்களின் விடுதலை
எங்கள் நிஜங்களின் பாதையுடன் பயணம்.
இது எங்களின் பயணம்.
எங்கள் நிழல்களுடன்
தொடரும்
எங்கள் நிஜங்களின் பயணம்.

—-
puthiyamaadhavi@hotmail.com

Series Navigation