This entry is in the series 20081120_Issue

குட்டி செல்வன்


வெண்மேக‌ங்க‌ள்
பிறை த‌ழுவி ந‌க‌ரும் இவ்வேளையில்
தொலைதூர‌த்தில் கொஞ்சம் பரிவுக‌ளுடன் ‌
க‌சியத் துவ‌‌ங்குகின்றது
இந்த இரவுக்கான பாட‌ல்
இன்னும் ஈர‌ம் காயாத‌ தார்சாலைக‌ளில்
மனமற்று உதிர்ந்து கிடக்கின்றன
சில புன்னகைப் பூக்கள்
காற்றை மறுத்து அணையும்
மெழுகுவர்த்தி சுடர் உருவாக்குகின்றது
அதன் சோகமான புகை உருவங்களை

தெரியவில்லை
இந்நேரத்தில் எனை நினைவுகூற
உனக்கு ஏதேனும் காரணமிருக்குமாவென

சில‌ மழை நாட்க‌ளும்
சில‌ ம‌கிழ்ச்சி கிழ‌மைக‌ளும்
என்னில் ஏற்ப‌டுத்திய‌ தாக்க‌ங்க‌ளை
ஏதொன்றாலும் ச‌ம‌ன்ப‌டுத்த‌ இய‌ல‌வில்லை


இருந்தும்
கடந்துகொண்டேதான் இருக்கின்றது காலம்
நினைவுக‌ளை ம‌ற‌க்க‌ச்செய்த‌ப‌டி

இவ்விரவு பகலாகும் பொழுதொன்றில்
நிறம் மாற்றிதான்கொள்ளும் வானம்.


kutty.selvan@live.com

Series Navigation