நினைவுகளின் தடத்தில் – (20)

This entry is part [part not set] of 29 in the series 20081002_Issue

வெங்கட் சாமிநாதன்


இனி சின்ன மாமா திருவையாறு தியாகராஜ உற்சவம் முடிந்து திரும்பி வந்தாலும், மதுரையில் படிப்பைத் தொடர முடியாது. மாமா, காமாட்சி புர அக்ரஹாரத்தில் குடியிருந்த இடத்தைக் காலி செய்து பாட்டியை நிலக்கோட்டைக்கு அழைத்துச் சென்றுவிட்டார். நான் கொஞ்ச தூரம் தள்ளியிருக்கும் லக்ஷ்மி நாராயணபுர அக்கிரஹாரத்தில் மாமியின் வீட்டார் குடியிருந்த வீட்டிற்கு மாறினேன். அங்கிருந்து கொண்டு, மாமா ஏற்பாடு செய்திருந்த ஹோட்டலில் சாப்பிட்டுக்கொண்டு அந்த வருட படிப்பை முடிப்பதாக முடிவு செய்யப்பட்டது.

அந்த வீடு மூன்றோ நான்கோ குடித்தனங்களைக் கொண்டதாக இருந்தது. ஒரு நீண்ட நடைபாதை வாசலிலிருந்து கிணற்றடி வரை நீண்டு செல்லும். மாமியின் வீட்டார் இருந்த பகுதி வீட்டின் கடைசியில் கிணற்றடியை ஒட்டிய கடைசிப் பகுதி. அந்த கடைசிப் பகுதியில் நடைபாதையை ஒட்டிய சமையலறை, பின் வீட்டின் நடு ஹாலிலிருந்து படியேறி மேல் சென்றால் மாடியில் ஒரு விஸ்தாரமான அறை. இவ்வளவே அவர்கள் புழங்கக் கிடைத்த இடம். நடு ஹாலுக்கு மற்ற குடித்தனக் காரர்கள் வந்து உட்கார்ந்து பேசிக் கொள்ளலாம். திண்ணை பொது இடம் என்பது போல அது. ஆனால் யாரும் அதிக உரிமை கொண்டாடக் கூடாது. மாமியின் பிறந்த வீட்டில் நிறையப் பேர் இருந்தார்கள். மாமியின் அம்மா அதற்கு சில வருடங்கள் முன்னமேயே காலமாகிவிட்டிருந்தார். மாமியின் அப்பா, இரண்டு சகோதரர்கள், மூன்று சகோதரிகள். சகோதரர்களில் ஒருவர் மாமிக்கு அண்ணா. மற்றவர் தம்பி. மூன்று சகோதரிகளும் மாமிக்கு இளையவர்கள். இவ்வளவு பேருடன் நானும் அந்தக் கூட்டத்தில் சேர்ந்து கொண்டேன். இவ்வளவு பேரும் அங்கு எப்படிக் காலந்தள்ள முடிந்திருக்கிறது என்று இப்போது நினைக்க ஆச்சரியமாகத் தான் இருக்கிறது. வேறு யார் வீட்டினுள்ளும் நான் உள்ளே நுழைந்து பார்த்ததில்லையென்றாலும், அனேகமாக எல்லா வீடுகளும் இப்படி பல குடித்தங்கள் நெருக்கி அடித்துக்கொண்டு வாழும் ‘ஸ்டோர்ஸ்” என்றே சொல்லப்பட்டதால், மதுரையில் அந்த நாற்பதுக்களிலேயே நடுத்தரக் குடும்பங்கள், சொந்த வீடில்லாதவர்கள் வாழ்க்கை இப்படியாகத் தொடங்கிவிட்டது போலும்.

அவ்வளவு நெருக்கடியிலும், நானும் அவர்கள் கூட்டத்தில் ஒருவனாகச் சேர்ந்து கொண்டதில் அவர்கள் யாரும் முகம் சுளித்ததாக எனக்குத் தோன்றவில்லை. எல்லோரும் என்னிடம் மிக அன்பாகத் தான் இருந்தார்கள். மாமியின் அடுத்த தங்கை, ஒன்றிரண்டு வயது இளையவர், சரஸ்வதி, அப்போது 27-28 வயதினராக இருப்பார். சேதுபதி ஹைஸ்கூலுக்கு எதிரே இருந்த ஒரு பெண்கள் பள்ளியில் ஆசிரியையாக வேலை பார்த்து வந்தார். அவருக்கு என்னைச் செல்லமாகக் கேலி செய்வதில் ரொம்ப விருப்பம். அது எனக்குப் பிடித்தும் இருந்தது. மாமியின் மாமா எப்போதும் சமையலறைக்கு எதிரான நடைபாதையில் சுவரோரமாகப் போட்டிருக்கும் பெஞ்சில்தான் உட்கார்ந்திருப்பார். இனிப்புப் பண்டங்களில் அவருக்கு பிரியம் அதிகம். நிறைய இனிப்பு சாப்பிடுவார். அப்போது அவருக்கு வயது அறுபதுக்கு மேல் ஒன்றிரண்டு கூடவே இருக்கும். இனிப்பு சாப்பிட்டு சாப்பிட்டு நாக்கு திகைத்து விட்டால், “ஏதாவது காரமா இருந்தா கொடேன்,” என்று கேட்பார். ஒன்றும் இல்லையென்றால், “தோசை மிளகாய்ப்பொடி இரூக்குமே” என்று கேட்பார். அதில் கொஞ்சம் தொட்டு நாக்கில் திகைப்பு நீங்கி காரம் ஏறிவிட்டால் போதும், மறுபடியும் இனிப்பு சாப்பிடக் கேட்பார். அந்த வயதில் அவ்வளவு இனிப்பு சாப்பிட்டும் சர்க்கரை வியாதி என்பதையே அந்நாட்களில் நாங்கள் கேள்விப்பட்டது கூட இல்லையே என்று இப்போது நினைத்தால் எனக்கு ஆச்சரியமாகத்தான் இருக்கிறது. ஒவ்வொவ்வொரு சமயம் “வாடா, இப்படீ காலாற போய்ட்டு வரலாம்” என்று என்னை அழைத்துக்கொண்டு, அவர் வேலை பார்த்த மாவட்ட கல்வி அதிகாரி (District Education Officer) அலுவலகத்திற்குப் போவார். அங்கு தன் பழைய சகாக்களுடன் பழைய கதைகள், புதிய கதைகள் பேசிக்கொண்டிருப்பார்.

மாமியின் அடுத்த தங்கை எனக்கு ஒத்த வயதினள். செல்லம் என்று பெயர். கடைசித் தங்கை எனக்கு ஆறு வயது சின்னவள். மாமியின் அண்ணா, ரங்கநாதன், அவரை எல்லோரும் அம்பி என்று தான் அழைப்பார்கள். அந்த வீட்டிலேயே அவர் தான் மிகுந்த செல்வாக்கு உள்ளவர். வேறு யாராலும் செய்ய முடியாத காரியம் என்றால், அம்பியிடம் தான் முறையிடுவார்கள். அந்தக் காரியம் முடிந்து விடும். எப்படி என்று யாரும் அறிய ஆர்வம் கொண்டதில்லை. காரியம் முடிந்துவிட்டதா, சந்தோஷம். அவரால் முடியும். அது போதும். அப்போது எல்லா பொருட்களுக்கும் தட்டுப்பாடு நிறைந்த காலம். சக்கரையா, அரிசியா, எது வேண்டுமானாலும், அவரிடம் சொன்னால் போதும். கிடைத்துவிடும். கேட்கும் அளவு இல்லாவிட்டாலும், ஏதோ கிடைத்து விடும். ‘அம்பி கிட்டே சொல்லப்படாதா?” என்று எல்லோரும் ஏதோ தாம் தான் பிரச்சினைக்கு தீர்வு கண்டுவிட்டதான தொனியில் கேட்பார்கள். அதே போல் அம்பியும், ‘என் கிட்டே ஒரு வார்த்தை சொல்லியிருக்கப்படாதோ?” என்று கேட்பார் கொஞ்சம் அக்கறை தொனிக்க. அடிக்கடி அவர் என்னை சினிமாவுக்கு அழைத்துக்கொண்டு போவார். “வாடா சினிமா பார்த்துட்டு வரலாம்” என்பார். அவர் கூடப் போனால் ஓசியில் சினிமா பார்ப்பது மட்டுமல்லாமல், சினிமா ஆரம்பிக்குமுன், ஹோட்டலில் சூடாக தோசை வேறு வாங்கிக் கொடுப்பார். அங்கிருந்த ஐந்தாறு மாதங்களில் நான் தோசை சாப்பிட்டது, அம்பியுடன் சினிமாவுக்குப் போன சமயங்களில் தான். அவர் வேறு யாரையும் அழைத்துப் போனதாக எனக்கு நினைவில் இல்லை. அவர் எங்கு போகிறார் என்ன செய்கிறார் என்று யாரும் அந்த வீட்டில் அவரைக் கேட்டதும் இல்லை. வெகு சுதந்திரப் பிறவி. அவர் அதிகம் படித்தவரில்லை. ஏதோ ஒரு கோவாப்பிரேடிவ் ஸ்டோரில் வேலை பார்த்து வந்தார். எந்த காரியமும் செய்வதில் சமர்த்தரானது மற்றவர்களைப் பிரிமிக்கத்தான் வைத்தது. மற்றவர் ராஜா என்பவர். அப்போது தான் தன் கல்லூரிப் படிப்பை முடித்துக்கொண்டு ஏதோ அலுவலகத்தில் வேலைக்குச் சேர்ந்திருந்தார். என்ன அலுவலகம், என்ன வேலை என்பதெல்லாம் நினைவில் இல்லை. அவரும் என்னைச் சினிமா பார்க்க அழைத்துச் செல்வதுண்டும். என் இப்போதைய ஞாபகத்தில், அவருடன் ஏதும் தமிழ்ப்படம் பார்த்ததாக நினைவில் இல்லை. அந்நாளைய பஸ் ஸ்டாண்டிற்கும் ரயில் நிலயத்திற்கும் இடையில் ரீகல் என்றோ என்னவோ பெயரில் ஒரு தியேட்டர் இருந்தது. அதில் காலையில் ஆங்கிலப் படங்கள் தான் திரையிடுவார்கள். அங்கு போய் படங்கள் பார்த்த நினவில் இருந்தாலும் படங்களின் பெயர்கள் ஒன்றும் நினைவில் இல்லை. ஆனால் சித்ரலேகா என்றோ என்னவோ ஒரு தியேட்டர் தெற்கு வீதிகள் ஒன்றில் இருந்தது. அதில் ஹிந்தி படங்கள் திரையிடுவார்கள். அங்கு தான் அந்நாட்களில் மிகவும் பிரபலமான ரத்தன், அன்மோல்கடி இரண்டும் பார்த்தது நினைவில் இருக்கிறது. அந்த படங்களின் ஹிந்தி பாட்டுக்கள் தமிழ் சினிமா ரசிகர்களை பைத்தியமாகத்தான் ஆக்கின. உடனே தமிழ் படங்களில் எல்லாம் அதே ஹிந்தி மெட்டுக்களில் தமிழ் பாட்டுக்கள் சரமாரியாக வர ஆரம்பித்தன. அன்மோல் கடி படத்தில், சுரையாவோ, லதா மங்கேஷ்கரோ ஹிந்தி திரையுலகிற்கு அறிமுகனாகி வருவதற்கு முன்னரே கோலோச்சிய நூர்ஜஹான் பாடி நடித்திருந்தார். அவரும் ரத்தன் படத்தில் கதாநாயகியாக நடித்த ஸ்வர்ணலதா என்பவரும் அடுத்த வருடம் பாகிஸ்தான் பிரிவினை ஏற்பட்டதும், பாகிஸ்தான் பிரஜைகளாயினர். இவர்களில் முக்கியமாக நூர்ஜஹான் பாகிஸ்தானிய சினிமா ரசிகர்களின் ‘கனவுக்கன்னியாக’ மட்டுமல்லாமல், பாகிஸ்தானில் அடுத்தடுத்து வந்த ராணுவ ஆட்சித் தலைவர்களுக்கும் பிரியமானவராக இருந்தார் என்று சொல்லப்பட்டது. நூர்ஜஹான் பின்னர் தொன்னூறுகளில் ஒரு முறை இந்தியா வந்திருந்தார். அப்போது அவரோடு கதாநாயகராக நடித்திருந்த திலீப் குமார் பழம் நாட்களையும், நூர்ஜஹானின் இசைக்கு இந்திய மக்கள் ஏங்கியதையும் நினைவு கூர்ந்து மிக மனம் நெகிழ அவருக்கே உரிய மிக அழகான உருதுவில் பேசினார். திலீப் குமாரின் உருதுவைக் கேட்பதும் கூட ஒரு சுகமான அனுபவம் தான். ஆனால் மதுரை நாட்களில் இதெல்லாம் நான் தெரிந்தவனில்லை.

மதுரையில் தனியாக இருந்த போது நிறைய ஊர் சுற்றுவது எனக்குப் பிரியமான விஷயமாக இருந்தது. சேதுபதி ஹைஸ்கூலில் சேர்ந்ததும், ஒரு பரி¨க்ஷ வைத்தார்கள். பரி¨க்ஷயில் தேறினால் அரைச் சம்பளம் கொடுத்தால் போதும். அப்போது சம்பளம் ருபாய் மூன்றோ என்னவோ சரியாக நினைவில் இல்லை. ஒன்றரை ரூபாயோ, இரண்டு ரூபாயோ மாமாவின் செலவில் மிச்சம் பிடித்துக் கொடுத்ததில், மாமாவுக்கும் சந்தோஷம். அங்கிருந்த மாமியின் குடும்பத்தினரிடமும் என் மதிப்பு உயர்ந்திருந்தது. அதனால், நான் ஊர் சுற்றிக்கொண்டிருந்ததை யாரும் கவலைப்படவில்லை. நவராத்திரி வந்து விட்டால், மதுரையில் எனக்குத் தெரிந்த எல்லாக் கோயில்களுக்கும் போய்விடுவேன். மீனாட்சி அம்மன் கோயிலிலிருந்து ஆரம்பித்து, வடக்கு மாசி வீதியிலோ என்னவோ இருந்த கிருஷ்ணன் கோவில், பின் தல்லா குளத்திலோ அல்லது சொக்கி குளத்திலோ இருந்த பெருமாள் கோவில் என அலைந்து கொண்டிருப்ப்பேன். ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு அலங்காரம் செய்திருப்பார்கள். எனக்கு அவற்றை ஒன்று விடாமல் பார்த்து விடவேண்டுமென்ற ஆர்வம். நிறைய கூட்டங்கள் நடக்கும். பி.ராம மூர்த்தி, மோகன் குமார மங்கலம், அருணா ஆசப் அலி, எனச் சிலர் பேசிய கூட்டங்கள் தான் இப்போது நினைவில் இருக்கின்றன. வீட்டிலிருந்து பள்ளிக்கூடம் போகும் வழியில், வீட்டுக்கும் சிம்மக்கல்லுக்கும் இடையில் ரோடில் ஒரு பெயிண்டிங் கடை இருக்கும். அதில் ஒருவர் சினிமா பானர், விளம்பர போர்ட் எல்லாம் வரைந்து பெயிண்ட் செய்து கொண்டிருப்பார். அங்கு போய் உட்கார்ந்து விடுவேன். அவர்கள் பெயிண்ட் செய்வதை அலுக்காமல் சலிக்காமல் பார்த்துக் கொண்டிருப்பேன். யாரும் ஒன்றும் சொல்ல மாட்டார்கள். யாரோ சின்னப் பையன் ஆர்வமாகப் பார்க்கிறான். அடிக்கடி வந்து இப்படி உட்கார்ந்து விடுகிறான். என்று இருந்து விடுவார்கள். சித்திரம் வரைகிறவர் சில சமயம் என்னைப் பார்த்து ஒரு புன்முறவலோடு ஏதோ சொல்வார். கேட்டுக்கொண்டிருப்பேன்.

மாமியின் வீட்டில் எல்லோரும் பிரியப்படும்படி நான் இன்னொரு காரியமும் செய்து வந்தேன். அது ஒன்று தான் அவர்களுக்கு என்னால் ஆன காரியம் என்று நினைக்கிறேன். நான் காலையில் சற்று சீக்கிரமே கிளம்பி மாமா ஏற்பாடு செய்திருந்த ஹோட்டலில் சாப்பிட்டுவிட்டுத் தான் பள்ளிக்குப் போவேன். அது சேதுபதி ஹைஸ்கூல் இருந்த வடக்கு வெளி வீதியிலேயே பாதி தூரத்தில் இருந்தது. மத்தியானம் மறுபடியும் அந்த மெஸ்ஸ¤க்கு வந்து மோர் சாதம் சாப்பிட்டுப் போவேன். வெயிலுக்கு மிக சுகமாக இருக்கும். அங்கு சாப்பிட்டுக்கொண்டிருந்த வாடிக்கையாளர்கள் எல்லோரும் பெரியவர்கள். நான் ஒருத்தன் தான் சின்னப் பையன். அங்கு எல்லோரும் என்னிடம் மிகப் பிரியமாக இருப்பார்கள். வாசலில் உட்கார்ந்திருக்கும் முதலாளி, “என்னடா சாப்பிட்டயா? ” என்று விசாரிக்கத் தவறமாட்டார். பின் இரவு எட்டு மணிக்கு சாப்பிடப் போவேன். ஒவ்வொரு சமயம் சரஸ்வதி “இன்னிக்கு என்னடா சாப்பிட்டே, ஏதாவது ஸ்பெஷல் உண்டா? என்று சிரித்துக்கொண்டே கேட்பாள். நானும் சொல்வேன். “உனக்கென்னடா குறைச்சல். அதிர்ஷ்டக்காரன். தினம் தினம் விருந்து சாப்பாடுன்னா சாப்பிடறே?” என்று விளையாட்டாக கேலி செய்வாள். மற்றவர்களும் அதில் சேர்ந்து கொள்வார்கள். ஒரு நாள் இந்த மாதிரியான விசாரிப்பில் “இன்றைக்கு வெங்காய சாம்பாரும் உருளைக்கிழங்கு கறியும்” என்று சொன்னபோது அங்கு ஒரே பரவசம். “ஏண்டா வெங்காய சாம்பார் எப்பவாவது போடுவாளா, இல்லை வாராவாரம் உண்டா?” என்று கேட்டாள் சரஸ்வதி. சனிக்கிழமை சனிக்கிழமை ராத்திரிக்கு வெங்காய சாம்பார் தான் வழக்கம்” என்றேன். “அட தடியா அதை முன்னாலேயே சொல்லக்கூடாதோ. ஏண்டா வெங்காய சாம்பார் பண்ற அன்னிக்கு சாப்பாட்டை இங்கே வாங்கிண்டு வந்துடேண்டா, எல்லாரும் சேர்ந்து சாப்பிடலாம், என்ன சொல்றே, எங்களுக்கும் வெங்காய சாம்பார் தருவியா இல்லே நீயே தான் சாப்பிடுவியா? என்று சரஸ்வதி கேட்டதும், அடுத்த சனிக்கிழமை கேட்டுப் பார்க்கிறேன் என்று சொன்னேன். நான் மெஸ் முதலாளியிடம் இன்னிக்கு சாப்பாடு கட்டிக் கொடுத்துடுங்கோளேன். அங்கேயே மத்தவாளோடே சேர்ந்து சாப்பிடலாம்னு சொல்றா” என்றேன். “எதுக்குடா, வெங்காய சாம்பார்னு அவா கிட்டே சொல்லிட்டயோ, அவாளுக்கும் வேணுமாக்கும்” என்று சிரித்துக்கொண்டே கேட்டார். சரி போ என்று சொல்லி “டேய் இவனுக்கு சாப்பாடு கட்டிக்கொடுத்துடு இன்னிக்கு, கொஞ்சம் சாம்பார் கூடக்கொடுத்துவிடு. இல்லாட்டா இவனுக்குக் கிடைக்காது” என்று உத்தரவும் போட்டு விட்டார். அன்றிலிருந்து ஒவ்வொரு சனிக்கிழமையும் வெங்காய சாம்பார் தனியாக ஒரு பாத்திரத்தில் கூடக் கொடுப்பார்கள். எல்லோருக்கும் குஷி தான். சனிக்கிழமை ராத்திரி சாப்பாடு எப்போது வரும் என்று எல்லோரும் காத்திருப்பார்கள். ஆனாலும் அங்கு இருந்தது ஆறு பேர். என் ஒருத்தன் சாப்பாட்டுக்கு கிடைக்கும் வெங்காய சாம்பார் எவ்வளவு தான் கூடக் கொடுத்தாலும், ஏழு பேரை எப்படித் திருப்திப் படுத்த முடியும்? சனிக்கிழமை இரவுச் சாப்பாட்டின் போது நான் அங்கே ஒரு ஹீரோ தான். இப்படி கொஞ்ச வாரம் நடந்து வந்த பிறகு ஒரு நாள் சரஸ்வதி தான் சொன்னார். “ஏண்டா கொஞ்சம் கூடக் கேட்டு வாங்கிவரப்படாதோ!” என்று. நானும் சொன்னபடி கேட்கும் நல்ல பிள்ளையாக மெஸ் முதலாளியிடம், “சாம்பார் கொஞ்சம் கூடக் கொடுக்கச் சொல்லுங்கோ” என்றேன். அவர் என்னை ஒரு மாதிரியாகப் பார்த்து, பரிமாறுகிறவரைக் கூப்பிட்டு, “இவனுக்கு சாம்பார் கொஞ்சம் கூட வேணுமாம்டா.” என்று சொன்னார். பரிசாரகரும் என்னை உள்ளே அழைத்துக்கொண்டு சென்றார். உள்ளே போனதும், “அவர் கிட்டே ஏண்டா போய் சொன்னே. நான் தான் உனக்கு நிறையவே கொடுக்கறேனே. போ. வழக்கத்தைவிட இன்னும் கூடவே இருக்கு சாம்பார். எடுத்துண்டு போ. இனிமே ஏதாவது வேணும்னா என்னைக் கேளு, அவர் கிட்டே போய்க் கேட்காதே. அப்பறம் போறபோது அவருக்குத் தெரியாம எடுத்துண்டு போ. அவர் பாத்தா சத்தம் போடுவார். “கூடக் கொடுன்னா, எவ்வளவுடா கொடுப்பே ஒரு பையனுக்கு சாப்பிடறதுக்குன்னு” விவரம் தெரியாத பிள்ளையா இருக்கியே” என்று அவர் சொன்னபோது எனக்கு ரொம்ப கஷ்டமாக இருந்தது. அங்கு எல்லோரையும் போல அவரும் என்னிடம் மிக பிரியமாக இருப்பவர்.

வெங்கட் சாமிநாதன்
/25.4.08

Series Navigation

வெங்கட் சாமிநாதன்

வெங்கட் சாமிநாதன்