நிம்மதி

This entry is part [part not set] of 22 in the series 20020707_Issue

ஸ்ரீனி.


‘வெறி கொண்ட வெளிச்சப்புள்ளி
வேகமாய் வருகுது இங்கே,
தப்பிக்க வழியே இல்லை
தலைமறைவு சாத்தியம் இல்லை. ‘

செய்தி ஒன்று கவிதையாய்
முதன்முதலாய் ஒலிக்க,
சினிமாவும், சிறுகுறிப்பும், நீங்கள் கேட்ட பாடலுமாய்
நேற்றுவரை நிறைந்திருந்த நிகழ்ச்சிகள் நின்று போய்,
வீணை வாசிக்கும் நிலைய வித்வான்களுக்கு,
இன்று வேட்டையோ வேட்டை !
விளம்பர இடைவெளிகள் ஏதும் இன்றி
வித்தியாசமாய் ஒரு நிகழ்ச்சி !

போடப்படாத பால் கவருக்கும்,
வராத குழாய் நீருக்கும்,
ஓடாத பஸ்களுக்கும்,
சுட்டெரிக்கும் சூரியனுக்கும்,
சினம் கொண்ட விசுவாமித்திரர்களின்
சாபத்தினின்று விடுதலை !

அழிக்கப்படாத கோலங்களும்,
களங்கப்படாத காற்றும்,
கழிவு சுமக்காத ஆற்று நீரும்,
பறிக்கப்படாத பூக்களும்,
குழம்பித்தான் போயின
இந்த மகத்தான மாற்றத்தில் !

‘விண்கலம் ஒண்ணு வேகமாய் வருதாம் !
உள்ளோரின் உயிரை மட்டும்
ஏற்றிச் செல்ல போகுதாம் ! ‘
பூவின் செவியில் சேதி சொன்னது காற்று.

சிவந்து நிற்கும் இதழ்கள் கொண்டு
சிரித்து நிற்கும் பூவைக்கண்டு
கேள்விக்குறி தலையில் தாங்கி
குழம்பி நின்றது குளிர் தென்றல்.

‘உயிர் போகும் நிலையில தான்
நம்ம உயிர் வாழ விடுவாங்க போல !
சடுதியில் மனுஷன் நடத்தும்
இயந்திர வாழ்க்கையில
சக்கையாய் பிழியப்பட்டு,
தினம் தினம் செத்து பொழைக்கும்
நமக்கு இது சாதாரணம்.. ‘

Series Navigation

ஸ்ரீனி

ஸ்ரீனி