நினைவுகளின் தடத்தில் – (34)

This entry is part [part not set] of 38 in the series 20090820_Issue

வெங்கட் சாமிநாதன்ஜூக்னு என்ற ஹிந்திப் படத்தை கும்பகோணம் விஜயலக்ஷ்மி டாக்கீஸில் பார்த்தேன். அதைப் பார்த்துவிட்டு இரண்டு நாட்கள் மனம் கலவரப்பட்டுக் கிடந்தேன் என்று எழுதிக்கொண்டிருந்த போது அந்தப் படத்தைப் பார்க்கக் காசு எங்கேயிருந்து கிடைத்தது என்ற கேள்வியும் உடன் எழுந்தது. இப்போது எனக்குப் பதில் தெரியவில்லை. அப்பாவால் மாதம் ஆறு ரூபாய் எனக்கு பள்ளிக்கூடச் சம்பளம் கொடுப்பதே அவரது மாத சம்பாத்யம் கிட்டத்தட்ட 20 ரூபாய் அளவிலேயே இருக்கும்போது சிரமமான காரியமாகத் தான் இருந்தது. அதில் முதல் சில மாதங்கள் எனக்கு தினம் இரண்டணா கொடுக்கச் சொல்லி அம்மாவிடம் சொன்னது அம்மாவுக்கும் எனக்கும் சந்தோஷமாக இருந்ததே ஒழிய, அது எப்படி சாத்தியம் என்பதில் அம்மாவுக்கும் ஆச்சரியம் தான். அப்படி இருக்க சினிமா பார்க்க எங்கிருந்து எனக்கு கைச்செலவுக்கு என்று தனியாக வீட்டிலிருந்து பணம் கிடைக்கும்?

ஆனால் கும்பகோணத்திலும் உடையாளுரிலுமாக இருந்த அந்த இரண்டு வருடங்களில் நான் சினிமா பார்க்க என்று சென்றது அதிகம் இராது. அதிகம் என்றால் நிலக்கோட்டியிலும் மதுரையிலும் பார்த்த கணக்கில் சொல்கிறேன். நிலக்கோட்டையில் மூன்று நாட்களுக்கு ஒரு முறை படம் மாற்றும் டூரிங் டாக்கிஸில் மாறும் ஒவ்வொரு படத்தையும் நான் பார்த்தாக வேண்டும். பெரும்பாலும் பாட்டியும் அதற்கு உதவியாக பாட்டியின் ரசனைக்கேற்ப அந்த நாளில் புராணப்படங்களே வெளிவந்துகொண்டிருந்த சூழலும் எனக்கு சாதகமாக இருந்தன. சிறு வயதிலிருந்து வளர்ந்து வந்த என் சினிமாப் பைத்தியத்திற்கு உதவின. எப்போதாவது மூன்று நாட்களுக்கு ஒரு முறை மாறும் படம் ஏதாவது பார்க்க முடியாமல் போய விட்டால், உலகமே வெறுத்துப் போய் வீட்டை விட்டு ஓடி விட்டால் என்ன என்று தோன்றும். மதுரையிலும் எல்லாம் எனக்கு சாதகமாகத்தான் இருந்தது. அனேகமாக மாமியின் சகோதரர்கள், ராஜா, அம்பி என்னும் ரங்கநாதன் இருவரும் சினிமாவுக்குப் போகும் போதெல்லாம் என்னையும் உடன் அழைத்துச் செல்வார்கள். ஆக, எப்படியோ என் சினிமா பைத்தியத்திற்கு குறை வந்ததில்லை. உடையாளூருக்கு வந்த பிறகு தான் நிலைமை முற்றிலும் மாறியது. ஆனால் மூணு வேளை சாப்பாடு, இரண்டு வேளை கா·பி, இடையில் நாலு மணிக்கு நொறுக்குத் தீனி என்பதெல்லாம் கும்பகோணம் வந்ததும் மாறி வறுமைப் பட்டது போல, சினிமா பார்க்கும் வாய்ப்புகளும் வற்றித் தான் போயின. ஆனால் இப்போது அதனால் வாழ்க்கை வெறுத்ததாக உணரவில்லை. மனம் அதை சகஜமாக ஏற்றுக்கொண்டது. பெற்றோர்களால் அது இயலாது என்பது தெரிந்தது. இருப்பினும், அந்த இரண்டு ஆண்டுகளில் சுமார் பத்து படங்களாவது பார்த்திருப்பேன். எப்படி என்பது தான் இப்போது நினைவு கொள்ள முடியவில்லை. ஒரு முறை தீபாவளிக்கு துணிமணிகளும், பட்டாசுகளும் வாங்க உடையாளூரிலிருந்து கும்பகோணத்திற்கு வந்த உடையாளூரில் எங்க தெருவாசி ஒருவர், தன்னோடு என்னையும் அதே விஜயலக்ஷ்மி டாக்கிஸ¤க்கு சினிமா பார்க்க அழைத்துச் சென்றார். பார்த்தது, ஆயிரம் தலை வாங்கி அபூர்வ சிந்தாமணி. இரண்டாம் ஆட்டம். ஆயிரம் தலைகளையும் வாங்குவதை பார்க்க எனக்குக் கொடுத்து வைக்கவில்லை. ஒரு சில தலைகளுக்குப் பிறகு எனக்கு தூக்கம் வந்துவிட்டது. படம் முடிந்ததும் என்னை எழுப்பி வீட்டுக்கு அழைத்துப் போனார்கள்.

மற்ற படங்களை எப்படி பார்க்க முடிந்தது, யார் காசு கொடுத்தார்கள் என்பது தெரியவில்லை. அப்போது தான் அண்ணாதுரையின் ஓர் இரவு, நல்ல தம்பி போன்ற படங்கள் தமிழ் சினிமா உலகையே உலுக்கி வைத்தன. கதை வசனம், சி.என். அண்ணாதுரை எம். ஏ. என்ற எழுத்துக்களை திரையில் பார்த்ததுமே தியேட்டர் கைதட்டலில் அதிரும். தமிழ் சினிமாவில் இது போன்று நிகழ்வது அது தான் தொடக்கம். பின்னர் அது தமிழ் சினிமாவிலும் நிகழவில்லை. வேறு எங்கும் நிகழ்ந்து நான் பார்க்கவும் இல்லை. கட்சியின் எல்லைகளை மீறி அவருக்குக் கிடைத்த வரவேற்பு அது. இன்னும் இரண்டு படங்களை நான் குறிப்பாகச் சொல்ல வேண்டும். பி.யு.சின்னப்பா வின் கிருஷ்ணபக்தி. சின்னப்பாவை விட அதிக புகழ் பெற்ற தியாகராஜ பாகவதருக்கு இனிமையான சாரீரமும், பெண்களை வசீகரிக்கும் முகமும் சின்னப்பாவுக்கு கடவுள் அருளவில்லை. ஆனால் சின்னப்பாவின் குரலில் எனக்கு ஒரு கவர்ச்சி இருந்தது. சங்கீதத்தில் திறமை என்று பார்த்தால், பாகவதரை விட சின்னப்பாவை நான் சற்று மேலாகவே மதிப்பேன். கிருஷ்ணபக்தியில் அவர் கதாகாலட்சேபம் செய்வதும், அதில் அவர் கொணர்ந்த கேலியும் என்னை இன்றும் பரவசப்படுத்தும். ‘செங்கமலம் என்றொரு தாசீ” என்று ஆரம்பிக்கும் அந்த காலட்சேபம், அவர் மனைவி வருவதைப் பார்த்ததும், ‘தாசீ தாசீ” என்ற சொற்கள் ‘சீதா சீதா” என்று மாறும். ஒரே ரகளை தான். இன்று 2008 நவம்பர் மாதம் நான் பார்க்க விரும்புவது கிருஷ்ணபக்தி யா அல்லது ஒரு புதிய நான் பார்க்காத கமலஹாஸன், ரஜனி காந்த் படமா என்றால், யோசிக்கத் தேவையே இல்லை. கிருஷ்ண பக்தியைத் தான் நான் பார்க்க விரும்புவேன். அது போல ஒரு படத்தில் அவர் கொன்னக்கோல் வாசிப்பதும் என்னைக் கவர்ந்தது. அந்தப் படம் ஜகதலப்ரதாபன் என்று நினைக்கிறேன். தொலைக்காட்சியில் ஜகதலப்ரதாபன் என்று இருப்பதைப் பார்த்து பி.யு. சின்னப்பாவா என்று ஆசையோடு பார்த்தால் ஏமாந்து போனேன். எனக்குக் கிடைத்தது சிவாஜி கணேசனின் உருட்டும் விழிகள்.

இந்த மாதிரியான பி.யு.சின்னப்பாவின் திறன்களை பாகவதரிடம் காண்பதற்கில்லை. அவரது குரலினிமையை விட்டு விட்டால் மற்றதெல்லாம் தட்டையான ஒற்றைப் பரிமாண சமாச்சாரமாகவே எனக்குப் படும். அந்த இரண்டு ஆண்டுகளில் நான் பார்த்த ஒரே பாகவதர் படம் அமரகவியோ என்னவோ. சிறையிலிருந்து விடுதலையாகி வந்தபின் அவர் நடித்த சிலவற்றில் நான் பார்த்தது. அவரோடு சேர்ந்து பானுமதி பாடி நடித்திருந்தது. ஆனால் அதற்கு வரவேற்பில்லை. பாகவதரின் காலம் ஓய்ந்து விட்டது அப்போது. அவரது பக்தி கதைகளுக்கு தமிழ் சினிமாவில் இடமிருக்கவில்லை. ஓர் இரவு மருத நாட்டு இளவரசி, மந்திரி குமாரி எல்லாம் தமிழ் சினிமா ரசிகர்களின் ரசனை எதிர்பார்ப்பை மாற்றி விட்டன. சிறையிலிருந்து வெளிவந்த பாகவதரின் வாழ்க்கை சோகமயமானது. சினிமாவும் தமிழ் ரசனையும் அவரை வஞ்சித்து விட்டன. தமிழ் நாடும் தான். சில நாட்களுக்கு முன் அவரது சமாதியை தொலைக்காட்சியில் காட்டினார்கள். அதுவும் ஒரு சோகம் தான். அந்த சமாதி இருக்கும் கேவல நிலை கண்டு தமிழ் நாடு வெட்கித் தலை குனிய வேண்டும். அது பற்றிய ஸ்மரணையே இல்லை நமக்கு. கோடிக்கணக்கான தமிழ்க் காதுகளை இனிமையான சங்கீத த்தால் நிரப்பிய மனிதர். இன்றும் அந்த இனிமையைக் கொடுக்கக் காத்திருக்கும் குரல் அது. தமிழ் உலகம் நன்றி கெட்ட உலகம் தான். பன்னிரண்டே படங்களில் நடித்து ஒரு சூப்பர் ஸ்டார் ஆனவர். தன் குரல் இனிமையாலேயே. அறுபது வருடங்களுக்குப் பின்னும் இப்பவும் அவர் குரல் கேட்டாலே மனம் நெகிழ்ந்து விடுகிறது. ஒரு வண்ணமயமான உலகம் பாழடைந்து பார்ப்பது போல ஒரு சோகம் கப்புகிறது.

ஒரு நாள் ராஜா டாக்கீஸில் படம் பார்த்து விட்டு வழியில் ஏதோ ஒரு வீட்டுத் திண்ணையில் படுத்திருந்து காலையில் எழுந்து உடையாளூருக்குக் கிளம்பியது நினைவுக்கு வருகிறது. அது ஒரு கலாச்சாரம். யார் வீட்டுத் திண்ணியிலும் யாரும் படுக்கலாம். கதவு தடுக்காத திறந்த திண்ணை. யாரும் இளைப்பாறத் தான் அது. யாரும் காலையில் ஒரு வாளித் தண்ணீரை நம்மேல் கொட்டி எழுப்ப மாட்டார்கள்.

ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் சாயந்திரம் பள்ளிக்கூடம் முடிந்ததும் உடையாளூருக்குப் போய்விடுவேன். பின் திங்கட் கிழமை காலை புறப்பட்டு சாயந்திரம் பள்ளிக்கூடம் முடிந்ததும் தான் தங்கியிருக்கும் பாட்டி வீட்டுக்குப் போவேன். இப்படித்தான் ஒரு சனிக்கிழமை காலை உடையாளூரில் என் வீட்டுத் திண்ணையில் உட்கார்ந்திருந்தேன். காலை பத்து பதினோரு மணி இருக்கும். என் தங்கை யார் வீட்டுக்கோ போய்த் திரும்பிக்கொண்டிருந்தவள் என்னைத் திண்ணையில் பார்த்ததும் வேகமாக ஓடி வந்து “அண்ணா, காந்தி செத்துப் போய்ட்டாராம் அண்ணா, யாரோ சுட்டுட்டாளாம்” என்றாள். அவளுக்கு காந்தி பற்றி எதுவும் அறியாதவள். கிராமத்திலேயே வளர்ந்த 13-வயதுச் சிறுமி. யாரோ செத்துப் போய்ட்டா. எல்லோரும் பேசிக்கிறா, ரொம்ப பெரிய விஷயமா இருக்கணும். அண்ணா கிட்ட சொல்லணும். அண்ணாக்கு தெரியாத ஒரு விஷயம் தனக்குத் தெரிஞ்சு போச்சு” என்ற மூச்சிறைக்க ஓடி வந்தவள். ஆனால் எனக்கு ஏற்பட்ட அதிர்ச்சியில் அவள் பேரில் கோபம் தான் வந்தது. “உளறாதே. யார் சொன்னா உனக்கு? பேசாமே உள்ளே போ,” என்று கத்தினேன். என்னமோ நினைத்து ஆசையோடு வந்தவளுக்கு நான் வள்ளென்று விழுந்தது அதிர்ச்சியாக இருந்தது. அவள் இதை எதிர்பார்க்கவில்லை. பயத்தில் உள்ளே ஓடினாள்.

இதை யார் சொல்லியிருக்கமுடியும்? உடையாளூரில் யார் வீட்டிலும் ரேடியோ கிடையாது. தினசரி பத்திரிகையும் வலங்கிமானிலிருந்து தான் வரவேண்டும். அவன் இதற்குள் வந்திருக்கமுடியுமா? ஒரு சுதேசமித்திரனையோ, தினமணியையோ எடுத்துக் கொண்டு மூன்று மைல் வலங்கிமானிலிருந்து உடையாளுருக்கு வந்து கொடுதாகவேண்டும் என்ற அவசரம் அவனுக்கும் இல்லை. உடையாளுருக்கும் இல்லை. அவன் ஒரு மணி அளவில் தான் வருவான். அது பற்றி யாரும் புகார் செய்யப் போவதில்லை. பின் தான் தெரிந்தது வலங்கிமானிலிருந்து வந்தவர் ஒருவர் ஊருக்குச் செய்தி கொண்டு வந்திருக்கிறார். அவர் சாவகாசமாக வலங்கிமானில் தன் வேலைகளை முடித்துக் கொண்டு ஊர் வந்ததும் முதல் காரியமாக ஊரில் நுழைந்ததும் பிள்ளையார் கோயிலைத் தாண்டி தென்படும் இரண்டாவது வீட்டின் திண்ணையில் உட்கார்ந்திருக்கும் part time போஸ்ட் மாஸ்டரிடம் சொல்லியிருக்கிறார். அவர் கார்டு கவர் மொத்தமாக வாங்கி வைத்து வேண்டியவர்களுக்குக் கொடுப்பவர். அங்கு தான் வலங்கிமானிலிருந்து வரும் தபால் காரன் தபால்களை எடுத்துச் செல்வதும் பட்டு வாடா செய்வதும். திண்ணையைத் தாண்டி இடைகழியை ஒட்டிய அறையின் ஜன்னலைத் திறந்து வைத்துக்கொண்டால் அந்த அறை எங்கள் ஊர் தபால் நிலையமாகி விடும். எங்கள் ஊரில் வெளியூர் விஷயங்கள் விஷயங்கள் உலக விவகாரங்களுக்கு அவரும் இன்னும் ஓரிருவரும் தான் அதாரிட்டி.

அங்கு ஒரு சிறிய கூட்டம் கூடியிருந்தது. கொஞ்சம் சலசலப்புடன். பிறகு தான் கொஞ்சம் கொஞமாக செய்தி அங்கிருந்து பரவியது. நேற்று (வெள்ளிக்கிழமை ) மாலை பிரார்த்தனைக் கூட்டத்தில் மகாத்மாவை யாரோ சுட்டு விட்டார்கள். முன்னாலேயே சில நாட்கள் முன்னால் இம்மாதிரி ஒரு சம்பவம் நிகழ்ந்திருக்கிறது. அப்போது யாருடைய உயிருக்கும் சேதம் இல்லை. தனக்கு ஏதும் விசேஷ பாதுகாப்பு தேவையில்லை என்று சொல்லிவிட்டாராம் காந்தி. அவர் பேச்சைக் கேட்காமல் பாது காப்பு கொடுத்திருந்தால் இதைத் தவிர்த்திருக்கலாம். காந்தி இப்போது உயிரோடி இருந்திருப்பார் என்று பேசிக்கொண்டார்கள்.

வெங்கட் சாமிநாதன்/24.11.08
vswaminathan.venkat@gmail.com

Series Navigation

வெங்கட் சாமிநாதன்

வெங்கட் சாமிநாதன்