நினைவுகளின் தடத்தில்

This entry is part [part not set] of 45 in the series 20071108_Issue

வெங்கட் சாமிநாதன்


கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக, அண்ணா கண்ணன் நான் என் சுயசரிதத்தை எழுதவேண்டும் என்று வற்புறுத்தி வந்துள்ளார். அவர் அமுதசுரபியில் பொறுப்பு வகித்த காலத்திலிருந்து என்று சொல்லவேண்டும். என் வாழ்க்கை ஏதும் அதிசயங்களும் அவதார மகிமைகளும் நிறைந்ததென்று அவர் எண்ணியுள்ளதாக யாரும் அவசர அவசரமாக ஒரு முடிவுக்கு வரவேண்டாம். இப்படியான தம் அவதார மகிமைகளுடன் தான் நம் சினிமா நக்ஷத்திரங்கள் தம் பேட்டிகளைத் தொடங்குவதை நாம் படித்துப் பழக்கப்பட்டிருக்கிறோம். நம் கவிஞர்களுக்கும் சில எழுத்தாளர்களுக்கும் இப்படியான பிரமைகள் உண்டு தான். நியாயமாக நம் நர்த்தகிகளும், பாடகர்களும் தம் குழந்தைப் பருவத்திலிருந்தே இப்படியான சூழலில் தான் வளர்ந்துள்ளதாகச் சொல்ல வேண்டும். அவர்களைப் பற்றிய வரை அது உண்மை. நம்மூர் அரசியல் வாதிகள், சினிமா நடிகர்கள் தம் வாழ்க்கையை எழுதலாம். மிக சுவாரஸ்யமாக இருக்கும். அவர்கள் எழுதுவது உண்மையே யானால், அது நம் பண்பாட்டுக் கூச்சல்களுக்கும் நிமிடத்திற்கு ஒரு முறை, பேருந்துப் படிகளில் ஏறி இறங்கும் போதெல்லாம் என்று நமக்கு நினைவுறுத்தப்படும் வள்ளுவ வாசகங்களுக்கு அடியில் ஓடும் நீரோடையின் குணம், மணம் என்ன என்பது தெரிய வரும். இப்படியெல்லாம் சொல்லி அலட்டிக்கொள்ளாத மண்ணில், மகாராஷ்டிரத்தில் ஹம்ஸா வாடேக்கரும், வங்காளத்தில் வினோதினியும் தம் சுயசரிதையை ஒழிவு மறைவு இல்லாது அப்பட்டமாக எழுதியிருக்கிறார்கள். நம் அரசியல் தலைவர்களிடமிருந்தும், சினிமா திலகங்கள், சிகரங்கள், மன்னர்களிடமிருந்தும் இப்படி எழுத்துக்கள் பிறக்கு மானால்…….பின் அவர்கள் எப்படி அரசியல் வாதிகளாக மன்னர்களாக இருப்பார்கள்?

ஆனால் என் வாழ்க்கையில் அப்படி எழுத ஒன்றுமே இல்லை. எழுத்துலகிலும் வெளியிலும் சில உன்னதமான மனிதர்களைச் சந்தித்திருக்கிறேன். அவர்களது சில குறைகளையும், பலவீனங்களையும் மீறியும் அவர்கள் உன்னதமான மனிதர்கள் தான். சில கடைத்தரமான இழிதகைகளையும் சந்தித்திருக்கிறேன், எழுத்துலகிலும், வெளியிலும். அவர்களது சில பலங்களையும் மீறி அவர்கள் இழிந்த மனிதர்கள் தான். 74 வருடங்கள் என்பது ஒரு நீண்ட காலம் தான். எவ்வளவோ மாற்றங்கள், வாழ்க்கை நியதிகளில், கலாச்சாரத்தில், வாழ்க்கை மதிப்புகளில். அவற்றை நினைத்துப் பார்த்தால், திகைப்பாக இருக்கும்.

இப்போது சென்னையின் புறநகர்ப் பகுதியான மடிப்பாக்கத்திற்கு வந்து எட்டு வருடங்களாகிவிட்டன. இந்த எட்டு வருடங்களில் நான் ஒரு சிட்டுக்குருவியைக் கூட இங்கு பார்த்ததில்லை. என் சிறு வயதில் நிலக்கோட்டை என்னும் தண்ணியில்லாக் காட்டில் கூட இராக்காலங்களில் தெருவில் பாடிவந்த இராப் பிச்சைக்காரனை நான் இங்கு பார்த்ததில்லை. பிச்சைக்காரர்கள் மறையவில்லை. அவர்கள் வருகிறார்கள் தான். ஆனால் ஒரு பந்தாவோடு.

க.நா.சு. சொல்வார்: “யாருடைய வாழ்க்கையிலும் சுவாரஸ்யமான சம்பவங்களும், மனிதர்களும் எதிர்ப்பட்டிருப்பார்கள். அவர்களைப் பற்றி கொஞ்சம் சிரத்தையெடுத்து எழுதினால் நல்ல சிறுகதைகள் நமக்குக் கிடைக்கும். ஆனால் நாவல் எழுதும் விஷயம் வேறு”‘ என்பார். இப்படி எழுதியும் இருக்கிறார். அப்படிப் பார்த்தால், நானும் எழுபத்தைந்தாவது வயதில் அடி எடுத்து வைத்து விட்டேன். சென்னைப் பேருந்துகளும், பெண்களிடம் தன் வீரத்தைக் காட்ட நினைக்கும் டூ வீலரில் தம்மை ராணா பிரதாப் சிங் என்று கற்பித்துக்கொண்டு அமர்ந்திருக்கும் இளம் மீசைக் காரர்களும், மடிப்பாக்கம் தெருக்களுக்கு அம்மை வடு இட்டிருக்கும் குண்டு குழிகளும் என்னிடம் இரக்கம் காட்டினால் இன்னம் கொஞ்ச நாள் இருக்கலாம். இந்த நாட்களில், க.நா.சு. சொன்னது போல என் வாழ்க்கையில் எதிர்ப்பட்ட சுவாரஸ்யமான மனிதர்களை, சம்பவங்களைப் பற்றி எழுதலாம். அவர்கள் தான் என் வாழ்க்கையை சுவாரஸ்யமாக்கியிருக்கிறார்கள். இல்லையெனில் இந்த 74 வருடங்களும் தம் பாட்டில் தானே ஒடிய நாட்கள் தான். நான் அதற்கு ஏதும் வண்ணம் கொடுத்ததாக நினைக்கவில்லை. இதில் ஏதும் ஒரு ஒழுங்கு இராது. கால ஒழுங்கு, சம்பவ அடுக்கில் ஒர் வரிசைக் கிரமம் என்பது போல ஏதும் இராது. அவ்வப்போது எங்கிருந்தோ எங்கெங்கோ தாவுதல் நிகழும். நினைத்த போது இதைத் தொடரலாம். இடையில் வேறு விஷயங்களை எழுதத் தோன்றினால், இது அவற்றிற்கு இடம் அளிக்கும். மற்ற படி ஈக்ஷ்வரோ ரஷது.

நான் ஐம்பதுக்களில், ஹிராகுட்டிலும், புர்லாவிலும் பின் தில்லியில் அறுபதுகளில் இருந்த போது பழகிய இருவரை சமீபத்தில் சந்திக்க நேர்ந்தது. அவர்களை 40- 50 வருடங்களுக்குப் பிறகு சந்தித்தேன். அவர்களில் ஒருவரை எனக்கு முற்றிலுமாக அடையாளம் தெரியவில்லை. அவர் மீது பரவியிருந்த வெண்குஷ்டம் மாத்திரம் காரணமில்லை. கடைசியாக பார்த்து 50 வருடங்களுக்கு மேலாயிற்று. ‘யார் என்று அடையாளம் சொல்லச் சொல்லி அவரே எனக்குப் புதிர் விட்டுக்கொண்டிருந்த ஐந்து நிமிடங்களுக்குப் பிறகு யார் என்று எனக்குச் சொல்லப்பட்டதும், ‘டேய் நீயாடா, எப்படிடா இப்படி மாறினே?’ என்று கத்தத் தோன்றிற்று. எப்படி ‘டா’ போட்டு பேசுவது? நீண்ட காலம் கழித்துச் சந்திக்கும் எங்கள் யாருக்குமே அது அழகாக இருக்குமா? தயக்கத்தை மீறுவது எப்படி? ‘டேய் ‘ என்று சத்தம் போட்டிருந்தால் தான் பழைய நாட்களின் நெருக்கத்துக்கு நியாயம் செய்வதாக இருந்திருக்கும். நாங்கள் பொய் மரியாதைகளில் தஞ்சம் புகுந்தோம்.

நினைத்துப் பார்க்கத் தோன்றியது. இந்த உலகில் என் இந்த இருப்பை உணர்த்திய முதல் கணம், என் ஞாபகத்தில் எது என்று. அது அக்காலத்தில் வளம் கொழித்த தஞ்சை ஜில்லாவில் இல்லை. கோடை காலங்களில் ராமநாதபுரம் போல தண்ணீருக்குத் தவிக்க வைக்கும் நிலக்கோட்டை என்ற ஊரில். மதுரையிலிருந்து கொடைக்கானல் போகும் வழியில் இருக்கும் ஊர். சுமார் எட்டு மைல் பெரிய குளம் நோக்கிச் சென்றால், வத்தலக்குண்டு (செல்லப்பா பெருமையோடு நினைவு கொள்ளும் ஊர். பி.ஆர். ராஜம் அய்யரையும், பி.எஸ் ராமையாவையும் நினைவு படுத்தும் ஊர். அது பொட்டல் காடல்ல. செழிப்பான இடம் தான். பின் இந்தப்பக்கம் மதுரைக்கு போகும் வழியில் சோழ்வந்தானும் நிலக்கோட்டை போல பொட்டல் காடல்ல. சோழ வந்தான் தெரியுமல்லவா, டி. ஆர். மகாலிங்கம் கண்டெடுக்கப்பட்ட ஊர். ஆனால் இடையில் அகப்பட்ட நிலக்கோட்டை கோடை காலத்தில் எங்களை மிகவும் வாட்டி விடும். சுற்றியுள்ள உலகத்தைப் பற்றிய பிரக்ஞை முதலில் எனக்குப் பட்டது எனக்கு இரண்டு அல்லது இரண்டரை வயதாக இருக்கும் போது. நிலக்கோட்டை வத்தலக்குண்டு ரோடில் ஊர் எல்லையில் தான் அந்த ஓட்டு வீடு இருந்தது. ஒரு வண்டிப் பேட்டை எங்கள் வீட்டுக்கு எதிர்த்தாற்போல் ரோடுக்கு அந்தப் புறம். நாங்கள் இருந்த வீட்டை ஒட்டி ஒரு பெரிய வீடு. அங்கு யாரிருந்தார்கள் என்று இப்போது எனக்கு நினைவில் இல்லை. வீட்டுக்குப் பின்னால் ஒரு பெரிய அரச மரம். அதில் ஒரு பிள்ளையார், எதிரில் ஒரு மூஞ்சுறும், இரு பக்கங்களிலும் நாக தேவதைகள் உடன் இருக்க. அதைத் தாண்டி ஒரு கிணறு. சுற்றிச் சுவர் எழுப்பப்படாத கிண்று. அதைத் தாண்டினால் ஒரு ஓடை. சில மைல்கள் தொலைவில் இருக்கும் செங்கட்டான் கரட்டில் மழை பெய்தால் அதிலிருந்து வடிந்து பெருகும் தண்ணீர் செக்கச் செவேலென்று பெருக்கெடுத்து, நிலக்கோட்டையின் மறு எல்லையில் ஏரி போல பரந்திருக்கும் கொக்கிர குளத்தில் சங்கமமாகும். எங்கள் வீட்டின் எதிரிலிருக்கும் ரோடோடேயே அம்மையநாயக்கனூர் (அதன் ரயில் நிலையத்திற்குப் பெயர் கொடைரோட்) நோக்கிப் போனால், கொக்கிர குள்த்தின் நீளும் கரையையும், அக்குளத்தின் மறு கரையில் நிலக்கோட்டை ஊரையே, அடுக்கி வைத்த பட்டாசுக் கட்டாகப் பார்க்கலாம்.


vswaminathan.venkat@gmail.com

Series Navigation

வெங்கட் சாமிநாதன்

வெங்கட் சாமிநாதன்