நினைவுகளின் தடத்தில். – (24)

This entry is part [part not set] of 36 in the series 20090129_Issue

வெங்கட் சாமிநாதன்தெருவில் பனியனோ, துண்டோ ஒருவன் போட்டுக் கொண்டு நடப்பதைப் பார்த்து விட்டால் அவன் பயணம் கும்பகோணத்திற்குத் தான் என்று நினைத்துக்கொண்டு திண்ணையில் உட்கார்ந்திருப்பவர்கள அவனை இதையும் அதையும் வாங்கி வா என்று சர்வ சாதாரணமாகச் சொல்வதும் அதை அவன் மனம் கோணாமல் செய்வதும் எங்கள் கிராமத்து வாழ்க்கையில் ஒருவருக்கொருவர் உதவிக்கொண்டு வாழவேண்டிய நிர்ப்பந்தம் விதித்த கலாச்சாரம். “மாட்டேன், என் வேலை எனக்கு, உன் வேலையை நீ பார்த்துக்கொள் ” என்று அவன் மனத்தால் கூட நினைக்க மாட்டான்.

இப்படித்தான் பல பெரிய காரியங்களுக்கு ஊர் முழுதும் கூடி தாமாகவே உதவ முன் வரும். ஒரு வீட்டில் ஒரு கல்யாணம், அல்லது ஏதும் பெரிய விசேஷம் என்றால், எல்லோரும் அந்த விசேஷத்தின் வேலைகளைப் பகிர்ந்து கொள்வார்கள். அதை தாமாகவே மேற்கொண்டு மிக சந்தோஷத்துடன் செய்வார்கள். அதே போல அந்த கிராமத்தில் யார் வீட்டிலும் கல்யாணம் என்றால் பத்திரிகை அடித்து எல்லோருக்கும் கொடுத்து அழைப்பது என்பதெல்லாம் கிடையாது. ஒரு வீட்டில் பெண்ணுக்கோ, பையனுக்கோ கல்யாணம் செய்யவேண்டும் என்ற எண்ணம் தோன்றி அதற்கான யத்தனங்கள் ஆரம்பித்ததுமே கிராமத்தில் எல்லோருக்கும் அது தெரிய வந்து விடும். அதிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக ஊராரின் பங்கேற்பு தொடங்கிவிடும். கல்யாணமோ அல்லது வேறு எந்த விசேஷமோ, நான் பார்த்திருக்கிறேன். முதலில் காலையில் ஒரு முறை அழைப்பு வரும். பிறகு பதினோரு மணிக்கு மறுபடியும் அழைப்பு வரும். கொஞ்ச நேரம் கழித்து இலை போட்டாச்சு சீக்கிரம் வாங்கோ” என்று அழைப்பு வரும். அதற்கு அரை மணி நேரம் கழித்து, “ரெண்டாம் பந்திக்கு இலை போட்டாச்சாம், உங்களையெல்லாம் சாப்பிடறதுக்கு சீக்கிரம் வரச்சொல்லி அப்பா சொல்லச் சொன்னா” ன்னு அழைப்பு வரும். இப்படி கிராமம் பூராவும் வீடு வீடாக சென்று அழைப்பு திரும்பத் திரும்ப போய்க்கொண்டே இருக்கும். சிவன் கோயில் மண்டகப்படியை முறை வைத்து ஒவ்வொரு வசதி உள்ள வீட்ட வரும் வைத்துக் கொள்வார்கள். ஊரில் இருந்த எந்த கோவிலுக்கும் சொத்து இருந்ததாகத் தெரியவில்லை. ஊர் ஜனங்களே எடுத்து தங்களுக்குள் முறை வைத்து நடத்திக் கொள்வதைத் தான் நான் பார்த்திருக்கிறேன்.

உடையாளூர் சென்ற பிறகு தான் சிவன் கோவில் மணியின் ஒலி காதில் விழத்தொடங்கியது. ஒவ்வொரு நாளும், விடியும் முன் தொடங்கும் உஷாக்கால ஒலியின் தொடக்கத்திலிருந்து அர்த்த ஜாம பூஜை நடப்பதன் செய்தியாக வரும் கடைசி ஒலி வரை, அது அன்றாட வாழ்க்கையின் ஒரு அங்கமாகியது. கிராமத்திலிருந்து அதிக தூரமில்லை, சுமார் ஒன்று அல்லது ஒன்றரை ·பர்லாங்கு தூரம் தான் இருக்கும், ஆற்றின் பெயர் எனக்கு மறந்து விட்டது. முடிகொண்டான், திருமலை ராஜன், குடமுருட்டி என்று ஏதோ ஒரு பெயர் அதற்கு, அந்தப் பெயரை வெகு அபூர்வமாகத்தான் நான் கேட்டிருக்கிறேன். அதிலும், ஒவ்வொரு கிராமமும், வழியில் குறுக்கிடும் ஆறும் எல்லாமே சுமார் ஒரு மைல் அல்லது அரை மைல் தூரத்திலிருந்தன. தஞ்சை ஜில்லா கிராமத்தாருக்கு, அவர்கள் ஊரில் ஓடும் ஆறு எதாக இருந்தாலும், அது காவிரி தான் அவர்களுக்கு. ஆறு என்ன, எந்த பெரிய வாய்க்காலும், குளிக்கத் தகுந்த பெரிய வாய்க்காலானால், அதுவும் கிராமத்து ஜனங்களுக்கு காவிரி தான். காலையில் விடியும் முன் கிராமத்துப் பெண்கள் ‘காவிரிக்குப்’ போய்க் குளித்துவிட்டு ஈரப்புடவையுடனும், இடுப்பில் ஜலம் நிரப்பிய குடத்துடனும் வருவதை, ‘காவிரியில்’ ஜலம் ஓடும் காலங்களில் பார்க்கலாம். அதற்கும் முன்னால், விடிவதற்கு முன்னாலேயே மார்கழி மாதமானால் பஜனை கோஷ்டி பாடிக்கொண்டே ஊர்வலம் வந்து முடிந்திருக்கும். இன்னொரு கோஷ்டி தேவாரம் பாடிச் செல்லும்.

உடையாளூரில் ஒரு பெருமாள் கோவிலும், மிகப் பழமையான 12-ம் நூற்றாண்டு சிவன் கோவிலும் இருந்த போதிலும் மிகப் பிரசித்தமானதும் வெளியூரில் எங்கிருந்தாலும், எவ்வளவு தூரத்திலிருந்தாலும், உடையாளூர் வாசிகளை பங்குனி உத்திரத்தில் நடக்கும் தன் உற்சவத்திற்கு அழைத்துவிடும் தெய்வம் செல்வமாகாளி அம்மன் தான். கனம் கிருஷ்ணய்யரையே ஊர்வலம் வந்த தெய்வம் அக்கணமே ஒரு கீர்த்தனைய இயற்றிப் பாட வைத்த அம்மன். உ.வே.சா வின் எழுத்துக்களில் இடம் பெற்றது உடையாளூர் சிவனோ பெருமாளோ இல்லை. செல்வமாகாளி அம்மன் தான். ஒன்றும் பெரிய கோவில் இல்லை. சின்னது தான். கோவிலின் கர்ப்பக் கிரஹத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்டிருக்கும் அம்மனின் மூர்த்தியும் முழு உருவ மூர்த்தி இல்லை. ஒரு பாளம் போன்ற பாறையில் செதுக்கப்பட்ட புடைப்புச் சிற்பம். எனக்கு இது ஒரு வித்தியாசமான காட்சியாகப் பட்டது. ஒரு சின்ன கோயில். அதைச் சுற்றி நாலா பக்கமும் எழுப்பட்டுள்ள சுற்றுச் சுவர். இதற்குள் அதன் வலது பக்கத்தில் ஒரு கிணறு. இன்னும் சில சின்ன சின்ன தேவதைகள். ஒரு சின்ன தேவதைக்கு சுருட்டு முதலியன படைக்கப்பட்டிருந்தது. ஆனால் உயிர்பலி இங்கு நடப்பதில்லை. அதை நான் கண்டதுமில்லை. கேட்டதுமில்லை. கல்கத்தா காளி கோயிலில் கூட இன்றும் ஆடுகள் பலி கொடுக்கப்படுகின்றன. செல்வமாகாளி அம்மனின் கோயிலிக்கு பூசைகள் செய்வது பரம்பரையான ஒரு பூசாரி தான். மூன்று வருடங்களுக்கு முன் நான் என் பேத்திக்கு முடியிறக்கப் போன போது பூசாரியாக இருந்தது முப்பதுக்களில் இருந்த ஒரு இளம் வாலிபன் தான். முன்னாலேயே அருகிலிருக்கும் சாக்கோட்டையில் இருக்கும் என் தம்பி மூலம் சொல்லி வைத்திருந்ததனால் பூசாரியே பூசைக்கு வேண்டிய பூக்கள் வகையறா, நிவேதனத்துக்கு வேண்டிய பொங்கல், வடை, எல்லாம் செய்து வைத்திருந்தது தயாராக இருந்தது. பால் வாங்கி வைத்திருந்தார். பஞ்சாமிர்தமும் செய்து வைத்திருந்தது. எல்லாம் அபிஷேகத்திற்காகத் தான். சம்பிரமங்களில் எதுவும் குறைபட்டதாக எனக்குத் தெரியவில்லை. ஆனால் உற்சவம் இல்லாத காலம் என்ற காரணத்தாலோ, அல்லது கால மாற்றத்தில் கிராம மக்களும், கிராமமும் நலிவடைந்த காரணத்தாலோ, அன்றைய முற்பகலில் எங்களைத்தவிர கோவிலுக்கு வந்தவர்கள் அதிகம் யாரும் இல்லை.

அந்த பூசாரி இளைஞனின் குடும்பம் தலை முறை தலைமுறையாக இக்கோவில் காரியங்களில் ஈடுபட்டிருந்ததால், பூஜைக்கான பொருட்களைச் சேகரிக்க, நிவேதனங்களைத் தயாரிக்கவும் முடிந்திருக்கிறது. அதோடு அந்த இளைஞன் அபிஷேகம், அர்ச்சனைகளை வட மொழியில் மந்திரங்கள் சொல்லியும் தமிழில் பிரார்த்தனைப் பாடல்களைப் பாடவும் செய்தான். வடமொழி மந்திரங்களை எங்கிருந்து கற்றான்? தலைமுறை தலைமுறையான ஈடுபாட்டில் தான் என்று எனக்குத் தோன்றிற்று. இது ஏதும் இப்போது நாம் கேட்கும் அரசியல் ரீதியான நிர்ப்பந்தங்களால் நிகழ்வது அல்ல. இக்கோயில் தமிழ் அரசின் அறநிலையத் துறையின் கீழ் வருவதல்ல. இது செல்வமாகாளி அம்மனின் பல நூற்றாண்டுகளாக கிராமத்தில் எல்லா மக்களிடையேயும் செல்வாக்குப் பெற்றதன் காரணமாக அந்த பூசாரிக் குடும்பமே தானாகவே கொண்ட ஈடுபாட்டின் விளைவு என்று எனக்குத் தோன்றுகிறது. அரசியல் கட்சியின் பயமுறுத்தல் காரணமாக இல்லாது,. அரசின் கட்டளை காரணமாக இல்லாது தானாகவே மக்களின் உடன்பாட்டில், விருப்பத்தில் நிகழும் மாற்றங்கள்

எனக்கு இப்போது நினைவுக்கு வருகிறது. 1974லில் நான் என் மகனுக்கு செல்வ மாகாளி அம்மன் கோயியில் குடும்ப வழக்கப்படி/ஊர் வழக்கப்படி முடியிறக்க தில்லியிலிருந்து உடையாளூர் சென்றிருந்தேன். அப்போது என்னுடன் என் பெற்றோரும் வந்திருந்தனர். அப்பாவோ ஆசாரங்களைக் கடைப்பிடிப்பதில் தீவிரமாக இருப்பவர். அம்மாவும் தான். ஆனால் அப்பா அளவுக்கு தீவிரம் இல்லை. அப்போதும் இந்த பூசாரிக் குடும்பத்தின் மூத்தவர் ஒருவர் தான் பூஜைகள் செய்தார். பரம்பரையாக ஏதோ காலத்திலிருந்து தொடர்ந்து வரும் பழக்கத்தால் தான் ஆசார சீலரான என் அப்பா இதையெல்லாம் சகஜமாக ஏற்றுக்கொண்டிருக்கிறார். அது பற்றி எந்த மாற்று சிந்தனையும் இல்லாமல். இதில் அவர் தனியர் இல்லை. அந்த கிராமமே ஏற்றுக்கொண்ட விஷயம் இது. அதோடு, அவர்கள் எங்கிருந்தாலும் பங்குனி உத்சவத்துக்கு உடையாளூர் ஓடி வந்துவிடுகிறார்கள் என்றால்..! இன்னமும் சொல்வதானால், சுவாமி மலையில் பிறந்த என் மாமாவுக்கு குல தெய்வம் சுவாமிநாத ஸ்வாமியே ஆன போதிலும், நிலக்கோட்டையில் தன் வாழ்க்கையின் பெரும்பகுதியைக் கழித்தவர், நிலக்கோட்டை மாரியம்மனின் பக்தராகி விட்ட காரணத்தாலோ என்னவோ, ஒரு முறை என் சிறுவயதில் தஞ்சைக்கு என்னை அழைத்துச் சென்றபோது அவர் சென்றது பெரிய கோவிலுக்கு அல்ல. தஞ்சை மாரியம்மன் கோவிலுக்குத் தான் அர்ச்சனை செய்ய அழைத்துச் சென்றார். வாழ்விடமும் அதன் பழக்கங்களும் கூட பல மாற்றங்களைக் கொணர்ந்து விடுகின்றன போலும். வேறு எப்படிப் புரிந்து கொள்வது?

உடையாளூர் இப்போது எப்படியோ தெரியாது. 1947லிருந்து 1949 வரை இரண்டு வருஷங்கள் அங்கு இருந்த காலம் முழுதும் ஒரு தனி உலகமாகத்தான் இருந்தது. கும்பகோணத்திலிருந்து பக்கத்திலிருந்த வலங்கைமானிலிருந்து கூட அது வேறுபட்ட ஒரு தனி உலகமாகத்தான் இருந்தது. எந்த வீட்டுப் பெரிய காரியங்களுக்கும் ஊர் முழுதுமே முன் வந்து பொறுப்புக்களில் பங்கு கொள்வது பற்றிச் சொன்னேன். அது ஒரு தனி உலகமாக, பழைய உலகமாக இருந்த காரணத்தாலேயே சாத்தியமாயிற்றோ என்று இப்போது எண்ணத் தோன்றுகிறது. 1951-52 ல் நான் ஹிராகுட் அணை கட்டும் இடத்தில் வேலியில் இருந்த போது, சீனிவாசன் என்னும் ஒரு நல்ல படிப்பாளி நண்பராக இருந்தார். அவரும் தஞ்சை ஜில்லா திருக்கருகாவூர் கிராமத்திலிருந்து வந்தவர். அவர் மிக சுவாரஸ்யமான ஆளுமை கொண்ட மனிதர். அவரைப் பற்றி தனியாக எழுத வேண்டும். பின்னர் எழுதுகிறேன். அவர் ஒரு சிவில் எஞ்சினியரிங் குத்தகைக்காரரிடம் வேலை பார்த்து வந்தார். அவ்வப்போது அவர் வேலை பார்க்குமிடம் மாறும். அப்படி அவர் அப்போது இருந்த ஒரு கிராமத்துக்குச் சென்றிருந்தோம். நாங்கள் சென்றபோது அவர் அங்கு இல்லை. இருப்பினும் அவரைத் தேடி வந்திருக்கிறோம் என்று தெரிந்ததும் அந்த கிராமத்துப் பெரியவருக்கு அந்த செய்தி போக, அவர் எங்களை ஒரு குடிசையில் தங்க வைத்தார். நாங்கள் தங்கியிருந்த குடிசைக்கு அவ்வப்போது யாராவது வந்து எங்களை உபசரித்துப் போவார்கள். அவர்களிடம் பேச்சுக் கொடுத்ததில் அந்த கிராமத்தில் இருக்கும் ஒருவர் வீடு கட்டிக்கொண்டிருப்பதாகவும் அதற்கு அந்த கிராமத்துப் பெரியவரின் மேற்பார்வையில் கிராமத்தில் இருக்கும் மற்ற மக்கள் உதவிக்கொண்டிருப்பதாகவும் சொல்லப்பட்டது. அந்த வீடு கிராமத்து மக்களாலேயே எந்த எஞ்சினியரின் உதவியும் இல்லாமலேயே வெளியிலிருந்து எந்தக் கட்டுமானப் பொருளும் வாங்கி வரவழைக்காமலேயே அந்த வீடு கட்டப்பட்டுக் கொண்டிருந்தது அந்த கிராமத்தின் பெரும்பாலான காரியங்கள் இப்படித்தான் கிராம மக்களின் கூட்டுறவால் சாத்தியமாகின்றன என்றும் எங்களுக்குச் சொல்லப்பட்டது. இது எங்களுக்கு மிக ஆச்சரியம் தரும் ஒரு விஷயமாகப் பட்டது. மேலும் அவர்கள் தேவையும் மிகக் குறைவானதே.

இப்படித்தான் பழங்கால வாழ்க்கை பெரும்பாலும் இருந்திருக்க வேண்டும் என்று தோன்றிற்று. நான் இருந்த அந்த 47-49 வருடங்களில், வாசலில் காய்கறி விற்பவர்கள் வருவார்கள். அவர்களில் யாரும் காய்கறியோ, பழமோ, எதுவுமே காசுக்கு விற்றவர்கள் இல்லை. எல்லோர் வீட்டிலும் அவர்கள் காய்கறிகள் விற்றுப் பெற்றது அரிசியோ தான். பண்டமாற்று நடந்து கொண்டிருந்தது. கொத்த மல்லியும் கருவேப்பிலையும் நிலக்கடலையும் வாங்கிக் கொண்டு அதற்கு விலையாக அரிசி கொடுப்பது என்பது எனக்கு அதிகமாகப் பட்டது. ஒரு நாள் அம்மாவைக் கேட்டேன். “ஏம்மா ஒரு அணா இரண்டு அணாவுக்கு பதிலாக ஆழாக்கு ஆழாக்கா அரிசி கொடுக்கிறாயே, இது அதிகமில்லையா?” என்று. “இதென்ன இப்படி ஒண்ணும் தெரியாத பிள்ளையா இருக்கானே இவன்?” என்பது போல் அம்மா சிரித்தாள். என் நினைவில், அந்த கறிகாய்க் காரியும் அம்மாவோடு சேர்ந்து சிரித்தாள் என்றே நினைக்கிறேன். என்ன சந்தோஷமான உலகம் அது என்று இப்போது அது பற்றி எழுதும்போது தோன்றுகிறது.

வெங்கட் சாமிநாதன்/8.7.08

Series Navigation