நிருத்தியதானம்

This entry is part [part not set] of 35 in the series 20090806_Issue

குரு அரவிந்தன்


சென்ற ஞாயிற்றுக்கிழமை மாலை 5:30 மணியளவில் நிருத்திய கலாஞ்சலி கலைக் கல்லூரியின் ஆதரவுடன் நிருத்தியதானம் என்ற நடன நிகழ்ச்சி மிடில்பீல்ட் கல்லூரி பார்வையாளர் மண்டபத்தில் மிகவும் சிறப்பாக நடைபெற்றது. தாயகத்தில் பசி பட்டினியால் வாடும் எம்மினமக்களுக்கு ஆதரவுக் கரம் நீட்டும் நோக்கத்தோடு இந்த நிகழ்ச்சி முன்னெடுக்கப்பட்டது. தானம் என்ற சொல்லைத் தெரிந்தெடுத்ததாலோ என்னவோ, அங்கே வருகை தந்திருந்த ஆர்வலர்களைப் பார்வையாளர்களாக மட்டுமல்ல, பங்காளிகளாகவும் மாற்;றியிருந்தது.

திருமதி மீனா தவரத்தினம், அதிபர் பொ.கனகசபாபதி, கவிநாயகர் வி. கந்தவனம் ஆகியோர் ஈகைச்சுடரேற்றி நிருத்தியதானம் நிகழ்ச்சியை ஆரம்பித்து வைத்தனர். தொடர்ந்து கனடிய தேசிய கீதம், தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடல், தாயகத்தின் விடுதலைக்காகத் தம்முயிர் தந்தோருக்காக அகவணக்கம் என்பன இடம் பெற்றன. நிருத்திய கலாஞ்சலி கலைக்கல்லூரி அதிபர் ஸ்ரீமதி நிரோதினி பரராஜசிங்கம் வரவேற்புரை வழங்கி விழாவிற்கு வருகை தந்திருந்தோரை அன்புடன் வரவேற்றார். நிகழ்ச்சித் தொகுப்பாளராகக் கடமையாற்றிய கந்தசாமி கங்காதரன் நிகழ்ச்சியை மிகவும்

உணர்வு பூர்வமாக, அவ்வப்போது பாடல்களுக்கு ஏற்றவாறு அளவாக விளக்கம் தந்து, பார்வையாளர்களைக் கவரக்கூடிய வகையில் மிகவும் சிறப்பாகக் கொண்டு நடத்தினார்.

நிருத்திய கலாஞ்சலி கலைக்கல்லூரியின், பாலர் முதல் பெரியோர் வரையிலான மாணவ, மாணவிகள் இந்த நிகழ்ச்சியில் பங்குபற்றி நிகழ்ச்சியை மிகவும் சிறப்பாக கொண்டு நடத்தினர்.

அன்றைய தினம் ஓவ்வொரு நிகழ்ச்சியுமே மிகவும் கவனமாகத் தெரிந்தெடுக்கப்பட்டுப் பார்வையாளருக்குச் சலிப்புத் தராதவகையில் மிகவும் சிறப்பாக மேடையேற்றப்பட்டது. பார்வையாளர்கள் நிகழ்ச்சியில் அப்படியே ஒன்றிப் போய் இருந்தது மட்டுமல்ல, ஒவ்வொரு நிகழ்ச்சி முடிவிலும் நடனமாடிய மாணவ மாணவிகளின் திறமையின் வெளிப்பாட்டை கரகோசம் எழுப்பிப் பாராட்டிக் கொண்டிருந்ததைப் பலராலும் அவதானிக்க முடிந்தது. குறிப்பாக ஈழத்து எழுச்சிப் பாடல்கள், பாரதியார் பாடல்கள், கண்ணன் பாடல், பெரியார் பற்றிய பாடல், ஈழத்துக் கவிஞர் காசி ஆனந்தனின் பாடல் வரிகள் எல்லாம் சிறப்பாகத் தெரிந்தெடுக்கப்பட்டு, வயது வேறுபாடின்றி நிகழ்ச்சிக்கு வந்திருந்த எல்லோரையும் கவரக்கூடியதாக இருந்தது. ஈழத்து இன்றைய அவல நிலையை தத்ரூபமாக அப்படியே எடுத்துக் காட்டும் நிகழ்ச்சியாகவும் இது அமைந்திருந்தது. இதைவிட அங்கே வருகை தந்திருந்த பார்வையாளர்களுக்கு சிறப்பு அம்சமாக வித்தியாசமான நடன நிகழ்ச்சி ஒன்றும் காத்திருந்தது. நிருத்திய கலாஞ்சலி கலைக்கல்லூரி மாணவிகளின் நான்கு தாய்மார்கள் அந்த நிகழ்ச்சியில் பங்கு பற்றியிருந்தனர். சுதர்சினி மணிவண்ணன், யசோதா ஜெயக்குமார், கல்பனா கோபாலகிருஷ்னன், தங்கி அமிர்தரன் ஆகியோர் ஆசிரியரின் துணையோடு ஒரு நடனநிகழ்ச்சியைத் தயாரித்து, பயிற்சி பெற்று மேடை ஏற்றியிருந்தனர். இளமைப் பருவத்தில் கற்றறிந்த நடனக்கலையில் இருந்த தங்களின் திறமையை பல வருடங்களின் பின் மீண்டும் வெளிக்கொண்டு வந்து பார்வையாளர்களை மகிழ்வித்து, சபை நிறைந்த கரகோஷத்தைப் பெற்றுக் கொண்டனர். தங்கள் பெற்றோரிடமும் இப்படியான பல திறமைகள் வெளிப்படுத்தப்படாமலே மறைந்திருக்கின்றன என்பதை அடுத்த தலைமுறையினர் அறிந்து கொள்ள, அல்லது புரிந்து கொள்ள இது ஒரு அருமையான சந்தர்ப்பமாக அமைந்திருந்தது. எமது அடுத்த தலைமுறையினருக்கு எமது கலை, பண்பாடு, கலாச்சாரம் போன்றவற்றைக் கற்பிப்பது மட்டுமல்ல, அவர்களுக்கு எமது தாயக மண்ணில் எமது இனம் படும் அவலத்தையும், துயரத்தையும் பாடல்கள், நடனம், நாட்டிய நாடகங்கள் மூலம், விழுந்தாலும் மீண்டும் எழுந்து நிற்போம் என்பதைப் புரியவைப்பதில் முன்னின்று உழைக்கும் நிருத்திய கலாஞ்சலி கலைக்கல்லூரிக்கு எமது பாராட்டுக்கள்.

நிருத்திய தானம் என்ற நிகழ்ச்சியில் தானம் என்ற சொல்லின் அர்த்தம் சொல்லில் மட்டுமல்ல, செயலிலும் பலருக்குப் புரிய வைக்கப்பட்டது. மேடையில் வைத்து நிருத்திய கலாஞ்சலி கலைக்கல்லூரியின் சார்பில் அங்கே தானமாகச் சேகரிக்கப்பட்ட பணமான கனடிய டொலர் பத்தாயிரத்து இருபது, ஈழத்தில் பசிபட்டினியால் அல்லற்படும் தமிழ் மக்களின் தேவையைக் கவனத்தில் கொண்டு தானம் கொடுக்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினர்களாக உதயன் பத்திரிகை பிரதம ஆசிரியர் ஆர். என். லோகேந்திரலிங்கம், நேரு குணரட்ணம், டேவிட் பூபாலபிள்ளை, சிவசாமி சிவமோகன் ஆகியோர் வருகை தந்து சிறப்பித்தது மட்டுமல்ல, ஈழத்தமிழ் மக்களின் இன்றைய அவசர தேவை என்ன என்பதையும் ஆதார பூர்வமாக எடுத்துச் சொல்லிச் சிறப்புரை ஆற்றினர். இறுதியாக ஸ்ரீமதி நிரோதினி பரராஜசிங்கத்தின் நன்றி உரையுடன் நிகழ்ச்சி இனிதே நிறைவு பெற்றது.

இந்த நடனநிகழ்ச்சியைச் சிறப்பாக மேடையேற்றிய நிருத்திய கலாஞ்சலி கலைக்கல்லூரி அதிபர் ஸ்ரீமதி நிரோதினி பரராஜசிங்கம் அவர்களுக்கும், அவருக்கு உறுதுணையாக நின்று உதவி செய்த திரு. பரராஜசிங்கம் அவர்களுக்கும், அருமையான நிகழ்ச்சியைத் தந்த கலைக் கல்லூரியின் மாணவ, மாணவிகளுக்கும், அவர்களது பெற்றோருக்கும், நிகழ்ச்சியை உணர்வு பூர்வமாகத் தொகுத்து வழங்கிய நண்பர் கந்தசாமி கங்காதரனுக்கும், நிருத்தியதானத்தில் கலந்து கொண்டு பண உதவி செய்ததன் மூலம் ஈழத்தமிழ் மக்களின் துயர் துடைக்க அரும் பெரும் பணி செய்தோருக்கும், கலை ஆர்வலர்களின் சார்பில் நன்றி சொல்லக் கடமைப்பட்டிருக்கிறோம்.

இந்த நிகழ்ச்சி ஒரு கனியாட்ட விழாவாக இல்லாமல், ஈழ மக்களின் தற்போதைய நிலைமையைக் கருத்திற் கொண்டு, உணர்வு பூர்வமான ஒரு நிகழ்ச்சியாக அமைந்திருந்தது மட்டுமல்ல, இனி வரும் நிகழ்ச்சிகளுக்கும் இது ஒரு முன்மாதிரியாக அமைந்திருந்ததை நாங்கள் கட்டாயம் பாராட்டியேயாகவேண்டும
kuruaravinthan@hotmail.com

Series Navigation