நிலம், பெண்ணுடல், நிறுவனமயம்: செந்தமிழன் கட்டுரைகளை முன்வைத்து

This entry is part [part not set] of 33 in the series 20080313_Issue

புதியமாதவி, மும்பை


நிலம் சார்ந்த தமிழர் இனக்குழு வாழ்க்கையில் பெண்ணுடல் ஒரு நுகர்ப்பொருளாக அனுபவிக்கப்படவில்லை. அவள் ஒரு படைப்பின் உயிராக மனித இனத்தின் தொடர்ச்சங்கிலியாக ஓர் அதிசயமாக பார்க்கப்பட்டாள். அவள் சக்தி. அவளே பராசக்தி. அவளன்றி ஓரணுவும் அசையாது. அவளுக்குள் இந்தப் பிரபஞ்சம் அடக்கம். இந்தப் பிரபஞ்சத்தில் இயங்கிக் கொண்டிருக்கும் ஒவ்வொரு இயக்கத்தின்
இயங்குவிசை., சக்தியின் ஆற்றல்.. அவள்.
மனித வரலாற்றின் இனக்குழு வாழ்க்கையில் “அன்னையே தலைமை”. மனித வரலாறு இந்தப் பாதையிலிருந்து மாறாமல் பயணித்திருந்தால் பெண்ணியம் என்ற சொல் இன்றைக்குப் பேசப்படும் எந்தப் பொருளிலும் தன்னை அடக்கிக் கொண்டிருக்காது.
ஆனால் மனித வரலாற்றில் அன்னையின் தலைமை சரிகிற காலக்கட்டத்தில் இனக்குழு வாழ்க்கை முடிந்து பெண்-ஆண் சமத்துவம் என்ற இரண்டாம் கட்டத்தை எட்டுகிறது. இக்காலக்கட்டத்தில் மதம் நிறுவனமயமாகிறது. அரசு, பேரரசுகள் தோற்றம். இப்போது நிலம் மனித சமூகத்தின் உற்பத்தி களன் மட்டுமல்ல. நிலம் ஆட்சி அதிகாரத்தின் குறியீடாக மாற்றம் பெறுகிறது.

காலப்போக்கில் கலந்துவிட்ட பிற இனக்குழுக்களின் பெண்ணியப்பார்வை தமிழரின் பெண்ணியப்பார்வையிலிருந்து முற்றிலும் மாறுபட்ட கருத்துகளைக் கொண்டிருந்தது. மதம் என்ற நிறுவனமும் ஆட்சி அதிகாரத்தின் மூளையாகச் செயல்பட்ட குறிப்பிட்ட
சில இனத்தாரின் சாணக்கியமும் தமிழ்ப் பெண்ணியத்தின் மீது ஏற்படுத்திய பண்பாட்டு தாக்குதல்களைச் செந்தமிழன் தன் நிலம், பெண்ணுடல், நிறுவனமயம் கட்டுரைகளில் அலசி ஆராய்ந்து சில முடிவுகளுக்கு வருகிறார்..

மாலதி மைத்ரி, அ.மங்கை ஆகியோரின் நூல்களான ‘விடுதலையை எழுதுதல்’, ‘பெண்ணிய அரசியல்’ ஆகிய இரண்டு நூல்களின் ‘போலிப் பெண்ணியத்தின்’ கருத்துகளை விவாதத்திற்கு எடுத்துக் கொண்டு அவர் தன் கட்டுரைகளில்
தமிழ்ப் பெண்ணியத்தின் தன் பார்வையை வைத்திருப்பதாக மிகத் தெளிவாகச் சொல்லியிருக்கிறார். அவர் விவாதத்திற்கு எடுத்துக்கொண்ட இருவரின் நூல்களை இன்றுவரை வாசிக்கும் வாய்ப்பு கிடைக்காததால் , அவ்விருவரின் கருத்துகளுக்குள்
புகாமல், தோழர் செந்தமிழன் கட்டுரைகளின் பெண்ணியப் பார்வைகளை முன்வைத்து அதன் அடுத்தக் கட்ட சிந்தனைத் தளத்திற்கு நகர்வதே என் இக்கட்டுரையின் நோக்கம்.

காமக்கிழத்தியும் விபச்சாரமும்:
———————————-
காமக்கிழத்தி என்று அழைக்கப்படும் சங்க இலக்கியப் பெண்கள் பாலுறவை ஒரு தொழிலாக – தன் உடலை விற்றுப்பிழைக்கும் இன்றைய பரத்தமை தொழிலிருந்து மாறுபட்டவர்கள். சட்டென வெகுஜன பத்திரிகை மொழியில் சொல்வதானால் காமக்கிழத்தி விபச்சாரி அல்லள். இன்றைக்கு ‘விபச்சாரம், விபச்சாரி என்ற பொருளில் கையாளும் குறியீடல்ல.
தலைவன் – தலைவி என்ற சங்க கால ஆண்-பெண் வாழ்க்கையில் பேசப்படும் காமக்கிழத்தி ஒரு தார மணம் ஏற்றுக்கொள்ளப்படும் காலத்திற்கு முந்திய பலருடன் பாலுறவு கொண்ட சமூகத்தின் எச்சம்.
சங்க இலக்கியத்தின் பல்வேறு பாடல் வரிகளைக் கொண்டும் அன்றைய பொருளாதர கோட்பாட்டைக் கொண்டும் விளக்குகிறார்.
தமிழினம் பண்டமாற்றையும் தம் குழுவிற்குள் கொடைப் பொருளாதரத்தையும் கடைப்பிடித்ததால் பரத்தையர் உறவு பொருளாதர மறுபயனுக்கானதாக இருந்திருக்க முடியாது என்ற முடிவுக்கு வருகிறார்.

‘ஆண்களுக்கும் மணமாகாத பெண்களுக்கும் மணநிலைக்குப் புறம்பாக நிலவிய உறவே பரத்தையர் உறவு ” என்ற மார்க்கனின் குறிப்பை முன்மொழிந்து ஏற்றுக்கொள்கிறார். (பக் 53)

“ஆகவே , பரத்தையர் விபசாரிகள் அல்லர்” என்ற முடிவை ஆணித்தரமாக மனித இனக்குழு வரலாற்றுப் பார்வையுடன்
ஆய்ந்து முடிவுக்கு வருகிறார்.

ஆண்-பெண் சமத்துவம் ?
————————–
ரோமானியர்களின் ‘Famulus’ என்ற சொல்லின் பொருள் வீட்டு அடிமை familia = என்றால் ஒரு நபருக்குச் சொந்தமான அடிமைகளின் எண்ணிக்கை.
தந்தை அதிகாரத்திற்குட்பட்ட ரோமானிய குடும்ப அமைப்பு முறை ‘family’. தமிழ்ச் சமூகத்தில் குடும்பம் என்பது இல்லறம். கணவன் – தலைவன் என்றும் மனைவி தலைவி என்றும் நிகர்ப்பொருளில் சங்க இலக்கியத்தில் வாழ்கிறார்கள். பெண்ணுக்குச் சீதனமாக கொடுக்கப்படும் நிலம், பாவைநோன்பு என்ற கருத்துகளின் ஊடாக பயணித்து தன் கருத்துக்கு வலுவூட்டுகிறார்.

இந்தக் கருத்துகளின் உச்சக்கட்டமாக தமிழரின் பொருளாதரம் பெண்களின் பங்களிப்பைச் சார்ந்திருந்தது என்ற முடிவுக்கு வருகிறார். (பக் 91) சமூக உற்பத்தியில் ஆண் – பெண் தவிர்க்கவியலா கடமைகளையும் உரிமைகளையும்
கொண்டிருந்தனர் என்று சொல்ல வரும்போதுதான் இக்கருத்தை உதிர்க்கிறார்.

‘தமிழரின் பொருளாதரம் பெண்களின் பங்களிப்பைச் சார்ந்திருந்தது ‘ என்று சொல்வதற்கும் ‘தமிழ்ச் சமூகத்தில் பெண்கள் தங்கள் பொருளாதர நிலையில் ஆண்களைச் சார்ந்திருக்கவில்லை’ என்று சொல்வதற்கும் நுண்ணிய வேறுபாடுகள் உண்டு.
குறிப்பாக நெய்தல் நில வாழ்க்கையை எடுத்துக் கொள்வோம்/ நெய்தலின் பரதர் தொழில் கடலில் மீன்பிடித்தல்..
அப்படி அவன் பிடித்து வருகிற மீனை விற்பதும் காயவைத்து பதப்படுத்தி சந்தைப் பொருளாக்குவதில் உதவுவதும் பெண்ணான பரத்தி/ நுளைச்சியின் வேலை.
ஆணின் வேலை- பங்களிப்பும் மூலதனம். பெண்ணின் வேலையும் அவள் பங்களிப்பும் அந்த மூலதனத்தைச் சார்ந்தது.
அதைச் சார்ந்து தொடர்வது.

மீன்பிடித்தல் இன்றி மீன்விற்பனை சாத்தியமில்லை.

பொருளாதரம் என்பதை முதலில் உற்பத்தி/ மூலதனம் என்பதுடன் தொடர்பு
படுத்தி இருக்க வேண்டும்., அதைவிடுத்து அடுத்தக்கட்டமான விற்பனை/சந்தை
என்ற நிலையை வைத்து தீர்மானிப்பது சரியல்ல.

ஆண் சார்ந்த பெண் அடையாளங்கள்
————————————–

பரத்தமை, காமக்கிழத்தி, ஆண்-பெண் இல்லற உறவுகள் என்று தன் கருத்துகளை முன்வைக்கும் போதெல்லாம் நுண்ணிய உணர்வுகளின் ஊடாகவும் பயணித்து மனித வரலாற்றுப் பார்வையை முன்வைத்த கட்டுரையாளர் என்ன காரணத்தினாலோ
எழுத்தாளர் மாலதிமைத்ரியின் கருத்தைப் போலிப்பெண்ணியம் என்று அடைமொழியுடன் அடையாளப்படுத்த முயற்சி செய்திருப்பது வரலாற்றுப்பார்வையில் ஒரு சரிவை ஏற்படுத்தியுள்ளது. என்ன சொல்லப்பட்டிருக்கிறது? என்று பார்க்காமல் ‘எவர் சொன்னார்? என்று பார்க்கும் ஒற்றைப்பார்வையின் விலை இது!

பக்: 91 ல் நிலம், நிலம் சார்ந்த ஆண்கள், பெண்களின் பெயர்களை அட்டவணையிட்டு காட்டியிருக்கிறார்.

இந்தப் பெயர்களின் மூலம் ஆண்களுக்கு நிகரான பால் தொகுதியினராக பெண்கள் விளங்கினார்கள் என்றும் , இதன் உள்ளார்ந்தப் பொருள் ஆண்களுடன் இணைந்து அவர்களுக்கு நிகராக பெண்களும் சமூக உற்பத்தி நடவடிக்கைகளில் ஈடுபட்டனர்.” என்கிறார்.
தன் கருத்துக்கு அவர் சொல்லும் பெண் அடையாளச் சொற்கள், குறத்தியர், எயிற்றியர், ஆய்ச்சியர், உழத்தியர், பரத்தியர். என்பதே.
இச்சொற்கள் அனைத்தும் தொழில் சார்ந்த பெயர்களே என்று சொல்லும் கட்டுரையாளர் பாலை நிலம் குறித்து சொல்ல வரும்போது ஏற்படும் முரணில் சிக்கி அவரையும் அறியாமல் மாலதிமைத்ரியின் கருத்துவலைக்குள் வந்துவிடுகிறார்!

பாலை நிலம்: ஆண் : எயினர், மறவர்
பெண்: எயிற்றியர், மறத்தியர்.

“பாலைநிலத்தொழில் வழிப்பறி செய்வது என்பதால் எயிற்றியர் அதில் நேரடியாக ஈடுபட்டதாகத் தெரியவில்லை” – பக்: 92

அப்படியானால் அடுத்தக் கேள்வி, எந்த சாதாரண வாசகனுக்கும் எழும் கேள்வி -அந்தப் பெண் ஏன் எயிற்றி என்றழைக்கப்பட்டாள்?- என்பதுதான்.

அவள் அந்தத் தொழிலைச் செய்யவில்லை. ஆனால் அந்தத் தொழிலைச் செய்பவனின் மனைவி/மகள். எனவே அவள் எயிற்றி ஆனாள். இந்த அடையாளத்தின் வழி வந்த பெண் அடையாளங்கள் தான்

குறிஞ்சி நிலத்து குறவனின் மனைவி குறத்தி
முல்லை நிலத்து இடையனின் மனைவி இடைச்சி
மருத நிலத்து உழவனின் மனைவி உழத்தி
நெய்தல் நிலத்து பரதனின் மனைவி பரத்தி.

இதைத் தான் மாலதி மைத்ரி “பெண்ணுக்கு மனைவி அல்லது பரத்தை என்ற இரு பாத்திரங்கள் மட்டுமே தமிழ் நிலத்தில் வழங்கப்பட்டிருந்தது:” என்று சொல்லியிருந்தார்.

கட்டுரையாளர் இன்னொரு கருத்தையும் சிந்திக்க வேண்டும். மருத நிலத்து பெண் முல்லை/குறிஞ்சி நிலத்து ஆணைத் திருமணம் செய்து வாழ்ந்ததற்கு இலக்கியச் சான்றுகள் சங்க இலக்கியத்தில் உண்டு. அவள் முல்லை/குறிஞ்சி நிலத்து ஆணைத் திருமணம் செய்தப் பின் “என்னவாக அழைக்கப்பட்டிருப்பாள்?” உழத்தி என்றா? அல்லது இடைச்சி/ குறத்தி என்றா?
உழத்தியாக மருத நிலத்தில் பிறந்தவள் இடையனுடன் களவொழுக்கம் கண்டு கற்பொழுக்கத்துடன் வாழும் போது அவள் என்ன தொழில் செய்திருப்பாள்? தினைப்புலம் காத்திருப்பாளா? அல்லது பால் விற்றிருப்பாளா?

பெண்ணுக்கு கொடுக்கப்பட்டிருக்கும் பெயர் அவள் ஏற்றுக்கொண்ட இல்லறம் சார்ந்தும் அவள் தொழிலும் அதைச் சார்ந்துமே இருந்தது. இன்னும் சொல்லப்போனால் ‘ஒரு தார மணம்’ என்ற கற்பொழுக்க இல்லற வாழ்க்கைக்கு பெண் கொடுத்த மிகப்பெரிய விலை இதுதான்.
எனினும் பால்விற்பது, மோர் விற்பது, நாற்று நடுவது, மீன்விற்பது, கால்நடை பராமரிப்பு, இத்தியாதி உபதொழில்கள் மூலம் நிகழ்ந்த
பண்டமாற்று பொருளாதர நிலையில் பெண் இல்லறத்தில் அனைத்துக்கும்(ஆம் அனைத்துக்கும்) ஆணின் கையை எதிர்ப்பார்த்து நிற்கும் அடிமைநிலையுடன் வாழவில்லை என்ற தமிழ் மரபுக்குப் பெருமைப்பட்டுக்கொள்ளலாம். மேலும் கணினியின் உலகமயமாதலின் தொழில் அடையாளத்துடன் வாழும் இன்றைய தலைவியிடம் சம்பளம் வந்தவுடன் காசோலையை வாங்கி தனதாக்கிக் கொள்ளும் தலைவனாக அன்றைய தமிழ்ச் சமூகத்து ஆண் இருக்கவில்லை. பெண்ணின் உழைப்பு சுரண்டப்படவில்லை. அவள் உழைப்பிற்கான பயனை இல்லறத்தினர் அனுபவித்தாலும் அவள் பொருளாதர உரிமை மதிக்கப்ட்டிருந்தது.
ஆண்களால் ஏற்றுக் கொள்ளப்பட்டிருந்தது.

மரபுகளின் மறுபக்கம்

———————-

மரபு என்பதாலும் எம் முன்னோர்கள் இப்படித்தான் வாழ்ந்தார்கள் என்பதாலும் அனைத்துமே
பெருமைப் படக்கூடியதாகவும் போற்றிப் பாதுகாக்க வேண்டியதாகவும் எண்ணும்
ஒரு கருத்துப் பிழையைத் நாம் பல்வேறு தளங்களில் தொடர்கிறோம்.
தேவரடியார் பற்றிய கட்டுரை இந்தப் பாதையில் பயணிக்கிறது.

“தேவரடியார் சமூகம் அழிந்துப் போனது” என்பதற்காக மகிழ்ச்சி அடைய வேண்டுமா? இல்லை ஆடல், பாடலை வளர்த்த ஒரு பெண் சமூகம் அழிந்து விட்டதே என்று கட்டுரையாளரைப் போல வருத்தப்பட வேண்டுமா? ஆமாம் இந்த தேவரடியார்களில் ஆடல்-பாடல் கலை யாரை மகிழ்விக்க? அரசர்கள் அவர்களுக்குக் கொட்டிக்கொடுத்த பரிசுகள்- நிலங்கள் எதற்காக கொடுக்கப்பட்ட விலை?

தேவரடியார்கள் விபச்சாரிகள் அல்ல. உண்மைதான்.
ஆனால் என்றைக்கு அவர்களின் கலைக்கு நிலம் பரிசளிக்கப்படுகிறதோ அப்போதே அதற்கு ஒரு விலை நிர்ணயிக்கப்பட்டுவிட்டது என்று தான் அர்த்தம். தன் கருத்துகளுக்கு ஆதாரமாக தஞ்சைப் பெருவுடையார் கோவில் தேவரடியார்களுக்கு
வழங்கப்பட்ட நில உரிமைகளை, வீடுகளைப் பட்டியலிடுகிறார்.
தஞ்சைக் கோவில் எழுப்பப்பட்ட சோழரின் காலம்தான் ஆரியர்களின் ஆதிக்கம் மதத்திலும் அரசு அதிகாரத்திலும் தன்னை உறுதிப்படுத்திக் கொண்ட பொற்காலம்!
ஆனால் அதைத்தான் தமிழர்களின் பொற்காலமாக நாம் சொல்லிக்கொண்டிருக்கிறொம்! “தேவரடியார்களின் பொருளாதர ஆதாரம் கோயில் சார்ந்திருந்ததால் இம்முறையின் ஒழிப்பு அவர்களை வாழ வழியற்றவர்களாக்கியது. கோயில்களிலிருந்து துரத்தப்பட்ட பிறகு தேவரடியார்கள் வசமிருந்த ஒரே தொழில் வாய்ப்பு விபசாரம் மட்டுமே. முற்போக்கு சக்திகளின் மூளை” இதுகுறித்துச் சிந்திக்கவில்லை” என்று குறைப்பட்டுக் கொண்டிருக்கும் கட்டுரையாசிரியர் சான்றுகளுடன் நிறுவ முடியுமா
எத்தனை தேவரடியார்கள் தேவரடியார் ஒழிப்புக்குப் பின் விபசாரிகளானார்கள் என்பதை. உண்மைநிலை விபசாரிகளாக வாழ்ந்த தேவரடியார்கள் அந்த அடிமைத்தனத்திலிருந்து விடுபட்டார்கள் என்பதுதானே. ‘கோயில்களை ஆணாதிக்க சாதி ஆதிக்க நிலவுடமையாளர்களின் பிடியிலிருந்து விடுவித்து, தேவரடியார்களின் பொறுப்பில் ஒப்படைத்திருந்தால் ..” என்று வாதமிடுவது இல்லாத ஊருக்கு வழிச்சொல்வது போல இருக்கிறது.

தமிழர் வாழ்வியலில் வேளாண்மை, கால்நடை வளர்ப்பு, நெசவு, சிற்பம், தச்சு, நகைத்தொழில் உள்ளிட்ட பல்வேறு மரபுத் தொழில்கள் முதலாளியத்தால் அழிக்கப்பட்டு வருவதையும் கூட்டுக் குடும்பமுறை கூட்டு உற்பத்தி முறை ஆகியவை முதலாளிய கருத்தாக்கங்களால் சிதைக்கப்பட்டதையும் விவரிக்கும் போது “மரபுத் தொழில்கள் உயிர்ப்பிக்க வேண்டும்” என்ற முடிவுக்கு வருகிறார்.
இந்த முடிவுகளின் வழிப் பயணிக்கும் போது சாதியக் கட்டுமானத்தின் ஆணிவேர்களை நாம் அடையாளம் காண முடிகிறது.
கீதாரிகளின் வாழ்வு குறித்தக் கட்டுரையில் நடோடி சமூகத்தின் இனக்குழுவில் பொதிந்து கிடக்கும் கால்நடை மருத்துவங்கள் ஆவணப்படுத்தப்பட்டு காப்பாற்ற பட வேண்டியவைதான்.அதற்காகவே கீதாரியின் எஞ்சினியர் மகன் இரவில் கிடையில்
ஆடைகளைக் கவனிக்க வருவதில் எமக்கு உடன்பாடில்லை.
கீதாரியின் மகனின் தொழில் கிடையைக் கவனித்தல் என்ற மரபு தொழில் தொடர்வதில் சாதியம் பாதுகாக்கப்படும். இவை உடைக்கப்பட வேண்டிய மரபுகள். இவைகளை உடைப்பதிலும் இவை உடைக்கப்பட்டதிலும் என் போன்றவர்களுக்கு
துளியும் வருத்தமில்லை.
ஒரு எழுத்தின் வெற்றி அதன் தொடர்ச்சியாக எழும் பல்வேறு சிந்தனைகள். செந்தமிழன் கட்டுரைகள் வாசகனுக்கு சிந்தனை அலைகளை எழுப்புவதில் மிகச்சிறந்த வெற்றி பெற்றுள்ளன. தோழர் செந்தமிழனுக்கும் இந்நூலை வாசிக்கும்
வாய்ப்பைக் கொடுத்த தமிழர் கண்ணோட்டம் ஆசிரியர் குழுவுக்கும் நூலைச் சிறப்பாக வெளியிட்டிருக்கும் தஞ்சை பன்மைவெளி வெளியீட்டகத்திற்கும் வாழ்த்துகள்.


puthiyamaadhavi@hotmail.com

Series Navigation

புதியமாதவி, மும்பை

புதியமாதவி, மும்பை